Loading

தேடல் 27:

 

மெல்ல எழுந்தமர்ந்தவன், தலையணையை கட்டிலின் விளிம்பில் நிமிர்த்து வைத்து வாகாய் அதில் சாய்ந்துக் கொண்டான். வேதனையை கண்களில் சுமந்து, இரு துளி நீரை கசிய விட்டு, கொஞ்சமாய் முகம் சுழித்து, மெல்லமாய் வலியில் முனகுவதுப் போல, “ம்மா….” என்றான்.

 

அவ்வளவு தான் அங்கிருந்த அனைவருமே, ஒரு சேர ஜெயாவை திரும்பி முறைக்க, ‘நா இப்ப என்னத்த செஞ்சிட்டேனு மொத்த குடும்பமே இப்படி பாக்குதுங்க…’ என எண்ணியவர் எச்சிலைக் கூட்டி விழுங்கினார்.

 

“எடுபட்ட பயலே… இன்னும் இந்த நொல்ல கண்ண வச்சுட்டு புள்ளைய ஏன்டா கண்ணுப் போடற… எல்லாம் இவனால வந்தது… போட அங்குட்டு…” என்ற கற்பகம் பாட்டி, “வலிக்குதா கண்ணு…” என வாஞ்சையாய் அக்னியின் முதுகை தடவி விட்டபடியே கேட்டார்.

 

“என்னம்மா நீ… என்னமோ நானே கத்திய எடுத்து அவன குத்தன மாதிரி பேசிட்டு இருக்க…”

 

“டேய்… இன்னும் ஒரு வார்த்த பேசுன… தேங்கா சில்ல அம்மில வச்சு அரைக்கர மாதிரி அரைச்சு புடுவேன்… அரைச்சு… வெளிய போற புள்ளைய ஒரு நல்ல வார்த்த சொல்லி அனுப்ப துப்பில்ல… வந்துட்டான் பெரிய இவனாட்டம் வியாக்கியானம் பேசிட்டு…”

 

“அப்படி சொல்லு கற்பூ… நான் கிளம்பறேன்… அப்ப உன் புள்ள சொல்லறாரு தெரியுமா… செத்து தொலைஞ்சா கூட பரவாயில்ல… என் தங்கச்சி மகளோட குழந்த பதினாறுக்கு வந்துட்டு சாவுனு சொல்லறாரு கற்பூ… நீயே சொல்லு… போகும் போதே இப்படி சொன்னா போற காரியம் விளங்குமா..? அதான் எவனோ குத்திட்டான்… எவனோ குத்துனானோ இல்ல இவரே இவரு தங்கச்சி மகள கட்டிக்கலனு பின்னாடியே ஆள் அனுப்பி குத்தனாரோ… யாருக்கு தெரியும்…” என்றான் அக்னி வராத கண்ணீரை சுண்டிவிட்டபடி.

 

அதைக் கேட்ட கற்பகமோ, அவர் செய்தாலும் செய்திருப்பார் என்ற ரீதியில் அவரை முறைக்க, சுற்றி நின்ற மொத்த குடும்பமும் அவரை கொலைக் குற்றவாளி போல நோக்கியது. கூண்டில் ஏற்றதது ஒன்று தான் குறை.

 

“என்ன இருந்தாலும் புள்ளைய நீங்க அப்படி சொல்லி இருக்க கூடாது ண்ணே… கேட்ட எனக்கே பக்குனு ஆகிப் போச்சு…” என தனாவும் நெஞ்சில் கை வைக்க,

 

“ஏன்டா டேய்… நீயுமாடா… நான் பெத்த அரும ராசா… நானே ஆள் வச்சு குத்த சொன்ன மாதிரி சொல்லிட்டு இருக்கயேடா… இதெல்லாம் நியாயமா..?” என பாவமாய் அவர் மகனை பார்க்க,

 

“நீங்க செத்த சும்மா இருங்க… பத்து மாசம் சுமந்து பெத்தவளுக்கு தானே தெரியும் வலி…” என தெய்வா மூக்கை உறிஞ்சியபடியே, தட்டிலிருந்த இட்லியை பிட்டு, கறிகுழம்பில் புரட்டி எடுத்து அக்னிக்குக்கு ஊட்டினார்.

 

“அப்படி நல்லா கேளுங்க அண்ணி… எப்ப பாரு புள்ளைய கரிச்சுக் கொட்டிட்டு…” என்று தனா துண்டிவிட,

 

“அடியே… நான் ஒரு பேச்சுக்கு சும்மா தான்டி சொன்னேன்… இவன் இப்படி வந்து கிடப்பானு நானென்ன கனவா கண்டேன்…” என சமாதானம் செய்ய முயன்றார் ஜெயா.

 

“சும்மா சொன்னாறாம் இல்ல சும்மா… புள்ளைய சாவுனு யாராவது சும்மா சொல்லுவாங்களா… இருந்தும் இருந்தும் இந்த ஊர் உலகத்துல வேற ஆம்பிளையே இல்லைனு எங்க அப்பனாரு உங்கள எந்தலையில கட்டினாரு பாருங்க அவர சொல்லனும்…”

 

“என்ன கட்டுனதுல என்ன குறைஞ்சுப் போய்ட்ட நீ…”

 

“இப்ப என்னத்துக்கு எகிறிகிட்டு வறீங்க… என்னத்த இருந்தாலும் வளப்புனு ஒன்னு இருக்குல… வெர ஒன்னு போட்டா சொர வொன்னா முளைக்கும்… சொல்லறதையும் சொல்லிட்டு… பேச்ச பாரு… எல்லாம் என் தலையெழுத்து…” என தெய்வா மீண்டும் மூக்கை உறிஞ்ச,

 

“அடியே… என்ன எதுக்கு உங்க சண்டைக்குள்ள இழுக்கற… அப்படியே இடிச்சேனா தெரியும் செய்தி… இஷ்டமிருந்தா வாழு… இல்ல இப்பவே விவாகரத்து பண்ணிட்டு உங்கப்பன் வீட்டுக்கு பொட்டிய கட்டு… யாரு வேண்டானா… வந்துட்டா என் வளப்ப குறை சொல்ல…” என கற்பகம் தெய்வாவை கன்னத்தில் இடிக்க,

 

“எனக்கு மட்டும் என்ன இங்கையே இருக்குமுனு ஆசையா… சரிதான் போயானு என்னைக்கோ எங்க அண்ணன் வீட்டுக்கு பொட்டிய கட்டிருப்பேன்… என்ன, என்னைய வுட்டா இந்த மூஞ்சுக்கு யாரு வாழ்க்கை குடுப்பானு பாவம் பாத்து தான் பல்ல கடிச்சுட்டு இங்கையே இருக்கேன்…”

 

“அப்படி யாருடி உன்ன பல்ல கடிச்சுட்டு இங்க இருக்க சொன்னா… என் புள்ள ராசாடி… இன்னைக்கு நினைச்சாலும் என் புள்ளைக்கு என்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியும்… வந்துட்டா பெருசா… என் புள்ளைக்கு வாழ்க்க குடுக்க… போடி அங்குட்டு…”

 

“பண்ணி தான் வைங்களேன்… ஆறுபதாம் கல்யாணம்… யாரு வேண்டானு சொன்னா… அடுத்த வருஷம மூஞ்சுல ஒன்னுக்கு அடிக்க பேரபுள்ள வந்துட்டுவான்… இதுல இரண்டான் கல்யாணம் ஒன்னுதான் தொரைக்கு கேடு… போகுது பாரு புத்தி…” என்றவர் கடைசி வார்த்தையில் ஜெயாவை தீயாய் முறைக்க,

 

‘இப்போ எதுக்கு இதுங்க இரண்டும் அடிச்சுக்குதுங்க… இப்ப பிரச்சனை இவனுக்கு அடிபட்டதா… இல்ல எனக்கு இரண்டாம் கல்யாணம் பண்ணறதா… முடியலடா என்னால…’ என

நொந்து வெந்துப் போனார் அவர்.

 

“ம்ம்ம்மா… இப்போ அப்புக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணறதா பிரச்சனை… அவரு பேசுன பேச்சுக்கு இரண்டு பேரும் சேந்து இரண்டு அப்பு அப்புவீங்கனு பாத்தா உங்களுக்குள்ள அடிச்சுக்கறீங்க…” ஜெயா நினைத்ததையே அவன் வேறு மாதிரி சொல்லி வைக்க,

 

“நீ சாப்புடு ராசா… அவரு கெடக்காரு கூறுக் கெட்ட மனுஷன்… எப்ப என்னத்த பேசனு தெரியாம…” என்ற தெய்வா மீண்டும் தனது ஊட்டும் பணியை விட்ட இடத்திலிருத்து தொடர,

 

“என்னத்தனு தான் இத்தன நாளு இவனும் ஒரு மனுஷனு வளந்து நிக்கானோ… இந்த லட்சனத்துல புள்ளைக்கே கல்யாணம் பண்ணிட்டான்… அதுகளுக்கு இருக்க பொறுப்புல நாலுல ஒரு பங்கு இவனுக்கு இருக்க வேண்டான்… கிளம்பற புள்ளைய நல்லத நாலு வார்த்த சொல்லி வழியனுப்ப தெரியாம…” என கற்பகமும் விட்ட இடத்திலிந்து கமா போட்டு மீண்டும் தொடங்க, ‘ஐய்யோ…’ என்றானது ஜெயாவுக்கு.

 

நல்ல வேளையாக, அவரை அந்த ஆபத்திலிருந்து காக்கும் தெய்வமாக, குழந்தையுடன் ஶ்ரீ வந்து சேர, உண்மைக்குமே நெஞ்சம் குளிர்ந்துப் போனது அவளை கண்டதும் அவருக்கு.

 

“வாத்தா… வா… நல்லா இருக்கீயாத்தா… எங்க யாரையும் காணும்… பச்ச உடம்புக்காரிய தனியாவா அனுப்புனா அந்த கூறுகெட்ட சிறுக்கி…” என்ற கற்பகம் அவளை இழுத்து தனது அருகில் அமர்த்திக் கொண்டார்.

 

“நானு நல்லாருக்கேன் அம்மாச்சி… அப்பா தான் வந்து விட்டுட்டு ஒரு சோலி கிடக்குனு வாசலோட கிளம்பிட்டாக… இன்னும் இரண்டு நாளுல நானும் கிளம்பனுமா… அதான் அக்னி மாமாவ ஒரு எட்டு பாத்துட்டு போவலானு வந்தேன்… அதுசரி என்ன காலங்காத்தால நடுகூடத்துலையே பஞ்சாயத்த ஆரம்பிச்சாச்சு…”

 

“ஆமான்… ஆமான்… இவருக்கு இப்படியே நெஞ்சைக்கும் தொண்டைக்கும் இழுத்துட்டு கிடக்கு… வந்துட்டா பாக்க… பச்ச புள்ளைய தூக்கிட்டு… உனக்கு தான் அறிவில்லனா… வரவர உன் ஆத்தாகாரிக்கும் புத்தி மழுங்கிப் போச்சுதாக்கும்…”

 

“இந்தா… கெழவி… என்ன உன் கொல்லுப் பேத்திய பாத்ததும் அப்படியே அந்தர் பல்டி அடிக்கற… அப்படியே இடிச்சேனா தெரியும் செய்தி…” என்ற அக்னி உண்மைக்குமே கற்பகத்தின் கன்னத்தில் இடிக்க,

 

“வந்துட்டான் பெருசா என்னையவே இடிக்க… நீ

மாசத்துல பாதி நாளு இப்படிதானே வந்து கிடக்க… என்னமோ இன்னைக்கு தான் புதுசா அடிபட்டு வந்த மாதிரி பேசறான் பாரு பேச்சு… கூறுகெட்ட பய… நான் பெத்ததுதான் சரியில்லனு பாத்தா… அது பெத்து வச்சுருக்கு பாரு… ஒரு கூறுகெட்ட கழுதைய…” என்ற கற்பகம் பேத்தியை கவனிக்க தொடங்கிவிட, மற்றவர்களின் கவனமும் ஶ்ரீயின் பக்கம் திரும்பிவிட்டது.

 

“இதையே தான்டா நானும் அன்னைக்கு சொன்னேன்… அதுக்கு ஏன்டா என்ன ஒரு வாரமா வச்சு செய்யறீங்க…” என நினைத்த ஜெயா அதற்கு மேலும் அங்கிருக்க முட்டாளா என்ன? ஶ்ரீயை நலம் விசாரித்தவர், தனாவை அழைத்துக் கொண்டு தங்களது வயலுக்குச் சென்றுவிட்டார்.

 

பின்னே காயம் குணமாகும் வரை அவனை ஓய்வெடுக்க சொல்லி இருந்தார்கள். கையை அசைக்க கூடாது என்று வேறு சொல்லிவிட்டார்கள் என இந்த ஒரு வாரமாய் ஜெயாவை பாடாய் படுத்திவிட்டான் அக்னி. அதுவும் அருகிலிருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து திறந்து தண்ணீரைக் கூட அவன் வாயில் தான் ஊற்ற வேண்டும் என்னும் அளவிற்கு அக்னி அடம்பிடிக்க, அந்த கோபம் அத்தனையும் தெய்வாவிற்கு தன் கணவர் பக்கமே திரும்பியது.

 

ஒரு வழியாக அனைவரும் சென்றிருக்க, அதற்காகவே காத்திருந்ததைப் போல பேச்சை ஆரம்பித்தான் அக்னி.

 

“ஶ்ரீ, உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்…”

 

“சொல்லுடா மாமா…” என்றாள் ஶ்ரீ குழந்தையை மடியில் போட்டு தட்டிக் கொடுத்தபடியே.

 

“டா போட்டு கூப்பிடாதனு எத்தன தடவ சொல்லறது… உன்னவிட வயசுல பெரியவன்டி நானு…”

 

“இங்க பாருடா மாமா… நான் கல்யாணம் பண்ணி புள்ளையே பெத்துட்டேன்… ஆனா நீ இன்னும் சிங்கள் தான்… சோ அதுல சீனியர் நான்தான்… அதனால இனிமே எனக்கு மரியாதை கொடுக்க கத்துக்கோ…”

 

“திருந்தவே மாட்டடி நீ…”

 

“என்ன திருத்தி உனக்கு ஒன்னும் ஆகப் போறதில்ல… விசயம் என்னனு சொல்லுடா மாமா…”

 

“உனக்கு மிளிர தெரியுமா..?” சட்டென்று விசயத்திற்கு வந்தான் அக்னி.

 

இதுவரை கேலியாக பேசிக் கொண்டிருந்தவள் முகம் சட்டென்று சுண்டிவிட, “அவ என்னோட பெஸ்ட் பிரண்ட்…” என்றாள் சோகம் பூசிய குரலில்.

 

“அப்போ மகியையும் உனக்கு தெரியும் தானே…”

 

“ஆமான் தெரியும்… மகி மிளிரோட பெஸ்ட் ப்ரண்ட்…”

 

“சரி இருந்துட்டு போகட்டும்… எனக்கு அவங்கள பத்தி கொஞ்சம் டீட்டெல்ஸ் வேணும்…”

 

“உனக்கு எதுக்கு அவங்கள பத்தின டீட்டெல்ஸ்…” என அவள் அவனை யோசனையாய் பார்க்க,

 

“அத அப்புறம் சொல்லறேன்… நீ முதல உனக்கு என்ன தெரியுமோ அத சொல்லு…”

 

“மிளிர், மகிக்கு கூட இதே ஊர்தான்… ஆனா இங்க இருக்கும் போது நான் அவள பாத்ததே இல்ல… சென்னையில காலேஜ் முதல் நாள் தான் அவள பாத்தேன்… ஒரே ஊருங்கறது தான் என்ன மிளிர கவிய எல்லாம் ஒன்னு சேத்துச்சு… மிளிர் மகிகூட இருக்கனுமுனு வெளிய வீடெடுத்து தங்கிட்டா… எனக்கும் கவிக்கும் கூட ஹாஸ்ட்டல் செட் ஆகல… அதனால அவளோட வீட்ட சேர் பண்ணிக்கிட்டோம்…”

 

“ம்ம்ம்… அப்புறம்…”

 

“நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன் அப்புறம் அப்புறனுட்டு… மிளிர் ரொம்ப ஜாலி டைப்… எதுக்குமே பீல் பண்ண மாட்டா… எவ்வளவு பெரிய பிரச்சனையினாலும் அசால்டா சமாளிச்சுடுவா… சரியான அராத்து…  நாங்க மூனு பேரும் சேந்து அடிக்காத லூட்டியே இல்ல… அதே டைம் சுமாரா படிச்சாலும் எல்லா லெக்ச்சரோட பேவரைட்டும் அவ தான்…”

 

“அது எப்படி படிக்கற பசங்கள தான டீச்சர்ஸ்க்கு பிடிக்கும்…”

 

“அது… அவ பேசியே எல்லாரையும் மயக்கிடுவா… கட் அடிச்சுட்டு சினிமாவுக்கு போற கிளாஸ்க்கு புரபோஷரே நோட்ஸ் குடுக்கற அளவுக்கு அவ க்ளோஸ்னா பாத்துக்கோ… அவளுக்கு விக்னெஸ்னு ஒன்னு இருக்குனா அது மகி மட்டும் தான்… அவ விசயத்துல மட்டும் ரொம்ப சென்ஸ்சிடிவ் ஆகிடுவா… என் சில நேரம் மகிய பாத்தா எனக்கு பொறாமையா கூட இருக்கும்… ஆனா மகிக்கு தான் மிளிர் மேல ரொம்ம கேர்… ஒரு குழந்தைய அம்மா எப்படி கேர் பண்ணுவாங்களோ அப்படிதான் மிளிர பாத்துப்பா… மிளிருமே அவகிட்ட குழந்தை மாதிரிதான் நடந்துப்பா…

 

அப்புறம் என்ன… நாலு வருஷம் ஒன்னா படிச்சோம்… அப்புறம் மூனு பேருக்கும் ஒரே இடத்துல வேலை கிடைச்சுது… இன்னும் இரண்டு வருஷம்… லைப்னா இதான்ங்கற அளவுக்கு ஒரு வாழ்க்கை… அப்போ தான் மகிக்கு மேரேஜ்ங்கறதால இரண்டு பேரும் ஊருக்கு வந்தாங்க… அப்போ ஒரு விபத்துல மகி இறந்துட்டா… மிளிருக்குமே செம அடியாம்… மகியோட துக்கத்துக்கு போனப்ப கூட அவள பாக்க முடியல… அவள பாக்கனுமுனு சொன்னப்ப… பழசெல்லாம் மறந்துட்டா… தயவுப் பண்ணி அவள பாத்து யாரும் கஷ்டப்படுத்த வேண்டானு துளசிம்மாதான் சொன்னாங்க… சரினு வந்துட்டோம்…”

 

“அதுக்கு அப்புறம் நீ அவள பாக்க ட்ரை பண்ணவே இல்லையா…”

 

“இல்ல… கடைசியா மகியையும் மிளிரையும் பஸ் ஏத்தி விடறதுக்கு முன்னாடி  பாத்ததுதான்…”

 

“ஏன் நீ அவள பாக்க ட்ரை பண்ணவே இல்லை…”

 

“அவளுக்கு பழசெல்லாம் நியாபகம் வரவே வேண்டாம்… என்ன தெரியவே வேண்டானு தான் கடவுள்கிட்ட வேண்டிப்பேன்… ஏன்னா மகியோட இழப்பு அவளுக்கு எப்படினு எனக்கு தெரியும்… அவ எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருந்தா அதுவே போதும்… தேவையில்லாம நா அவள பாத்து எதுக்கு பழச கிளறனும்…” இமைகளின் ஒரம் வழிந்த கண்ணீரை துடைக்கவும் மறந்து பழைய நினைவுகளிலேயே மூழ்கி அமிழ்ந்துப் போனவள் போல் அமர்ந்திருந்தாள் ஶ்ரீ.

 

“ஶ்ரீ… அழறீயா…”

 

“இல்ல… சொல்லு… வேற என்ன தெரிஞ்சுக்கனும் நீ…”

 

“இப்போ மிளிருக்கு பழைய நியாபகம் எல்லாம் வந்துட்டுனு சொன்னா…”

 

“டேய்… உண்மையாவா… சரியாகிட்டாளா அவ… அப்போ அவளுக்கு இப்ப என்ன தெரியுமா..?” என்றாள் பதற்றத்துடன் அவள்.

 

“தெரியும்….தெரியும்… அதவிடு… எக்ஸாக்டா மிளிரும் மகியும் சென்னையில இருந்து கிளம்ப முன்னாடி என்ன நடந்துச்சுனு தெரிஞ்சுக்கனும்…”

 

“அதுக்கு ஏன்டா நான் காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து கதை சொல்ல சொன்ன…”

 

“அதுக்கும் காரணம் இருக்கு… நீ இப்ப கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…”

 

“அன்னைக்கு மகி யாரையோ பெரிய ஆள இன்டர்வியூ எடுக்க போய் இருந்தா… வர லேட் ஆகிட்டு… எல்லாரும் டென்ஷன் ஆகிட்டோம்… போலீஸ் கம்பிளைண்ட் கொடுக்கலானு நினைக்கும் போது திரும்பி வந்துட்டா… அப்புறம் ஊருக்கு கிளம்பிட்டாங்க… அவ்வளவு தான்…”

 

“திரும்பி வந்தப்ப மகியோட மனைநிலை எப்படி இருந்ததுச்சு…”

 

“எப்படினா… கொஞ்சம் டென்ஷனா இருந்தா… ஏற்கனவே மிளிர் வேற அழுதுட்டே இருந்தாளா… அவள சாமாளிச்சு தூங்க வைக்கறதுக்குள்ள போதும் போதுமுனு ஆகிட்டு அவளுக்கு…”

 

“உங்க யார்கிட்டையும் எதுவுமே மகி சொல்லலையா…”

 

“என்ன சொல்லனுமுனு எதிர் பாக்கற நீ… எதுவும் சொல்லலையே…” என்றாள் யோசனையாய் ஶ்ரீ.

 

“இங்க பாரு ஶ்ரீ… நல்லா யோசிச்சு சொல்லு… நீ சொல்லற விசயத்துல தான் பல ரகசியம் அடங்கி இருக்கு… ப்ளீஸ்… நல்லா யோசிச்சு சொல்லு…”

 

“இப்ப எதுக்கு நீ அக்யூஸ்ட விசாரிக்கற மாதிரி விசாரிக்கற… அத சொல்லு முதல…”

 

“பச்… மகியோட சாவு விபத்து இல்ல… கொலை… அவ இன்டர்வியூ எடுக்க போன இடத்துல தான் ஏதோ நடந்து இருக்கனுமுனு என்னோட கெஸ்… அதான் வந்த பிறகு உங்க யார்கிட்டையாவது ஏதாவது பேசனாளா..? இல்ல யார இன்டர்வியூ எடுக்க போனேனு ஏதாவது சொன்னாளா..?” அவனின் கூற்றில் அதிர்ந்தாலும் ஆழ்ந்து யோசிக்க தொடங்கி இருந்தாள் ஶ்ரீ.

 

சிறிது நேரம் யோசித்த பின், “எனக்கு தெரிஞ்சு மிளிர்கிட்ட கூட அவ எதுவும் சொல்லி இருக்க மாட்டா… ஏன்னா மிளிர் அன்னைக்கு மகிய தவிர எதையும் யோசிக்கற மனநிலையிலையே இல்ல… நானுமே யாருமே மதியத்துல இருந்து சாப்பிடலனு சமைக்க போய்ட்டேன்… மிளிர தூங்க வைச்சுட்டு கவியும் மகியும் தான் கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தாங்க… ஆனா என்ன பேசனாங்கனு எனக்கு தெரியாது…”

 

“ஓ.கே… உன்கிட்ட கவியோட நம்பர் இருக்கும் இல்ல… தா… நான் பேசிக்கறேன்…”

 

“என்கிட்ட இல்ல… மகி இறந்த கொஞ்ச நாள் ஏதோ அப்செட்டாவே சுத்திட்டு இருந்தா… அப்புறம் வேலைய ரிசைன் பண்ணிட்டு அவங்க சொந்த ஊருக்கே போய்ட்டா…”

 

“அதுக்கு அப்புறம் நீ அவள கான்டெக்ட் பண்ணலையா..?”

 

“பண்ண ட்ரை பண்ணேன்… அவ வெளிநாடு போய்ட்டதா அவங்க அம்மா சொன்னாங்க… அதுக்கு அப்புறம் என்னோட வேலை… லவ்… கல்யாணம்… குழந்தைனு பிஸி ஆகிட்டேன்… கடைசியா என் கல்யாண பத்திரைக்கை வைக்க கூட அவங்க வீட்டுக்கே போனேன்… அவ அம்மாப்பா இன்னும் வெளிநாட்டுல இருந்து வரலனு சொல்லிட்டாங்க… ஒரு நம்பர் குடுத்தாங்க… ட்ரை பண்ணனேன்… ரீச் ஆகல… அதுக்கு அப்பறம் நா அவள கான்டெக்ட் பண்ண ட்ரை பண்ணல…”

 

“சரி கவியோட அட்ரஸ் கொடு… நானே போய் விசாரிச்சுக்கறேன்…”

 

“சரி இதெல்லாம் உனக்கு ஏன்… அத சொல்லவே இல்லையே நீ…”

 

“மகியோட கேஸ நான் தான் ஹேண்டில் பண்ணேன்… இப்போ தான் அது கொலைனு தெரிஞ்சுது…”

 

கவியின் முகவரியை எழுதிக் கொடுத்தவள், “சரி… அவ்வளவு தானே நான் கிளம்பவா..?” என்றாள்.

 

“இன்னும் ஒன்னே ஒன்னு கேக்கனும்…”

 

“என்ன…”

 

“மிளிருக்கு என்ன முன்னாடியே தெரியுமா..?”

 

“தெரியுமாவா… நாங்க காலேஜ் செகண்ட் இயர் படிக்கறதுல இருந்து அவ உன்ன லவ் பண்ணறா…” என அவள் புன்முறுவலுடன் சொல்ல… இன்பமாய் அதிர்ந்தவன், “அப்போ நீ என்கிட்ட சொல்லவே இல்ல…” என்றான்.

 

“நா அவ சும்மா விளையாட்டுக்கு சொல்லறானு நினைச்சேன்… அது எந்தளவுக்கு சீரியஸ்னு எனக்கு தெரியல… அதுவும் இல்லாம என்கிட்ட அவ கிளியரா எதுவும் சொல்லாதப்போ அத நா உன்கிட்ட எப்படி சொல்ல முடியும்…” அவள் சொல்லி முடிக்கும் முன்னே கனவுலகுச் சென்றிந்தான் அவன்.

 

“தெரியும்டா நீ தூண்டி துருவி மிளிர பத்தி கேட்கும் போதே தெரியும்… என்ன கரெக்ட் பண்ணிட்டாளா உன்ன… லவ்வ சொல்லிட்ட தானே…”

 

“இல்ல இனிமேதான்…”

 

“அப்போ நான்தான் உளறிட்டனா…”

 

“எக்ஸாக்ட்லி…”

 

“அடப்பாவி…”

 

“இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகற… மிளிர பாக்க போகலாமா… வரீயா நீ…”

 

“நிஜமாதான் சொல்லறீயா… இப்ப எப்படி போக முடியும்..?” என்றாள் சுற்றிலும் பார்வையை பதித்து ஆங்காங்கே நின்றவர்களைப் பார்த்து.

 

“தனாப்பாவ வர சொல்லறேன்… நீ வீட்டுக்கு போறேனு சொல்லிட்டு கிளம்பிடு… நான் பின்பக்க சுவரெறி குதிச்சு வந்துடறேன்…”

 

“ஏன்டா மாமா அப்படி போகனும்… சொல்லிட்டே போகலாம் இல்ல…”

 

“இப்போ என்ன வெளிய விட மாட்டாங்க… உன்னையும் ஹாஸ்பிட்டலுக்கு விட மாட்டாங்க…”

 

“ஏன்டா மிளிர் ஹாஸ்பிட்டலையா இருக்கா… இப்போதான் நல்லாகிட்டானு சொன்னா…”

 

“அதெல்லாம் நல்லாதான் இருக்கா… நான் போற வழியில எல்லாம் சொல்லறேன்… நீ உடனே கிளம்பு… தனாப்பாவை வர சொல்லிடறேன் இப்பவே…” என்றவன் உடனே தனாவுக்கு அழைத்து விட்டான். அவளும் தன்னைதான் காதலிக்கிறாள் என தெரிந்த நொடி, அவளை காணும் ஆவல் காட்டாற்று வெள்ளமென பெருகியது அவன் உள்ளத்தில். ஶ்ரீயைப் பார்த்தாலாவது மிளிர் உண்மையா சொல்வாளா?

 

– தேடல் தொடரும்…

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்