
தேடல் – 8
ஜெயா சொல்லி சென்றதில் அதிர்ந்தவனாய், அருகில் இருந்த தூணைப் பற்றியபடியே அக்னி சரிந்து அமர,
“விடுகதையா இந்த வாழ்க்கை…
விடை தருவார் யாரோ..?
உனது கை உன்னை அடிப்பதுவோ…
உனது விரல் கண்ணை கெடுப்பதுவோ…
அழுது அறியாத உன் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ…
ஏன் என்று கேட்கவும் நாதியில்லை…
விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ…”
என கர்ண கொடூரமான குரலில் அவன் காதருகே பாடல் (???) ஒலிக்க, அதில் சுயம் மீண்டவன் தாவி பாடியவரின் கழுத்தை எட்டிப் பிடித்தான்.
“அடேய் மவனே… கழுத்த விடுடா… மூச்சு முட்டுதுடா… அப்பன கொன்ன பாவம் உனக்கு வேண்டான்டா மவனே… சொன்னா கேளு… விடுடா என்ன…” என அக்னியின் கையை கழுத்தில் இருந்து எடுக்க போராடிக் கொண்டிருந்தார் தனா.
அவர் கழுத்தில் இருந்து கையை எடுத்தவன், “யோவ்… சித்தப்பு… என்னயா சொல்லிட்டு போறாரு உன் அண்ணன்… என்னமோ வியாழனுக்கு அப்புறம் வெள்ளிங்கற மாதிரி உனக்கு கல்யாணம்னுட்டு போறாரு… கட்டிக்க போறவன் நான்… என்ன ஒரு வார்த்த சம்மதமானு கேக்கனுமா இல்லையா..?” என அவரிடம் நியாயம் கேட்டுக் கொண்டிருக்க,
வேக வேகமாக மூச்சை உள்ளிழுத்து தன்னை சமன்படுத்தி கொண்டார் அவர். மெல்ல வலி எடுத்த கழுத்தை நீவி விட்டபடியே, “ஏன்டா எடுபட்ட பய மவனே… இம்புட்டு நேரம் அம்னீசியால இருந்தீயா… அப்படியே செவிட்ட காட்டி ஒன்னு விட்டேனா தெரியும்… உங்க அப்பன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறேனு சொன்னா அவன போய் கேளு… அத விட்டுட்டு என் கழுத்த புடிக்க…” என்றார் கடுப்பாய்.
“என்னையா பொசுக்குனு உங்க அண்ணன அவன் இவனு மரியாதை இல்லாம பேசிப்புட்ட…”
“அண்ணனாது நொண்ணவுது… ஒருத்தன் கல்யாணத்துல என்ன வச்சு நீங்க அடிச்ச கும்மி பத்தாது… நீங்க கல்யாணம் தான் பண்ணுங்க இல்ல காது குத்துதான் பண்ணுங்க… உங்க குடும்ப சங்காத்தமே வேண்டான்டா சாமி… என்ன ஆள விடுங்கடா யப்பா…” என அவர் தலைக்கு மேல் கைத்தூக்கி பெரிய கும்பிடாய் போட்டார்.
“யோவ் சித்தப்பு… இப்ப கடைசியா என்னயா சொல்லற…”
“நா சொல்ல என்ன இருக்கு…”
“போய் எட்டப்பருட்ட இந்த கல்யாணத்துல எனக்கு சம்மதம் இல்லைனு சொல்லு… போ…”
“அதெல்லாம் நான் சொல்ல முடியாது…”
“அப்போ நான் போய் சொல்லறேன்…”
“அத முதல்ல பண்ணுடா சாமி… உனக்கு புன்னியமா போகும்…”
“ம்ம்ம்… இப்பவே சொல்லறேன்… எல்லாரையும் கூட்டு வச்சு சொல்லறேன்… எனக்கென்ன பயமா… நீ நான் நாலாவது படிக்கும் போது எங்க தமிழ் வாத்தியார் பொண்ணுக்கு லவ் லட்டர் குடுக்க சொன்னது… அப்புறம் காலேஜ் படிக்கும் போது உன் லேப் அட்டண்டருக்கு லவ் லெட்டர் குடுத்தது… அப்புறம் காலேஜ் முடிச்சுட்டு கடல முட்டாய வச்சுட்டு ஒருத்தி பின்னாடி கழுதையா சுத்துனீயே… யாரது..? ஹான் பக்கத்தூரு பரிமளா… அதெல்லாத்தையும் மொத்த குடும்பத்தையும் கூட்டி வச்சு சொல்லறேன்… அதுவும் இப்பவே சொல்றேன்… யோவ் தகப்பா… எங்கையா இருக்க…” என்று ஜெயாவை கத்தி அழைத்தவனின் வாயை இறுக மூடினார் தனா.
“ஏன்டா… ஏன்… உங்க குடும்பத்துக்கு என்ன பாவம் பண்ணேன் நானு… எப்ப பாரு ஏன் என் குடும்பத்துலையே கும்பி அடிக்கறீங்க…”
“உன் லவ்வுக்கு நான் ஹேல்ப் பண்ணேன் இல்ல… இப்போ என் லவ்வுக்கு நீ ஹேல்ப் பண்ணு…”
“எது தமிழ் வாத்தியாரோட பொண்ணுக்கு குடுக்க சொன்ன லெட்டர அவர் பொண்டாட்டிக்கு குடுத்துட்டு செறுப்படி வாங்கி குடுத்தியே அதையாடா உதவினு சொல்லற…”
“பொண்ணோ பொண்டாட்டியோ… கரெக்டான அட்ரஸ்ல தான குடுத்தேன்… அத பாரு சித்தப்பு…”
“எது…” என அவர் நெஞ்சில் கை வைத்து அதே தூணைப் பிடித்தபடி அமர,
“அத விடு சித்தப்பு… இப்போ உன்னால என் லவ்வுக்கு ஹெல்ப் பண்ண முடியுமா..? முடியுதா..?” என அக்னி அவரிடம் டீல் பேசிக் கொண்டிருக்கும் போதே, வேகமாக அங்கே வந்தாள் நிவி என்கிற நிவேதாஶ்ரீ.
“ஹாலோ… மாம்ஸ் உன்ன தான்… கட்டிக்க போற பொண்ணையும் கொஞ்சம் பாக்கலாமில்லை… சும்மா எந்நேரம் பாத்தாலும் சின்ன மாம்ஸ் கூடவே கொஞ்சி குழவிட்டு…” என அக்னியின் முன் அவள் சொடுக்கிட்டு அழைக்கவும் இருவரும் நிமிர்ந்து அவளை பார்த்தனர்.
இருவரையும் இடித்துக் கொண்டு நடுவில் அமர்ந்தவள், “அப்புறம் மாம்ஸ்… கல்யாணத்த எப்போ வச்சுக்கலாம்..? இந்த மாசத்துலையே ஏதாவது நல்லா நாள் பாக்க சொல்லலாமா..? இல்ல ஒரு ரெண்டு மூனு மாசம் டைம் எடுத்து கிராண்டா செய்வோமா..? என்ன கேட்டா ரொம்ப கிரேன்டா எல்லாம் வேண்டாம்னு தான் சொல்வேன்… நிச்சயத்துக்கு பதிலா இந்த வெள்ளிக்கிழமையே கோவில வச்சு கல்யாணத்த முடிச்சுட்டா கூட ஓ.கேனு தான் சொல்லுவேன்…” என்றாள் அக்னியின் தோளில் இடித்து கண்ணடித்து.
“ஏன் நிவி… அவனே கல்யாணம் வேண்டானு சொல்லறான்… நீ என்னடானா..?” என்ற தனாவை திரும்பி முறைத்தவள், “யோவ் மாம்ஸ்… உனக்கு கொஞ்சமாச்சும் விவஸ்தை இருக்கா..? சின்னஞ்சிறுசுங்க பேசுட்டு இருக்கோம் இல்ல… ஊடால உனக்கென்ன வேலை… போய் புள்ளகுட்டிய ஹோம் ஓர்க் சொல்லி தர வேலைய பாரு… பே…” என்றவள் திரும்பி அக்னியை பார்த்து, “அப்புறம் அக்னி மாமா… ஹானிமூன எங்க வச்சுக்கலாம் மாமா…” என மீண்டும் அவன் தோளில் இடிக்க, அவன் தலையில் அடித்துக் கொண்டான்.
“ஏன்டீ நீ வேற படுத்துற…”
“பின்ன… நீயெல்லாம் போலீஸ் காரனா மாம்ஸ்… பெரிய மாமா என்னமோ நிச்சயங்கறாரு… கல்யாணங்கறாரு… நீயும் புடிச்சு வச்ச சிலையாட்டம் வாய மூடிட்டு நிக்கற… இந்த கல்யாணம் வேண்டானு சொல்லித் தொலைக்க வேண்டியது தான…” என்றாள் எரிச்சல் மண்டிய குரலில்.
“ஏன் நீ சொல்ல வேண்டியது தானே…”
“அப்படியே கத்திய எடுத்து குத்துனேனு வச்சுக்கோ… நேரா நரகம் தான்… வெண்ண உன்னையே உங்கொப்பா கேக்கல… என்னதான் கேக்க போறாராக்கும்..?”
“அதுவும் சரிதான்…இப்போ என்ன பண்ணலாங்கற..?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது… நீ என்ன பண்ணுவீயோ..? ஏது பண்ணுவீயோ..? அது எனக்கு தெரியாது… ஆனா, இந்த கல்யாணத்த நிறுத்துற… ஏன்னா நான் என்கூட வேலை பாக்கற ஒருத்தர லவ் பண்ணறேன்… அப்படி மட்டும் நீ நிறுத்தல…”
“நிறுத்தலைனா… கல்யாயணத்து அன்னைக்கு அவனோட ஓடிப் போய்டுவீயா…” என்றான் அக்னி குரலில் எதிர்பார்ப்போடு.
“ஐய்… ஆசை… உன்ன தான் கட்டிப்பேன்… அப்புறம் கடைசி வரைக்கும் நீ தான் என்னை வச்சு குப்பக் கொட்டனும்… நல்லா யோசிச்சு முடிவு பண்ணு… சாய்ஸ் இஸ் யுவர்ஸ்…” என்றவள் தோளைக் குலுக்கிவிட்டு அவன் பதிலையும் எதிர்பாராமல் எழுந்துச் சென்றுவிட்டாள். சிறுவயதில் இருந்தே பழகியதால் அவர்களிடையே உறவையும் தான்டிய மெல்லிய நட்பொன்று இழையோடிக் கொண்டிருக்கிறது.
“என்னடா அவ இப்படி சொல்லிட்டு போறா…”
“அதான் சித்தப்பு எனக்கும் பக்குனு இருக்கு…”
“சரி அத அப்புறம் யோசிப்போம்… உன் லவ்வுக்கு ஏதோ ஹேல்ப் பண்ணனும் சொன்னீயே… அத சொல்லு முதல…”
“அங்க தான் சித்தப்பு… ஒரு சின்ன பிரச்சனை…”
“அத தான்டா என்னனு கேக்கறேன்…”
“அது வந்து சித்தப்பு…”
“என்னடா வந்து போயினுட்டு… அந்த பொண்ணு வீட்டுல ஏதாவது பிரச்சனை பண்ணுறாங்களா…”
“அதெல்லாம் இல்ல… அதவிட பிரச்சனை கொஞ்சம் பெரிசு…”
“என்ன லவ்வ அந்த பெண்ணுட்டையே சொல்லலையா…”
“அதுவும் இல்லை சித்தப்பு… அதவிட பிரச்சனை இன்னும் கொஞ்சம் பெரிசு…”
“அப்படியே அறைஞ்சேனா… இதைவிட என்னடா பெரிசா…”
“அது சித்தப்பு… சின்னதா ஒரு டவுட்…”
“என்னா… டவுட்டு…”
“எனக்கு அந்த பொண்ணு மேல லவ்வா இல்லையானு ஒரு டவுட்டு சித்தப்பு… அவ்வளவு தான் பெருசா வேற ஒன்னும் இல்ல…”
“எது… ஏன்டா அண்ணுனும் தம்பியும் சேந்து என்ன மேல அனுப்பாம அடங்க மாட்டீங்களா… மூடிட்டு நிவிய கட்டிட்டு குடும்பம் நடத்து… லவ்வு ஜவ்வுனு சொல்லிட்டு என் உயிர வாங்குன நானே உங்கொப்பன கூப்பிட்டு பத்தி வச்சுடுவேன் சொல்லிட்டேன்…” என்றார் கடுப்பாக தனா.
“அதில்ல சித்தப்பு… நான் அந்த பொண்ண முதல் தடவை ஆக்ஸிடன்ட்ல தான் பாத்தேன்…” என தொடங்கியவன் அத்தனையும் சொல்லி முடித்தான். “ஆனா அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழும் போது எப்படி துடிச்சுட்டேன் தெரியுமா..? அவ என்ன திட்டுனது கூட மண்டையில ஏறல… அவளுக்கு எதுவுமில்லையேனு தான் முதவ பாக்க தோனுச்சு… எனக்கு என்னமோ அவள தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாதுனு தோனுது…” என்றான் தீவிரமாக.
“என்னடா மவனே… இவ்வளவு நடந்து இருக்கு… நீ இப்ப தான் சொல்லற… இத போய் உங்க அப்பாட்ட சொன்னா சாமி ஆடிடுவாறேடா… அதவிட முக்கியம் அந்த பொண்ணு உன்ன லவ் பண்ணுதானே தெரியலையே…”
“அதான் சித்தப்பு எனக்கும் என்ன பண்ணறதுனு தெரியல… முதல இந்த கல்யாணத்த நிறுத்தனும்…”
“ஆஹான்… நிறுத்திட்டா… உடனே அந்த பொண்ணுட்ட லவ்வ சொல்லி லவ் பண்ண வச்சு… கல்யாணத்த முடிச்சுடுவ… அப்படிதானே…”
“இல்லையா பின்ன…”
“ரொம்ப நம்பிக்கை தான்டா உனக்கு…” என்றார் தனா கேலியாய்.
“என்ன சித்தப்பு நீ வேற கண்ட நேரத்துல கமெடி பண்ணிட்டு… இப்ப என்ன பண்ணி கல்யாணத்த நிறுத்தலாம் சொல்லு… ஏன்னா நாளைக்கு மறுநாள் தட்டு மாத்தறது… அநேகமா அத இங்க வச்சே தான் பண்ணுவாங்கனு நினைக்கறேன்… அதுக்குள்ள இத தடுத்து நிறுத்தனும்…”
“நிறுத்தனும் நிறுத்தனுமுனா… எப்படிடா நிறுத்த முடியும்… நான் போய் சொன்னா மனுஷன் வல்லுனு விழுவாருடா…”
“என்ன சித்தப்பு… இப்படி சொல்லிட்ட… உன் மேல எட்டப்பருக்கு எம்புட்டு பாசம்…”
“பாசம் தான்டா… எனக்காக உயிரையே தருவாரு… ஆனா இந்த விசயத்துல கேக்க மாட்டாரு…”
“இரு… இரு என்ன சொன்ன இப்போ… உயிர குடுக்கற அளவுக்கு பாசமா…”
“ஆமா… என்ன அதுக்கு…”
“தெய்வம் சித்தப்பு நீ… எவ்வளவு பெரிய ஐடியா தந்திருக்க நீ…” என அவரை கட்டிக் கொண்டு கன்னத்தை ஈரம் செய்தவன் துள்ளிக் குதித்துக் கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டான்.
“டேய்… டேய்… என்னைய வச்சு பிளான் எதுவும் பண்ணலையே… சொல்லிட்டு போடா டேய்… உசுர வாங்கேறானே…” என இவர் பின்னோடு கத்திக் கொண்டே சென்றதிற்கெல்லாம் பயனே இல்லாமல் போனது.
💕 💗💗💗 💕
வழக்கம் போல தனது அழகு நிலையத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தாள் மிளிர். அவளையும் விட பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்தனர் தில்லைநாதர்-வசுமதி தம்பதி.
“மதி… எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீயா… சீக்கரம் கிளம்பும்மா… இப்ப கிளம்புனா தான் ராத்திரிக்குள்ள திரும்பி வர முடியும்…” என அவரை அவசரபடுத்திக் கொண்டிருந்தார் நாதர்.
“இதோங்க… எல்லாமே எடுத்து வங்சுட்டேன்… நம்ம மிளிரோட ஜாகத்தை தான் ரொம்ப நேரமா தேடிட்டு இருக்கேன்… ஆனா கிடைக்கலைங்க…” என பூஜையறையையே அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தார் வசுமதி.
“என்னம்மா நீ… இதெல்லாம் பொறுப்பா வைக்கறதில்லையா..?” என நாதரும் சேர்ந்து பரபரப்பாக தேடிக் கொண்டிருக்க, அதையெல்லாம் கண்டுக் கொள்ளாது நிதானமாக இனியன் கொடுத்த டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தாள் மிளிர்.
இருவருக்கும் எங்கு தேடியும் அவளின் ஜாதகம் கிடைத்தபிடில்லை. ஓய்ந்து மிளிருக்கு அருகே அமர, “இவ்வளவு நேரம் இதையா தேடறீங்க இரண்டு பேரும்…” என்றபடியே அவள் கையில் இருந்த நோட்டை இப்படியும் அப்படியுமாக திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.
“உனக்கு எல்லாத்துலையும் விளையாட்டு தான்…” என்றபடி அவளிடமிருந்து அதை வாங்கி கண்களில் ஒற்றிக் கொண்டார் வசுமதி.
“ஏன்ம்மா… இந்த ஒன்பது கட்டத்துல தான் ஒருத்தனோட வாழ்க்கையே இருக்கா… இதெல்லாம் இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க…”
“உனக்கு ஒரு விசயத்துல நம்பிக்கை இல்லைனா அடுத்தவங்க நம்பிக்கைய அவமதிக்க கூடாது மிளிர்…” என்றார் நாதர் கண்டிக்கும் குரலில்.
“சாரிப்பா… ஆனா எனக்கு இப்போ கல்யாணத்துல இஷ்டம் இல்லை… எனக்கே நான் யாருனு தெரியாதப்போ… எப்படிப்பா கல்யாணம்…”
“உனக்கு எங்கள தெரியுதாம்மா…” என்றார் நாதர் அவளைக் கூர்ந்துப் பார்த்தபடி.
“அப்பா…” என்றாள் மிளிர் தடுமாறி.
“இல்ல மிளிர் எங்களை அடையாளம் தெரியுதானு கேக்கறேன்…” என்ற அவரின் கேள்விக்கு இல்லை என இடவலமாக தலையாட்டினாள் மிளிர்.
“அப்புறம் எப்படி எங்கள உன் சொந்தனு நம்பற… நாங்க சொல்லற எல்லாத்தையும் நம்பற…” என்ற அவரின் கேள்விக்கு பதிலேதும் சொல்லாது அமைதியாக இருந்தாள் அவள்.
“தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு பெரியவங்க சொன்னது சும்மா இல்லைம்மா… எல்லாத்தையுமே மறந்தாலும் அந்த பிணைப்பு உடைஞ்சு போகாது… ரத்த பந்தம் அறுந்துப் போகாது… அதே மாதிரி தான் உன் கல்யாணமும்… அந்த பந்தம் இப்ப தான் ஏற்படனுமுனா ஏற்பட்டே ஆகும்… இது நாங்க எங்க திருப்திக்காக பாக்கறது… அப்படியேனாலும் இன்னைக்கேவா உனக்கு கல்யாணம் பண்ணிட போறோம்…” என்றார் நிதானமாக.
அவர் சொல்லியது புரிந்தது என்னும் விதமாக தலையாட்டியவள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு அழகுநிலையம் கிளம்பிவிட்டாள்.
“இனியா… நாங்க வர எப்படியும் ராத்திரி ஆகிடும்… நாங்க நம்ம சொந்த ஊருக்கு போறோம்… வர முன்னபின்ன ஆகலாம்… ஒரு வேலை வரமுடியலனா… ராத்திரி நம்ம பூர்வீக வீட்டுலையே தங்கிடுவோம்… கடைய பொறுப்பா பாத்துக்க… காலைக்கும் மதியத்தும் சமைச்சு வச்சுருக்கேன்… சாப்பிடுங்க… ஒரு வேளை ராத்திரி வரலைனா மாவு ப்ரிட்ஜில் இருக்கு… அக்காவுக்கு நீயே தோசை ஊத்தி குடுத்துடு… அவள சமைக்க சொல்லாத… புரியுதா..?” என்றபடியே கிளம்பிக் கொண்டிருந்தார் வசுமதி.
“ஏம்மா ஜாதகம் தானே… இங்கையே எங்கையாவது பாக்கலாம் தானே… இதுக்காக திருவண்ணாமலை வரைக்கும் போகனுமா என்ன…”
“அக்காவுக்கு ஜாதகம் எழுதி குடுத்ததே அவர் தான்டா… இந்த பேர வைக்க சொன்னது கூட அவர்தான்… என்னமோ அப்பா அங்க போய் பாக்கனுமுனு பிரியப் படறாரு… அப்படியே அங்க உள்ளவங்களையும் பாத்த மாதிரி இருக்கும் இல்ல…” என்றபடியே அவர் கிளம்பி வாசல்வரை வந்துவிட,
“டேய்… பசங்க இந்நேரம் கடைய திறந்து இருப்பாங்க… போய் கடைய பாக்க பாரு… அத விட்டுட்டு எங்கையாவது ஊர சுத்துனனு தெரிஞ்சுது கால உடச்சுடுவேன்… பாத்துக்க…” என சொல்லி தான் கிளம்பி இருந்தார் நாதர்.
பேருந்து நிலையம் வரை பைக்கில் வந்து அங்கிருந்து திருவண்ணமலைக்கு பேருந்தில் செல்வதாக ஏற்பாடு. இருவரும் அங்கே சென்றடைய கிட்டதட்ட நான்கு மணி நேரம் ஆகியிருந்தது. அங்கிருந்து அவர்களை அழைத்து செல்ல நாதரின் பங்காளி முறையில் உள்ள ஒருவர் வந்திருந்தார்.
கிட்டதட்ட அடுத்த நாற்பது நிமிட பயணத்தில் ஊரை அடைந்திருந்தனர் அவர்கள். இன்னும் பழமை மாறாதிருந்தது அந்த கிராமம். தன்னை அழைத்து வந்தவர் வீட்டிலேயே மதிய உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு மதியம் மூன்று மணிக்கு மேலே தாங்கள் சந்திக்க வந்தவரை தேடிச் சென்றனர் அவர்கள்.
வீட்டின் வெளியே வேப்பமர நிழலில் ஒரு மரசாய்வு நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்திருந்தார் அவர். நேற்றே நாதர் வருவதாக தகவல் சொல்லி இருக்க, அவர்களுக்காக தான் காத்திருந்தார் அவர். கிட்டதட்ட என்பதை நெருங்கும் வயது. உடலில் ஒரு தொய்வு தெரிந்தாலும் முகத்தில் தெய்வீக கலை தவழ்ந்தது.
“வணக்கம் ஐயா…” என நாதர் அவரை வணங்க, “வாய்யா நாதரு… இப்போ தான் சொந்த ஊருக்கு வழி தெரிஞ்சுதோ..? வீட்டுல எல்லாம் நல்லா இருக்காகலா..?” என்றபடியே அருகில் இருந்த திண்ணையை காட்ட இருவரும் அதில் அமர்ந்தனர். அதன் பிறகு சில நிமிடங்கள் பொதுவான நல விசாரிப்பில் கழிந்தது.
“ஆத்தா… முல்லை வந்தவங்களுக்கு காபி தண்ணீ எடுத்தாத்தா…” என இவர் இங்கிருந்து குரல் கொடுக்க, “இதோங்க மாமா…” என்றபடியே கொடுத்துவிட்டு நலம் விசாரித்துச் சென்றார் அவர்.
“அப்புறம் நாதா… வந்த விசயத்த சொல்லு…”
“இல்லைங்கையா நம்ம மிளிருக்கு கல்யாணம் பண்ணனுமுனு நினைக்கறோம்… எப்போ கைக்கூடி வருமுனு நீங்க தான் கணிச்சு சொல்லனும்…” என்றவர் மிளிரின் ஜாதகத்தை அவரிடம் நீட்ட,
“நான் எழுதுனத எங்கிட்டையே காட்டறீயாக்கும்…” என புன்சிரிப்பை தவழ விட்டவர் அதை மெல்ல புரட்டிப் பார்த்தார்.
“ஏன்ய்யா நாதர்… நம்ம மிளிருக்கு எதுக்கு இந்த பேர வச்சேனு நீ நினைக்கற…”
“தெரியலையே ஐயா…”
“நம்ம மிளிர் அந்த நெருப்ப போல… தன்னை நோக்கி வர எல்லாத்தையும் தன்னுள்ள ஈர்த்துட்டு இன்னும் இன்னும் அதிகமா மிளிரக் கூடியவ…” என்றவர் சிறிது நிறுத்தி, “ஆனா அந்த பிரகாசம் என்னைக்காவது குறைஞ்சு தானே ஆகனும்…” என்றார் வேதனை நிறைந்த ஆழ்ந்த குரலில்.
“ஐயா நீங்க சொல்லறது சரியா புடிபட மாட்டேங்குதே…”
“இது நம்ம மிளிருக்கு மறுபொறப்புனு சொல்லறேன்… புதுசா பொறந்த குழந்தை மாதிரி தான் அவ உங்களுக்கு கிடைச்சு இருப்பா… ஆனா இது நிரந்தரம் இல்லை…” என்றவர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் தொடர, அதற்குள் அவர்கள் இருவரின் இதயமும் தாளம் தப்பி துடிக்க துவங்கி இருந்தது.
“முன்ஜென்ம நினைவு வந்தா இந்த ஜென்மம் பெரிய குழப்பமாகிடும்… அதனால தான் அந்த ஆண்டவன் நம்ம யாருக்கும் அந்த நினைவ தரதில்லை… அதே தான் மிளிருக்கும்… கடந்தகால நினைவு அவளுக்கு வந்தா… அவளோட நிகழ்காலம் நிரந்தரமில்லை… அவ உயிர் அவளுக்கு சொந்தமில்லை… எல்லா தேடலும் தீர்வ மட்டும் தராது… சிலது மரணத்தையும் தரும்…” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்னே நாதர் வசு இருவருமே கண்கள் கலங்கி இருந்தது.
“கலங்காத நாதா… இரண்டு வருஷத்துக்கு முன்னாடியே பறிச்சு இருக்க வேண்டிய உசுர அந்த சிவன் காரணமாதான் விட்டு வச்சுருக்கான்… உன் மக பொழைக்கனுமுனா அதுக்கு அவனே வழி சொல்லுவான்… அந்த சிவன நம்பு… எல்லாமே நல்லதா நடக்கும்…” என்றார் அவர்.
“என் பொண்ணு பொழைக்க பரிகாரம் எதாவது இருக்குங்களாய்யா…”
“சாகற உயிரெல்லாம் பரிகாரம் செஞ்சு புடிச்சு வைக்கலானா ஒருத்தருக்கு கூட இந்த உலகத்துல மரணங்கறது இருக்காதே நாதா…”
“அப்போ மிளிர் பொழைக்க வழியே இல்லைங்களாய்யா..”
“அவன் என்ன நினைக்கறானோ அத நான் சொல்ல முடியுமா… மிளிருக்கு மித்திரனா ஒருத்தன் துணை நிப்பான்… அவன் துணை இருந்தா மிளிர் அகிலத்தையே ஜெயிக்கலாம்… ஆனாலும் அவனாலையும் அவ உயிர புடிச்சு வைக்க முடியுமானு தெரியல… அதுக்கு அந்த ஈசன் தான் பதில் சொல்லனும்…” என்றவர் அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்பதைப் போல எழுந்துக் கொள்ள, வேறு வழியின்றி இவர்களும் சொல்லுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
– தேடல் தொடரும்…

