
தேடல் 22:
மிளிரை கண்டதும் தாயைக் கண்ட சேயாய் ஓடி வந்து கட்டிக் கொண்டாள் சூர்யா. மருத்துவமனையில் கண்டவளை மீண்டும் இன்றுதான் நேரில் காண்கிறாள். எங்கும் நகர முடியாத படி வேலைப்பளு அழுத்தினாலும், இனியன் இருப்பானே என்ற ஒரே எண்ணம் தான் மிளிரை வீட்டிற்கே சென்று காண முடியாதபடி அவளை தடுத்திருந்தது. அன்றைக்கு பிறகு எங்குமே இனியனை அவள் காணவில்லை தான். ஒரு பக்கம் அது மனதிற்கு நிம்மதி அளித்தாலும் ஒரே ஒரு முறையேனும் கண்டுவிட மாட்டோமா என ஒரு மூளையில் மனம் மருகவும்தான் செய்கிறது. மருகும் மனதிடம் ‘அவனுக்கு தான் பொறுத்தமில்லை.’ என திரும்ப திரும்ப தனக்குள்ளையே சொல்லி, தன்னையே நம்ப வைக்க முயன்றுக் கொண்டிருக்கிறாள் அவள்.
“ஏய்… எதுக்கு இப்போ அழற… நான் நல்லா தானே இருக்கேன்… சூரி… என்ன பாரு… இங்க பாரேன்…” கண்ணீரோடு தேம்பி தேம்பி அழுதவளை தன்னிடமிருந்து பிரிக்க முடியாது திணறிப் போனாள் மிளிர். இந்த அழுகை இத்தனை நாளும் மிளிரை பார்க்காததாலா? இல்லை இனியனை பார்க்காததாலா? அல்லது இருவரையும் பார்க்காததாலா என்று அவளுக்கே தெரியவில்லை.
தன்னிடமிருந்து சூர்யாவை பிரித்தவள், வாடிக்கையாளர்களின் ஒய்வு அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்து, பருக தண்ணீர் கொடுத்தாள். அவள் சற்றே ஆசுவாசம் அடைந்ததும், “இப்போ எதுக்கு இந்த அழுகை… இவ இன்னும் உயிரோட இருக்காளேனா…” மெல்லிய புன்னகையோடு மிளிர் வினவ, அவளை முறைக்க ஆரம்பித்திருந்தாள் சூர்யா.
“ஹப்பா… விட்டா என்ன கண்ணாலையே ஏரிச்சு சாம்பலாக்கிடுவ போலையே…”
“அந்த ஸ்கூட்டி எப்படி ஆகிடுச்சு தெரியுமா..? கண்டிப்பா அதுக்கு பதில் நீங்க இருந்து இருந்தா… என்ன ஆகிருக்கும்… நினைக்கவே பயமாருக்கு எனக்கு…”
“என்ன ஆகிருக்கும்… ரோட்டுல இருந்து என்ன சுரண்டிதான் எடுத்து இருக்கனும்…”
“ஏன்தான் இப்படியெல்லாம் பேசி தொலையறீங்களோ..? அடிபட்டதுல இப்போதான் மூளை கலங்கிப் போச்சுனு நினைக்கறேன்… முதல சாந்தினி மேம கூட்டி காட்டனும்…”
“அதெல்லாம் நான் நல்லா தான் இருக்கேன்… இவ்வளவு அக்கறை உள்ளவ தான் ஓடி ஓடி வந்து என்ன பாத்தியாக்கும்…”
“அது வந்து…”
“அதான் ஏன் வரலனு கேக்கறேன்…”
“ஏன் உங்களுக்கே தெரியாதா..? இங்க நான் ஒருத்தியா கிடந்து இந்த கடையில அல்லாடிட்டு கிடக்கேன்… நீங்க சாவகாசமா வந்து இதுவும் கேப்பீங்க… இதுக்கு மேலையும் கேப்பீங்க…”
“நீ சொல்லற பதில் பொய்னு உனக்கும் தெரியும்… எனக்கும் தெரியும்… போற வழியில இருக்க எங்க வீட்ட எட்டிப் பாத்துட்டு போக வலிக்குதா உனக்கு… இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு…” என அவளை அளவிடும் பார்வை பார்த்தபடியே வினவினாள் மிளிர்.
“நம்புனா நம்புங்க… நம்பாட்டி நாய் புடிக்க போங்க… எனக்கென்ன வந்துச்சு…” என்றவள் எழுந்துக் கொள்ள பார்க்க, அவள் கைப் பற்றி மீண்டும் அமர வைத்தாள் மிளிர்.
“இனியனுக்கும் உனக்கும் ஏதாவது பிரச்சனையா..?” தீடிரென இப்படி கேட்டால் திகைத்துப் போவாள் என மிளிர் நினைத்திருக்க,
“எது இந்த கொத்தவரங்காயிக்கு பேண்டு சட்ட போட்ட மாதிரி வெடுக்கு வெடுக்குனு ஒருத்தரு நான் தான் இந்த கட ஓனரு தம்பினு… தங்க கம்பினு கூவிட்டே வருவாரே அவரா… அவருக்கும் எனக்கும் என்ன சண்டை வரப் போகுது…” என தனது பதிலில் மிளிரைதான் திகைக்க வைத்திருந்தாள் சூர்யா.
‘இனியா… இதென்னடா உனக்கு வந்த மிகப்பெரிய சோதனை… இதுல இருந்து உன்ன காப்பாத்தி எப்படி நான் கரை சேக்க போறேனோ… அதுக்கு எனக்கு தெம்ப குடு ஆண்டவா…’ என இப்போதே இனியனின் எதிர்காலத்திற்காக அந்த கடவுளிடம் மனுப்போட தொடங்கி இருந்தாள் மிளிர்.
“விளையாடத சூரி… என் தம்பிய பாத்தா என்ன கொத்தவரங்காயிக்கு பேண்டு சட்ட போட்ட மாதிரியா இருக்கு…”
“சரி… முருங்கக்காயிக்கு… இப்போ அதுவா பிரச்சனை… என்ன விடுங்க முதல… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு…”
“அப்போ நானென்ன வேலைவெட்டி இல்லாதவளா…”
“அத நான் வேற என் வாயால தனியா சொல்லனுமாக்கும்… இருக்குனு நினைச்சு இருந்தா ஏன் பதினைஞ்சு நாளு புதுசா குத்தவச்ச பொண்ணு கணக்கா வீட்டுல அடைஞ்சு கடந்தீங்க…” சூர்யா இப்படி கேட்கவும் சட்டென்று வாடிப்போனது மிளிரின் முகம்.
“நான்… நான்… ஏன் அப்படி இருந்தேனு உனக்கு தெரியாதா சூரி…”
“நீங்க அப்படி இருந்ததால மட்டும் ஏதாவது மாறிப்போச்சா என்ன… சில விசயங்களை நம்மால மாத்த முடியாது… அத அப்படியே ஏத்துக்கறது தான் புத்திசாலிதனம்… மகி அக்கா விசயத்துல நீங்க என்ன செஞ்சாலும் அது மாறாது… அவங்க திரும்ப வர மாட்டாங்க… அதே மாதிரி தான்… என் முடிஞ்சு போன வாழ்க்கை முடிஞ்சு போனது தான்… நீங்க என்ன பண்ணாலும் இத மாத்தவோ சரி பண்ணவோ முடியாது… ஏதோ எனக்கு நல்லது பண்ணறேனு நினைச்சு… உங்க தம்பி வாழ்க்கைய அழிச்சுடாதீங்க… ஒழுங்கா அவருக்கு நல்லபுத்தி சொல்ல பாருங்க…” என்றவள் அவளின் பதிலை எதிர்பாராது வாடிக்கையாளர்களை கவனிப்பதற்காக சென்றுவிட்டாள்.
‘ஆமான்… மகிய என்னால திரும்ப கொண்டு வர முடியாது… ஆனா அவ சாவுக்கு ஒரு நியாயம் கிடைக்க செய்வேன்… அதே மாதிரி தான் சூர்யா… உன் வாழ்க்கையில நடந்த எதையும் என்னால மாத்த முடியாது… ஆனா… எல்லாத்தையும் சரி பண்ணுவேன்… கண்டிப்பா சரி பண்ணுவேன்…’ என சென்றவளிடம் மனசீகமாக உறுதி அளித்துக் கொண்டிருந்தாள் மிளிர். அதன்பிறகு இருவரையும் வேலை தன்னுள் இழுத்துக் கொள்ள, முயன்று அதன் பக்கம் கவனத்தை திருப்பி இருந்தனர்.
💞💞💞💞💞
தலையணையை இறுக அணைத்தபடி புரண்டு புரண்டு படுத்திருந்தவனின் இதழ்கள் புன்னகையை பூசி இருந்தது. ஒரு விரல் அவன் முகம் தீண்டி மெதுவாய் அவனின் முக வடிவத்தை அளவெடுப்பதை போல வருட, அரும்பிய புன்னகை நிலைபெற்று போனது அவனின் முகத்தில்.
“டேய் பேராண்டி… உன்ன பாக்க அந்த புள்ள வந்திருக்குடா… ஏந்திரிச்சு தொலடா… டேய்… அக்னி… நான் பெத்ததும் சரியில்ல… அது பெத்ததும் சரியில்ல… எப்படி தூங்குது பாரு… டேய்… அந்த புள்ள வந்து உக்காந்துருக்குடா அரமணி நேரமா… சட்டுனா ஏந்திரிச்சு தொலடா…” என அக்னியின் காதில் கிசுகிசுத்தபடி அவன் கன்னத்தை சுரண்டிக் கொண்டிருந்தார் கற்பகம் பாட்டி. இதற்கெல்லாம் அசைந்துக் கொடுப்பவனா நான் என்ற ரீதியில் புன்னகை சிந்தி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் அவன்.
“என்ன பாட்டி… மூஞ்சுக்கு மஞ்சளா பூசறீங்க… இந்த தடவு தடவறீங்க… நகருங்க இப்படி…” என்றவள் தன் அருகில் இருந்த ஜெக்கை எடுத்து தண்ணீரை அவன் முகத்தில் விசிறி அடித்தாள்.
அவள் செயலைப் பார்த்து கற்பகம் ஆடிப்போய் நிற்க, அக்னியோ அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.
“ஐய்யையோ… யப்பா… சத்தியம்மா ஆறு மணிக்கு தான்ப்பா வந்து படுத்தேன்… நிஜமாப்பா… வந்து ஏந்திரினா ஏந்திரிச்சுட்டு போறேன்… அதுக்கு ஏன்ப்பா தண்ணீய வேஸ்ட் பண்ணறீங்க… தண்ணீ என்ன விலை விக்குது…”
“அடேய்… உங்கப்பனும் சித்தப்பனும் நீ வர முன்னுக்கே கிளம்பி கழனிக்கு போய்ட்டானுங்கடா… ஏன்டா இப்படி மானத்த வாங்குற…” கற்பகம் தான் அக்னியின் காதை கடித்தார்.
மெல்ல தூக்கம் களைந்து அவன் கண்களை திறந்துப் பார்க்க, கால் மேல் கால் போட்டபடி, அவன் எதிரில் முகத்தில் எதையும் காட்டாது அமர்ந்திருந்தாள் மிளிர்.
“நீ… நீ… நீ எங்க இங்க…” அவன் பதறி அக்கம் பக்கம் பார்த்தபடி வினவ, தனது கைக்கடிகாரத்தை திருப்பிப் பாத்தாள் அவள்.
“ஏன்டா இதான் அந்த மூஞ்சுக்கு பெயிண்ட் அடிக்கற புள்ளையா… என்னடா காத்து போன பலூன் கணக்கா வத்திப் போய் இருக்கு… அவங்க அப்பங்காரன் சோறு கீறு போடுவானா என்ன..?”
“இப்படியே பேசிட்டு இருந்த தாய்கிழவினு கூட பாக்கம உன்ன போடப் போறேன் பாரு… அவ காதுல மட்டும் விழுந்துச்சு… ஜிங்கு ஜிங்குனு சாமியாடிடுவா பாத்துக்க… அதவிடு… அந்த இசை பய எங்க… பாத்தான்… எட்டபருக்கிட்ட பத்த வச்சுடுவான்…”
“அதெல்லாம் அவன் எப்போவோ வேலைக்கு கிளம்பி போய்ட்டான்… நீதான் பங்குனி வெயிலு பல்ல காட்டறதுகூட தெரியாம தலவாணிய கட்டிபிடிச்சுட்டு கிடக்க…”
“ஐய்யையோ உன்கிட்ட போய் வாய குடுத்தேன் பாரு…” என அவன் முணக, “அங்க என்ன பாட்டிக்கும் பேரனுக்கும் இடையில குசுகுசு…” என்றாள் அவனை முறைத்துக் கொண்டே மிளிர்.
“இது எங்க குடும்ப விசயம் மிஸ். மிளிர்.”
“உங்க குடும்ப விசயம் எனக்கெதுக்கு மிஸ்டர் அக்னி… நீங்க எல்லாம் என்ன போலீஸ் ஆபிஸர்… ஒரு பொறுப்பிருக்கா உங்களுக்கு… ஒன்போது மணிக்கு வரேனு சொன்னீங்க… இப்போ மணி பதினொன்னு… இதான் நீங்க டூயூட்டி பாக்கற லட்சனமா… இப்படி இருந்தா எப்படி குற்றவாளிய கண்டு பிடிப்பீங்க…”
“ஹலோ மேடம்… நீங்க குடுத்த இ-மெயில் ஐடிய ஹேக்கர் வச்சு செக் பண்ணியாச்சு… அது இப்போ வேற ஒருத்தரோட ஐடினு காட்டுது… கிட்டதட்ட ஐஞ்சு வருசத்துக்கு முன்னாடி அந்த ஐடி கிரியேட் பண்ணி இருக்காங்க… இப்ப வரைக்கும் ஒரே ஐ.பி அட்ரஸ்ல தான் அந்த இமெயில் ஐடி யூஸ் பண்ணி இருக்காங்க… வேற சந்தேக படற மாதிரி எதுவும் அதுல இல்ல… இது ஒன்னையே நாம எவிடன்ஸா வச்சு அந்த யூசர விசாரிக்க முடியாது… சோ நான் என் வேலைய கரெக்டா பண்ணிட்டேன்… இப்போ நான் குளிக்க போகலாமா வேண்டாமா…”
“அதெல்லாம் சரிதான்… தவசீலன எப்போ பாக்க போறது…”
“எம்மா தாயே… நைட் பஸுக்கு டிக்கெட் புக் பண்ணி இருக்கேன்… போதுமா… அப்புறம் பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டுட்டேன்… உன்கூடவே தான் இருப்பேன்… இப்ப ஆள விடறீயா…”
“எது என்கூடவேவா…”
“அப்போ தான கேஸ கண்டுபிடிக்க முடியும் மிளிர் மேடம்…”
“சரி… சீக்கரம் கிளம்பி வாங்க… நாம இப்போ வெளிய போறோம்…”
“ஏம்மா நீ போலீஸா… இல்லை நானா…”
“இப்ப வர முடியுமா முடியாதானு மட்டும் சொல்லுங்க… நான் பாட்டுக்கு கிளம்பி போய்ட்டே இருப்பேன்…”
“இப்பவே கண்ண கட்டுதே ஆண்டவா… இரும்மா… ஐஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்…” என்று எழப் போனவனை தடுத்து நிறுத்தி மீண்டும் காதை கடிக்க தொடங்கி இருந்தார் கற்பகம்.
“என்னடா அந்த பொண்ணு உன்னையே மிரட்டுது…”
“அதான் மிரட்டுறானு தெரியுதுல… அடிவாங்க வைக்காம ஓயமாட்ட போல நீ…” என்றவன் வேகமாக குளியளறைக்குள் நுழைந்துக் கொள்ள, கற்பகம் கூப்பிட்டதெல்லாம் அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
குளித்து முடித்து ஒரு டவளை மட்டும் சுத்திக் கொண்டவன், எப்படியும் மிளிரை கற்பகம் கீழே அழைத்துச் சென்றிருப்பார் என்ற நம்பிக்கையில், “நீதானே… நீதானே… என் நெஞ்சை தட்டும் சத்தம்…” என ஹம் செய்தபடியே வர, மிளிரோ அவனின் கட்டிலில் அமர்ந்து ஏதோ பழைய நோட்டு ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்து பதறி, மீண்டும் அவன் குளியலறைக்குள் புகுந்துக் கொள்ள, நிமிர்ந்துப் பார்த்தவள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் மீண்டும் அந்த நோட்டில் கவனத்தை பதித்தாள்.
“ஏய்… இன்னும் இங்க என்னடி பண்ணற…”
“அதுவா… வயலுக்கு போன உங்கப்பாவும் சித்தப்பாவும் சாப்பிட வந்துட்டாங்களாம்… அதான் உன் பாட்டி என்ன இங்கையே இருக்க சொன்னாங்க…”
‘கற்பூ எனக்கு வச்சுட்டீயே அப்பூ…’ என கற்பகத்தை நினைத்து பல்லை கடித்தவன், “சரி அங்க கபோர்ட்ல என்னோட ட்ரஸ் இருக்கும்… எடுத்துக் குடுடேன்…” என்றான்.
“ஏய்… என்ன பாத்தா எப்படி தெரியுது… உன் வீட்டு வேலகாரி மாதிரியா..? உனக்கு வேணுமுனா நீ வந்து எடுத்துக்கோ…”
“இல்ல பொண்டாட்டி மாதிரி தெரியுது… கேக்கற பாரு கேள்வி… இவளையெல்லாம் என்ன நேரத்துல அவங்கப்பன் பெத்து போட்டானோ தெரியல…”
“ஃபார் யூவர் கைண்ட் இன்பர்மேஷன்… என்ன பெத்தது எங்காத்தா…”
“ரொம்ப முக்கியம்… பாம்பு காதுடி உனக்கு… கண்ணையாவது மூடி தொலை… நான் வந்து என் ட்ரஸ எடுத்துட்டு போய்டறேன்…”
“நான் என்ன உன் வேலைகாரியா… நீ சொன்னதெல்லாம் செய்ய… உனக்கு கஷ்டமா இருந்த நீ கண்ண முடிக்கோ…”
“இம்சடி உன்கூட… தெரிஞ்சு பண்ணறாளா… இல்ல தெரியாம பண்ணறாளா… தெரியலேயே ஆண்டவா…” என புலம்பியவன், அழுக்கு கைய்லியை எடுத்து தன்மீதுப் போர்த்திக் கொண்டு தன் உடையை எடுக்க, அவனை கவனித்ததாகவே அவள் காட்டிக் கொள்ளவில்லை.
“ஆமான்… ஜெயமாலினில இருந்து சில்க் வரைக்கும் ஒருத்தர விடமாட்டீயா… அதென்ன எல்லார் போட்டோவையும் ஒட்டி எல்லாத்துக்கு கீழேயும் ஐ லவ் யூனு போட்டு வச்சுருக்க… லவ் பண்ணறதா இருந்தாலும் ஒரு நியாய தர்மம் வேண்டாமா… எமிரா இதி…” என அந்த நோட்டை திருப்பி பார்த்துக் கொண்டே அவள் கேட்க, நெஞ்சை பிடித்துவிட்டான் அவன்.
“உன்ன யாருடி அத பாக்க சொன்னது… குடுடி முதல…” என்றவன் தன்னிலை மறந்து, பாய்ந்து அதை வாங்க முயல… அவள் தர மறுக்க, சிறு தள்ளுமுள்ளு ஒன்று ஏற்பட்டு, அவளின் மீதே அவன் சரிந்து விழுந்திருக்க, இன்னுமே அந்த நோட்டிற்கான போராட்டம் தொடர்ந்தது.
“அக்னி… டேய் மொவனே… உன்ன உங்கப்பா கூப்பிடறாரு பாரு…” என வேகமாக அவனை அழைத்துக் கொண்டே உள்ளே வந்த தனா, ‘என்னடா நடக்குது இங்க… நானும் இங்க தான்டா இருக்கேன்…’ என்று நெஞ்சை பிடித்து நின்றுவிட, அவரின் பின்னோடே மகனை அழைத்தப் படியே வந்துக் கொண்டிருந்தார் ஜெயா.
– தேடல் தொடரும்…
