Loading

அத்தியாயம் -8

அவளின் செய்கையில் அவனும் சட்டென்று திணறித் தான் போனான்.ஆனால் அதை அவன் வெளிக்காட்டால் அவனைப் பிடித்திருந்த கைகளை தன் கைகளுக்குள் அழுந்த பிடித்தவன் “கெஞ்சும் போது கூட மேடம்  திமிரா என் காலரை பிடிச்சு இழுத்து தான் கேட்பீங்களோ?” என்று அவன் மிரட்டுவது போல் கேட்டான்.

அவளோ சிரித்துக் கொண்டு “சரிங்க அத்தான் நான் உங்ககிட்ட இப்படி மன்னிப்பு கேட்கட்டுமா?” என்று அவனின் தோள்களில் லேசாய் சாய்ந்துக் கொண்டே கேட்டாள்.

அழகாய் அலங்கரித்து தேவதையாய் தன் முன்னே நிற்பவள் சட்டென்று ஆடவன் நெஞ்சிலே சாய்ந்துக் கொள்ளும் போது  அவனின் உள்ளமும் அவளோடு சாய்ந்துக் கொண்டது.

இவர்களின் விளையாட்டைப் பார்த்து மூவரும்  சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கே அருள்மணி வந்தார்.மாமாவைக் கண்டதும் சட்டென்று  சிற்பியிடம் இருந்து விலகிக் கொண்டான்  செழியன்.

அவர் பூர்ணாவிடமும் செழியனிடமும் விசாரித்து விட்டு தன் மச்சானை ஏன் வரவில்லை? என்றும் விசாரித்துக் கொண்டார்.

அருள்மணியின்  முகத்தில் உள்ள சோர்வைப் பார்த்து பூர்ணா அருள்மணியிடம் “அண்ணே உடம்புக்கு எதுவும் முடியலையா? ஏன் ரொம்ப சோர்வா இருக்கீங்க?”என்று வெளிப்படையாய் கேட்டார் பூர்ணா.

அவர் தாமரையைப் பார்க்க தாமரை  அவரைப் பார்த்தார்.

தாமரை சட்டென்று பூர்ணாவிடம் “அண்ணி கனிகாவுக்கு கல்யாணம் முடியட்டும் அப்புறம் எல்லாம் விரிவா பேசலாம்”என்றார்.

அதற்கு பூர்ணாவும் சரியென்று ஒத்துக் கொண்டார்.பின்னர் எல்லோரும் திருமண மண்டபத்திற்கு சென்றனர்.அங்கே  வந்திருந்த உற்றார், சுற்றோர், நண்பர்கள் முன்னிலையில் கனிகாவின் திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

அதன் பிறகு சில சடங்கு சம்பிரதாயங்கள் நடைபெற்றன.பெண்வீட்டுச் சார்பாக சிற்பியும் செழியனும் கனிகாவின் புறம் நின்றுக் கொண்டனர்.

செழியன் சிற்பியைப் பார்த்து “சிற்பி ரிசல்ட் வந்துடுச்சா? ஏன் மெஸேஜ் பண்ணலை?”என்று கேட்டான்.

அவனைப் பார்த்து “இதை நீங்களே போன் போட்டு கேட்டு இருக்கலாமேல” என்றாள்.

“அது…”என்று அவன் தயங்கினான்.

ஏனோ அவளிடம் நேரில் பேசும் தைரியம் போனில் பேசும் போது அவனுக்கு இருப்பதே இல்லை.அதை எப்படி சிற்பியிடம் அவன் சொல்வான்.

“என்ன அத்தான்? ஒன்னுமே சொல்ல மாட்டேங்கிறீங்க? என் மேல உங்களுக்கு அக்கறையே இல்லை அதான்.ஆனால்…” என்று அவள் நிறுத்தினாள்.

“என்னாச்சு சிற்பி? ஏன் எதுவும் முன்னே மாதிரி சொல்ல மாட்டேங்கிற?” என்று கேள்வியாகக் கேட்டான்.

“செழியன் அத்தான் இப்போ அதைப் பேசுவதற்கான நேரம் இல்லை.நாம அப்புறமா பேசலாம்” என்றாள்.

அவளின் கவலை அவனை கவலைக் கொள்ளச் செய்தது.அதனால் மெதுவாய் அவள் தோளைத் தட்டி கண்களால் நானிருக்கிறேன் என்றான் அவன்.

கனிகா  பிறந்த வீட்டைப் பிரிந்து புகுந்த வீட்டிற்குச் சென்றாள்.வந்திருந்த சொந்தங்களில் நெருங்கிய சொந்தங்கள் அருகில் இருப்பதால் அவர்கள் எல்லோரும் தங்களின் இல்லத்திற்கு சென்றிருந்தனர்.வீட்டில் தாமரை, சிற்பி மற்றும்  பூர்ணாவும் செழியனும் இருந்தனர்.நாளை மறுவீடு சடங்கு இருந்தது.

அப்பொழுது தான் தாமரையால் பொறுமையாக இருந்து பேசக் கூடிய நேரம் வந்தது.பூர்ணாவே முதலில் ஆரம்பித்தார்.

“என்ன நடந்துச்சுன்னு சொல்லு தாமரை” என்றதும் இத்தனை நாட்களாய் மகளுக்காக  அடக்கி வைத்திருந்த வேதனைகளும், கவலைகளும் கண்ணீராய் வெளிப்பட்டு பூர்ணாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்.

பூர்ணா அண்ணி என்ற முறையை விட தாமரைக்கு நல்ல தோழியாக இருந்தவர்.அவரை விட வயது மூத்தவராக இருந்தாலும் பூர்ணா தாமரையின் பக்கத்து வீட்டு அக்காவாக விவரம் தெரிந்த வயதில் இருந்தே தோழியாக இருப்பதால் பூர்ணாவிடம் தாமரை எதுவும் மறைப்பதில்லை.

பூர்ணாவும் தாமரையின் அண்ணனை திருமணம் முடித்திருந்தாலும் அவளிடம் அண்ணியாகவோ இல்லை தாமரை பிள்ளைகளிடம் அத்தையாகவோ நடந்ததில்லை அவர் எப்பொழுதுமே தோழியாகத் தான் நடந்துக் கொள்வார்.அதனால் தான் பூர்ணாவைக் கண்டதும் தாமரை அழத் தொடங்கி விட்டார்.

தாமரையின் தோள்களை ஆதரவாக தடவிக் கொண்டே “என்னாச்சு தாமரை அழாமல் சொல்லு நான், அண்ணன், செழியன், சிற்பி எல்லோரும் இருக்கும் போது என்ன கவலை? மனசு விட்டு பேசு அப்போத் தான் என்னால என்ன உதவி செய்ய முடியும்னு சொல்ல முடியும்”என்று தாமரையின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டார்.

பூர்ணாவின் பேச்சில் கொஞ்சம் தைரியம் வந்த தாமரை நடந்த அனைத்தையும் பூர்ணாவிடம் சொன்னார்.அருள்மணி தன் இயாலாமையினால் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தார்.

எல்லாவற்றையும்  கேட்ட பூர்ணா தாமரையின் கைகளை ஆதரவாய் பற்றிக் கொண்டவர் “இதுக்கு தான் இவ்வளவு கவலைப்படுறியா தாமரை? நாங்க எல்லோரும் இருக்கும் போது நீ ஏன் கவலைப்படுறே?”

உடனே சுதாகரித்துக் கொண்ட தாமரை “அண்ணி அப்படி இல்லை நீங்களும் அண்ணனும் எனக்கு எல்லா விதத்திலேயும் உதவியாக இருப்பீங்க ஆனால் அதுவும் ஓரளவுக்குத் தான்”

தாமரையின் பேச்சைக் கேட்ட பூர்ணா “என்ன தாமரை இப்படி பிரிச்சு பேசிட்டே”என்று ஆதங்கமாக கேட்டார்.

அவர் அப்படிக் கேட்டதும் இடையே வந்த அருள்மணி “அவ என் மனைவியா பேசுறாம்மா,சொந்தமாக இருந்தாலும் உதவியை ஓரளவு தான் எதிர்பார்க்கனும்மா இல்லைன்னா இருக்கிற அன்பும் காணாமல் போய்டும்” என்றார்.

அவர் சொல்வதும் உண்மை தானே குடும்பத்தில் முக்கியமாக பிரிவு வருவதற்கு காரணமே இந்த கொடுக்கல் வாங்கலில்  தானே என்று அமைதியாக இருந்தார்.

செழியன்  “அத்தை அப்போ என்னத் தான் செய்யலாம்னு முடிவு செய்து இருக்கீங்க?”

நீண்ட பெரூமூச்சு விட்டவர் “தெரியலை மக்கா கடவுள் விட்ட வழி” என்றார்.

பூர்ணா தாமரையிடம் “நான் உங்க அண்ணன்கிட்ட இதைப் பற்றி பேசுறேன் அவங்க இதுக்காக ஒரு வழிச் சொல்லுவாங்க”

“சரி” என்றார் தாமரை.திருமணம்  முடிந்த வீடாக இருந்தாலும் அவர்கள் மனம் முழுவதும் ஏனோ ஒரு பாரத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தது.

*****

நால்வரும் சங்கீத மேளாவுடைய அலுவலகத்திற்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.அன்று போல் இன்றும் அரைமணி நேரம் தாமதமாகச் சென்றனர்.

இம்முறை இவர்களை அழைக்க சபரிச் செல்லவில்லை.மகிழுந்து மட்டும் சென்றது.நால்வரும் ஒன்றாக அலுவலகத்திற்குச் சென்றனர்.

அங்கே இவர்களுக்காக ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது.அங்கே இவர்கள் தங்களின் இசைக்கான  பயிற்சியை மேற் கொள்வதற்கு ஏற்றதாக இருந்தது.

இவர்கள் நால்வரும் பயிற்சி எடுக்க ஆரம்பித்தனர்.ஆனால் நிரஞ்சனால் இந்த இடத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட முடியவில்லை.காரணம் அங்கு வேலை செய்பவர்களில் யாராவது ஒருத்தர் வந்து இவர்களிடம் கேள்வி கேட்பதும் பதில் அளிப்பதுமாகவே நேரம் கடந்து  இருந்தது.

அதோடு இவர்களை கண்காணிக்க கண்காணிப்புக் கருவியும் பொருத்தப்பட்டிருந்தது.புதிய இடமாக இருப்பதால் தனக்கு திருப்தியாக இல்லையோ என்று நிரஞ்சன் நினைத்துக் கொண்டான்.

சில நேரங்களில்  இவர்கள் பசி,தாகம்,தூக்கம் இவற்றையெல்லாம் மறந்து இசையினில் தங்களை மூழ்கடித்து நேரம் சென்றதும் உண்டு.ஆனால் சங்கீத மேளாவின் அலுவலகத்தில் சாப்பாடு நேரம் என்று எல்லாமே சரியான கால அட்டவணையில் செல்ல நால்வருக்குமே ரொம்ப சிரமமாக இருந்தது.

அதனால் அவர்களால் தங்களை முழுமையாக இசையினில் மூழ்கடித்துக் கொள்ள முடியவில்லை.என்னச் செய்வதென்று நால்வரும் திணறிப் போனார்கள்.

*****

பூர்ணா அருள்மணியின் அறுவை சிகிச்சை நடப்பதால் தாமரைக்கு உதவியாக  அங்கேயே இருந்தார்.இரண்டு நாட்களில் அருள்மணியின் ஆஞ்சியோகிராப் சிகிச்சை நடந்து முடிந்தது.

ஒரு மாதத்திற்கு மேல் அருள்மணி முழுநேர ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியிருத்தினார்.

சிற்பி தன் மேற்படிப்பு எண்ணத்தைக்  கைவிட்டு விட்டு ஒரு வேலைக்குச் செல்ல முடிவெடுத்திருந்தாள்.

தன் ஊரிலேயே எதாவது வேலைக்குச்  செல்லலாம் என்று நினைத்தால் பெரிய அளவு சம்பளம் எதுவும் கிடைக்காது என்பதால் என்னச் செய்வதென்று யோசித்தாள்.

செழியனிடமே இதைப் பற்றிய விவரங்களைக் கேட்கலாம் என்று முடிவெடுத்திருந்தாள்.

*****

நான்கைந்து நாட்களாக தொடர்ந்து வந்த நால்வரால் சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை.இதைப் பற்றி சாம்பவியிடமே நேரில் பேசி தங்களின் நிலைமையைச் சொல்லலாம்  என்று  நிரஞ்சன் தன் குழுவினரிடம் சொல்லி இருந்தான்.

அதற்கு ஏற்றார்போல் சாம்பவியும் இவர்களை சந்திக்க பயிற்சி செய்யும் அறைக்கு வந்தாள்.

சாம்பவி தான் முதலில் ஆரம்பித்தாள்.

“நிரஞ்சன் எப்படி உங்க வொர்க்ஸ் போய்ட்டு இருக்கு?”

“ம்ம்… போகுது”

“உங்க எல்லோருக்கும் இந்த இடம் பிடிச்சு இருக்கு தானே? எதாவது ஒரு மாத்தனுமா? இப்போவே சொன்னால் எனக்கு அதைச் செய்ய சுலபமாக இருக்கும்”

நால்வரும்  அமைதியாக இருந்தனர்.

“என்ன எந்த பிரச்சினையும் இல்லையா? ஆச்சரியமாக இருக்கு,இல்லை மறைக்கிறீங்க?”

அவள் கொஞ்சம் யோசனையோடு கேள்வி கேட்டாள்.

நிரஞ்சனை மூவரும் பார்த்தனர்.உடனே நிரஞ்சன் சாம்பவியிடம் “சாம்பவி எங்களுக்கு ஒரு பேவர் தரணும்”

சாம்பவி லேசாய் நெற்றியைச் சுருக்கியபடி “என்ன பேவர் தரணும்?”

நிரஞ்சன் தாங்கள் அனைவருக்கும் தினமும் ஏற்படும் இடைஞ்சல்களைப் பற்றி விவரமாகச்  சொன்னான்.அவன் சொன்னவற்றையெல்லாம் அவளும் பொறுமையாகக் கேட்டாள்.

இறுதியில் சாம்பவி நிரஞ்சனிடம் “உங்க பக்க இருக்கிற விஷயங்களைச் சொல்லிட்டீங்க அதனால என்ன முடிவு எடுத்து இருக்கீங்க நிரஞ்சன்” என்று குழப்பத்தில் கேடாள்.

நீண்ட பெரூமுச்சு விட்டவன் “இந்தப் போட்டியில் இருந்து நாங்க எப்பவும் பின் வாங்க மாட்டோம்,அதனால எங்களோட பிராக்டீஸ் எல்லாத்தையும் நாங்க இருக்கிற வீட்டிலேயே செய்யலாம்னு முடிவு செய்து இருக்கிறோம் உங்க அனுமதி கிடைத்தால் இப்பவே போறோம்” என்றான்.

அவன் சொன்ன பதிலில் சிறிது யோசனையில் ஆழ்ந்தவள் “ம்ம்… நீங்க சொல்றதும் நியாயமான காரணங்களாகத் தான் இருக்கு,இருந்தாலும் எங்க கம்பெனி உறுப்பினர்கள்கிட்ட இதைப் பற்றி ஆலோசனை செய்து நான் முடிவைச் சொல்றேன் அதுவரைக்கும் உங்க இடத்திலேயே  நீங்க பயிற்சியை ஆரம்பிங்க எப்படியாவது எனக்கு பெஸ்ட்டை கொடுத்தாக வேண்டும்”  என்று தன் பக்க யோசனையைச் சொன்னாள்.

நால்வரும் அவளிடம் விடைப் பெற்றுச் சென்றனர்.சாம்பவிக்குத் தான் அடுத்து என்னச்செய்வதென்றே புரியவில்லை.அவர்களை தனியாக அனுப்பி விட்டு பயிற்சியை சரியாக செய்யாமல்  போட்டியில் சொதப்பி விட்டால் இவள் எடுத்த முயற்சி அனைத்தும் தோற்று விடும்,அவர்களை கட்டாயப்படுத்தி இங்கே வைத்து ஒழுங்காக கவனம் இல்லாமல் அவர்களின் திறமையும் வெளியே வராவிட்டால் என்னச் செய்யவது? என்று ஆழ்ந்த யோசனையில் மூழ்கிப் போனாள் சாம்பவி.

நால்வரும் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.அதில் காந்தன் நிரஞ்சனிடம் “சாம்பவி நம்ம கண்டிஷனுக்கு ஒத்துக்கலைன்னா என்னச் செய்ய?”

“முதல்ல அவங்க என்ன பதில் சொல்றாங்கன்னு பார்ப்போம் அதுக்கு ஏற்ற மாதிரி நம்ம முடிவை மாத்திக்கலாம்,நாம நல்ல பங்களிப்பை தருவோம்னு நம்புறாங்க அதனால  அவங்க நம்மளை  ஏமாத்த மாட்டாங்கன்னு நினைக்கிறேன் அது மட்டும் எனக்கு உறுதியாக தெரியும்”என்று  சொன்னான்.

உடனே பார்த்தி “நீ சொல்றது சரி தான் நிரஞ்சன் நம்ம திறமையை வெளியே கொண்டு வர முடியும்னா இந்த கம்பெனியை தொடருவோம் இல்லைன்னா வேற வேலையை பார்க்க வேண்டியது தான்” என்று அவனும் ஆதரித்தான்.

*****

சிற்பி செழியனிடம் “செழியா நான் உன்கிட்ட கொஞ்சம் உதவி வேண்டி நிற்கிறேன்,எனக்காக அந்த உதவியைச் செய்வ தானே” என்று கேட்டாள்.

செழியனோ கொஞ்சம் யோசனையோடு “முதல்ல என்ன விஷயம்னு சொல்லு அப்புறம் செய்ய முடியுமா? வேண்டாமா? அப்படின்னு நான் முடிவு செய்றேன்” என்றான்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. செழியன், சிற்பி பெயர் பொருத்தம் நல்லா இருக்கு. ஆனால் ஜோடியா வர வாய்ப்பு இல்லை.

    இவள் வேலை விசயமா போற இடத்தில் எதுவும் நடக்கலாம்.

    தாமரை, பூர்ணா பாசம் அருமையாக இருந்தது.

    வெயிட்டிங்…

    1. Author

      இருக்கலாம் மனமார்ந்த நன்றிகள் 😍😍

    1. Author

      மனமார்ந்த நன்றிகள் 😍😍

  2. சிற்பி நல்ல முடிவு.

    1. Author

      கண்டிப்பா மனமார்ந்த நன்றிகள் 😍😍

  3. விறுவிறுப்பா நகருது கதை … செழியன் சிற்பி இரண்டு பேருக்கும் மனசுல விருப்பம் இருக்கும் போல … சிற்பி என்ன ஹெல்ப் கேட்க போறா

    1. Author

      விருப்பம் இருக்கான்னு தெரியலை நன்றிகள்😍😍