
அத்தியாயம் -39
சபரி தன் குடும்பத்தினரை இறுதிப் போட்டியாளர்கள் இருக்கும் உள் அறைக்கு அழைத்துச் சென்றார்.
இவர்கள் ஒவ்வொரு அறையாக கடந்து வரும் போது அங்குள்ள போட்டியாளர்கள் மெதுவாக தங்களின் இனிமையான குரலில் தங்களின் பாடல்களை பாடிக் கொண்டும் சில சந்தேகங்களை கேட்டுக் கொண்டும் இன்னும் சிலர் ஹம்மிங் செய்து கொண்டு இருந்தார்கள்.
ஒரு நிகழ்ச்சி நடைப் பெறுவதற்கு முன்னால் அதில் பங்கேற்பவர்களின் உழைப்பு என்பது மிகப்பெரியது என்று இவர்களும் அதை நேரில் பார்க்கும் போது தான் புரிந்தது.
நேரலையில் பார்க்கும் போது அவர்கள் பாடும் பாடலை பார்வையாளர்கள் வெகு சுலபமாக அதனுடைய குறையை கண்டுபிடித்து சட்டென்று சரியில்லை என்று பேசி விடுகிறார்கள்.ஆனால் அவர்களின் மிகப்பெரிய உழைப்பு சில நிமிடங்களில் தீர்மானிக்கப் படுவதால் எல்லாமே அங்கே மாறிப் போய் விடுகிறது.
நடப்பதை எல்லாம் மனதில் தோன்றிய கேள்விகளோடு இவர்கள் பார்த்துக் கொண்டே வந்தனர்.கடைசியில் அறை போல் ஏற்பாடு செய்திருந்த இடத்தில் சிற்பி ஆண்கள் குழு முன்னால் நின்றுக் கொண்டு இவர்கள் நால்வரும் பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது இவர்கள் இருக்கும் அறையின் வாயிலில் மெதுவாக “சிற்பிகா அம்மா சிற்பி” என்று குரல் கேட்டது.சத்தம் வந்த திசையை திரும்பிப் பார்த்தாள் சிற்பி. அங்கே தாமரை,அருள்மணி,
கனிகா,கணவர்,அத்தை,மாமா,செழியன் என எல்லோரும் நின்றுக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கவும் “அம்மா அப்பா” என்று ஓடிப்போய் தாமரையைக் கட்டி கொண்டவள் அடுத்து தன் அப்பாவையும் ஆரத்தழுவிக் கொண்டாள் சிற்பி.
தன் பெற்றவர்களை நேரில் சந்தித்து அன்போடு அணைத்துப் பேசி எத்தனையோ மாதங்களாகிப் போனது.அதோடு இன்று நேரில் காணவும் அவர்களுக்கு தெரியாமல் அவள் செய்யப் போகும் விஷயத்தையும் நினைத்து ஒருவிதமான மனநிலையில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்ததும் ஓஓஓவென்று அழுதாள் சிற்பி.
இதற்கிடையில் நிரஞ்சனும் நண்பர்களும் அவர்களுக்கு அருகில் வந்து நின்றார்கள்.
சிற்பியின் தோள்களின் மேல் மெதுவாக தடவிக் கொடுத்த தாமரை “சிற்பி இப்படியே அழுதுட்டு இருக்க போறியா? இங்கே இருக்கிற யாரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்த மாட்டியா?” என்று கேட்டார்.கண்ணீரை துடைத்துக் கொண்ட நிமிர்ந்து பார்த்தாள்.கனிகா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வேகமாக “அக்கா” என்று அவளையும் அணைத்துக் கொண்டதும் கனிகா மெதுவாக சிற்பியின் காதோரமாய் “ஹேய் ஏன் எங்களை பிடிச்சு கட்டிக்கிட்டு நிற்கிறே?இதைப் பார்த்து உன் ஆளு டென்ஷன் ஆகப் போறாங்க” என்று கிண்டலாகச் சொன்னாள்.அதைக் கேட்டு சிற்பி அக்காவைப் பார்த்து முறைத்தவள் மெதுவாக முணுமுணுத்துக் கொண்டே நால்வரையும் அறிமுகப்படுத்தினாள் சிற்பி.
நிரஞ்சனைப் பற்றி சொல்லவும் அருள்மணி அவனது கரங்களை பிடித்து “இந்த போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்று சொன்னார்.உடனே நிரஞ்சனும் “ரொம்ப தாங்ஸ் அங்கிள் எனக்கு உங்க ஆசிர்வாதம் வேணும்” என்று அவரது காலில் குனிந்து தொடப் போகவும் அவனைப் பிடித்து தடுத்த அருள்மணி முகம் முழுக்க புன்னகையோடு “எங்க ஆசிர்வாதம் நிச்சயம் உங்க எல்லோருக்கும் உண்டு” என்றார்.
அடுத்து கனிகாவும் அவளது கணவனும் நிரஞ்சனை மேலும் கீழுமாக பார்த்தவர்கள் “ரொம்ப அழகா இருக்கீங்க நிரஞ்சன் வாழ்த்துக்கள்” என்று கனிகா சொன்னாள்.அவளது கணவனிடம் கைக்குலுக்கியதும் இருவரும் மரியாதைக்கு கட்டிக் கொண்டனர்.
மூவரும் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சஹா மெதுவாக “கா…காந்தா இன்னைக்கு நமக்கு பைனல்ஸ் மேட்ச்சா?இல்லை மாப்பிள்ளை பார்க்கும் படலமா?ஒன்னுமே பு..புரியலை” என்று கேட்டான்.
காந்தனோ அவனைப் பார்த்து முறைத்து “ஒழுங்கா வாயை மூடு எல்லோரும் நம்மளைத் தான் பார்க்கிறாங்க” என்று சொன்னவன் அவனது காலின் மேல் லேசாக மிதித்து விட்டான்.சஹா அதோடு வாயை மூடிக் கொண்டான்.
சபரி “சரி சரி பேசினது போதும் அவங்க எல்லோரும் போட்டிக்கு தயாராகனுனேன் நேரமாகுது வாங்க நாம போகலாம்.மற்ற விஷயங்கள் எல்லாத்தையும் இவங்க போட்டி முடிந்ததும் விவரமா பேசலாம்” என்று எல்லோரையும் அவசரப்படுத்தினார்.
சட்டென்று தாமரை சிற்பியை அணைத்துக் கொண்டவர் சிற்பிக்கு மட்டும் கேட்கும்படியாக மெதுவாக “வாழ்த்துக்கள் சிற்பி கவலைப்படாமல் நல்லபடியா பாடு.அம்மா எப்பவும் உன் பக்கம் தான்” என்று சொல்லி விட்டு வேகமாகச் சென்றார்.மற்ற அனைவரும் கையசைத்து சென்று இருந்தனர்.
தாமரை சொன்னதைக் கேட்டு நம்ப முடியாமல் சிற்பி தன் அம்மாவின் பக்கம் செல்ல எத்தனிக்க அங்கே வந்த ஒப்பனையாளர் “சீக்கிரமா வாங்க எல்லோரும் தயாராக நேரமாகுது” என்று சொன்னார்.
சிற்பி யோசனையாக நிற்பதைப் பார்த்த நிரஞ்சன் “என்னாச்சு சிற்பி? ஏன் ஒரு மாதிரி நிற்கிறே?”
“நிரஞ்சன் அம்மா சொன்னது எனக்கு சரியா புரியலை நான் பேசிட்டு வரட்டுமா?” என்று யோசனையாகக் கேட்டாள்.
நிரஞ்சன் “இப்போ பேச நேரமில்லை சிற்பி நாம ரெடி ஆகனும்,போட்டி முடிஞ்சதும் என்னன்னு விவரமா பேசலாம்” என்று சொன்னவன் சிற்பியை ஒப்பனை அறைக்கு தயாராக அனுப்பி வைத்தான்.
அவளுக்கான ஒப்பனைகள் ஆரம்பிக்கப் பட்டாலும் மனமோ தன் அம்மா சொன்னதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. அருகில் இருந்த கைப்பேசியை பார்த்தவள் உடனே அம்மாவிடம் பேசி என்னவென்று அறிந்துக் கொள்ளலாம் என்ற ஆவலில் கைப்பேசியை எடுத்து அம்மாவிடம் பேசலாம் என்று எடுத்தவளுக்கு தாமரையிடம் இருந்து ஒரு குரல்பதிவு வந்து இருந்தது.ஒருமணிநேரத்திற்கு முன்பு அனுப்பி இருப்பதாக அதில் காட்டியது.
உடனே ஹெட்போனை எடுத்து செவியில் மாட்டிக் கொண்டு என்னவென்று கேட்க ஆரம்பித்தாள் சிற்பி.
குரல் பதிவில் பேச ஆரம்பித்தார் தாமரை “சிற்பி சின்ன வயசில் இருந்து வாழ்க்கைன்னா இப்படித் தான் வாழனும்னு எனக்கு சொல்லிக் கொடுத்தே பழகப்பட்டு வாழ்ந்துட்டேன். எனக்குள்ளே நானே ஒரு சின்ன வட்டத்துக்குள்ளே என்னுடைய பாதி வாழ்க்கைக்கு மேல நான் இருந்துட்டேன். நீ சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு புதுசாகவும் பெரிய தப்பாகவும் தான் தெரிஞ்சது சிற்பி, மாமா வீட்ல உன்னோட அறையில் அம்மா உன்னுடைய துணியை உள்ளே வைக்கும் போது அங்கே ஒரு டைரி இருந்துச்சு எதாவது எழுதி வைச்சு இருப்பேன்னு எடுத்துட்டு திரும்ப வைக்கும் போது அதில் நீயும் ஒரு பையனும் இருக்கிற போட்டோ கீழே விழுந்ததும்மா. அதைப் பார்த்ததும் அப்படி ஒரு கோபம்.டைரியில் உன் காதலைப் பத்தி என்ன எழுதி இருக்குன்னு பார்க்கனும் எடுத்து படிச்சேன் சிற்பி.
ஆனால் அந்த டைரியில் எழுதி இருந்த உன்னுடைய ஆசைகளும், அப்பா, அம்மாவிற்காக மட்டும் நீ யோசித்த விஷயங்கள் உன் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் எல்லாவற்றையும் நான் படிச்சேன் சிற்பி.நான் எதிர்பார்த்த விஷயம் அதிலே இல்லைன்னு ஏமாற்றம் தான்.ஆனால் என் பொண்ணை நினைச்சு பெருமையா இருந்துச்சு அதில் நீ தவற விட்ட உன் வாய்ப்புகளையும் நான் படிச்சு தெரிஞ்சுகிட்டேன் எப்பவும் ஒரு அம்மாவாக மத்தவங்களும் இந்த ஊரு சனங்களும் என்ன சொல்வாங்கன்னு தான் யோசித்தேனே தவிர உன்னுடைய நிலைமையில் இருந்து யோசித்து பார்க்கலை,அப்போத் தான் ஒன்னு புரிந்தது என்னுடைய பயத்துக்காகவே உன்னை எதுவும் செய்ய விடலைன்னு.இதைப் பற்றி இவங்ககிட்ட பேசலாம்னு வரும் போது எல்லோரும் உனக்கு ஆதரவாக எனக்கு தெரியாமல் பேசிகிட்டு இருந்ததை நான் கேட்டேன்.அண்ணனும் செழியனும் அப்புறம் அண்ணியும் கனிகாவும் பேசுறதைக் கேட்டேன்.இதுல உன் அப்பாவையும் சேர்த்து தான் சொல்றேன் சிற்பி.
எல்லா அம்மாக்களுக்கும் அவங்களுடைய பொண்ணு மேல பயம் கலந்த பாசம் எப்பவும் இருக்கும்,ஏன்னா அவளுடைய வாழ்க்கையை சிறப்பானதாக அமைச்சுக் கொடுக்கனும் இல்லைன்னா பொண்ணு காலத்துக்கும் கண்ணீர் வடிக்கிறதை எந்த தாயாலும் அதை பார்த்து வேதனை தாங்க முடியாது. அதனாலத் தான் உன்கிட்ட கொஞ்சம் இல்லை ரொம்ப கடுமையா நடந்துக்கிட்டேனே தவிர மற்ற எந்த எண்ணமும் இல்லை.சமூகத்தின் மேலான பயம் என்னை இப்படி மாத்திடுச்சு சிற்பி, அம்மாவை மன்னிச்சிடும்மா, எல்லோரும் உனக்கு நல்லது நடக்கும் நினைக்கும் போது அம்மா எப்போதும் அதை தடுக்க நினைக்க மாட்டேன் சிற்பிம்மா.படிப்பும், உலகறிவும் இல்லாத இந்த அம்மாக்கு அதனுடைய மதிப்பு தெரியலை,எனக்குத் தெரியாமல் பாடுறோம்னு கவலைப்படாமல் தைரியமா உன்னுடைய திறமையை முழுசா காட்டு சிற்பி நல்லா பாடு என் பொண்ணை மதித்து உனோட கனவுகளை அவருடைய கனவாக நினைக்க ஆரம்பிச்சு இருக்கிற நிரஞ்சனையும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சிற்பி எல்லாத்தையும் உன்னை நேர்ல பார்த்து சொல்லனும்னு நினைச்சேன் ஆனால் இப்போ அதற்கான நேரம் இல்லை சிற்பி அதான் போன்ல பேசி அனுப்பிட்டேன் சிற்பி சந்தோஷமா தைரியமாக பாடு வாழ்த்துக்கள் சிற்பி ” என்று கொஞ்சம் கேவலும் அழுகையோடு முடித்திருந்தார் தாமரை.
அவர் பேசியதைக் கேட்க ஆரம்பித்த உடனேயே சிற்பியின் விழிகளும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.தாமரை ஒவ்வொன்றாக சொன்ன ஆரம்பித்த பிறகு தான் அவருடைய நிலைமையும் சிற்பிக்கு புரிந்தது.தன்னனை பாதுகாக்கவே அம்மாவின் அன்பு கண்டிப்பான ஒன்றாக இருந்திருக்கிறது என்று அறிந்துக் கொண்டவளின் மனமும் விழிகளும் நிறைவில் நிறைந்து போய் இருந்தது.பக்கத்தில் ஒப்பனை செய்துக் கொண்டிருந்த பெண் சிற்பியிடம் “எனி ப்ராளம்” என்று கேட்டாள்.
சிற்பியோ முகம் முழுவதும் புன்னகையோடு கையில் வைத்திருந்த கைப்பேசியை நெஞ்சில் அணைத்துக் கொண்டு இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
சிற்பிக்கு அவ்வளவு நேரமாக இருந்த பாரமும் பதற்றமும் மறைந்து இப்போது மனம் முழுவதும் நிறைந்து போய் இருந்தது.
எல்லோரும் தயாராகி எல்லோரும் சந்தித்தார்கள்.ஆண்கள் நால்வரை போல நிறத்தில் சிற்பிக்கு அழகான நீலநிறத்தில் நீளமான மேக்ஸி உடையணிந்து ஒப்பனையில் அழகு தேவதையாக மிளிர்ந்தவளின் முகத்தில் புன்னகையோ நிறைந்து இருக்க இன்னும் பேரழகியாக இருந்தாள்.
சஹா மெதுவாக “சி…சிற்பி அழகா இருக்கால்லே நிரஞ்சன் கொடுத்து வைச்சவன்” என்று பார்த்தியிடம் சொன்னான்.அவனும் ஆமாம் என்று தலையசைத்தான்.
நால்வரும் இமைக்க மறந்து அவளையே பார்த்தனர்.இவர்களின் முறை வருவதற்காக காத்திருக்கும் போது நிரஞ்சன் சிற்பியின் முகத்தைப் பார்த்தவன் “என்ன நடந்துச்சு சிற்பி ரொம்ப சந்தோஷமாக இருக்கே? என்னன்னு சொன்னால் நாங்களும் சந்தோஷப்படுவோம்” என்று ஆவலாக மெதுவாக அவளருகில் சென்று கேட்டான்.
சிற்பியோ முகம் முழுவதும் புன்னகையோடு “அம்மா என்னைப் பத்தி புரிஞ்சுகிட்டாங்க நிரஞ்சன். நல்லபடியா பாடச் சொல்லி மெஸேஜ் அனுப்பி இருந்தாங்க, அவங்க பொண்ணு பாடுறதில் சந்தோஷம் தானாம், அதோடு உங்களையும் பிடிச்சு இருக்குன்னு சொன்னாங்க” என்று அவள் சொல்லவும் அவளது முகத்தில் இருந்த புன்னகை இப்போது நிரஞ்சனின் முகத்திலும் நிறைந்து இருந்தது.
அவர்கள் இருவரையும் பார்த்து கார்த்தி நிரஞ்சனிடம் “என்ன விஷயம்னு சொன்னால் நாங்களும் சந்தோஷப்படுவோம்ல எங்களுக்கும் பாடும் போது ரொம்ப எனர்ஜியா இருக்கும்” என்று கேட்டதற்கு காந்தனும் சஹாவும் “ஆமாம் சொல்லு” என்று அவனை தொல்லை செய்தனர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -38
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம்-40

