
அத்தியாயம் -38
சபரியின் வீட்டில் இரவு தங்கி விட்டு மறுநாள் மாலை இவர்களுக்கு பயணம் இருந்தது.அதனால் சிற்பியின் அறையில் தாமரையும் அருள்மணியும் வந்து தங்கினார்கள்.
அப்பொழுது அந்த அறையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த தாமரை சிற்பியின் பொருட்களை எல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக பார்த்தார்.
சிற்பியின் பழைய உடைகள் மடக்கி வைக்காமல் அங்கே ஓரமாக மொத்தமாக இருந்தது.அதைப் பார்த்த தாமரை ஒவ்வொன்றாக எடுத்து மடக்கி அலமாரியில் வைக்கப் போனார்.
அந்த அலமாரியில் ஒரு டைரி இருந்தது.அதை எடுத்துப் பார்த்த தாமரை திறந்து பார்க்காமல் எதாவது புத்தகமாக இருக்கும் என்று நினைத்தவர் அதை அந்த இடத்திலேயே வைத்தார்.
தாமரை உள்ளே அறையில் இருப்பதால் சபரி அருள்மணியை வெளியே கொஞ்ச நேரம் காலார நடக்கலாம் என்று அழைத்துக் கொண்டு இருவருமாக வெளியே நடக்க ஆரம்பித்தனர்.
அருள்மணி சபரியிடம் “மச்சான் எதாவது முக்கியமான விஷயம் பேசனுமா?” என்று கேள்வியாகக் கேட்டார்.
தன்னைப் பற்றி புரிந்துக் கொண்ட அருள்மணியைப் பார்த்து சிரித்தவர் “எதுக்காக இப்படி கேட்கிறீங்க?” என்று கேட்டார்.
அருள்மணி “மச்சான் இந்த உறவு தொடங்கி எத்தனையோ வருஷமாகுது, இத்தனை வருஷத்துல ஒரு தடவைக் கூட நீங்க எங்களை இவ்வளவு அவசரமா உங்க இடத்துக்கு அழைச்சு இல்லை.எப்பவும் நம்ம ஊருக்கு வந்து அங்கே ரெண்டு,மூணு நாள் ஓய்வு எடுத்துட்டு தான் நாம எப்பவும் பக்கத்து ஊர்ல கோவிலுக்கோ, சொந்த பந்தங்களை போய் பார்த்து வருவது வழக்கம்.ஆனால் இந்தமுறை நீங்க அவசரமா அழைக்கும் போதே ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சு போச்சு, அதுவும் சிற்பியும் இங்கே தானே இருக்கா” என்று தான் கணித்ததை ஓரளவு சொன்னார்.
சொந்தங்கள் என்பது நமக்கானதை நாம் சொல்லும் முன்னே புரிந்துக் கொள்ளும்படி கிடைப்பது அரிது தான்.அப்படியான ஒரு பந்தத்தில் இரு குடும்பத்துக்கான உறவும் இருந்தது.
அருள்ணி பேசியதைக் கேட்டு சபரி இதற்கு மேல் சிற்பியைப் பற்றி மறைக்க வேண்டாம் என்று முடிவெடுத்தவர் “மச்சான் உங்ககிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்று சபரி சொன்னார்.
அருள்மணி எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் “சொல்லுங்க மச்சான் சிற்பி எ…எதாவது” என்று பேச்சை பாதியில் நிறுத்தினார்.
உடனே சபரி “நீங்க நினைக்கிற மாதிரி சிற்பி எந்த தவறும் செய்யலை.ஆனால்…” என்று நிறுத்தினார்.
அருள்மணி “சொல்லுங்க மச்சான் என்ன நடந்துச்சுன்னு” என்று கொஞ்சம் பதற்றமாக கேட்டாள்.
சபரி “இந்த விஷயத்தில் உங்ககிட்ட எந்த முடிவும் கேட்காமல் என் இஷ்டப்படி நான் முடிவெடுத்ததை தப்பா நினைக்காதீங்க மச்சான்.அவளுடைய வாழ்க்கைக்கு எது நல்லதோ, அதை நான் நல்ல விசாரிச்சு பிறகு தான் சரின்னு ஒத்துகிட்டேன்,சிற்பிக்கு எப்பவும் நல்லது தான் நினைப்பேன்” என்று முதலில் தான் முடிவெடுத்ததைப் பற்றி சொல்லி விட்டு எதையும் மறக்காமல் நடந்த எல்லா விஷயங்களையும் அருள்மணியிடம் சொன்னார்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார் அருள்மணி.
அவரது அமைதி சபரியை யோசிக்க வைத்தது.அதனால் சபரி “நான் எவ்வளவு பெரிய விஷயத்தை சொல்றேன் மச்சான்.நீங்க அமைதியாக இருந்தால் என்னால உங்க பதில் என்னன்னு புரிந்துக் கொள்ள முடியலை” என்று நேராகவே கேட்டார்.
அருள்மணி சிரித்துக் கொண்டே “ஒரு தகப்பனாக நான் செய்ய வேண்டிய விஷயத்தை நீங்க செய்து இருக்கீங்க மச்சான்.எனக்கு அதுல சந்தோஷம் தான் சிற்பி படிப்பு முடியவும் அவளை பாடுவதற்கு அனுப்புறேன்னு நான் வாக்கு கொடுத்து இருந்தேன் அந்த பேச்சை நம்பித் தான் சிற்பியும் கல்லூரி படிப்பை நல்ல படியாக முடித்தாள்.ஆனால் அதுக்குள்ளே நாங்க நினைக்க விஷயங்கள் வாழ்க்கையில் என்னவெல்லாமோ நடந்து போச்சு.இப்போ நான் செய்ய வேண்டியதை நீங்க செய்ததில் எனக்கு சந்தோஷம் தான் மச்சான். பிள்ளைகளை அவங்க ஆசையையும் கனவையையும் நினைவாக்கி பார்க்கிற சந்தோஷம் எல்லோருக்கும் கிடைக்காது எனக்கு கிடைச்சு இருக்கு வாழப் போற ஒரு வாழ்க்கையை இவ்வளவு நாளாக எங்களுக்காக வாழ்ந்த பொண்ணு இனிமேல் அவள் விருப்பப்படி வாழட்டும் எனக்கும் இதில் சம்மதம் தான் மச்சான்” என்று சபரி எதிர்பாராத பதிலை அருள்மணி சொன்னார்.
சபரி யோசனையாக “அவள் பாடுறதுக்கு சரின்னு சொன்னீங்க,ஆனால் நிரஞ்சனைப் பத்தி எதுவும் சொல்லலையே?” என்று கேட்டார்.
அருள்மணி “அதான் முதலிலேயே சொல்லிட்டேன் நீங்க அவளுக்கு தகப்பன் சானத்தில் இருந்து பார்த்துட்டீங்கன்னு பிறகு என்ன யோசனை மச்சான்?கனிகாவுக்கு பார்த்த மாப்பிள்ளையும் நீங்க விசாரித்து சம்மதம் சொன்ன பிறகு தான் நான் மேற்கொண்டு பேச ஆரம்பித்தேன்.அப்படி இருக்கும் போது சிற்பி மேல உங்களுக்கு பாசம் ஜாஸ்தின்னு தெரியும் அதனால அதுக்கு ஏத்தமாதிரி தான் பார்த்து இருப்பீங்கன்னு எனக்குத் தெரியாதா? அதனால உங்க விருப்பத்திலும் முடிவிலும் எனக்கும் முழு சம்மதம் மச்சான்.அதோட சிற்பி விரும்பினதையே நீங்க செய்றதில் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்” என்று உண்மையான அன்போடு புரிதலில் சொன்னார்.
அவர் சொன்னதை எல்லாம் கேட்டு சபரி அருள்மணியை ஆரத் தழுவிக் கொண்டவர் “ரொம்ப தாங்ஸ் மச்சான். எனக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு சிற்பியோட விஷயத்துல நீங்க என்ன முடிவு எடுப்பீங்களோன்னு வருத்தமாக இருந்தது.ஆனால் என் மனசு நோகுற மாதிரி எந்த பதிலும் சொல்லாமல் சிற்பியை புரிந்தும் நான் எடுத்த முடிவுல உங்களுக்கு இருந்த நம்பிக்கையும் நினைச்சு எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கு மச்சான். இனி நாம எல்லோருமா சேர்ந்து தாமரை தங்கச்சி மனசையும் மாத்திடலாம்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.இதுல நீங்களும் எனக்கு உதவி செய்யனும்” என்று சொன்னார்.
அதற்கு அருள்மணியும் ஒத்துக் கொண்டார்.சபரி சாம்பவியிடம் தன் குடும்பத்தினரோடும் உடன் சிற்பியின் பெற்றோரையும் அழைத்து வருவதாகச் சொன்னார்.
ஏற்கனவே எல்லா ஏற்பாடுகளையும் வீடியோ காலில் பேசி முடித்து வைத்து இருந்தார்.அதோடு சிற்பியும் இரண்டு நாட்கள் முன்னதாக சென்றதால் அவளே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள்.அவளுக்கு உதவியாக நால்வரும் இருந்தார்கள்.
சிற்பியின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது முதல் விமானப் பயணம்.அதனால் அவர்களுக்கு எல்லாமே புதிதாக இருந்தது.
புதிய இடம், மனிதர்கள், சூழ்நிலை என எல்லாமே வித்தியாசமாக இருந்தது.நான்கு மணிநேர பயணம் முடிந்து தென்கிழக்கு நாடான மலேசியாவில் வந்து இறங்கினார்கள்.தாமரையால் பார்க்கும் அனைத்தும் தன் கண்களால் எதையும் நம்ப முடியவில்லை.
சிற்பி பெங்களூர் வந்ததில் இருந்து தினமும் கைப்பேசியில் அழைத்து அவள் சொல்லும் விஷயங்களை கேட்டாலும் அதை எல்லாம் யாரும் செய்ய மாட்டார்கள் என்று குருட்டு நம்பிக்கையில் நம்பாமல் இருந்தவருக்கு இப்போது ஒவ்வொரு சூழ்நிலையும் புரிய ஆரம்பித்தது.
சிற்பியிடம் அன்று உடைக்கான விஷயத்திற்காக தான் கோபம் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனமானது என்பது புரிந்தது.விமானமும் அதில் பணிபுரிந்த பெண்களைப் பார்த்தே அவருக்கு பெருத்த வித்தியாசமாக இருந்தது.
இப்போது மலேசியாவின் விமான நிலையத்தில் பலதரப்பட்ட மக்களையும் அவர்களின் நடை,உடை,பாவனை என
எல்லாவற்றையும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் பார்த்தார் தாமரை.தான் வாழும் சின்ன கிராமத்தில் உலகமே வாழ்க்கை என்று வாழ்ந்தவருக்கு அந்தக் கூண்டை விட்டு வெளியே வரும் போது தான் இந்த உலகம் எவ்வளவு பரந்து விரிந்த இடம் என்பது புரிந்தது.
விமான நிலையத்திலிருந்து முதலில் நேராக அவர்களுக்கு கொடுத்து இருந்த அறைக்குச் சென்று தயாராகி மாலையில் நடைபெறும் போட்டியைக் காணும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து இருந்தார்கள்.சபரி மட்டும் விமான நிலையத்திலிருந்து நேராக போட்டி நடக்கும் இடத்திற்கு சென்று விட்டார்.
கனிகா “அம்மா இங்குள்ள ஒவ்வொரு பொருளும் எவ்வளவு அழகா இருக்குல்லே” என்று கேட்டாள்.
தாமரையோ “எல்லாமே ரொம்ப அழகாவும் சுத்தமாகவும் இருக்கு, நம்ம கைப்பட்டால் தான் அழுக்காகி போல” என்று சொன்னார்.அதைக் எல்லோரும் சிரித்தார்கள்.தாமரை வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்ததினால் தான் அவரால் இப்படி ஒரு பதிலைச் சொல்ல முடிந்தது.
அவர்கள் தங்கி இருந்த கட்டிடம் பல அடுக்குமாடிகளைக் கொண்ட விடுதியாக விளங்கியது.அங்கே பலநாட்டு மக்களும் அவர்களின் பேச்சும் நிறமும் உடையும் என்று எல்லாவற்றையும் கவனித்தார். எங்கு பார்த்தாலும் பெண்கள் எல்லா துறைகளிலும் இருப்பதையும் அவர்களின் பங்களிப்பும் முக்கியத்துவத்தையும் பார்த்தப்படியே வந்தார்.
பூர்ணாவிடம் “அண்ணி சின்ன வயசுல இருந்து பெரிய பொம்பிளைங்க வரைக்கும் எல்லோருமே இங்கே வேலைப் பார்க்கிறாங்க அப்போ குடும்பத்தை யாரு பார்த்துப்பாங்க?” என்று புரியாமல் கேட்டார்.
பூர்ணா “சின்னப் பிள்ளைங்களை பார்த்துக்க அதுக்கு கேர் சென்டர் இருக்கு அங்கே விட்டுவாங்க,அப்புறம் கொஞ்சம் பெரிய பசங்கன்னா ஸ்கூல் போயிட்டு அடுத்து டியூசன்னு நேரம் சரியா இருக்கும்,அதுக்கு இடையில் பெத்தவங்களும் வேலை முடிஞ்சு வந்துடுவாங்க தாமரை.இப்போ இதெல்லாம் வெளிநாட்டு மட்டும் நடக்கிறது இல்லை நம்ம நாட்டுலயே இப்போ இது தான் நடக்குது எல்லோரும் அவங்களுடைய படிப்பையும் திறமையும் பிடிச்ச துறையில் சாதிச்சு காட்டுறாங்க,நாம வாழ்ந்த வாழ்க்கை முறை வேற இப்போது உள்ள சூழ்நிலை வேற தாமரை” என்று விளக்கமாகச் சொன்னார்.
பூர்ணா சொன்னதை கேட்டதும் தாமரைக்கு சிற்பியின் நினைவு வந்து போனது.உடனே
கனிகாவிடம் மெதுவாக தாமரை “சிற்பியை இப்போ பார்க்க முடியுமா?” என்று கேட்டார்.
“ஏன் ம்மா என்னாச்சு திடீர்னு பார்க்கனும் சொல்லுறீங்க?சிற்பி எங்கே இருப்பான்னு தெரியலையே அதுவும் வேலை வேற இருக்கும்” என்று கனிகா நிலைமையைச் சொன்னாள்.
தாமரை “என்னன்னு தெரியலை கனிகா. சிற்பியை பார்க்கனும் போல இருக்கு அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் தூரமா பார்த்துட்டு வந்தாலும் போதும். சபரி மாமாகிட்டே விவரம் கேளும்மா அவருக்கு தெரியும்” என்று கவலையாகக் கேட்டார்.
கனிகா “அம்மா இப்போ நீங்க அவளைப் பார்த்தால் திட்ட மாட்டீங்கல்ல”
தாமரை “ஏன் கனிகா இப்படி கேட்கிறே? சிற்பி பார்த்தால் நான் எப்பவும் திட்டவாப் போறேன்?” என்று கேட்டார்.
கனிகா “எப்பவும் இதை செய்யாதே! அதைப் பண்ணாதேன்னு அவளை எதாவது சொல்லுவீங்க இப்போ உள்ள நிலைமையில் அவளைப் பார்க்கவும் ஏதும் சொல்லிட்டீங்கன்னா சிற்பி வருத்தப்படுவா அதான் கேட்டேன்” என்று கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.
தாமரையால் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றார்.கனிகா மேலும் எதுவும் பேசாமல் யோசனையோடு சபரியை கைப்பேசியில் அழைத்து தாமரை சொன்ன விஷயத்தைச் சொன்னாள்.
சபரி மனதினுள் ‘இதுக்கு மேல எதையும் மறைக்க முடியாது,இவ்வளவு தூரம் வந்தாச்சு இதற்கு பிறகு என்ன நடந்தாலும் அதை சமாளிக்க வேண்டியது தான்’ என்ற முடிவோடு “கனிகா சீக்கிரம் எல்லோரும் தயாராக இருங்க நாம சிற்பியை பார்க்க போகலாம்.ஆனால் ரொம்ப நேரம் நின்று அவளைப் பார்த்து பேச முடியாது.பார்த்துட்டு உடனே நாம அங்கிருந்து வந்தாகனும் இதைப் பத்தி முதல்ல தாமரைக்கிட்டே சொல்லி புரிய வைச்சிடு சரியா?” என்று அங்குள்ள நிலைமையை ஓரளவு சொன்னார்.
கனிகா “சரிங்க மாமா நான் அம்மாகிட்டே எல்லாத்தையும் சொல்லியே அழைச்சுட்டு வரேன்.நாங்களும் சீக்கிரமா ரெடியாகி கிளம்பிடுறோம்” என்று சொன்னாள்.
தாமரையிடம் கனிகா எல்லாவற்றையும் சொன்னாள்.அதற்கு அவரும் ஒத்துக் கொண்டார்.தற்போது தாமரைக்கு மனம் முழுவதும் சிற்பியை பார்க்க வேண்டும் என்ற எண்ணமே முழுதாக இருந்தது.மற்ற அனைவரும் தாமரை சிற்பியை பார்த்த பிறகு என்ன பிரச்சினை வரப் போகிறதோ? என்ற கலக்கத்தில் இருந்தனர்.
சபரி சொன்னது போலவே நிகழ்ச்சி ஆரம்பிக்க இரண்டறை மணிநேரத்திற்கு முன்பே அந்த இடத்திற்கு அனைவரும் வந்தார்கள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம்-37
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -39

