
அத்தியாயம் -37
மறுநாள் சபரி அருள்மணியின் கைப்பேசியின் எண்ணிற்கு அழைத்தார்.
“ஹலோ”
“ஹலோ மச்சான் நான் சபரி பேசுறேன்” என்றதும் “தெரியும் மச்சான் சொல்லுங்க” என்று அருள்மணி பதில் சொன்னார்.முதலில் நலம் சபரி அருள்மணியின் நலத்தைப் பற்றி விசாரித்தார்.
பிறகு சபரி “மச்சான் ரொம்ப நாளாக வீட்லயே ரெஸ்ட் எடுத்துட்டு தானே இருக்கீங்க” என்று கேட்டார்.
உடனே “ஆமாம் மச்சான் உடல்நிலை இப்போ பரவாயில்லை” என்று சொன்னார்.
சபரி “இத்தனை நாளா ஒரே இடத்துல இருக்கிறதுனால உங்களுக்கும் அடைச்ச மாதிரி இருக்கும்.எனக்கும் தொடர்ந்து வேலையா இருக்கிறதுனால கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் நல்லா இருக்கும்னு தோணுது அதனால நாம எல்லோருமாக சேர்ந்து ஒன்றாக ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாமா?” என்று முதலில் பீடிகைப் போட்டார் சபரி.
அருள்மணி “மச்சான் எல்லோரும் ஒன்னா போகலாம்னு சொல்லுறீங்க நல்ல விஷயம் தான்.ஆனால் இந்த நேரம் சிற்பிக்கு வேலை அதிகமா இருக்குமே அவளால நம்மோடு எங்கும் வர முடியாதே! சிற்பி இல்லாமல் எங்கேயும் போக எனக்கு மனசில்லை மச்சான் அந்த பிள்ளை நமக்காக கிடந்து கஷ்டப்பட்டுட்டு இருக்கும் போது நாம மட்டும் சந்தோஷமா எப்படி சுத்திப் பார்க்கப் போறது சரியில்லை” என்று தன் மனனிதில் உள்ளதை அப்படியே சபரியிடம் சொன்னார்.
சபரி சிரித்தப்படி “சிற்பியை தனியாக விட்டுட்டு நாம எங்கேயும் போகலை மச்சான்.அவளோடு தான் வெளிநாட்டுக்கு ஒன்றாக போறோம் அதனால எந்த தயக்கமும் இல்லாமல் சீக்கிரமா ரெடியாகுங்க” என்று அருள்மணிக்கு அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான அருள்மணி “என்னச் சொல்லுறீங்க மச்சான்?சிற்பி எதுக்கு வெளிநாட்டுக்கு போறா? எனக்கு ஒன்னும் புரியலை” என்று அவர் கேட்டார்.
சபரியோ “சிற்பி வேலை பார்க்கிற இடத்துல போட்டி நடக்குது அதனுடைய இறுதிச்சுற்று வெளிநாட்டுல நடத்தப் போறாங்க.நாம எல்லோரும் அவளோடும் அந்த இடத்திற்குத் தான் போறதாக யோசனை இருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு அதான் உங்ககிட்டே கேட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னார்.
சபரி சொன்னதைக் கேட்டு யோசித்த அருள்மணி “இப்போ எதுக்கு தேவையில்லாத செலவு மச்சான்?நம்ம தமிழ்நாட்டுக்குள்ளே இருந்தாலும் எப்படியும் வர முயற்சி செய்யலாம்,நீங்க என்னன்னா வெளிநாடுன்னு சொல்லிறீங்க இப்போ உள்ள நிலைமையில் இது நமக்கு தேவையில்லை மச்சான் ரொம்ப செலவாகும்” என்று முடிவாகச் சொன்னார்.
அருள்மணி சொன்னதைக் கேட்டு சிரித்த சபரி “மச்சான் செலவு எப்பவும் இருந்துட்டே தான் இருக்கும். அதனால அதைப் பத்தி எல்லாம் யோசிக்கக் கூடாது.முக்கியமா இது கம்பெனி மூலமாக டிக்கெட் போடுறாங்க,அதுல எனக்கு சில பேரை இலவசமா அழைச்சிட்டு போக பர்மிஷன் கிடைச்சு இருக்கு .அதனால தான் நீங்களும் தாமரையும் வாங்க.உங்ககிட்டே போன் போட்டு பேச முன்னாடி கனிகாவுக்கு போன் பேசி அவளையும் அவளோட புருஷனை வரச் சொல்லி இருக்கேன்.அவளும் சரின்னு ஒத்துகிட்டா அதனால அவங்களோடு வந்துடுங்க பெங்களூருக்கு வாங்க கனிகாகிட்டே பாஸ்போர்ட்டை ஸ்பீடு போஸ்ட்ல அனுப்ப சொல்லி இருக்கேன்.அதனால எந்த செலவும் கிடையாது அங்கப் போய் உங்களுக்கு எதாவது வாங்கனும்னா அந்த செலவு மட்டும் தான் வேற எதுவும் கிடையாது தைரியமா வாங்க” என்று முடிவாகச் சொல்லி விட்டு அருள்மணியின் மறு பதிலைக் கேட்காமல் வரச் சொல்லி அழைப்பை துண்டித்தார் சபரி.
அருள்மணி தாமரையிடம் எல்லா விவரங்களையும் சொன்னார்.பிறகு பூர்ணாவிடம் கைப்பேசியில் பேசிய தாமரை அவரும் சபரி சொன்னது போலவே பேசினார்.அதனால் தாமரையால் எந்த விவரமும் தெரிந்துக் கொள்ள முடியவில்லை.
கடைசியில் சிற்பியிடம் தாமரை கைப்பேசியில் பேசியவர் பொதுவாக எப்போதும் நலம் விசாரிப்பது போல் விசாரித்து விட்டு “சிற்பி மாமா சொன்ன விஷயம் பத்தி உனக்கு தெரியுமா?” என்று கேட்டார்.
சிற்பியும் தயக்கத்தோடு “தெரியும்மா மாமா என்கிட்ட எல்லாம் சொன்னாங்க” என்றாள்.
தாமரை ஆர்வமாக “சிற்பி நாம எந்த ஊருக்கு போறோம்னு உனக்குத் தெரியுமா?வெளிநாடு சொன்னாங்க ஆனால் எங்கேன்னு சொல்லலை அதான் உன்கிட்டே கேட்கிறேன்” என்று கேட்டார்.
சிற்பி “ம்ம்… மலேசியாக்கு தான் போறோம் அம்மா. அதுக்கான வேலைகளைத் தான் நான் கம்பெனியில் பார்த்துட்டு இருக்கேன்” என்று பொய்யும் உண்மையும் கலந்து சொன்னாள்.
தாமரையோ சிரித்துக் கொண்டே “அண்ணன் இந்த விஷயத்தை சொல்லவும் சந்தோஷத்துல மக்கா ஊர்ல எல்லோருகிட்டேயும் வெளிநாடு போறோம்னு சொல்லிட்டேன்.இந்த ஊர் எல்லையைத் தாண்டாத எனக்கு இது பெரிய பாக்யம் சிற்பி. அண்ணனை மாதிரி நல்ல மனசு உள்ளவங்க யாரும் இருக்க மாட்டாங்க. அவங்க நம்ம குடும்பத்தை அவரு குடும்பமா நினைக்கிறதுனால இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க.உனக்கு ஒரு நல்ல வேலையும் மதிப்பையும் வாங்கி கொடுத்து இப்போ நம்மா எல்லோரையும் வெளிநாட்டுக்கு கூடிட்டு போறேன்னு சொல்றாங்க, என்னோடு பிறந்தவங்க என்கிட்டே இருக்கிறதை பிடிங்கிட்டு போறதுல தான் இருக்காங்களே தவிர நல்லது,கெட்டதுக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்னச் செய்ய? சபரி அண்ணன் சொல் பேச்சு கேட்டு ஒழுங்கா நடந்துக்கோ சிற்பி எப்பவும் மனம் நோகுற மாதிரியோ எதிர்த்தோ பேசாதேம்மா” என்று தன் மகளுக்கு அறிவுரைச் சொன்னார் தாமரை.
அவர் சொன்னதைக் கேட்டு சிற்பியும் “சரிம்மா நீங்க சொன்னது போலவே நான் இருப்பேன்,நீங்களும் பயணம் செய்றதுக்கான எல்லா ஏற்பாட்டையும் பாருங்க. சீக்கிரம் தேவையான துணிகள்,அப்பாவுடைய மருந்து,உங்க மருந்து எல்லாதையும் மறக்காமல் எடுத்து வைங்க நாட்கள் ரொம்ப குறைவா இருக்கு.அதோடு நீங்க இங்கே பெங்களூர் வர்றதுக்கு முன்னாடியே நான் மலேசியாக்கு கிளம்பிடுவேன் அம்மா.அங்கே எனக்கு நிறைய வேலைகள் இருக்கும்மா அதனால நாம சந்திக்க முடியாதும்மா அதோடு இனிமேல் போன் பேசவும் நேரம் இருக்காது.வாய்ஸ் மெஸேஜ் அனுப்புறேன் நீங்களும் அதுலேயே பேசுங்க” என்று சிற்பி உண்மையை மறைப்பதால் கொஞ்சம் தயங்கி தயங்கியே சொன்னாள்.
தாமரையோ “நீ சபரி அண்ணே சொல்ற படி செய்ம்மா அவரு என்னச் சொன்னாலும் அது நல்லதுக்காகத் தான் இருக்கும்.நாடு விட்டு நாடு தனியா போறே பார்த்து கவனமா இரும்மா” என்று சிற்பியின் பேச்சில் உள்ள மாறுதலை கவனிக்காமல் மகிழ்ச்சியில் இருப்பதால் பேசி விட்டு அழைப்பை துண்டித்தார்.
சிற்பிக்கு அம்மாவிடம் சொல்லும் பொய்யினால் ஒருவிதமான பதற்றமும் பயமாக இருந்தது.
இருந்தாலும் சில நேரங்களில் நமக்கான ஒரு நல்ல வழியை நாம் தேர்ந்தெடுக்கும் போது அதில் சில தடைகளை தாண்டித் தானே செய்ய வேண்டும்.அப்படித் தான் அவளும் தன் அம்மாவிற்கு தெரியாமல் அவள் ஒரு விஷயத்தை துணிந்து செய்கிறாள்.
சிற்பி இருக்கும் நிலைமையை அருகில் இருந்து பார்த்த நிரஞ்சன் “என்னாச்சு ஏன் பதற்றமா இருக்கே?அம்மாகிட்டே உண்மையை சொல்லலையேன்னு கவலையா இருக்கா?”என்று கேட்டான்.
சிற்பி “அம்மாகிட்டே எல்லாம் பேசினேன் ஆனால் முக்கியமானதை மறைச்சு பொய் சொல்லுறேன்னு பயமா இருக்கு”என்று கவலையாகச் சொன்னாள்.
நிரஞ்சனோ “அப்படி எல்லாம் நினைச்சு கவலைப்படாதே சிற்பி! அம்மா உன்கிட்ட பாட்டு பத்தி எதுவும் கேட்கலை நீயும் அதை மறுக்கலை அப்படி இருந்தால் தான் அது பொய் சொன்னதாக இருக்கும் இங்கே உன் திறமையை காட்டப் போறேன்னு நினைச்சுக்கோ தவறாகத் தெரியாது” என்று அவளுக்கு தைரியத்தைக் கொடுத்தான் நிரஞ்சன்.
நால்வருடன் சிற்பிகாவும் தனது பயிற்சியை தொடர்ந்து செய்வதோடு நிறுவனத்தின் வேலைகளும் இருந்தன.தேவையான வேலைகளை எல்லாம் அவள் கைப்பேசியிலும் சில ஏற்பாடுகளை நேரில் சென்றும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இறுதிச்சுற்று போட்டியாளர்கள் போட்டியை நேரில் காண்பதற்காக தங்களின் குடும்பத்தில் உள்ள இரண்டு நபர்களை வெளிநாட்டில் நேரில் அழைத்துச் செல்வதற்கு அனுமதி கொடுத்து இருந்தாள் சாம்பவி.சிற்பியின் மேல் இருந்த நல்எண்ணத்தின் காரணமாக அவளுக்கும் போட்டியாளருக்கான அனுமதியைக் கொடுத்தாள்.
அதில் சிற்பியின் சார்பாக தன் பெற்றோரையும் நிரஞ்சனின் சார்பாக கனிகா மற்றும் அவளுடைய கணவனையும் தங்களோடு அழைத்துச் செல்லும் யோசனையில் இருந்தார் சபரி.இதில் சங்கீத மேளாவின் நிறுவனத்தின் ஊழியரான சபரியின் மூலமாக செழியனையும் பூர்ணாவையும் தன்னோடு அழைத்து செல்ல முடிவெடுத்து இருந்தார்.
எல்லோரும் மலேசியா செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
எல்லாம் சபரியின் திட்டப்படி சரியாகச் சென்றுக் கொண்டிருந்தது.இறுதிப் போட்டி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே நிரஞ்சனும் அவனது நண்பர்களும் உடன் சிற்பியும் மலேசியாவிற்குச் செல்ல வேண்டி இருந்ததால் அவர்கள் சென்று விட்டனர்.
சிற்பி மலேசியா சென்று தாமரையிடம் எப்போதும் போல் வாட்ஸ்அப்பில் குரல் பதிவு மட்டும் அனுப்பினாள்.நேரில் பேசினாள் எப்படியும் பயத்தில் உண்மையைச் சொல்லி விடுவோம் என்று எண்ணியதால் இப்படி பேசினாள்.
சிற்பி மலேசியா சென்ற பிறகு அவளது பெற்றோரும் கனிகாவும் அவளது கணவனும் பெங்களூருக்கு வந்து இருந்தார்கள்.
பெங்களூரைப் பார்த்த தாமரைக்கு அந்த ஊரே பெரிய பிரம்மிப்பாக இருந்தது.இதில் தான் மலேசியாவை பார்த்தால் எப்படி இருக்குமோ? என்று ஒரு ஆவல் வந்தது.
பூர்ணா எப்போது தனியாக இருப்பார்? என்று அதற்கான நேரம் பார்த்து காத்து இருந்தாள் கனிகா.அந்த நேரம் பூர்ணா துவைத்த துணியை எடுத்துக் கொண்டிருக்கும் போது மெதுவாக அவர் அருகில் “அத்தை உங்ககிட்டே ஒரு விஷயம் கேட்கனும்.என்னன்னு சொல்லுவீங்களா?
அவரோ சிரித்துக் கொண்டே “என்னடி யாருக்கும் தெரியாமல் இரகசியமா வந்து கேட்கிறே?” என்று கேட்டார்.
கனிகா “அம்மாகிட்டே எப்போ சிற்பியோட விஷயத்தைப் பற்றி சொல்லலாம் முடிவு செய்து இருக்கீங்க?” என்று நேராக கேட்டாள்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான பூர்ணா “உன்கிட்டே இந்த விஷயத்தைப் பத்தி சொன்னது யாரு?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்.
கனிகா சுற்றும் முற்றும் பார்த்து பூர்ணாவை கண்டு சிரித்துக் கொண்டே “சிற்பித் தான் அத்தை, எல்லாத்தையும் சொன்னாள்” என்றதும்
“எல்லாம்னா எல்லாமே சொல்லிட்டாளா?” என்று யோசனையாகக் கேட்டார்.
“ம்ம்… பாட்டு மட்டும் இல்லை நிரஞ்சனைப் பத்தியும் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லி அழுதாள் அத்தை.சிற்பியின் கனவும் அவளுடைய வாழ்வும் நல்லபடியா அவ விரும்பினபடியே கிடைக்கனும் இதுல எனக்கும் முழுசம்மதம் அவளாவது அவள் விரும்பிய படி இந்த வீட்டை என்னும் கூட்டை விட்டு பறந்து எல்லையில்லா இந்த வானத்தை போல அவளும் சிறகு விரித்து பறக்கனும் அத்தை ” என்று உண்மையான அன்போடு சொன்னாள் கனிகா.
எல்லாவற்றையும் கேட்ட பூர்ணாவின் மனமும் அப்படித் தான் இருந்தது.சிறுவயது முதலே கட்டுப்பாடாக தன் கனவை இழந்து இருப்பவளுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகத் தான் அவருக்கும் தெரிந்தது.
கனிகா சொன்ன பதிலைக் கேட்டு சிரித்த பூர்ணா “கனிகா என் அண்ணன்கிட்டே மாமா எல்லா விஷயத்தையும் சொல்லிடுவாங்க.உன் அம்மாக்குத் தான் எப்போத் தெரியப் போகுதுன்னு தெரியலை, எல்லாம் நல்லபடியா முடியனும் தான் நானும் கடவுள்கிட்டே வேண்டிட்டு இருக்கேன் நீயும் அதையே செய் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்” என்று சொன்னார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -36
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -38

