
அத்தியாயம் -35
சிற்பி அதிர்ச்சியாகி கேட்ட கேள்வியைப் பார்த்த நிரஞ்சன் “ஏன் அதிர்ச்சியாகுறே சிற்பி? என்னைக்கு இருந்தாலும் நான் உன்னை பெற்றோர்களை நான் சந்தித்து தானே ஆகனும்” என்ற போது சிற்பி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
நிரஞ்சன் “பெத்தவங்களை மீறி எதுவும் செய்ய முடியாதுன்னு நீ சொல்ற பொழுது அதற்கான வழியை நான் நோக்கி போய் தான் ஆகனும். உன்னுடைய திறமை வெளியே கொண்டு வர என்னால் என்ன செய்ய முடியுமோ? அதை நான் கண்டிப்பா செய்வேன் சிற்பி.அதற்கான வழியை நிச்சயம் கண்டுபிடிச்சு உன் கனவை நான் நிறைவேற்றுவேன் சிற்பி ” என்று உறுதியாகச் சொன்னான்.
சிற்பி கொஞ்சம் பயந்தவாறு “நான் பாடுற விஷயத்தை பத்தி நீங்க தான் மற்றவங்களுக்கு சொன்னீங்களா?” என்று கேள்வியாகக் கேட்டாள்.
நிரஞ்சன் “இல்லை நான் எதுவும் சொல்லலை” என்று அன்று நடந்த எல்லா விஷயத்தையும் விவரமாக சிற்பியிடம் சொன்னான்.
அவளோ “அப்போ அது நான் தான்னு யாரு சொன்னாங்க?” என்று புரியாமல் கேட்டாள்.
உடனே நிரஞ்சன் “நீ தான்” என்று அவன் சொல்லவும் “நானா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் சிற்பி.
“ஆமாம் நீ தான் உன்னைப் பற்றி வெளிப்படுத்தி இருக்கே சிற்பி.அன்றைக்கு நாங்க எல்லோரும் அறையில் பயிற்சியில் இருந்தோம்.நீ வெளியே நடக்குற ஏற்பாட்டுக்கு வேலையைப் பார்த்துட்டு இருக்கும் போது பார்த்தியும் சகாவும் ஏதோ விஷயமாக ஆபிஸ்க்கு வந்து இருக்காங்க.அப்போ பாட்டு சத்தம் கேட்கவும் ஏற்கனவே கேட்ட குரல் போல இருக்கவும் இருவரும் ஆர்வமாக சத்தம் வந்த திசையில் வந்து இருக்காங்க.அங்கே காதுல ஹெட்போன் மாட்டிகிட்டு பாட்டு பாடிட்டே நீ எழுதி இருந்ததை பார்த்து ரெண்டு பேரும் அதிர்ச்சியாகி இருக்காங்க.உடனே அவங்க ரெண்டுபேரும் அதைப் பார்த்து வீடியோ எடுத்துட்டு வந்து என்கிட்டே அந்த வீடியோவை காட்டி உண்மையைக் கேட்டாங்க சிற்பி.என்னால பொய் சொல்ல முடியலை.அதான் உண்மையை சொல்லிட்டேன். சிற்பி தான்னு அந்த குரலுக்கு சொந்தக்காரின்னு தெரிஞ்ச உடனே அவங்க மூணு பேரும் சொன்ன ஐடியாவே இறுதிப் போட்டியில் நாம வித்தியாசமாக புது முயற்சியில் உன்னை எங்களோடு பாட்டு பாட வைப்பதோடு நீயும் எங்க குழுவில் சேர்ந்து இருக்கே அப்படிங்கிற விஷயத்தையும் எல்லோருக்கும் சொல்லனும் தான் நினைச்சு வைத்திருந்தோம்.
ஆனால் நீ தான் எல்லோர் முன்னாலயும் முடியாதுன்னு சொல்லவும் அவங்க மூணு பேருக்கும் ரொம்ப ஏமாற்றமும் கவலையும் ஆகிடுச்சு” என்று நடந்த எல்லாவற்றையும் சிற்பியிடம் விளக்கமாகச் சொன்னான்.
நிரஞ்சன் சொன்ன விஷயங்களைக் கேட்டு திகைத்துப் போன சிறிதுநேரம் அமைதியாக இருந்தவள் தொடர்ந்து சிற்பி அவனிடம் “நிரஞ்சன் உங்களுக்கு ஏமாற்றமா தானே ஆகிப் போச்சு இல்லையா?” என்று அவனின் மனநிலைமையைப் பற்றி அறிய கேட்டாள் சிற்பி.
அவனோ சிரித்துக் கொண்டே “சிற்பி நாம பேசும் போது உன்னுடைய அப்பா,அம்மாவையும் பத்தி சொல்லி இருக்கேல்ல.அவங்களுக்கு பிடிக்காத எந்தவொரு விஷயத்தையும் நீ சொல்லி இருக்கேன் தானே.அதனால அவங்களை கேட்காமல் முடிவு சொல்ல மாட்டேன்னு எனக்குத் தெரியும். அதனால நாம எதிர்பார்க்கிற பதில் வராதுன்னு நினைத்தேன்.அவங்க மூணு பேருக்கும் இருந்த நம்பிக்கை எனக்கு குறைவா தான் இருந்தது” என்று சிற்பியைப் பற்றி புரிந்துக் கொண்டு பதில் சொன்னான்.
சிற்பி யோசனையாக “எந்தவிதமான ஒரு பயிற்சியும் இல்லாமல் திடீர்னு என்னை மேடை ஏறி பாடினால் அதுவும் இறுதிச்சுற்றில் என்னால ஒழுங்கா பாட முடியும்னு நினைக்கிறீங்களா நிரஞ்சன்” என்று தன் மேல் நம்பிக்கை இல்லாமல் கேட்டாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “இது உனக்கு முதல் மேடையா?”என்று கேட்டான்.
சிற்பி “இல்லை இது எனக்கு முதல் மேடை கிடையாது.ஏற்கனவே சின்ன மேடைகள்ல ஏறி பாடி இருக்கேன்.ஊரிலும் கல்லூரியிலும் பாடி இருக்கேன்.ஆனால் இது வெறும் நூறு பேரைக் கொண்டது இல்லை நிரஞ்சன் ஆயிரமாயிரம் மக்களைக் கொண்ட மேடை அதுவும் எல்லாம் நேரலையில் பதிவாகிக் கொண்டிருக்கும் நினைச்சாலே ரொம்ப பதற்றமா இருக்கு” என்று சிற்பி சொல்லும் போது அவளின் விரல்கள் நடுக்கம் கொண்டன.
அதை கவனித்த நிரஞ்சன் அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டவன் அவளது கரங்களை தன் கையோடு கோர்த்துக் கொண்டபடி “சிற்பி உன்னோடு நானும் இருப்பேன்.பாட்டு பாடும் போது என்னை மட்டும் பாரு.மக்களையோ,நம்மளை எல்லோரும் கவனிக்கிறாங்களே என்ற எண்ணத்தையோ இல்லைன்னா வேற எதையும் கவனத்தில் வைக்காமல் இருந்தாலே போதும்.எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று அவளுக்கு ஆதரவாகச் சொன்னான் நிரஞ்சன்.
நிரஞ்சன் சொன்னதைக் கேட்டு மலைப்பினில் நீண்ட பெருமூச்சு விட்ட சிற்பி நடக்கப் போகும் நிகழ்வுகளை எண்ணி அப்படியே உட்கார்ந்து இருந்தாள். நிரஞ்சன் தான் கொண்டு வந்த சாப்பாட்டை எடுத்து பிரித்து அவளுக்கு ஊட்டி விடப் போனான்.
சிற்பியோ நிரஞ்சன் சொன்ன விஷயங்களை எண்ணியபடி அவனை நிமிர்ந்து பார்த்து “ரொம்ப அவசரம் படுற மாதிரி இருக்கு எனக்கு வேண்டாம் நிரஞ்சன் பயமா இருக்கு” என்று உதடுகள் நடுக்கத்தோடும் படபடப்போடும் சொன்னாள்.
நிரஞ்சன் திரும்பவும் தன் இன்னொரு கரங்களால் சிற்பியின் கைகளை ஆதரவாய் பிடித்துக் கொண்டவன் “நீ கவலைப்படாத சிற்பி.உனக்காக எப்பவும் உடனிருந்து எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்” என்று ஒரு கவளம் உணவை அவளுக்கு ஊட்டி விட்டான்.
நிரஞ்சன் கொடுத்த அணைப்பும் தைரியமும் அவளுக்கு ஒருவிதமான தெம்பை தரவும் அவன் கொடுத்த உணவை வாங்கிக் கொண்டாள்.
முகத்தில் கவலை கண்களில் கண்ணீர் மனம் முழுவதும் ஒரு நிறைவு என்று வித்தியாசமான ஒரு உணர்ச்சியின் பிடியில் சிற்பி அவனோடு அமர்ந்து இருந்தாள்.இதை எல்லாம் சபரி சிற்பியை நேரில் பார்த்து பேசுவதற்காக அவளுடைய அறைக்கு அருகில் வந்தார்.அங்கே ஏற்கனவே நிரஞ்சன் இருப்பதைப் பார்த்தவர் அவன் செய்வதைப் பார்த்து அப்படியே நின்றார்.பின்னர் பின்னாலேயே வந்து அவர்கள் பேசியது நிரஞ்சன் அவளை அணைத்துக் கொண்டது என எல்லாவற்றையும் பார்த்து விட்டவர் மிகுந்த யோசனையோடு அங்கே எதுவும் சொல்லாமல் சென்று இருந்தார்.
மறுநாள் எல்லோரும் கிளம்பி பெங்களூருக்கு சென்று இருந்தார்கள்.சிற்பி முகம் முழுவதும் சோகத்தோடு வீட்டில் இருந்தாள்.அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ? என்று யோசனையும் பயமும் கலந்து இருந்தாள்.
பூர்ணாவும் எதுவும் அவளிடம் கேட்காமல் பொதுவாக போன இடத்தைப் பற்றியும் போட்டியைப் பற்றி மட்டும் விசாரித்து அங்கே நடந்த விவரங்களைக் கேட்டு தெரிந்துக் கொண்டார்.மற்ற விஷயம் எதுவும் சிற்பி பூர்ணாவிடம் சொல்லவில்லை.
மறுநாள் நிரஞ்சன் சிற்பியை கைப்பேசியில் அழைத்து “சிற்பி நாளைக்கு உன் ஊருக்கு போயிட்டு வரலாம்.நீயும் என்னோடு வரனும் சரியா? எல்லாத்தையும் பேசலாம்” என்று அவன் சொன்னதை கேட்டு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தாள் சிற்பி.
ஆனால் நிரஞ்சன் விடாப்பிடியாக “சிற்பி நேரம் ரொம்ப குறைவா இருக்கு நாம யோசிக்காமல் முயற்சி செய்தால் தான் நீயும் எங்களோடு பயிற்சி செய்ய முடியும்” என்றான்.
சிற்பி பயந்தவாறு பேசாமல் இருக்க அவளருகில் வந்த சபரி “சிற்பி போன்ல நிரஞ்சன் தானே” என்று கேட்டார்.
சிற்பி “இல்லை மாமா” என்று பொய் சொன்னவள் பதறியபடி அவள் எழுந்துக் கொண்டாள்.
சபரி கொஞ்சமும் கோபப்படாமல் “எனக்கு எல்லாம் தெரியும் சிற்பி நீ நிரஞ்சனை இங்கே வரச் சொல்லு நான் நேர்ல பேசனும்” என்று சொன்னார்.
தன் மாமா சொன்னதைக் கேட்ட சிற்பி நம்ப முடியாமல் அப்படியே விக்கித்து நின்றாள்.
அவளது கையில் இருந்த கைப்பேசியை வாங்கிய சபரி “ஹலோ நிரஞ்சன் நான் சபரி பேசுறேன். நீங்க வீட்டுக்கு வாங்க நாம நேர்ல பேசலாம்” என்று இரண்டே வார்த்தையில் பேசினார்.
நிரஞ்சன் சற்றே குழப்பத்தோடு “சரிங்க அங்கிள் நான் இப்போதே வரேன்” என்று அழைப்பை துண்டித்தான்.
சிற்பி பதற்றத்தோடு சபரியைப் பார்த்து “மாமா அ..அது வ…வந்து” என்று வார்த்தை வராமல் அவள் திணறிப் போய் நின்றாள்.
சபரியோ அவளை நேராக பார்த்து பேசாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு “சிற்பி கோவாவில் நீயும் நிரஞ்சனும் அந்த ஹோட்டல் இருக்கிற பூங்கால இருந்ததை நான் நேர்லயே எல்லாத்தையும் பார்த்துட்டேன்” என்று சொல்லி விட்டு அவர் செல்லவும் அங்கிருந்த பூர்ணாவும் செழியனும் சிற்பியை பார்த்தபடி அமைதியாக நின்றனர்.
அவர்கள் இருவரையும் சிற்பி கேள்வியாகப் பார்த்தாள்.அவர்கள் இருவரும் அமைதியாக இருப்பதை உணர்ந்த சிற்பி ஏதோ ஒன்று இங்கே நடந்து இருக்கிறது என்று கணித்தவள் அவர்கள் இருவருரின் அருகில் சென்றாள்.
சிற்பிகா மெதுவாக பூர்ணாவின் அருகில் வந்து “அத்தை என்ன நடக்குதுன்னு சொல்லுங்க?எனக்கு ஒன்னுமே புரியலை” என்று கொஞ்சம் பயந்தவாறு கேட்டாள்.
செழியன் சிற்பியின் கைகளை ஆதரவாகப் பிடித்தவன் “சிற்பி முதல்ல உள்ளே வா. பதற்றப்படாமல் நாங்க சொல்றதை முழுதாக கேளு.அப்புறம் என்னன்னு நீயே முடிவு செய்” என்றதும் சிற்பிக்கு பயத்தில் மயக்கம் வராத குறை மட்டும் தான்.
செழியனையே அவள் பார்த்து இருந்தாள்.பூர்ணா “சிற்பி நீ நிரஞ்சனை விரும்புறது எனக்கும் தெரியும்மா” என்று சொன்னார்.அவர் சொன்னதைக் கேட்டு சிற்பி கேள்வியாக செழியனைப் பார்த்தாள். அவனோ அமைதியாக இருந்தான்.
உடனே பூர்ணா “சிற்பி, செழியன் சொல்லித் தான் எனக்கு உன்னைப் பற்றித் தெரியனும்னு கிடையாது. சிற்பி உன்னை அன்னைக்கு எல்லோரும் பார்க்க வந்தாங்கல்ல அப்பவே நிரஞ்சன் உன்கிட்ட நடந்துகிட்டே முறையில் அதை நான் தெரிஞ்சுக்கிட்டேன்.உடனே இதைப் பற்றி எல்லாத்தையும் நான் மாமாகிட்டே பொறுமையாக சொல்லிட்டேன். என்ன இருந்தாலும் நீ என் அண்ணனோட பொண்ணு எனக்கும் உன் மேல பொறுப்பு இருக்கு.அதோடு நானும் எதையும் கண்டுக்காத மாதிரி இருக்க கூடாது. உன்னை அப்படியே விட்டுற முடியாதுல்ல, அதே நேரம் உனக்கு கிடைக்கப் போற வாழ்க்கையிலும் எனக்கு அக்கறை இருக்கு. அதனால மாமா நான் அவனைப் பற்றி சொன்னதும் வெளியே தெரியாத மாதிரி நிரஞ்சனை பற்றி விசாரித்தும் அவன் உன் மேல உண்மையான அன்பு இருக்கானா? என்பதையும் இத்தனை நாளா உங்க யாருக்கும் தெரியாமல் கவனிச்சுட்டு இருந்தாங்க” என்று அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதும் அவன் பேசியது என எல்லாவற்றையும் சொன்னார்.
சிற்பிக்கு ஒரு மாதிரியாக இருந்தது.தலையை குனிந்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.பூர்ணா “உன்னோட பாட்டு மாமாக்கு ரொம்ப பிடிக்கும்.எங்களுக்கு பொம்பளை பிள்ளை இல்லை சிற்பி.அதனால அவங்களோட பெண் குழந்தையா உன்னைத் தான் பார்த்தாங்க. அதனாலத் தான் அவர் உன்னை சங்கீத மேளாவில் வேலைக்கு சேருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவும் அதில் சேர்த்து விட்டாங்க. அப்படியே உன்னுடைய திறமையை வெளிக் கொண்டு வரணும் நினைச்சுட்டு இருந்தாங்களே தவிர அதைப் பற்றி எதையும் அவங்க வாயை திறந்து யார்கிட்டேயும் சொல்லலை.தாமரையும் ஒத்து வரனுமேன்னு அவங்களுக்கு ஒரே யோசனை.இருந்தாலும் அவங்களால் முடிந்த முயற்சியை தொடர்ந்து செய்தாங்க” என்று ஒவ்வொன்றாக சொல்ல ஆரம்பித்தார் பூர்ணா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -34
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -36

