Loading

அத்தியாயம் -34

போட்டியில் நடப்பதை   எல்லாம் நேரலையில் முதலில் பூர்ணா தொலைக்காட்சியில் பார்த்தவர் பின்னர் தாமரையை கைப்பேசியில் அழைத்து விவரங்களைச் சொன்னார்.

சிற்பியின் பெற்றோரும் சகோதரியும் அவள் வீட்டிலுள்ளவர்ககள் சொந்தங்கள் என்று எல்லோரும் பார்த்தார்கள்.அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒரு பெண் அவர்கள் யாரும் நினைத்தே பார்க்க முடியாத பெரும் பணக்காரர்கள் அருகினில் சாம்பவியோடு சிற்பி நின்றுக் கொண்டிருந்தாள்.அவள் அணிந்திருந்த உடையும் பேசிக் கொண்டிருப்பது என்று அனைத்தையும் பார்த்தனர்.

நிரஞ்சன் மற்றும் அவர்களின் நண்பர்களின் குழு மேடைக்கு வருவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் தான் சிற்பி எல்லாம் சரியாக இருக்கிறதா? என்று அறைக்கு பார்க்க சென்றாள்.

அவளைப் பார்த்த நால்வரும் அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்து “ரொம்ப அழகா இருக்கே சிற்பி” என்று ஒவ்வொருவராகச் சொல்ல எல்லோரிடமும் சிற்பி நன்றி சொன்னாள்.

அவர்களும் அந்த பெண்களும் ஒன்றாக மேடையில் தோன்றி பாட்டு பாடினார்கள்.இதை எல்லாம் ஒருவித ஏக்கத்தோடு சிற்பி பார்த்துக் கொண்டிருந்தாள்.பாட்டுப் பாடிக்கொண்டே

இடையினில் ஆண்கள் குழுவினரும் சிற்பியைப் பார்த்து கையசைத்தனர்.

இவை எல்லாம் தொலைக்காட்சியிலும் சமூக வலைத்தளத்திலும் ஒளிப்பரப்பு செய்யப்பட்டு இருந்தது.தாமரையின் உறவினர்கள் அவரின் கைப்பேசியில் அழைத்து “தாமரை அது உன் பொண்ணு சிற்பிகா தானே ஆளே அடையாளம் தெரியலை எவ்வளவு பெரிய ஆட்களோடு இருக்கா? என்ன வேலை பார்க்கிறாள்? எப்படி அவளுக்கு இந்த வேலை கிடைச்சது? எங்க பிள்ளைகளுக்கும் இந்த மாதிரி ஒரு வேலை கிடைக்குமா? இல்லைன்னா சங்கீத மேளாவில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கிக் கொடுக்கச் சொல்லு” என்று பலவகையில் விதவிதமான விசாரிப்பும் பொறாமை கலந்த பேச்சும் என்று சிற்பியை பற்றி எல்லோரும் கேட்ட கேள்வியில்  தாமரைத் தான் பதில் சொல்லியே சோர்வாக இருந்தார்.

அருள்மணிக்கு இதை எல்லாம் பார்க்க தன் மகளை  நினைத்து பெருமிதமாக இருந்தது.அவரோ எதுவும் பேசாமல் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இங்கே போட்டியில் ஒன்றாக பாடியவர்கள் அடுத்து தங்களது பாடலை தனியாக பாடினார்கள்.மக்களின் கரகோஷத்தில் நிகழ்ச்சி முடிந்து இறுதியில் இறுதி போட்டிக்கு தகுதிப் பெறும் அணியைப் பற்றி சொன்னார்கள்.

எல்லோரும் ஒருவித பதற்றத்தில் நிற்கும் போது முதலில் பெண்கள் குழுவும் அடுத்து இன்னொரு குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.இங்கே நிரஞ்சனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தங்களின் குழு தேர்ந்தெடுக்க படவில்லையோ? என்று நினைத்து கவலையில் இருக்க கடைசியில் மக்களின் பக்கம் அதிக ஆதரவோடு அதிக மதிப்பெண்ணில் நிரஞ்சனின் குழு தேர்ச்சி பெற்றது.இவர்களின் மூவரின் குழு வெளிநாட்டிற்கு சென்று அங்கே பாட்டு கச்சேரி நடத்தி மக்கள் மற்றும் நடுவர்களின் ஆதரவோடு  போட்டியிட வேண்டும்.

நிரஞ்சனுக்கும் மற்ற மூவருக்கும் அவர்களால் நம்ப முடியவில்லை.அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்திற்கு தேர்வானார்கள்.

சாம்பவிக்கு பெருமையாக இருந்தது.அவள் தன்னுடைய நிறுவனத்தின் குழு தேர்வாகும் என்று நினைத்தாள்.ஆனால் இப்படி முதல் இடத்திற்கு வந்ததே அவளுக்கு பெரிய வெற்றி தான்.

இந்த வெற்றியினால் சங்கீத மேளாவில் இன்னும் அதிகமான முதலீட்டாளர்கள் அவளிடம் வருவார்கள்.

இவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று ஓரளவுக்கு முடிவானது தான்.

அங்கே கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்தாயிற்று.இனி பத்து நாட்கள்  கழித்து நடக்கப் போகும் இறுதி சுற்றுக்கான அறிவிப்பையும் கொடுத்தார்கள்.பெண்கள் குழுவிற்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

இரண்டாவது இல்லாமல் கடைசி இடம் கிடைத்து இருந்தது.

சிற்பி நிறைய வேலையில் இருந்தாள்.எல்லாம் முடிந்து நிரஞ்சன் சொன்ன இடத்திற்கு வந்தாள் அவள்.

இவர்கள் எல்லோரும் தங்கியிருந்த விடுதியில் இருந்த தோட்டத்தில் சின்னதாக ஒரு பத்து பேர் இருக்கும் இடத்தில் நிரஞ்சன் ஏற்பாடு செய்திருந்தான்.

சிற்பி உள்ளே வந்தாள்.எல்லோரும் ஏற்கனவே அங்கே வந்து இருந்தார்கள்.சாம்பவி எழுந்து “நிரஞ்சன்,காந்தன்,பார்த்திபன்சஹா இவங்க நால்வருக்கும் பெரிய நன்றிகள் என்னத் தான் இது முழுமையான வெற்றிக் கொண்டாட்டம் என்பது இல்லை என்றாலும் என்னுடைய கம்பெனி எந்த ஒரு சறுக்கலை சந்தித்ததோ அது மொத்தமா இப்போ சரியாகி இருக்கு அதுவே எனக்கு ஒரு பெரிய வெற்றியைத் தந்திருக்கு அதனால இதுல முழு உழைப்பையும் கொடுத்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள் ” என்று ஆனந்தமாய் சொன்னாள்.

எல்லோரும் அவளின் பேச்சைக் கேட்டு கைகளை தட்டியபடி வரவேற்றனர்.

நிரஞ்சன் எழுந்து “எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்த எல்லோருக்கும்  எங்களின் குழு சார்பாக நன்றிகள் அப்புறம் நான் இல்லை எங்க குழுவோட முடிவையும் நாங்க இப்போ சொல்லலாம்னு இருக்கோம்” என்றான்.

அதைக் கேட்டு சாம்பவி ஆவலாக “சொல்லுங்க” என்றதும் நிரஞ்சன் மற்ற மூவரையும் பார்த்தான்.

அவர்களும் எழுந்து நின்றதும் காந்தன் “எங்க குரூப்ல புதுசா ஒருத்தரை சேர்க்கலாம்னு நாங்க எல்லோரும் சேர்ந்து முடிவு செய்து இருக்கோம்” என்றான்.

சாம்பவி அதிர்ச்சியாக “யாரை சேர்க்கப் போறீங்க?” என்று கேட்கவும் நால்வரும் சிற்பியைப் பார்த்தனர்.அவளோ என்ன நடக்கிறது என்று புரியாமல் உட்காந்து இருக்க நிரஞ்சன் சிற்பியின் அருகில் வந்து “இன்னும் பைனல்ஸ்க்கு பத்து நாள் தான் இருக்கு அதோடு நமக்கான ஒப்பந்தமும் முடியுது அடுத்து எங்களோடு பயணிக்க சிற்பியைத் தான் நாங்க தேர்ந்தெடுத்து இருக்கோம்” என்றான்.

இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சியாகிப் போயினர்.

சிற்பியோ என்னவென்று சொல்லமுடியாத ஒருவிதமான ஆனந்த அதிர்ச்சியின் தன்னுடைய கரங்களால் முகத்தை முடியவளுக்கு விழிகளில் இருந்து கண்ணீர் வடிந்தது.

நிரஞ்சன் “சிற்பி சொல்லு நீயும் எங்களோடு சேர்ந்து பாடுவே தானே” என்று சஹா கேட்கவும் சிற்பிக்கு கையில் ஒருவிதமான நடுக்கம் வந்தது. சாம்பவியும் அவளோடு எழுந்து நின்று கட்டியணைத்தவள் “வாழ்த்துக்கள் சிற்பி எங்க சங்கீத மேளாவின் மூலமாக உன்னை நாங்க அறிமுகப்படுத்தலாம்னு நினைச்சுட்டு இருந்தேன் ஆனால் நிரஞ்சனும் அவங்க குழுவும் இதுல முந்திகிட்டாங்க” என்று சொன்னாள்.

சிற்பி “என்னச் சொல்லுறீங்க மேம்? எனக்கு ஒன்னுமே புரியலை” என்று கேட்டாள்.

சாம்பவி சிரித்துக் கொண்டே “நீ நம்ம கம்பெனியில் வேலைப் பார்க்கும் பொழுது உன்னையும் அறியாமல் பாட்டு பாடிட்டே வேலையை செய்வே அப்போத் தான் உன்னுடைய வாய்ஸ் அது ரொம்ப யூனிக்கா அதே சமயம் ப்ரெஷ்ஷா இருந்துச்சு இதைப் பற்றி நான் ஏற்கனவே சபரி அங்கிள் கிட்டே கேட்டேன் அப்போ அவங்க தான் நீ சின்ன வயசில் இருந்து பாட்டு கத்துகிட்டு பாடுவேன்னு சொன்னாங்க நான் முடிவெடுக்கிறதுக்கு முன்னாலேயே நிரஞ்சன் முடிவெடுத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் திறமை எங்கு இருந்தால் என்ன? அது  சரியான இடத்துல போய் சேருதா அது தான் முக்கியம் சிற்பி வாழ்த்துக்கள்” என்று கையைப் பிடித்து வாழ்த்து சொன்னாள்.

சிற்பி எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்றாள்.சபரி நிரஞ்சனையேப் பார்த்துக் கொண்டிருந்தார்.மற்ற மூவரைப் போல் இல்லாமல் அவனின் பார்வை சிற்பியின் மேல் ஏதோ ஒன்றை அவருக்கு விளக்கியது.

சஹா சிற்பியின் தோளின் மேல் கைவைத்து “உனக்கு சந்தோஷம் தானே?” என்று கேட்க அவளோ இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

சஹாவும் மற்றவர்களும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.நிரஞ்சன் “என்னாச்சு?” என்று கேட்க சிற்பியோ மனதில் ஒருவிதமான பாரத்தை ஏற்றிக் கொண்டவள் “இல்லை என்னால இப்போ பாட முடியாது” என்று சொன்னதும் காந்தன் “ஏன் இப்படி சொல்ற சிற்பி? நாங்க உன்கிட்ட கேட்காமல் முடிவெடுத்துட்டோம்னு கோபமா இருக்கியா?” என்று கேட்டான்.

அவளோ இல்லை என்பது போல்  தலையசைத்தவள் “இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்க எத்தனை பேர் காத்திட்டு இருக்காங்கன்னு  எனக்குத் தெரியும் ஆனால் என்னை பெத்தவங்களோட விருப்பம் இல்லாமல் என்னால ஒன்னும் செய்ய முடியாது இப்போதைக்கு நான் வேலைச் செய்யத் தான் அனுமதி கேட்டு வந்து இருக்கேனே தவிர பாடுவதற்கு  இல்லை என் குடும்பத்தின் சூழ்நிலையும் சரியில்லை அதில் நான் பாட வந்துட்டா ரொம்ப கஷ்டமாகிடும் அதனால எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க உங்க சந்தோஷத்தை கெடுத்து இருந்தால் என்னை மன்னிச்சிடுங்க” என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே கண்ணீர் தான் முதலில் வெளியே வந்துக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்ததும் எல்லோருக்கும் அவளுடைய நிலைமை ஓரளவு புரிந்தது.அங்கே ஒரு பெரிய அமைதி நிலவி இருந்தது.சிற்பி அங்கிருந்து வேகமாக தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள்.எல்லோரும் இருப்பதால் நிரஞ்சன் அமைதியாக இருந்தான்.

சஹா “சரி விடுங்க சிற்பி கொஞ்சம் டென்ஷன்ல இருக்கா போல நாம அப்புறமா பேசிக்கலாம் வாங்க சாப்பிடலாம்” என்று எல்லோரையும் அழைக்கவும் அங்கே ஒருவிதமான அமைதியோடு எல்லோரும் சாப்பிட ஆரம்பித்து நிகழ்ச்சியைப் பற்றிய மற்ற பேச்சுக்கள் எல்லாம் வந்தது.

நிரஞ்சன் கொஞ்சமாக எல்லோருக்காகவும் சாப்பிட்டான்.மற்றவர்களும் ஒவ்வொருவராக செல்லவும் நிரஞ்சன் கையில் ஒரு சாப்பாட்டை வாங்கியவன் காந்தனிடம் மெதுவாக “நான் சிற்பியைப் பார்த்துட்டு வரேன்” என்று சொல்லி விட்டுச் சென்றான்.

அவளது அறை வாசலுக்கு வந்தவன் கொஞ்சம் தயக்கத்தோடு கதவை தட்டினான்.அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.திரும்பவும் தட்டியவன் “சிற்பி நிரஞ்சன் வந்து இருக்கேன் கதவைத் திற” என்று சத்தமாக சொல்லியும் பதில் வராததால் அவளது கைப்பேசியில் அழைத்தான்.

அவளது கைப்பேசி அழைப்பின் சத்தம் உள்ளிருந்து வெளியே கேட்டது.அதைக் கேட்டவன் மனதினுள் ‘தனியா எங்கேயாவது போய் இருப்பாளோ’ என்று அன்று அவர்கள் இருந்த இடத்திற்கு சென்றான்.

அது கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருப்பதால் அங்கே இருப்பாள் என்று அவன் சென்று பார்க்க சிற்பி தலையை கவிழ்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.அவளைப் பார்த்ததும் சிற்பிக்கு அருகில் போய் அமைதியாக அமர்ந்தான்.சிற்பியின் விசும்பல் அவனுக்கு கேட்டது.

மெதுவாக அவளது தலையை வருடினான்.அவனது தொடுகையை உணர்ந்து யாரென்று நிமிர்ந்து பார்த்தாள்.அவளது கண்கள் அழுது சிவந்தபடி முகமோ இன்னும் சிவந்து போய் இருந்தது.

அவனைப் பார்த்து “இப்போ எதுக்காக நீங்க இங்கே வந்தீங்க?நான் தான் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டேனே” என்றாள்.

நிரஞ்சனோ சிரித்துக் கொண்டே “நீ தான் பாட்டு வேண்டாம்னு சொன்னே நான் உன்னை வேண்டாம்னு சொல்லலையே” என்றதும் அவனது மணிக்கட்டு இடுக்கில் அவளது கையை நுழைத்து திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.

நிரஞ்சன் “இப்போ எதுக்காக அழுறே சிற்பி?” என்று கேட்க அவளோ திரும்பவும் “ஓஓ…வென்று அழுதாள்.

அவனோ “சரி அழாதே! நான் வந்து உன்னுடைய  அப்பாவையும் அம்மாவையும் சந்திச்சு பேசட்டுமா?” என்று கேட்கவும் சிற்பியின் அழுகை அப்படியே நின்று போனது.

நிமிர்ந்து நிரஞ்சனைப் பார்த்தவள் “என்ன சொல்லுறீங்க நிரஞ்சன்? என்னுடைய அப்பாவையும் அம்மாவையும் எதுக்கு பார்க்கனும்னு சொல்லுறீங்க?” என்று அதிர்ச்சியாகக் கேட்டாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்