Loading

அத்தியாயம் -25

சிற்பியோ சிரித்துக் கொண்டே “ரொம்ப சிம்பிள் எனக்கு பிடிச்ச பாட்டை பாடுவேன்”என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தவன் “உண்மையாகவே சொல்லுறியா? அப்போ எனக்காக ஒரு பாட்டு பாடு”

சிற்பியோ பதிலைச் சொன்ன பிறகு தான் ‘ஏன் இப்படி சொன்னோம்?’ என்று யோசித்தாள்.

சிற்பி தயங்கியவாறு “இன்னொரு நாள் பாடட்டுமா? இப்போ வேண்டாமே” என்றாள்.

அவனோ “ப்ளீஸ் எனக்காக ஒரு தடவை மட்டும்  பாடு சிற்பி” என்று  கெஞ்சலாகக் கேட்டான்.

சிற்பி திரும்ப மறுத்தும் அவன் அவளை கட்டாயப்படுத்தி பாடச் சொன்னான்.வேறு வழியில்லாமல் சிற்பி “நான் பாடினால் உங்க லெவல்ல இருக்காது நிரஞ்சன் சார் இருந்தாலும் நீங்க சொல்றதுனால எனக்குத் தெரிஞ்ச மாதிரி பாடுறேன்” என்றாள்.

அவனும் சரியென்று ஒத்துக் கொள்ள சிற்பி பாட ஆரம்பித்தாள்.

“துலாத் தட்டில் உன்னை

வைத்து நிகர் செய்ய

பொன்னை வைத்தால்

துலாபாரம் தோற்காதோ

பேரழகே முகம் பார்த்து பேசும்

உன்னை முதல் காதல் சிந்தும்

கண்ணை அணைக்காமல்

போவேனோ ஆருயிரே…” என்று காதல் ததும்ப அதற்கான ஏற்ற இறங்கங்களுடன் பாடினாள்.

அதைக் கேட்டு அசந்த நிரஞ்சன் உடனே தன்னையும் அறியாமல்

“ஓ நிழல் போல

விடாமல் உன்னை

தொடர்வேனடி புகைப்போல

படாமல் பட்டு நகர்வேனடி

வினா நூறு கனாவும் நூறு

விடை சொல்லடி…” என்று அவன் பாடினான்.

நிரஞ்சன் மனதில் கொண்டிருந்த பாரங்கள் எல்லாம் கரைந்தது போல் ஒரு உணர்வு அவனுக்குள்.இரண்டு பக்கமும் இருவரும் பெருத்த அமைதியைக் கொண்டிருந்தனர்.

இருவரின் சில நிமிட அமைதியை சிற்பியின் அத்தை பூர்ணா கலைக்கும் விதமாக சத்தமாக “சிற்பி என்ன போன் பேசுறியா?” என்று கேட்டதற்கு சிற்பி “ஆமாம் அத்தை” என்றாள்.

“சரிம்மா பேசிட்டு தூங்கும்மா நேரமாகுது” என்று சொல்லி விட்டுச் சென்றார்.

அவர் பேசியதைக் கேட்ட நிரஞ்சன் “ரொம்ப நேரமாயிடுச்சுல்ல நீ ரெஸ்ட் சிற்பி நாம நாளைக்கு பேசலாம்”

அவளோ “ம்ம்… சரி” என்ற பொழுது “ஒரு நிமிஷம் சிற்பி” என்றான்.

“சொல்லுங்க சார்” என்றாள்.

“ஒரு விஷயம் சொல்லாமல் போனை வைக்க மனசில்லை”

“ம்ம்… சொல்லுங்க” என்றாள் இன்னொரு முறை.

“ரொம்ப அழகா தெளிவாக இருந்துச்சு உன் குரல் சிற்பி உனக்கு முறையா பாடவும் தெரியும் தானே” என்று கேட்டான்.

அவளிடம் பதிலில்லை.அமைதியாக இருந்தாள்.

“ஏன் எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?”

“இப்போ எதுக்கு இதெல்லாம்?”

“பரவாயில்லை சொல்லு நானாகத் தானே கேட்கிறேன் உன்னுடைய  குரல் அப்படியே லயிக்க வைக்குது சிற்பி” விழிகளை மூடி உணர்ந்தபடிச் சொன்னான்.

அவனின் வார்த்தையின் உணர்வு அவளுக்கும் உணர்த்தியது.

“சார்” என்று ஆரம்பிக்கும் போது ஒருவிதமான தயக்கம் அவளுள்.

அதைப் புரிந்துக் கொண்டவன் “ஒரு ப்ரெண்டா நினைச்சு விருப்பம் இருந்தா சொல்லு முடியலைன்னா  பரவாயில்லை இன்னொரு நாள் பார்த்துக்கலாம்” என்றான்.

அவளும் சரியென்று அழைப்பினை துண்டித்தாள்.கைப்பேசியை எடுத்து தன் நெஞ்சோடு வைத்தவளுக்கு ஒரே படபடப்பாக வியர்க்க ஆரம்பித்தது.தொண்டை எல்லாம் வறண்டு போய் இருந்தது.

மனதினுள் ‘’நிரஞ்சன் கேட்டார்னு நான் சாதாரணமாகத் தான் பாடுனேன் ஆனால் அதற்கு பதில் அவன் பாடியது எதற்கு?” என்று தனக்குள்ளே ஆயிரம் முறை கேட்டவளுக்கு ஒருவேளை  தொடர்ந்து பாடனும்னு பாடி இருப்பானோ? என்று அந்த கேள்விக்கும் தானே விடையளித்தாள்.

இங்கே நிரஞ்சனின்  முகமோ புன்னகையில் நிரம்பி இருந்தது.ஏனோ வாழ்வில் இதுவரை மறுத்தவளின் காதல் நினைவுகள் வரும் போது வலியும் வேதனையும் நிறைந்து இருக்கும். இப்போது அப்படி இல்லை.நிறைவாக இருந்தது மனம்.

அவளிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை தான் இருந்தாலும் சொல்லியது போல ஒரு நிறைவு.இனி இதுபோல் வருவதற்கு எண்ணம் இருக்காது.

எனென்றால் வேதனை இருந்தால் தானே தனிமை தேவை.இங்கே புதியதாக வாழ்க்கையின் வரவு எல்லாவற்றையும் மாற்றும் அன்பு அதுவே நிதர்சனம்.

தன் அடுக்குமாடி குடியிருப்புக்கு வந்தான் நிரஞ்சன்.அவனுக்காக காத்திருந்த காந்தன் அவனையேப் பார்த்தான்.முகத்தில் எப்போதும் இருக்கும் சோர்வு இல்லை மாறாக புத்துணர்வு தெரிந்தது.

நிரஞ்சன் காந்தனிடம் “நீ இன்னும் தூங்க போகலையா?”

“இல்லை உனக்காகத் வெயிட் பண்றேன்”

“எல்லோரும் சாப்பிட்டீங்களா?”

“ம்ம்… சாப்பிட்டோம் எனக்கு சாப்பாடு எங்கே?” என்று கேட்டான் நிரஞ்சன்.

அதைப் பார்த்து அதிர்ச்சியான காந்தன் “புதுசா இருக்கு எப்பவும் நான் தான் சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்துவேன் இன்றைக்கு நீயாகவே கேட்கிறே? வித்தியாசமாக இருக்கு” என்றான்.

நிரஞ்சன் சிரித்துக் கொண்டே “பசிக்குதுடா எனக்காக நீ எப்பவும் சாப்பாடு வாங்கி வைப்பேன்னு தெரியும் அதனாலத் தான் கேட்டேன் எடுத்துட்டு வா” என்று உடையை மாற்றுவதற்கு தன் அறைக்குச் சென்றான்.

காந்தன் யோசனையோடு அவனுக்கான சாப்பாட்டை எடுத்து வைத்தான்.நிரஞ்சன் வந்து சாப்பிட ஆரம்பித்தவன் “அவனுங்க ரெண்டுபேரும் எங்கே?”

“தூங்கப் போறேன்னு ரூம்க்கு போய்ட்டாங்க”

“அப்படியா! ஓரமா நின்னு நாம ரெண்டுபேரும் என்ன பேசுறோம்னு ஒட்டு கேட்டுட்டு இருப்பானுங்க” என்றான்.

அதைக் கேட்டு காந்தன் சிரித்துக் கொண்டு “ரொம்ப மாற்றமாக இருக்கே இது சரியில்லையே” என்று நிரஞ்சனை மேலும் கீழுமாகப் பார்த்தான்.

அவனோ “ஏன் என்னை இப்படி பார்த்தால் நல்லா இல்லையா?”

காந்தன் நிரஞ்சனைப் பார்த்து “ஒருநாளைக்கு ஒரு ஷாக் போதும்டா அடுத்தடுத்து வந்தா நெஞ்சம் தாங்காது” என்றான்.

அவன் சொன்ன பதிலைக் கேட்டு “சாம்பவி கிட்ட பேசி எல்லாம் உண்மையும் கேட்டு தெரிஞ்சுக்கிட்டீங்க போல” என்று நேராக உண்மையாக கேட்டான்.

காந்தனோ ஆமாம் என்பது போல் தலையசைத்தான்.

நிரஞ்சன் “இந்த வேலையை பார்த்தது யார்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று கேட்க ஓரமாக இவர்கள் இருவரும் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த பார்த்திபனும் சஹாவும் வெளியே வந்தனர்.

பார்த்தி “ஷ்ப்பா போதும்பா எங்களை நீ கழுவி ஊத்துனது நாங்க தான் கேட்டோம் என்ன நடந்துச்சுன்னு தெஞ்சுக்கலாமேன்னு ஆனால் என்றைக்கும் இல்லாத அதிசயமா சாரே எங்களை கலாய்க்கனும் என்கிற முடிவோட வந்து இருக்கிற விஷயம் தெரியாமல் போச்சு எப்படியோ நீ நல்லா இருந்தா சரிதான்” என்றான்.

சஹா நிரஞ்சன் தோளில் மேல் கைப்போட்டுக் கொண்டு “நா…நாங்க செய்து இருப்போம்னு தெரிஞ்சே கேட்கிற பத்தியா அங்கே இருக்கே” என்றதற்கு நிரஞ்சன் “நான் அங்கே இல்லை இதோ இங்கே தான் இருக்கேன்” என்று அவன் அமர்ந்திருந்த இருக்கையைக் காட்டினான்.

அதைக்கேட்டு காந்தன் “காமெடிடா சிரிங்க சிரி” என்று சொல்ல அவர்களுக்குள் நிறைய பேசினர்.ஒருவருக்கு துக்கம் என்றால் இன்னொருவர் அணைத்துக் கொள்வதில் தான் அவர்களின் நட்பின் ஆழம் இன்னும் இன்னுமாய் சென்றது.

நிரஞ்சனைப் பற்றி யோசித்துக் கொண்டே தூங்கிப் போனாள் சிற்பி.அவனுக்கோ அவளைப் பற்றிய ஒரு நல்ல நினைவுகளோடு தூங்கிப் போனான்.

மறுநாள் எழுந்தவள் கண்களைத் திறக்க எதிரே செழியன் அமர்ந்திருந்தான்.அவனை யோசனையாக பார்த்தவள் “என்ன இங்கே உட்கார்ந்து இருக்கீங்க?”

“இன்னைக்காவது குளிக்கிற ஐடியா இருக்கா? இல்லையா?”

“ஏன் என்னாச்சு?”

“ஏன் என்னாச்சுன்னு கேள்வியைப் பாரு கீழே விழுந்து இன்னையோடு மூன்றாவது நாளு குளிப்போம் டிரெஸ் மாத்துவோம் ஒன்னும் கிடையாது அப்படியே அழுக்கு மூட்டை மாதிரி படுத்துட்டு இருக்கே வேளா வேளைக்கு சாப்பாடு அதுவும் படுத்துகிட்டே எல்லாம் வந்தால் நல்லா இருக்கும் கொஞ்சம் நடக்க டிரை பண்ணலாம் அதெல்லாம் கிடையாது எப்போ பார்த்தாலும் போனும் கையுமாக இருப்பது இதே வேலையாக போச்சு” என்று அவளை வசைப்பாடிக் கொண்டிருந்தான் செழியன்.

அவன் சொன்னதை எல்லாம் கேட்ட சிற்பி “அத்தை இவனை இங்கிருந்து போகச் சொல்லுங்க இப்போ யார் இவன்கிட்டே ஹெல்ப் கேட்டாங்களாம் கிளம்ப சொல்லுங்க” என்று கத்தினாள்.

உடனே செழியன் “இப்போ நான் வேண்டாம் என்னைப் பார்த்தால் கோவம் வரும். ஆனால் அன்னைக்கு என்னைப் பார்த்த உடனே ஓஓஓன்னு ஒரே அழுகை அப்போ மட்டும் நான் வேணுமா?” என்று வேண்டுமென்றே அவள் மனதில் தன்னைப் பற்றிய எண்ணம் அவளிடத்தில் என்ன உள்ளது? என்று அறிய அவன் பேசினான்.

இரண்டு நாட்களாக நடப்பதை எல்லாம் பூர்ணா செழியனிடம் சொல்லிக் கொண்டுத் தான் இருக்கிறார்.நிரஞ்சன் சாப்பாட்டை ஊட்டி விட்டது அதை அவள் தடுக்காமல் அமைதியாக சாப்பிட்டது, இரவு முழுவதும் அவனோடு பேசி சிரிப்பது எல்லாமே அவர் கவனித்துக் கொண்டுத் தான் இருக்கிறார்.

மகனுக்கு சிற்பியின் மேல் விருப்பம்  இருப்பது தெரியும் இருந்தாலும் சிற்பிக்கும் அவன் மேல் இருப்பதை அறிந்துக் கொள்ளவே இவருக்கு விருப்பம்.

காரணம் தன் மகனைப்  போலவே அவர் சிற்பியை நினைப்பதால் அவரால் வித்தியாசம் பார்க்க முடியவில்லை.

சிற்பியோ முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு “இப்போ என்ன அன்னைக்கு உன்னை கட்டிப்பிடிச்சு அழுதுட்டேன் அதானே பிரச்சினை இப்போ கொஞ்சம் என்கிட்டே வாயேன்”என்று அன்பாகக் கேட்டாள்.

“எதுக்கு?” என்று இவன் அதிகாரமாக கேட்டான்.

அவளோ உடனே முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு “ப்ளீஸ் அத்தான் இங்கே வாங்களேன்”  என்றதும் இவனும் அருகில் சென்றான்.இது தான் சரியான வாய்ப்பு என்று எண்ணியவள் அவனைப் பிடித்து இழுத்தவள் “அன்னைக்கு இப்படி கிட்டே வந்து இருந்தால் முதுகுமேல சாய்ந்து இருந்து அழுது இருப்பேன்” என்று அவன் மீது தன் உடலின் மொத்த பாரத்தையும் இறக்கினாள்.

இதைப் பார்த்த பூர்ணா “ஹய்யோ நானே தங்கமாட்டும் ஒரே ஒரு பிள்ளையை பெத்து வைச்சு இருக்கேன் அவனைப் போட்டு படுத்துற போதும்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

அவனோ “அம்மா இந்த ராட்சசிகிட்டே இருந்து என்னை காப்பாத்துங்க அம்மா” என்று கதறினான்.

அதற்கு சிற்பி “வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை எங்க பிடி உடும்புப் பிடி” என்ற போது இவனோ மெதுவாக அவளுடைய முதுகுபக்கமாக கை வைக்கவும் “ஆஆஆ…. அம்மா வலிக்குது” என்று கத்தி அவனிடமிருந்து நகர்ந்தாள்.

அவனோ “ஷ்ப்பா ஒரு குளிக்கச் சொன்னதுக்கு  அக்கப்போராக இருக்கு” என்று சலித்துக் கொண்டான்.

அதைப் பார்த்த சிற்பி “ஹோ… நான் அந்தளவுக்கு ஆகிட்டேனா? பரவாயில்லை நானே எழுந்து கொள்ள முயற்சிக்கிறேன்” என்று அவள் தன்னைத் தானே முயன்று பார்த்ததில்  முதலில் இருந்ததுக்கு இப்போது கொஞ்சம் வலி குறைந்து இருப்பதால் நடக்க கொஞ்சம் தடுமாறினாள். அதைப் பார்த்து பதறிய செழியன் வேகமாக முன்னால் சென்று சிற்பியை தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.

கடைசியில் அவனைப் பிடித்தவள் “என்ன நடக்க வைக்கனும்னு என்னவெல்லாம் பேசுறே? இதனாலத் தான் மனசுக்கு நெருக்கமான உறவாக உன்னைத் தவிர வேற யாரையும் நினைக்க முடியலை. எப்பவும் எனக்கான ஒரு ஆதரவுன்னா அது நீ மட்டும் தான் சின்ன வயசுல இருந்து எனக்கு ஒரு தைரியமே நீ இருப்பதால் தான் ” என்று செழியனைப் பார்த்துச் சொன்னாள் சிற்பி.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நிரஞ்சன் மனசுல சிற்பி வந்தாச்சு .. ஆனா சிற்பி மனசுல ?? சிற்பி செழியனை நல்ல தோழனா நினைக்கிறாளோ ??

  2. பாவம் செழியன்.. சிற்பியை இன்னும் கொஞ்சம் அதிகமாக காதலிக்கப் போகிறான் இவளுடைய பேச்சில். ஆனால் கடைசியில் அவள் ஒரு நண்பனாக நினைத்தேன் என்று சொல்லப் போகிறாள். அப்படித்தான் நடக்கும் என்று தோன்றுகிறது. அருமை 👏