
அத்தியாயம் -19
சிற்பியோ தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக நிரஞ்சன் அறையின் வாசலுக்கு அருகில் நின்றுக் கொண்டாள்.
காந்தனைப் பார்த்து “உள்ளே போயே ஆகனுமா? எனக்கு பயமா இருக்கு” என்று கேட்டாள்.
அவனோ “ம்ம்… சீக்கிரமா போ உள்ளே புத்தகத்துல மேல ஒரு பூப்போட்ட பிச்சர் இருக்கும் பாரு அதை எடுத்துட்டு வா” என்று அவளை அதட்டி சொல்லி அனுப்பினான்.
மெதுவாக நிரஞ்சனின் அறைக்குள் தன் தலையை விட்டாள்.முதலில் அவன் இருக்கிறானா? என்று நோட்டம் விட்டாள்.அவன் இல்லை ஆனால் குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டது.’ம்ம்… ஓகே ஆளு இன்னும் வெளியே வரலை நாம புக்கை எடுத்துட்டு உடனே வெளியே வரணும் ‘ என்று அந்த அறையை சுற்றி ஒரு பார்வை விட்டாள்.
அறை அவ்வளவு சுத்தமாகவும் ஒவ்வொரு பொருளும் நேர்த்தியாக அடுக்கப்பட்டு இருந்தது.கொஞ்சம் மெதுவாய் “உன்னை மாதிரி உன் ரூம் அழகா இருக்கு ஆனால் இந்த அறை சுத்தமா இருக்கிற மாதிரி உன் தலையிலும் அறிவும் சுத்தமா இல்லை” என்று சொன்னவள் தனக்குள்ளே “ஹேய்… நானும் ரைம்மிங்கா பேசுறேன்” என்று சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.
காந்தன் சொன்ன புத்தகத்தை தேட ஆரம்பித்தாள்.அங்கே நிறைய புத்தகங்கள் இருந்தன.”பெரிய படிப்பாளியா இருப்பானோ? இவ்வளவு புக் வைச்சு இருக்கான் இல்லை தான் அறிவாளின்னு காட்டத் தான் அடுக்கி வைச்சிருக்கான் போல நான் எங்கே போய் தேடுவேன்?” என்று மெதுவாக மரியாதையாக பேசுறேன் என்று சத்தமாக பேசினாள் சிற்பி.
அங்கிருந்த புத்தகங்களை மேலோட்டமாகப் பார்த்தவள் ஒரு ஓரத்தில் காந்தன் கேட்ட புத்தகம் இருந்தது.அதை எடுத்தவள் அடுத்து இன்னொரு இடத்தில் சிறுசிறு கைவினைப் பொருட்கள் இருந்தன.
“அழகா இருக்கே” என்று அதன் அருகில் சென்று ஒவ்வொன்றையாக எடுத்துப் பார்த்தாள்.’இதெல்லாம் எங்கே கிடைக்கும்? இவ்ளோ அழகா இருக்கு’ என்ற யோசனையோடு பார்த்து திரும்ப அந்த இடத்தில் வைத்தாள்.
திரும்பும் போது இவர்கள் நால்வரும் சில வருடங்களுக்கு முன்னால் எடுத்த புகைப்படம் இருந்தது.அதை ஆவலாய் எடுத்து பார்த்தவள் பின்னால் இருந்த அலமாரி போன்ற அமைப்பில் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களின் மேல சாய அந்த புத்தக அலமாரி அவள் மேல் சாயவும் குளியலறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
புத்தக அலமாரி தன் மேல் சாய்வதை உணர்ந்த சிற்பி பயத்தினில் “ஐய்யய்யோ இப்போ நிரஞ்சன் வந்தால் நான் ஒழிஞ்சேன்” என்று கையில் இருந்த போட்டோவை அசையாமல் பக்கத்தில் இருந்த சிறு தலையணை மேல் அப்படியே போட்டவள் கைகள் இரண்டையும் நீட்டி கால்களையும் கொஞ்சம் தரையினில் அழுத்தமாக பதித்து மேலே சாய்வதை தடுக்க நினைக்கும் போது மொத்தமாய் அந்த அலமாரி விழும் தருணம் நிரஞ்சன் குளியலறையில் இருந்து வெளியே வந்தான்.
அவன் எதிரே சிற்பி நின்ற கோலத்தைப் பார்த்து பதறியவன் “ஹேய்… உன் மேல எல்லாம் விழப் போகுது” என்று அவன் பிடித்துக் கொள்ள வேகமாக வந்தான்.
புத்தக அலமாரியின் மேல் அடுக்கில் சில பெரிய கனமான புத்தகங்கள் நிறைய இருந்தன.அது அவள் மேல் விழுந்தால் அவ்வளவு தான் என்று எண்ணியவன் அவளுக்கு நேரெதிராக மேலே அந்த புத்தகங்களை பிடித்தபடி கீழே அவள் மேல் விழாதபடி பிடித்துக் கொள்ள அவளருகில் நெருக்கமாய் வந்து நின்றான்.
இருவருக்கும் எந்தவொரு இடைவெளியும் இன்றி நெருங்கியபடி அவன் நெஞ்சில் அவளுடைய முகம் சாய்ந்த படி நின்றார்கள்.சிற்பிக்கு பயத்தினில் வியர்வை வழியத் துவங்கியது.
நிரஞ்சன் பிடித்தும் கனமான அலமாரியை நிறுத்த முடியாமல் போகவும் அவன் உடனே “காந்தா காந்தா” என்று சத்தமாக அழைத்தான்.
சிற்பியால் சரியாக நிற்க முடியாமல் போனது.பிடிமானம் இல்லாமல் நிரஞ்சன் மேலே மொத்தமாக விழும் நேரம் அவனை தன் பலம் கொண்ட மட்டும் தள்ளி விட நிரஞ்சன் கொஞ்சம் நகர்ந்து விழுந்தான். அலமாரியில் இருந்த புத்தகங்கள் மொத்தமாகவும் அலமாரியோடு சிற்பியின் மேல் விழுந்தது.
அவளின் இந்தச் செய்கையில் ஒரு நொடி ஆடிப் போனான் நிரஞ்சன்.தன் சுயநலத்திற்காக பழகி அவனை ஏமாற்றும் மனிதர்களை மட்டும் சந்தித்தவனின் வாழ்க்கையில் இன்று எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னைத் தானே வலியச் சென்று காயப்படுத்தியவளைக் கண்டு அவன் உள்ளம் சற்று விக்கித்து தான் போனது.
சிறு விஷயத்தில் கூட மற்றவர்களை காயப்படுத்திப் பார்க்காத விரும்பாத பெண்ணவள் அவன் மனதில் இன்னும் இன்னுமாய் ஆழமாய் பதிந்தாள்.
அந்த அலமாரியின் கனத்தை தாங்க முடியாமல் மூச்சு விட முடியாமல் அப்படியே மயங்கிப் போனாள் சிற்பி.ஏதோ விழுந்த சத்தம் கேட்டு அருகில் அறையினுள் இருந்த பார்த்தி ஓடிவந்து பார்த்தான்.இங்கே இவர்கள் இருந்த நிலைமையைக் கண்டவன் காந்தனை அழைத்தான்.
மூவருமாய் வந்து அலமாரியை நகர்த்தி சிற்பியின் மேலிருந்த புத்தகங்களை எடுக்க காந்தன் சிற்பியை நிமிர்த்த நிரஞ்சன் தன்னை சுதாகரித்துக் கொண்டு உடனே அவளருகில் உட்கார்ந்து கொண்டவன் சிற்பியை தன் மடியினில் படுக்க வைத்து கன்னங்களை தட்டி “சிற்பி சிற்பி” என்று பதறியபடியே அழைத்தான்.
மூவரும் புரியாமல் நின்றனர். நிரஞ்சன் “சஹா கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா” என்றதும் சஹா தண்ணீர் கொடுக்கவும் அதை முகத்தில் தெளித்தான்.அவளிடம் லேசாக அசைவு இருந்தது.ஆனால் வலியினால் கண்களை திறக்காமல் இருந்தாள்.
காந்தனிடம் “காந்தா நம்ம டாக்டர்கிட்ட போன் போட்டு உடனே வரச் சொல்லு” என்றான்.
காந்தன் மருத்துவரை கைப்பேசியில் அழைக்கச் சென்றான்.பார்த்தி “நிரஞ்சா அவளை நான் பார்த்துகிறேன்” என்றதற்கு “வேண்டாம் அவளை நானே படுக்க வைக்கிறேன்” என்று அவளை தரையில் கிடத்தி விட்டு எழுந்து சிற்பியை தூக்கி தன் படுக்கையில் படுக்க வைத்தான்.
அவனின் இந்த அக்கறையான செயல்பாட்டில் சஹாவும், பார்த்தியும் நம்ப முடியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.காந்தன் மருத்துவரிடம் பேசிவிட்டு உள்ளே வர நிரஞ்சன் சிற்பியை ஒரு பக்கமாக படுக்க வைத்து முதுகை நீவி விட்டான்.
அவனின் செயலில் காந்தனும் ஒரு நிமிடம் நம்ப முடியாமல் நின்றான்.
நிரஞ்சனின் இந்த ஒரு நொடி மாற்றம் எப்படி நடக்கும்? என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சிற்பி வலியில் முணங்கிக் கொண்டிருந்தாள்.
நிரஞ்சன் “சிற்பி வலிக்குதா? எங்கே வலிக்குது பதில் சொல்லு” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.அவளோ “ம்ம்…” என்று முணங்கலைத் தவிர வேறொன்றுமில்லை.
பார்த்தியைப் பார்த்து “வெந்நீர் போட்டு எடுத்து வா ஓத்தடம் கொடுத்து பார்க்கலாம் எங்கேயாவது பிடிப்பு இருந்தால் கேட்கும்” என்றான்.பார்த்தியும் சரியென்று சமையலறைக்கு ஓடினான்.
சஹாவைப் பார்த்து “எதுக்காக சிற்பி என் அறைக்கு வந்தாள்?”
“அ…து” என்று சஹா திணற வாசலில் நின்ற காந்தனைப் பார்த்து “எதுக்குடா இங்கே வந்தாள்? அலமாரி கால்பக்கம் கொஞ்சம் சாய்வா இருந்துச்சு அதனாலத் தான் யாரும் அறைக்கு வர வேண்டாம்னு நினைச்சு தான் நேத்து சஹா வந்ததற்கு சத்தம் போட்டேன் கடைசில பாரு என்னாச்சுன்னு?” என்று கோபமும் ஆற்றாமையோடு கேட்டான்.
“எனக்கு தெரியாதுடா நான் தான் ரிதம் எழுதி வைச்ச நோட்டை எடுத்துட்டு வரச் சொன்னேன்” என்றான்.
பார்த்தியும் வெந்நீர் எடுத்து வந்ததும் “நான் பாத்ரூம்ல இருந்து வெளியே வரும் போது சிற்பி இந்த அலமாரியை பிடிச்சு பேலஸ் செய்துட்டு இருக்கும் போது நானும் வந்து பிடிச்சேன்டா அப்பவே அவ நகர்ந்து போய் இருக்கலாம் செய்யலை செஞ்சு இருந்தால் எனக்குத் தான் இந்த அடி விழுந்திருக்கும் ஆனா என்னை அந்த இடத்திலிருந்து தள்ளி விட்டுட்டா” என்று கவலையோடு தன்னிலை விளக்கம் அளித்தான்.
‘அதனால் தான் அக்கறையா பார்க்கிறானோ?’ என்று மூவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.அவனோ வெந்நீரை அவள் முதுகில் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே தலையையும் வருடிக் கொண்டே “சிற்பி… சிற்பி…” என்று மட்டும் அழைத்தான்.
அவனின் இந்த அக்கறையான கவனிப்பை மயக்கத்திலேயே உணர்ந்துக் கொண்டிருந்தாள் சிற்பி.சிறிது நேரத்தில் மருத்துவர் சிற்பியின் முதுகைப் பார்த்தவர் அந்த இடம் வீங்கிப்போய் இருந்தது.
வலி தெரியாமல் இருக்க ஒரு ஊசி போட்டு விட்டுச் சென்றவர் சில மருந்துகளையும் எழுதிக் கொடுத்தவர் இரண்டு நாட்களுக்கு அசையாமல் ஓய்வு எடுத்தால் தான் சரியாகும் என்று கூடுதல் தகவலையும் சொல்லி விட்டுச் சென்றார்.
நிரஞ்சன் சிற்பிக்கு அருகிலேயே இருந்துக் கொண்டான்.காந்தனிடம் “சிற்பி எங்கே தங்கி இருக்கான்னு சொல்லி இருக்காளா?”
அவனோ இல்லை என்று தலையசைத்தான்.சஹா,
பார்த்தியிடமும் விசாரிக்க அவர்களும் தெரியாது என்றனர்.
நிரஞ்சன் கோபமாய் “இத்தனை நாளா பழகுறீங்க அவ இங்கே வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது அவளைப் பத்தி விசாரிச்சு இருக்கலாம்ல பாருங்க இப்போ யாருகிட்ட சொல்லனும்னு கூட தெரியலை இங்கே நம்மக்கூட தங்க வைக்கலாம் தான் ஆனால் அதனால எந்த பிரச்சினையும் எதுவும் வந்துடக் கூடாதுல்ல” என்று அக்கறையாகக் கேட்டான்.
மூவரும் அமைதியாக இருந்தனர்.காந்தன் “அவ போன்ல இருந்து கால் வந்தால் நாம விஷயத்தைச் சொல்லி அவங்களை இங்கே வரச் சொல்லலாம்” என்றான்.
“ம்ம்… இதுவும் நல்ல யோசனை தான் அப்படியே செய்யலாம்” என்றான்.சிற்பி ஊசிப் போட்டதால் மருந்தின் உதவியால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.நேரம் நற்பகலை கடந்திருந்தது.
சஹா “நிரஞ்சா சா…சாப்பிடலாம் வா”
“எனக்கு ஒன்னும் வேண்டாம் நீங்க எல்லோரும் சாப்பிடுங்க”
பார்த்தி “காலைல இருந்து ஒன்னும் சாப்பிடலையே நிரஞ்சா”
“பசியில்லை பார்த்தி ஒரு கிளாஸ் ஜீஸ் எடுத்து வைச்சிட்டு நீங்க எல்லோரும் சாப்பிட போங்க நாளைக்கு ப்ராக்டீஸ் வைச்சுக்கலாம்” என்றான்.
நிரஞ்சனை அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.
மாலை வேளையில் மெதுவாக கண்களை திறந்தவள் ஓரளவு நடந்தது நினைவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர எழுந்துக் கொள்ள முயற்சிக்கும் போது நிரஞ்சன் “சிற்பி முழிச்சிட்டியா? எழுந்திருக்க டிரை பண்ணாதே முதுகில் நல்லா அடிப்பட்டு இருக்கு” என்று அவளை ஆதரவாய் பிடித்துக் கொண்டு சொன்னான்.
சிற்பி தன்னை அசைக்கும் போது தான் வலியை உணர்ந்தாள்.கொஞ்சம் தயக்கத்தோடு மெதுவாக “தண்ணீர் வேணும்” என்று சொல்லும் போது அவளுக்கு பழச்சாற்றை கொண்டு வந்து அருகில் இரண்டு தலையணைகளை நிற்க வைத்து அதில் அவளை மெதுவாக எழுந்து உட்கார உதவியவன் பழச்சாற்றை அவளுக்கு ஊட்டி விட வாய்க்கு அருகில் கொண்டு வரவும் சிற்பி “கொடுங்க நானே குடிச்சிக்கிறேன்”
நிரஞ்சன் “உன்னால தூக்க முடியாது சிற்பி”என்று அவள் கையில் கொடுக்காமல் அவனே தன் கையால் அவளுக்கு பருகக் கொடுத்தான்.அவனின் அக்கறையான செயலை வியந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பழச்சாற்றை பாதிக்கு மேல் அருந்த முடியாமல் “போதும் சார் என்னால குடிக்க முடியலை” என்று வலியை தாங்க முடியாமல் முணங்கிக் கொண்டே சொன்னாள்.அவளைப் பார்த்து நிரஞ்சன் இன்னும் கவலையடைந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
+1
⬅ Prev Episode
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -18
Next Episode ➡
உதிராத மலராய் நானிருப்பேன் அத்தியாயம் -20
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்ல பொண்ணுங்களும் இருக்காங்க அப்படின்னு நிரஞ்சன் புரிஞ்சுகிட்டான் … அடுத்து என்ன காதல் தான் …
அருமையான பதிவு 👏