
இப்படியே ரெண்டு நாட்கள் கழிய, அந்த இடைப்பட்ட நாட்களில் வயக்காட்டிற்கு வரும் போதெல்லாம் பெண்ணவளின் தரிசனம் காண ஆடவனின் மனது ஏங்கும், சில நேரம் கண்டால் தள்ளி நின்று பார்ப்பது இல்லையெனில் சிரித்துவிட்டு அவளை கடந்து விடுவான்.
அன்று வழக்கம் போல் காலை வயக்காட்டிற்கு செல்ல எத்தனித்தவன் பெற்றோர்கள் எங்கோ சோகமாக செல்வதை உணர்ந்த “என்ன அப்பா இவ்வளவு சீக்கிரம் எங்க” என்க,
குரலை செருமிய, அவனின் தந்தை “என் தங்கச்சி வீட்டுக்கு” என்றவருக்கு குரல் சோகமாக ஒலித்தது.
“ஓ தங்கச்சி பாசம் சடனா வருது போலவே”
“எப்போவுமே இருக்கும்.. ஆனா வெளிக்காட்டிக்கல அதுக்காக இப்போவும் போகாம இருந்தா.. என் தங்கச்சிய இனி பாக்கவே முடியாது” என்றதில் அதிர்ந்தவன் “அப்பா அத்தை” என்று கேட்க முடியாமல் திணற,
மகன் கூறியதற்கு ஆமென்று தலையாட்டியவர் “நீயும் வா” என்று அவனையும் அழைத்து கொண்டு குடும்பமாக சென்றார்கள்.
***
தன் பெற்றோருடன் சித்திராவின் வீட்டியில் காலை வைத்தவனுக்கோ அவளின் முகம் வந்து சென்று நடுக்கம் கொடுக்க, உள்ளே அழ கூடயில்லாமல் பொம்மை போல் அமர்ந்திருந்த பெண்ணவளை கண்டு ஆடவனின் மனம் பிசைந்தது, அதிலும் ஒரு வாரம் முன் தன்னிடம் சிட்டாக துள்ளி குதித்து விளையாடியவள்,
இன்று உயிற்ற நிலையில் அமர்ந்திருப்பதை கண்டு பெண்ணவளை தனக்குள் அடை காக்க கூறும் மனதை கைகளை மடக்கி அடக்கி நின்றான்.
பின் அனைத்து சம்பிராதாயம் முடிந்து அவளின் அன்னையின் உடல் எடுத்து செல்லும் போது கூட பெண்ணவள் உணர்வுகளே இல்லாத போல் அமர்ந்திருந்தாள்.
இப்படியே அன்னையின் இறப்பு நிகழ்ந்து ஒரு வாரம் கடந்திருக்க, ஆடவனுக்கு தான் அவளை பார்க்க ஒவ்வொரு அணுவும் துடித்தது,
இருப்பினும் தான் சென்று பார்ப்பது சரியாக இருக்காது என்று ஒரு வாரம் ஓட்டியவனுக்கு அதற்கு மேல் முடியாமல் போக தந்தையிடம் வந்து அப்பா நம்ம போய் தேவி பாத்துட்டு வரலாமா” என்றவனின் ஏக்கம் தந்தையான அவனின் வயதை கடந்து வந்த, அந்த மனிதருக்கு புரியவே செய்ய மனைவி மகனுடன் பார்க்க கிளம்பி விட்டார்.
ஆனால், அங்கோ அவளின் வீட்டியில் கலவரமாக இருந்தது சித்திராவின் சித்தி ஈஸ்வரி தான் கத்தி கொண்டிருந்தார்.
ஆனால், பெண்ணவள் அவரை பெரிதாக கூட மதிக்காமல், அன்னை இழப்பில் எப்படி இருந்தாளோ அப்படியே அமர்ந்திருக்க, அதில் கடுப்பாகி பெண்ணவளின் முடியை கொத்தாக பிடித்து “நான் பேசிட்டே இருக்கேன் அப்படி என்னடி எகாத்தாளம் உனக்கு.. திமிர எடுத்து உக்காந்து இருக்க” என்று கீழே தள்ளி விட,
அவளை விழாமல் ஒரு கரம் பிடித்து பாதுக்காத்தது.
தன்னை யார் பிடித்திருக்கிறது என்று தொடுகையிலே கண்டுபிடித்தவள் ருத்ரனை சலனமற்று பார்த்துவிட்டு விலகி நிற்க, ருத்ரனுக்கோ அவளை தள்ளிவிட்டவர் மீது கோவம் எழுந்து கைகள் முறுக்கேற, தந்தை பேசட்டமென்று அமைதி காத்து நின்றான்.
மகனை பார்த்த அவனின் தந்தை ஈஸ்வரிடம் “என்னமா நீ வயசு பிள்ளைக்கிட்ட இப்படியா நடந்துப்ப”
“பின்ன என்ன பண்ண சொல்லுறீங்க.. சொன்ன பேச்ச கேட்காம உசுர வாங்குற.. ஆமா, இத்தன நாள் தங்கச்சி மேல இல்லாத பாசம்.. இப்போ யாருமே இல்லாத அனாதை பிள்ளை மேல வருதோ” என்றதில் கடுப்பான ருத்ரன் “என்ன பேசிட்டு இருக்கீங்க.. அவ அம்மா செத்து போய் ஒரு வாரம் தான் ஆகுது.. அதுக்குள்ள உங்க வீட்டு பொண்ணு உங்களுக்கே வேண்டாதவளா போயிட்டாளா”
“யாருக்கு யாரு வீடு கேட்குது.. அவ அனாதை கழுத என் ஓரகத்தி அதான் உன் அத்தை குழந்தை இல்லாம இவள தத்தெடுத்துக்கிட்டாங்க.. இப்போ இவள எங்க தலைல கட்டிட்டு அவ போய் சேந்துட்டா.. சரி இத்தன நாள் கூடவே இருந்துட்டாளே ஒரு கல்யாணத்த பண்ணி அனுப்பி வைக்க நினைச்சா.. செத்தவ போல உக்காந்து என்னோட உசுர வாங்குறா” என்க,
அவர் கூறியதை கேட்டு அதிர்ந்த ருத்ரன், தேவியின் நிலையை நினைத்து மனது பிசைய, அவர் திருமணம் என்று கூறியதும் சறுக்கிய போல் உணர்ந்த ருத்ரன் “அவ இன்னும் ஸ்கூலே படிச்சி முடிக்கல.. அதுக்குள்ள கல்யாணம் கத்திரிக்காய்ன்னு டார்ச்சர் பண்றீங்க”
“தம்பி நல்ல வசதியான மாப்பிளை.. இவ அனாதைன்னு ஊருக்கே தெரிஞ்சும் கட்டிக்கிறேன் சொன்ன நல்ல மனுஷன்.. அதோட ஒரு முறையில் இவளுக்கு அத்தான் முறை தான்.. இவ விருப்பட்டா கல்யாணம் முடிச்சி கூட இவள நல்லா படிக்க வைப்பார்” என்றதும் புருவம் உயர்த்திய ருத்ரன்
“சரி மாப்பிளை யாரு” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே “நான் உள்ள வரலாமா” என்று சத்தம் கேட்டு அவரின் புறம் பார்வையை பதித்த ஈஸ்வரி “அடடே வாங்க.. உங்கள பத்தி பேசிட்டு இருந்தோம்” என்க,
பார்ப்பதற்கு 35 வயது அல்லது, அதற்கு மேல் ஒத்திருக்கும் தோற்றம் கொண்ட தர்மலிங்கத்தை ருத்ரன் பார்த்து கொண்டிருக்க, அவனோ ருத்ரனை பார்வையால் அளந்து “யாரு இவங்க”
“சித்திரா அம்மாவோட அண்ணன் தான் அவரு.. இது அவரு பையன்” என்று அறிமுகப்படுத்தி வைத்துவிட்டு, அவர்களிடம் “நான் சொன்ன மாப்பிளை இவர் தான்” என்றதில் இருவரும் அதிர,
ருத்ரனின் தந்தை “என்னமா சொல்லுற இவர் ஏற்கனவே கல்யாணமானவர் அவர் பொண்டாட்டி கூட செத்து போச்சு.. அந்த பொண்ண கொடுமைப்படுத்தி கொன்ன பாவியே இவன் தான்.. அவனுக்கு போய் அந்த பிள்ளைய கட்டி கொடுக்க நினைக்கிற மனசாட்சி இல்ல உனக்கு.. உன் பிள்ளைன்னா கட்டி கொடுப்பியா”
“ஏங்க உங்களோட பெரிய ரோதனையா இருக்கு.. அவ அனாதை குலகோத்திரம் என்னன்னு கூட தெரியல.. இவள யார் கட்டிப்பான்னு நினைக்கிறீங்க.. அதுசரி இத்தன நாள் வராம இன்னைக்கு வந்து எதுக்குயா என்னோட கழுத்த அறுக்குறீங்க” என்க,
பொறுமையை இழுத்து பிடித்த ருத்ரன் “இங்க பாருங்க தேவிக்கு பிடிக்காம கல்யாணம் பண்றது தப்பு அவ படிச்சி முடிக்கட்டும்.. அப்படியே உங்களுக்கு கஷ்டமாயிருந்தா சொல்லுங்க.. நாங்க அவள அழைச்சு போய் பாத்துக்குறோம்” என்றவனின் பார்வை பெற்றோர் இருவரிடம் சம்மதம் வேண்ட, அவர்களும் பார்வையால் சம்மதிக்க, தன்னை புரிந்து கொண்ட பெற்றோரை நினைத்து ஆடவனுக்கு கர்வமாக இருந்தது.
இவனின் பதிலில் காயந்த ஈஸ்வரி “இத்தன நாள் எங்க போயிருந்தீங்க.. இப்போ மட்டும் அக்கறை மயிரு பொத்துக்கிட்டு வருதோ” என்றதுக்கு ருத்ரன் தந்தை “இங்க பாருமா மரியாதையா பேசு என்ன தான் எனக்கும் என் தங்கச்சிக்குள்ள கருத்து வேறுபாடு இருந்தாலும் தேவிக்கிட்ட அத எப்போவுமே காட்ட மாட்டேன்.. அவ பாசமா மாமான்னு என் வீட்டுக்கு வரும் போது என் பொண்ணு மாதிரி பாத்துகிட்டன்.. அது அவளுக்கும் தெரியும் உனக்கும் தெரியும்.. இனி எதுக்கு அவ இங்க இருக்கணும் நான் கூட்டிட்டு போறேன்”
“தேவையில்லாம தலையிடாதீங்க.. இந்த வீட்டு விட்டு போகனும்ன்னா அவ கழுத்துல தாலி ஏறினா அனுப்பி வைப்பேன்.. அதுவும் கட்டின புருஷன் கூட மட்டும்.. இன்னும் அசிங்கமே இல்லாம நின்னுட்டு இருந்தீங்க.. மரியாதை அவ்வளவு தான்” என்று வாசலை நோக்கி கைக்காட்ட,
அவரை முறைத்த ருத்ரன் பெண்ணவளின் கைபற்றி இழுத்து சென்று, அவளின் அன்னை படத்திற்கு முன் வந்தவன் நொடியும் தமாதிக்காது புகைப்படத்திற்கு அருகேயிருந்த அன்னையின் தாலியை கழுத்தில் போட்டுவிட்டவன், தனக்கானவள் என்ற உரிமையில் அங்கிருந்த குங்குமத்தை எடுத்து உச்சில் வைத்தான்.
பின் ஈஸ்வரின் அருகே வந்து “இவ என் பொண்டாட்டி இப்ப.. சோ இனி உங்க பெர்மிஷன் இல்லாம நான் அவள கூட்டிட்டு போகலாம்.. அண்ட் இனி அவள அனாதைன்னு சொன்னா அடுத்தமுறை பாத்துட்டு இருக்க மாட்டேன் பல்லு தெரிச்சிடும்.. முக்கியமான விஷயம் இவ என் அத்தை பொண்ணு தான்.. யார் கேட்டாலும் முறைபையனுக்கு தான் கட்டி கொடுத்துருக்கோம் சொல்லுங்க” என்றான்.
அவன் தன்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறான் என்று சொன்னதிலே அதிர்ந்த சித்திரா, அவன் இழுத்து போய் தாலி கட்டவும் மேலும் அதிர்ந்து அவனையே இமைக்காமல் பார்த்திருக்க,
அவளின் புறம் பார்வையை திருப்பிய ருத்ரன் “இன்னும் என்னடி.. என் மூஞ்சுல படம் பாத்துட்டு இருக்க போய் உன்னோட பொருள் எடுத்துட்டு வா.. உன் அம்மா வேலைக்கு போன காசுல வாங்கினது மட்டும் எடுத்து வா” என்க, அவனிடம் வசியத்தில் விழுந்தது போல் தனக்கானதை எடுத்து வர சென்று விட்டாள்.
தான் கட்டிக் கொள்ளயிருந்த பெண்ணின் கழுத்தில் ஆடவன் தாலி கட்டியது தர்மலிங்கத்திற்கு கோவத்தை கிளப்ப,
அவனின் சட்டை கொத்தாக பற்றி “யாருடா நீ நான் கட்டிக்கயிருந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிருக்க.. ஒழுங்கு மரியாதையா அது அறுத்து எரிஞ்சிட்டு உன் சோலிய பாத்துட்டு போ அதான் உனக்கு நல்லது..” என்றவனின் கன்னத்திலே அறைந்த ருத்ரன் “உன்ன நம்பி கல்யாணம் பண்ணி வந்த.. உன் பொண்டாட்டிய கூட வச்சி வாழ வக்கில்லாத நாய்.. உனக்கு என் தேவி கேக்குதா மரியாதையா ஓடி போயிடு.. இல்லன்னா அடிச்சி கரிகட்டையா தொங்க விட்ருவேன்”
“தாலி கட்டிட்டா பொண்டாட்டியாயிடுவாளா.. அவள எப்படி தூக்கணும்ன்னு எனக்கு தெரியும்”
“என்ன தாண்டி போய் நீ உசுரோட இருந்தா தூக்கிக்க..” என்றதும் அங்கிருந்து கடுகடுத்து வெளியே சென்றான் தர்மலிங்கம்.
அதன் பின் தன்னுடைய உடைமையுடன் அவனருகில் வந்து நின்ற சித்திராவை தடுத்த ஈஸ்வரி “ஏய் அவன் உனக்கு பிடிக்காம தாலி கட்டிருக்கான்.. நீ பாட்டுக்கு பொட்டி தூக்கிட்டு போற அசிங்கமா இல்ல” என்றதை கேட்டு “ஏய்..” என்று அவரை தடுத்த ருத்ரன் “தெரியாம தாலி கட்டினேன் சொல்லுங்க.. பிடிக்காமலாம் கட்டல” என்று சித்திராவை பார்த்து கண்ணடித்த ருத்ரன் “என்னடி சிட்டு மாமன பிடிக்கும் தான” என்க,
அவனின் அதிரடியை நம்பவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறிய சித்திராவிற்கோ, தன்னை காக்க எண்ணி தான் தாலி கட்டிருப்பானோ என்று தடுமாற்றத்தில் அவன் கேட்ட கேள்விக்கு நாலா புறம் தலையை ஆட்டி வைக்க,
அதில் சிரித்த ருத்ரன் “ஒரு பக்கமா ஆட்டுடி” என்றதில் தன்னை நொந்த பெண்ணவள் எதிரே நின்றிருந்த ஈஸ்வரிடம் “சித்தி கழுத்துல தாலி ஏறியும் உன்கூடவே இருந்தா இந்த உலகம் நம்ம குடும்பத்த தப்பா பேசும்.. என் புகுந்த வீடு பக்கத்துல பாக்கணும்ன்னு தோணுச்சுன்னா வந்து பாத்துட்டு போ.. உனக்கு தோணாது இருந்தாலும் சொல்லுறது சொல்லிட்டேன்” என்றவள் கல்யாணத்தில் சமதம் என்பதை மறை முகமாக கூறியிருந்தாள்.
அதில் ருத்ரனின் பெற்றோர்கள் அவளை மெச்சும் பார்வை பார்க்க, ரேயனோ பதிலை நேரடியாக சொல்ல முடியாதோ என்பது போல் முறைத்து வைத்தான்.
அதை கண்டுகொள்ளாமல் அருகிலிருந்த மாமனர் மாமியார் இருவரின் கைப்பிடித்து பவ்யமாக அழைத்து கொண்டு முன்னே செல்ல, அங்கிருந்த அவளின் சித்தியை பார்வையால் எச்சரித்துவிட்டு தான் வந்தான்.
பின் அனைவரும் வீட்டிற்கு வந்திறங்க, ருத்ரனின் அன்னை புதுமண தம்பதிகளுக்கு ஆரதி எடுத்து வரவேற்க, திருமணம் முடிந்ததால் செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்து முடிக்கவும், அவளை கூட்டிட்டு கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைய, பெண்ணவளின் உடலோ முதல் தடவை கணவனின் அறைக்குள் அவனுடன் வந்ததில் சிலிர்த்தது.
***
இரவு போல் அவர்களுடன் இணைந்து சாப்பிட்டு முடித்து அறைக்குள் வந்தவள், படுக்கையில் அமர்ந்தப்படியே எதிரேயிருந்த கண்ணாடியில் தெரிந்த, தன் நெற்றில் அவனிட்ட அடையாளத்தில் இன்று கூடுதல் அழாகவே தெரிய, கழுத்தில் கிடந்த அன்னையின் தாலியை பார்த்தவளின் கண்களில் என்ன உணர்ச்சி என்றே கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது உள்ளே நுழைந்த ருத்ரனக்கு அவளின் நிலையில் தான் பெண்ணவள் அன்னை இறப்பிலிருந்து, இன்று வரை அவளின் கண்களில் கண்ணீர் வரவில்லை என்பதை உணர்ந்து கண்ணீரை கொண்டு வருவதே கணவனின் முதல் பணியாகி போக, மெல்ல அவளின் அருகில் அமர்ந்து “உனக்கு எப்போ தெரியும்” என்று கேட்க,
அதில் ஆடவனின் விழிகளை நோக்கி “அம்மா சாகுறதுக்கு முந்தின நாள் தான் தெரியும்* என்று கண்களை மூடி திறந்த சித்திராவிற்கு அன்னையின் இறப்பிற்கு முன்தினம் நிகழ்ந்த நிகழ்வே கண்முன் வந்து சென்றது.
அவளின் சித்திக்கு சித்திராவின் மீது ஆரம்பத்திருந்து பிடித்தமில்லாமல் போக, முதலில் வருந்திய சித்திராவும் அவரின் வசவுகளை நாட்கள் செல்ல செல்ல பழகி கொண்டாள். அதோடு தந்தையை இழந்து தனியாக வளத்த அன்னைக்காக மற்றவர்கள் காயம் கொடுத்தாலும் பொறுத்து கொள்வாள்.
அவளின் அன்னையின் இறப்பிற்கு முந்தைய தினம் இரவு வழக்கம் போல் அவரின் மனம் நிறையும் வரை வசவு பாட தொடங்கியிருக்க, சித்திராவோ அங்கிருக்க பிடிக்காமல், அவர் தொடங்கவும் வாடிக்கை போல் அறைக்குள் நுழைபவள்,
பத்து நிமிடம் கழிந்தே வெளியை வருவாள் அப்படி தான் இப்போது வெளியே வந்தவள் அவர் அன்னையிடன் பேசுவதை கண்டு அதிர்ந்து நின்றாள்.
சித்திரா உள்ளே சென்றதை உறுதிப்படுத்தி கொண்ட, அவளின் சித்தி மெல்ல தன்னுடைய காரியத்தை சாதிக்க நினைத்து “அக்கா அதான் சித்திராவுக்கு இப்போ 18 ஆயிடுச்சு தான.. காலங்கத்துல கல்யாணத்த பண்ணி அனுப்பி வைக்க வேண்டாமா” என்றவரின் நோக்கம் புரிந்து,
சித்திரா அன்னை “உன் நோக்கம் என்னன்னு எனக்கு தெரியும்.. என்னால என் பொண்ணு வாழ்க்கை கெட்டு போக கூடாது.. அவ நல்லா படிச்சு வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கவும் தான் அவளுக்கு பிடிச்சவன் கூட கல்யாணம் நடக்கும்.. நீ நினைக்கிற மாதிரி ஒருநாளும் அந்த தர்மலிங்கம் கையில என் பொண்ணு வாழ்க்க சிதைய அனுமதிக்க மாட்டேன்” என்று உறுதியாக கூற,
அதில் கடுப்பானவர் “ஆமா பொல்லாத பொண்ணு அனாதை கழுதை தான.. அவள தவிர இந்த உண்மை ஊருக்கே தெரியும்.. அப்படியிருந்தும் எவன் அவள கட்டிக்க வருவான் நம்புற..
ஏதோ தர்மலிங்கம் அய்யாவுக்கு அவள பிடிக்க போய் அவ குலம் கோத்திரம் தெரியலனாலும் பெருசு பண்ணாம பெருந்தன்மையா கட்டிக்க சமதிச்சிருக்கார்.. அத யூஸ் பண்ணிட்டு அவள கரை சேத்து விடாம நீயும் அனாதைய மடியில வச்சி கொஞ்சிட்டு இருக்க.. முதல அவ உன்னோட வயித்துல பிறந்த பிள்ளை இல்லயே எதுக்கு தேவையில்லாம மடியில சுமக்குற அக்கா.. அவருக்கு கட்டி கொடுத்தா அந்த அனாதை ராணி மாதிரி வாழுவா..” என்றவர் வார்த்தைக்கு வார்த்தை பெண்ணவள் அனாதை என்பதை சுட்டி காட்டிருக்க,
அந்த சுட்டும் சொல்லில் வேதனையடைந்த மனதை அடக்கி கொண்டிருந்தவரின் கண்ணில் உண்மையை கேட்டு மகள் நிற்பதை கண்டு துடித்து விட்டார்.
இதிலும் அவளிடம் இத்தனை வருடம் கட்டி காத்த உண்மை வெளியே வந்ததில் மேலும் உடைந்த அவளின் அன்னை பதறி மகளை அறைக்குள் இழுத்து சென்றார்.
****
சித்திரா அறைக்குள் வந்து அரைமணி நேரமாகியும் அதிர்ச்சியிருந்து மீளாமல் சிலையென அமர்ந்திருப்பதில் அவளை இழுத்து தன் மடியில் போட்டு தடவி கொடுக்க, மடியில் தலை வைத்த அடுத்த கணம் “அம்மா நான் அனாதையா” என்ற சித்திராவின் உடல் அழுகையில் குலுங்க தொடங்கியது.
அதில் தாயுள்ளம் பதறி “என்னடி பேசுற நான் உன்ன என் கருல சும்மக்கல தான் ஆனா ஒருநாளும் அப்படி நினைச்சது இல்லடி.. ஒருவேளை நான் உன்ன பெத்த அம்மாயில்லன்னு தெரிஞ்சதும் உனக்கு அருவெறுப்பா தோணுதோ” என்றதும் படுக்கென்று எழுந்தவள் “அம்மா என்ன பேசுற” என்று அதிர,
“பின்ன எப்படிடி நீயும் எல்லாரும் போல அனாதன்னு சொல்லுற.. அப்போ நான் உனக்கு அம்மா போல இப்போ தெரியல தான” என்றதை கேட்டு அன்னையை தாவி அணைத்து கொண்டு அழுக,
பெண்ணவளின் தலையை வருடியவர் “உனக்கு அம்மா நான் இருக்கேன்.. இந்த நிமிஷம் நான் தத்தெடுத்த உண்மை மறந்துட்டு இதுக்கு முன்னாடி எப்படி என் மக சித்திரா இருந்தாளோ அப்படியிருந்தா அம்மாக்கும் சாந்தோசம் மத்தவங்க பேச்சுக்காக அம்மாவ நீயே கஷ்டப்படுத்தாத தாங்க மாட்டேன்” என்று தன் மகளின் நெற்றியில் முத்தமிட்டு மடியில் போட்டு தாலாட்டி உறங்க வைத்து தன் தூக்கத்தை தொலைத்து விட்டார்.
காலையில் கண்விழித்த சித்திரா அமர்ந்திருந்தப்படி உறங்கும் அன்னையை சரியாக படுக்க வைக்க எண்ணி இழுத்திருக்க அவரின் தலையோ தொங்கி விட, அதில் சற்று பயந்தவள் “அம்மா” என்று உலுக்கி பார்த்தும் எந்த பயன் இல்லாமல் போக ‘எனக்காக இருந்த நீயும் போயிட்டியா’ என்று உள்ளம் வெந்தும்பிய சித்திராவின் முகம் அழுகை உணர்வுகளை காட்ட மறுந்து இறுகியது.
அந்த இறுக்கமே அன்னையின் இழைப்பின் வலியாகி போக, பெற்ற மகளின் இறப்பை அறிந்து பதறி துடித்து ஓடி வந்தார் பட்டம்மாள், அதன் பின் அவளுக்கு ஆதரவாக அங்கேயே இருந்திருந்தார்.
ருத்ரன் வருவதற்கு சிறிது நேரம் முன்பு தான், அருகில் இருந்த பூங்காவிற்கு நடை பயணம் சென்றிருந்ததால் அவருக்கு தெரியாமல் போனது என்று கணவனுக்கு நடந்ததை சொல்லி முடித்தாள். ஆனால் அப்போது கூட பெண்ணவளின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.
ஆனாலும், அவளின் உணர்வுகள் புரிந்து தன் தோலோடு பெண்ணவளை சாய்த்து அணைத்திருக்க, சித்திராவோ தன் சந்தேகத்தை கேட்டு விட எண்ணி “ருத்ரேஷ் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா” என்றவளின் அழைப்பு புதிதாக இருந்ததில் புருவம் சுருக்கி பார்த்தவன் “கேளு”
“இல்ல.. என்ன அங்கிருந்து காப்பாத்த தான் தாலி கட்டினீங்களா”
“பாத்தா அப்படியா இருக்கு” என்று தங்களின் நெருக்கத்தை காட்டிக் கேட்க,
“இல்ல.. இது நான் ஃபீல் பண்றேன் சமாதானம் பண்ண தான” என்றவளுக்கு தயக்கமாகி விட,
அவள் என்ன நினைத்து இப்படி கேட்கிறாள் என்பதை புரிந்த ருத்ரன் “சரி அப்போ நீயும் அந்த தர்மாலிங்கத்துக்கிட்ட இருந்து தப்பிக்க தாலி கட்டியும் அமைதியா இருந்தியா” என்றதில் அதிர்ந்தவள் “நான் எப்போ அப்படி சொன்னேன்”
“அதை போல நானும் சொல்லலையே”
“ம்ம்.. அப்போ என்ன பிடிச்சி தான் கட்டிக்கிட்டீங்களா”
“ஊருக்கு வந்ததும் உன்ன பாத்துமே உன் சுட்டி தனத்துல விழுந்துட்டன் ஆனாலும் ஸ்கூல் படிக்கிற பொண்ணுன்னு ஒரு தயக்கம்.. அதுவும் உன் அம்மா இறப்புல நீ இருந்த நிலை எனக்கு ரொம்ப வலிச்சுது..
அப்போவே நீ படிச்சி முடிக்கிற வரை வெயிட் பண்ண முடிவு பண்ணிட்டேன்.. உன்ன பாக்க சொல்லி மனசு ஒரு வாரம் தவிச்சுது.. அதான் அப்பா கூட்டிட்டு பாக்க வந்தா உன் சித்தி ரொம்ப பேசிட்டாங்க அதுலயும் உனக்கு கல்யாணம் சொன்னதும் எப்படி என் சிட்டுவ இன்னொருத்தனுக்கு கொடுப்பீங்க கத்தி கேட்க தான் தோணுச்சு.. சோ உன்ன என் வீட்டுக்கு கூட்டிட்டு வரலாம் நினைச்சா ரொம்ப பேசிட்டாங்க அப்போ தான் அத்தை படத்துக்கிட்ட இருந்த தாலி கண்ணுல பட்டுச்சு.. அவங்க அசிர்வாதத்தோட உன் கழுத்துல போட்டேன்..” என்றதை கேட்டு பெண்ணவள், அவனின் காதலை இமைக்க மறந்து ரசிக்க,
அதை கெடுக்கும்படி ஆடவன் “சிட்டு ஆனா உன் விருப்பம் இல்லாம தாலி கட்டிருக்க கூடாது.. அந்நேரம் எனக்கு உன்ன எப்படியாவது என்கூட கூட்டிட்டு வர தான் தோணுச்சு.. அதான் உனக்கு என்ன பிடிக்குமான்னு கூட யோசிக்கல” என்றதில் அவனின் வாயில் அடிப்போட்டு “பிடிக்காம தான் இப்படி உக்கந்திருக்கானா என்ன”
“அப்போ பிடிக்குமா” என்றவனின் கண்கள் ஆர்வம் தொற்றி கொண்டது.
“ரொம்ப.. நான் வயசுக்கு வருர முன்னாடியிருந்தே உங்கள விரும்புறேன்” என்றதில் திகைத்த ருத்ரன் “என்னடி சொல்லுற”
“உனக்கு ஞாபகம் இருக்கா.. என் ஸ்கூல் ப்ரெண்ட் அதான் உன் ப்ரெண்ட் தங்கச்சி.. அவளோட சடங்குக்கு நம்ம போயிருந்தோம் தான அப்போ தான் கிழவிங்களாம்..
அவ கல்யாணத்த பத்தி பேசிட்டு இருக்கும் போது அவள மாமா மகனுக்கு கட்டி கொடுக்க பேசிட்டு இருந்தாங்க.. அவங்க அப்படி சொல்லவும் எனக்கு மாமன் மகன் நீ தான சோ உன் முகம் தான் வந்து போச்சு அப்போவே நீ தான் என்ன கட்டிப்பன்னு தோணுச்சு..
உன் நினைப்பு அடிக்கடி வரும் டைம் கிடைக்கும் போது உன்ன ஒளிஞ்சியிருந்து பாப்பேன் தெரியுமா.. அப்போ உன் அழக பாத்து என் மாமன் எனக்கு தான் கர்வமா சொல்லிப்பேன்.. அப்புறம் நான் வயசுக்கு வந்ததுலிருந்து எப்போவும் உன் நினைப்பு மட்டும் தான்.. இங்க உன்ன நினைச்சி ஒருத்தி உருகுறன்னு கூட தெரியாம நீ பாட்டுக்கு பொட்டிய தூக்கிட்டு படிக்க போயிட்ட..
எனக்கு தான் ஃபீலிங்கா இருக்கும் அதுவும் நீ வீடியோ கால் போடுற டைம் கரெக்ட்டா ஆஜராகி மறைஞ்சு நின்னு பாப்பேன்.. அதோட உனக்கு பிடிச்சத சமைச்சி கொடுக்கவே உன் பெத்தவங்கள அடிக்கடி பேக் அப் பண்ணி அனுப்பி வச்சிருவேன்..” என்றவளின் காதலை கேட்டு வியந்த ஆடவனுக்கு தனக்கே தெரியாமல் ஒருத்தி உருகிருக்கிறாள் என்ற உணர்வில் ஆடவனின் ஜிவ்வென்ற உணர்வு அதிலும் காதலித்ததை விட காதலிக்கப்பட்டதை நினைத்து வெட்கமும் வந்து தொலைக்க, தலை கோதி மறைத்தவன் “அம்மா என்கிட்ட நீ சமச்சத பத்தி சொல்லவே இல்ல”
“நான் தான் சொல்லவேண்டாம் சொன்னேன்” என்றதை கேட்டு புரியாமல் “ஏன்” என்பது போல் பார்க்க,
“அது நான் உங்களுக்கு பொண்டாட்டியானதும் சமைச்சி கொடுப்பேன்ல.. அப்போ நீங்க அந்த டேஸ்ட் எப்படி ஃபீல் பண்றீங்கன்னு கண்ணால பாக்கணும் ஆசை.. இன்னொரு விஷயம் சொல்லவா அன்னைக்கு நீங்க வந்தத தெரிஞ்சி தான் சின்ன பசங்க கூட விளையாடுறது போல உங்க பாத்துட்டு போலாம் ஓடி வந்தேன்.. ஆனா..” என்றவளுக்கு அன்றைய நிகழ்வு கண்முன் வந்து வெட்கத்தில் முகம் சிவந்து விட,
அதை ஆசை தீர ரசித்த ருத்ரன் “ஓ அதான் நான் பிடிக்கவும்.. உன் பின்னால வாண்டுஸ் வந்த வேலை முடிஞ்சதுன்னு ஓடிடுச்சுங்களோ” என்றதும் புன்னகைத்து ஆமென்று தலையாட்டினாள் சித்திரா.
பெண்ணவள் புன்னகைத்தாலும் அதில் தெரியும் வலியை உணர்ந்தவன் “சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லு.. உனக்கு உண்மை தெரிஞ்சி.. நான் மாமன் பையன் இல்ல சோ உன்ன ஏத்துக்க மாட்டேன்னு ஒரு நிமிஷம் கூட நீ நினைக்கலன்னு சொல்லு” என்க,
இத்தனை நேரம் அவனுக்காக இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டு புன்னகையை உதிர்த்து கொண்டிருந்தவளின் முகம், அவன் கூறியதில் வாடி இறுக்கமாக இருக்கும் உணர்வுகள் வெடித்து வெளியே வர துடிக்க,
கட்டுப்படுத்த முடியாமல் மறுகணம் “மாமா” என்று தாவி அணைத்து கொண்டு ஆடவனின் சட்டையை தன் கண்ணீரால் கரைத்தாள்.
அவளுக்குள் புதைந்திருந்த உணர்வுகளை வெளியே கொண்டு வந்ததில் நிம்மதியடைந்த ருத்ரன் அவளுக்கு தட்டி கொடுத்தப்படி தன் மார்பிலே தூங்க வைத்தான்.
****
இரவு விஷயம் கேள்விப்பட்டு மறுநாளே தன்னுடைய பொட்டியுடன் பேத்தியை பார்க்க பட்டம்மாள் வந்து விட, ருத்ரன் மற்றும் அவனின் குடும்பம் அவரையும் குடும்பத்தில் ஒருத்தர் போலவே நடத்த, அதில் பூரித்து போன சித்திராவிற்கு தன் மாமனின் மேல் மேலும் மேலும் காதல் கரைபுரண்டு ஓடியது.
திருமணம் முடிந்து ரெண்டு நாள் விடுப்பிலிருந்த சித்திரா பள்ளிக்கு செல்ல, அப்போது தான் யோசிக்காமல் செய்துவிட்டோமோ என்று நொந்து பையில் புத்தகத்தை அடுக்கி கொண்டிருந்தவள் அருகில் வந்து “சிட்டு தாலிய வேணா ஸ்கூல் போகும் போது கழட்டி வச்சிட்டு போயேன்” என்று தயக்கமாக கூற,
அவன் கூற வருவதை புரிந்து போலியாக முறைத்த சித்திரா “யோவ் மாமா ஸ்கூல் போகும் போது எதாவது பேசி டென்ஷன் பண்ணாத சொல்லிட்டேன்.. இப்போ என்ன தாலி வெளிய தெரிய கூடாது அதான” என்று தாலியை சுடிதாரின் உள் போட்டுவிட்டு அதற்கு மேல் கோர்ட் அணிந்து விட,
அவன் கொடுத்த அடையாளம் அவளின் ஆடைக்குள் பொக்கிஷமாக காக்கப்பட்டு விட, அவனை பார்க்காமல் வெளியே சென்று விட்டாள்.
அவள் தாலியை கழட்டாததில் நெகிழ்ந்த ருத்ரன், பெண்ணவளை தானே பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்ல, அங்கிருந்து சற்று தள்ளி முன்னமே வண்டியை நிறுத்திய ருத்ரன் பெண்ணவளை இறங்க கூற, அவளும் இறங்கி மாமனின் முகத்தை பாராது தூக்கி வைத்து கொண்டாள்.
ஆடவனுக்கு தான் அவளின் பாவனையில் உணர்வுகளை அடக்க அவஸத்தையாகி விடும் இருப்பினும் அதனை ஓரம் ஒதுக்கிவிட்டு “சிட்டு.. உனக்காக தான சொன்னேன் எனக்கு என்ன ஆசையா..”
“பேசாத மாமா.. நீ தான அவசரமா என் கழுத்துல தாலி கட்டின அப்போவே இந்த வெங்காயத்த யோசிக்காம.. இப்போ வந்து தாலி கழட்டி வைன்னு அசால்ட்டா சொல்லுற.. அத கழட்டி கழட்டி போட அது என்ன பாசிமாலை போல தெரியுதா”
“சரி.. இனி இப்படி நடக்காது.. மீ உன் பாவப்பட்ட மாமா தான மன்னிச்சிடலாமே” என்றவனின் பாவனையில் கோவத்தை மறந்து புன்னகைத்த சித்திரா “இனி இப்படி நடக்ககூடாது” என்று பள்ளியை நோக்கி நடந்து சென்றாள்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

