Loading

ஆடைகளின்றி பிறந்த மேனியாய், உடலெங்கும் காயங்களுடன், ரத்தக் கறைகளுடன் இருந்தவளை கைகளில் தாங்கியவன், “குட்டிமா.. என்னைப் பாரு..” பதற்றத்தோடு அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பினான்.

“இனியா..” “ரேவதி..” சரவணன் குரல் கேட்டதும், “சரவணா.. ஒருநிமிஷம் அங்கேயே நில்லு” நண்பனின் குரலில் உள்ள பதட்டத்தைக் கண்டு கொண்டவனின் கால்கள் தன்னிச்சையாக நின்றன.

கீழே அவளைக் கிடத்தியவன், தன் சட்டையைக் கழற்றி அவளுக்கு போட்டபின், அங்கிருந்த ஏதோ பழைய துணியை எடுத்து அவள் இடையிலும் சுற்றி, அவளை அப்படியே தூக்கிக் கொண்டான்.

இனியன் அவளைத் தூக்கிக் கொண்டு வெளியே வர, “என்னாச்சு ரேவதிக்கு..” பதற்றமாய் அருகில் வந்த காவலனுக்கு அவள் நிலையை பார்த்த மாத்திரத்தில் எல்லாம் புரிந்து போனது.

“சரவணா.. வேகமா ஹாஸ்பிடல் போகணும்” ரேவதியைப் பார்த்தவாறு இனியன் சொல்ல, காவேரி ஹாஸ்பிடலுக்கு வாகனம் விரைந்தது.

ரேவதியை பரிசோதித்த டாக்டர், “புரூட்டல் பிசிக்கல் அசால்ட்” நடந்திருக்கு. ஷி ஹேஸ் மல்டிபிள் இன்ஜூரி மார்க்ஸ். கருப்பை ரொம்ப வீக்கா இருக்கு. ட்ரீட்மென்ட் பண்ணியிருக்கோம். அவங்க உடலளவில், மனசளவில் தயாராக இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அதுவரைக்கும் பக்கத்துல யாராவது இருந்துக்கிட்டே இருக்கணும். தனியா விட வேண்டாம். ரெகுலரா ட்ரீட்மென்ட் எடுக்கணும். தேவைப்பட்டா சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங் கூட எடுத்துக்கலாம். டேக் கேர் ஆஃப் ஹெர்” எனச் சொல்லி சென்றபின், அவள் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்று தெரிந்ததால் எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

சரவணன் மீண்டும் அந்த ஃபேக்டரிக்குச் சென்று அங்கிருந்த ரேவதியின் தடயங்களை அழித்து, நடந்த கொலைகளை இரண்டு தாதா கூட்டத்தினருக்கு இடையே நடந்த சண்டையின் தாக்குதலால் நடந்த மரணங்கள் என முதல் அறிக்கை பதிவு செய்திட வைத்தான்.

சட்டத்தின் ஓட்டைகள் சில சமயம் நன்மைக்காக பயன்படட்டுமே. ரேவதியின் பேர் வராமலே அந்த கேசை முடிக்க ஏற்பாடுகளை செய்தான். இனியன் மருமகனாக ஈஸ்வரிக்கு ஈம சடங்குகளை செய்து, அவரது உடலைத் தகனம் செய்தான். ரேவதி இன்னும் மயக்கத்தில் இருப்பதால், அவளால் உடனே வரவும் முடியாது, இதையெல்லாம் பார்க்க முடியாது என்பதால் நாட்களை கடத்தாமல் அவனும், சரவணனும் எல்லா காரியங்களையும் முடித்தனர்.

மயக்கத்தில் இருந்தவளுக்கு புனிதாவும், நர்ஸும் சேர்ந்து உடை மாற்றிவிட, செந்தமிழ் அவளை பார்க்க சென்றாள். எந்த சூழ்நிலையையும் தைரியமாக சமாளிக்கும், தனக்காக எதையும் செய்யும் தன்னுடைய அன்புத்தோழி துவண்ட கொடியாய் வாடித் தளர்ந்திருக்க, அவளைக் காணவியலாமல் அழுதிட, புனிதா செந்தமிழைத் தேற்றினார்.

கண் விழித்த ரேவதி நடந்த அத்தனையும் நினைத்துப் பார்த்தவள், “இன்னும் நான் சாகவில்லையா?” எனக் கதறி அழுதாள். வேகமாக அவளை அணைத்துக் கொண்ட இனியன், “குட்டிமா.. நீ எனக்கு வேணும். எனக்காக நீ என்கூட வாழ்ந்து தான் ஆகணும்” வார்த்தைகளால் மட்டுமல்ல செயல்களாலும் அவளுக்கு ஆறுதலாக இருந்தான். இனி அவர்களுக்கு குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பு குறைவு என டாக்டர் சொல்லிவிட, ரேவதியின் வேதனை இரட்டிப்பாகிப் போனது.

அழுது அழுது ஓய்ந்து போனவளிற்கு தாயாக, தோழனாக, கணவனாக, காதலனாக யாதுமாகி நின்று அவளை அரவணைத்தான் அவளுடைய இனி.

இளமாறனுக்கு அருகில் செந்தமிழும், ரேவதிக்கு அருகில் இனியனும், அமுதினிக்கு அருகில் சரவணனும், தீபாவும் இருந்தனர். சூறாவளியில் சிக்கிய மலர்களைப் போல், சூழ்ச்சியின் வலையில் சிக்கியவர்கள் தங்களது உயிரானவர்களை இழக்காமல் மீட்டனர்.

இழப்புகள் எதுவாயினும் உண்மையான காதலும், அன்பும் அதைச் சரி செய்யும் என்ற நம்பிக்கையிலும், இனி எந்த ஆபத்தும் தங்களுக்கு வராது என்ற தைரியத்திலும் மன நிம்மதியுடன் இருந்தனர்.

சில வருடங்கள் கழித்து….

வடபழனி முருகன் கோவில்.. “பட்டுக்குட்டி வேகமா ஓடாத.. அப்பானால உன்னை பிடிக்க முடியல” தன்னுடைய ஒரு வயது மகன் மித்ரனை இடது தோளில் தாங்கியவாறு.. இன்னொரு கையால் ஒரு காலைத் தாங்கி அவளை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் இளமாறன்.

“அப்பா.. நான் தான் பர்ஸ்ட் வருவேன். நீங்களும் தம்பியும் தோத்து தான் போகப் போறீங்க” மழலை மொழியில் சொல்லியவாறு அவர்களை திருப்பி பார்த்துக் கொண்டே ஓடினாள் அவனுடைய ஐந்து வயது மகள் தென்றல்.

அவனுக்குப் பின்னால், செந்தமிழ் கையில் ஒரு வயதுடைய ஆண் குழந்தையையும், புனிதா ஒரு வயதுடைய பெண் குழந்தையையும் தூக்கி வந்தனர். கூடவே இனியனும் ரேவதியும், சரவணன் குடும்பமும் வந்தனர்.

பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்த இளமாறன், இனியன், சரவணன் மூவரும் ஆளுக்கொரு குழந்தையுடன் அமர்ந்தனர். குழந்தைகளுக்கு அப்போது தான் முடி இறக்கிவிட்டு வந்திருந்தனர். எதிரில் இருந்த ஆசாரிகள் குழந்தைகளுக்கு காது குத்த, குழந்தைகள் வீறிட்டு அழ ஆரம்பித்தன.

சரவணனின் மடியில் இருந்தது இனியன் ரேவதியின் மகள் ரித்திகா, இளமாறன் மடியில் இருந்தது சரவணன் வீட்டு கடைக்குட்டி முகிலன், இனியனின் மடியில் இருந்தது மித்ரன். காது குத்து முடித்ததும், போட்டிருக்கும் புது சட்டை அழுக்கானாலும் பரவாயில்லை என தலையில் சந்தனம் பூசியிருந்த குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டனர் அந்த தாய்மாமன்கள்.

குழந்தைகளோடு சாமியை தரிசனம் செய்து காரில் கிளம்பியவர்கள், ஹோட்டலில் சாப்பிட்ட பின்னர் வீட்டிற்குத் திரும்பினர். கார் இளமாறன் வீட்டு கேட்டைத் தாண்டி உள்ளே செல்ல, அனைவரும் இறங்கினார்கள்.

“வாங்க.. காபி சாப்பிட்டுப் போகலாம்” செந்தமிழ் மற்றவர்களை அழைக்க, “கோவிலுக்கு போய் வாங்கிட்டு வர்ற புண்ணியத்தை அவங்கவங்க வீட்டுக்குத் தான் கொண்டு போகணுமாம். நாங்க எங்க புண்ணியத்தை எங்க வீட்டுக்கே கொண்டு போறோம்” தோழியிடம் கிண்டலாகச் சொன்னவள் ரேவதி.

“காலைல சீக்கிரமா எழுந்துட்டோம், ரொம்ப டயர்டா இருக்கு. போய் முதல்ல தூக்கத்தை போடுவோம். சாயந்திரம் பார்க்கலாம்” என்று தீபா சொல்ல, மற்றவர்கள் அவரவர் வீட்டிற்கு கிளம்பினார். அவர்களின் வீடுகளும் ரொம்ப தூரமும் இல்லை. இரண்டு வீடு தள்ளி கூட இல்லை,  பக்கத்து வீடு தான்.

அருகருகே ஒரேமாதிரி 3 பெட்ரூம் வீடு வாங்கியிருந்தனர் நண்பர்கள். ஒருவருக்கொருவர் உறவாகவும், பாதுகாப்பாகவும் இருப்பார்கள் அல்லவா. வெளியே வண்ணப் பூச்சின் நிறமும், உள்ளே வீட்டில் இருக்கும் பொருட்களும் மட்டுமே வித்தியாசம்.

அன்று திங்கள்கிழமை… இளமாறனும் இனியனும் சேர்ந்து அந்தக் காரை வாங்கியிருந்தனர். 3 குடும்பங்களும் எங்கு சென்றாலும் ஒன்றாக அதில் தான் வெளியே செல்வர்.

அமுதினி(9 வயது), இதழினி(7 வயது) இவர்கள் கூடவே தென்றலும் பள்ளிக்கு கிளம்பிட, இளமாறனும், இனியனும் காரில் குழந்தைகளை பள்ளியில் இறக்கி விட்ட பிறகு தங்கள் கம்பெனிக்கு சென்றனர். சரவணனோ அதிகாலையில் எழுந்து பணிக்குச் சென்று விட்டான்.

தென்றல் பிறந்து ஒரு வயதானதும், செந்தமிழை கல்லூரியில் சேர்த்தான் இளமாறன். இளநிலை அறிவியல் தகவல் தொழில்நுட்பவியல் படித்து முடித்தவள், இளமாறனின் IP டெக்னாலஜிஸ் கம்பெனியில் ப்ராஜெக்ட் அசிஸ்டெண்ட்டாக இருக்கிறாள்.

அவளுடன் ரேவதியும் கம்பெனியில் இருப்பவர்களுக்கு வேலைகளைப் பிரித்து தருவது, வரும் போன் கால்களை அட்டென்ட் செய்வது, வேலை செய்பவர்களுக்கு தேவையானவற்றை இனியனிடம் சொல்லி செய்து தருவது என முழுமையாக மேற்பார்வை பார்த்துக் கொள்கிறாள்.

இனியனும் இளமாறனும் சென்னையில் மற்றுமொரு கிளைக்கம்பெனி ஆரம்பித்து, அதை சிறப்பாக நடத்துகின்றனர். தீபா இளநிலை ஃபேஷன் டெக்னாலஜி படித்து முடித்ததும், புனிதாவின் தையல் கடையை பெரிதாக்கி, கூடவே அதனருகே பொட்டிக் வைத்து ஒரே இடத்தில் பெண்களுக்குத் தேவையான உடைகளும், அதை தைக்கவும் செய்து, பெரிய தொழில்முனைவோர் ஆகிவிட்டாள்.

இத்தனை வருடங்களாக உழைத்த புனிதவதி, ஓய்வு எடுக்கிறேன் என அவர்களின் மூன்று குட்டி வாண்டுகளை வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்கின்றார். இதற்கு பேர் ஓய்வா? ஒரு வயதே ஆன மூன்று குட்டிகளும் ஆளுக்கொரு பக்கம் ஓட, அவர்களை துரத்திச் செல்லவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

கரும்பு தின்னக் கசக்குமா என்ன? மகனுக்கு பிள்ளை வரம் கேட்டவருக்கு வீடெல்லாம் குழந்தைகள் இருந்தால் பார்த்துக் கொள்ள மாட்டேன் என்றா சொல்வார். அவரிடம் குழந்தைகளை விட்டுவிட்டு பெற்றோர்கள் தங்கள் கடமையை பார்க்கச் சென்று விட்டனர்.

அவங்க எப்படி கடமையை பார்க்குறாங்கன்னு நாம போய் பார்க்கலாம் வாங்க… கம்பெனியில் இருந்து வெளி வேலைக்காக பைக்கை எடுத்துச் சென்ற இளமாறன் வேலை முடிந்ததும் செந்தமிழ் கம்பெனிக்குச் சென்றான். உள்ளே நுழைந்தவன் மும்முரமாக கணினியில் வேலை செய்திருந்தவளைப் பார்த்தவாறே நின்றிருந்தான்.

இனியனும் வெளியே சென்றவன், அவன் மனைவியைக் காண அங்கே வந்தான்.

செந்தமிழை ரசித்தவாறு நின்றிருந்த இளமாறனைப் பார்த்தவன், “டேய் என் தங்கச்சியை ரொம்ப பார்க்காத டா. உன் பார்வையே சரியில்ல. அப்படியே அடுத்த குழந்தைக்கு ரெடியாகிட்ட போல. ஏற்கனவே ஜனத்தொகை எகிறிப் போய் இருக்கு. நீயும் அதை இன்னும் ஏத்தாத” என்று கேலி செய்திட,

“சரி டா நான் ஜனத்தொகை ஏத்தல. நீ வேணும்னா ஏத்து” பதிலுக்கு அவன் காலை வாரினான் இளமாறன்.

“எது உன் தொங்கச்சியை வச்சுக்கிட்டு, பக்கத்துல போனாலே கம்பெனிக்கு போகணும். வீட்டு வேலை பார்க்கணும், குழந்தையை பார்க்கணும். டயர்டா இருக்குன்னு சீன் போடுறா. ஏதோ இவ இல்லாம இந்த கம்பெனி நடக்காத மாதிரி” இனியன் சொல்லிக் கொண்டிருக்க, அவனை முறைத்தவாறு அவர்களுக்கு அருகில் வந்தாள் ரேவதி.

“அடியே.. உன் கோழிக் குண்டு கண்ணை உருட்டாத டி. நீ வா.. உன் மகன் அங்க அழுதுட்டு இருக்கானாம். புனிதாம்மா போன் பண்ணாங்க” என்றவாறு அவளை அழைத்துச் சென்றான்.

“அவன் எதுக்கு அழப் போறான்?”

“அவனுக்கு விளையாடத் துணைக்கு தங்கச்சிப் பாப்பா வேணுமாம்”

“இனி.. அவன் உன்கிட்ட அப்படி சொன்னானாக்கும்”

“நீ வேணும்னா வீட்டுக்குப் போனதும் அவன்கிட்ட கேளு. அவன் வேணாம்னு சொல்ல மாட்டான்.

“நீ ரொம்ப கெட்டவன் இனி. அவன் இன்னும் சரியா பேசவே ஆரம்பிக்கல. பிள்ளை பேரை சொல்லி என்னென்ன தாஜா பண்ற”

“என்ன பண்ணாலும் ஒண்ணும் நடக்க மாட்டேங்குதே”

“நடக்கும்”

“எப்போ?”

“இப்போ இல்ல. நைட் தான்” கண்களில் காதல் மின்ன ரேவதி சொன்னதும், இனியனுக்கும் கண்களில் ஹார்டின் பறந்தது.

இரவு… குழந்தைகள் இருவரும் புனிதா பாட்டியுடன் படுத்துக் கொள்ள, தங்களுடைய அறையில்..

கண்ணுக்கு மை அழகு …

கவிதைக்கு பொய் அழகு …

கன்னத்தில் குழி அழகு …

கார் கூந்தல் பெண் அழகு …

விடிகாலை விண்ணழகு …

விடியும் வரை பெண் அழகு …

நெல்லுக்கு நாற்றழகு …

தென்னைக்கு கீற்றழகு …

மெத்தையில் படுத்திருந்த இளமாறன் பாடிக் கொண்டிருக்க, அவன் மார்பில் தலை வைத்திருந்த செந்தமிழ் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“அதென்ன விடியும் வரை பெண்ணழகு. அப்போ விடிஞ்ச பிறகு அழகா இருக்கமாட்டாங்களா என்ன? ” செந்தமிழ் கேட்க,

“அதுதான் விடிஞ்ச பிறகு அது வேணும், இது வேணும், அதைப் பண்ணு, இதை பண்ணுன்னு டார்ச்சர் பண்றீங்களே. கேட்கலைன்னா கோபம் வேற வந்துருதே. அப்புறம் எங்கிட்டு அழகு இருக்கு” பயபுள்ள மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா பேசிட்டான் போல.

வேகமாக அவன் மார்பின் மீதிருந்து எழுந்தவள், கோபத்துடன் அவனைப் பார்க்க, “அய்யோ செல்லாக்குட்டி.. நான் உன்னை சொல்லல. புருஷனை மதிக்காம கோபப்படுறவங்களை சொன்னேன் டி. நீ வா” என்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அவள் கோபமாக அவன் மார்பில் அடித்து எழுந்து கொள்ள முயற்சிக்க, அவளை அணைத்திருந்த பிடியை இறுக்கி, “நீ எப்பவும் அழகு தான் டி செந்தமிழ்!! ஐ லவ் யூ தமிழ்!” என்றவன், அவள் இதழை சிறைப்பிடித்து அவளை முத்தத்தால் சமாதானம் செய்தான்.

கண்ணுக்கு மை அழகு …

கவிதைக்கு பொய் அழகு …

அவரைக்கு பூ அழகு …

அவருக்கு நான் அழகு … 

ஆனந்த மஞ்சத்தில்

அவிழ்ந்தாலும் குழலழகு …

அடையாள முத்தத்தில்

அழிந்தாலும் பொட்டழகு …

பெண்ணோடு காதல் வந்தால்

பிறை கூட பேரழகு …

பெண்ணோடு காதல் வந்தால்

பிறை கூட பேரழகு …

என்னோடு நீ இருந்தால்

இருள் கூட ஓர் அழகு … 

மழை நின்ற பின்னாலும்

இலை சிந்தும் துளி அழகு …

அலை மீண்டு போனாலும்

கரை கொண்ட நுரை அழகு …

இமை கொட்டும் விண்மீன்கள்

இரவோடு தான் அழகு …

இமை கொட்டும் விண்மீன்கள்

இரவோடு தான் அழகு … 

 

இளமாறன் கண்ணுக்கு

எப்போதும் நான் அழகு!!!

 

காதலாய் இளமாறனின்  வாழ்வில் வந்த செந்தமிழ் அவன் வாழ்க்கையாகிப் போனாள்.

உண்மையான காதல் நம்மை நமக்கே புதிதாய் காட்டிடும். நடக்க முடியாது என்று சொன்னவனை நடக்க வைத்ததும், குழந்தை பிறக்காது என்று சொன்னவளுக்கு குழந்தை பிறந்ததும், சூழ்நிலைகளால் உடைந்து போனவர்கள், மகிழ்ச்சியை மீட்டுருவாக்கம் செய்ததும்.. இவையனைத்தும் காதலால் மட்டுமே சாத்தியம்!

தூரிகை தளத்தில் எனக்கு தொடர்ந்து கருத்துகள் தெரிவித்த தோழி பிரியா அவர்களுக்கும், நாவலைப் படித்து தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி ரேட்டிங் மற்றும் தங்களுடைய எண்ணங்களைப் பதிவு செய்தவர்களுக்கும் நன்றிகளும், பேரன்புகளும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்