
மூன்று நாட்களுக்குத் தேவையான உடைகள், சாதனங்கள், பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு பெற்றோரிடம் ஆசிபெற்று காரிலேறி அமர்ந்தார்கள் காளைகள் மூவரும்.
பெற்றோரின் மனதில் சந்தோசம் என்பதே இருக்கவில்லை. சிறு குழந்தையாகக் கைகளில் கிடைத்த முதல் இதுவரை அவனை விட்டுப் பிரிந்திராத அவர்கள், மூன்று நாட்கள் மகனைப் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டார்கள்.
அவனும், அவர்களின் மனதைப் புரிந்து கொண்டு, புன்னகை தவழ்ந்த முகத்துடன், “உங்களைப் பிரிஞ்சு என்னால மட்டும் இருக்க முடியுமா? கூடிய சீக்கிரம் வந்துடுறேன். நான் எங்கே இருந்தாலும் உங்க நினைவா தான் இருப்பேன்” என்று தாயின் கைப்பற்றி முத்தமிட்டான்.
அவனது தங்கை ‘எனக்கு’ என்று கையை நீட்ட, அவன் சிரித்துக் கொண்டே, “எப்பவும் அம்மாவுக்குப் போட்டியா வருவதையே வேலையா வச்சிட்டு இருக்கே, ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து அவரோடு அனுப்பி விட்டா தான், எங்களைச் சுதந்திரமா இருக்க விடுவே” என்று கேலி செய்தான்.
அப்போதும் அவள், “வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து, எப்பவும் நம்ம கூடவே இருப்பதுக்கு சம்மதிச்சா மட்டும்தான் பண்ணிக்குவேன். இல்லை, அது யாராக இருந்தாலும் நான் கட்டிக்க மாட்டேன்” என்று கறாராக உரைத்தாள்.
சிந்துவின் பேச்சைக் கேட்ட அனைவரும் சிரித்து விட, “அப்போ, ஆயுசுக்கும் வேலைக்குப் போகாம வீட்டோடு இருந்து சாப்பிடுற மாதிரியான மாப்பிள்ளையா உனக்குப் பார்க்கணும்?” என்று சாந்தனு சீண்டியதும், “எப்படி இருந்தாலும் பரவாயில்லை. எனக்கு உங்களோடு இருந்தா போதும்” என்றாள் அவன் தங்கை.
“இப்ப எல்லாம் இப்படி தான் சொல்லுவீங்க. கல்யாணம் ஆனதுக்கு பிறகு ஆளே அடியோடு மாறிடுவீங்க”
வேலவன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் பேசி, அவளது முறைப்பையும் பதிலாகப் பெற்றுக் கொண்டான்.
தங்கையின் முகத்தில் தோன்றிய கடுகடுப்பு, முறைப்புக்களை பார்த்திருந்த கர்ணன் வாய் விட்டுச் சிரிக்க, “அண்ணா, நான் சொன்னதை எல்லாம் மறக்காம வாங்கிட்டு வந்துடுங்க. அங்க பார்க்கும் எல்லாத்தையும் எனக்குப் போட்டோவும், வீடியோவும் பிடிச்சு அனுப்புங்க. சரியா?” என்று செல்லமாகக் கோரிக்கை வைத்தாள்.
“கண்டிப்பா செய்றேன் சிந்துமா, நீ அண்ணன் வரும் வரை அம்மா பேச்சைக் கேட்டு ஒழுங்கா இருக்கணும்”
அவள் ‘சரி’ என்றதும், என்ன தான் இயல்பாக இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், தங்களுடன் வர முடியவில்லையே என்ற தங்கையின் தவிப்பு அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆகவே, “கவலைப்படாதடா, அந்த ஊரிலேயே ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து உனக்கு முடிச்சிட்டா, வருஷா வருஷம் நடக்கும் திருவிழாவுக்கு, நாங்க குடும்பமா வந்து உன் வீட்டுலயே தங்கிட்டுப் போவோம். உனக்கு அங்கேயே பார்க்கட்டுமா?” என்றான் கர்ணன்.
அவள் வெட்கத்துடன் அம்மாவின் முதுகிற்கு பின்னே மறைந்து கொள்ள, ஓட்டுநரைப் பார்த்துக் கண் காட்டியவன், அந்த நேரத்தைப் பயன்படுத்தி சென்று விட்டான்.
அண்ணனின் திருட்டுத்தனம் புரிந்த சாந்தனு சிரித்த சிரிப்பு, மற்ற இருவரையும் தொற்றிக் கொண்டது.
அவர்கள் காரில் பேசிக்கொண்டே செல்வதைக் கண்ட மஞ்சுளா, எங்குப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டு, உடனடியாகத் திகழினியை தேடி வந்தாள்.
அவளது பதற்றம் அப்பிய முகத்தைக் கண்டதும், என்ன என்று அவசரமாக விசாரிக்க, “உங்க வீட்டுல உள்ளவங்க வெளியூருக்கு போகும் நேரத்தைப் பயன்படுத்தி கர்ணன் ஐயாவிடம் பேசலாம்னு திட்டம் போட்டு வச்சிருந்தோம் இல்லையா? அது இப்போ நடக்காம போயிடும் போலிருக்கு” என்றாள்.
“என்ன சொல்றே மஞ்சு? ஏன் அவரைப் பார்த்துப் பேச முடியாது? அவர் எங்கேயாவது வெளியே போறாரா?” என்று கேட்க, “ஆமாம். எந்த இடத்துக்கு உங்க வீட்டுல உள்ளவங்க போவதா சொன்னாங்களோ, அதே இடத்துக்குத் தான் நம்ம ஐயாவும் போக போறாங்க” என்று பதிலளித்தாள் மஞ்சுளா.
“என்ன? நிஜமாவா சொல்றே? இப்ப என்ன பண்றது?”
மூன்று நாட்கள் அண்ணனும், பெற்றோரும் இல்லாத சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, எப்படியாவது அவனிடம் தன்னுடைய மனதில் இருப்பதை தெரியப்படுத்தி விட நினைத்து இருந்தாள். இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை.
நடுங்கிய கைகளைக் கோர்த்து, உதடுகள் பின்ன நின்றவள், ‘உங்களிடம் என் மனதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு, எனக்குக் கிடைக்கவே செய்யாதா?’ என்று கலங்கினாள்.
அவளது தோளைப் பற்றி தட்டிக் கொடுத்த மஞ்சுளா, “இது உணர்ச்சி வசப்படுவதுக்கான நேரம் இல்லை. நீங்களும் உடனே ஐயா போயிருக்கும் ஊருக்கு வருவதா உங்க பெற்றோரிடம் சொல்லுங்க. அப்பதான் அங்கே போயி ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கர்ணன் ஐயாவை சந்திக்க முடியும்” என்று ஆலோசனை நல்கினாள்.
மஞ்சுளா கூறுவதை ஏற்று, உடனே பெற்றோரிடம் சென்று, தானும் அவர்களுடன் வருவதாகச் சொன்னாள் திகழினி.
அவர்கள் சரி என்றதும், அன்றே புறப்பட்டுச் செல்லக் கேட்டாள். அவர்களும் பயணத்திற்கு தேவையானவற்றை செய்யப் பணியாட்களிடம் உத்தரவிட, திருக்குமரன் உள்ளம் வேறு விதமாகத் திட்டமிட்டது.
தங்கை அங்கு வரும்போது, விஜயனின் வீட்டாரிடம் அறிமுகம் செய்து வைப்பதுடன், அங்கு வைத்துத் திருமண நிச்சயம் செய்து விடவும் தீர்மானித்தான்.
அதனால், அங்குச் சென்ற பிறகு அவளுக்குத் தெரியப்படுத்தினால் போதும் என்று அமைதியாகக் காட்டிக் கொண்டான்.
திகழினி தன் அப்பாவிடம் மஞ்சுளாவையும் தங்களுடன் அழைத்துச் செல்ல விரும்பிக் கேட்க, அவரும் மறுக்காமல் சம்மதம் தெரிவித்தார்.
மாலை நேரம் அவர்கள் புறப்பட ஆயத்தமாக, இரவு நேரம் அங்குச் சென்று சேர்ந்தார்கள் ஆடவர்கள் மூவரும்.
அந்த நேரம் கோவிலில் பூஜைக்கான நேரமாக இருந்ததா அல்லது அந்த சாம்ராஜ்யத்தை அலங்கரிக்க பிறந்தவன் வந்து விட்டான் என்பதை அறிந்ததாலோ, கோயில் மணி உரத்து ஒலித்து அவனை வரவேற்றது.
ஊதுபத்தியின் வாசனை காற்றில் கலந்து வந்து அவன் நாசியை சங்கமித்தது. கண்களை மூடி கைகளைக் குவித்தான் கர்ணன்!
அவனது தம்பியும், வேலவனும் அதேபோல செய்ய, பூஜை முடிந்ததும் கண் திறந்து பார்த்தார்கள். உதடுகள் புன்னகை வசப்பட்டன.
வரும் வழியெங்கும் பார்த்த இடங்களும், அந்த ஊருக்கு உள்ளே வந்த பிறகு பார்த்த பகுதிகளும் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. திரைப்படத்தில் பார்ப்பது போல் அத்தனை அழகு அங்குக் கொட்டிக் கிடந்தது. இப்படிப்பட்ட இடத்தையா இத்தனை வருடங்களும் பார்க்காமல் தவற விட்டு விட்டோம் என்று மலைத்துப் போனான் கர்ணன்!
அடுக்கு அடுக்காகச் சாலையின் இரு மருங்கிலும் காணப்பட்ட வீடுகளும், அதன் மீது ஒளிர விடப்பட்டுள்ள மின்சார விளக்குகளும், துணிகளால் மாளிகை போல அலங்கரிக்கப்பட்டு, அதற்கு உள்ளே துர்க்கை அம்மன் சிலையை வைத்து வழிபடும் விதமும், ஊதுபத்தியின் வாசனையும் அவனை எங்கேயோ அழைத்துச் சென்றது.
மலையின் வளைவுகளில் பெரிய மற்றும் சிறிய வடிவிலான மின்சார பல்புகள் வளைந்து செல்லும் அழகு, கண்ணைத் தட்ட விடாமல் செய்தது.
அவன் இருக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் கூட, கோவில் அமைந்திருக்கும் பகுதி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
உதடுகளில் குடி கொண்ட மந்தகாச புன்னகையுடன், “வேலவா! பார்க்கவே கண் கொள்ளா காட்சியா இருக்குடா. நீ மட்டும் சொல்லாம இருந்திருந்தா கண்டிப்பா நான் இங்கே வந்திருக்கவே மாட்டேன்” என்றான்.
அவன் சிரித்தபடியே, “இன்னும் இந்த ஊர்ல பார்க்க நிறைய இடம் இருக்கு. மலையும் மலை சார்ந்த இடமும் தான் இதைச் சுற்றி இருப்பது. நம்ம ஊரையும் விட இந்த ஊர் தான் பார்க்க ரம்மியமா இருக்கும். இந்த ஊரில் தான் ஆட்களும், தொழில்களும் அங்கு விட அதிகமா இருக்கும். எங்குப் பார்த்தாலும் மலையாகத் தான் காட்சியளிக்கும். மன்னராட்சி காலத்தில் இருந்த அரண்மனை இப்ப அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கு.
இங்குக் காலம் காலமாக இருந்து ஆட்சி செய்தது, நம்ம இராஜரிஷியின் குடும்பம் தான். அவரோட அப்பா இருக்கும் வரை அந்த அரண்மனையில் தான் இருந்ததா சொல்றாங்க. ஐயாவுக்கு இப்ப எழுபது வயசுக்கு மேல இருக்கலாம். இந்த ஊரு மக்கள் அரச பரம்பரையை சார்ந்த அவர்களுக்குத் தான் எந்த ஒரு விசயத்திலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.
காவல் நிலையம் இருந்தாலும் ஏதாவது பிரச்சனைகள் ஏற்பட்டா அவரிடம் தான் தீர்வு காண போவார்கள். இந்த ஊரில் தப்பு செய்தா அதுக்கான தண்டனை பயங்கரமா இருக்கும். அரச காலத்தில் எப்படி தண்டனை வழங்கப்பட்டதோ அதை மாற்ற கூடாதுன்னு மக்கள் ஆசைப்பட்டதால், அதுக்கு பயந்து தப்பு செய்றவங்க கூட இந்த ஊரில் அடக்கமா இருக்கறாங்க.
அவரது மகளும் தன் குடும்பத்தோடு அவங்க கணவரின் வீட்டுல தான் இருக்காங்க. ஐயாவின் மாளிகை கூட முன்பு உள்ள அரண்மனையின் சாயலில் உருவாக்கப்பட்டது தான். நிறைய அறைகளுடன் பார்க்க அத்தனை பிரமாதமா இருக்கும்! அந்த மாளிகையையும், அவரது செல்வங்களையும் வேட்டையாட ஒரு சிலர் முயன்றும் இதுவரை எவராலும் வெற்றி பெற முடியல. அவருக்கு உறுதுணையா இருப்பது சித்திரஞ்சன். அவரது தங்கை தான் இராஜரிஷிக்கு வேண்டிய எல்லாத்தையும் செய்து கொடுத்துப் பார்த்துக்கிறாங்க.
திரண்ட சொத்துக்கள், தொழில்கள் இருந்தாலும், அதை முழுவதையும் நிர்வாகிக்கும் பொறுப்புகள் அவரிடம் மட்டும் தான் இருக்கு. அவரது மகளுக்குக் கல்யாண நேரத்தில் தேவைக்கு அதிகமாகவே செய்து கொடுத்துட்டதால், அவர்கள் யாரும் இதன் மீது ஆசைப்படல. ஒருவேளை அவரின் காலத்திற்கு பிறகு இவர்களுக்குத் தான் கிடைக்கும்னு நிதானமா நடந்துக்கலாம்.
அதேநேரம், அவரது வசதியான வாழ்க்கைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு வாரிசில்லாத அவரது சொத்துக்களை அடைய அவரோட சித்தப்பா, பெரியப்பா மகன்கள் முயற்சி பண்ணினாங்க. அவர் எல்லாம் தெரிஞ்சும் யாரையும் பகைச்சுக்க விரும்பாம பொறுமையா செயல்பட்டு வருகிறார்.
இந்த ஊர் என்பதை விட மன்னராட்சி நடந்த இடத்தின் அடுத்த தலைவன் யார்? இராஜரிஷிக்கு அடுத்தபடியா இந்த ஊருக்குக் காவலனாக இருக்கப் போவது யார்? என்பது விரைவில் தெரிய வரலாம்” என்றான்.
முழுவதையும் கேட்டவன் “இராஜரிஷி என்றால்?” எனச் சந்தேகத்தை எழுப்பினான்.
“இராஜரிஷி அவருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர். அவரது இயற்பெயர் வேறு”
“ம்ம்… நான் இங்கிருந்து போவதுக்கு முன்னாடி, ஒரு தடவையாவது அவரைப் பார்க்கணும்.”
“அது அவ்வளவு சுலபமில்லை. அவர் எந்த நேரம் எங்க இருப்பாருன்னு கண்டுபிடிப்பது சிரமம். ஆனாலும், இப்ப ஊர்கோவிலில் திருவிழா நடப்பதால், கண்டிப்பா கலந்துக்க வருவார். காலம் காலமா இந்த ஊர்மக்கள் அவருக்கு முதல் மரியாதை செய்வது நடைமுறையில் உள்ளது. அப்பக் கட்டாயம் பார்க்கலாம்”
அவன் சரி என்றதும், தனது அத்தையின் மகனை அழைத்துக் கர்ணனையும், அவனது தம்பியையும் அறிமுகப்படுத்தினான்.
“நீங்க ரெண்டு பேரும் எங்க ஊருக்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்! முதல்ல உள்ளே வாங்க. சாப்பிட்டு அப்புறமா பேசலாம்”
அவர்கள் மூவரும் உள்ளே சென்றார்கள். விருந்து அவர்களுக்குத் தயாராக இருந்தது. கை, கால்களைச் சுத்தம் செய்து விட்டு, சாப்பாட்டு மேஜையின் அருகில் சென்று அமர்ந்தார்கள்.
“இந்த ஊரைப் பற்றி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லிட முடியாது. மலை வளமும், மண் வளமும், நீர் வளமும் பெருகிய இடம் எங்க ஊர். மலையிலிருந்து வரக்கூடிய தண்ணீரை பாதுகாக்க, ரெண்டு பெரிய அணைக்கட்டை எங்க இராஜரிஷி ஐயா உருவாக்கி, நீர் பாசனத்துக்கு உதவி பண்ணி இருக்காங்க.
ஏழை, எளியவர்களின் தொழில் நலிவடையாமல் இருக்க, இலவசமாகவும் வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டமும் கொண்டு வந்திருக்காங்க. முக்கியமா மது, புகை பழக்கத்திற்கு தடை விதிச்சிருக்காங்க.
பெண்களிடம் தப்பா நடந்துக்குறவங்களுக்கும், திருடர்கள், மோசமானவர்கள், பெண்களை வஞ்சிப்பவருக்கு கடுமையான தண்டனை வழங்கும் விதமான தீர்ப்புகளை வச்சிருக்காங்க.
அவரது பேச்சைச் சுற்று பட்டியில் உள்ள யாருமே மீற மாட்டாங்க. திருமலை கூட அவருக்குக் கீழே அடங்கித் தான் இருப்பார்” என்று அவரது புகழ் பாடினான்.
“கேட்கவே சந்தோஷமா இருக்கு. இப்படிப்பட்ட நல்ல மனுஷன் இருக்கும் இடத்துல வசிப்பதுக்கு, நீங்க எல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்” என்றான் கர்ணன்.
“அது மட்டுமில்லை, இன்னொரு விசயமும் இருக்கு. அதைக் கேட்டா நீங்களே அதிர்ந்து போயிடுவீங்க” என்று பீடிகை போட்டான்.
கர்ணன் என்ன என்பது போல ஆர்வமாகப் பார்த்ததும், “உங்களோட ஆடை தயாரிப்புகள் இந்த ஊரில் வியாபாரம் செய்யப்படுவதில், பெருமளவு விற்பனை ஆவதும் அவர்களால் தான். இராஜரிஷி ஐயா உடுக்கும் உடை கூட நம்ம நிறுவன தயாரிப்பு தான். இப்படி ஒரு எளிமையான மனிதனை யாராலாவது பார்க்க முடியுமா?” என்று கேட்டான்.
‘இல்லை’ என்று அவர்கள் தலையாட்ட, “நீங்க நேர்ல பார்த்தால் இன்னும் நிறைய விசயங்கள் தெரிய வரும்” என்றான் வேலவனின் அத்தான்.
“நல்லது” என்றதுடன் நிறுத்திக் கொண்ட கர்ணனின் கண்களுக்கு, அவர் தர்மபிரபுவாகத் தெரிந்தார்.
அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, அவன் உள்ளத்தில் பன்மடங்கு பெருகியது.
உணவை முடித்த நால்வரும் எழுந்து வெளியேறி, அங்குள்ள பகுதிகளைப் பார்வையிடச் சென்றனர்.
சாந்தனு, தனக்கு எழும் சந்தேகத்தைக் குறித்துக் கேட்டறிய, அங்கு வாழும் மக்கள், அவர்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி கேட்டவாறு நடந்தான் கர்ணன்.
இரவு பன்னிரெண்டு தாண்டிய பிறகு வீட்டிற்கு வந்து, தங்களுக்காகக் கொடுக்கப்பட்ட அறைக்குச் சென்று ஓய்வு எடுத்தார்கள்.

