
திகழினியின் கண்கள் தனக்கு எதிரில் உள்ள புகைப்படத்தில் இருப்பவனை பார்த்தது. எத்தனையோ வழிகளில் அவனிடம் தன் அன்பை வெளிப்படுத்த முயன்றும், அவனது ஒதுக்கம் அவளைக் கலங்கடித்தது.
ஏற்கனவே, தனது அன்பை ஏற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பவன், நேற்று நடந்த சம்பவத்தால் எப்படி நடந்து கொள்ள போகிறானோ என்று பயப்பட்டது.
கண்களில் வடிந்த நீருடன் தோழி மஞ்சுளாவை எதிர்பார்த்து அவள் இருக்க, அவளைக் காண வந்த மஞ்சு, திருக்குமரனின் பார்வை தன்மீது இருப்பதைக் கண்டதும் லேசான உதறலுடன் நடந்தாள்.
அவனது முரட்டுத்தனமான குணமும், அன்றொரு நாள் பேசிய வார்த்தையும் இன்றளவும் அவளால் மறக்க முடியாதது.
திகழினியின் மீது வைத்திருந்த பாசமும், அவளது அப்பா வீட்டில் வந்து கேட்டதாலும் மட்டுமே இங்கு வந்து செல்கிறாள். மற்றபடி, திருக்குமரனிடம் ஒரு வார்த்தைக் கூட அவள் பேசுவதில்லை.
ஜாதி வெறி பிடித்து அலையும் சில மனிதர்கள், தங்கள் இனத்தவரை விட கீழே உள்ளவர்களைப் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்துப் பேசுவதும், அவர்களைத் தங்களது அடியாட்களை போல நடத்தி வருவதும் வழக்கம்.
அப்படித்தான் திருமலை வீட்டிலும் நடந்து வருகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. அவரது முப்பாட்டன், தாத்தா, அப்பா காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அதனால், அவர்களுக்குப் புதியதாகத் தெரிவதில்லை. அதைத் தான் திருக்குமரனும் செய்து வருகிறான்.
மஞ்சுளாவின் குடும்பம் பரம்பரை பரம்பரையாக முடி வெட்டும் இனத்தை சார்ந்தவர்கள். முன்பெல்லாம் யாருக்கு செய்ய வேண்டும் என்றாலும், அதற்குரிய சாதனங்களுடன் வீட்டிற்குச் சென்று செய்து வருவார்கள். இப்போது தனியாகக் கடை அமைத்துச் செயல்படுத்தி வந்தாலும், திருமலைக்கும், அவரது மகனுக்கும் வீட்டிற்கு வந்து தான் செய்து விட்டுப் போவார்கள்.
இந்நிலையில் உள்ளூரில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து வந்த திகழினி, தனது ஊரைச் சார்ந்தவளும், தன் வீட்டிற்கு அடிக்கடி வருபவரின் மகளும் ஆகிய அவளிடம் நல்ல விதமாகப் பேசினாள். அவளும் ஆரம்பத்தில் அதுபோலத் தான் பேசிப் பழகினாள். ஆனால், மஞ்சுளாவின் வீட்டில் ‘திகழினி பெரிய வீட்டுப் பிள்ளை, உன்னை விட எட்டு மாதம் மூத்தவள். மரியாதையுடன் பேசி வாங்கி இரு’ என்றார்கள்.
அவள் கேட்காமல் அடம்பிடித்து அடியும் வாங்குவது உண்டு. திகிழினி வயதிற்கு வந்தபோது, அவளது வீட்டில் புப்பூனித நீராட்டு விழா நடைபெற்றது.
அந்த நேரம் பட்டுப்புடவை, நகையில் பார்க்க பெரிய பெண்ணைப் போல அழகாக இருந்தவளைக் கண்ட மஞ்சுளா, உறவினர்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல், ‘ஏய், வா, போ, வாடி, சொல்லுடி, திகழினி’ என்று ஒருமையில் அழைத்துப் பேசினாள்.
அதைக் கேட்ட திருக்குமரன், “இனிமேல் என் தங்கையை மரியாதை குறைவாகப் பேசி அவமதித்தால், அந்த வாயை இல்லாமல் ஆக்கிடுவேன். பெரிய கலெக்டர் மகள்னு நினைச்சுட்டு என் தங்கையை அதிகாரம் பண்றியா? உங்க அப்பா, அண்ணன், அம்மா எல்லாருமே என் வீட்டுல கூலிக்கு வேலை பார்ப்பவர்கள். அப்படிப்பட்ட வீட்டுல பிறந்துட்டு ராணி மாதிரியா அதிகாரம் பண்ணிட்டு இருக்கே? இனி ஒருதரம் இப்படி நடப்பதைப் பார்த்தால் உன்னை இல்லாம ஆக்கிடுவேன்” என்று எச்சரித்தான்.
அவளது பெற்றோருக்கும் விசயம் தெரிய வந்து, அவளது வளர்ப்பைக் குறை கூறியதில் அவள் அவமானத்துடனும், பயத்துடனும், அதற்குப் பிறகு திகழினியின் வீட்டிற்குப் போவதை நிறுத்தி விட்டாள்.
வகுப்பறையில் பார்த்தால் மட்டும் பேசிக் கொண்டார்கள்.
மூன்று வருட மேற்படிப்பை, அவர்களின் தகுதிக்கு ஏற்ப அமைத்துக் கொண்டதால், இருவரின் சந்திப்பும் குறைந்து போனது. அதனால், தோழமையுடன் பழகுவதற்கு யாருமின்றி தனிமையில் துயறுற்ற திகழினி பெற்றோரிடம் முறையிட்டாள்.
மகளுக்குத் தேவையானதை செய்து கொடுத்து, தோழமையுடன் பார்த்துக் கொள்ள வேண்டி, மஞ்சுளாவின் அப்பாவிடம் பேசி அவளைத் தங்களது வீட்டிற்கு வர வைத்தார் திருமலை. ஆனாலும், அன்றைய பேச்சை மறக்காமல் திகழினியை மரியாதையுடன் அழைத்து வருகிறாள் மஞ்சுளா.
வீட்டில் உள்ள எல்லோரின் கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதிலளிப்பவள், திருக்குமரனிடம் மட்டும் பேசவே மாட்டாள். அவனது தங்கையையும் ஒருமையில் அழைத்து உரையாட மாட்டாள்.
பழையதை நினைத்துப் பெருமூச்சை வெளியேற்றியவள், திகழினியின் அறையை நோக்கி நடந்தாள்.
அவளது கண்ணீர், ஏக்கத்திற்கான காரணம் புரிந்ததால், “கர்ணன் ஐயாவிடம், நேரில் பேசி அவர் மனசுல இருப்பதை தெரிஞ்சுக்கிட்டா, எல்லாம் சரியாகப் போகும். ஆனால், வேறு ஜாதிக்காரரான அவரை உங்க அண்ணனும், அப்பாவும் ஏற்பார்களா தெரியலயே?” என்று சந்தேகித்தாள்.
பெயர் சொல்லி அழைத்ததற்கு அந்த அளவிற்குப் பார்த்தவர்கள், அவளது காதல் விசயம் தெரிய வந்தாலும் ஜாதியை பார்த்துப் பிரிக்க நினைப்பார்களோ என்ற பயம் அவளிடம் இருந்தது. அதைத் தான் இன்றைய தினம் மெதுவாகச் சொல்லியும் விட்டாள்.
“அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் ஜாதியுடன் வாழ போவதில்லை. அவரோட மனைவியா வாழத்தான் ஆசைப்படுறேன்.”
மஞ்சுளா அமைதியாக நின்றதும், “எப்படி அவரைப் பார்ப்பது மஞ்சு? கோவிலில் வைத்துத் தான் அவரிடம் பேச முடியலயே… என் மனதில் அவர் இருப்பது போல, அவர் மனதிலும் நான் இருப்பேனா, இல்லையா? அவர் என்னை ஏற்பாரா? மறுப்பாரா? எதுவுமே தெரியாம என்னால் நிம்மதியா இருக்க முடியலடி” என்று கலங்கியவளை, அணைத்து ஆறுதல் படுத்தினாள்.
“பொறுமையா இருக்க பாருங்க திகழ். கர்ணன் ஐயா நேத்தும், இன்னைக்கும் நடந்த சம்பவத்தில் உங்க அப்பா, அண்ணன் மேல ரொம்பவும் கோவமா இருக்காங்க! உங்க அண்ணனும் அவரை ஊர் மக்கள் மத்தியில் மட்டம் தட்டிப் பேசி இருக்கார். உண்மையான குற்றவாளியைப் பற்றி பேசும் நேரத்தில், உங்க அப்பாவால் கோவர்தனன் ஐயா அவர்களை அங்கிருந்து கூப்பிட்டுப் போயிட்டாங்க. இந்த நேரம் நாம ஏதாவது செய்யப் போயி, அவரோட கோபம் நம்ம மேல திரும்பிடவும் வாய்ப்பிருக்கு” என்று பக்குவமாக எடுத்துரைத்தாள்.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருப்பது மஞ்சு? எனக்கு அவரோடு பேசணும்னு ஆசையா இருக்குடி” என்று ஏக்கமாக உரைத்தாள்.
அவளைச் சமாதானப்படுத்தியவள், இன்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.
“கேட்டீங்கல்ல, உங்க அப்பாவும், அண்ணாவும் நடந்துக்கிட்ட விதத்தில் நேத்து கொலை சண்டை வர இருந்து தப்பி போயிடுச்சு. கர்ணன் ஐயாவின் மனம் சாந்தமாகட்டும். அப்ப நீங்களோ, இல்லை உங்களுக்காக நானோ போயி அவரிடம் பேசிப் பார்க்கலாம்.”
தோழியின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் மகிழினி. கண்களில் வடிந்த கண்ணீர் அவளுக்கு நன்றியுரைத்தது.
“அடுத்த மாசம் வெளியூருக்கு போக இருப்பதா உங்க வீட்டுல பேச்சு இருக்கு. அப்ப நாம இங்கே இருந்தால், கர்ணன் ஐயாவை சந்திச்சு பேச அருமையான வாய்ப்பு!”
உடனே திகழினி, “கண்டிப்பா, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரிடம் என் நேசத்தை தெரிவிப்பேன்” என்றாள்.
இருவரின் மனதிலும் இருந்த கவலைகள் கொஞ்சமாக அகன்றன.
மங்களாபுரி எனும் ஊர் மிகப்பெரிய பட்டணமாக உள்ளது. அங்கு வசித்து வருகின்ற மக்கள் விவசாயம், கூலி வேலை, சொந்த வேலை, வெளியூரில் தங்கி இருப்பது, திருமலையின் தோட்டம், அலுவலகம், ரைஸ் மில்களில் பணிபுரிவது என்றிருந்தனர்.
அதற்கு நேர் மாறாக, அந்த ஊரின் தட்ப வெட்ப நிலையை ஆராய்ந்து, குறிப்பிட்ட பகுதியில் பருத்தி செடிகளை அமைத்து அதன் வழியாகப் பல நிறத்தில் உள்ள காட்டன் வேட்டி, சட்டை, துண்டுகள், புடவைகள், சுடிதார்கள் செய்வதற்கான பணியை அப்பாவின் ஆதரவுடன் நடத்தி வருகிறான் கர்ணன். சொந்தமாக அலுவலகம் அமைத்து அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடைகளை வெளியிடங்களுக்கு விற்பனை செய்வதால், அவனும் சாந்தனுவும், வேலவனும் அதையே பார்த்து வருகின்றனர்.
அதனால் கர்ணனின் மீதான மரியாதையும், தன்னிடம் பணிபுரிபவரிடம் காட்டுகின்ற அக்கறையும், அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. அத்துடன், ஊர் தலைவரை எதிர்த்து நியாயத்திற்காக முன் வந்த அவனைப் புதிய தலைவர் பதவிக்குத் தேர்வு செய்தால், இந்த ஊருக்கு விமோசனம் கிடைக்கும். கொத்தடிமை தனமும், வசதியானவர்களின் அராஜகமும் அழிந்து போகும் என்று ஆசைப்பட்டு, கர்ணனின் பெயரை அனைவரும் முன்மொழிந்தனர்.
அது திருமலைக்கு பலத்த அடியாக இருந்தது. ஏற்கனவே, குற்றவாளியாக மாற்றித் தன்னை ஊருக்கு மத்தியில் நிற்க வைத்து விட்டதால், மறுபடியும் அந்தப் பதவியை வகிக்க அவரால் முடியவில்லை. இந்த முறை தனது மகன் திருக்குமரனை முன்னிருத்த ஆசைப்பட்டார். இந்த நேரத்தில் கர்ணனை எதிர்பார்க்காமல் அவர் திணறினார்.
கோவர்தனனுக்கு இதில் எல்லாம் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை. திருமலையை பகைத்துக் கொள்ளவும் ஆசையில்லை. ஆனால், தனது எண்ணத்திற்கு மாறாக மகனை நடத்தி வருகின்ற உறவினர்களையும், நண்பர்களையும், விவசாயிகளையும் நினைக்கும்போது என்ன செய்வதெனத் தெரியவும் இல்லை.
நாட்கள் வேறு வேகமாகச் சென்று கொண்டு இருக்கின்றன. திருமலை அவரது மகனை வெற்றி பெற செய்வதற்காக என்னவெல்லாம் செய்வாரோ அதுவும் தெரியவில்லை.
மகனுக்கு எதுவும் ஆகிடக் கூடாது. அதுபோலத் தாங்கள் யார் என்ற விசயமும் அவனுக்குத் தெரிந்து விடக் கூடாது. அவர்களுக்கு இந்த ஊரில் புதிய வீடு வாங்கிக் கொடுத்து, வேலைக்கும் ஏற்பாடு செய்து தந்தது இராஜவேலு என்பது திருமலை அறிந்திருப்பாரா தெரியவில்லை. தரகரின் மூலமும், தனக்கு வேண்டப்பட்ட நபரின் உதவியுடன் செய்து தந்திருந்தார்.
குழந்தை, மனைவி சகிதம் வந்திருந்ததால், எல்லோரும் கர்ணனை அவரது மகன் என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதில் எந்தப் பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதால் தான் தழைந்து போகப் பார்க்கிறார். கர்ணனுக்கு அது தெரியாததால், திருமலை வீட்டாரை தோற்கடித்து விடும் எண்ணத்தில் இவ்வாறு நடந்து வருகிறான். இவை யாவும் எங்கே கொண்டு விடுமோ? என்று தெரியாமல் நிம்மதி இழந்து காணப்பட்டார்.
திருக்குமரன் கர்ணனை எப்படி தோல்வியைக் கவ்வ வைத்து, இந்த ஊரை விட்டுத் துரத்தியடிப்பது? என்ற யோசனையில் இருந்தான்.
அவனது நெருங்கிய நண்பன் விஜயனுக்கு, திகழினியை மணம் புரிந்து வைக்க வேண்டும் என்பது அவனது நெடுநாள் ஆசை. அடிக்கடி அவனும் அவனது உடன்பிறப்புகளும் இங்கு வந்து, விருந்து உபச்சாரணைகளில் கலந்து கொண்டு சிறப்பித்து செல்வார்கள்.
அவர்களிடையே உள்ள நட்பு ஒளிவு மறைவு இல்லாதது. இரு ஊரில் நடப்பவை குறித்தும் அவர்கள் பேசிக் கொள்வார்கள். அப்படி பேசும்போது தான் கர்ணனின் வளர்ச்சி மற்றும் பகை குறித்தும் சொல்லி அவனை அழிக்க ஆலோசனை கேட்டான்.
“இதுக்கு ஏன் இத்தனை யோசனை? அடுத்த வாரம் எங்க ஊரில் வரக்கூடிய சாமுண்டி அம்மன் திருவிழாவுக்கு மட்டும் எப்படியாவது அவனை வர வச்சிட்டா போதும். மீதியை நம்ம பசங்க பார்த்துக்குவாங்க. நானும் உங்க எல்லாரையும் அதுக்கு தான் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க வந்தேன்” என்றான்.
உடனேயே, “நண்பன்னா இப்படிதான் இருக்கணும். இது மட்டும் நடந்துட்டா, திகழினி உனக்குத் தான்!” என்று ஆசை காட்டினான் திருக்குமரன்.
கர்ணன், தன்னை அழிப்பதற்கு இருவர் திட்டமிடுவதை அறியாமல், இராஜரிஷியின் மாளிகைக்கு அருகில் நடக்க இருக்கும் விழாவிற்குச் செல்ல ஆசை கொண்டான்.
அவன் அந்த ஊருக்குப் போவதில் அவனது பெற்றோருக்கு எள்ளவும் சம்மதமில்லை. ஏனெனில், அந்த ஊர் தான் அவர்களின் சொந்தவூர். அவரது உடன்பிறந்த தம்பி கதிர்காமன் துர்மரணம் அடைந்த ஊர். அதே ஊரில் தான் இராஜவேலுவும் இருக்கிறார். அவர் மட்டும் பேரனைக் கண்டு விட்டால், அதன் பிறகு கர்ணன் அவர்களுக்கு கிடைப்பது கடினம்.
அதுபோல அவர்கள் யாரென்ற விசயம் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிய வந்தாலும், கர்ணனின் பிறப்பு ரகசியத்தை அதற்கு மேலும் மறைத்து வைக்க முடியாது. அதனால் தான் அங்குப் போக வேண்டாம் என்று தடுக்கப் பார்க்கிறார்கள்.
ஆனால், அவனோ “என்ன அப்பா இது? ஏன் என்னை எங்கேயும் போக விடாம இதே ஊரிலேயே கட்டுப்பட்டியா வச்சிருக்கீங்க? மலை உச்சியில் இருக்கும் சாமுண்டி கோவிலில் திருவிழா நடக்க போகுதாம். ஊரே ஜெகஜோதியா இருந்து, ஊர் மக்கள் அனைவரும் கலந்துக்க போறாங்களாம். இந்த நேரம் என்னை மட்டும் விட மறுக்கிறீர்களே?” என்று முகத்தை இறக்கினான்.
அவர் சம்மதம் தெரிவிக்க முடியாத நிலையில் இருக்க, “ஜல்லிக்கட்டு, பெரிய உருண்டை கல்லைத் தூக்கும் போட்டி, உறி அடிக்கும் போட்டி, மாட்டுவண்டி பந்தயம், சாக்கில் நுழைந்து தாவி ஓடும் போட்டி, வழுக்கு மரமேறும் போட்டின்னு நிறைய இந்த முறை வைக்கப் போவதா தகவல் வந்திருக்கு.
நானும், சாந்துவும், வேலவனும் போகலாம்னு ஆசையோடு இருக்கோம். இந்த நேரத்துல போயி வேணாம்னு சொல்றீங்களே, நாங்க என்ன சின்னப்பிள்ளைகளா? காரில் தானே போறோம். அதுவும் ஓட்டுநர் வேறு இருப்பதால் பயப்படாம போயிட்டு வரலாம். சரின்னு சொல்லுங்கப்பா” என்றான்.
அவர் மனைவியின் முகத்தைப் பார்த்து விட்டு, மகனிடம் எப்படி சொல்வது என்று தடுமாற்றத்துடன் நிற்க, “அப்பா, நானும் அண்ணனும் அங்கு வைக்கப் போகும் எல்லா விளையாட்டுப் போட்டியிலும் கலந்துக்கிட்டு, மொத்த பரிசையும் தட்டிக்கிட்டு வரப்போறோம். மறுக்காம ஆசிர்வாதம் பண்ணி அனுப்புங்கப்பா” என்றான் சாந்தனு.
அவர் நெஞ்சில் அடைத்துக் கொண்டு இருப்பதை மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவஸ்தையாக உணர்ந்தார்.
சிந்து, அண்ணன்கள் இருவரின் அருகிலும் வந்து, “நானும் உங்களோடு வரட்டுமா? அண்ணனுக ரெண்டு பேரும் இல்லாம போரடிக்கும் அப்பா” என்றாள்.
அவர், யாரையும் போக வேண்டாம் என்று கூற முடியாமல் கண்களை இறுக மூடித் தனது பரம்பொருளிடம் சரணடந்தார்.
அவரோ, எத்தனை நாட்கள் தான் அவனை வெளியே எங்கேயும் விடாமல், உன்னுடனே வைத்துக் கொள்ள பார்ப்பாய்? அவன் வெளியுலகை சுற்றிப் பார்க்கும் நேரத்துடன், சொந்த ஊருக்கு வரும் வேளையும் நெருங்கி விட்டது என்பது போலச் சிரித்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு 👏