
கர்ணன் வீட்டிற்கு வந்தும் யாரிடமும் பேசவில்லை; மதிய உணவையும் உண்ணவில்லை. அப்பா இன்று நடந்து கொண்ட விதம் அவனுக்குப் பிடித்தமாகவும் இல்லை. திருமலை, அவரது மகன் இருவரையும் இன்றுடன் ஒரு வழியாக்கிவிட அவன் நினைத்திருக்க, தனது தந்தையே அதற்குத் தடையாக அமைந்ததை அவனால் தாங்க முடியவில்லை.
சாந்தனு யாருக்காகப் பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றான். அண்ணன் உண்ணாமல் இருப்பதால் மனம் கேளாமல் வந்து அவனை அழைத்தான். அவனோ தடாகத்தில் நிரம்பி இருந்த நீரையும், அதில் ஆடும் பிம்பங்களையும் பார்த்தபடியே இருந்தான்.
அப்போது ஒரு பெண், மான்குட்டி ஒன்றைத் துரத்திக்கொண்டு ஓடுவது தெரிந்தது. காற்றில் பறந்த அவளது சேலையும், கலைந்து ஆடிய கார்கால கூந்தலும் அவன் கண்களில் மின்னல் போல அந்தக் காட்சி தோன்றி மறைந்தது. கண்ணைத் துடைத்து விட்டுப் பார்த்தான். சுற்றிலும் தேடினான்; யாரையும் காணவில்லை. ‘இது என்ன மாயம்?’ என்று அதிசயித்தான். சுற்றியிருந்த மரங்களின் நிழல்கள் மர்மமாக அசைந்தன.
அந்த மான்குட்டி ஒரு பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. வேட்டைக்காரர்களோ அல்லது தெரியாத நபர்களோ வந்தால் அதைக் கவர்ந்து சென்று விடுவார்கள் எனும் பயத்தில், அந்தப் பெண் எப்படியாவது அதை மீட்டுவிட முயன்றாள். முடியாதபோது இறைவனை உதவிக்கு அழைத்தாள்.
மான்குட்டியின் சத்தத்தைக் கேட்டுக் கர்ணன் ஓடோடி வந்தான். கூந்தலால் முகத்தை மறைத்துக் கொண்டு நின்ற வனதேவதை அவன் கண்ணில் விழுந்தாள். காற்றில் அலைபாயும் கூந்தலுக்கு இடையே தெரிந்த அவளது கண்கள், அவனை இறைஞ்சுவது போலப் பார்த்தன. அந்தப் பார்வையில் ஒரு காந்த ஈர்ப்பு இருந்தது. உடனே பள்ளத்தில் குதித்து மான்குட்டியை மீட்டெடுத்து அவளிடம் ஒப்படைத்தான்.
இரு கண்களும் கசிய, ஒரு மெல்லிய புன்னகையுடன் அவள் நன்றியுரைத்தாள். ஆதவனின் வெளிச்சம் அவள் முகத்தில் பட்டு மின்ன, அவளது கயல்விழிகள் காட்டிய அந்தப் பாவனையில், அதுவரை இருந்த கோபத்தை மறந்து அசையாமல் நின்றான் கர்ணன்.
“டேய் கண்ணா! யாராவது பார்த்துட்டா வீட்டுல போய் சொல்லிக் கொடுத்துடுவாங்க. வா அதுக்கு முன்னே போயிடலாம்!” மான்குட்டியின் காதோரம் இரகசியமாகச் சொல்லிக்கொண்டு அவள் விரைந்து செல்ல முயன்றாள். அவளது மெல்லிய குரல் அந்த நேரத்தில் வீசிய தென்றலோடு கலந்து கர்ணனின் செவிகளைத் தீண்டியது.
“கர்ணாவா? கண்ணாவா?”
அவன் குறும்பாகக் கேட்டதும், “செவி கேட்கும் திறனில் ஒண்ணும் குறைபாடு இல்லயே!” அவள் துடுக்குடன் சொல்ல, கர்ணனின் உதடுகள் புன்னகையால் மலர்ந்தன.
“நானும் கூட அடேய் கர்ணா! நாம் பேசுவதை யாராவது கேட்டா வம்பாகிடும். வா ரகசியமாய் போய் பேசலாம்னு கூப்பிட்ட மாதிரி நினைச்சிட்டேன்”
அவள் கருமணிகள் உருள, அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே, “ஏதேது… சரியான ஆளாக தான் இருப்பீங்க போலிருக்கு. தனியே வந்து இருக்கும் பெண்ணிடம் இப்படிதான் வம்படிப்பதா?” என்று வினவினாள்.
அவனும் விடாமல், “நீயும் கூட இப்படிதான் மோகினி மாதிரி திடீர் திடீர்னு மாயமாகி மறைவதா?” என்று பரிகசிக்க, அவளது முகம் விகசித்ததில் வலது கன்னத்தில் அழகாய் ஒரு குழி விழுந்தது.
அவனது கண்கள் அதை விட்டு விலக மறுக்க, அவளோ அங்கிருந்து போவது கண்டு தானும் நடந்து வந்தான்.
“காட்டு விலங்குகளை வேட்டையாடுவதும் தப்பு, வீட்டுக்குக் கொண்டு வந்து வளர்ப்பதும் தப்பு! இதோட அம்மா பாவம் இல்லயா? குட்டியைக் காணாம அது எவ்வளவு துடிச்சுப் போயிருக்கும்?” என்றான் கர்ணன். அவனது குரலில் ஒருவித அதிகாரமும், அதே சமயம் ஜீவகாருண்யமும் கலந்திருந்தது.
அவள் சட்டென்று திரும்பி ஒரு பார்வை பார்த்தாள். காலை நேர சூரியனின் மஞ்சள் ஒளி அவள் முகத்தில் பட்டுப் பிரதிபலிக்க, அவளது விழிகளில் தெரிந்த அந்தத் தீட்சண்யத்தில் கர்ணனின் இதயம் ஒரு கணம் துடிப்பை நிறுத்தி வெளியே வந்து விடுவது போல இருந்தது.
“நான் ஒண்ணும் திருடவும் இல்ல, வேட்டையாடவும் இல்ல. பாதுகாப்பு கொடுத்துப் பத்திரமாப் பார்த்துக்கிறேன். அதுவும் நான் இல்லாம இருக்காது” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
அவள் திருடவில்லை என்றதும் கர்ணனின் மனபாரம் குறைந்து லேசானது. “அப்படியா?” என்று வியப்பு மேலிடக் கேட்டான்.
“நான் என்ன பொய் சொல்லுவதாகவா நினைக்கிறீங்க? இதோட அம்மா அடிப்பட்டு இந்தக் குட்டியை ஈன்றதோடு இறந்து போயிடுச்சு. தாய் இல்லாம அழுதுகிட்டே இருந்ததால், எங்க அண்ணன் சித்திரஞ்சன் கொண்டு வந்து கொடுத்தார். நான் பத்திரமா வளர்த்துட்டு வரேன்.”
“சித்திரஞ்சனா?” கர்ணன் யோசனையுடன் கேட்டான்.
“ஆமாம்! இந்த மலைக்கு மறுபக்கம் உள்ள இராஜரிஷியின் மாளிகையில் தங்கி, அவரது காரியதரிசியா இருக்கார் என் அண்ணன்.”
அவன் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை மெல்லப் பரவியது. “இராஜரிஷி!”
“ஆமாம். ஐயாவைப் பார்க்க அத்தனை அன்பும் அக்கறையும் நிறைஞ்சவரா இருப்பார். யாருக்கு என்ன வேணுமானாலும் உடனுக்குடன் செய்து கொடுப்பார்” என்று அவள் பெருமையாகச் சொல்லும்போது அவள் கண்கள் மின்னின.
“ம்ம்… உன் பெயர் என்ன?” என்று மென்மையாகக் கேட்டான்.
அவள் தன் மைவிழிகளை ஒருமுறை சுழற்றினாள். அந்த விழி அசைவில் ஒரு நளினம் இருந்தது. அவன் புன்னகையை விரிவுபடுத்தினான். “சொல்லு, இத்தனை அழகாகப் பேசும் உன் பெயரென்ன?”
“என் பெயர் துவாரஹா!”
“ஓ! ரொம்ப நல்ல பெயரா இருக்கே!” அந்தப் பெயரின் இனிமை அவன் மனதிற்குள் ரீங்காரமிட்டது.
அவன் பாராட்டியதும், “நீங்களும் யாரென நான் அறியலாமா?” என்றாள் அந்தப் பதுமை.
“என் பெயர் கர்ணன்! இந்த ஊரில் உள்ள கோவர்தனன், அனுராதா தம்பதியரின் மகன்.”
அவளது கண்கள் படபடவென அடித்தன. அவன் யார் என்று தெரிந்ததும் இதழ்கள் இதமாகப் புன்னகைத்தன. “மாமன்னன் கர்ணனா?” என்று குறும்புடன் கேட்டாள்.
அவளது குறும்புப் பேச்சில் மனதாரச் சிரித்துக்கொண்டு, “நீங்கள் மட்டும் யாராம்? அந்த மாமன்னனின் துணைவியாரா?” என்று திருப்பிக் கேட்டான்.
அவள் வெண்ணிற முத்துப் பற்கள் தெரிய சிரிப்பைச் சிதற விட்டாள். அந்தச் சிரிப்பொலி தடாகக்கரை முழுவதும் எதிரொலித்தது. அதில் சிதறிய தன் மனதை அடக்க முயன்றான் கர்ணன்.
“மாமன்னரே! நான் அவரது பட்டத்து ராணியாகும் தகுதியுடையவள் அல்ல; சாதாரண பணியாளின் தங்கை. என் பெயரும் விருஷாலி இல்லை!” என்று சொல்ல, இருவரும் வாய் விட்டுச் சிரித்தார்கள்.
தடாகத்தில் அத்தனை நேரமும் மேலே நீந்திக் கொண்டிருந்த மீன்கள் எல்லாம் அவர்களின் கலகலப்பான சிரிப்பொலியில் அஞ்சி உள்ளே சென்று மறைந்தன. அந்த மான்குட்டி மட்டும் ஏதும் புரியாமல் இருவரின் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தது.
நேரமாவதை உணர்ந்து அவள் விடைபெற முயல, கர்ணன் அந்த மான்குட்டியின் தலையை வாஞ்சையுடன் வருடி விட்டான். அவனது கரங்களின் ஸ்பரிசத்தில் ஒரு தந்தைக்கே உரிய கனிவு இருந்தது.
“கவலைப்பட வேண்டாம் மாமன்னரே! நான் என் கண்ணனைப் பத்திரமாப் பார்த்துக்குவேன். நேரமாகுது, வரட்டுமா?” என்று புன்னகையை அவனுக்குப் பரிசளிக்க, அவளது பேச்சில் இருந்த அர்த்தத்தில் அவனது உள்ளத்தில் சூடான நீருற்று பாய்ந்தது.
“கண்ணனோடு சேர்த்துக் கர்ணனையும் பார்த்துக் கொள்வீர்களா தேவியாரே! மறுபடியும், நான் எப்படி சந்திப்பது?”
அவளது விழிகள் கர்ணனை நோக்கின. அவனும் பார்த்தான். இரு விழிகளிலும் சொல்ல முடியாத ஏதோ ஒரு பரவசம் தெரிந்தது.
அவள் இதழ்கள் மலர, “என் கர்ணனை… ம்ஹூம் கண்ணனை மறுபடியும் பார்க்க ஆசையா இருந்தா வாருங்க இராஜரிஷி மாளிகைக்கு” என்றவள், அவன் பதிலளிக்க அவகாசம் தராமல் பாய்ந்தோடி வனத்திற்குள் மறைந்தாள்.
அவள் போகும்போது சொல்லிச் சென்ற வார்த்தைகளை ரசித்தவன், துவாரஹா சென்ற திசையை பார்த்துக்கொண்டே இருந்தான். அவள் விட்டுச் சென்ற மல்லிகை வாசனையும், அவளது சிரிப்பொலியும் அங்கேயே நிலைத்திருப்பது போலத் தோன்றியது.
வீட்டிற்குள் நுழைந்த கர்ணன், அப்பாவின் வாடிய முகத்தைக் கண்டதும் அருகில் சென்று நின்றான். அவர் மகனிடம் மன்னிப்புக் கோருவது போலப் பார்க்க, கர்ணன் சிரித்தபடியே “சாப்பிட்டீங்களாப்பா?” என்று கேட்டான்.
அவர் கண்கலங்கி ‘இல்லை’ என்பது போலத் தலையாட்ட, அவன் அம்மாவையும் தங்கையையும் பார்த்தான். அவர்களும் இன்னும் உண்ணவில்லை என்பது புரிந்தது.
“சாந்து! சமையலறைக்குப் போய் அம்மா செஞ்சு வச்சிருக்கிற எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடு. நாம எல்லாரும் சேர்ந்து காலி பண்ணிடலாம்!”
உடனே அவன் உள்ளே செல்ல, அனுராதாவும் சிந்துவும் உணவுகளை எடுத்து வந்து கூடத்தில் வைத்தார்கள். பாயை விரித்து அனைவரும் வட்டமாக அமர்ந்து உண்ணத் தொடங்கினர். அனைவரது பாசத்தையும் கண்ட கர்ணனுக்குக் கண் கலங்கியது.
“என்ன அண்ணா, காரம் அதிகமா இருக்கா?” என்று சிந்து கேட்க, “இல்லடா” என்றான் கர்ணன். “அப்புறம் ஏன் கண் கலங்குறீங்க?” என்று கேட்டுக் குடிப்பதற்குத் தண்ணீர் கொடுத்தாள். சாந்தனு அவன் முதுகை வருடிக் கொடுத்தான். அப்பா அவன் மார்பில் கை வைத்துத் தடவினார்.
அனுராதா வருத்தத்துடன், “எப்பவும் போலத்தான் செய்தேன்ப்பா. எப்படி காரம் அதிகமாச்சுன்னு தெரியலயே… அம்மாவை மன்னிச்சுடுப்பா” என்றார்.
அவனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தான் அழுவதைக் கண்டால் அவர்கள் கவலைப்படுவார்கள் என்பதால், “காரம் இல்லம்மா, உங்க எல்லாரையும் நினைச்சேன்; கண்ணீர் வந்துடுச்சு. எத்தனைப் பிறவி எடுத்தாலும் நீங்க எல்லாரும் எப்பவும் என்கூடவே இருக்கணும்” என்றான்.
“காலையிலிருந்தே கஷ்டப்பட்டு வேலை செய்றீங்களே, ஏன் இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாம இருக்கணும்?” என்று அவன் ஆதங்கத்துடன் கேட்க, “நீங்க சாப்பிடாம நாங்க மட்டும் எப்படிச் சாப்பிடுவது அண்ணா?” என்றாள் சிந்து.
தங்கையை வாஞ்சையுடன் அணைத்துக்கொண்டவன், “இனிமேல் அண்ணன் நேரத்துக்கு வந்துடுவேன், சாப்பிடுடா” என்றான்.
உணவை முடித்த கர்ணன் ஓய்வெடுக்கப் படுக்க, தம்பி, தங்கை மற்றும் அப்பா அவனுக்குப் பணிவிடைகள் செய்தனர். இது அவர்களின் வழக்கமான அன்பு. தாயின் மடியில் தலை சாய்த்த கர்ணனுக்கு, தன் குடும்பத்தின் மீதான நெகிழ்ச்சி கூடியது.
கர்ணனின் சிகையை ஆதுரமாக வருடிக் கொடுத்த அனுராதாவிற்கு, இன்றும் அவன் சிறு குழந்தையாகவே தெரிந்தான். அவனது தாத்தா மட்டும் அன்று அவனை அவர்களுக்குக் கொடுக்காமல் இருந்திருந்தால், இன்று அவர்கள் இப்படியொரு வாழ்க்கை வாழ்வது சாத்தியமில்லை.
வசவு பேச்சு, இடிச்சோறு, நிம்மதியற்ற வாழ்க்கை, சொந்த வீட்டில் கூடச் சுதந்திரமாகச் சாப்பிட்டு, சந்தோஷமாக இருக்க முடியவில்லை. கணவனிடம் மனம் விட்டுப் பேச முடியவில்லை. அவளது உறவினர்கள் அந்த வீட்டிற்கு வந்து தங்க முடியவில்லை. அவளாலும் கணவன் கோவர்தனனை பிரிந்து செல்ல முடியவில்லை. ஒருநாள் கூட அவனுடன் எங்கேயாவது மகிழ்ச்சியாகச் சென்று வர முடியவில்லை. வெளியிடத்தில் தங்க முடியவில்லை. சுற்றுலா ஸ்தலங்கள், விருந்தினர்களின் வீட்டிற்குப் போக முடியவில்லை… இப்படி எத்தனையோ முடியவில்லை என்பதை அவள் வாழ்க்கையில் ஏழு வருடங்களாக அனுபவித்து வந்து விட்டாள்.
என்றைக்கு கோவில் பூசாரி நல்வாக்கு சொன்னாரோ, அதன் பிறகு நடப்பவை யாவும் நன்மையாகவே இருக்கிறது. ஆனால், கர்ணன் முகம் வாடினாலும், பேசாமல் இருந்தாலும், நேரத்திற்கு வீட்டிற்கு வராமல் இருந்தாலும், அந்தத் தாயுள்ளத்தால் தாங்க முடிவதில்லை.
சிந்து அண்ணனைப் பார்த்துக்கொண்டே சாந்தனுவிடம் ஏதோ சொல்லிக் கொண்டு இருக்க, அவனும் அண்ணனின் உறக்கம் கலைந்து விடாமல் மெதுவாகப் பேசியவாறு இருந்தான்.
அதேசமயம், திருக்குமரன் கோபத்தின் உச்சியில் இருந்தான். கர்ணனை எப்படியாவது பழிவாங்கத் துடித்தான். அவன் அப்பா திருமலை அவனைத் தடுக்க முயன்றும் அவன் கேட்கவில்லை. “அந்தப் பொடிப்பயல் ஊர் மக்கள் முன்னாடி உங்களைத் தலைகுனிய வச்சிட்டான்! அவன் அப்பாவும் அதேபோலத் துடிக்கணும்! என் மனம் எப்படித் தகிக்குதோ, அதே மாதிரி அவனும் நிம்மதி இழந்து தவிக்கணும்!” என்று வஞ்சினத்துடன் உரைத்தான்.
“அந்தப் பயலை எதிர்த்துப் பேச நீங்க இடம் கொடுத்தது உங்க தப்பு! நான் அப்படி விடமாட்டேன். அவனுக்குப் பதிலுக்குப் பதில் கொடுக்காம விடமாட்டேன்!” என்று சவாலிட்டான்.
“பொறு, நானும் அவனை அப்படியே விட்டுடுவதா சொல்லல. பதிலுக்குப் பதில் கொடுக்கத்தான் வேணும். அது இப்ப வேண்டாம் என்கிறேன்…”
அவன் புரியாமல் பார்த்ததும், “நான் சொல்வது உனக்குப் புரியலயா? இப்ப நடந்த பிரச்சினை ஊர் முழுவதும் பேசு பொருளாகிடுச்சு. இந்த நேரத்துல அவனுக்கு ஏதாவது ஆனாலும் நம்ம பெயர் தான் உருளும். அவனுக்கு கொடுக்கணும். அதுவும் பலமாய் திருப்பித் தர முடியாத அளவுக்கு, நாம தான் கொடுத்தோம்னு யாரும் சந்தேகப்படாதவாறு இருக்கணும். அவன் அதை ஆயுசுக்கும் மறக்காதவாறு செய்து காட்டணும்” என்று மகன் மனதில் நஞ்சைக் கலந்தார்.
ஏற்கனவே அவன் ஒரு முரடன். இப்போது அவரும் மகனைத் தூண்டி விடும் விதமாக சொல்லி விட, அவனோ மதம் பிடித்த யானை போல் ஆனான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கர்ணன் ❤️ துவாரகா
அருமையான பதிவு 👏