
அத்தியாயம் : 5
கர்ணன், தம்பி சாந்தனுவை அழைத்துக் கொண்டு மலையடிவாரத்தின் கீழ்ப்பகுதிக்கு வந்திருந்தான்.
அருவியிலிருந்து நீர் கொட்டும் ஓசை செவியை நிறைத்தது.
“அண்ணா, இன்னைக்கு மானா? முயலா? காட்டுப் பன்றியா?”
“ம்ம்… நம்ம ஊருக்குப் பின்பக்கத்தில் உள்ள தோட்டத்தைச் சில காட்டுப் பன்றிகள் தாக்கி அழிப்பதா புகார் வந்திருப்பதா அப்பா சொன்னார். அவைகளைப் பிடிக்கத்தான் வந்து இருக்கோம்!”
“ஓ! பன்றியா?”
“ஓ! பன்றி இல்லைடா… காட்டுப் பன்றி!”
சாந்தனு சிரித்ததும், “வா, மலையின் அடிவாரத்தில் உள்ள பாறை வழியா ஏறி, உயரமான திண்டின் மீது உட்காரலாம். அப்பத்தான் கீழ்ப்பகுதியில் நடமாடும் விலங்குகள் நம் கண் பார்வையில் அகப்படும்” என்றான்.
“சரி அண்ணா!”
இருவரும் அங்கிருந்த பாறையைப் பற்றிக்கொண்டு, மெதுவாக மேலே ஏறிச் சென்று அமர்ந்தார்கள். இருளில் பார்வையைக் கூர்மையாக வைத்துச் செடிகளுக்கு இடையில் தெரிந்த அசைவுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்தார்கள். அப்போது, தூரத்தில் யாரோ இருவர் நடந்து வருவது தெரிந்தது. கர்ணனின் பார்வையும் அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தது.
“அண்ணா, நம்மைப் போலவே வேறு யாரோ வருவது போலிருக்கு!”
“ம்ம்… ஆமாம்! நானும் அதைத்தான் பார்த்துட்டு இருக்கேன். யாரா இருக்கும்?” என்று யோசனையுடன் கண்ணுற்றான்.
அவர்கள் இருவரும் திருடனைப் போலத் திருதிருவென முழித்துக்கொண்டு, அங்கும் இங்கும் பார்த்தவாறு நடந்து வந்தார்கள்.
“அண்ணா, ஏதும் வழிப்பறித் திருடர்களா இருக்குமா? இல்ல, காட்டு விலங்குகளை வேட்டையாட வருபவர்களா இருக்குமா?”
“தெரியலையே சாந்து! நானும் உன்னோடு தானே இருக்கேன்! கொஞ்சம் பொறு, அவங்க யாருன்னு அவங்களே காட்டித் தருவாங்க”
அண்ணனின் கூற்றில் அவன் அமைதியாகி விட, பார்வை மட்டும் எதிரில் வருபவரை உன்னிப்பாக நோக்கியது.
கையில் ஏதோ வைத்துக்கொண்டு இரு பக்கமும் பார்த்தவர்கள், காட்டுப் பன்றிகள் வசிக்கும் இடத்திற்குச் சென்று அவற்றைப் பிடிக்க முயல, ஒன்றின் சத்தத்தில் ஆங்காங்குப் படுத்திருந்த அத்தனையும் காடே அதிரும் விதமாகக் கத்திக்கொண்டு ஓடியது.
அப்படி ஓடியவை காட்டைத் தாண்டி நிலப்பகுதிக்குச் சென்று நிலக்கடலைத் தோட்டம், மரவள்ளிக் கிழங்கு, வாழை மற்றும் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்தது.
“இப்பதானே விஷயம் புரியுது! யாரோ ஒரு சிலரால் தனது வாழ்வாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதால், அவைகள் பயந்து போயி விளைநிலங்களுக்குள் புகுந்து மறைஞ்சிருக்கு. அப்படியே, பசியாறி ஓய்வெடுக்கவும் செஞ்சிருக்கு. இது தெரியாம காட்டுப் பன்றிகள் கூட்டமா வந்து, பயிர்களை அழித்து நாசம் செய்வதா விவசாயிகள் குற்றம்சாட்டி இருக்காங்க. ஆனால், இவங்க யார்? எதனால் இப்படிச் செய்றாங்க?” என்று தாடையைத் தடவினான்.
“அண்ணா, அவங்களைப் பார்த்தா மாமிசம் தின்னும் ஆசையில் வேட்டைக்கு வருபவரைப் போலிருக்கு. தினமும் ஆட்கள் இல்லாத இந்தப் பகுதிக்கு வந்து, ஏதாவது மிருகத்தை வேட்டையாடுவதை வழக்கமா வச்சிருப்பதா நினைக்கிறேன்.”
அவன் தனக்குத் தோன்றியதை யூகமாகக் கூறியதும், “அப்படித்தான் செய்வதா இருந்தா, இன்னையோட கைலாசத்துக்கு அனுப்பி வைக்கிறேன்! பகல் நேரத்துல வந்தா யாராவது பார்த்துடுவாங்கன்னு ராத்திரியில் வந்து இப்படி நடந்துக்குறாங்க. இவங்களைச் சும்மா விடக்கூடாது!”
தம்பியிடம் கூறிவிட்டு மெதுவாகக் கீழே இறங்கிச் செல்ல முயற்சிக்க, “அண்ணா, அவங்க கையில் ஆயுதம் ஏதாவது வச்சிருந்து உங்களைத் தாக்கிடப் போறாங்க; கவனம்!” என்று எச்சரித்தான் சாந்தனு.
“நீ பத்திரமா இங்கேயே இருந்துக்கோ, நான் முடிச்சிட்டு வரேன்” என்று இறங்கிச் சென்றான் கர்ணன்.
அப்போது, திடீரென மேலும் இருவர் அங்கு வந்துவிட, இரண்டு பெரிய கொழுத்த கரும்பன்றியைத் தூக்க முடியாமல் இழுத்துக்கொண்டு செல்ல முயன்றவர்களின் முன்பு, முகத்தைத் துணியால் மறைத்துக் கையில் ஈட்டியுடன் வந்து நின்றான் கர்ணன்!
அவன் யாரென அடையாளம் தெரியாமல் நால்வரும் அவனை அடித்துத் தள்ளி விட்டுச் செல்ல முயற்சிக்க, கர்ணன் அவர்களை நிற்க முடியாத அளவிற்குத் தாக்கித் தரையில் விழ வைத்தான். வேறு யாராவது மறைந்து இருக்கிறார்களா? பன்றிகளை எப்படிக் கொண்டு செல்ல வந்தார்கள்? அவர்கள் யார்? போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, அவர்களிடம் இருந்த இரண்டு பன்றிகளையும் மீட்டான்.
பின்னர், அவர்களின் கைகளைப் பின்புறமாகக் கட்டி வைத்து, தம்பியையும் வரச் செய்து, ஆறு பேருமாக அங்கிருந்து சென்றார்கள்.
கர்ணனிடம் பேசிவிட ஆசைப்பட்டு அங்கு வந்த திகழினி, பன்றிகள் கூட்டம் கூட்டமாக ஓடுவதைக் கண்டதும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சுளாவின் பற்றிய கைகளை விடவே இல்லை.
“இதென்ன மஞ்சு இப்படி ஆகிடுச்சு? எப்படிடி கீழே இறங்கிப் போவது? நேரமானா வீட்டுல தேடுவார்களே!” என்று பீதியுடன் கூறினாள்.
“எனக்கு மட்டும் எப்படித் தெரியுமாம்? எங்க வீட்டிலும் கூடத்தான் தேடுவாங்க” என்று அழுது விடுபவளைப் போலக் கூறினாள் மஞ்சுளா.
“நீதான் எங்க வீட்டுல இன்னைக்குத் தங்குவதா சொல்லி தானே வந்து இருக்கே! பிறகும் எதுக்குடி உன்னைத் தேடப் போறாங்க? நாம ரெண்டு பேரும் நேரமா சாப்பிட்டுத் தூங்கப் போவதா பொய்யுரைத்து, ரகசிய அறையின் வழியா மாறுவேஷத்தில் வந்தா, இங்கு நம்மைப் போல ஆறு ஆண்கள்!”
திகழினியின் பயமும் திகைப்பும் அவளது வார்த்தையில் வெளிப்பட்டது. மஞ்சுளாவிற்கு அச்சத்தையும் மீறிச் சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“ஆமாண்டி, நல்லா சிரி! உன் பேச்சைக் கேட்டுக் காட்டுக்குள் வந்து மாட்டிக்கிட்ட என்னைச் சொல்லணும்” என்று கண்ணைக் கசக்கினாள்.
அவளைப் பார்க்கப் பாவமாக இருந்தது. “எப்படியும் கர்ணன் ஐயாவும் இந்த இடத்துலதான் இருப்பாங்க. பயப்படாம இருங்க திகழ்! நீங்களே பேசித் திருடர்களிடம் காட்டிக் கொடுத்துடாதீங்க” என்று எச்சரிக்கை விடுத்தாள்.
“ஏண்டி மஞ்சு! இந்தக் கரடியெல்லாம் மரத்துலதானே இருக்கும்? நாம இருக்குற இடத்துல எதுவும் இருக்காது இல்லையா?” என்று கருமணிகள் உருள மரத்தை உற்றுப் பார்த்தாள். அங்கு ஒரே இருள் மயமாக இருந்தது.
“எப்படிடி வீட்டுக்குப் போவது? பயமா இருக்கு!” என்று உதடுகள் துடிக்கக் கூறினாள்.
“அப்பேர்ப்பட்ட மகராசனை விரும்பி மணக்க இருப்பவர், சாதாரண கரடிக்குப் பயப்படலாமா?”
திகழினி பல்லைக் கடித்தாள். “நீ மட்டுமே போதும் என்னை இல்லாம ஆக்கிட! உன் பேச்சைக் கேட்டேன்ல… எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்!”
மஞ்சுளா சிரிப்பை அடக்கியவாறு இருக்க, மரத்தின் கீழே உறுமல் சத்தமும் மரத்தை அசைப்பது போலவும் இருந்தது.
“அச்சச்சோ!! சொன்னது போலக் கரடி வந்துடுச்சுடி. நாம பேசியதைக் கேட்டு இருக்குமோ?”
“ஆமாம்! அதுக்கு மனுஷங்க பேசும் பாஷை நல்லா தெரியும் பாருங்க! உங்களைத் தேடி வந்திருக்கு.”
‘இவளை என்ன செய்தால் தகும்?’ என்று உறுத்து விழித்து விட்டு, “அப்படியே ஒருவேளை கரடி வந்தாலும், முதல்ல உன்னைத்தான் சாப்பிட்டுப் பசியாறும்” என்றாள் திகழ்.
மீண்டும் மரம் பலமாக உலுக்கப்பட்டதில், இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்துக் கொண்டார்கள்.
“மரத்தை விட்டுக் கீழே இறங்கும் எண்ணம் உங்க ரெண்டு பேருக்கும் இல்லையா?”
திடீரென்று கேட்ட குரலில் திடுக்கிட்டு விழித்தார்கள் பெண்கள் இருவரும். அடுத்த கணம், முகம் முழுவதும் பௌர்ணமி நிலவாகக் காட்சியளித்தார்கள்.
“ஒழுங்கா இப்போ வரல, கரடியை மேலே ஏத்தி விட்டு உங்க ரெண்டு பேரையும் கீழே வர வச்சிடுவேன்!”
பெண்கள் இருவரும் சரசரவென இறங்கி வந்து அவன் முன்பு நின்றார்கள். திகழினியின் கண்கள் கர்ணனை விட்டு அகல மறுத்தன. அவன் முகம் இறுகிக் காணப்பட்டது.
“நீங்க ரெண்டு பேரும் படிச்சவங்க தானே! உங்களுக்கு அறிவென்பதே இல்லயா? வயசுப் பொண்ணுங்க இப்படித்தான் ராத்திரி நேரம் யாருக்கும் தெரியாம வருவதா?”
“இவங்க தான்…” என்று மஞ்சுளா திகழினியைப் பார்த்துக் கைக்காட்ட, “இல்ல, இவள்தான்” என்று திகழினி, மஞ்சுளாவை நோக்கிக் கை காட்டினாள்.
“முதல்ல கையைக் கீழே போடுங்க. உங்க அப்பாவோட ஆளுங்க வேட்டையாட வந்திருக்க, நீங்க அவங்களுக்குப் பாதுகாப்பா வந்து இருக்கீங்களா?” என்று கேட்டான்.
திகழினி மலங்க மலங்க முழித்தாள்.
“ஊருக்குத் தலைவரா இருந்தா ஒழுக்கமா நடந்துக்கணும். அதை விட்டு இப்படித்தான் மான், முயல், காட்டு எருது, பன்றி, பறவைகளை வேட்டையாடி உண்பதா? ஊருக்கு ஒரு சட்டம், உங்களுக்கு ஒரு சட்டமா?”
“உங்க வீட்டுல நடக்கும் விருந்துகளுக்கும் விசேஷத்துக்கும் இப்படித்தான் காட்டு விலங்குகளைப் பலியாக்குவதா? வசதியானவர் என்றாலே மனசாட்சி இல்லாம போயிடுமா?” என்று கேள்விகளை அவளை நோக்கிச் சரமாரியாக வீசினான்.
இப்படி எல்லாம் நடந்தது தெரியாமலும், கர்ணனின் குற்றச்சாட்டிற்குப் பதில் கூற முடியாமலும் இருந்தாள் திகழினி.
“நீங்க என்ன நோக்கத்துல இங்கே வந்தீர்களோ எனக்குத் தெரியாது. வயசுப் பெண்ணா லட்சணமா வீட்டுல இருப்பவர்களின் பேச்சுக் கேட்டு நடப்பதுதான் நல்லது. கிளம்புங்க!” என்று அதட்டினான்.
திகழினியின் கண் கலங்கிக் கண்ணீர் துளிகள் கன்னத்தில் இறங்கியது. உதடுகள் துடித்தன. அவனிடம் பேச வேண்டும் என்று நினைத்தவை யாவும் மனதிற்குள் மறைந்து கொண்டு, நாவை அசைக்க முடியாமல் செய்தன. விழிகள், ‘என் அப்பா செய்த தவறுக்கு என்னை வெறுத்து ஒதுக்கி விடுவாயா?’ என்று கேட்டன.
அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். உதடுகள் இறுகிக் கிடந்தன.
சாந்தனு நான்கு ஆண்களையும் தங்களுக்கு வேண்டப்பட்ட நபரிடம் ஒப்படைத்து விட்டு, அண்ணனைக் காண விரைந்து வந்தான். அங்கு இறுக்கமாக நின்றிருந்தவனைக் கண்டதும், “அண்ணா!” என்று மெதுவாக அழைத்தான்.
தம்பியின் முன்பு எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல், தொண்டையைச் செருமினான் கர்ணன்.
“சாந்து, இவங்க ரெண்டு பேரையும் யார் கண்ணிலும் படாம, அவங்க வீட்டுக்குப் போகும் பாதையில் கொண்டு விட்டு வா. நான் கிளம்புறேன்.”
திகழினி அவனிடம் பேசி விடும் முனைப்பில் முன்பு நகர்ந்து வர, கர்ணனின் பார்வையில் அவள் அங்கேயே தேங்கி நின்றாள். அவன் முதலில் நடந்து செல்ல, அவனுக்குப் பின்னால் பெண்கள் இருவரும் வந்தார்கள். அவர்களுக்குப் பின்புறம் சாந்தனு வந்தான்.
கர்ணனிடம் எதுவும் பேச முடியாமல் ஆகிவிட்ட வருத்தம், திகழினியை இயல்பாக இருக்க விடாமல் செய்தது. அவனை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே சென்று, தனது அறைக்குள் புகுந்து பஞ்சணையில் அடைக்கலம் ஆனாள். கண்கள் கண்ணீரை விடாமல் சொரிந்தன.
மஞ்சுளாவின் ஆறுதலான வார்த்தைகள் அவளைச் சமாதானப்படுத்துவதற்குப் பதிலாகப் பயத்தை அதிகரிக்கவே செய்தன.
‘தனது பங்களாவில் என்ன நிகழ்ச்சி நடக்கிறது? எதனால் தனது அப்பா இப்படியொரு காரியத்தில் ஈடுபடுகிறார்? கர்ணனுக்கு அப்பாவின் மீதான கோபம் தீருமா? நாளைக்கு நடக்க இருக்கும் ஊர்மக்கள் கூட்டத்தில், தன்னுடைய அப்பா செய்த தவறை அவன் கூறிவிடுவானா?’ என்று பயத்தில் உறக்கம் வராமல் தவித்தாள்.
****
அதிகாலையில் எழுந்த நேரத்திலிருந்தே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் திருமலை. நேற்றிரவு நடந்த சம்பவம் அவருக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியது.
ஊர்த் தலைவராக இருந்து பல வருடமாக அந்த ஊர் மக்களுக்கு நல்லது, கெட்டது செய்தும், பங்கேற்றும், தவறு செய்தவர்களைத் தண்டித்தும் வந்தவர், இன்று தானே குற்றவாளியாக நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதை நினைத்து வெட்கினார்!
ஊரின் பாதிக்கு மேற்பட்ட நிலபுலன்களைக் கொண்டிருக்கும் அவர், திடீரென இந்த ஊருக்கு வந்து வசித்து வரும் கோவர்தனன் மீது ஒரு மரியாதை வைத்திருந்தார். ஆனால், இன்று மகன் மீதான கோபம் தகப்பன் மீதும் திரும்பியது.
அதற்காக அவரிடம் சென்று தன்னை விட்டு விடுமாறு கெஞ்சிக் கேட்க மனம் வரவில்லை. எப்படி இந்த விசயத்தைக் கையாள்வது என்று யோசனையில் ஆழ்ந்தார்.
நேற்றிரவு அவரது பங்காளி குடும்பத்தாருக்கு விருந்து வைக்கவே காட்டுப் பன்றிகளைப் பிடித்து வரச் சொன்னார். மது விருந்துக்குத் தேவையான அனைத்தும் தயாராக இருந்தது. இடையில் கர்ணன் சென்று குறுக்கிட்டதால் எல்லாம் தலைகீழாக மாறி விட்டது!
கர்ணனைப் பற்றி அவருக்கும் தெரியும். எந்த அளவிற்கு நல்லவனாக இருப்பானோ, அதே அளவிற்குக் கோபக்காரனாகவும் காணப்படுவான். அவனிடம் தப்பு செய்து விட்ட பிறகு நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது!
மகன் திருக்குமரன் தான் இதைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்லிச் சென்று விட்டான். இருந்தும், அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


கர்ணன் சாந்தனு சூப்பர்
நன்றிகள் சகோதரி
சூப்பர் கர்ணா .. யார் பண்ணினாலும் தப்பு தப்பு தான் .. கர்ணனுக்கு திகழினி யை பிடிக்குமா ?? பிடிக்காதா ??
பிடிக்குமா பிடிக்காதா நீங்களே சொல்லுங்க பார்க்கலாம்…
நன்றிகள் சகோதரி
அருமையான பதிவு சகோதரி 😊
நன்றிகள் சகோதரி
Super👍