
அத்தியாயம் : 4
அன்று சிவராத்திரி! சிவபெருமானின் ஆலயத்தில் பூஜைகள் நடைபெற்று வந்ததால், அவனும் அங்குச் சென்றிருந்தான்.
கண்களை மூடி இறைவனை வழிபட்டு நின்றவன், யாரோ தன்னையே வெகுநேரமாகப் பார்த்துக்கொண்டு இருப்பதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தான். அங்கு அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றாள்.
இருவரின் கண்களும் மோதின. அவளது புன்னகையும் பார்வையும் அவனை வீழ்த்திக் கீழே தள்ளி விடும் யுக்தியுடன் காணப்பட்டன. இத்தனை நாளாக அவள் தன்னைப் பார்த்த பார்வைக்கும், இப்போது பார்க்கும் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது.
அவனது தம்பி சாந்தனு, “அண்ணா! அந்தப் பொண்ணு ரொம்ப நேரமா உங்களையேதான் பார்த்துட்டு இருக்கு. பார்க்கவும் அழகா இருக்கு இல்லயா?” என்று கேட்டான்.
கர்ணன் திரும்பித் தம்பியைப் பார்த்து விட்டு, “இல்ல, எல்லாரையும் போலத்தான் இருக்கா. அப்படி ஒண்ணும் வித்தியாசமா என் கண்ணுக்குத் தெரியல” என்று கூறினான்.
“ஆஹா… ஏதேது, என் அண்ணன் பொய்யெல்லாம் கூடச் சொல்லுவாரா? அந்தப் பெண்ணின் கண் பார்வையிலிருந்து வேகமா பாய்ந்து வந்த அம்பு, உங்க மார்பில் குத்திப் பதிலுக்குக் காதலென்னும் பிரவாகத்தை உற்பத்தி செய்தது போலிருந்ததே!” என்று கிண்டலடித்தான்.
அவன் சிரித்துக்கொண்டே, “அவள் அம்பு எய்தா அதை நான் உடைத்து எரிய தெரியாம, மார்பில் பட்டு உறைந்து போக அனுமதி அளிப்பேனா? இவளென்ன ரம்பையா, மேனகையா?” என்று சொல்ல,
“ரம்பாவும் இல்ல, மேனகாவும் இல்ல… திலோத்தமா… திலோத்தமா!” என்று பாடினான் சாந்தனு.
கர்ணன், “இதுக்குத்தான் அதிகமா படம் பார்க்கக் கூடாதுன்னு சொல்றது சாந்துப் பொட்டு! ஆமாம், சிந்து எங்கே?” என்று பேச்சை மாற்ற முயன்றான்; பார்வையையும் கூடத்தான்.
“சிந்து அம்மாவோடு சேர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டிருப்பா. இன்னைக்கு ராத்திரி முழுக்கத் தூங்காம இருக்கணுமாம், ஆலயத்தில் நடக்கும் பூஜை வழிபாடுகளில் கலந்துக்கணுமாம். அவளுக்குத் தூக்கம் வருதோ இல்லையோ, உங்களுக்கு வராது!” என்று நமட்டுச் சிரிப்புடன் நிறுத்தினான்.
தம்பியின் பேச்சும் விழிகள் சென்ற பாதையும் புரிபட, நிமிர்ந்து பார்த்தான் கர்ணன். அங்கு மோகனப் புன்னகையால் அவனை ஒரேடியாக வீழ்த்தி விடுவது போல நின்றாள் திகழினி!
இரவுப் பூஜைகள் நடைபெறத் தொடங்கின. ஒருபுறம் சிவபெருமானின் சிறப்புகளையும் பாடல்களையும் பஜனையாகப் பாடிக்கொண்டு இருந்தனர். காளைகள் இருவரும் அனைத்தையும் வேடிக்கைப் பார்ப்பதும் உதவுவதுமாக இருந்தார்கள். திகழினி, கர்ணனிடம் பேசிவிட ஆசைப்பட்டு எப்படிச் செல்வது என்று தெரியாமல் யோசனையுடன் அருகில் நின்ற தோழி மஞ்சுளாவிடம் கேட்டாள்.
“இது ஆலயம்! கொஞ்சம் அடக்கி வாசிக்கல, உங்க அப்பா நாளைக்கே உங்களுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து வச்சிடுவார். கவனம்!” என்று அவள் எச்சரித்தாள்.
“அதை விடு மஞ்சு! இவர் ஏன் இப்படி என்னைக் கண்டுக்காம இருக்கார்? அப்படி என்மீது என்ன குறையைக் கண்டாராம்? நானும் எப்படியெல்லாமோ அவர் மனதை மாற்ற முயற்சித்தும் முடியலையே…” என்று இதழ்களைப் பிதுக்கினாள்.
மஞ்சுளா சிரித்தாள். “ஐயாவுக்கும் உங்களைப் பிடிக்கும். இல்லாம இத்தனை நேரம் இங்கேயே இருந்திருக்க மாட்டார். அப்புறம், நீங்க வந்திருக்கும் சேதி அறிஞ்சதால்தான் அவரும் இங்கே வந்திருப்பதா நினைக்கிறேன்.” அவள் மனதில் கர்ணனின் மீதான எதிர்மறையைக் களைய முயன்றாள் மஞ்சுளா.
“நிஜமாதான் சொல்றியா?”
திகழினியின் முகம் பூவாக மலர்ந்தது. கர்ணன் தன்னைக் காணவே வந்திருக்கிறான் என்றதும், அவளது உள்ளத்தில் அப்படியொரு மகிழ்ச்சியலை பரவியது.
“அவருக்கு என்னைப் பிடிக்குமா மஞ்சு? நான் அவர் கிட்டே எப்படி என் நேசத்தை, அவர் மீது வச்சிருக்கும் காதலை வெளிப்படுத்துவது? அவர் என்னைத் தவறா நினைச்சிட மாட்டாரே?” என்று கேட்க,
“கவலைப்பட வேணாம் திகழ்! அவர் உங்களுக்கானவரா இருந்தா நிச்சயம் உங்களுக்குக் கிடைப்பார். கர்ணன் ஐயாவைச் சாதாரணமா எடை போட்டுடக் கூடாது! அவரை யாராலும் அசைக்கவும் முடியாது; ஏமாற்றிச் செல்லவும் முடியாது” என்று பதிலுரைத்தாள்.
“சரிதான்! இப்படி நமக்குள்ளாகவே பேசிட்டு இருப்பதை விட, அதுக்கு காரணமானவரிடம் பேசினா பிரயோஜனமா இருக்கும்.”
மஞ்சுளா முறைத்தாள். “இதுக்குத்தான் சொல்வது, காதலில் விழுபவரிடமும் காய்ச்சலில் இருப்பவரிடமும் நட்பு பாராட்டக் கூடாது. ஏன்னா, அது அவர்களை மட்டுமல்ல நம்மையும் பிடித்து உலுக்கி எடுத்துடும்.”
திகழினி ஓங்கி அடித்து விடுவது போலக் கையைக் காட்ட, மஞ்சுளா வாய் விட்டுச் சிரித்தாள். அவர்களுக்குப் பின்புறமாக நின்று வேலைகளைச் செய்து கொண்டிருந்த கர்ணன், இரு பெண்களின் சம்பாஷணைகளைக் கேட்டும் கேட்காதது போல நின்றிருந்தான்.
*****
இரவு நேரம் பஞ்சணையில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் திகழினி. அவளது கண்களுக்குள் கர்ணன் வந்து நின்று கவி பாடினான். அவனது பார்வையும் சிரிப்பும் பேச்சும் மீண்டும் மீண்டும் நினைவடுக்கில் வந்து நின்று அவளை ஏங்க வைத்தது.
‘எப்போது அவனை மணந்து அவன் திருமார்பில் உறைவோம்? என்றைக்குத் தனது கனவுகள் யாவும் மெய்ப்படப் போகின்றன?’ என்று நீண்ட
பெருமூச்சை வெளியேற்றினாள்.
அவனது தேக்கு மரத்தைப் போன்ற தேகமும், திரண்ட மார்பும், விரிந்த புஜங்களும், நீண்ட கை கால்களும், நெடுநெடுவென வளர்ந்திருக்கும் உடல்வாகும், விழிகளில் இருக்கின்ற கூர்மையும், உதட்டை அசைத்து உச்சரிக்கும் வார்த்தைகளும் நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்பது போன்ற ஆசையைத் தூண்டியது. அவனிடம் எப்படித் தனது உள்ளக்கிடக்கை வெளிப்படுத்துவது என்று தெரியா விட்டாலும், அவனைத் தனிமையில் சந்திக்கும் நாழிகைக்காகக் காத்திருந்தாள் திகழினி!
‘வாய்ப்புகள் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது, தானாக அமைவதில்லை’ என்று அவளது அப்பா திருமலை அடிக்கடி சொல்வதுண்டு. அதுபோலக் கர்ணனைச் சந்திக்கும் வாய்ப்பைத் தாமாகத்தான் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால், அதை வெளிப்படுத்த முடியாமலும் போய் விடலாம் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.
காலைப் பொழுதில் எழுந்து தோழி மஞ்சுளாவிடம், “தனது காதல் வியாதிக்கு ஏதாவது மருந்து இருக்குதா?” என்று கேட்டாள்.
அவளோ, “இதுக்கெல்லாம் மருந்து கொடுக்க என்னால் முடியாது. அதுக்குரிய நபர் கொடுத்தா மட்டுமே சரியாகும்!” என்று கிண்டலடித்தாள்.
அதில் போலியாகக் கோபம் கொண்டு, “அந்த மருந்தைத் தான் எப்படி வாங்குவது சொல்லுடி! அதை விட்டு வீண் பேச்சுகளில் நேரத்தைச் செலவிடாதே” என்று தனது காரியத்தில் கண்ணாக இருந்தாள்.
கிண்கிணியாகச் சிரிப்பைச் சிதற விட்டு, “கர்ணன் ஐயா கிட்டே பேசணும், அதுக்கு ஏதாவது ஐடியா தரணும்… அப்படித்தானே?” என்று அவள் வாய் மூலமாகவே உண்மையை அறிய முயன்றாள் மஞ்சுளா.
“தெரியுது இல்லையா? பிறகும் ஏன் மறுபடி மறுபடி கேட்டு நேரத்தை வீணடிக்கணும்? காலம் பொன் போன்றது!”
செவ்விதழைப் பிதுக்கிக்கொண்டு அவள் கூறிய விதம், அருகில் ஆடவன் ஒருவன் நின்றிருந்தால் அவனது இதயத்துடிப்பை அடியோடு நிறுத்தி விடும் அளவிற்கு இருந்தது.
மஞ்சுளா மார்பைப் பற்றிக் கொண்டு, “கர்ணன் ஐயா மட்டும் இப்படியொரு காட்சியைக் கண்டு இருந்தா, மீண்டும் இயல்புக்கு வருவது கடினம்!” என்று பெருமூச்சு விட்டாள்.
“அதுக்கு நீ ஏண்டி பெருமூச்சு விடுறே? இதை யாராவது பார்த்தா நம்மை இல்லயா தப்பா நினைப்பாங்க!” என்று முறைத்தாள் திகழினி.
“அதில்ல திகழ், நான் மட்டும் ஆணாகப் பிறக்காம போயிட்டேனே… பிறந்திருந்தா…”
“பிறந்திருந்தா உன்னையும் வாயிற்காவலனா மாத்தி, கையில் ஒரு தடியையோ இல்ல ஈட்டியையோ கொடுத்துச் சீருடை அணிய வச்சு மதில் சுவரோரம் நிறுத்தி இருப்பாங்க. ம்ஹூம்… இப்படியொரு பணியாள் கிடைக்கக் கொடுத்து வைக்கலையே!” என்று ஏக்கப் பெருமூச்சை வெளியிட்டாள். அடுத்த கணம் பஞ்சணையின் மீதிருந்த தலையணை, திகழினியின் நெஞ்சணையாக மாறி இருந்தது.
இருவரும் கலகலவென நகைத்தார்கள்.
“ஏன் மஞ்சு, உன்கிட்டே எத்தனையோ முறை சொல்லியும் கேட்காம, எதனால் என்னை எப்பவும் மரியாதையாகவே கூப்பிடுறே? நீயும் நானும் ஒரே வகுப்புல படிச்சோம், ஒத்த வயதும் குணமும் உடையவரா இருக்கோம். பிறகும் என்கிட்டே உரிமையா பேசுறதுக்கு என்னடி தயக்கம்? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று தனது நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.
அவள் திடுக்கிட்டாள். இதை எப்படி திகழினியிடம் சொல்வது என்று தடுமாறினாள்.
அவள் முகத்தில் ஓடிய உணர்வுகளைப் படித்துக் கொண்டு, “நீ பேசாம இருப்பதைப் பார்த்தாலே தெரியுது. ஏதோ விசயம் இருக்குது… சொல்லு, யார் உன்னை என்ன சொன்னா?” என்று மறுபடியும் வினவினாள்.
அதற்கு மேலும் மறைக்க முடியாமல், “ஆமாம் திகழ்! எங்க வீட்டுல நான் உங்களோடு சேர்ந்து படிக்குறப்பவே சொல்லிட்டாங்க. ஆனாலும் நான் கேட்காம சண்டித்தனம் செஞ்சதால் திட்டும் அடியும் கிடைச்சது. உங்க அண்ணன்…” என்று கூறியவளால் மேலும் சொல்ல தயக்கமாக இருந்தது.
திகழினி, “என் அண்ணன்! ம்ம்… சொல்லுடி என் அண்ணன் உன்னை என்ன செஞ்சார்?” எனக் குறும்பாகக் கேட்டதும், முகம் சிவந்து போய், “ம்ப்ச்… அவர் எதுவும் செய்யல” என்று உடனேயே குறுக்கிட்டாள் மஞ்சுளா.
“அதானே பார்த்தேன்! ஒருவேளை எங்க அண்ணன் உன்னைத் தூக்கிட்டுப் போயி எதுவும் செஞ்சுட்டாரோ நினைச்சிட்டேன்.” அவள் உதட்டை வளைத்துக் கூறிய விதத்தில், முறைத்து பார்த்தாள் மஞ்சுளா.
‘அப்படியே அண்ணனை மாதிரியே தங்கையும்…’ என்று அவள் முணுமுணுக்க, செவியருகில் சென்று என்ன சொல்கிறாள் என்று பார்த்தாள் திகழினி.
மஞ்சுளாவின் இதழ்கள் சிரிப்பை உதிர்க்க, “நீ இருந்த நிலையைப் பார்த்து நானும் என் அண்ணன் திருக்குமரன், அண்ணியார் பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குப் போயிருக்கும் நேரத்துல, உன்னோடு விளையாடப் பார்க்கலாம்னு இருந்தாரோ நினைச்சிட்டேன்…” என்று சத்தமாக சிரித்தாள்.
மஞ்சுளா இரண்டு எட்டு தள்ளி நின்று இடுப்பில் கையையும் வைத்துக் கொண்டு, “உங்க அண்ணன் அப்படிச் செஞ்சா உடனே நான் சரின்னு சொல்லிடுவேனா? நான் பேசும் முன் துடைப்பக்கட்டும் அகப்பையும்தான் பேசி இருக்கும்!” என்றாள் துடுக்குடன்.
அவள் கூறிய விதத்தில் அப்படியே மனதில் நிறுத்திப் பார்த்தவள், வயிற்றைப் பிடித்தவாறு பெரிதாக நகைத்தாள்.
சிரிப்பினூடே அவள், “ஏண்டி! இப்படி பிகு பண்ணனும்? பேசாம ஒத்துக்கிட்டா எனக்கு ஒரு சின்ன அண்ணி, அதுவும் பிடித்தமான அண்ணி கிடைச்சிருப்பாங்க. ம்கூம்… ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சும் மிஸ் பண்ணிட்டியே மஞ்சு!” என்று கேலி செய்தாள்.
உடனே அவள் இவளைத் துரத்த, திகழினி தனது அறையில் உள்ள பெரிய படுக்கையை சுற்றி ஓட என்று இருவரும் சற்று நேரம் விளையாடி மகிழ்ந்தார்கள்.
பின்னர், “இதுக்குத்தான் ‘வசதியானவர்கள், ஜமீன் வம்சத்தாருடன் பழக்கம் வைப்பது நல்லது இல்ல; அங்குள்ள ஆண்கள் அடக்கம் இல்லாதவர்கள், வீட்டு வேலைக்காரியைக் கூட விட்டு வைக்கமாட்டார்கள்’னு எங்க அம்மா சொல்லுவாங்க. அது எத்தனை சரியா இருக்கு பாரு…” என்று இதழ்களைச் சுளித்தாள் மஞ்சுளா.
திகழினி சிரித்துக்கொண்டே அவளது தோள் மீது கையிட்டு, “நீ சொல்வதும் உண்மைதான் மஞ்சு! அந்தக் காலத்துல எப்படித்தான் ரெண்டு மூணு பெண்களோடு தங்களின் வாழ்க்கையைப் பங்கிட்டு வாழ்ந்து வந்தார்களோ தெரியல. அதிலும் ராஜவம்சம் சொல்லவே வேண்டாம்” என்று முகம் வாடினாள்.
“நம்ம கர்ணன் ஐயாவுக்கும் கூட ரெண்டு மனைவி தானே?”
“என்ன?” அவளது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
“எதுக்கு இத்தனை அதிர்ச்சி? உண்மையைத் தானே நான் சொன்னேன்!”
கண்களை இறுக மூடித் திறந்தாள் திகழினி. “நீ யாரை யாரோடு இணைத்துப் பேசுறே மஞ்சு? என்னால் அப்படியொரு நிலையை யோசித்துக் கூடப் பார்க்க முடியாது. என் கணவர் எனக்கு மட்டுமே சொந்தமானவர்; அவரை யாருக்கும் பகிர்ந்தளிக்க எப்பவுமே முடியாது!” என்று கலங்கினாள்.
அவன் மீதான அவளது நேசம் மஞ்சுளாவிற்குப் புரிந்தது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அவன் நினைவில் மூழ்கிப் பேச்சற்று இருந்தவளின் கைப்பற்றி ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தாள் மஞ்சுளா.
“கர்ணன் ஐயா ஊரில் எதுவும் தப்பு தண்டா நடக்காம இருப்பதைக் கண்காணிக்க ஞாயிறு தோறும் ராத்திரி நேரம் மலைப்பாங்கான இடங்கள், காட்டுப் பகுதிக்கு போவது வழக்கம். அப்படிப் போகும் நேரத்துல நாமும் போனால், அவரோடு தனிமையில் பழகும் வாய்ப்பு அமையலாம்.”
திகழினி உடனே சம்மதித்துவிட, அன்றைய நாளில் ஆண்களைப் போல வேடமிட்டு அவர்கள் இருவரும் அங்குச் சென்றார்கள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super 👌👌
மிக்க நன்றி சகோதரி
அடுத்து என்ன நடக்கப் போகுது?
நன்றிகள் சகோதரி
திகழை பிடிக்க வில்லை கர்ணனுக்கு. இவள் வேற ஓவரா நினைக்கிறாள்
ஆமாம்.
நன்றிகள் சகோதரி
திகழினி மனதில் உள்ளதை சொல்லி விடுவாளா ..
பார்ப்போம்
நன்றிகள் சகோதரி
பொண்ண பார்த்து மயங்காத ஆளா namma கர்ணு… அம்புட்டும் நடிப்பு