
அத்தியாயம் : 3
அனுராதாவின் குண நலன்கள் பிடித்துப் போனதால், அவளைப் பற்றியும் அவள் வீட்டைப் பற்றியும் இராஜவேலு விசாரிக்க, அவளோ கண்கலங்கத் தங்களைப் பற்றிய முழு விபரங்களையும் மறைக்காமல் சொல்லி முடிக்க, அவரும் அமைதியாகக் கேட்டிருந்தார்.
அவள் சொன்ன விஷயங்கள் அவரது மூளைப் பிரதேசத்திற்குள் நுழைந்து சடுகுடு ஆட்டம் நிகழ்த்தியது. அவள் யார்? எந்த ஊரைச் சார்ந்தவள்? எதனால் இங்கு வந்திருக்கிறாள்? அவளது குடும்பத்தைத் தெரிந்த நொடி அவர் உள்ளத்தில் அதிர்வலைகள் தோன்றி மறைந்தன.
கணவன், வீட்டைப் பற்றி எண்ணிப் பார்க்காமல் தங்களுக்காக இருக்கும் அவளை நினைத்துப் பெருமிதமாக உணர்ந்தார். கர்ணனிடம் அவள் காட்டிய பாசம், அக்கறையைக் கண்டு அவனை நல்ல விதமாகத் தாயன்புடன் ஏற்றுப் பார்த்துக் கொள்ளச் சரியான நபர் கிடைத்து விட்டதாக நம்பினார்.
அங்கு அவள் பாதுகாப்பாக இருப்பது தெரியாமல், மாலையில் வீட்டிற்கு வந்த கோவர்தனன், மனைவியைக் காணாமல் வீடு முழுவதும் தேடினான்.
தனது அம்மாவிடம் சென்று மனைவியைக் குறித்துக் கேட்க, அவரோ சனியன் ஒழிந்தது எனும் ரீதியில் அமர்ந்திருந்தார்.
“ஏம்மா, நான் வேலைக்குப் போன பிறகும் அவளைத் திட்டுனீங்களா?” என்று கேட்டான். அவர் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “நேத்தே அத்தனை முறை சொல்லியும், ஏன் இப்படி நடந்துக்கிறீங்க? இவ்வளவு நேரமாகியும் அவள் எங்கே போனாள்? நான் இல்லாத நேரத்துல நீங்களாகவே அவளைத் துரத்திட்டீங்களா?” என்று கோபமாக வினவினான்.
அவர், “இங்கே பாரு காலையில இருந்து இடியும், மின்னலும் கண்ணைப் பறிக்க, வெளியே தலை நீட்டிப் பார்க்க முடியல. இதுல உன் பொண்டாட்டியை நான் துரத்தி விட்டேனா?” என்று எகிறிக் கொண்டு வந்தார்.
“அப்ப, இத்தனை நாளும் வீட்டுல இருந்தவ இப்போ எங்கே போனாள்? நீங்க தான் ஏதாவது சொல்லி அவளை விரட்டி இருக்கணும்” என்று சினத்துடன் இயம்பினான்.
“இங்கே பாரு கோவர்தனா, உன் பொண்டாட்டி தான் கோவிலுக்குப் போவதா சொல்லிப் போயிட்டு இத்தனை நேரமும் வராம இருக்கா. அதுக்கு ஏன் என்மேல பழியை சுமத்த பார்க்கறே? போனவள் போறான்னு விட்டுத் தள்ளிட்டு, நான் உனக்காகப் பார்த்து வச்சிருக்கும் பெண்ணைக் கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு” என்று சமாதான வார்த்தைகளால் மகனைத் தேற்ற முயன்றார்.
அவனது கோபம் எல்லை மீறியது. “பெத்த தாய்னு பார்க்கமாட்டேன். அப்பா, தம்பி யாரும் இல்லாம இருக்கீங்கன்னும் நினைக்கமாட்டேன். மரியாதையா பேசுங்க. உங்க விருப்பத்துக்கு நடக்க என்னால முடியாது!”
“இந்தக் காலத்துல மட்டுமில்ல எந்தக் காலத்திலும் பிள்ளை பெற முடியாம இருக்கும் மலடியை ஒதுக்கி வச்சிட்டு, இல்லை ஓரமா இருக்க விட்டு வேறு பெண்ணைக் கல்யாணம் செய்தவர் யாரும் இல்லையா? ஏதோ நீ தான் புதுசா செய்யப் போவது மாதிரி பேசுறியே!” என்று சடைத்தார்.
ஆத்திரம் எல்லை மீறியது. கைகள் அவரை அடித்து விடும் அளவிற்குச் சென்று விட்டது. பொறுமை பறி போனது. “மலடின்ற வார்த்தையைச் சொல்லி அவளை என் முன்னாடியே குத்திக் குதறுறீங்களே, அப்ப நான் இல்லாத நேரத்துல என் மனைவியை எப்படி எல்லாம் பேசிக் கொடுமைப்படுத்தி இருப்பீங்க? என்மேல தான் குறைன்னு சொல்லியும் கேட்காம எப்படி எல்லாம் பேசி அவமதிக்குறீங்க? நீங்க சொல்ற மாதிரி எனக்குக் குறை இருந்து, அப்பா ஆகும் தகுதியும் இல்லாம இருந்தா, என்னையும் மலடன்னு தான் சொல்லுவீங்களா? உங்க மருமகளுக்கு வேறு கல்யாணம் செய்து வச்சு, என்னைத் தெருவோடு அலைய விடுவீங்களா? நீங்க எல்லாம் ஒரு பெண்தானா? உங்களுக்கு மனசாட்சியே கிடையாதா? போதும், இதுக்கு மேலும் ஒரு வார்த்தை என் மனைவியைப் பற்றி பேசினாலும், நான் சும்மா விடமாட்டேன்!
உங்களை மாதிரி ஆஸ்தி, அந்தஸ்து வெறி பிடிச்சு அலைபவருடன் இருப்பதை விட, என்மீது உண்மையான பாசத்தைக் கொட்டும் அனுவுடன் உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்துட்டு போறேன். என் மனைவிக்கு இடமில்லாத வீடும் எனக்கு வேண்டாம்… அவள் அனுபவிக்காத எதுவும் எனக்கும் வேண்டாம்!” என்று வீராவேசத்துடன் கூறியவன், அடுத்த நிமிடம் அவனது அம்மாவின் பேச்சையும் செவி மடுக்காமல் சென்று விட்டான்.
மனைவி தினமும் செல்லும் கோவிலுக்கு வந்து, அங்கும் அவளைக் காணாததும் பூசாரியிடம் விசாரித்தான்.
அவரோ, “காலையிலே உங்க மனைவி வந்துட்டுப் போயிட்டாங்களே, இன்னுமா வரல?” என்று திருப்பிக் கேட்க, அவரது கேள்வியில் ஒரு கணம் தடுமாறி, “நான் இப்பதான் வீட்டுக்கு வந்தேன் சாமி. அவளைக் காணும்” என்று பரிதவிப்புடன் கூறினான் கோவர்தனன்.
அவன் முகத்தில் இருந்த தவிப்பை புரிந்து கொண்டு, “வீட்டுல ஏதாவது பிரச்சனையா?” என்று மென்மையாக வினவினார்.
“அது என்னைக்கு தான் இல்லாம இருந்தது?” என்று கசப்பாக உரைத்ததும், அடுத்தவர்களின் குடும்ப விசயத்தைக் கேட்பது தவறு என்று நினைத்து அவர் அமைதியாக இருக்க, அவனோ குழந்தை இல்லாததால் வீட்டில் தாயார் ஏற்படுத்துகிற பிரச்சனைகளையும், அதற்குத் தன்னால் செய்ய இருந்த நடைமுறைகளையும் கூறினான்.
“ரொம்ப நல்ல முடிவாகத் தான் எடுத்திருக்கீங்க! கடவுள் கண்டிப்பா உங்களைக் கஷ்டப்படுத்த மாட்டார். பயப்படாம வீட்டுக்குப் போங்க. அவங்க, உங்க அம்மாவுக்குப் பயந்து வீட்டுக்கு வராம எங்கேயாவது இருந்து இருக்கலாம். இல்லை, ஆறுதல் தேடி அவரது பிறந்தகத்துக்கு போயிருக்கலாம்” என்று சொன்னார்.
“சரிங்க சாமி, நான் அங்கேயே போயி பார்க்குறேன்”
அவரிடம் விடைபெற்று மனைவியின் தாய் வீட்டிற்கு அழைப்பு விடுக்க, அவள் அங்குச் செல்லவில்லை என்று தெரிய வந்தது. அவளது உடன்பிறந்த இருவரின் வீட்டிற்கும் அழைக்க, அவர்கள் இவர்களின் நலத்தை விசாரித்ததும் அங்கும் அனுராதா போகவில்லை என்று தெரிந்தது.
எங்குத் தான் போய் விட்டாள்? தாயின் அடாவடியான நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முடியாமல், தவறான முடிவிற்கு எதுவும் வந்து விட்டாளா? அல்லது தன்னை விட்டு எங்கேயும் சென்று விட்டாளா? என்று பயந்து போய் விறுவிறுவென நடந்தான். மனைவிக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்ற பயம், அவன் மனதைப் பற்றிக் கொள்ள, வீட்டிற்குச் செல்ல விருப்பமின்றி எங்கெங்கோ நடந்தான். மனைவியைக் கண்டுபிடிக்க முடியாமல் பித்துப் பிடித்தது போலானான்.
அப்போது தான் காலையில் விபத்து நடந்ததும், அனுராதா அவர்களைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும் பாட்டியின் மூலமாகத் தெரிய வந்தது. உடனே அங்கு நோக்கி விரைந்தான். மனைவியைக் கண்டதும் அவன் உள்ளம் அத்தனை நிம்மதியாக உணர்ந்தது. அவளை அணைத்து உச்சி முகர்ந்தான் கோவர்தனன்.
இருவரின் பாசத்தையும், அன்யோன்யத்தையும் கண்ட இராஜவேலு அவர்களிடம் பேசியவாறு இருந்தார். அவரது உடல்நிலை, குழந்தை இருக்கும் நிலை அறிந்து மனைவியுடன் அங்கேயே இருந்தான் கோவர்தனன்.
மருத்துவமனையில் இருந்து அவர் சொன்ன இடத்திற்குச் சென்றார்கள். அவருக்கு வேண்டிய அத்தனை பணிவிடைகளையும் செய்து கொடுத்து, அவரோடு இருந்து பார்த்துக் கொண்டார்கள். குழந்தை கர்ணனிடம் அவர்கள் இருவரும் காட்டிய பாசம், விழிகளில் இருந்த ஏக்கம், தங்களுக்கு உதவிய விதத்தையும் கண்டு, அவர்கள் வாழ்க்கை நல்ல விதமாக அமைய வேண்டும் எனும் நல்லெண்ணத்திலும், பேரனின் நல்வாழ்விற்காகவும் அவனை மகனாக நினைத்து வளர்த்துக் கொள்ளும் உரிமையை வழங்கினார் இராஜவேலு!
கோவர்தனனுக்கு ஒரு நல்ல வேலையையும், வீட்டையும் ஏற்பாடு செய்து கொடுத்து, ‘நான் கேட்கும்போது அவனை என்னிடம் ஒப்படைத்து விட வேண்டும். எனக்குத் தெரியாமல் அவன் வாழ்க்கையில் எதுவுமே நடக்க கூடாது. படிப்பு முதல் திருமணம் வரை நான் சொல்வது போலவே கேட்டு நடக்க வேண்டும். நானாக வந்து அவனிடம் பேசும் வரை அவன் தான் என்னுடைய பேரன் என்ற விசயம் நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். உங்களுக்குத் தேவையான உதவிகளை நான் செய்து தருகிறேன்’ என்று கூறி, தனது கண் பார்வை படும் இடத்தில் அவர்களை வைத்துக் கொண்டார்.
ஆறு மாதம் கடந்ததும் இராஜவேலுவின் கால் பகுதி சரியானது. தனது பணிகள் மற்றும் மகள் குமுதினியை பார்க்க வேண்டி அவர் கிளம்பிச் சென்று விட, கர்ணன் அனுராதா, கோவர்தனன் மடிகளில் அழகாகத் தவழ்ந்து வந்தான்.
அம்மா கல்யாணி இருக்கும் வீட்டிற்குச் செல்ல கோவர்தனனுக்கு மனம் வரவில்லை. எங்கே, கிடைத்தற்கு அரிய பொக்கிஷமாகிய கர்ணனையும், மனைவியையும் மறுபடியும் வார்த்தைகளால் வதைத்துக் கொடுமைப்படுத்தி விடுவாரோ, அதனால் இராஜவேலு கர்ணனை கொண்டு சென்று விடுவாரோ எனும் பயத்தில், அவர்களை அழைத்துச் செல்லாமல், இத்தனை நாட்களில் தாயார் மனம் மாறிவிட மாட்டாரா? எனும் நப்பாசையுடன் அவன் மட்டுமே சென்றான்.
ஆனால், மகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்த கல்யாணி, அவளுடன் சேர்ந்து கொண்டு, இரண்டாம் திருமணம்… குழந்தை என்று சொல்லிக் கொண்டு இருக்க, பதில் கூறாமல் தனக்கு வேண்டியவற்றுடன் சென்று விட்டான்.
நாட்கள் வாரங்களாகின. வாரங்கள் மாதங்கள் ஆகின. கர்ணனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது, அனுராதா முதல் முறையாகக் கர்ப்பம் தரித்தாள். அதில் மகிழ்ந்து போன கோவர்தனன், எல்லாம் கர்ணன் வந்த நேரம் என்று மகிழ்ச்சி அடைந்தான். அவன் பிறந்த அடுத்த வருடம் மகளும் பிறந்து விட மூன்று குழந்தைகளுடன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள் அந்தத் தம்பதியர்! என்ன தான் ‘சாந்தனு, சிந்து’ என்று இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாலும், கர்ணன் மட்டுமே அவர்கள் வீட்டில் முதலிடம் வகித்தான். அவன் யாரென்ற விசயம் கோவர்தனன், அனுராதாவை தவிர வேறு யாருக்கும் சொல்லப்பட வில்லை.
வருடங்கள் உருண்டோடின.
கர்ணன் வளர்ந்து வாலிப பருவத்தை அடைந்தான். அவனது தோற்றம் இராஜவம்சத்தின் ரத்த ஓட்டத்தைச் சாட்சி சொல்வது போல அத்தனை கம்பீரமாக இருந்தது. ஆறடி உயரத்தில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட சிலையைப் போன்ற உடற்கட்டுடன் அவன் நடந்து வரும் அழகே தனி! அவனது கூர்மையான நாசியும், எதையும் ஊடுருவிப் பார்க்கும் தீர்க்கமான கண்களும், அடர்த்தியான புருவங்களும் அவனுக்கு ஒரு தனித்துவமான அழகைத் தந்தன.
அடர் கருநிறத் தலைமுடியும், எப்போதும் லேசான புன்னகை தவழும் உதடுகளும் காண்பவரை எளிதில் வசீகரிக்கும். அழகிலும், நடையிலும், குணத்திலும், பேச்சிலும், நடத்தையிலும், காண்பவரைக் கொள்ளை கொள்ளும் விதமாகக் காணப்பட்டான். அவன் பேசத் தொடங்கினால் அதில் ஒரு தெளிவும், கேட்பவர் மனதை வருடும் இதமும் இருக்கும். கனிவான அவனது சுபாவம், ஊர் மக்கள் அனைவரையும் அவன்பால் அன்பு கொள்ளச் செய்தது.
அவன் வசித்து வந்த மங்களாபுரியில் உள்ள ஜமீனின் மகள் திகழினிக்கு, அவன் மீது நாட்டம் பிறந்தது. அவன் எல்லா பெண்களிடம் மரியாதையாகப் பேசி வந்தது போல அவளிடமும் பேசினான். ஆனால், அவள் மனதில் தானே இருந்து ஆட்சி செய்வது அவன் அறியாதது!
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஹீரோயின் இனிமேல் தான் வருவாளா?
வருவாள்.
மிக்க நன்றி சகோதரி
அழகா கதை நகருது.. குமுதினி என்ன ஆனாங்க..
Good move 👏
நன்றிகள் சகோதாி
சூப்பர் கோவர்த்தன்
நன்றிகள் சகோதரி
அருமை 😍