
அத்தியாயம் : 2
அனுராதாவும், கோவர்தனனும் சோகமயமாகக் காட்சியளிக்க, அவரது அம்மா குழந்தை இல்லாமல் ஏழு வருடமாக இருக்கும் மகனுக்கு வேறு திருமணம் செய்து விடும் முனைப்பில் இருந்தார்.
மகனின் வார்த்தைகள் செவியேற மறுத்தன. மருமகளின் கண்ணீர் அவரது கண்ணில் விழாமல் போயின. குடும்பத்திற்கு வாரிசு மட்டுமே முதன்மையாகி விட்டது.
“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துட்டு போகலாம்னு பார்க்குறே? எனக்கும் கண்ணை மூடுவதுக்கு முன்பு இந்தக் குடும்பத்து வாரிசைக் கையிலேந்தி கொஞ்சும் ஆசை இருக்காதா?” என்று பொறிந்தார் கோவர்தனனின் அம்மா.
“இங்க பாருங்கம்மா, நான் அனுவை விரும்பி மணந்தவன். குழந்தையைத் தூக்கிக் கொஞ்சும் ஆசை உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் இருக்கு. பாவம் என் மனைவி! அவளைக் காயப்படுத்தும் விதமா பேசாதீங்க.”
மகன் தன்மையாகக் கூறியும் அவர் ஏற்க மறுத்துவிட, “குறை என்பது மனித வாழ்வில் சகஜம். எனக்குத்தான் குழந்தை பெறுவதற்கான தகுதி இல்லைன்னு தெரிஞ்சும், நீங்க மறு கல்யாணம் செய்யச் சொல்லி அடம்பிடிப்பது சரியில்ல! அப்பவும் குழந்தை பிறக்காம இருந்தா, அவளையும் விட்டுட்டு வேறு பெண்ணை மணக்கச் சொல்லுவீர்களா? நான் என்ன மாடா? மனுஷனா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் வினவினான்.
“நீ பொய் சொல்லாதே கோவர்தனா! நம்ம இனத்தில் பிறந்த யாருக்கும் குழந்தை இல்லாம இருந்தது இல்லை. உன் மனைவியைக் குற்றம் சுமத்தியதால், அவளைக் காப்பாற்ற உன்மீது பழியைப் போடப் பார்க்காதே!”
பேச்சு மகனிடம் இருந்தாலும், முறைப்பு மருமகள் மீதிருந்தது.
அனுராதா, “நீங்க வேறு கல்யாணம் செய்துக்கோங்க. நான் இந்த வீட்டை விட்டுப் போயிடுறேன். என்னால உங்களுக்கு எந்தச் சிரமமும் வர வேண்டாம்” என்று அழுதாள்.
கோவர்தனன் ‘முடியாது’ என்று அடம்பிடிக்க, “என்னே ஓர் நடிப்பு! உண்மையிலேயே அவன் மீதும், இந்தக் குடும்பத்து மீதும் அக்கறை இருந்தா, நீயே அவனுக்கு இன்னொரு கல்யாணம் செய்யும் விதமான பேச்சை எடுத்திருப்பே. ஆனால் குறையையும் நீயே வச்சிட்டு, அவன் மனசையும் மாத்திட்டு, எங்க பேச்சையும் கேட்க விடாம செய்து, ரொம்ப நல்லாதான் நடிக்கிறே!” என்று முகத்தை நொடித்தார்.
கண்களை மூடி மடியில் முகத்தைப் புதைத்து அழுத அனுராதா, ‘ஏன் ஆண்டவா என்னைப் படைத்தாய்? அப்படி நான் என்ன பாவம் செய்து விட்டேன் என்று இப்படி ஒரு வாழ்க்கையை வாழ என்னை அனுப்பி வைத்தாய்? ஒவ்வொருவரும் எத்தனையோ குழந்தைகளைப் பெற்று அவர்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க, எனக்கு மட்டும் ஏன் அந்தப் பாக்கியத்தைத் தர மறுக்கிறாய்? அந்த அளவிற்கு நான் செய்த பாவம் என்ன? இதைவிட என் உயிரையும் எடுத்திருக்கலாமே… அதை விட்டு வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் செய்கிறாயே!’ என்று கண்ணீர் வடித்தாள்.
“எப்படி எல்லாம் நடிச்சு அவனை ஏமாத்தப் பார்க்குறா? கல்யாணத்துக்கு முன்னாடி வரை என்னை எதிர்த்து ஒரு வார்த்தை பேசாம இருந்தவன், இவளைக் கட்டிக்கிட்டு வந்த நாள் முதலா என் பேச்சைக் கேட்க மறுக்குறான். என்ன சொக்குப்பொடி போட்டு மயக்குனாளோ தெரியல!” என்று இகழ்ந்துரைத்து,
“முடிவா சொல்றேன் கேட்டுக்கோங்க. எனக்கு இந்த வம்சத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போக வாரிசு வேணும். ஒழுங்கா இவளுக்கு வேண்டியதைக் கொடுத்து அனுப்பிடு. இல்லை, ஏதாவது வீடு பார்த்து அமர்த்தி விடு. எனக்குப் பேரக்குழந்தை வேணும். முடியாது சொன்னா, மொத்தச் சொத்தையும் என் மகள் பெயருக்கு எழுதிக் கொடுத்து உங்களைத் தெருவோடு விட்டுருவேன்” என்று மிரட்டினார்.
அனுராதா எழுந்து சென்று அறைக்குள் அடைந்து கொள்ள, கோவர்தனன், “பணம் வசதி வரும் போகும். தொட்டுத் தாலி கட்டிய மனைவிக்குத் துரோகம் செஞ்சா ஜென்மத்துக்கும் நல்லா வாழ முடியாது. அவளும் ஒரு பெண் தான். அவளுக்கும் உணர்வுகள், ஆசைகள் இருக்கும்னு பார்க்காம, குதர்க்கமா பேசிச் சித்திரவதைப்படுத்துறியே, உன் மகளுக்கும் இப்படியொரு நிலை வந்தா, அப்பவும் இப்படித்தான் பேசி கொடுமைப்படுத்துவியா?
எங்க அப்பாவிடமும் இதே மாதிரி நடந்துக்கிட்டதால் தான், அவரும் எங்களை விட்டுச் சீக்கிரமாவே போயிட்டாரா? உன் சொத்து, பணம், வசதி எதுவும் எனக்கு வேண்டாம். என் மனைவி மட்டுமே போதும்! அவளது பெற்றோர் என்னை நம்பித்தான் ஒப்படைத்திருக்கிறார்களே தவிர, உன்னையோ உனது வசதியைக் கண்டோ இல்லை” என்று அழுத்தமாகச் சொன்னான்.
அவர் முகம் கறுத்துப் போனது.
“குழந்தையைப் பெத்தா மட்டும்தான் வாரிசா ஏற்று வழிநடத்தணும்னு இல்லை. எத்தனையோ குழந்தைகள் ‘அநாதைகள்’ எனும் பெயரில் வாழ்ந்து வருது. அவர்களில் யாரையாவது தத்தெடுத்துக் கூட வளர்க்கலாம். நானும் அப்படி செய்ய முடிவு பண்ணியிருக்கேன்.”
அவனது வார்த்தையில் அரண்டு போனவர், அடுத்த நிமிடம் “யாரோ ஒருவரின் வயித்துல பிறந்தது இந்த வீட்டை ஆள முடியாது. என் மகனின் குழந்தைக்கு மட்டும்தான் அந்த உரிமை இருக்கு. உன் பிள்ளைகளைத் தவிர வேறு யாரையும் நான் ஏத்துக்க மாட்டேன்” என்றார்.
“நீங்க ஏற்காம போவது பற்றி எனக்குக் கவலை இல்லை. தம்பி கதிர்காமன் ஏற்கனவே நம்ம இனத்து மக்களின் நன்மைக்காகப் போராடி, இப்போ இல்லாம ஆகிட்டான். நாமும் சொந்த ஊர்ல வசிக்க முடியாம வீடு, வாசலைத் துறந்து வேறு ஊரில் வந்து வாழ்ந்துட்டு இருக்கோம். இந்த நேரத்துல எங்களையும் இல்லாம ஆக்கி, இந்தக் குடும்பத்தையும் தரை மட்டம் ஆக்கிடப் பார்க்கறீங்களா?” என்று ஆதங்கத்துடன் வினவினான்.
அதில் ஒரு நிமிடம் திகைத்து விழித்தாலும், அவரது மனம் மகனின் பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்க, கோவர்தனன், அம்மாவைக் கண்டு கொள்ளாமல் மனைவியைத் தேடிச் சென்றான்.
அனுராதா, “நான் இந்த வீட்டை விட்டுப் போயிடுறேன். என்னால் உங்களுக்கு எந்தச் சிரமமும் வர வேண்டாம். அத்தையின் விருப்பப்படியே நடந்துக்கோங்க” என்று விசும்பினாள்.
அவன் கேட்காமல், “நாளைக்கே ஏதாவது ஆஸ்ரமத்துக்குப் போயி, ஆணும் பெண்ணுமா ரெண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வரலாம். நீ எதையும் நினைச்சு கலங்காம இரு. அம்மாவின் பேச்சையும் பெருசுபடுத்தாதே!” என்று மனைவியைச் சமாதானப்படுத்த முயன்றான்.
அவள் பயத்துடன், “அத்தை இதுக்குச் சம்மதிக்காம எப்படி செய்வது?” என்று கேட்க, “சம்மதிக்கலையா, இதே வீட்டுல தனியா இருந்து கஷ்டப்படட்டும். எனக்கு என் மனைவியோடு வாழும் வாழ்க்கையும், அவள் முகத்துல தெரியும் சந்தோஷமும்தான் முக்கியம்!” என்றான்.
அந்த வார்த்தைகள் அவளுக்குள் பரவசத்தை ஏற்படுத்தின.
கணவன் இல்லாத நேரங்களில் மாமியாரின் கொடூரமான பேச்சு காயப்படுத்திய போதெல்லாம் செத்துப் போயிடலாம் எனும் எண்ணத்தில் கலங்குபவள், ‘கணவனின் வாரிசை எப்படியாவது பெற்றெடுத்து வளர்த்துவிட மாட்டோமா!’ என்று ஏங்கினாள். ஆனாலும், அவளது ஆசைகள் அடிமனதில் மட்டுமே தங்கிவிட, குழந்தை பெறும் பாக்கியம் இல்லாமல் போய் விட்டது. இப்போது கணவனின் கூற்றுப்படி நடந்தால், மீண்டும் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும் என்று பூரித்தாள்.
ஆனால், கோவர்தனனின் அம்மா, மகன் தன்னை எதிர்த்துப் பேசி அவமதித்த கோபத்தில், வாய்க்கு வந்தபடி திட்டிச் சாபமிட்டார்.
மாமியாரின் வார்த்தைகள் மனதைக் காயப்படுத்த, கணவன் கூறிய சந்தோஷமான செய்தியைக் கூட ஏற்று அனுபவிக்க முடியாமல் அழுத அனுராதா, இறைவனின் காலடியில் விழுந்து கண்ணீர் விட்டாள்.
அத்தனை நாட்களாகக் குழந்தைச் செல்வம் இல்லாமல் ஏங்கித் தவித்த அவள் உள்ளம், இப்போது அது கிடைக்கப் போகும் நேரத்தில், ஏற்று அனுபவிக்க முடியாமல் இருந்தது.
ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரிடம் மனதின் பாரங்களை அவள் மௌனமாகக் கடத்திக் கொண்டிருக்க, அவரோ ‘கவலைப்படாதே! உன் துயரங்கள் யாவும் தீரப் போகும் நேரம் வந்து விட்டது. உன்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதற்கு உரியவன் பிறந்து வந்து கொண்டிருக்கிறான்’ என்று விழிகளால் சொல்லி அவளைச் சாந்தப்படுத்தினார்.
மனம் ஓரளவு இயல்பிற்கு வந்ததும், வீட்டிற்குச் செல்ல எழுந்தாள். பூசாரி அவளருகில் வந்து பிரசாதத்தைக் கொடுத்து விட்டு, “உன் கவலையும் கண்ணீரும் தீரும் நேரம் வந்துடுச்சு. கவலைப்படாம வீட்டுக்குப் போம்மா. நல்ல செய்தியை ஆண்டவர் விரைவில் தந்து, உன்னை அருள்பாலிப்பார்” என்றார்.
அவளும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன், அவரிடம் நன்றியுரைத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள்.
அப்போது, ‘டமால்’ என்ற பேரிடியும், அதனுடன் சேர்ந்து மின்னலும் வானில் முழக்கத்தை அதிரவிட, மழையில் நனைந்து விடாமல் விரைந்து சென்று ஒதுங்க முயன்றாள் அனுராதா. அதற்கு முன்பாக மழை கொட்டோ கொட்டெனக் கொட்டத் துவங்கியது.
அவள் ஒரு குடிசையின் ஓரமாக ஒதுங்கி நின்றாள். அந்த நேரம் மலை அடிவாரத்தில் அமைந்திருந்த பகுதியில் ஏற்பட்ட பெருமழையில், ஓட்டுநர் எவ்வளவு கவனமாகச் சென்றும் அந்த விபத்து நேர்ந்திருந்தது.
இராஜவேலு, குழந்தை கர்ணனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதென்று மார்புடன் அணைத்து அவனுக்குக் கவசமாக மாறிக் கொள்ள, சரிவாகச் சென்ற கார் மரத்தின் மீது மோதியதில், அவர் மயக்கத்திற்குத் தள்ளப்பட்டார்.
கர்ணன் தனது கணீரென்ற குரலால் அழுது கொண்டே இருக்க, அனுராதா குழந்தையின் அழுகுரலும், கார் மோதி விபத்திற்குள்ளான சத்தமும் கேட்டு, மழையையும் பொருட்படுத்தாமல் விரைந்தோடி வந்து கார் கதவைத் திறக்க முயன்றாள். அது உட்புறமாக ‘லாக்’ ஆகி இருந்ததால், ஓட்டுநரிடம் கதவைத் திறக்க உதவி கோரினாள்.
அவன் நெற்றியிலும் முட்டிலும் பட்ட அடியுடன் கெந்திக் கெந்தி நடந்து வந்து மெதுவாகக் கதவைத் திறந்து விட்டான்.
அடுத்த நிமிடம் மழை நீரும், வெளியே கேட்ட இரைச்சலிலும் வீறிட்டு அழுதான் கர்ணன்!
அனுராதாவால் அவன் அழுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. இராஜவேலுவை அழைத்துப் பார்த்தாள். மழை நீரைப் பிடித்து அவரது முகத்தில் தெளித்தாள். அவர் அசையாமல் இருந்ததும், விபரீதம் எதுவும் நேர்ந்து விடக்கூடாது எனும் பயத்தில், உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல விழைந்தாள்.
ஆனாலும், ஓட்டுநருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதால் எப்படி காரைக் கொண்டு செல்வது என்று தடுமாறி, எதிரில் வந்த வாகனத்தை நிறுத்தி அவர்கள் இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாள்.
அனைத்தையும் பார்த்திருந்து, தள்ளாத வயதில் குடிசையில் தனியாக வசித்து வருகின்ற பாட்டி, அவர்களுக்கு விரைவில் சரியாகி விட வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டார்.
கர்ணனை, அனுராதா தனது இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு இராஜவேலுவின் அருகில் அமர்ந்து, அவனது அழுகையை அடக்கத் தோளில் சாய்த்துத் தட்டிக் கொடுக்க, கார் வேகமெடுத்து மருத்துவமனையைச் சென்றடைந்தது.
இராஜவேலு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட, ஓட்டுநருக்கு அடிபட்ட இடத்தில் மருந்திடப்பட்டது.
கணவன் தன்னைத் தேடுவான், மாமியார் நேரத்திற்கு வீட்டிற்குச் செல்லா விட்டால் கத்துவார், நாளைக்கு இரு குழந்தைகளைத் தத்தெடுக்கச் செல்ல வேண்டும் என்று எதையும் பார்க்காமல், கர்ணனை விட்டு அகலாமல் இருந்தாள் அனுராதா.
மறுநாள் இராஜவேலு கண்களைத் திறந்தார். அடுத்த கணம் பேரனின் நினைவில் அவசரமாக எழ முயன்றும் முடியாமல் வலியால் அவதியுற்றார். மருத்துவர் அவரைச் சமாதானப்படுத்தி, அனுராதாவை வரவழைத்துக் குழந்தையை அவரிடம் காண்பிக்கச் செய்தார்.
பேரனைக் கண்டதும் கை வலியை மீறி, அவனைத் தொட்டுத் தடவிப் பார்த்தார். அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்தவருக்கு, அவனுக்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்த பிறகே நிம்மதியாக இருந்தது.
தங்களைக் காப்பாற்றிய அனுராதாவிற்கு அவர் நன்றி தெரிவித்தார். அவரால் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு காலில் அடிப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சில நாட்களுக்கு இருக்கும் சூழல் ஏற்பட்டது. குழந்தையையும் அவரையும் பார்த்துக்கொள்ள அவள் அங்கேயே இருக்க, அவளது உபசரிப்பும் கர்ணனின் மீதான அன்பும் அவரை நெகிழ வைத்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு 👏
நன்றிகள் சகோதரி
அனு செம. கோவர்த்தன் சூப்பர்,
மிக்க நன்றி சகோதரி
அருமையான பதிவு 🥰
நன்றிகள் சகோதரி
அருமையான பதிவு
நன்றிகள் சகோதரி
கர்ணன் அனுராதா வீட்டுக்கு போக போறான் ..
ஆமாம்
நன்றிகள் சகோதரி