Loading

அத்தியாயம் : 1

பூந்தோட்டத்தில் பல வகையிலான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கிக் காட்சியளிக்க, அதன் மத்தியில் பூக்களின் இனிய வாசனையை நுகர்ந்து, புல்லாங்குழலைத் தன் கையில் ஏந்திப் பரவசத்துடன் நின்றிருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்.

தென்றலின் அசைவு மட்டுமே காணப்பட்ட அந்தக் காலை நேரத்து நிசப்தத்தைக் கலைப்பது போல, குழந்தையின் அழுகுரல் கேட்டது.

அதில் மனம் மகிழ்ந்து போன ஸ்ரீ கிருஷ்ணர், ‘வந்து விட்டாயா? வா, வா! உனது வரவை எதிர்நோக்கித்தான் நான் இருக்கிறேன்!’ என்று சிரித்த முகமாக வரவேற்றார்.

குழந்தையின் அழுகுரல் விடாமல் ஒலித்ததும், அவனைத் தூக்கி மடியில் வைத்து அழுகையை அடக்க முயன்றாள் சிவகாமி.

அதுவோ, பத்து மாதங்களாகத் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து, குளிரிலும், புதிய இடத்தைக் கண்ட பயத்திலும், தன் முன்பு இருக்கும் புதிய நபர்கள் யார் என்று தெரியாமலும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது.

அவர்களைப் பார்த்துக்கொண்டே அங்கு வந்த இராஜவேலு, ஒரு நிமிடம் அசையாமல் அக்குழந்தையைப் பார்த்தார்.

அவர் கண்கள் கலங்கி விட்டன. உதடுகள் துடித்தன. கைகள் தனது பேரனை அள்ளி மார்பில் அணைத்துக் கொள்ள ஏங்கின. இருப்பினும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மயக்கத்தில் இருக்கும் மகள் கண்ணைத் திறப்பதற்கு முன்பு செய்துவிட வேண்டிய மிக முக்கியமான காரியத்தைச் செய்யச் சிவகாமியை அழைத்தார்.

அவளோ, “என்ன ராஜாய்யா? ஏன் அப்படியே நின்னு பார்த்துட்டு இருக்கீங்க? நம்ம குமுதினி அம்மாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு. இவர் மூலம் உங்க வம்சம் விருத்தியாகப் போகுது. வந்து சின்ன ஐயாவுக்கு இந்த உலகமே போற்றும் விதமா ஒரு நல்ல பெயரா வையுங்க” என்று கோரிக்கை விடுத்தாள்.

அவர் தலையசைத்து அவள் அருகில் வந்து, பேரக் குழந்தையின் முகத்தையே பார்த்தார்.

முகத்தில் தெரிந்த அழகும், கண்களில் படர்ந்திருந்த ஒளியும், பார்த்தவுடன் மனதைக் கவர்ந்து விடும் தோற்றமும், அவனது குரலில் ஈர்க்கப்பட்டு செயலற்று நின்ற விதமும், அவன் ஒரு சாதாரணமான பிறவியெடுத்து வந்திருப்பவன் இல்லை என்று அவருக்குப் புரியவைத்தது.

கண்களில் துளித்த நீர்த் துளிகள், ‘உன்னை என் பேரன் என்று வாய் திறந்து உறவினர்கள், ஊர்க்காரர்கள் முன்பு சொல்ல முடியாமல் ஆகிவிட்டதே!’ என்று சொன்னது.

உதடுகள் அசைய மறுத்து, ஒன்றை ஒன்று இறுகப் பற்றிக் கொண்டன.

“என்ன ஐயா, நீங்கதான் பெரியம்மா இறந்ததிலிருந்து வேறு எந்தப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காம, ரிஷி மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்து வர்றீங்க. உங்க மகளையும் அப்படியே விட்டுடாம, ஏதாவது ஒரு நல்ல வழி காட்டுங்க”

அவர் முகம் கசங்கியது.

குமுதினியின் மீது உயிர்ப் பாசத்தை வைத்திருந்தார் இராஜவேலு. மனைவி இறந்த பிறகு, ஒற்றை மகள் மீதான அன்பில், வேறு யாரையும் நினைத்துக் கூடப் பார்க்காமல், துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

ஆனால், மகளோ மேற்படிப்பிற்காக வெளியூருக்குச் சென்றிருந்தாள். தனக்கு வேண்டப்பட்ட நபரிடம் அவளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஒப்படைத்து, தனியாக வீடு பார்த்து, சிவகாமியை அவளுக்குத் துணையாக இருக்க வைத்து, அவர் மட்டும் சொந்த ஊரில் வசித்து வந்தார்.

மகள் படிக்க வந்த இடத்தில் காதலித்துக் கர்ப்பமாகி இருப்பது அவருக்குத் தெரியாதது.

சிவகாமிக்கு அவளது கரு வயிற்றில் இருப்பது ஆறு மாதமாகும் போதுதான் தெரிய வந்தது. அதுவரை அவளைச் சந்தேகிக்காமல் இருந்து விட்டாள். ஆனால், கர்ப்பமாக இருக்கும் பெண்ணிடம் உள்ள சந்தோஷம், நிம்மதி, கலகலப்பு எதுவும் அவளிடம் இல்லாமல் போனதுடன், குழந்தையை நினைத்தும், அவளது அப்பாவை எண்ணியும் பயத்துடன் இருக்க, சிவகாமி அவளிடம் பேசி விஷயத்தைத் தெரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்தாள்.

இதை எப்படி இராஜவேலுவிடம் தெரிவிப்பது என்று நடுக்கத்துடன் இருக்க, குமுதினிக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை.

இராஜவேலுவிற்கு விஷயம் தெரிய வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது? ‘உன்னை நம்பி அல்லவா இருந்தேன்! இப்படிச் செய்து விட்டாயே நம்பிக்கை துரோகி!’ என்று சொல்லித் தண்டனை எதுவும் அளித்து விட்டால் என்ன செய்வது? என்று பயத்தில் அவரிடம் விஷயத்தைச் சொல்லிவிட நினைக்க, அதற்குத் தடையாக அமைந்தது குமுதினியின் வார்த்தைகள்.

அதேநேரம், தாயை இழந்து அவளுக்காக வாழ்ந்து வருகின்ற தகப்பனிடம் சென்று எப்படி கூறுவது என்று கிலி பற்றிக் கொள்ள, குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்து நிம்மதியையும் பறித்தது.

சிவகாமியும், இராஜவேலுவிடம் சொல்லிவிட நினைக்க, அந்த நேரம் பணி நிமித்தம் வெளியூருக்குச் சென்றவர் திரும்பி வர மாதங்கள் ஆகிவிட்டன.

வந்தவர் மகளைக் காணச் சென்றபோதுதான், அவளது நிலை அவருக்குத் தெரிய வந்தது. தலை சுழன்று போனது! கைகளைச் சுவரில் பற்றித் தன்னை நிலைப்படுத்தியவர், சிவகாமியிடம் விஷயத்தைக் கேட்க, அவரால் நம்பத்தான் முடியவில்லை.

குழந்தை பிறக்கும் நாளும் நெருங்கி வந்து விட்டது. மகளுக்கோ இன்னும் திருமண வயதும் ஆகவில்லை; பட்டப்படிப்பும் நிறைவு பெறவில்லை.

இருவரில் யாரை எண்ணி வருந்துவது? மகளையா? அல்லது அவள் வயிற்றில் இருக்கும் மகவையா?

குமுதினிக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து, மகளின் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்க அவர் நினைத்திருக்க, அவளோ தன் தலையில் தானே சேற்றை வாரிப் போட்டு விட்டாள். தன்னிடம் ஆரம்பத்தில் கூறாமல் மறைத்து வைத்து, அவளுக்குக் கிடைக்க இருக்கும் நல்ல வாழ்க்கையை அழித்ததுடன், பிறக்கப் போகும் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையையும் கேள்விக்குறி ஆக்கி விட்டாள். இனிமேல், நடந்ததைப் பற்றி நினைப்பதைவிட, நடக்கப் போவதைப் பார்க்க வேண்டும். மகள் செய்த தவறால், அவள் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த வகையிலும் பாதிப்படையக் கூடாது என்று மனதில் உறுதிப்படுத்திக் கொண்டு, தான் அங்கு வந்ததுகூட அவளுக்குத் தெரிய வேண்டாம் என்று சொல்லிச் சென்று விட்டார்.

இப்போது குழந்தை பிறக்கப் போவதை அறிந்து, அவர்களைக் காண வந்திருக்கிறார்.

சிறு குழந்தையின் அழுகை அவரது உயிர்வரை சென்று தாக்கியது. கண்களும் கலங்கி விட்டன.

‘நான் பிறந்து விட்டேன் என்பதற்காக, என் தாயை வெறுத்து விடாதே! என்கிறதா? அல்லது துளசியின் வாசம் போல் மாசு மறுவில்லாதவள் என் தாய்! என்கிறதா?’

குடும்பத்திற்கு வரப் போகின்ற மூத்த வாரிசைத் தூக்கிக் கொஞ்ச எழுந்த மனதை அடக்கிக்கொண்டு, “சிவகாமி! உன் கையில் இருப்பது இராஜவேலுவின் பேரன் என்பது, இந்த உலகுக்கு இப்போதைக்குத் தெரியக் கூடாது. என் மகளுக்கும் அவன் இருப்பது தெரிய வேண்டாம்” என்றார்.

அவள் அதிர்ந்து விழித்தாள்!

“ஐயா! பாவம் இல்லையா இந்தச் சிறு பிஞ்சும், அவரது அம்மாவும்? ஒரு தவறும் செய்யாத குழந்தைக்கு இத்தனை பெரிய தண்டனை தர வேண்டாம்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

அவர் முகம் இறுக, “நான் சொல்வதை செய்யத்தான் உன்னை என் மகளுக்குச் சேவகியா இருக்கும் பொறுப்பை ஒப்படைத்தேன். அறிவுரை கூற இல்லை!” என்றார்.

“நான்… நான் அப்படி எதுவும் தப்பா பேசிடல. மயக்கம் தெளிஞ்சதும் அம்மா கேட்டா என்ன பதில் சொல்வது? சின்னக் குழந்தையும் பாவம் இல்லையா? பெற்ற தாயைப் பிரிஞ்சு வாழும் கொடுமையான தண்டனையைச் சின்ன ஐயாவுக்கு நீங்க தர வேணாம்” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

அவர் கண்களில் நிரம்பிய கண்ணீரை உள்ளடக்கிக்கொண்டு, “என் பேரன் அவனது தாயுடன் இருப்பதைவிட வேறு இடத்துல இருந்தால், அவனுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். என் மகளுக்கும் இந்தச் சமூகத்தில் அங்கீகாரம், நல்ல வாழ்க்கை அமையும். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வந்திருக்கும் அவளுக்கு இந்தக் குழந்தை சுமையாகவும், அவப்பெயரைத் தோற்றுவிப்பதாகவும் இருக்கும்” என்றார்.

புரிந்தது அவரது பேச்சு; புரியாதது அவரின் பேச்சால் இருவர் படப்போகும் துயரங்களும், துன்பங்களும்!

“நீங்க ஆயிரம் சொன்னாலும் பிறந்த குழந்தையைத் தாயிடம் இருந்து பிரிப்பது தப்பு. அப்படியொரு தவறைச் செய்து, பாவக்கணக்கை மேலும் அதிகப்படுத்த வேண்டாம். நான் சொல்வதைக் கொஞ்சம் தயவு கூர்ந்து கேளுங்க”

அவர் ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டார்.

“இது எதுவும் திட்டமிட்டு நடப்பதில்லை, தானாக நடப்பது. இந்தக் குழந்தை அவனது தாயுடன் சேர்ந்து வாழ்வதுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. அவன் வாழ வேண்டிய இடமும் இதுவுமில்லை. அழகும், கணீரென்ற குரலும், அன்பும், பிறருக்கு உதவுவதில் வள்ளலுமாகவும், தனித்துவத்துடன் வளர்ந்து வரப் போகும் இவனது வரவால், அவன் இருக்கும் இடமும், அவனைச் சார்ந்தவர்களும் பயனடைவார்கள்.

இவனது வருகையில் நமது குலம் ஓங்கித் தழைக்கட்டும். இவனுக்கு நான் ‘கர்ணன்’னு பெயர் சூட்டுகிறேன். இவனுக்கான அனைத்தும் என்னால், யாரென அறியாமலே செய்து கொடுக்கப்படும்.

அந்தக் கர்ணனை சூழ்ச்சியால் வீழ்த்தி இருக்கலாம். இவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது. ஏனெனில், இவனுக்குப் பின்னால் இருக்கப் போவது இந்த இராஜவேலு! அவனது பேரனுக்கு ஆயுசு நூறு! அவன் வாழ்க்கை என்னைப் போலவோ, எனது மகள் குமுதினியைப் போலவோ இல்லாமல் சிறப்பாக அமையும்… அமையணும்! நான் அமைத்துத் தருவேன்!” என்று உறுதியாகக் கூறினார்.

சிவகாமி திகைத்துச் சிறு குழந்தையின் முகத்தில் வீற்றிருக்க, “நான் சொல்வதைக் கவனமா கேள்! குமுதினிக்கு இங்கு நடக்கும் எதுவும் தெரியக் கூடாது. நான் வந்தது, கர்ணனை அவளிடமிருந்து பிரித்து வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வது, அவன் வசிக்கப் போவது, வாழப் போவது எதுவுமே அவளுக்குத் தெரியக் கூடாது.

என் மகளை அவளது உடல்நிலை தேறியதும், வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வச்சு, நல்லவன் ஒருவனின் கையில் ஒப்படைக்கப் போறேன். இந்தக் குழந்தையால் அவள் வாழ்க்கையும் அழிய வேண்டாம். அவளால் தகப்பன் யாரென சொல்ல முடியாம வாழும் நிலை அவனுக்கும் வர வேண்டாம். கர்ணன், குமுதினியின் மகன் என்பது நம் இருவரையும் தவிர வேறு யாருக்கும் தெரியக் கூடாது. இது என்மீது சத்தியம்!” என்றார்.

அதற்கு மேல் எதிர்த்துப் பேசவும், மறுத்துரைத்து வாதம் செய்யவும் சிவகாமியால் முடியவில்லை.

“குமுதினி கண் திறந்து குழந்தையைப் பற்றிக் கேட்பதற்கு முன்பு, உடனே அவனை இங்கிருந்து இடமாற்றம் செய்யணும். நீ அவனை என்கிட்டே கொடு. ஒரு முறையாவது என் பேரனை, என் குலக் கொழுந்தை, என் கோமேதகத்தைத் தூக்கிப் பார்க்கிறேன்!”

சிவகாமி அவரிடம் கர்ணனைக் கொடுக்க, கைகள் நடுங்கச் சிறு குழந்தையை வாங்கியவர் உச்சி முகர்ந்தார்.

கண்களில் வடிந்த கண்ணீர் அவனது உச்சியில் பட்டது. அத்தனை நேரமாக அழுது கொண்டே இருந்த கர்ணன், தனது தாத்தா இராஜவேலுவைப் பார்த்தான்.

அவரது கண்களில் இருந்த ஏக்கமும், வேதனையும் அவனுக்குத் தெரிந்ததோ! சிரித்தான் தன்னுடைய தாத்தாவைப் பார்த்து…

அவர் பேரனை அணைத்து நெஞ்சோடு சேர்த்து விம்மினார்.

எத்தனைப் பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காக்கப் பிறந்தவன், இனிமேல் யாரோ ஒருவரைப் போல வாழ வேண்டிய நிலையில் ஆகிவிட்டானே என்று கலங்கியவர், “நீ குமுதினியைப் பார்த்துக்கோ. அவள் கண் திறந்தா நான் சொன்னதை மறக்காம செஞ்சுடு. என்னை எதுக்காகவும் எதிர்பார்க்காதே! என் மகளுக்கு உடல்நிலை சரியானதும், நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டுப் போயிடு. நான் பிறகு வந்து பார்க்கிறேன்”

அதற்கு மேலும் தாமதிக்காமல் குழந்தையுடன் வெளியேறிக் காரில் அமர்ந்தார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

10 Comments

    1. Author

      மிக்க நன்றி சகோதரி

    1. Author

      மிக்க நன்றி சகோதரி

  1. ஆயிரம் கேள்விகளோடு பயணம்

    1. Author

      மிக்க நன்றி சகோதரி

    1. Author

      நன்றிகள் சகோதரி

  2. அருமையான தொடக்கம் .. கதாபாத்திர அமைப்பு 👏🏻👏🏻

    1. Author

      நன்றிகள் சகோதரி