
அத்தியாயம் 42
“தெய்வா, லீலாவுக்கு என்னடா ஆச்சு. ருக்கு போனில் என்னென்னமோ சொன்னா. நம்ம வீட்டுக்குள்ள யாருடா வந்தா. என்னடா பண்ணாங்க என் மருமக லீலாவை.
காவலுக்கு ஆள் இருந்தும், ஆம்பிளைங்க நீங்க இத்தனை பேர் இருந்தும், அத்தனை பெரிய வீட்டில் சரியா லீலா ரூமைக் கண்டுபிடிச்சு எப்படி இப்படி ஒரு காரியம் நடந்தது.” மகனைப் போட்டு உலுக்கினார் வடிவேலு.
தேவகி முன்வந்து நடந்ததை சொன்னாள். கண்கள் மூடி நிதானித்தவர், ஆதரவு இன்றி தனியாய் நிற்கும் கொடியாக வாடிப் போய் நின்ற தன் மருமகள்களைப் பார்த்து அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராக, “நீங்க கவலைப்படாதீங்க மா. நம்ம லீலாவுக்கு ஒன்னும் ஆகாது. நான் வந்துட்டேன் இல்ல, இனி நான் பாத்துக்கிறேன்.
என் மருமகளுக்கு இப்படி ஒரு அநியாயத்தைப் பண்ணது யாரா இருந்தாலும் அவனை நான் சும்மா விட மாட்டேன்.” என்றவர் மீண்டும் தெய்வாவிடம் திரும்பினார்.
“செல்வாவோட ரூமில் பாத்ரூம் ஜன்னல் வழியா தான் யாரோ வந்து போயிருக்காங்க. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்த திட்டம் லீலாவுக்கானது இல்ல. உங்க சீமந்தப்புத்திரனைத் தான் யாரோ கொலை பண்ண நினைச்சு இருக்காங்க. அவன் இல்லாததால் லீலா மாட்டிக்கிட்டாங்க. ஒருவேளை அவன் வீட்டில் இருந்திருந்தா இப்போ லீலா இருக்கிற நிலைமையில அவன் தான் இருந்திருப்பான்.” என்க, பகீரென்றது அங்கிருந்த அனைவருக்குமே.
“செல்வாவை ஒருத்தன் கொலை பண்ண நினைச்சானா. என்னால நம்ப முடியல டா. அவன் தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கிறவன். அவன் யாருக்கும் எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டான். இதில் வேற ஏதோ இருக்கு டா.” என்ற வடிவேலுவிற்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.
“நீங்க தான் உங்க பையனை மெச்சிக்கணும். அவன் ஏதோ திருட்டு வேலை பார்த்து இருக்கான். பிரச்சனை வரப்போகுதுன்னு தெரிஞ்சு தான், கல்யாணமான உடனே கேம்ப் அது இதுன்னு சொல்லி வீட்டிலிருந்து உடனடியா கிளம்பிப் போய் இருக்கான். பாவம் அந்தப் பொண்ணு அவனால இப்ப உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா.” சற்று நேரம் முன்னர் வரை நல்ல காவலனாக நடந்துகொண்டவன், தந்தை தான் பெற்ற மூத்த மைந்தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கண்டதும் கடுப்பாகி கண்டதையும் பேசினான்.
“ஏங்க, இப்படியெல்லாம் பேசுறீங்க. மாமா எந்த தப்பும் பண்ணி இருக்க மாட்டார். நீங்க மாமாக்கு முதல்ல போன் பண்ணி விஷயத்தைச் சொல்லுங்க. அவர் வந்துட்டா எல்லா விஷயமும் வெளியே வந்திடும்.” என்றாள் ருக்கு.
“நீங்க எப்படியும் செல்வாவுக்குப் போன் பண்ணி இருக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். அதனால தான் நான் வரும் போதே அவனுக்குத் தகவல் சொல்லிட்டேன். இந்நேரம் கிளம்பி இருப்பான்.” என்றான் அரசு.
“ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட யாராவது ஒருத்தர் தான் இதைப் பண்ணி இருக்கணும் னு டாக்டர் சொன்னாங்க. செல்வா மாமாவுக்கு நடக்க இருந்த ஆபத்து தான் அக்காவுக்கு நடந்திருக்குன்னு நீங்க நினைச்சா, செல்வா மாமா வேலை பார்த்த ஹாஸ்பிடலில் இருக்கிற ஒவ்வொருத்தரையும் நல்லா விசாரிங்க மாமா. அக்காவை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவனை சும்மா விடக்கூடாது.” நேரடியாக தெய்வாவிடமே சொன்னாள் தேவகி.
“ஆமா டா தெய்வா, என் பொண்ணை இப்படிப் பண்ணவன் யாரா இருந்தாலும் அவனை நீ அடிக்கிற அடியில் காலத்துக்கும் யாருக்கும் இப்படி ஒரு பாவத்தை பண்ணக்கூடாது.” கோபமாய் சொன்னார் வடிவேலு.
“அப்பா காலையில் இருந்து யாரும் எதுவும் சாப்பிடல. இவங்களை நீங்களாவது வீட்டுக்கு வரச் சொல்லுங்க.” இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தர்மா பேசினான்.
“எங்க அக்கா கண்ணு முழிச்சு எங்ககிட்ட ஒரு வார்த்தையாவது பேசற வரைக்கும், எங்களுக்கு சாப்பாடு தண்ணி எதுவும் இறங்காது. நீங்க எல்லாரும் வீட்டுக்குப் போங்க. நாங்க, இங்க இருந்து எங்க அக்காவைப் பார்த்துக்கிறோம்.” தங்கை கணவனிடம் சொன்னாள் ருக்கு.
“வீட்டுக்கு வந்தாலும் பிள்ளைங்களால் நிம்மதியா இருக்க முடியாது டா. லீலா கண்ணு முழிக்கிற வரைக்கும் எல்லோரும் இங்கேயே இருக்கட்டும். நீங்க வேண்ணா வீட்டுக்குப் போங்க. செல்வா வர வரைக்கும் நான் இங்க இருந்து பொண்ணுங்களைப் பார்த்துக்கிறேன். அரசு மத்த வேலைகள் எல்லாத்தையும் பார்த்துப்பான்.” வடிவேல் அத்தனை சொன்ன பின்னாலும் கிளம்ப நினைக்கவில்லை ஆண்கள்.
“தெய்வா நீ போய் அந்தச் சண்டாளன் யாரு என்னன்னு கண்டுபிடிக்கிற வேலையைப் பாரு. தர்மா, நாகா இரண்டு பேரும் வீட்டுக்குப் போங்க.” சூழ்நிலையைக் கையில் எடுத்தார் வடிவேலு.
“அப்பா ஹாஸ்பிடலில் இருக்கும் ஒருத்தரைப் பார்த்துக்கிறதுக்காக எதுக்கு இத்தனை பேர், யாராவது ஒருத்தர் பத்தாதா. அதோட இங்கே இத்தனை பேரை அலோ பண்ணவும் மாட்டாங்க. இவங்க மூணு பேரையும் எங்ககூட வரச் சொல்லுங்க. செல்வா வந்ததும் அவனை இருக்கச் சொல்லிட்டு, நீங்களும் வீட்டுக்கு வந்திடுங்க. உங்களுக்கும் ஓய்வு வேணும் தானே.” என்றான் நாகா. அவரவர் குடும்பத்தை அவரவர் தான் பார்க்க வேண்டும் என்கிற அவன் கருத்து அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது.
“என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க நீங்க. உள்ள இருக்கிறது எங்க அக்கா. அவங்களை இப்படி ஒரு நிலைமையில் விட்டுட்டு நாங்க வீட்ல எப்படி நிம்மதியா இருக்க முடியும். நாங்க மூணு பேரும் வரமாட்டோம். உங்களால இங்க இருக்க முடியலன்னா நீங்க தாராளமா வீட்டுக்கு போகலாம்.” கோபமாய் சொன்னாள் ஊர்மி.
“நான் நடப்பை தான் எடுத்து சொன்னேன். அதுக்கு ஏன் இவ்ளோ கோவப்படுற ஊர்மி.” நாகாவிற்கு காலையில் இருந்து ஊர்மி காட்டும் கோபத்திற்கான காரணம் புரியவில்லை.
“அப்பா நான் வீட்டுக்குப் போறேன். இவங்களுக்கு நான் சொன்னா கோபம் தான் வரும். இதுவே அந்த டாக்டர் வந்து சொல்லும் போது தான் உரைக்கும். அதுதான் உயிருக்கு ஆபத்து இல்லைன்னு சொல்லிட்டாங்க இல்ல. அதுக்கு அப்புறமும் ஏன் இப்படி சீன் போட்டுட்டு இருக்காங்க மூணு பேரும்.” எரிச்சலில் வார்த்தையை விட்டான்.
“டேய் நீ சொல்றது நியாயம் தான், புரியுது. ஆனா அவங்களோட உணர்வுகளையும் நீ புரிஞ்சுக்கணும். லீலா கண்ணு முழிச்சதும் நான் எடுத்து சொல்லி இவங்களை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன், நீ இப்ப வீட்டுக்கு போ.” என்று நாகாவையும், தர்மாவையும் ஒரு வழியாக அனுப்பி வைத்துப் பெருமூச்சுவிட்டார் வடிவேலு.
“செல்வா என்ன ஆச்சு, ஏன் திடீர்னு அவசர அவசரமா கேம்ப்பை விட்டு கிளம்பிட்ட.” தன் பொருள்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்த நண்பனிடம் விசாரித்தான் பாஸ்கர்.
“என் வொய்ப் கு உடம்பு சரியில்லன்னு வீட்டில் இருந்து போன் பண்ணாங்க. என்னமோ ஏதோன்னு மனசு பதறுது. நான் கிளம்புறேன். நீ பக்கத்தில் இருந்து மத்த வேலை எல்லாம் பாத்துக்கோ.” என்க, பாஸ்கரனும் ஏற்றுக்கொண்டான்.
“லீலா உங்களுக்கு என்ன ஆச்சு. நான் கிளம்பும் போது கூட நல்லா சந்தோஷமா தானே இருந்தீங்க. பூ மாதிரி மனசுள்ள உங்களைக் கொலை பண்ண நினைக்கிற அளவுக்கு கொடூர மனம் உள்ள எதிரிகளைச் சம்பாதிச்சு வைச்சிருக்கீங்களா என்ன. ஆனா இதைப் பத்தி நீங்க எதுவும் என்கிட்டே சொன்னதே இல்லையே.” மனதிற்குள் பேசிக்கொண்டே பயணத்தைத் தொடர்ந்தான் செல்வா.
“அங்கிள் லீலாவுக்கு ஒன்னும் ஆகாது. உங்களோட நல்ல மனசுக்கும் அந்த பொண்ணுங்களோட நல்ல மனசுக்கும் இப்ப மட்டும் இல்ல எப்பவுமே தப்பா எதுவுமே ஆகாது. ரொம்ப சீக்கிரம் அவங்க எழுந்து நடக்க ஆரம்பிச்சுடுவாங்க. உங்களை இப்படிப் பார்க்கிறதுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு அங்கிள். நான் பார்த்து வளர்ந்த வடிவேலு அங்கிள் ரொம்ப கம்பீரமானவரு. அவர் இப்படி கலங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தா எனக்கும் கண்ணெல்லாம் கலங்குது.” என்றான் அரசு.
“என்னை நம்பி என் பசங்களோட வாழ வந்தவங்க டா அந்த பொண்ணுங்க. லீலாவுக்கு மட்டும் எதுவும் ஆகி இருந்தா என்னை நானே மன்னிச்சிருக்க மாட்டேன்.” உண்மையான வருத்தத்துடன் சொன்னார் வடிவேல்.
“சார் பேஷண்ட் கண்ணு முழிச்சுட்டாங்க. அவங்களைத் தொந்தரவு பண்ணாம ஒவ்வொருத்தரா போய் பாருங்க.” என்று செவிலியர் சொல்லிவிட்டுச் செல்ல பரபரப்பாகினர் அனைவரும்.
ருக்மணி, ஊர்மி, தேவகி, வடிவேலு, அரசு என அனைவரின் முகத்திலும் இதுவரை இருந்த பதற்றம் நீங்கி சாந்தம் குடிகொண்டது. ஒருவர் பின் ஒருவராக அந்த அறைக்குள் நுழைந்தனர்.
தண்ணீரில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட அல்லிக்கொடியை போல துவண்டு கிடந்தாள் லீலா. கடும் காய்ச்சலில் கூட கசங்காத அவள் பூமுகம் இப்போது இருக்கும் நிலை கண்டு அக்கா என்ற கதறலுடன் ஓடிச் சென்று அவள் கையை பிடித்துக்கொண்டு அழத் துவங்கினாள் ஊர்மி.
“என்னை மன்னிச்சுடுக்கா. நேத்து நான் உன்கூட இருந்திருக்கணும், தப்புப் பண்ணிட்டேன். நான் உன்கூட இருந்திருந்தா உனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது.” என்றவள் தொடர்ச்சியாக அழுது கொண்டே இருக்க, அவளைத் தேற்ற முனைந்தாள் ருக்மணி.
“ஊர்மி நீ வேணும் னு எதுவும் பண்ணல. இப்படி எல்லாம் நடக்கணும் னு விதி இருக்கு, நாம என்ன பண்ண முடியும். நம்ம அக்காவுக்கு ஒன்னும் ஆகாது. அவங்க எப்பவும் நம்மளை விட்டுப் போக மாட்டாங்க. அழுகையை நிறுத்து, நீ அழுவதைப் பார்த்து அக்கா இன்னமும் தான் வருத்தப்படுறாங்க.” என்றாள்.
“லீலா, வந்தவன் யாரு என்னன்னு உனக்கு ஏதாவது தெரியுமா. அவன் முகத்தைப் பார்த்தியா. அவனைப் பத்தி ஏதாவது ஒரு சின்ன க்ளூ கொடு. தெய்வா கிட்ட சொல்லி அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்.” கொதித்தார் வடிவேல்.
“வந்தவன் முகத்தை மறைச்சிருந்தான் மாமா. என்னால சரியா பாக்க முடியல.” என்றவள் தன்னைச் சுற்றிலும் நின்றவர்களில் யாரையோ தேடினாள்.
“செல்வாவுக்குப் போன் பண்ணியாச்சு வந்துக்கிட்டு இருக்கான்.” அவள் தேடுதல் புரிந்தவனாய் சொன்னான் அரசு.
“அவரைக் கொஞ்சம் பத்திரமா வரச்சொல்லுங்க அண்ணா.” என்க, அனைவரின் கவனமும் லீலாவை மொய்த்தது.
“வந்தவனோட நோக்கம் என்னைக் கொல்வது இல்லை, அவரைக் கொல்வது தான். அவர் வீட்டில் இல்லைன்னு தெரிஞ்சதும் கிளம்ப தான் பார்த்தான். அந்த நேரத்துல நான் எழுந்ததும் தான், எங்க மாட்டிப்போமோ என்கிற பயத்தில் என்னைக் கொலை பண்ண முயற்சி பண்ணான்.” சோர்வுடன் என்றாலும் தடுமாறாமல் பேசிவிட்டாள்.
“செல்வாவை யாரும் ஒன்னும் பண்ண முடியாதும்மா. நீ பயப்படாம தைரியமா இரு. அவன் வந்துக்கிட்டே இருக்கான் ரொம்ப சீக்கிரமே இங்க வந்துடுவான்.” தைரியம் ஊட்டினார் வடிவேலு.
அடுத்த நாள் காலையில் அடித்துப் பிடித்துக்கொண்டு செல்வா வந்து சேர்ந்த வேளை லீலாவின் அறையில், அவளைத் தவிர யாருமே இல்லை. அவளைக் கொல்லும் எண்ணத்தோடு கைகளில் கத்தியைத் தாங்கியபடி நின்று கொண்டிருந்த அந்த ஒருவனைத் தவிர.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
14
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ மறுபடியும் கொலையா … டாக்டருக்கு யார் எதிரியா இருக்கும் … காமெடி ஸ்டோரி திகில் ஸ்டோரியா மாறிடுச்சே … யாருமே பொண்டாட்டிக்கு பக்கத்துல இல்லன்னு கோபமா பேசுவானோ செல்வா
Selva-yota ex lover tha kolai panna try panrangalo..,🤔🤔