
அத்தியாயம் 98
ஊர்மி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்க அவளுக்கு அருகே படுத்திருந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் நாகா. “ஏன்டி ஊமைக்கொட்டான் எவ்வளவு கமுக்கமா உன் பிறந்தநாளை என்கிட்ட இருந்து மறைக்கப் பார்த்திருக்க. அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா நீ.
உன் பர்த்டே செலிபரேஷனுக்கு உன்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு தான் கூட்டிட்டுப் போகணுமா? அப்படிப் பண்ணா அது நாகாவோட ஸ்டைல் இல்லையே. சோ நாளைக்கு காலையில் ரெடியா இரு.
அத்தான் உன்னைத் தூக்கிட்டு போறேன். நாளைக்கு நாள் முழுக்க நீ ரொம்ப சந்தோஷமா இருப்ப, அதுக்கு நான் பொறுப்பு.” என்று தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டவன், மனைவியின் நெற்றியில் இருந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டு மென்மையாய் முத்தமிட்டு அவளை அணைத்தபடியே படுத்துக் கொண்டான்.
“ருக்கு சொன்னது எல்லாம் நினைவு இருக்கு தானே. நாளைக்கு காலையில் சீக்கிரமா எல்லோரும் எழுந்துக்கிறதுக்கு முன்னாடியே இங்கிருந்து கிளம்பணும். கல்யாணத்துக்குப் பின்னாடி நம்ம இரண்டு பேரில் ஒருவருக்கு வரும் முதல் பிறந்தநாள். இதைக் கொண்டாட நான் நிறைய திட்டம் வைச்சிருக்கேன். ஒன்னு கூட மிஸ் ஆகிடக்கூடாது.” தெய்வா சொல்ல, ஏனடா இவனிடம் தன் பிறந்தநாளைச் சொன்னோம் என்கிற நிலைக்கு வந்துவிட்டாள் அவள்.
“நீங்க எங்க கூப்பிட்டாலும் வரேன். ஆனா ஒரு சின்ன விஷயம்.” தயக்கத்துடன் சொன்னாள் ருக்கு.
“என்ன, எங்க போனாலும் கூட உன்னோட சிஸ்டர்ஸ்ஸையும் கூட்டிட்டுப் போகணுமா?” இதைக் கேட்கும் போது தெய்வா முகத்தில் லேசாக கோபத்தின் சாயல்.
“அதெல்லாம் தேவையில்ல. ஆனா எங்க போனாலும் சாயங்காலம் அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்திடனும். இது ஒன்னைத் தான் உங்ககிட்ட நான் கேட்கிறேன். இதை மட்டும் எனக்காக பண்ணுங்க.” என்றாள்.
“இவ்வளவு தானா, நான் உனக்காக இதைக்கூட பண்ணமாட்டேனா என்ன. விடு பார்த்துக்கலாம்.” வெளியில் இப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள், ‘என்னோட இருக்கும் போது நேரம், காலம், சாப்பாடு எல்லாத்தையும் நீயே மறந்திடுவ. உன் அக்கா தங்கச்சிங்களை மறக்க மாட்டியா?’ என்று நினைத்துக்கொண்டான் தெய்வா.
“பார்த்துக்கலாம் எல்லாம் இல்லங்க. கண்டிப்பா அஞ்சு மணிக்கு வீட்டுக்கு வந்திடணும். இல்லைன்னா நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன்.” ருக்குவின் வார்த்தையில் பிடிவாதம் தெரிந்தது.
“தெய்வா ரெட்ஸோன் வந்தாச்சு, உஷாரா இரு. ஒருவேளை நீ ஏதாவது ஏடாகூடமா பேசி வைச்சு உன் பொண்டாட்டி கோச்சுக்கிட்டான்னா அப்புறம் அவளை சமாதானப்படுத்துறது ரொம்பக் கஷ்டமா போயிடும். அமைதி அமைதி அமைதியோ அமைதி.” எனத் தன்னோடு நினைத்துக்கொண்டவன்,
“அம்மா தாயே சரியா அஞ்சு மணிக்கு உன்னை வீட்டில் கொண்டு வந்து விட்டுடுறேன் போதுமா. இப்ப நீயும் தூங்கு, என்னையும் தூங்க விடு. காலையில் சீக்கிரம் எழுந்திரிக்கணும்.” என்றுவிட்டு தெய்வா படுத்துக்கொள்ள, இவரை நம்பலாமா வேண்டாமா என்னும் குழப்பத்துடன் அவன் அருகே தானும் படுத்தாள் ருக்கு.
“தேவகி என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா படுத்திட்ட. உனக்குப் படிக்க வேண்டிய, எழுத வேண்டிய வேலை எதுவும் இல்லையா என்ன?” பேச்சை ஆரம்பித்தான் தர்மா.
“என்னாச்சு உங்களுக்கு. எவ்வளவு வேலை இருந்தாலும் இராத்திரி பத்து மணிக்கு மேல முழிச்சிருக்கக் கூடாதுன்னு நீங்க தானே சொல்லுவீங்க. மணியைப் பாருங்க, ஏற்கனவே பதினோறு மணி. லேட் ஆகிடுச்சு, அதனால் தான் மத்ததை காலையில் பார்த்துக்கலாம் னு படுக்கிறேன்.” என்றாள் தேவகி.
“ஓ அப்ப சரி, நீ தூங்கு.” தர்மா சொல்ல, “நீ தூங்குன்னு சொன்னா என்ன அர்த்தம். அப்ப நீங்க தூங்க வரலையா?” விசித்திரமாக நடந்து கொள்ளும் கணவனைக் குழப்பத்துடன் பார்த்தாள் தேவகி.
“இல்ல ஒரு முக்கியமான போன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். அதை பேசி முடிச்சுட்டு வந்துடுறேன் நீ படுத்து தூங்கு.” கண்டதையும் உளறி வைத்தான்.
“இந்த நேரத்தில் உங்களுக்கு யார் போன் பண்ணப் போறா. நீங்க என்ன தெய்வா மாமா மாதிரி போலீஸா, இல்ல நாகா மாமா மாதிரி வக்கீலா, இல்ல செல்வா மாமா மாதிரி டாக்டரா கண்ட கண்ட நேரத்தில் போன் வர. சாதாரண வாத்தியார் தானே, எவ்வளவு முக்கியமான போன் காலா இருந்தாலும் காலையில் பேசிக்கலாம். இப்ப மரியாதையா வந்து படுங்க.” குரலுயர்த்தினாள் தேவகி.
அவளுடைய வார்த்தைகளில் தெரியும் கோபம், அவள் தன் மீது கொண்ட பாசத்தின் வெளிப்பாடு என்று உணர்ந்தவனுக்கு உண்மையில் சந்தோஷமாகவே இருந்தது.
“சாதாரண வாத்தியாரா இருந்தாலும், சரியான நேரத்தில் போன் எடுக்காமப் போனா என்னவெல்லாம் ஆகலாம் னு மாஸ்டர் படம் பார்த்ததுக்கு அப்புறம் கூட உனக்குத் தெரியலையா தேவகி.” தர்மா விளையாட்டு போல் கேட்க, அவனை முறைத்தாள் அவள்.
“ஓகே சரண்டர், இதோ இப்ப வந்து படுத்துட்டேன்.” என்றவன் சொன்னது போலவே செய்தான். அவனையே பார்த்துக்கொண்டிருந்த தேவகி கண்களை மூடிக்கொண்டாள். ஆனால் உறங்கவில்லை. அவனுடைய யோசனை நிறைந்த முகம் அவளை உறங்கவிடவில்லை.
“நேர்மையான பூனைன்னு நினைச்சேன். ஆனா நானும் திருட்டுப் பூனைன்னு அப்பப்ப நிரூபிக்கிறார். முகத்தில் திருட்டுத்தனம் முக்கால் கிலோ பொங்கி வழியுது. கேட்டா ஒன்னும் இல்லையாம்.” என்பதாய் இவள் தன்னோடு பேசிக்கொள்ள, தர்மாவிற்குள் பல சிந்தனைகள்.
திருமணம் முடித்து மனைவி தன்னோடு கொண்டாடப் போகும் முதல் பிறந்தநாள். இந்த பிறந்தநாளை அவள் என்றுமே மறந்துவிடக் கூடாது. அப்படி ஒரு பரிசு கொடுக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு மூளையில் பல்ப் எரிந்தது போல் சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. அந்தப் பரிசு நினைவுக்கு வரவும் அதைத் தாண்டிய பரிசு வேறு எதுவும் இருக்கப் போவது இல்லை என்கிற முடிவுக்கு வந்தான்.
ஆனாலும் சின்னதாய் தயக்கம். “தான் நினைக்கும் பரிசு தேவகிக்கும் பிடிக்குமா, அந்தப் பரிசு தங்களுடைய வாழ்க்கைக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமா, இல்லை தான் ஏதும் அவசரப் படுகிறோமா.” என்று பலவாறு யோசித்துக்கொண்டு மெத்தையில் அங்கும் இங்கும் புரண்டு கொண்டிருந்தான்.
“இறுதியில் என்ன நடந்தாலும் பரவாயில்லை தான் நினைத்த பரிசை தேவகிக்கு கொடுத்தே ஆக வேண்டும்.” என்கிற முடிவுக்கு வந்த பின்னர் ஒரு சமாதானமான மனநிலையில் தேவகியைப் பார்க்க நினைத்து திரும்ப அவளோ கண்களின் கனலால் கணவனை எரித்துக் கொன்று விடுவது போல முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஏய் ஏன்டி ராத்திரி பன்னிரண்டு மணிக்கு இப்படி பேய் மாதிரி முறைச்சிக்கிட்டு இருக்க.” என்க, “நான் தெரியாமத் தான் கேட்கிறேன். கட்டின பொண்டாட்டியை பக்கத்துல வைச்சிக்கிட்டு எவளை நினைச்சு கனவு கண்டு சிரிச்சுக்கிட்டு இருக்க.” நிமிடத்தில் ஒருமைக்குத் தாவி இருந்தாள் தேவகி.
“அடிப்பாவி நான் ஏகபத்தினி விரதன் டி.” நிஜமாகவே பதறிவிட்டான் தர்மன்.
“ஏகபத்தினி விரதன் எதுக்கு ராத்திரி பன்னிரெண்டு மணிக்கு இப்படி பைத்தியக்காரன் மாதிரி சிரிச்சுகிட்டு இருக்கான்.” என்க,
“ஏன்டி கல்யாணம் ஆகிடுச்சுன்னா, ஒருத்தன் சிரிக்கிறதுக்குக் கூட பொண்டாட்டி கிட்ட பெர்மிஷன் கேட்கனுமா என்ன?” கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது மனைவியின் விசாரணையில்.
“சாதாரண நேரத்தில் சிரிக்கிறதுக்கு எல்லாம் அனுமதி கேட்கத் தேவையில்லை. ஆனா இப்படி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு சிரிக்கிறதுக்கு பெர்மிஷன் கேட்டுத்தான் ஆகனும்.” தோரணையாய் சொன்னாள் அவள்.
“அப்படியா பொண்டாட்டியம்மா. அப்ப நான் இப்பவே உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டுக்கிறேங்க. நான் கொஞ்ச நேரம் சிரிச்சுக்கட்டுமா என்னோட அருமைப் பொண்டாட்டியம்மா?” என சிரிப்புடன் கேட்க, “என்ன கிண்டலா?“ சண்டைக்கு வந்தாள் அவள்.
“என்னடா இது வம்பாப் போச்சு. நீ தானே சொன்ன பெர்மிஷன் வாங்கனும் னு.” தர்மா இன்று அவளை விடுவதாக இல்லை.
“இங்க பாருங்க தேவையில்லாம பேச்சை மாத்தாதீங்க. இப்போ எதை நினைச்சு சிரிச்சுகிட்டே இருக்கீங்க. எனக்கு என்னன்னு தெரிஞ்சே ஆகனும்.” கோபமாய் அவள் கேள்வி கேட்கவும், அவர்களின் அறைக் கடிகாரம் மணி பன்னிரண்டு என்று சத்தம் எழுப்பவும் சரியாக இருந்தது.
தன்னிடம் வம்பு இழுத்துக் கொண்டிருப்பவளை சாய்த்து, அவள் மேல் தானும் சாய்ந்து, அவளுடைய நெற்றியில் முத்தம் வைத்து, “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி.” புன்னகையுடன் சொன்னான் தர்மன்.
“ஏய் ப்ராடு இதுக்குத் தான் இவ்வளவும் பண்ணிக்கிட்டு இருந்தியா?” கேட்ட தேவகிக்கு உவகை தாங்க முடியவில்லை.
“யாருடி ப்ராடு, நீயா இல்ல நானா? ஏன்டி என்கிட்ட இதைப் பத்தி சொல்லல.” சங்கடம் தாங்கிய கோபத்தில் சற்றே உயர்ந்தது அவனின் குரல்.
“நல்ல புருஷனா இருந்தா பொண்டாட்டியோட பிறந்தநாள் எப்போன்னு அவனே தெரிஞ்சுக்கணும். அதை விட்டுட்டு ஏன் சொல்லலன்னு பொண்டாட்டி கிட்ட வந்து கேட்டுக்கிட்டு இருக்கக் கூடாது.” தானும் வீம்பு பிடித்தாள்.
“அதுவும் சரிதான். பிறந்தநாள் பொண்ணுக்கு பரிசு வேண்டாமா?” தர்மா கேட்க, “கண்டிப்பா, காலையில் உங்களோட டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு எல்லாத்தையும் வெளிய எடுத்து வைச்சுக்கோங்க. நான் பெரிய பெரிய லிஸ்டே வைச்சிருக்கேன்.” என்றாள்.
“அதெல்லாம் என்னைக்கா இருந்தாலும் உனக்குத் தான். ஆனா அதை அப்புறம் பார்த்துக்கலாம். ஆனா நான் உனக்கு இப்போ ஒரு கிப்ட் கொடுக்கலாம் னு இருக்கேன்.” என்றவன் மர்மமாகப் புன்னகைத்தான்.
அவன் முகத்தை வைத்தே எதுவோ சரியில்லை எனக் கணித்தவள், “என்ன கிப்ட். எனக்குத் தெரியாம வாங்கிட்டு வந்து மறைச்சு வைச்சு இருக்கீங்களா?” அறையை சுற்றிப் பார்த்தபடி கேட்டாள்.
“அப்படித்தான் வைச்சுக்கோயேன்.” என்றவனின் குரலில் தேவகிக்கு அவன் சொன்ன பரிசு என்னவாக இருக்கும் என்கிற யூகம் வந்தது. கூடவே வெட்கமும் இலவசப் பரிசாக சேர்ந்து கொள்ள, “சீக்கிரம் கொடுங்க” என்றாள் புன்னகையுடன்.
“அந்த கிப்டை நான் கொடுத்திடுவேன். ஆனா அதை நினைச்சு நீ இப்பவும், எப்பவும் வருத்தப்படக்கூடாது. அதைப் பார்க்கும் போதெல்லாம் உனக்கு என் நினைவு மட்டும் தான் வரணும். இந்த கிப்ட் நமக்கும், நம் எதிர்காலத்துக்கும் ஒரு சந்தோஷமான அடையாளம்.” பூடகமாய் பேசினான்.
“என்னென்னமோ பேசுறீங்க. உயிரில்லாத பொருளுக்கு எப்படி அவ்வளவு மதிப்பு கிடைக்கும். நீங்க கொடுக்கப் போவது எவ்வளவு பெரிய பொருளா இருந்தாலும், எனக்கு அது உங்களுக்கு பின்னாடி தான்.” என்றாள்.
“கொடுக்கப் போற கிப்ட் என்னன்னு தெரிஞ்ச பின்னால், சொன்ன சொல் மாறமாட்டியே.” என்க,
“அப்படி என்ன பெருசா கொடுத்திடப் போறீங்க.” என்றவளுக்கு இப்போது முக்கால்வாசி ஊர்ஜிதமாகி இருந்தது அவன் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறான் என்று.
“நான் கொடுக்கப் போறது உயிரில்லாத பொருள் இல்லை. உன்னையும், என்னையும் கலந்து உருவாகப் போகிற ஓர் உயிர், நம்ம குழந்தை. நம்ம தங்கத்தை சுமக்க தயாரா தேவகி மேடம்.” என்றபடி அறையின் வெளிச்சத்தை தர்மா குறைக்க, “உங்களுக்கு மட்டும் ஏங்க புத்தி இப்படிப் போகுது. யாராவது பிறந்தநாளுக்கு இப்படி ஒரு பரிசு கொடுப்பாங்களா?” யூகம் உண்மையான பூரிப்பை முகத்தில் தாராளமாகத் தவழவிட்டபடி கேட்டாள் தேவகி.
“நீயே நல்லா யோசிச்சுப் பாரு. இதுக்கப்புறம் வாழ்க்கை முழுக்க உனக்கு எத்தனையோ பிறந்தநாள் வரத்தான் போகுது. அத்தனை பிறந்த நாளுக்கும் நான் ஏதாவது ஒன்னு வாங்கி கொடுத்துக்கிட்டு இருக்கத் தான் போறேன். நம்மளோட வயசான காலத்தில் இதைப் பத்திக் கேட்டா, அத்தனையும் உனக்கு ஞாபகம் இருக்குமா. ஆனா இந்தப் பரிசை நம்ம சாகுற வரைக்கும் நம்மளால மறக்க முடியாது இல்லையா?
அதோட நான் ஒன்னும் ரோட்டில் போற, வர்ற பொண்ணுக்கு இதைக் கொடுக்க நினைக்கல. என் பொண்டாட்டிக்கு தான் கொடுக்குறேன். இதுல என்ன தப்பு இருக்கு.” என்க,
“ஓஹோ மைனருக்கு இந்த நினைப்பு வேற இருக்கோ. அதெல்லாம் என்கிட்ட நடக்காது தம்பி. ஏதாவது ஏடாகூடம் பண்ணீங்க சோத்துல விஷம் வைச்சிடுவேன்.” சிரிப்புடனே மிரட்டினாள் அவள்.
“நான் இந்தப் பரிசை செலக்ட் பண்ணதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? இதை என்னைத் தவிர இந்த உலகத்தில் வேற யாராலும் உனக்குக் கொடுக்க முடியாது. முக்கியமா உன்னோட அக்கா தங்கச்சிங்களால முடியவே முடியாது.” தர்மா சிரிக்க, “வாய்” என்று பட்டென்று அவன் இதழ்களில் அடித்தவள், “இப்படியெல்லாம் உங்களுக்குப் பேசத் தெரியுமா?“ என்று அவன் முதுகிலே வலிக்கும் படி அடித்தாள் அவள்.
அத்தனை அடிகளையும் சிரிப்புடன் வாங்கிக்கொண்டான் தர்மன். “எனக்கு ஒரு சந்தேகம். பூ மலர்வதும், பெண் பருவமடைவதும், குழந்தை உருவாவதும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது. நீங்க என்ன பெரிய கடவுளா? இன்னைக்கு முடிவு பண்ணி அடுத்த பத்து மாசத்தில் குழந்தையை பெத்துக்க.” நிஜமான சந்தேகத்தைக் கேட்டாள்.
“இன்னைக்குத் தேதி என்னன்னு கணக்கு பண்ணு.” தர்மா சொல்லவும், அடப்பாவி என வாயில் கை வைத்தாள் தேவகி.
“ஐடியா எல்லாம் நல்லா தான் இருக்கு. அதை நிறைவேத்திக்க சமயமும் சரியாத் தான் இருக்கு. ஆனா இன்னும் சில சிக்கல்கள் இருக்கே. நாளைக்கு நீங்க காலேஜ் போயிடுவீங்க, நானும் போயிடுவேன். என் அக்காங்க தான் நம்ம பிள்ளையை வளர்க்க வேண்டியது வரும். அப்ப உங்க முகத்தை எங்க போய் வைச்சுப்பீங்க.” புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“அதெல்லாம் பார்த்துக்கலாம். இப்படி பேசிக்கிட்டே இருந்தா, அப்புறம் கிப்ட் அடுத்த வருஷத்துக்கு தான் ரெடியாகும்.” என்ற தர்மா தேவகியை நெருங்கும் நேரத்தில் சின்ன தயக்கம், “தேவகி இதுக்கு உனக்கு நிஜமாவே சம்மதமா? இல்ல காலேஜ் முடிச்சுட்டு குழந்தை பெத்துக்கலாம் னு யோசிக்கிறியா.” என்றான்.
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க.” என்று சொல்லி அவன் இரத்த அழுத்தத்தை ஏற்றியவள், சில நொடிகள் தாமதித்து பட்டென்று சிரித்துவைத்தாள்.
தர்மா ஏக்கமாய் அவள் முகம் பார்க்க, “எனக்கு இதில் முழு சம்மதம். குழந்தை எல்லாம் காலா காலத்தில் பெத்துக்கணும். வயசான காலத்துல குழந்தை பெத்தா, அது அம்மா அப்பான்னு கூப்பிடுறதுக்குப் பதிலா தாத்தா, பாட்டின்னுதான் கூப்பிடும்.” தேவகி சிரிக்க, அவள் பிறந்தநாளுக்கான பரிசு உருவாக ஆரம்பித்தது அங்கே.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


புதுவிதமான கிஃப்ட் டா இருக்கே தர்மா 😜