Loading

அத்தியாயம் 95

     “ருக்கு, எல்லாம் க்ளியர். இனி நேரே மதுரையில் போய் தான் கார் நிற்கும்.“ சொல்லிக்கொண்டே மனைவி உறங்கிக் கொண்டிருந்த இடத்தை தெய்வா பார்க்க, அங்கே அவள் இல்லை.

     ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை தெய்வாவிற்கு. வாகனத்தை விட்டு இறங்கியவன் மனைவி காலையில் கட்டி இருந்த புடவையின் வண்ணத்தை நினைவு படுத்தி, கண்ணுக்கெட்டும் தொலைவு வரை எங்கேயும் தென்படுகிறாளா என நாலா திசைகளிலும் தேடிப் பார்த்தான். எங்கேயும் அவள் இல்லை எனவும் அவனுக்கு சற்றே மனம் வெதும்பியது.

     தான் கிளம்பிச் செல்லும் போது அவளை எழுப்பி, விஷயத்தை சொல்லிச் சென்றிருக்க வேண்டுமோ. உறக்கத்தில் இருந்து எழுந்து என்னைக் காணாமல் பயந்து, தனித்து இறங்கிச் சென்று இருப்பாளோ.

     இல்லை வேறு ஏதாவது என்று யோசிப்பதற்குள் அதுநாள் வரை அவன் கவனித்த பெண்களுக்கு எதிரான வழக்குகள் அனைத்தும் நினைவு வர, நெற்றியில் பலமாக அடித்துக்கொண்டான்.

     “சார் இந்தக் காரில் இருந்து யாரும் இறங்கிப் போனதைப் பார்த்தீங்களா? என் பொண்டாட்டியைப் பார்த்தீங்களா? இங்கே ஒரு பொண்ணு தனியாப் போறதைப் பார்த்தீங்களா? ரோஸ் கலர் புடவை கட்டி இருப்பாங்க? அம்மா இந்த போட்டோவில் இருக்கிற பொண்ணைப் பார்த்தீங்களா?” என்று பார்ப்பவர் அனைவரிடமும் மனைவியைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான். ஆனால் அங்கிருந்த ஒருவருக்கும் அவளைப் பற்றி தெரிந்திருக்கவில்லை. நொடியில் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது தெய்வாவிற்கு.

     ருக்குவை, ஆசை மனைவியை, வெளியுலகம் தெரியாத அபலையைத் தொலைத்து விட்டோமே என்கிற பயம் அதிகரிக்க அதிகரிக்க தெய்வாவின் மூளை யோசிக்கும் திறனை முற்றிலுமாக இழந்துவிட்டது.

     அவனுடைய போன் அலற யார் அழைத்தார்கள் என்று கூட கவனிக்காமல், “ருக்கு எங்க போன நீ. உனக்கு ஒன்னும் இல்லல்ல நீ நல்லாத் தானே இருக்க.” பதறிக்கொண்டு கேட்டான் தெய்வா.

     “தெய்வா நான் டிசி அருண் பேசுறேன். நீங்க ட்ராபிக் போலீஸ் கூடச் சேர்ந்து ட்ராபிக்கை க்ளியர் பண்ண வீடியோ தான் இப்போ பேஸ்புக்கில் ட்ரெண்டிங். அதான் விஷ் பண்ணலாம் னு போன் பண்ணேன்.” சிரிப்புடன் அவர் சொல்ல, “மண்ணாங்கட்டி அவனவன் என்ன பிரச்சனையில் இருக்கான்னு புரிஞ்சிக்காம வந்துட்டார் விஷ் பண்றேன் அது இதுன்னு. வைங்க சார் போனை.” பதற்றத்தில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் சொல்லிவிட்டவன், அதற்கும் சேர்த்து இரண்டாம் முறையாக நெற்றியில் அடித்துக்கொண்டான்.

     “எத்தனை நாள் கடுப்போ இப்படி திட்டித் தீர்த்துட்டாரு.”  சிரித்துக் கொண்டே அலைபேசியைக் கீழே வைத்தார் அருண். அவர் முன்னே அமைதியாய் அமர்ந்திருந்தாள் ருக்கு.

     “என்ன மிஸஸ் தெய்வா, உங்க மேல மிஸ்டர் தெய்வாவுக்கு பாசம் கொஞ்சம் அதிகம் தான் போல. நீங்க காணாமல் போன பதற்றத்தில் ஒரு மேலதிகாரின்னு கூடப் பார்க்காம என்னை இந்தத் திட்டு திட்டுறார். ஆமா நீங்க ஏன் அவர் கிட்ட சொல்லிட்டு வரல.” சற்றே கடுமையான குரலில் கேட்டார் அருண். பொறுப்பான பதவியில் இருக்கும் அவருக்கு பொறுப்பில்லாமல் நடந்து கொள்பவர்களை அரவே பிடிக்காது. அதனால் வந்த கோபம் இது.

     “அது” என்று ருக்கு பேச ஆரம்பிக்கும் முன்னர் அவள் அருகில் இருந்த அரசு ஆரம்பித்தான்.

     “தெய்வா காரை விட்டுப் போகும் போது, போனை அங்கேயே வைச்சுட்டு போயிட்டான். நான் ருக்குவைக் கூட்டிகிட்டு இங்கே வந்துட்டேன். அவன் திரும்பி வரும் போது ருக்கு அங்க இல்லன்னா இப்படித் தான் கிறுக்குத்தனமா ஏதாவது பண்ணுவான்னு தெரியும். அதனால் தான் அவனோட போனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைச்சிருந்தேன்.

     அந்தப் பக்கி இன்னும் அதைப் பார்க்கல போல. இங்க இருந்து வெளியில் போனதுக்கு அப்புறம் நானே ருக்குவை அவன் கூட பேச வைக்கிறேன்.” பவ்யமாய் சொன்னான் அரசு. உண்மையில் அவன் அப்படி எதுவும் செய்திருக்கவில்லை. தெய்வாவிற்கு இப்போது படும் இந்த அடி வாழ்நாள் முழுக்க மறக்கக்கூடாது என்று நினைத்தே அமைதியாக ருக்குவை மட்டும் அழைத்து வந்துவிட்டான்.

     “ஓகே அரசு, நீங்க கேட்டுக்கிட்ட மாதிரி தெய்வாவோட ட்ரான்ஸ்பர் ஆர்டரை நான் கேன்சல் பண்றேன். அது மட்டும் இல்ல என்னோட  ரிட்டயர்மென்ட் வரைக்கும் அவர் வேற ஊருக்கு போகாமப் பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு.

     அரசு நீங்க எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். உங்களுக்காக சம்பந்தப்பட்ட ஆபிஸர் விருப்பம் இல்லாம இதைப் பண்றேன். தெய்வாவை சமாளிக்க வேண்டியது உங்களோட பொறுப்பு. எல்லாத்துக்கும் மேல தெய்வா மாதிரி ஒரு நல்ல ஆபிஸரை இன்னொரு ஊருக்கு அனுப்வதில் எனக்கும் பெர்சனால விருப்பம் இல்ல.” என்றார் அருண்.

     “சார் அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். இதை நாங்க சொல்லித்தான் நீங்க செஞ்சீங்கன்னு தெய்வாவுக்கு தெரியவேண்டாம். தெரிஞ்சா வானத்துக்கும், பூமிக்கும் குதிப்பான். பாவம் இந்தப் பொண்ணுகிட்ட தேவை இல்லாமல் சண்டை போடுவான். நல்லவன் தான் என்ன கொஞ்சம் முரடன்.” அரசு சொல்ல,

     “தெய்வா இப்படிச் செய்யக்கூடிய ஆள் தான். மேலதிகாரின்னு கூடப் பார்க்காம என்னையே அந்தப் பேச்சு பேசுறாரு. இந்தப் பொண்ண விட்டு வைப்பாரா என்ன.” சிரிப்புடன் சொன்னார்.

     “அவர் அப்படிப்பட்டவர் இல்ல சார். இதுவரைக்கும் என்னைக் கடுமையா ஒரு வார்த்தை கூட சொன்னது இல்லை. இப்ப என்னைக் காணாம பயத்தில் என்ன பேசுறோம் னு தெரியாமப் பேசி இருப்பார்.” வேகமாகப் பதில் சொன்னாள் ருக்கு.

     “இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட புருஷனை விட்டுக்கொடுக்காத பொண்ணுங்க இருக்காங்கன்னு நினைக்கும் போது புல்லரிக்கிதும்மா. ரொம்ப சந்தோஷம் உங்களைப் பார்த்ததில்.” அருண் சொல்ல, “ருக்கு வந்த வேல முடிஞ்சிடுச்சு. வந்த வழியைப் பார்த்து போங்கடான்னு ரொம்ப நாசுக்கா சொல்றார் சார், இல்ல சார்.” சிரித்தான் அரசு.

     “ரொம்ப சரியா புரிஞ்சுகிட்டீங்க அரசு. இன்னும் கொஞ்ச நேரம் நீங்க இங்க இருந்தாலும், விஷயம் தெய்வாவுக்குப் போய் சேர்ந்திடும். அந்த அளவுக்கு விஸ்வாசமான ஆட்களை தெய்வா சேர்த்து வச்சிருக்காரு.” சிரித்தபடி சொன்ன அருண், அரசுவின் உடன்பயின்ற அவனின் நெருங்கிய நண்பனின் மூத்த சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

     சந்தோஷம், நாங்க கிளம்புறோம் என்று ருக்குவை வெளியே அழைத்துக்கொண்டு வந்த அரசு, “ருக்கு அதுதான் அண்ணன் எல்லாத்தையும் சரி பண்ணிட்டேனே. இன்னும் என்ன கவலை. வா சந்தோஷமா வீட்டுக்குப் போகலாம். இனிமே உன்னோட புருஷன் உன்னைத் தனியா கூட்டிட்டுப் போக முடியாது. நீ உன்னோட அக்கா, தங்கச்சிங்களோட சந்தோஷமா இருக்கலாம்.” நிம்மதிப் பெருமூச்சுடன் சொன்னான் அரசு.

     “சந்தோஷம் தான் அண்ணா. ஆனா அவரை ஏமாத்துறோமேன்னு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. ஆதியில் இருந்து அவரோட ஆசை இதுதான்னு எங்க எல்லோருக்கும் தெரியும். தெரிஞ்சும் எங்க சுயநலத்துக்காக உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணோம். அதுவே அவருக்கு நான் செய்த துரோகம் மாதிரி தான். இப்ப இன்னொரு துரோகம்.” தலைகுனிந்தபடி சொன்னாள் அவள்.

     “அட என்ன துரோகம் அது இதுன்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க. சீதா, நளாயினி, சாவித்திரி மாதிரியான பத்தினிங்களுக்கே பயங்கர டப் கொடுப்ப போல.

     ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதுக்குப் பின்னால் நல்லதோ கெட்டதோ ஒரு காரணமும் இருக்கத்தான் செய்யும். அதுக்காக எல்லோருடைய எல்லா ஆசைகளும் நிறைவேறிடுமா சொல்லு. ஏகாம்பரத்துக்கு உண்மையான சந்தோஷம் னா என்னன்னு புரிய வைக்க முயற்சி பண்றோம் னு நினைச்சுக்கோ.” அரசு சொன்னதில் அந்த ஏகாம்பரம் என்ற வார்த்தையில் ருக்குவிற்கு சிரிப்பு வர, அனைத்தையும் மறந்து மெதுவாகப் புன்னகைத்தாள்.

     “இப்போ எப்படி இருக்கு மூஞ்சு. நல்ல பிரைட்டா இருக்குல்ல. இதையே மெயிண்ட்டைன் பண்ணு. அதுதான் இந்த அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்.” தானும் புன்னகைத்தபடி சொன்னான் அரசு.

     “அண்ணா அவர் என்னைக் காணாம பயத்தில் இருக்கப் போறார். அவருக்குப் போன் பண்ணி பேசிட்டு வந்திடவா?” என்க, “அவன் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ வீட்டை விட்டுப் போனதில் இருந்து லீலா, ஊர்மி, தேவகி மூணு பேரும் ரொம்ப சோகமா இருக்காங்க. நீ முதலில் அவங்களைப் போய் பாரு.” என்று ருக்குவை வீட்டிற்கு அனுப்பி வைத்த அரசு, “மகனே வீட்டில் எல்லாரையும் கஷ்டப்பட வைச்சதுக்கு கொஞ்ச நேரம் அனுபவி.” என்று தெய்வாவை நினைத்து உள்ளுக்குள் கருவிக்கொண்டான்.

     இராதா இல்லத்திற்குள் நுழைந்த ருக்கு, அக்கா என்று அழைத்தபடியே சகோதரிகளைத் தேடி நாலாபுறமும் கண்களைச் சுழற்றினாள். தங்கையின் குரல் மனப்பிரம்மை போல என்று நினைத்து அமைதியாக நின்றிருந்த லீலா மீண்டும் மீண்டும் கேட்கும் ருக்குவின் குரலில் வெளியே வர, ஓடிச் சென்று அவளைக் கட்டிக்கொண்டாள் ருக்கு.

     தாயைப் பிரிந்த கன்று மீண்டும் தாயிடம் வந்தது போன்ற பாதுகாப்பான உணர்வு லீலாவை அணைத்துக் கொண்ட உடன் கிடைத்தது ருக்குவிற்கு.

     “ருக்கு நீ எப்படி இங்க?” லீலாவுக்கு ஆனந்த அதிர்ச்சி.

     “உங்களால என்னை விட்டுப் பிரிஞ்சு இருக்க முடியலாம். ஆனா என்னால் உங்க எல்லாரையும் விட்டுட்டு தனியா இருக்க முடியாது. அதனால் தான் வந்துட்டேன்.” என்றுவிட்டு அழ ஆரம்பித்தாள் ருக்கு.

     “அடி அசடு, யார் சொன்னா உன்னை விட்டு எங்களால் தனியா சந்தோஷமா இருக்க முடியும் னு. இருந்தாலும் நாங்க ஏன் உன்ன அனுப்பி வைச்சோம். நீயும், உன் புருஷனும் சந்தோஷமா இருக்கத் தானே.” என்ற லீலாவின் கண்கள் தங்கையின் பின்னால் அவள் கணவனைத் தேடியது.

     “அக்கா, தெய்வா மாமாகிட்ட சண்டை போட்டுட்டு திரும்ப வந்தீங்களா?” ஆச்சர்யம் அதிர்ச்சி கலந்த குரலில் கேட்டுக்கொண்டே வந்தாள் தேவகி.

     “சண்டை போட்டுட்டு வந்தாங்களோ, இல்ல சமாதானம் பேசிட்டு வந்தாங்களோ. எப்படியோ என் ருக்கு அக்கா என்கிட்ட திரும்ப வந்துட்டாங்க. எனக்கு இதுவே போதும்.” என்றாள் ஊர்மி.

     “ருக்கு உன் புருஷன் கிட்ட சண்டை போட்டியா?” லீலா கோபமாகக் கேட்டாள்.

     “இல்லக்கா அவரோட ட்ரான்ஸ்பர் கேன்சல் ஆகிடுச்சு. இனிமே அவர் வேற ஊருக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. அதனால் தான் என்ன முன்னாடி வீட்டுக்கு அனுப்பி வைச்சிட்டார்.” ருக்கு சொன்னதைக் கேட்ட மற்ற சகோதரிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

     லீலா மட்டும் இது எப்படி சாத்தியம் என்பது போல் யோசிக்க மற்ற இருவரும் என்ன நடந்திருந்தால் என்ன தங்கள் சகோதரி தங்களுடன் இணைந்துவிட்டாள் அதுவே போதும் என்று முடித்துக்கொண்டனர்.

     “சரி என்னைக் கேள்வி கேட்டு முடிச்சிட்டீங்கன்னா சாப்பிட வரீங்களா. எனக்கு ரொம்பப் பசிக்குது.” ருக்கு சொல்லவும், வேலையாள்கள் சமைத்து வைத்த உணவை வேகமாக எடுத்து வைக்க ஆரம்பித்தனர் மற்ற மூவரும்.

     காலையில் இருந்து மாமனாரின் வாடிய முகம் தாங்க மாட்டாமல் இருந்த தேவகி, விஷயத்தைச் சொல்லி அவரையும் தங்களுடன் உணவருந்த அழைக்க, சின்னப்பையன் போல் உத்வேகத்துடன் மாடிப்படியில் இருந்து இறங்கி வந்தார் வடிவேலு.

     அவர் ஆசை ஆசையாய் அழைத்து வந்த மருமகள்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் காண அவருக்குக் கண்கள் இரண்டு போதவில்லை.

     அந்த நேரம் அவர் அழைப்பில் இணைந்தான் அரசு. “ஹலோ ஓல்டு மேன் உங்க மருமக ருக்கு உங்க வீட்டில் இருக்கிறதை கண்குளிரப் பார்த்துட்டீங்களா? இப்பவாச்சும் நான் சொன்னது உண்மைன்னு நம்புறீங்களா?” என்க, “அரசு உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்குத் தெரியல டா.” கண்கள் கலங்க சொன்னார் அவர்.

     “அப்படியே போட்டேன்னா பாருங்க. இப்ப நான் கேட்டேனா உங்க நன்றியை. அதுக்குப் பதில் என் பெயரில் உங்க அரண்மனை மாதிரி இன்னொரு அரண்மனையை எழுதி வைச்சா சந்தோஷப்படுவேன்.” என்க, “உனக்கில்லாததா டா படவா, நீ கேட்டா என் மொத்த சொத்தும் உனக்குத்தான். ஆனா நீ தான் கேட்க மாட்டியே.” என்று தானும் சிரித்தார் வடிவேல்.

     “எனக்கு இந்த உலகத்தில் உங்க சந்தோஷத்தை விட வேற எதுவும் பெருசு கிடையாது. உங்களோட சந்தோஷத்துக்காக நான் இதுவும் செய்வேன், இதுக்கு மேலும் செய்வேன்.” மனதோடு நினைத்த அரசு, “அப்புறம் உங்க அருமைப் பையன் தெய்வாவுக்கு நான் கொஞ்சம் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கப் போறேன். அவன் கொஞ்சம் அப்படி இப்படி தான் வீட்டுக்கு வருவான். அதனால எதுக்கும் மனச கொஞ்சம் திடப்படுத்திக் கோங்க.” சிரிப்போடு சொன்னான்.

     “அடப் போடா அறிவு கெட்டவனே. நான் இப்போ இருக்கிற சந்தோஷத்தில் எவ்வளவு பெரிய விஷயத்தையும் தாங்கிப்பேன்.” வடிவேலு சொல்ல, “தென் ஐ வில் பி ஹேப்பி.” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, தலையில் கை வைத்தபடி நெடுஞ்சாலையின் நடுவே பூச்செடிகள் இருக்கும் இடத்தில் அமர்ந்திருக்கும் தெய்வாவைப் பார்த்தான் அரசு.

     “ஊர்மி பாரேன் நான் போன வேகத்தில் திரும்ப வந்துடுவேன்னு தெரியாம, இந்த லீலாக்கா ஒருநாள் முழுசும் கண் முழிச்சு எனக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சு வைச்சு இருக்காங்க. இவங்களை நான் என்னன்னு சொல்றது.” சிரிப்புடன் சொன்னாள் ருக்கு.

     “அது மட்டும் இல்ல ருக்குக்கா. நீங்க போனதில் இருந்து லீலாக்கா உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவே இல்லை. பாவம் செல்வா மாமா, லீலாக்காவை வாய் வலிக்க கூப்பிட்டு பார்த்துட்டு, கோபப்பட்டு கிளம்பி போயிட்டாரு.” இதுதான் சமயம் என்று கிண்டல் செய்தாள் தேவகி.

     “இதோ பாருடா இந்த அம்மாவோட பேச்சை. இன்னைக்கு காலையில் இருந்து எலிப்பொறியில் மாட்டிக்கிட்ட மூஞ்செலி மாதிரி முகத்தை வைச்சிக்கிட்டு இருந்துட்டு, இப்போ லீலாக்காவையே கலாய்க்கிறியா?” மூத்தவளுக்கு ஆதரவாக வந்தாள் ஊர்மி.

     “அக்கா, என்னைப் பார்த்து மூஞ்செலின்னு சொல்றாங்க ஊர்மிக்கா. நான் என்ன மூஞ்செலி மாதிரியா இருக்கேன்.” கடைக்குட்டிகளுக்கே உரித்தான செல்லமான தொணியில் சிணுங்கினாள் தேவகி.

     “என்ன இருந்தாலும் நீ இப்படிப் பேசி இருக்கக் கூடாது ஊர்மி. ஒரு பெருச்சாளியைப் பார்த்து மூஞ்செலின்னு சொன்னா எப்படி.” லீலா சிரமப்பட்டு சிரிக்காமல் சொல்ல, அக்கா என்று மீண்டும் சிணுங்கினாள் தேவகி. அவளைப் பார்த்து மற்ற மூவருமே சிரிக்க, இதைப் பார்த்த வடிவேலுவிற்கு மனம் நிறைந்தது போல் இருந்தது.

     இவர்கள் நால்வருக்குள் ஒருவரின் மீது இன்னொருவருக்கு வரும் வருத்தம், கோபம், பொறாமை என எதுவும் ஒரு நாளுக்கு மேல் நீடித்ததில்லை. எல்லா உணர்வுகளையும் கொண்ட சாதாரணப் பெண்கள் தான் என்றாலும், அவர்களுக்கு நடுவில் இருக்கும் மாறாத அன்பு ஒன்று தான் இவர்களை மற்றவர்களிடம் இருந்து தனித்து நிறுத்தி இருக்கிறது என்பதை முதல் சந்திப்பிலேயே புரிந்துகொண்டவர் அல்லவா அவர். தன் மகன்கள் எப்படி இருக்க வேண்டும் என்றுஅவர் ஆசைப்பட்டாரோ அதைப் போல் மருமகள்கள் கிடைத்ததில் பேரானந்தம் தான்.

     இருள் படர ஆரம்பித்த நேரத்தில் சோகமே உருவாய் மெதுவாக வீட்டிற்குள் வந்தான் தெய்வா. ருக்குவைத் தேடி அலைந்து, சோர்ந்து, ஒருவேளை அவள் வீட்டிற்கு சென்று இருப்பாளோ என்னும் நப்பாசையில் மனதிற்குள் அவள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதை ஜெபம் போல சொல்லிக்கொண்டே மிக மெதுவாக அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

     கிச்சன் அருகே இருந்து சிரிப்பு சத்தம் கேட்க தன்னையும் அறியாமல் அந்தப் பக்கமாக திரும்பினான். இவர்கள் நால்வரின் திருமண மற்றும் நிச்சயதார்த்த ஆல்பங்கள் மற்றும் வீடியோக்கள் வந்திருக்க, தன்னையும் நாகாவையும் தவிர்த்து அதில் இருந்த ஒவ்வொருவரையும் ஏதாவது ஒரு குறை சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள் ஊர்மி.

     “ஆமா இவங்க புருஷன் அப்படியே பெரிய மைசூர் மகாராஜா, இவங்க எலிசபெத் மகாராணி. இவங்க மத்தவங்களைக் குறை சொல்றாங்க. இந்த போட்டோவைப் பாருங்க, நாகா மாமா முகத்துல முழுக்க முழுக்க வன்மம் தான் தெரியுது.” வேண்டுமென்றே சொன்னாள் ருக்கு.

     ருக்குவின் குரல் கேட்டதும் தெய்வாவிற்கு உலகமே அவன் வசப்பட்டது போன்றதொரு உணர்வு. அவள் தன்னிடம் சொல்லாமல் வந்துவிட்டாள், அவளைத் தேடி தான் இராப்பிச்சைக்காரன் போல் அலைந்து திரிந்தோம் என எதுவும் அவனுக்கு அந்த நிமிடம் நினைவுக்கு வரவில்லை. அவன் நினைவில் வந்தது எல்லாம் தன் மனைவி நலமுடன் இருக்கிறாள் என்பது மட்டும் தான்.

     தான் எங்கே இருக்கிறோம் தன் அருகில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என அனைத்தையும் மறந்து ஓடிச்சென்று ருக்குவை எழுப்பி தன்னுடன் சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான் தெய்வா.

     அவனுடைய இந்த திடீர் செய்கையால் அனைவரும் குழம்பிப் போய் நிற்க, அடுத்து அவன் செய்த செயலால் அனைவரும் வாயடைத்துப் போயினர். உடலோடு ஒட்டிய கவசத்தைப் போல மனைவியைத் தனக்கு நெருக்கமாக  அணைத்துக் கொண்டிருந்தவன், ஒரே ஒரு கணம் அவளை தன்னை விட்டு பிரித்து அவளுடைய நெற்றி, கன்னம் என மாறி மாறி முத்தமிட்டு மீண்டும் தன்னோடு அணைத்துக்கொண்டான்.

     “எங்க போன ருக்கு, நான் உன்னை எங்க எல்லாம் தேடினேன் தெரியுமா. என்னை விட்டுட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு. நான் ரொம்ப பயந்து போயிட்டேன். இன்னொரு முறை என்கிட்ட சொல்லாம என்னைத் தனியா விட்டுட்டு போகாதே.

     உனக்கு என்ன நாம தனியா போகக்கூடாதா, வேண்டாம். உனக்குப் பிடிக்காத எதுவும் வேண்டாம்.” தன்னைப் போல் சொல்லிவிட்டவன் அதன்பிறகே தான் சொன்ன வார்த்தைகளை உணர்ந்தான். சிறுவயது கனவை விடவா தன் மனைவியைத் தான் நேசிக்கிறோம் என நினைத்தவனுக்கு பெருமை மற்றும் வலி இரண்டும் ஒரே நேரத்தில் உருவானது.

     அக்கா, தங்கைகள் முன்னிலையில் இப்படிச் செய்கிறானே என்னும் அவஸ்தையில் நெளிந்த ருக்கு, அவர்களை திரும்பிப் பார்க்க அவர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய கையால் மற்றவர் கண்களை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தனர் அங்கே.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்