
அத்தியாயம் 93
“பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்.” அதீத சந்தோஷத்துடன் பாடிக்கொண்டும் ஸ்டியரிங்கில் விரல்களைத் தட்டிக் கொண்டும் சந்தோஷமாகப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தான் தெய்வா.
அவன் அருகே, உலகத்தின் ஒட்டு மொத்த சோகத்தையும் ஒன்றாய் தன்னுடைய முகத்தில் தாங்கிக்கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தாள் ருக்கு.
“அதோ அந்த பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்.” என்பதாய் வாயில் வந்த பாடல்களை எல்லாம் அவன் தன்போக்கில் பாடிக்கொண்டே வர, கணவனின் இந்த அதீத சந்தோஷம் ருக்குவிற்கு சற்றே எரிச்சலைத் தந்தது. இருந்தாலும் சிரமப்பட்டு அமைதியாக இருந்தாள்.
“ருக்கு என்னைப் பாரேன், நான் இப்ப ரொம்ப அழகா இருக்கேன் தானே. எனக்குத் தெரியும் நான் இப்ப ரொம்ப ரொம்ப அழகா இருப்பேன்.” கேள்வியும் கேட்டு பதிலையும் சொன்னவனை விநோதமாகப் பார்த்தாள் ருக்கு.
“அகத்தின் அழகு முகத்தில் தெரியும் னு சொல்லுவாங்க. என் மனசில இருக்கிற சந்தோஷத்தில் ஒரு பத்து சதவிகிதம் என்னோட முகத்தில் தெரிஞ்சாக் கூட, இப்ப இந்த நிமிஷம் நான் பேரழகனாத் தெரிவேன் தானே.” சந்தோஷமாய் சொன்னான் தெய்வா.
“அந்த அளவுக்கு சந்தோஷமா இருக்கீங்களா?” ஒரு மாதிரிக் குரலில் கேட்டாள் ருக்கு. அவள் ஆனந்தமாக இல்லாத போது அவள்கணவனால் எப்படி ஆனந்தமாக இருக்க முடிகிறது என்னும் எண்ணம் இருந்தது அந்த வார்த்தைகளில்.
“இந்த நிமிஷம் என்னோட சந்தோஷத்தை அளவிட முடியாது ருக்கு. உங்க வீட்டு சந்தோஷம், எங்க வீட்டு சந்தோஷம் இல்ல உலக மகா சந்தோஷம்.
இப்ப எனக்குள்ள இருக்கிற உற்றாகமும், சந்தோஷமும் பணமா மாறும் அப்படின்னா நான் தான் உலகத்திலேயே பணக்காரனா இருப்பேன்.
என் சந்தோஷைத்தை வெளிக்காட்ட என்ன செய்யுறதுன்னே தெரியல. ஏதாவது ஒன்னு செய்யணும் போல இருக்கு. அதனால் தான் பாடுறேன்.” என்க, தலையை இடவலமாக ஆட்டியவள் சீட்டில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள்.
“ருக்கு உனக்காக நான் ஒரு பாட்டு பாடுறேன், நீ கேட்கிறியா?” என்க, பொறுமை எல்லாம் எருமை மேய்க்க போய்விட, வெளிப்படையாக முறைத்து வைத்தாள் ருக்கு.
“சரி சரி முறைக்காத நான் பாடல.” என்றவனால் சிறிது நேரம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை.
“உனக்கு ஒன்னு சொல்லவா ருக்கு. ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்ட ஒருத்தன் அடுத்த நாளே ஜெயிலில் இருந்து திடீர்னு ரிலீஸாகி வந்தா அவனுக்கு ஒரு பீலிங் வருமே, அப்படி இருக்கு எனக்கு. இப்படி ஒரு பீலிங் இதுவரைக்கும் நான் அனுபவிச்சதே இல்ல.” என மீண்டும் ஆரம்பித்தான்.
“நானும் இப்படிப்பட்ட உணர்வை இதுவரைக்கும் நானும் அனுபவிச்சதே இல்லை.” சோகமாகச் சொன்னாள் ருக்கு.
அவள் சொல்லில் இருந்த வேதனையை உணராது, சொற்களை மட்டும் கவனித்தவன், “நிஜமாவா, எனக்குத் தெரியும் ருக்கு. என்ன தான் உன்னோட அக்கா தங்கச்சிங்களை விட்டுட்டு இருக்கிறது உனக்குக் கஷ்டமா இருந்தாலும், நீ என் கூட இருக்கப் போறங்கிற சந்தோஷம் உனக்குள்ளேயும் இருக்கும் தானே.
ஏன் ருக்கு, நாம ஏன் இந்த சந்தோஷத்தை ஒருத்தருக்கு ஒருத்தர் பறிமாறிக்கக் கூடாது. எனக்கு ஒரு முத்தம் கொடேன். ஆசைப்பட்ட பொண்ணோட முத்தம் அதுவும் இப்படி லாங் டிரைவ் போகும் போது கிடைச்சா ரொம்ப ரொம்ப எக்ஸைட்டிங்கா இருக்கும்.” தெய்வா தன் போக்கில் சொல்லிக்கொண்டே போக அவளுக்கு உள்ளுக்குள் பற்றிக்கொண்டு வந்தது.
“ஓய் என்ன அமைதியாவே இருக்க. ஓகோ வெட்கமா, இல்ல நீ கிஸ் பண்ணி அதில் நான் தடுமாறி காரைக் கொண்டு போய் எங்கேயாவது மோதிடுவேனோன்னு பயமா. அதைப் பத்தி எல்லாம் கவலைப்படாத ருக்கு. காரில் இருக்கும் போது நான் என்ன பண்ணாலும் என்னோட ஒரு கண் ரோட்டில் தான் இருக்கும்.” தெய்வா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, வாகனத்தின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வர, அதை இடித்துவிட வேண்டாம் என்கிற நினைப்பில் தெய்வா காரை வளைத்து திருப்ப, டப்பென்ற சத்தத்துடன் காரின் டயர் வெடித்து, கார் பயங்கரமாகக் குலுங்கி வேகம் குறையாமல் சீரற்ற பயணமாய் சிறிது தொலைவு சென்று ஒருவழியாக நின்றது.
“ஓ ஷிட், எத்தனையோ வருஷக் கனவு நிறைவேறின சந்தோஷத்தில், வளமான வாழ்க்கையைத் தேடிபோய்க்கிட்டு இருக்கேன். இப்ப பார்த்து தான் இப்படியெல்லாம் நடக்கணுமா. எவன் கண்ணு பட்டதோ.
வேற யாரு வீட்டில் உட்கார்ந்துக்கிட்டு, நான் மட்டும் தனிக்குடித்தனம் வந்துட்டேனேன்னு வயிற்றெரிச்சலில் இருக்கும் என் கூடப்பிறந்தவங்க கண்ணும், உன்னைத் தனியாப் பிரிச்சுக் கூட்டிக்கிட்டு வந்துட்டேனேன்னு உன் கூடப்பிறந்தவங்க கண் திருஷ்டியுமா தான் இருக்கும்.” என்றவன் தலைமுடியைப் பிடித்து ஆட்ட வேண்டும் போலத் தோன்றியது அவன் அன்பு மனைவிக்கு.
“ருக்கு இதுக்கெல்லாம் நீ கவலைப்படாதே. இப்படியெல்லாம் நடக்கும் னு எனக்குத் தெரியும். அதனால தான் ஸ்டெப்னி ரெடியா வைச்சிருக்கேன். நீ வண்டியிலேயே இரு. ஒரு இருபது நிமிஷத்தில் நான் எல்லாத்தையும் ரெடி பண்ணிடுறேன். விதியோ, சதியோ யாரு நினைச்சாலும் நாம ஊருக்குப் போறதை தடுக்க முடியாது.” உறுதியாய் சொல்லிவிட்டு காரில் இருந்து இறங்கினான் தெய்வா.
இராதா இல்லத்தில், “ஏன்டா தெய்வா, வீட்டில் இத்தனை பேரை அழ வைச்சுட்டு நீ பாட்டுக்கு சந்தோஷமா கிளம்பிப் போயிட்ட இல்ல. உன்னை அப்படியே விட்டுடுவானா இந்த அரசு. நீ அந்த ஊருக்கு போய் சேர்வதற்குள்ள என்னென்ன பாடுபடப் போறன்னு பாரு. உனக்காக நிறைய விஷயம் பண்ணி வைச்சு இருக்கேன் டா மகனே.
வடிவேலு அங்கிளையா நீ அழ வைக்கிற. இருடி மாப்பிள்ளை, தனியா இருந்து சாதிச்சு கிழிச்சது போதும் னு நீயா கிளம்பி இங்க திரும்ப வருவ, வர வைப்பேன் நான்.” என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான் அரசு. அவனுக்கு அதிக வேலை வைக்காமல் ருக்குவே அதைச் செய்ய வைப்பாள் என்பதை அரசு அறிந்திருக்கவில்லை.
மருத்துவமனையில், “லேகா, உனக்கு எலும்பு எல்லாம் நல்லா கூடிடுச்சு. வாக்கிங் ஸ்டிக்ஸ் வைச்சு இனி நீயே எழுந்து நடமாடலாம். மாத்திரைகள் எல்லாத்தையும் சரியா எடுத்துக்கிட்டு வந்தா காயங்களும் சீக்கிரம் குணமாகிடும். இன்னும் கொஞ்ச நாளில் நீ முழுசாக் குணமாகிடுவ.
இனி நீ ஹாஸ்பிடலில் இருக்க வேண்டிய அவசியம் கூட இல்லை. உன்னோட புருஷன் நம்பர் கொடு, நான் அவர் கிட்ட பேசி உன்னை அவரோட அனுப்பி வைக்கிறேன்.” அவளுடைய திருத்தப்பட்ட மருத்துவ அறிக்கையைப் பார்த்து புன்னகையுடன் சொன்னான் செல்வா.
யார் என்ன என்று தெரியாத, அடுத்த முறை பார்ப்போமா என்று நிச்சயம் இல்லாத தன்னுடைய நோயாளிகளிடமே அத்தனை அன்பு காட்டுபவன் செல்வா. லேகா அவனின் பல வருடப் பழக்கம். அவளுக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது அவனுக்கு மகிழ்வைத் தந்திருந்தது.
ஆனால் அவன் மனநிலைக்கு முற்றிலும் மாறாக, “புருஷனா” என்று விரக்தி சிரிப்பு சிரித்தவள், “அவரு என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டாரு செல்வா. இதுக்கு அப்புறம் அவரு என் கூட வாழுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.” கலங்கிய கண்களுடன் சொன்னாள்.
“உனக்கும், உன் புருஷனுக்கும் ஏதோ பிரச்சனைன்னு தெரியுது. இல்லாமப் போனா இத்தனை நாளில் ஒருமுறை கூட அவர் உன்னை வந்து பார்க்காமல் இருந்திருப்பாரா?” என்க, இன்னமும் தான் விரக்தி சூழ்ந்தது அவள் முகத்தில்.
“உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு நான் கேட்க மாட்டேன். அது எனக்குத் தேவையும் கிடையாது. ஆனா இன்னொரு தடவை இப்படிப் பேசாத. புருஷன், பொண்டாட்டி உறவுங்கிறது அவ்வளவு சுலபமா உடைந்து போகிறது கிடையாது.” தோழியாய் நினைத்து சொன்னான் செல்வா.
“புருஷன், பொண்டாட்டியை மதிச்சா தான் அந்த உறவுக்கு அர்த்தம் செல்வா. என் புருஷன் என்னை பொண்டாட்டியா என்ன, பொண்ணாக் கூட மதிச்சது கிடையாது.” என்க,, செல்வாவுக்கு முதன் முறையாக தான் நினைத்ததை விட பிரச்சனை பெரிதோ என்று தோன்றியது.
“என்ன லேகா சொல்ற?” கலக்கமாய் கேட்டான். தினம்தினம் பெண்களுக்கு எதிராக தொலைக்காட்சியில் காட்டப்படும் பல்வேறு செய்திகளைப் போல இவளுக்கும் எதுவும் நடந்திருக்குமோ என்று மனம் பதறியது அவனுக்கு.
“வெளிநாட்டு மாப்பிள்ளை, வெளிநாட்டு வாழ்க்கைன்னு ஆசைப்பட்டு உன்னை விட்டுட்டுப் போனதுக்கு எனக்கு சரியான தண்டனை கிடைச்சிடுச்சின்னு சொல்றேன் செல்வா.” என்றாள்.
“எதுக்குப் பழசை எல்லாம் பேசிக்கிட்டு இருக்க. அதையெல்லாம் விட்டுட்டு உன்னோட நிகழ்கால வாழ்க்கையில் என்ன நடந்துச்சுன்னு மட்டும் சொல்லு.” என்றான்.
“எதை சொல்ல செல்வா. எனக்குக் கல்யாணம் ஆகி இத்தனை வருஷத்தில் ஒரு நாள் கூட நான் சந்தோஷமா இருந்தது கிடையாது. இருந்த சொத்துகளில் பாதியை வித்து அத்தனை ஆடம்பரமா என் கல்யாணத்தை நடத்தி வைச்சாங்க என்னோட அப்பா அம்மா.
ஆனாலும் என் புருஷன், மாமனார், மாமியார் அப்படின்னு ஒருத்தர் கூட என்னை மதிக்க மாட்டாங்க. அந்த வீட்டில் இருந்த மெத்தை, கட்டில், சேரும் நானும் ஒன்னு தான். என்ன ஒன்னு அதுங்களுக்கு உயிர் கிடையாது எனக்கு இருக்கு அவ்வளவு தான்.”
“ஒரு பொண்ணா இதை உன்கிட்ட சொல்றதுக்கு எனக்கு ஒருமாதிரி இருக்கு. ஆனா இப்போதைக்கு எனக்கு உன்னை விட்டா வேற ஆள் இல்ல செல்வா. என் புருஷன் என்னை நிமிர்ந்து பார்த்து பேசியது கூட கிடையாது. இத்தனை வருஷத்தில் அவரோட கை என் மேல பட்டுச்சுன்னா அது என்னை அடிக்கிறதுக்காக மட்டும் தான்.” என்க, அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து நின்றான் செல்வா.
அத்தனை அதிர்ச்சி அவனுக்கு. மோப்பக் குழையும் அனிச்சத்தைப் போன்றவள் லேகா. சின்னச்சின்ன வார்த்தைகள் கூட அவளை அத்தனை பாதிக்கும். அப்படி இருந்தவளுக்கு இப்படியான ஒரு வாழ்க்கையா கிடைக்க வேண்டும் என்று மனதோடு வருந்தினான்.
“அவரும் என்ன தான் பண்ணுவாரு பாவம். காதலிச்ச பொண்ணை விட்டுட்டு, அப்பா அம்மா கட்டாயப் படுத்தினதால் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.
அந்த வீட்டில் பிறந்த பொண்ணுக்குப் பணத்தேவை இருந்ததால், அவசரமா பணம் சம்பாதிக்கிற வழியா தான் எங்களுக்கு நடந்த கல்யாணத்தையும், என்னையும் பார்த்து இருக்காங்கன்னு அப்புறமா தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
நானும் இன்னைக்கு இல்லைன்னா நாளைக்கு என்னோட புருஷன் மாறிடுவாரு, என்னை நல்லா பார்த்துப்பார் அப்படின்னு நம்பிக்கையோட காத்திருந்தேன். ஆனா என்னோட துரதிர்ஷ்டம் அந்த நாள் கடைசி வரைக்கும் வரவே இல்ல.” என்க, செல்வாவின் கண்களில் கண்ணீர்.
“எனக்கு நடக்கிற எந்த விஷயமும் என்னோட அப்பா அம்மாவுக்குத் தெரியாம தான் வைச்சு இருந்தேன். ஆனா அதையும் என் புருஷனே செஞ்சிட்டார். ஒருநாள் என்னோட அம்மா நான் இருந்த நாட்டுக்கே வந்து என்னைக் கூட்டிக்கிட்டு இந்தியாவுக்கு வந்துட்டாங்க.”
“நான் வீட்டுக்கு வந்த கொஞ்ச நாளில், என்னோட அப்பா தவறிட்டாங்க. என்னை நினைச்சு என் வாழ்க்கையை நினைச்சு வருத்தாப்பட்டதால தான் அப்பாக்கு இப்படி ஆகிடுச்சுன்னு எல்லாரும் பேசிக்க ஆரம்பிச்சாங்க.
அப்பாவோட சாவுக்கு நான் தான் காரணம் அப்படின்னு அம்மாவுக்கும் என் மேலே கோபம். அதனால அவங்களும் என்கிட்ட சரியா பேசுறது கூட இல்ல. நான் இங்க அட்மிட் ஆகி, கொஞ்ச நாளுக்கு கடமைக்கு வந்து பார்த்துட்டுப் போனாங்க அவ்வளவு தான். எனக்குன்னு இப்போ யாரும் இல்லை செல்வா.” என்பதாய் கண்ணீர் வடித்தாள் லேகா.
“ஆனா நீ இங்க உன்னோட புருஷன் வீட்டில் தங்கி இருந்ததாகவும், அங்க இருந்து தான் மாடியில் இருந்து தவறி விழுந்து உனக்கு அடிபட்டதாவும் இல்ல என் தம்பி சொன்னான்.” குழப்பமாய் கேட்டான் செல்வா.
“எல்லாம் என் தலைவிதி செல்வா. என் அம்மா, என் மேல கோபப்பட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என்னால அவங்க கூட இருக்க முடியல. அவங்க கூட இருந்து அவங்களையும் கஷ்டப்படுத்தி, நானும் கஷ்டப்பட்டு வாழ்றதுக்குப் பதிலா என் புருஷன் கூட அந்த ஒட்டுதல் இல்லாத வாழ்க்கையை மிச்ச காலத்துக்கும் வாழ்ந்திடலாம் னு தோணுச்சு. கூடவே எந்தத் தப்பும் பண்ணாத எனக்கு இத்தனை பெரிய தண்டனையைக் கொடுத்திட்டு அவன் மட்டும் நிம்மதியா இருந்திடுவானான்னு ஒரு ஆதங்கம்.
அந்த நேரத்தில் தான் என்னோட புருஷன் இந்தியாவுக்கு கிளம்பி வந்தார். அவர்கிட்ட போய் கெஞ்சினேன். ஆனா அவரோ அவரோட அப்பா அம்மாவோ என்னைச் சேர்த்துக்க மறுத்திட்டாங்க.”
“அது மட்டும் இல்ல. என் புருஷன் அவரோட லவ்வரை திரும்ப கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக என்னை அவருக்கு விவாகரத்து கொடுக்க சொன்னாங்க. நான் முடியாதுன்னு அடம் பிடிச்சு அவங்க வீட்டுக்குள்ள போய் இருந்துக்கிட்டேன்.
என்னை வீட்டை விட்டு போகச் சொன்னப்ப, நான் மீடியாவுக்குப் போய் நியாயம் கேட்பேன்னு சொன்னேன். அந்த பயத்தில் கொஞ்ச நாள் அமைதியா இருந்தாங்க. என்னை அந்த வீட்டிலும் தங்க அனுமதிச்சாங்க.”
“ஆனா ரொம்ப சீக்கிரத்திலே என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்புறதுக்காக வேலைகளைப் பார்க்க ஆரம்பிச்சாங்க. அவங்களோட சொந்தக்காரங்க ஒருத்தங்க காயத்ரின்னு பேரு. அரசியல்ல ரொம்ப பவர்ஃபுல்லான ஆளு. அவங்களை வைச்சு என்னை மறைமுகமாக மிரட்ட ஆரம்பிச்சாங்க.”
“நான் அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கப் பார்த்தேன். ஆனால் யாரும் என்னோட கம்ப்ளைன்ட் எடுத்துக்கல. அதுக்கு அப்புறம் என்னோட புருஷன் வீட்டுக்காரங்க வித்தியாசமான டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க.
நான் இருந்த ரூமில் மட்டும் பவர் கட் ஆகும், என் ரூமில் இருக்கிற பாத்ரூமில் மட்டும் தண்ணீர் வராது. நான் சாப்பிடப் போனா சாப்பாடு இருக்காது. இந்த மாதிரி நிறைய தொல்லைகள். நான் கல்யாணம் முடிச்சு போனதுக்கு அப்புறமா, டாக்டர் ப்ராக்டீஸ் கூட பண்ணல. அதனால எந்த ஹாஸ்பிடலிலும் எனக்கு வேலை கிடைக்கல.
கடைசியா வேற வழி இல்லாம, என் புருஷனுக்கு விவாகரத்து கொடுத்து ஜீவனாம்சமா கொஞ்சம் பணம் வாங்கிகிட்டு தனியா வந்து என்னோட புது வாழ்க்கையை தனியா ஆரம்பிக்கலாம் னு ஒரு முடிவுக்கு வந்தேன்.”
“நான் அதைச் சொன்னப்ப என் புருஷன் வீட்டிலும் ரொம்ப சந்தோஷமா அதுக்கு ஒத்துக்கிட்டாங்க. என் ரூமுக்கு வரக்கூடிய தண்ணீர் பைப்பை லாக் பண்ணி வைச்சிருக்கிறதாவும், அதை ரிலீஸ் பண்ணா தண்ணீ வரும் னு சொன்னாங்க. அதை ரிலீஸ் பண்ண போன இடத்தில் தான், என்னோட சேலை காலில் தட்டி நான் மேல இருந்து கீழ விழுந்துட்டேன்.” என்று தன்னுடைய கதையை சொல்லி முடித்தாள் லேகா. இதுவரை அவள் சொன்ன அனைத்தும் அப்பட்டமான உண்மையே.
“என்ன லேகா நீ, நான் உன்னை எவ்வளவு தைரியமான பொண்ணுன்னு நினைச்சேன். நீ இவ்வளவு முட்டாளா இருந்திருக்க. உன்னை அடிமை மாதிரி நடத்தின ஒருத்தனுக்காக இத்தனை நாளா காத்துக்கிட்டு இருந்தியா?
சரி போனது போகட்டும் அவன் யாரு என்னன்னு சொல்லு. என் தம்பிங்களை வைச்சு நான் அந்தக் குடும்பத்தையே உண்டு இல்லைன்னு பண்ணிடுறேன்.” செல்வா கேட்கவும், ஒன்றும் சொல்ல முடியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் லேகா.
இங்கே சந்தோஷமாய் தனிக்குடித்தனம் சென்றுகொண்டிருந்த தெய்வா கார் டயரை மாற்றி மீண்டும் பயணத்தை துவங்கிய சிறிது நேரத்தில் காரை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானான்.
காரணம் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருந்தது. கடுப்பாகி கீழே சென்று விசாரிக்க, பாதையில் ஒரு பெரிய மரத்தின் கிளை முறிந்து விழுந்து கிடப்பது தெரியவந்தது.
இனி இந்தப் பக்கம் போக முடியாது வேறு பாதையில் செல்லலாம் என்று முடிவெடுத்து அவன் தன் வாகனத்தைப் பின்னால் செலுத்த முற்பட, முடியவில்லை. காரணம் இத்தனை சீக்கிரத்தில் இவனுக்குப் பின்னால் பல வண்டிகள் அடைத்து நின்று கொண்டிருந்தது.
“என்னடா இது முதலில் டயர் பஞ்சர் ஆச்சு. இப்போ இப்படி டிராபிக்கில் மாட்டிக்கிட்டேன். நிலைமையைப் பார்த்தா அவ்வளவு சீக்கிரத்தில் க்ளியர் ஆகாது போலயே. நான் தனிக்குடித்தனம் போகக் கூடாதுன்னு அந்தக் கடவுளே சதி செய்யுறாரா என்ன.” என்று தலையில் கை வைத்தான் தெய்வா.
தெய்வாவின் அருகில் டூவிலரில் இருந்தவன் இன்னொருவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்க, “ரோட்டை அடைச்ச மாதிரி மரம் விழுந்து கிடக்கிது.”
“ரோட்டில் போய்க்கிட்டு இருந்தவர் மேல மரம் விழுந்திடுச்சாம்.”
“மரம் விழுந்து ஸ்பாட் அவுட்டாம் ஒருத்தர். ஆம்புலன்ஸ் வந்து பாடியை எடுத்தா தான் போக முடியும்.”
“விஷயம் தெரியுமா? இங்க மரம் விழுந்து செத்தவர் குடும்பத்துக்கு ஆளுங்கட்சி இரண்டு இலட்சமும் எதிர்க்கட்சி நாலு இலட்சமும் பணம் கொடுக்கிறாங்களாம்.”
“செத்தவர் குடும்பத்தில் ஒருத்தங்களுக்கு அரசுப் பணி கொடுக்கப் போறாங்களாம். இப்படித் தெரிஞ்சா என் பொண்டாட்டி என் மேல தெரிஞ்சே ஒரு மரத்தைத் தள்ளி விட்டுடுவா.” போக்குவரத்து நெரிசலில் நேரம் போகாமல் கண்டதையும் பேசிக்கொண்டிருந்தனர் சுற்றி இருந்தவர்கள்.
“அது என்னப்பா கூட்டம்.” என்று ஒருவர் புதிதாய் ஒரு கேள்வியைக் கேட்க, “அதுவா சாலையோர மரங்களை வெட்டுவோம் உயிர் பலியைத் தடுப்போம் னு கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் போறாங்க.” என்றான் ஒருவன்.
நடந்தது தெரியாமல் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுபவர்களையும், தான் நினைத்தது நடக்காது போன விரக்தியில் இத்தோடு பதினைந்தாம் முறை ஸ்ட்ரியங்கில் அடித்த தெய்வாவையும் பார்த்து சிரித்தது விதி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தெய்வா ஊருக்கு போறதுக்கு முன்னாடியே இவ்வளவு பிரச்சனையா😜😜😜 இதெல்லாம் உண்மைன்னா நீ ஏன் அதே மாதிரி செல்வா வாழ்க்கையை லீலா வாழ்க்கையை கெடுக்க நினைக்கணும்