Loading

அத்தியாயம் 92

     “ஏன்டா எல்லோரும் என்னை வில்லன் மாதிரி பார்க்கிறீங்க. நாகா சொன்னதில் எனக்குக் கோபம் வந்தது என்னவோ உண்மை தான். அவன்கிட்ட விட்ட சவாலில் எப்படியாவது ஜெயிக்கணும் னு நினைச்சதும் உண்மை தான். ஆனா அதுக்காக மட்டுமே நான் தனிக்குடித்தனம் போகல. நான் தனியாப் போறது என்னோட நல்லதுக்காக மட்டும் இல்ல, இதில் உங்களோட நல்லதும் சேர்ந்து இருக்கு.” என்றான் தெய்வா.

     “அது எப்படி டா நீ என்ன சொன்னாலும் அதை நாங்க அப்படியே நம்பிடுவோம் னு நினைக்கிற. நீ மட்டும் தனியா கிளம்புறதால, எங்களுக்குக் கோவம் தான். இருந்தாலும் உன்னைத் தடுக்கிற எண்ணம் எங்க யாருக்கும் இல்லை.

     நீ உன் பொண்டாட்டியைக் கூட்டிட்டுப் போனா, அது உன் சமார்த்தியம். அந்த சாமர்த்தியம் எங்களுக்கு இல்ல. அதுக்கு உன்னைக் குற்றம் சொல்ல என்ன இருக்கு.” என்றான் நாகா.

     “டேய் நீ மாறு டா நான் வேண்டாம் னு சொல்லல. ஆனா இப்படி ஒரேயடியா மாறாத. எனக்கு லைட்டா நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு.” தெய்வா சிரிக்க, மற்ற இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.

     “நாகா சொல்றது உண்மை தான். நீ கிளம்புறதில் எங்களுக்கு எந்தக் கஷ்டமும் இல்ல. நிம்மதியா போயிட்டு வா. மத்தபடி நாங்க பேசினது சும்மா விளையாட்டுக்குத் தான்.” செல்வாவும் சொன்னான்.

     “இப்ப கொஞ்ச நாளா நாம இப்படி அடிக்கடி தனியா மீட் பண்ணி பேசினது நல்லா இருந்தது. இனி நான் இதை ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்னை விட்டுட்டு நீங்க மட்டும் மீட் பண்ணி பேசக்கூடாது. எதுவா இருந்தாலும் போனில் பேசிக்கலாம்.” தெய்வா சொல்ல மற்றவர்கள் சிரித்தனர்.

     “என்ன சிரிப்பு“ என்பதாய் அவன் பார்க்க, “நீ இல்லாம இருக்க நாங்க பழகிக்கணும் தானே. அதனால் நாங்க மூணு பேரும் கொஞ்ச நேரம் முன்னாடி கான்பிரன்ஸ் காலில் பேசினோம்.” கண்ணடித்துச் சிரித்தபடிச் சொன்னான் நாகா.

     “எதுக்காக என்னை விட்டுட்டு நீங்க மூணு பேரும் பேசுனீங்க. எதுவா இருந்தாலும் நாம நாலு பேரும் சேர்ந்து பேசுறதா தானே ப்ளான். என்ன பேசுனீங்க எனக்கு இப்பவே சொல்லுங்க.” கோபித்தான் தெய்வா.

     “டேய் லூசு, இப்ப எதுக்காக சின்னக்குழந்தை மாதிரி கோபப்படுற. உன்னை விட்டுட்டு நாங்க பெருசா இரகசியம் ஒன்னும் பேசல. பேசினது நாங்க மூணு பேரா இருந்தாலும், பேசு பொருள் என்னவோ நீ தான்.” என்றான் செல்வா.

     “சரி சரி… இதுவரைக்கும் நடந்தது போதும். இன்னொரு தடவை கான்ஸ்பிரன்ஸ் பேசுனீங்கன்னா என்னையும் கண்டிப்பா சேர்த்துக்கணும். இல்லைன்னா அவ்வளவு தான்.” கடுமையாய் சொல்லி முடித்தான் தெய்வா.

     “உன்னோட வேலையைக் காரணம் காட்டி, எல்லோரையும் கார்னர் பண்ணி நீ நினைச்சதை சாதித்துச்சுக்கிட்ட. ஆனால் எங்களுக்கு அப்படி ஒரு காரணம் எப்ப வருமோ, எப்படி வருமோ.” பெருமூச்சு விட்டான் தர்மா.

      “நமக்கு நல்ல காலம் பொறந்தாச்சு டா. என்ன ஆனாலும் யாரும் எப்பவும் இந்த வீட்டை விட்டு வெளியே போகக் கூடாதுன்னு, இதுநாள் வரைக்கும் இருந்த சட்டத்தை மீறி நான் வெளியில் போறேன். இதுவே நம்ம நாலு பேர் கூட்டணியோட வெற்றித் துவக்கம் தான்.

     நம்ம வீட்டில் இனி என்ன நடக்கும் னு தொலைநோக்கு பார்வை உள்ள என் கண்ணுக்கு நல்லாத் தெரியுது. நான் வெளியில் போனதால் எதுவும் பெருசா மாறலன்னு அப்பாவுக்குத் தோணும்.

     அப்புறம் நம்மளோட பொண்டாட்டிங்க இருக்காங்களே, தனித்தனியா இருந்தாலும் அவங்களோட பாசம் குறையாதுன்னு புரிஞ்சிப்பாங்க.

     அப்படி இப்படின்னு கொஞ்ச நாளில் தனிக்குடித்தனம் போறது தப்பு இல்லன்னு தோண ஆரம்பிக்கும்.” என்றான் தெய்வா.

     “இதெல்லாம் கேட்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கு. ஆனா நடக்குமான்னு தான் தெரியல. அப்படியே நடந்தாலும் அதுக்காக எத்தனை வருஷம் வெயிட் பண்ணணுமோ நாங்க.” சலிப்பாய் சொன்னான் நாகா.

     “டேய் ரொம்ப அவசரப்படாதீங்க டா. முதலில் நாங்க இரண்டு பேரும் தனியாப் போய், தனிக்குடித்தனம் ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லன்னு நிரூபிக்கிறோம். அதுக்கு அப்புறமா உங்க ஒவ்வொருத்தரையும் தனித் தனியாக போக வைக்கிறது என்னோட பொறுப்பு. என்னை நீங்க முழுசா நம்பலாம்.” நம்பிக்கை கொடுத்தான் தெய்வா.

     “நீ சொன்ன மாதிரி பண்றியோ இல்லையோ அது இரண்டாம் பட்சம். ஆனா உன்னோட வேலை முடிஞ்சதுக்கு அப்புறம் இப்படி ஒரு வார்த்தையை ஆதரவா சொல்ற பார்த்தியா. உண்மையில் நீ கிரேட் தான்டா. நான் அன்னைக்கு அப்படிப் பேசி இருக்கக் கூடாது.” வருத்தமாய் சொன்னான் நாகா.

     “டேய் செல்வா இவன் கபாலத்தைக் கொஞ்சம் கழட்டிப் பாருடா. அடிக்கடி என்னென்னவோ வித்தியாசமா பண்னறான்.” அதீத சிரிப்புடன் சொன்னான் தெய்வா. அவனைத் தொடர்ந்து மற்ற மூவரும் சிரிக்க, அதைப் பார்த்து நிறைந்த மனதுடன் அறைக்குள் வந்து படுத்தார் வடிவேலு. இரவு வணக்கம் சொல்லிவிட்டு கிளம்ப எத்தணித்த அரசுவின் கையைப் பிடித்து நிறுத்தினார்.

     “உன்னோட செயல் எல்லாத்துக்கும் பின்னாடி என்னோட ஆசையும், கனவும் மட்டும் தான் இருக்கு. எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்ல. ஆனா உன்னோட திட்டம் வெற்றி அடைவதற்குப் பதிலாக தோல்வி அடைஞ்சிட்டா, ஒருவேளை தெய்வா சொல்ற மாதிரி என் பசங்க நாலு பேரும் என்னை விட்டுட்டுத் தனித்தனியா போயிட்டா.” வருத்தமாய் கேட்டார் வடிவேலு.

     “அங்கிள் பாண்டவர்கள் பக்கம் இருந்த கிருஷ்ணன் எப்படி பல தில்லாலங்கடி வேலை பார்த்து அவங்களை ஜெயிக்க வைச்சாரு. அதே மாதிரி இந்த அரசு உங்க கூட இருக்கேன். உங்க ஆசை நிறைவேற நான் என்ன வேண்ணாலும் செய்வேன். என் உயிரைக் கொடுத்தாவது அவங்க நாலு பேரையும் ஒன்னா ஒத்துமையா இருக்க வைப்பேன். என்னை நீங்க முழுசா நம்புங்க. மனசில் எதையும் போட்டு குழப்பிக்காதீங்க. இன்னும் பல வருஷத்துக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும். உங்க பசங்களோட சேர்த்து நானும் அதைப் பார்க்கணும்.

     தெய்வா இந்த வீட்டை விட்டுப் போறது கொஞ்ச நாளைக்கு சொல்லப்போனா கொஞ்ச நேரத்துக்கு தான். அவனைத் திரும்ப எப்படி இந்த வீட்டுக்குள் வர வைக்கிறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். தனிக்குடித்தனம் ரொம்ப நல்லா இருக்கும் னு நினைச்சுப் போற அவனை துண்டைக் காணும் துணியைக் காணும் னு இந்த வீட்டுக்கு வர வைப்பேன். நீங்க நிம்மதியா தூங்குங்க.” என்றான் அரசு.

     அடுத்த நாள் காலை மணி பத்து. ஆனால் அந்த வீட்டில் ஒருவரும் ஒரு வேலையும் செய்யவில்லை. வீட்டில் இருக்கும் தூண்களில் ஆளுக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு அமைதியாக சாய்ந்து அமர்ந்திருந்தனர் பெண்கள் நால்வரும்.

     லீலாவை அழைத்து அழைத்துப் பார்த்த செல்வா அவள் தன்னைக் கவனிக்காத கோபத்தில், சாப்பிடாமலே மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட்டான். தர்மாவின் நிலையும் அது தான். நாகா இன்னும் எழுந்திரிக்கவே இல்லை என்பதால் ஊர்மிக்கு எந்தப் பாதகமும் இல்லை.

     தன் அறையில், வெளியூரில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பொருட்கள் அனைத்தையும் பார்த்து பார்த்து எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் தெய்வா. உள்ளுக்குள் ஊற்று போல பொங்கி எழுந்த ஆனந்தம் காட்டாறு போல் ஓடி அவனைத் திக்குமுக்காடச் செய்தது.

     “ஹனிமூன் போகும் போது கூட, இன்னும் இத்தனை நாளில் நம்ம எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்திடலாம் னு நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளையும் கழிச்சிக்கிட்டே இருந்தோம். ஆனா இனிமேல் நாம எல்லோரும் எப்ப ருக்கு அக்காவைப் பார்க்கிறது.” சோகமாகக் கேட்டாள்  தேவகி.

     “இனி மேல் எப்போ தெய்வா மாமாவுக்கு லீவு கிடைக்குதோ அப்ப தான் அவரு அக்காவைக் கூட்டிக்கிட்டு இங்கே வருவாரு. ஆனா போலீஸ் வேலையில் இருக்கிறவங்களுக்கு அடிப்படையில் அதிகமா லீவு கொடுக்க மாட்டாங்களே. அதனால ருக்குக்கா இங்கு வருவது ரொம்பவே கஷ்டம்.” என்றாள் ஊர்மி.

     அவர்களுடைய பேச்சைக் கேட்ட ருக்குவின் கண்கள் கலங்க அதைத் தாங்க முடியாத லீலா, “இப்ப எதுக்கு இரண்டு பேரும் சேர்ந்து அதையும், இதையும் சொல்லி அவளைக் கஷ்டப்படுத்துறீங்க. ருக்கு இங்க வர முடியாதுன்னா என்ன, நாம எல்லாரும் அவளை போய் பார்ப்போம்.” புது யோசனை சொன்னாள் லீலா.

     “சரியா சொன்னீங்க, நீங்க மூணு பேரும் எப்போ வேண்ணாலும் அங்க வரலாம். எத்தனை நாள் வேண்ணாலும் தங்கலாம். எனக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.” என்றபடி உடமைகளைத் தூக்கிக் கொண்டு வந்தான் தெய்வா. கிளம்ப வேண்டுமா என்னும் ஆதங்கத்தில் நெஞ்சைப் பிடித்தாள் ருக்கு.

     “இரண்டு நாள் கழிச்சி தானே நீங்க வேலையில் சேரணும். சொன்னீங்க. எதுக்காக இன்னைக்கே கிளம்புறீங்க.” ஊர்மி கேட்க, “ருக்கு வரா இல்லையா. இதுக்கு அப்புறம் நாங்க தங்கப் போற வீடு அவளுக்குப் பிடிச்சிருக்கா, மாற்றம் ஏதாவது பண்ணனுமா இல்லை வேற வீடு பார்க்கணுமான்னு பார்க்கணும்.

     அது மட்டும் இல்லாம, புது ஊரில் போன உடனே அவளைத் தனியா விட்டுட்டு நான் வேலைக்கு போயிட்டா அது நல்லா இருக்காது. ருக்குவுக்கு அந்த வீடு பழகுற வரைக்குமாவது, நான் கூட இருக்கணுமே. அதுக்கு தான் சீக்கிரமே கிளம்புறோம்.” என்றான் தெய்வா. என்னவோ இந்த அளவிற்காகவது யோசிக்கிறானே என்னும் அளவில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் ஊர்மி, தேவகி இருவரும்.

     வேகமாக எழுந்த லீலா சமையலறைக்குள் சென்று ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்தாள். “ருக்கு இதில் இட்லி பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடியில் ஆரம்பிச்சு மிளகு, வத்தல், மசாலா, குழம்புக்கு போடுற எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் இருக்கு. உங்க இரண்டு பேருக்கும் இதுவே போதும்.

     புளி தொக்கு, தக்காளித் தொக்கு, லெமன் தொக்கு, வத்தகுழம்பு தொக்கு கூட இருக்கு. இருபது நாள் வரைக்கும் கெட்டுப் போகாது. சமைக்க முடியாத, இல்ல நேரம் இல்லாத நேரத்தில் இதை வைச்சு நல்லா சாப்பிடு.

     காய்ச்சல், தலைவலி வந்தா அவசரத்துக்கு இதில் மாத்திரை உங்க மாமாகிட்ட வாங்கி தனித்தனி கவரில் போட்டு எழுதி வைச்சிருக்கேன். போடுறதுக்கு முன்னாடி டேட் பார்த்துட்டுப் போடு.

     அவருக்கு லீவ் இருக்கும் போதே பக்கத்தில் இருக்கிற காய்கறி கடை, சூப்பர் மார்கெட் எல்லாத்தையும் அவரோட சேர்ந்து போய் பார்த்து வைச்சிக்கோ. வெள்ளி, செவ்வாய்க்கு தலைக்கு குளிச்சிடு. எங்களை நினைச்சு வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காம உன்னையும், உன் புருஷனையும் நல்லாப் பார்த்துக்கோ.

     நேரம் கிடைக்கும் போதெல்லாம் எங்களுக்குப் போன் பண்ணு. அக்கா உன்னை நினைச்சுக்கிட்டே இருப்பேன்.” வரிசையாகச் சொல்ல, ருக்கு அவளை அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

     லீலாவுக்கும் கண்களில் கண்ணீர் திரள ஊர்மியும் தேவகியும் கூட வந்து லீலாவை அணைத்துக் கொண்டனர். “ச்சே இப்படிப்பட்டவங்களை பிரிக்க நினைக்கிறீங்களே டா பாவிங்களா.” மனதோடு தெய்வாவைத் திட்டினான் அரசு.

     “அதுக்கு ஐடியா கொடுத்தவனே மகனே நீதான் டா.” என்றது அவனுடைய மனசாட்சி.

     வடிவேலு மாடியில் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்க மனைவி வருந்துவது பிடிக்காமல், “ருக்கு வா, அப்பா கிட்ட போய் ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.” என்றான் தெய்வா.

     தன் புடவை முந்தானையால் தங்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு தெய்வாவுடன் அனுப்பி வைத்துவிட்டு, அதே புடவையால் தன்னுடைய கண்ணீரையும் துடைத்துக் கொண்டாள் லீலா. வடிவேலு மனதே இல்லாமல் இருவரையும் ஆசிர்வதிக்க, தெய்வா ருக்கு இருவரும் தனிக்குடித்தனம் கிளம்பினார்கள்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. போற இடத்துல தெய்வாவுக்கு பெரிய சம்பவம் இருக்கும் போல