
அத்தியாயம் 90
“அரசு நான் ஒன்னு கேட்கிறென் உண்மையைச் சொல்லு.” ஓட்டப்பந்தயம் முடிந்து அமைதியாக அருகருகே அமர்ந்திருக்க, பேச்சுவார்த்தை ஆரம்பம் ஆனது தெய்வா மற்றும் அரசுவுக்கு நடுவில்.
“ஒன்னு என்ன ஒன்னு, ஒன்பது கூட கேளு. உனக்கு அதுக்கு எல்லா உரிமையும் இருக்கு.” பஜ்ஜியை டீயில் அமிழ்த்து சாப்பிட்டுக்கொண்டே சொன்னான் அரசு.
“கருமம் என்னடா டேஸ்ட் இது. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இப்படிப் பண்ணாதன்னு.” தெய்வா முகத்தைச் சுளிக்க, “டேய் எங்கேயாவது வெளியே போனா இந்த பிரிஸ்டீஜ் கருமத்தை காப்பாத்துறதுக்காக பல் நுனியில் வைச்சு சாப்பிடுறது, என்னவோ பிறந்ததில் இருந்து ஸ்பூனில் சாப்பிடுற மாதிரி சீன் போடுறது, கொலைப் பசியில் இருந்தாலும் கோழி கொரிக்கிற மாதிரி கொஞ்சமா கொரிக்கிறதுன்னு நடிச்சு நடிச்சு சலிச்சு போச்சு. நம்ம வீட்டிலாவது நமக்குப் புடிச்ச மாதிரி இருக்கணும் டா.” இனிப்பு பஜ்ஜியை அனுபவித்து தின்று கொண்டே வசனம் பேசினான் அரசு.
“என்ன கண்ட்ராவியோ பண்ணித்தொலை. நான் உன்கிட்ட கேட்க வந்ததை கேட்டுடுறேன். எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு. யார்கிட்ட கேட்கிறதுன்னு தெரியல, அறிவுரை சொல்றதில் நீ நீதிஅரசன் விதுரனை மிஞ்சியவனாச்சே, அதனால் தான் உன்கிட்ட வந்தேன்.
முன்னாடியெல்லாம் நாங்க நாலு பேரும் சரியா பேசிக்கக் கூட மாட்டோம். அப்படியே எப்பவாச்சும் பேசினாக் கூட, அது சண்டையில் தான் போய் முடியும். ஆனா அன்னைக்கு நீ கொடுத்த ஐடியாப் படி எங்க பொண்டாட்டிங்களைப் பிரிக்கும் திட்டத்திற்காக, நாங்க நாலு பேரும் ஒன்னா சேர்ந்தோம்.” தெய்வா இப்படிச் சொன்னதும், அரசுவின் வாயில் இருந்த பஜ்ஜி டீக்குள் விழுந்தது.
வேகமாகச் சுற்றி முற்றிப் பார்த்தவன், “அடேய் வளர்ந்து கெட்டவனே, நான் தான் இப்படி ஒரு ஐடியா கொடுத்தேன்னு இன்னொரு முறை சொல்லாத. என் பாச மலர்களுக்குத் தெரிஞ்சது அப்புறம் நான் திங்கிற சோத்துல விஷத்தை வைச்சிடப் போறாங்க. நான் வேற ருசிக்குச் செத்தவன். அவங்க கொடுக்கும் சாப்பாட்டில் விஷம் இருக்குன்னு தெரிஞ்சாலும் சாப்பிட்டுத் தொலைப்பேன்.” என்றவனைப் பார்த்து சிரித்தான் தெய்வா.
“ஏதோ அன்னைக்கு நீ ரொம்ப சோகமா இருந்ததால அப்படி ஒரு ஐடியா கொடுத்தேன். அப்பகூட என்ன சொன்னேன், நீ தேவையில்லாத ரிஸ்க் எடுக்குற. அப்படியெல்லாம் நீங்க ஒன்னா சேர்ந்து அவங்களை பிரிச்சிட முடியாதுன்னு சொன்னேன் தானே.” உணர்ச்சி வசத்தில் சற்றே சத்தமாய் கேட்டுவிட்டான் அரசு.
“அடேய் என்ன காரியம் பண்ற. என்னைச் சொல்லிட்டு நீ இப்படி உணர்ச்சிவசப்படுற. கொஞ்சம் அடக்கி வாசி.” அவசரகதியில் சுற்றும் முற்றும் பார்த்தவனாய் சொன்னான் தெய்வா.
“சரி சரி ஏதோ சொல்லிக்கிட்டு இருந்தியே அதைக் கொஞ்சம் சொல்லு.” அரசு சொல்ல, “நாங்க நாலு பேரும் எப்ப சகஜமா பேசிக்க ஆரம்பிச்சோமோ, அப்ப இருந்து ஏதோ வித்தியாசமா தோணுது டா. இதுவரைக்கும் அப்படி எதுவும் தோணினதே இல்ல.” தயக்கமாய் சொன்னான் தெய்வா.
“அப்படியா அப்படி என்னென்ன தோணுது உனக்கு.” அரசு கேட்க, “அது எப்படி உனக்குச் சொல்லி புரிய வைக்கிறது. சர்ட் எடுக்க போனா இது செல்வாவுக்கு நல்லா இருக்குமே அவனுக்கு எடுப்போமான்னு தோணுது. சாப்பிடப் போனா வேர்க்கடலை சட்னியைப் பார்த்ததும், இது செல்வாவுக்கு புடிக்காது இல்லன்னு தோணுது.
ஹாஸ்பிடல் ஏதாவது பார்த்தாலே இந்த ஸ்மெல்லுக்குள்ள செல்வா எப்படித்தான் நாள் முழுக்க இருக்கானோன்னு தோணுது. ஈவ்னிங் வரும் போது ரொம்ப டயர்டா தெரியுறானேன்னு வருத்தமா இருக்கு. எல்லாத்துக்கும் மேல அவன், அவனோட பொண்டாட்டி கூட சிரிச்சு பேசினா எதுக்குன்னே தெரியாம கடுப்பாகுது.” அடுக்கிக்கொண்டே போனான் தெய்வா.
“என்னடா இது எல்லாமே லவ் சிம்டம்ஸ்ஸா இருக்கு, அதுவும் செல்வா மேல. டேய் எனக்குத் தெரியாம எங்கேயாச்சும் போனியா, ஏதாவது பண்ணிக்கிட்டியா. ஐயோ என் தங்கச்சி ருக்குவோட வாழ்க்கை.” பொய்யாய் பதறினான் அரசு.
“அப்படியே உன்னைக் கொன்னுடுவேன் ராஸ்கல்.” என்றபடி அவன் கழுத்தைப் பற்றினான் தெய்வா.
“சரி சரி எதுக்கு பீல் பண்ற. நான் சும்மா கிண்டலுக்கு சொன்னேன். இது டிவின் ப்லீங்க்ஸ் னு சொல்லுவாங்க. நார்மலா டிவின்ஸ்ஸா பிறந்த எல்லாருக்கும் சின்ன வயசில் இப்படி இருக்கும், போகப் போக சரியாகிடும். ஆனா உனக்கு இப்ப தான் ஸ்டார்ட்டே ஆகி இருக்கு. அதனால எப்ப சரியாகும் னு யாருக்குமே தெரியாது.” என்றான் அரசு.
“டேய் விளையாடாம இதுக்கு ஒரு வழி சொல்லு டா. இந்த எழவெடுத்த ப்லீங் ஏன் எனக்கு மட்டும் வந்திச்சு. செல்வாவுக்கு வரல, மத்த இரண்டு பயலுக்கும் வரல. எனக்கு மட்டும் ஏன். சில சமயத்தில் செல்வாவும், நானும் ஒரே வீட்டில் எப்பவுமே ஒன்னா இருந்தா நல்லா இருக்குமேன்னு கூட தோணுது.” பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னான் தெய்வா.
“இது நல்ல விஷயம் தானே. குறைஞ்சபட்சம் நீயும் செல்வாவும் ஒன்னா இருந்தா வடிவேலு அங்கிள் சந்தோஷம் தானே படுவாரு.“ அரசு கேட்க,
“இல்ல இது வேண்டாம். எனக்கு இது பிடிக்கல. இத்தனை வருஷமா எதிரும் புதிருமா இருந்துட்டு, இப்ப திடீர்னு பாசம் காட்டணும் னா அது ஏதோ ஒருமாதிரி இருக்கு.” சற்றே சங்கடப்பட்டான் தெய்வா.
“டேய் நான் உனக்கு ஒரு நல்ல எக்ஸாம்பிள் சொல்றேன் கேளு. ஒரே காந்தத்தோட இரண்டு துண்டை எடுத்துக்கோ. அதை ஒன்னுக்கொன்னு நேரா வைக்கும் போது என்ன ஆகும்.” அரசு கேட்க, “ஒன்னை ஒன்னு நெருங்கவிடாம விரட்டும்.” பொறுப்பான பிள்ளையாய் பதில் சொன்னான் தெய்வா.
“கரெக்ட் அதுவே அந்த இரண்டு துண்டில் ஒன்னை திருப்பினா என்னாகும்.”
“ஒன்னோடு ஒன்னு ஒட்டிக்கும்.”
“அதே மாதிரி தான் அண்ணன், தம்பி நீங்களும். இவ்வளவு நாளா ஒரே நேர்கோட்டில் இருந்தப்ப ஒருத்தரை ஒருத்தர் விலக்கித் தள்ளிக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஒவ்வொருத்தரும் கொஞ்சம் கொஞ்சம் சாய்ந்து கொடுக்கும் போது ஒட்டிக்க நினைக்கிறீங்க.”
“இல்லையே இதில் பிரச்சனையே என்னோட இந்த ப்லீங்க்ஸ் எல்லாம் செல்வாவுக்காக மட்டும் தானே வருது. நாகாவையும், தர்மாவையும் பார்த்தா அப்படி எதுவும் தோணலையே.” சின்னதாய் வெட்கப்பட்டுக்கொண்டு சொன்னான் தெய்வா.
“அட நன்னாரிப் பயலே, நானும் உன்னை வழிக்குக் கொண்டு வர என்னென்னமோ பேசிக்கிட்டு இருக்கேன். எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போட்டுக்கிட்டு இருக்க.” மனதினில் நினைத்த அரசு,
“சரி இதுக்குப் பதில் சொல்லு. முன்னாடி தர்மாவையும், நாகாவையும் பார்க்கும் போது கோவமா வரும் னு சொல்லுவியே. அந்தக் கோவம் இப்ப வருதா?”
“இல்ல என்னால அவங்ககிட்ட நார்மலா பேச முடியுது.” என்றான் தெய்வா.
“சிம்பிள், இதுதான் விஷயம். அண்ணன் தம்பிங்க சரியா பேசிக்காம இருந்ததால சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்க. இப்ப மனசுவிட்டுப் பேசிக்கிறதால கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்குள்ள ஒட்டுதல் ஏற்படுது.” என்றான் அரசு.
“என்னது மனசுவிட்டுப் பேசுறோமா. அதெல்லாம் ஒன்னும் இல்ல சும்மா தான் பேசிக்கிறோம்.” பதறிக்கொண்டு சொன்னான் தெய்வா.
“அடேய் உன்னையெல்லாம் வைச்சிக்கிட்டு” என்று மனதோடு நினைத்தவனாய், “ஓ மை காட், நார்மலா பேசிக்கிறதுக்கே இவ்வளவு முன்னேற்றம் னா, நீங்க நாலு பேரும் மனசுவிட்டுப் பேசிக்கிட்டா இன்னமும் நல்ல முன்னேற்றம் வரும் போலையே.” பாயிண்ட்டை மாற்றி போட்டான் அரசு.
“என்னவோ டா எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு.” என்றான் தெய்வா.
“இப்படி குழம்பிக்கிட்டே இரு. அப்பத்தான் நான் நல்லா மீன் பிடிக்க முடியும்.” என்று நினைத்துச் சிரித்துக் கொண்டான் அரசு.
சமையலறையில், “ருக்கு ஏன் சோகமா இருக்க. உனக்கும், உன் புருஷனுக்கும் ஏதாவது பிரச்சனையா? உன்னை ஏதாவது திட்டிட்டாரா. என்கிட்ட சொல்லலாம் னு தோணுச்சுன்னா சொல்லு இல்லன்னா வேண்டாம்.” சில நாள்களாகவே சதா சோர்வாக இருக்கும் தங்கையைப் பார்த்துக் கேட்டாள் லீலா.
“சண்டை எல்லாம் இல்லக்கா. கொஞ்சம் மனஸ்தாபம் அவ்வளவு தான். அவரு என்னை ரொம்ப கார்னர் பண்றாரு.” வருத்தமாய் சொன்னாள் ருக்கு.
“கார்னர் பண்றாரா, எதுக்காக. ஒருவேளை தனிக்குடித்தனம் போகவா?” லீலா கேட்க, ஆம் என்று தலையசைத்தாள் இளையவள்.
“இன்னும் போலீஸ் மாமா அடங்கலையா?” கேட்ட ஊர்மிக்கு கோபம் வந்தது.
“ஊர்மி இதில் அவர் மேல எந்த தப்பும் இல்ல. அவருக்கு ப்ரமோஷன் கிடைச்சது இல்லையா, அந்த ப்ரமோஷனோட சேர்த்து டிரான்ஸ்பர் ஆபரும் வந்திருக்காம்.
அவர் நான் வரமாட்டேன்னு சொல்லுவேன்னு புரிஞ்சுகிட்டு அவரோட மேல் அதிகாரிங்க கிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்து இருக்காரு. ஆனா அவங்க ஒத்துக்கலையாம்.” ருக்கு நிறுத்த,
“இப்படி அப்பாவியா இருக்கியே அக்கா. உன் புருஷனோட டிபார்ட்மெண்ட் அவருக்கு ப்ரமோஷன் மட்டும் தான் கொடுத்திருப்பாங்க. இவர் தான் ட்ரான்ஸ்வர் வேண்டி கேட்டு இருப்பார்.” நடந்ததை அருகே இருந்து பார்த்தது போல் சொன்னாள் ஊர்மி. ருக்கு தங்கையைக் கவலையாகப் பார்க்க, ஊர்மி என்கிற ஒற்றை அழைப்பில் தங்கையை அடக்கினாள் லீலா.
“இவர் என்னையும் அவரோட கூப்பிடுறாரு. எனக்கு அவர் கூடப் போவதற்கும் இஷ்டம் இல்லை. அதே நேரத்தில தனியா போய் அந்த ஊரில் என்ன கஷ்டப்படுவாரோன்னு நினைச்சு மனசு கஷ்டமாவும் இருக்கு.” மனதின் தவிப்பை வார்த்தைகளில் விளக்கினாள் ருக்கு.
“இது உண்மையிலே ரொம்பக் கஷ்டமான நிலைமை தான். இப்ப என்னக்கா பண்ணப் போற. மாமா கூட நீயும் கிளம்பி போகப் போறியா.” கவலையாய் கேட்டாள் தேவகி.
எதேச்சையாக அந்தப் பக்கம் வந்த தெய்வா, லீலா, ருக்கு ஊர்மி என அனைவரும் பேசியதையும் கேட்டுக்கொண்டு அங்கேயே நின்றிருந்தான்.
கடந்த சில நாள்களாக லீலாவைப் பற்றி நாகா ஆகா ஓகோ என்று புகழ்கின்றானே, இப்படி ஒரு நிலைமையில் தன்னுடைய தங்கைக்கு என்ன அறிவுரை சொல்லப்போகிறார் என்று நானும் பார்க்கிறேன் என நினைத்தவனாய் புதிதாய் நிறுவிய சிலையைப் போல் நின்றுகொண்டான்.
ஊர்மி கேட்ட கேள்வியில், ஒரு நிமிடம் ஆடித்தான் போனான். ‘அவங்க நாலு பேரில் யாரை வேண்ணாலும் நீ ஏமாத்தலாம், என் பொண்டாட்டி இருக்கா பார் எமகாதகி. எமனையே ஏமாத்திடுவா’ என்று சொன்ன தம்பி நாகாவின் நினைவு வர சிரித்துக்கொண்டான்.
அந்த நேரம் தன் மனைவி ருக்கு இத்தனை புத்திசாலியாக இல்லாமல் இருந்தது ஒருவகையில் நல்லதே என்றும் நினைத்துக்கொண்டான்.
“ஏன் ருக்குக்கா, ஊர்மிக்கா சொன்ன மாதிரி மாமா கைக்கு கிடைச்ச சந்தர்ப்பத்தை தனக்குச் சாதகமாப் பயன்படுத்திக்க நினைக்கிறாரா?” தேவகியும் கேட்டாள்.
“அவர் அப்படி எல்லாம் பண்ற ஆள் இல்ல தேவகி. அவருக்கு என்னை கட்டாயப்படுத்துறது பிடிக்காது.” நம்பிக்கையாய் சொன்னாள் ருக்கு.
“என் பொண்டாட்டிக்குத் தான் என் மேல் எத்தனை நம்பிக்கை. ருக்கு செல்லம் ஐ லவ் யூ டா.” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான் தெய்வா.
“அவர் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டார், இதை நாங்க நம்பணும். ஹனிமூன் விஷயத்தில் நடந்ததைத் தான் நாங்க கண்கூடாப் பார்த்தோமே. எனக்கு என்னவோ இப்ப கவலையா இருக்கு வருத்தமா இருக்குன்னு சொல்லிட்டு, கடைசியில் நீ அவர் கூடவே தனியா போயிடுவன்னு தோணுது.” கடுப்பில் கண்டதையும் சொன்னாள் ஊர்மி.
“என் பொண்டாட்டியே எப்பவாச்சும் தான் எனக்கு சப்போர்ட் பண்ணுவா. அந்த நேரம் வந்து எதுக்கு கட்டையைப் போட்டுக்கிட்டு இருக்க, குள்ளக் குரங்கே.” என்று உள்ளுக்குள் ஊர்மியை வசைபாடினான் தெய்வா.
“ஏன் ஊர்மி இப்படிச் சொல்ற.” பாவமாய் பார்த்தாள் ருக்கு. அவளுக்குத் தங்கையை அதட்டுவதற்குக் கூட மனதில் தெம்பில்லை.
“ஊர்மி, அவளே மனக்கஷ்டத்தில் இருக்கா. அவளை ஏன் பேசி காயப்படுத்துற. ருக்கு இதில் நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் அதுக்கு சம்மதிக்கிறேன்.” என்றாள் லீலா.
“லீலாக்கா என்ன சொல்றீங்க.” ஊர்மி, தேவகி இருவரும் ஒரு சேர அதிர்ந்தனர்.
“நான் சொன்னா சொன்னது தான். இதில் கடைசி முடிவு ருக்குவோடது தான். நம்ம நாலு பேரும் ஒன்னா இருக்கணும் என்பது தான் என்னோட ஆசை. ஆனா அந்த ஒற்றுமைக்காக ஒரு தங்கச்சியோட சந்தோஷத்தையும், நிம்மதியையும் கெடுக்கனுமான்னு யோசிச்சா, கண்டிப்பா அதுக்கு என்னால ஒத்துக்க முடியாது.
ருக்குவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. இனி அவளோட சந்தோஷம் நாமளா மட்டுமே இருக்க முடியாது. நம்ம அளவுக்கு அவ புருஷனும் அவளுக்கு முக்கியமானவர் தான். இருதலைக்கொள்ளி எறும்பு மாதிரி ஒரு நிலைமை.
என்னைக் கேட்டா நமக்காக இங்கேயே தங்கிட்டு, தினம் தினம் புருஷனை நினைச்சு கவலைப்படுறதுக்குப் பதில் நம்மமளை நினைச்சுக்கிட்டு, அவ அவளோட புருஷனோடவே இருந்திடலாம்.
அது மட்டும் இல்ல, அந்த மனுஷனை கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. அவர் போலீஸ் னு தெரிஞ்சு தான் நாம நம்ம ருக்குவை அவருக்குக் கொடுத்தோம். போலீஸ் வேலையில் இதெல்லாம் சகஜம் தானே. இவ இங்கேயும் அவர் அங்கேயும் இருக்கிறதுக்கா கல்யாணம். அவருக்கு ருக்கு மேல் அதிக அன்பு உண்டு. அந்த அதீதத்தால் தான் பல நேரம் அவர் கத்துறதே. அந்த அன்புக்கு நாம நியாயம் செய்ய வேண்டாமா?” என்றாள் லீலா.
“ச்சே நான் நினைச்ச அளவுக்கு இவங்க இல்லப்பா. அவங்க தங்கச்சிக்காகன்னு மட்டும் யோசிக்காம, என்னையும் மனசில் வைச்சுப் போசுறாங்க. உண்மையில் இவங்க நல்லவங்க தான்.” லீலாவைப் பற்றிய தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான் தெய்வா.
“அக்கா என்னக்கா இதெல்லாம். நேத்து வந்த ஒருத்தருக்காக ருக்குக்காவை நீங்க நம்மளை விட்டு தூரமா அனுப்பப் பார்க்கிறீங்க. இதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்ல.
ருக்குக்கா இல்லாம அவர் தனியாக் கஷ்டப்படுவாருன்னு நினைக்கிறீங்களே, நாம இல்லாம நம்ம ருக்குக்கா எப்படி இருப்பாங்க. அதோட அவர் இவங்களை நல்லாப் பார்த்துப்பாங்கன்னு என்ன உத்தரவாதம்.
அங்க ருக்கு அக்காவை அவர் என்ன கொடுமைப்படுத்தினாலும் கேட்கிறதுக்கு ஒரு ஆள் கிடையாது. அங்க இருக்கிற தூணும் சுவருமா வந்து அக்காவைக் காப்பாத்தும், ஆறுதல் சொல்லும். இதில் நீங்க உங்க கொழுந்தனாருக்காக மட்டும் ஒருதலைபட்சமா யோசிக்கிறீங்களோன்னு தோணுது.” தேவகி கோவமாய் பேசினாள்.
“தேவகி அமைதியா இருக்க மாட்ட. எப்ப எது பேசனும் னு பார்த்து பேசுன்னு எத்தனை முறை உனக்கு சொல்லி இருக்கேன். ருக்குவோட புருஷன் ஒன்னும் ஊர்மி புருஷன் மாதிரி நிதானமில்லாத ஆள் கிடையாது. அவரால ருக்குவுக்கு எந்த ஆபத்தும் வராது.” சற்று தள்ளி நின்று அனைத்தையும் செவிமடுத்துக் கொண்டிருந்த தெய்வாவையும், தேவகியின் கூற்றால் அவன் முகத்தில் வெடிக்கும் எள்ளையும் கொள்ளையும் பார்த்துவிட்டு வேறு வழி தெரியாமல் என்ன பேசுகிறோம் என்பது புரியாமல் சொல்லிவிட்டிருந்தாள் லீலா.
எல்லாப் பெண்களையும் போல, சொல்வது தன் அக்கா தான் என்று தெரிந்தாலும் அவள் சொல்வதில் தவறே இல்லை என்று புரிந்தாலும், பேசு பொருள் தன் கணவன் என்பதால் கோவப்பட்டுக் கிளம்பினாள் ஊர்மி.
“அக்கா அவ கோச்சுக்கிட்டு போறா பாருங்க.” ருக்கு தவிப்புடன் சொல்ல, “அவளோட கோவம் எதுவும் என்கிட்ட செல்லுபடியாகாது. அவளை நான் பார்த்துக்கிறேன். நீ எதையும் நினைச்சுக் குழப்பிக்காத.
நான் சொல்ற இந்த ஒரு விஷயத்தை நல்லா ஞாபகத்தில் வைச்சிக்க ருக்கு. அக்கா, தங்கச்சிங்க அவங்களோட பாசம் எந்த அளவு முக்கியமோ, அதே அளவு புருஷன் பொண்டாட்டி பந்தமும் ரொம்ப முக்கியம். நல்லா யோசனை பண்ணி எந்த முடிவா இருந்தாலும் எடு. அக்கா உனக்கு துணையா இருப்பேன்.” என்றாள் லீலா.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


எல்லாம் அரசுவோட ஐடியா தானா.. எப்படியோ எல்லாரும் ஒண்ணா சேர்ந்தா சரி..