Loading

அத்தியாயம் 89

     அரசு திடீரென கதவைத் தள்ளியதால், கதவின் அருகே நின்றிருந்த ருக்கு தெய்வாவின் மீது விழ, அவன் அவளைப் பிடிக்க என்று இமைக்கும் நேரத்திற்குள் நடந்த அந்த நிகழ்வு, புயலின் வேகத்தில் உள்ளே நுழைந்த அரசுவிற்கு, நெடுநேரமாக அவர்கள் அப்படித்தான் நின்று கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற கற்பனையைத் தந்தது.

     திரும்பி நின்று உள்ளங்கையால் கண்களை மூடிக் கொண்டவன், “ஏன்டா பட்டப்பகலிலே இப்படியா. பண்றது தான் பண்றீங்க கதவைச் சாத்தி வைச்சிட்டு உங்க சேட்டையை பண்ணக்கூடாதா. கல்யாணம் ஆகாத கன்னிப்பையன் ஒருத்தன் இந்த வீட்டுக்குள்ள சுத்திக்கிட்டு இருக்கானே, அவன் இதையெல்லாம் பார்த்தா கெட்டுப் போயிடுவானேன்னு கொஞ்சமாவது அக்கறை இருக்கா.” சிரிப்போடு கேட்டான்.

     ருக்குவை தன்னை விட்டுத் தள்ளி நிறுத்திய தெய்வா, “இதெல்லாம் கடவுளுக்கே அடுக்காது, நடிக்காத திரும்பு.” என்றான் அரசுவைப் பார்த்து.

     திரும்பிய அரசு கைகளை இறக்காமல், “நான் கண்ணைத் திறக்கப் போறேன். சொல்லிட்டு தான் திறக்கிறேன். அப்புறம் என்னைக் குற்றம் சொல்லக் கூடாது.” சொல்லிக்கொண்டே கண்ணைத் திறக்க தெய்வா அவனை முறைத்துக்கொண்டு எதிரே நின்றான்.

     “எப்படி எப்படி, என் ரூமுக்குள்ள நான் என் பொண்டாட்டியோட இருக்கும் போது, இவரு கதவை உடைச்சிக்கிட்டு உள்ள வருவாராம். நாங்க புருஷன் பொண்டாட்டி பக்கத்து பக்கத்தில் நிக்கிறதைப் பார்த்து இவரு கெட்டுப் போயிடுவாறாம். இதுக்குப் பெயர் அப்பாவித்தனம் இல்லடா அப்பட்டமான பொறாமை.” நக்கலடித்தான் தெய்வா.

     “அடப் பாவி பங்காரம், என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது.” அரசு போலியாய் ஆச்சர்யம் கொள்ள, “ஆமா இவரு ஒன்னும் தெரியாத பச்சப்பிள்ளை. வாயில் விரல் வைச்சாக் கூட கடிக்கத் தெரியாத குழந்தை. ஆமா பேச்சோட பேச்சா என்னவோ சொன்னியே.

     கல்யாணம் ஆகாத கன்னிப் பையனா. கல்யாணம் ஆகல சரி, ஆனா நீ கன்னிப்பையன் தான்னு நான் எப்படி நம்புறது.” வேண்டுமென்றே கேட்டான்.

     “என்னங்க” என்றாள் ருக்கு. தானும் உடன் நிற்பதை சொல்வதற்காக அழைத்தாளோ இல்லை அரசுவை இப்படிச் சொல்வதை தடுப்பதற்காக அழைத்தாளோ அது அவளுக்கே வெளிச்சம்.

     “என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுட்டானே. இந்த அரசுவைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டானே. இத்தனை வருஷமா இந்தக் குடும்பத்துக்காக ஓடா தேஞ்சதுக்கு, எனக்குக் கிடைச்ச நல்ல பெயர் இது தானா. கடவுளே உனக்குக் கண் இல்லையா.

     ‘இல்லையே நியாயப்படி இந்த சீனில் காது இல்லையான்னு தானே கேட்கணும்.’ தன்னோடு சொல்லிக்கொண்டவன், கடவுளே உனக்குக் காது இல்லையா, இந்தப் பாவி சொல்றதைக் கேட்டுட்டு இந்த அரசுவுக்கு சர்ப்போர்ட் பண்ண வைகுண்டத்தை விட்டு வர மாட்டேங்கிறியே.

     ஒருவேளே மேலோகத்திலும் ட்ராபிக் ப்ராப்ளமா. கடவுளே நீ எப்ப வர்றது, நான் நல்லவன்னு எப்ப நான் நிரூபிக்கிறது.” தன்போக்கில் புலம்பிக்கொண்டே போனான்.

     “ஏய் இரு இரு, இப்ப எதுக்கு சீரியல் ஹீரோயின் மாதிரி ஒப்பாரி வைக்கிற.” தெய்வா சிரிப்புடன் சொல்ல, ருக்குவிற்கும் லேசாகச் சிரிப்பு வந்தது.

     “தங்கச்சி நீயுமா இந்த அண்ணனைப் பார்த்து சிரிக்கிற. வேண்டாம்மா இந்த வீட்டில் இருக்கிறவங்க கூட அதிகமாச் சேராத. எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவனுங்க மாதிரி தெரியுவாங்க. ஆனா நிஜத்தில் அதைவிட நல்லவனுங்க மா.

     அமாவாசை ஆனா மட்டும் கொஞ்சம் பைத்தியம் பிடிக்கும். அண்ணன் சொல்றதைக் கேளு, இவன் கூட ரொம்ப சேராத. அப்புறம் இவன் புத்தியை உனக்குள்ள அனுப்பிடுவான்.” மாற்றி மாற்றி பேசி கணவன் மனைவி இருவரையும் தங்களை மறந்து சிரிக்க வைத்தான் அரசு.

     “ஊருக்குள்ள புருஷன், பொண்டாட்டி நல்லா இருக்கிறது உனக்குப் பிடிக்கலையா? எங்ககிட்ட மட்டும் தான் உன்னோட இந்த வாலுத்தனத்தை காட்டுறியா இல்ல மத்தவங்ககிட்டேயும் இப்படித்தான் பண்றியா?” சிரிப்போடு கேட்டான் தெய்வா.

     “சிரிடா, என் பொழைப்பு சிரிப்பாத் தான் சிரிக்குது. எங்க அப்பா, அம்மா செத்த வீட்டில் இனி இவனுக்கு நானாச்சுன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்த மனுசன், வயசானதால எனக்கு கல்யாண வயசு வந்திடுச்சுங்கிறதை நம்பவே மாட்டேங்கிறாரு.

     நீங்க தான் இப்பக் கல்யாணம் ஆகி, குடும்பஸ்தனாகிட்டீங்க இல்ல. என்னைப் பத்தி யோசிக்கங்க டா. இப்படிக் கேட்கிறதுக்கு எனக்கு அசிங்கமா தான் இருக்கு. ஆனா  நான் வெட்கத்தை விட்டு கேட்கிறதுக்கு முன்னாடி யாராச்சும் எனக்கு பொண்ணு பாருங்கடா.” புன்னகையை அடக்கிக்கொண்டே கேட்டான் அரசு.

     “டேய் தம்பி நீ அல்ரெடி வாய்விட்டுக் கேட்டுட்ட டா.” தெய்வா சிரிக்க, “பார்த்தியா மா ருக்கு, இதைத் தான் சொன்னேன். அண்ணன், தம்பிங்க நாலு பேருமே ப்ராடு பசங்க.

     எப்படி நான் சொல்லாததைச் சொன்னேன்னு சொல்றான் பார்த்தியா? உஷாரா இருந்துக்கோ. இன்னும் கொஞ்ச நேரம் இவன்கூட இருந்த, நீ தனிக்குடித்தனம் போக சம்திச்சிட்டன்னு சூடம் அடிச்சு சத்தியம் பண்ணாலும் பண்ணுவான். போயிரு தாயி நீ நல்லா இருப்ப.” விளையாட்டு போலவே சொல்லி தெய்வாவிற்கு கொட்டு வைத்தான் அரசு.

     அதில் தெய்வாவின் முகம் போன போக்கைப் பார்த்து அரசு சிரிக்க, அவனைப் பார்த்து ருக்கு சிரிக்க அவளைப் பார்த்து தெய்வாவும் சிரிக்க ஆரம்பித்தான். அவர்களுடைய சிரிப்பு சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது.

     “அரசு, இப்படி மனசு விட்டு சிரிச்சு ரொம்ப நாளாச்சு டா. நீ இருந்தா மட்டும் தான் இந்த வீட்டில் சிரிப்பு சத்தமே கேட்கிது. இதுக்காகவாவது நீ இங்க இருக்கலாம் இல்ல.” ஆசையாய் கேட்டான் தெய்வா.

     “இங்க பார் நீங்க நாலு பேரும் ஒரே வீட்டில் இருக்கணும் னு எனக்கு ஆசை. ஆனா அது உங்களுக்குப் பிடிக்காதுன்னு நான் அடம்பிடிக்காம இருக்கேன் இல்ல. அதே மாதிரி தான் இதுவும். சில விஷயங்களில் என்னை மாத்திக்க முடியாது.

     நாள் முழுக்க உங்ககூட தானே இருக்கேன். இராத்திரி உறங்க நான் என் வீட்டுக்குப் போறது தான் நல்லது.” என்றான்.

     “அங்க ஒத்தையில் கிடந்து என்ன பண்ணப் போற. நான் உனக்கு ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன். பேசாம நீயும் இங்கேயே வந்திடு. நீ அப்பா கூடவே இருக்கிறது தான் அவருக்கு மிகப்பெரிய பலம்.” உணர்ந்து சொன்னான் தெய்வா.

     “ஏன்டா கலையில் ஏழு மணியில் இருந்து இராத்திரி ஒன்பது மணி வரைக்கும் அவரு முகத்தைத் தானே பார்த்துக்கிட்டு இருக்கேன். விடிய விடிய பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்கு அவரு என்ன என்னோட கனவுக்கன்னி சிம்ரனா டா.” அரசு சொல்ல,

     “சரி அண்ணா நாங்க உங்களைக் கட்டாயப்படுத்தல. ஆனா ஏன் நீங்க இந்த வீட்டில் தங்க மாட்டேங்கிறீங்க உண்மையான காரணத்தைச் சொல்லுங்க.” என்றாள் ருக்கு.

     “காரணம் என்னம்மா பெரிய காரணம். எனக்கு இவங்க எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். இவங்க நாலு பேரும் எப்பவும் ஒன்னா இருந்தா, நானும் இவனுங்க கூட சேர்ந்து பாண்டவர்கள் மாதிரி அன்பைப் பொழிஞ்சு இருப்பேன்.

     ஆனா இவனுங்க நாலு பேரும் நாலு திசையா இல்ல இருக்கானுங்க. நாலு திசையில் நான் எங்க போய் நின்னாலும், மத்த மூணு திசையும் என்னை விட்டு ரொம்ப தூரமா இல்ல இருக்கு. அது எனக்குப் பிடிக்கல மா.

     எனக்கு இவனுங்க நாலு பேரும் ஒன்னு தான். ஒருத்தனுக்காக இன்னொருத்தனை விட்டுக்கொடுக்க என்னால் முடியாது. அதனால் தான் விலகி இருந்து நாலு பேரையும் ஒன்னாப் பார்த்துக்கிறேன்.” உணர்ந்து சொன்னான்.

     “அதெல்லாம் நாலு பேரும் பிரிஞ்சு போக மாட்டாங்க. நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டோட வந்திடுறீங்க. இது என்னோட அன்புக் கட்டளை.” என்றாள் ருக்கு.

     “இவனுங்களை நம்ப முடியாதும்மா. அது மட்டும் இல்ல, கல்யாணம் ஆகி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டான்னு வைச்சிக்க, என் பாடு இன்னும் மோசமாகிடும்.

     நாலு பேரும் நாலு வீட்டில் இருப்பானுங்க. என்னால இவனுங்க நாலு பேரையும் பார்க்காம ஒருநாள் கூட இருக்க முடியாது. அந்த ஓல்டுமேன் கூட இராத்திரி ஒன்பது மணி வரைக்கும் இருந்துட்டு, ஒவ்வொருத்தன் வீட்டிலும் குறைஞ்சது ஒரு மணி நேரம் இருந்தாக் கூட என் வீட்டுக்கு நான் போறதுக்கு இராத்திரி பன்னிரெண்டாகிடும். அப்புறம் என் பொண்டாட்டி என்னைச் செருப்பால அடிச்சி துரத்திடுவா.” என்றுவிட்டு சிரித்தான் அரசு

     “நீ சொல்றது பொய், உண்மையான காரணம் என்னன்னு நான் சொல்லவா.” புருவம் உயர்த்திக் கேட்டான் தெய்வா.

     “இங்க பாருடா என்ன காரணம் னு எனக்கே சரியாத் தெரியாத ஒரு விஷயத்தை இவரு சொல்லப் போறாராம். எங்க சொல்லு பார்க்கலாம்.” தெய்வாவைப் பார்த்து நக்கலடித்தான் அரசு.

     “எங்க அப்பாவுக்கு நாங்க நாலு பேரும் ஒன்னு தான். ஆனா எங்க நாலு பேரையும் விட இந்த உலகத்தில் அவருக்கு ஒருத்தனைப் பிடிக்கும் அப்படின்னா அது நீதான்.

     சின்ன வயசில் விளையாட்டா நாங்க நாலு பேரும், எங்களில் யாரை உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் னு அப்பாகிட்ட கேட்டதுக்கு, அவரு உங்க எல்லாரையும் விட அரசுவைத்தான் அதிகம் பிடிக்கும் னு சொன்னாரு.

     அதைக் கேட்டு நாங்க கோபப்பட்டு அப்பாகிட்ட சண்டைக்குப் போனோம். அப்ப இருந்து தான் நீ இப்படி விலகி இருக்க ஆரம்பிச்ச. அப்பா உன் மேல காட்டின பாசத்தால நாங்க நாலு பேரும் உன்னை வெறுத்திடுவோமோன்னு பயந்த அந்த பயம் தான், உன்னை எங்ககிட்ட இருந்து விலகி இருக்க வைச்சது.” அரசுவைப் புரிந்தவன் போல் சொன்னான் தெய்வா.

     ஒருகணம் அரசு அமைதியானான் பின், “ஆமா எல்லாத்தையும் பார்த்தவன் மாதிரி பேசுறான் போடா போடா” என்று சொல்லும் போதே அவனையும் அறியாமல் கண்கள் கலங்கியது.

     “அன்னைக்கு அந்தச் சம்பவம் நடந்த நேரம், நீ தான் எங்களைப் பார்க்கல. ஆனா நாங்க நாலு பேரும் உன்னை நல்லாப் பார்த்தோம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அரசு, எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும் விஷயம், நாங்க தனியாப் போனா அப்பா யார் கூட இருப்பாருங்கிறது தான். ஆனா அதுக்கு அப்புறம் அதிகமா சண்டை வந்தது உன்னை வைச்சு தான்.” என்க, அரசு முழித்தான்.

     “அரசு என்னோட தம்பி, அவனை என்கூடவே கூட்டக்கிட்டு போயிடுவேன்னு நான் சொல்லுவேன். என் ஒருத்தனுக்குத் தான் அப்படி ஒரு எண்ணம் இருக்கும். அதனால் இதுக்கு மத்தவங்ககிட்ட இருந்து எதிர்ப்பு இருக்காதுன்னு நினைச்சேன். ஆனா அவனுங்க என்கிட்ட சண்டைக்கு வந்தப்ப தான், அவனுங்களுக்கும் உன்மேல என் அளவுக்கு அன்பு இருக்குன்னே தெரிய வந்துச்சு.

     நாங்க நாலு பேரும் அப்பாவுக்கு அடுத்து ஒரு விஷயத்தில், ஒரே மாதிரியான மனநிலையில் இருக்கோம் அப்படின்னா அது நீ தான்.” தெய்வா சொல்ல, அரசுவின் முகம் சுருங்கிப் போனது.

     “இங்க பார் எதை எதையோ சொல்லி என்னை அழ வைக்காத. அப்புறம் நான் பேச வந்ததை மறந்திடுவேன். ஆமா செல்வாவையும், லீலாவையும் பார்த்து நீ பொறாமைப்பட்டியாமே. உண்மையா டா என் செல்லச் சீமானே.” ஆரவாரமாகக் கேட்டான் அரசு.

     “போச்சுடா இவனுக்குத் தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்ச மாதிரியாச்சே. என்ன பண்ணுவேன் கடவுளே காப்பாத்து.” மனதோடு நினைத்த தெய்வா அரசுவிடம் சிக்கினால் உண்டு இல்லையென்று ஆக்கிவிடுவான் என்று பயந்து அவன் பிடிக்கு சிக்காமல் ஓடப் பார்த்தான்.

     “டேய் எஸ்கேப் ஆறதுக்கு நீ விரால் மீன் கிட்டேயே டியூஷன் எடுத்து வந்திருந்தாலும், இன்னைக்கு நீ என்கிட்ட மாட்டிக்குவ டா மகனே.” என்றவாறு தெய்வாவைத் துரத்த ஆரம்பித்தான் அரசு. அவர்கள் இருவர் செய்யும் சேட்டையை தன்னை மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாள் ருக்கு.

     இங்கே ஹாஸ்பிடலில் லேகா இருந்த அறைக்கதவை ஓங்கி சாத்தியவாறு உள்ளே வந்தான் பாஸ்கர்.

     “பாஸ்கர் நீ” லேகா ஏதோ சொல்ல வர, “என்னடி, இவன் உள்ள போயிட்டான். இனிமே எப்பவும் வெளியில வர மாட்டான். நாம நினைச்சது எல்லாம் நடந்திடுச்சுன்னு மெதப்புல இருந்தியா?” சூடாகக் கேட்டான்.

     “பாஸ்கர் நான் சொல்றதை நம்பு. நடந்ததில் என்னோட தப்பு எதுவும் இல்ல.” என்றாள் லேகா.

     “கையும் களவுமா மாட்டிக்கிட்டதுக்கு அப்புறம் நீலிக்கண்ணீர் வடிக்கிறியா? லீலாவைக் கொல்லாம நான் செல்வாவோட சேர்ந்துக்கிறேன்னு நீ சொல்லும் போதே நான் சுதாரிச்சு இருக்கணும். ஆனா இப்படி ஒரு நிலைமையில் இருக்கிறவ என்னைத் தாண்டி என்ன பண்ணிடுவன்னு நினைச்சுட்டேன். எனக்குத் தெரியாம கைலாஷ்கிட்ட பேசி இருக்க இல்ல நீ.

     உன்னோட இந்த முதலைக்கண்ணீரை நம்பி தான் நான் இப்படி வம்பாப் போய் இருக்கேன்.  உன்னால எனக்கு என்னைக்கும் வேதனை மட்டும் தான். மாதவி வேற நான் போன் பண்ணா எடுக்க மாட்றா.” நெற்றியில் கரம் வைத்து நீவியவண்ணம் பேசினான் அவன்.

     “அதுக்கு நான் என்ன பண்ண முடியும் பாஸ்கர்.” லேகா கேட்க, “என்னடி ரொம்ப நல்லவ மாதிரி நடிக்கிற. நீ தனியா இருக்கும் போது நான் மட்டும் ஜோடியா சுத்துறேனேன்னு உனக்குப் பொறாமையா இருக்குன்னு நேரடியா என் முகத்தைப் பார்த்தே சொன்னவளாச்சே நீ. இப்ப எப்படி குளு குளுன்னு இருக்கா.” காட்டுக் கத்தல் கத்தினான்.

     “பாஸ்கர் இப்படியெல்லாம் பேசாத. எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.” சொன்ன லேகாவின் குரல் கரகரத்தது.

     “கஷ்டமா இருந்தா போய் சாவுடி. எதுக்காக உயிரோட இருந்து எல்லோர் உயிரையும் வாங்குற. ஒரு ஆம்பிளையை, அதுவும் உன்னைக் காதலிச்ச ஒரு ஆம்பிளையை மயக்கத் துப்பு இல்ல. துணைக்கு என்னைச் சேர்த்துக்கிட்டு கேம் ஆடிக்கிட்டு இருக்க.

     என்கிட்ட காட்டுற இந்த ஆக்ட்டிங்கை அவன்கிட்ட காட்டி இருந்தாலாவது ஏதாவது பிரயோஜனம் இருந்திருக்கும். இங்க பார் உன்னோட இந்த கேவலமான முகத்தை நான் பார்க்கிறது இதுதான் கடைசி முறை, உனக்கும் எனக்கும் நடுவில் எதுவும் இல்ல.

     நீ செல்வாவைக் கல்யாணம் பண்ணுவியோ இல்ல தெருவில் போற பிச்சைக்காரனைக் கல்யாணம் பண்ணுவியோ. அது எல்லாம் உன்பாடு. இனிமே எதுக்கும் என்னைத் தேடாத குட்பாய்.” என்றுவிட்டு வெளியேறினான் பாஸ்கர்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. என்ன எல்லாரும் இந்த லேகாவை மறந்துட்டாங்க.. இன்னைக்கு அரசு தெய்வா காமெடி செம்ம காமெடி.. அதோட பாசமும் செம்ம பாசம்.. எல்லாரையும் பத்தியும் எல்லாம் தெரிஞ்சும் புரிஞ்சும் ஏன் 4 பேரும் பிரிஞ்சு போகணும்னு நினைக்கிறாங்க..