Loading

அத்தியாயம் 88

     “பாஸ்கரா” செல்வா அதிர, “அவன் தான், அவனே தான். என் மேல இருக்கிற கோபத்தில் பாதியாவது அவன் மேல காட்டுங்க. அப்பத்தான் அவன் இனிமேல் உங்க வழிக்கு வராம இருப்பான்.” யோசனை சொன்னான் கைலாஷ்.

     “அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். இப்படியெல்லாம் ஐடியா கொடுத்தா நீ தப்பிச்சிடலாம் னு நினைக்காத. உங்க அப்பா எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எங்க வீட்டுக்குள்ள அத்து மீறி நுழைஞ்சு எங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தரைக் கொலை பண்ண முயற்சி பண்ண உன்னைக் கையும் களவுமா பிடிச்சிருக்கேன். அப்படியே சும்மா விட்டுடுவேன்னு நினைக்காதே.” கோபமாய் சொன்னான் தெய்வா.

     “யாரு பாஸ் உங்களைச் சும்மா விட சொன்னது. நீங்க ஒரு போலீஸ், நான் குற்றவாளி. எனக்குத் தண்டனை வாங்கித் தர வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கு. அந்தக் கடமைக்குத் தடையா எங்க அப்பாவோ, நானோ இருக்க மாட்டோம்.

     அப்புறம் உங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் னு வெறும் வாய் வார்த்தையில் சொன்னா மட்டும் போதாது. அதை செயலிலும் காட்டணும். உறவுகளுக்கு மரியாதை கொடுக்கணும். அதைக் கொஞ்சம் கத்துக்கோங்க.” தெய்வாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து சொல்லிவிட்டான் கைலாஷ். லீலாவைப் பேசியதற்காகத் தான் இந்த வார்த்தைகள் என்று அங்கிருந்த அனைவருக்குமே புரிந்தது.

     லீலாவை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்ட தெய்வா, “அது எல்லாம் எனக்குத் தெரியும். நீ பேசாம நடடா.” என்று கைலாஷை இழுத்துக் கொண்டு நடந்தான்.

     “கொஞ்சம் இருங்க பாஸ், எதுக்கு இவ்வளவு அவசரம். நான் இன்னொரு முக்கியமான ஆள் கிட்ட பேச வேண்டியது இருக்கு.” கைலாஷ் சொல்ல, செல்வா அவனை முறைத்தான்.

     “பாஸ் கொஞ்சம் கையை எடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.” என்றுவிட்டு தன் மீதிருந்த தெய்வாவின் கரத்தை எடுத்தவன் லீலாவை நோக்கி நடந்தான்.

     செல்வா வேகமாக லீலாவின் அருகே வந்து நிற்க, அதைக் கண்டு புன்னகைத்த கைலாஷ், அவர்கள் இருவரையும் தாண்டி நின்ற நாகாவின் அருகே சென்றான்.

     நாகாவின் கைகளைத் தன் இரு கைகளால் பிடித்துக்கொண்டவன், “உங்களோட பேர் என்னன்னு கூட எனக்குத் தெரியாது. ஆனா என்னோட ஆயுள் இருக்கிறவரைக்கும் உங்களை நான் மறக்க மாட்டேன். கண்ணை மறைச்ச ஆத்திரத்தில், அந்தப் பாவி என்னைக் குழப்பிய குழப்பத்தில் நான் பண்ண இருந்த பெரிய பாவத்திலிருந்து நீங்க தான் என்னைக் காப்பாத்தி இருக்கீங்க.

     நீங்க மட்டும் சரியான நேரத்தில் வராம இருந்திருந்தா இங்க ரொம்பப் பெரிய அநியாயம் நடந்திருக்கும். அதை நினைச்சு நினைச்சு நானும் சீக்கிரமே போய் சேர்ந்திருப்பேன். இது எதுவும் நடக்கவிடாம என்னைக் காப்பாத்தினதுக்கு ரொம்ப நன்றி.” என்று நாகவைப் பார்த்துச் சொன்ன கைலாஷ், செல்வா மற்றும் லீலாவைப் பார்த்து, “நான் என் நினைப்பை மாத்திக்க என்னால் ஆன எல்லா முயற்சியும் கட்டாயம் செய்யுறேன்.“ என்று வாக்குகொடுத்து அவர்கள் மனதில் பாலை வார்த்துவிட்டு, தெய்வாவிடம் “போகலாம் பாஸ்” என்று புன்னகைத்தான்.

     “நக்கலா பண்ற, இருடி மாப்பிள்ளை லாக்கப்பில் வைச்சு உன்னோட கொழுப்பைக் கொஞ்சம் குறைக்கிறேன்.” என்று கடுகடுப்புடன் அவனை இழுத்துச் சென்றான் தெய்வா.

     அவர்கள் அனைவரும் செல்ல, அதிர்ந்த நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்தாள் லீலா. அவள் கைலாஷிற்கு என்றுமே சின்ன நம்பிக்கை கூட கொடுத்ததில்லை. தங்கைக்காக உதவி என்று அவள் சென்றபோது கூட தெளிவாக உதவியாக நினைத்து செய்தால் மட்டும் போதும் என்று தான் உரைத்திருந்தாள்.

     இருந்தாலும் இத்தனை நம்பிக்கையுடன் காத்திருந்து, அது நடக்காது போன ஆவேசத்தில் இப்படி கொலை வரை அவன் வருவான் என்பதை அவள் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. கூடவே பாஸ்கர், அவனுக்கு என்ன தான் வேண்டுமாம் என்கிற யோசனை அவளை மொத்தமாக இழுத்துக்கொண்டது.

     அவளுக்குக் குறையாத யோசனையுடன் தன் உலகத்தில் தனித்திருந்தான் செல்வா. பாஸ்கரை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று வீராப்பாய் நினைத்தான்.

     இரண்டு நாள்கள் முடிந்த பின்னர் சகோதரர்கள் அனைவரும் வழக்கம் போல தனியாக சந்தித்தனர். “செல்வா ஏன் இன்னும் இப்படி உம்முன்னு இருக்க. அதான் எல்லாம் சரி ஆகிடுச்சு இல்ல. பாஸ்கர், கைலாஷ் இரண்டு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பியாச்சு.

     நாம நினைச்ச மாதிரி கைலாஷ் அப்பா, நம்மகிட்ட எந்தப் பிரச்சனையும் பண்ணாம அவர் பக்கம் இருந்து கைலாஷை வெளியே கொண்டு வர என்ன பண்ண முடியும் னு தான் பார்க்கிறார். எல்லாம் நமக்குச் சாதகமாத் தானே முடிஞ்சிருக்கு அப்புறம் என்ன.

     ஒருவேளை உன் கூடவே இருந்துகிட்டு பாஸ்கர் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டானேன்னு வருத்தமா இருக்கா.” அனுசரணையாய் கேட்டான் தெய்வா.

     “அவன் இது எல்லாம் பண்ணான் என்பதை விட, எனக்கு பெரிய அதிர்ச்சியா இருக்கிறது அவன் சொன்ன காரணம்.

     ஒரு டாக்டரா அவன் எப்படிடா என் மேல பொறாமைப் படலாம். நாலு பேரு என்னைப் பார்த்து கைராசிக்காரன்னு சொல்லிட்டா, அவன் வைத்தியம் பார்க்கிற நோயாளிகள் யாருக்கும் குணமாகாதுன்னு ஆகிடுமா.

     என் மன நிம்மதியைக் கெடுத்து, என்னை அந்த ஹாஸ்பிடலில் இருந்து வெளிய அனுப்புறதுக்காக எத்தனை காரியம் பண்ணியிருக்கான். நினைச்சுப் பார்த்தாலே ரொம்ப வருத்தமா இருக்கு.” என்றான் செல்வா.

     “பொறாமை எந்த நேரம் யாருக்கு யார் மேல வரும் னு சொல்லவே முடியாது. அதுக்குச் சரியான காரணமும் கிடையாது. அதனால அது எல்லாத்தையும் விட்டுத் தள்ளு செல்வா.” வழக்கத்திற்கு மாறாக அறிவுரை சொன்னான் நாகா.

     “ஆமா எப்பவும் தெய்வா தானே நம்ம எல்லோரையும் இங்க வரச் சொல்லுவான். இப்ப என்ன புதுசா செல்வா நீ கூப்பிட்டு இருக்க. என்னாச்சு எங்க நாலு பேரு கிட்டேயும் நீ ஏதாவது சொல்லணுமா?” என்றான் தர்மா.

     “சொல்லணும் இல்ல கேட்கணும், அதுவும் தெய்வா கிட்ட. இதை அவன் கிட்ட தனியா கேட்டு இருக்கலாம் தான். ஆனா உங்க இரண்டு பேர் முன்னாடியும் கேட்கிறது நல்லதுன்னு தோணுச்சு.” செல்வா சொல்ல, தெய்வா உடன்பிறந்தவனைக் கூர்மையாகப் பார்த்தான்.

     “அன்னைக்கு எதுக்காக லீலாகிட்ட அப்படி நடந்துக்கிட்ட.” நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான் செல்வா.

     “இப்ப என்ன, அன்னைக்கு நான் பேசினதுக்கு என்னைத் திட்டத் தான் இங்க வரச் சொன்னியா. என்னைத் திட்ட நான் மட்டும் போதுமே, எதுக்கு இவனுங்க இரண்டு பேரும்.

     ஓ என்னைக் காட்டி மத்தவங்களுக்கும் அட்வைஸ் பண்ணச் சொல்லி, உன் பொண்டாட்டி உனக்கு அட்வைஸ் பண்ணாங்களா?” கடுப்பாய் கேட்டான்.

     “ஏன்டா இப்படியெல்லாம் பேசுற.” செல்வாவிற்குத் தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்வதற்கு அத்தனை தயக்கமாக இருந்தது.

     “நான் பேசினதுக்கு எல்லாம் சேர்த்து ரொம்பப் பெரிய ஸ்சாரி. உன்கிட்ட சாரி கேட்டது பத்தாது, உன் பொண்டாட்டி கிட்ட கேட்கணும் அப்படின்னு சொன்னாக் கூட நான் கேட்கத் தயார். வெறும் ஸ்சாரி போதுமா இல்ல காலில் விழுந்து ஸ்சாரி கேட்கணுமா?” கோபமாய் கேட்டான் தெய்வா.

     “தெய்வா, லீலா மேல பொறாமைப்படுறியா என்ன?” தம்பியுடைய பிரச்சனையின் ஆணிவேரைப் பிடித்தான் செல்வா.

     “என்னது லீலா மேல எனக்குப் பொறாமையா. ஏது அவங்க ருக்கு மேல வைச்சிருக்குற பாசத்தை விட, நான் ருக்கு மேல வைச்சிருக்கிற பாசம் கம்மின்னு நினைச்சு நான் பொறாமைப்படுறேன்னு நினைக்கிறியா நல்ல காமெடி.” சிரித்தான் தெய்வா.

     “நான் ருக்குவைப் பத்தி பேசல. என்னைப் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்.” சொன்ன செல்வாவிற்கு மேற்க்கொண்டு பேச முடியவில்லை. ஆள்காட்டி விரலால் நெற்றியை நீவிவிட்டான்.

     “என்ன, என்ன சொன்ன” நின்ற இடத்தில் இருந்து நான்கடி முன்னால் வந்தான் தெய்வா.

     “செல்வா வர வர உன்னோட காமெடி சென்ஸ் ரொம்ப அற்புதமா வேலை செய்யுது. எப்படி எப்படி சிடுமூஞ்சி தெய்வா உன்னை நினைச்சு லீலா அண்ணி மேல பொறாமைப் படுறானா?” சொல்லிவிட்டு நாகா சிரிக்க, தர்மாவுக்கும் லேசாக புன்னகை வந்தது. ஆனால் செல்வாவும், தெய்வாவும் அமைதியாகவே இருந்தனர்.

     “இல்லன்னு அவனைச் சொல்லச் சொல்லு பார்க்கலாம் நாகா.” செல்வா சவடால் விட, மூத்தவனின் சீண்டலுக்குப் பதில் சொல்லாத தெய்வாவை குழப்பமாகப் பார்த்தான் நாகா.

     “என்னடா நடக்குது இங்க. தெய்வா நீ அமைதியா இருக்கிறதைப் பார்த்தா செல்வா சொல்றது எல்லாம் உண்மையா.” ஆச்சர்யம் தாளாமல் கேட்டான் தர்மா.

     “உங்க இரண்டு பேருக்கும் இது ஆச்சரியமா இருக்குல்ல. லீலா என்கிட்ட இதைப் பத்தி சொல்லும் போது, எனக்கும் ஆச்சரியமா தான் இருந்தது.” என்க, தெய்வா இன்னமும் அதிகமாகத் தலை குனிந்தான்.

     “அன்னைக்கு தெய்வா லீலாவைத் திட்டும் போது முதலில் ரொம்பக் கஷ்டப்பட்ட லீலா, அதுக்கு அப்புறமா தான் அவன் கண்ணில் தெரிஞ்ச பொறாமையைப் பார்த்து இருக்காங்க” என்க, தன் நெற்றியில் அடித்துக்கொண்டான் தெய்வா.

     செல்வா சொல்வது உண்மையே. முன் எப்போதும் இல்லாமல் கடந்த சில நாள்களாக அதிகமாக செல்வாவின் மேல் உரிமை உணர்வு பொங்கி வழிந்தது தெய்வாவிற்கு. காரணம் புரியா அந்த உணர்வு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆட்டிப்படைத்து, வாட்டியது.

     செல்வாவை லீலா ஒட்டிக்கொண்டே இருந்தாலும் கோபம் வந்தது. அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டு, அவன் தனியாக இருந்தாலும் கோபம் வந்தது. லீலா அவனைப் பார்த்து சிரித்தாலும் கோபம் வந்தது, அவனுடன் சண்டை போட்டாலும் கோபம் வந்தது.

     அவனிடம் தேடித்தேடிச் சென்று பேசத் தோன்றியது. அவன் தன் உடன் பிறந்தவன் என்பதில் திடீரென பெருமை பொங்கி வழிந்தது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் அணிவகுத்து வர, திடீர் வானிலை மாற்றத்தால் உண்டாகும் பேரழிவுகள் போல தனக்குள் ஏற்படும் அனைத்து மாற்றங்களையும் கோபமாக, சுற்றியிருக்கும் அனைவரின் மீதும் காட்டத் துவங்கி இருந்தான்  தெய்வா.

     “இதில் வருத்தப்படவோ அசிங்கப்படவோ ஒன்னுமே இல்ல தெய்வா. ஒன்னாப் பிறந்த இரட்டையர்களுக்கு நடுவில் இருக்கிற உணர்ச்சிப் பூர்வமான ஒரு பந்தம் தான் இந்தப் பொறாமை.

     நாம, நான் ஐடென்டிகல் டிவினா இருந்தாக் கூட அம்மா வயித்துக்குள்ள ஒன்பது மாசம் ஒன்னா தானே இருந்தோம். அந்த நேரம் எல்லா உணர்வுகளையும் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் பகிர்ந்துக்கிட்டு, சில விஷயங்களக்கு சண்டை போட்டாலும் பல விஷயங்களில் ஒற்றுமையா தானே இருந்திருக்கோம்.

     நம்ம கூடவே பிறந்த ஒருத்தன் திடீர்னு இன்னொருத்தர் மேல அளவுக்கு அதிகமா பாசம் வைக்கும் போது, தனக்கே அறியாம அந்தக் குறிப்பிட்ட நபரை நாம வெறுக்க ஆரம்பிச்சிடுவோம். இதுக்கு முன்னாடி இது நிறைய நடந்திருக்கு. அது தான் உன்னோட விஷயத்திலும் நடந்திருக்கு.” விளக்கினான் செல்வா.

     “அப்படியா அப்படின்னா” என்று இழுத்த நாகா தர்மாவைப் பார்த்து, “ஏன்டா தர்மா நாமளும் தான் இரட்டையாப் பிறந்தோம். ஆனா உனக்கும், எனக்கும் நடுவில் அப்படி எந்த ஒரு பொறாமையும் இதுவரைக்கும் வந்தது இல்லையே. ஒருவேளை நீ ஊர்மி மேல பொறாமைப்பட்டு அதை காட்டிக்காம இருக்கியா. அப்படி ஏதாவது இருந்தால் என்கிட்ட சொல்லிடுடா. எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம். தமிழ் படங்களில் வர மாதிரி பொஸஸிவ்னஸ் அதிகமாகி ஊர்மியை கஷ்டப்படுத்த ஆரம்பிச்சிடாத.” நாகா விளையாட்டு போல் சொல்ல, தர்மா சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான்.

     தர்மாவின் சிரிப்பால் செல்வாவிற்கும் சிரிப்பு வர, தெய்வாவைத் தவிர மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர். சிரிக்கும் சகோதரர்கள் அனைவரையும் முதலில் முறைத்த தெய்வா பின் தானும் சிரிக்க ஆரம்பித்தான்.

     “செல்வா நீ சொன்ன மாதிரி பொறாமை, மண்ணு மட்டைன்னு எதுவுமே கிடையாது. அது என்னவோ தெரியல. உனக்குப் பிரச்சனைன்னு தெரிய வரும் போது, எனக்கே தெரியாமல் ரொம்பக் கோவம் வந்திடுச்சு.

     முதல் முறை லீலாவைக் கொல்ல முயற்சி நடந்தப்ப என்னோட முதல் எண்ணம் நல்லவேளை நீ அங்க இல்லன்னு தான். ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் ஒரு யோசனை வந்தது. ஒருவேளை நடந்த கொலைமுயற்சி உனக்கானதா இருந்தான்னு தோணவும், எனக்கு உள்ளுக்குள்ள என்னவோ ஆகிடுச்சு.

     அதனால் தான் அன்னைக்கே அந்தக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயற்சி பண்ணேன். ஆனா முடியாமப் போயிடுச்சு. இரண்டாம் சம்பவம் நடந்தப்பவும் அப்படித்தான். உனக்கு எதுவும் ஆகிடுமோன்னு கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேன்.” என்றான்.

     “அது எப்படி டா கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலன்னு பச்சையா நடிக்கிற.” செல்வா கேட்க, “ஓகோ உன் பொண்டாட்டி ஒன்னு சொன்னா அதை அப்படியே நம்புவ அதுவே நான் சொன்னா நம்ப மாட்டியா.” கோபம் வந்தது தெய்வாவிற்கு.

     “பார்த்தியா பார்த்தியா உனக்கே தெரியாம, லீலா மேல உனக்கு இருக்கிற பொறாமை கொஞ்சம் கொஞ்சமா வெளியே வருது பாரு.” சிரித்தான் செல்வா.

     “ஐயோ சாமி ஆளை விடு. இங்க இருந்தா நீ என்னை வேற மாதிரி ப்ரேம் பண்ற. நான் போறேன் வீட்டுக்கு.” என்றுவிட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினான் தெய்வா.

     “ஏன் செல்வா இந்த பொஸஸிவ்னெஸால நாம தனிக்குடித்தனம் போற திட்டத்துக்கு ஒன்னும் பிரச்சனை வந்திடாதே.” தர்மா கேட்க, மீண்டுமொரு முறை அங்கே சிரிப்பலை பொங்கியது.

     “அவன் கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டேன். இப்ப என் பொண்டாட்டி வேற என்ன ஆட்டம் ஆட காத்துக்கிட்டு இருக்காளோ தெரியலையே. கைலாஷையும், பாஸ்கரையும் அரஸ்ட் பண்ற வேலையில் இரண்டு நாளா பிஸியா இருந்துட்டேன். இன்னைக்கு அவளைப் பார்த்து தானே ஆகனும்.

     சும்மாவே அக்கா அக்கான்னு பைத்தியமா சுத்துவா. அவளுக்கு கீ கொடுக்கிற மாதிரி இல்ல அன்னைக்கு நான் நடந்துக்கிட்டேன்.” யோசனையுடனே வீட்டிற்குள் நுழைந்தான் தெய்வா.

     “ருக்கு தெய்வா வந்துட்டாட்டாரு பாரு. டீ காபி ஏதாவது வேணுமான்னு கேளு.” தங்கையைக் கிளப்பப் பார்த்தாள் லீலா.

     அக்காவிடம் எதையும் சொல்லாமல் தன்னால் தங்களது அறை நோக்கி நடந்தாள் ருக்கு. அவனுக்கு, அவளுடைய அக்காவைப் பற்றி பேசியதில் கோவமாக இருப்பாளோ என்ற பயம். இவளுக்கு, ட்ரான்ஸ்பர் ஆகி செல்லப் போகிறவனுடன் உடன் வர முடியாது என்று சொன்னதில் கோவமாய் இருப்பானோ என்ற பயம். இருவரும் இருவேறு சிந்தனையுடன் அந்த அறைக்குள் நின்றிருந்தனர்.

     அப்போது, “தெய்வா என் செல்லமே” என்று கத்தியபடி ஓடி வந்து அறைக்கதவை தட்டக் கூடத் தோன்றாமல் வேகமாகத் திறந்தான் அரசு.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தெய்வா நீ பண்றதெல்லாம் சின்னப்பிள்ளைத் தனமா தான் இருக்கு.. நாலு பேரும் ஒண்ணு சேர்ந்து நல்ல விஷயங்களை பேச ஆரம்பிச்சுட்டாங்க.. அடடா நாகா என்ன ஹீரோ ஆகிட்டு வர்றார்..