
அத்தியாயம் 27
செல்வாவின் ஆழ்ந்த உறக்கம் சந்தேகத்தைக் கிளப்ப, “செல்வா” என்கிற அழைப்போடு தெய்வா அவனை உலுக்கினான். “என்னாச்சு” என்றவாறு லீலாவும் அவன் அருகே வரப் பார்த்தாள்.
அவளை கை நீட்டித் தடுத்த தெய்வா, “தயவுசெஞ்சு நீங்க அவன் பக்கத்தில் வராதீங்க. உங்களால் தான் அவன் இப்ப இந்த நிலைமையில் இருக்கானோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு. உங்க முன்னாள் காதலன் தான் எங்க செல்வாவை ஏதோ பண்ணிட்டான்.” வார்த்தையை விட்டான் தெய்வா.
“என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க நீங்க. உங்க யோசனைக்கு நான் சரிவரலங்கிற கோபத்தில், என் அக்காவைக் கண்டபடி பேசாதீங்க. இது நல்லதுக்கு இல்ல.
நமக்கு நடுவில் இருக்கும் பிரச்சனை எப்ப வேண்ணா சரியாகும். ஆனா அக்காவைப் பார்த்து நீங்க பேசின வார்த்தைகளை அள்ள முடியாது. ஜாக்கிரதையா இருங்க.” கடுமையாக எச்சரித்தாள் ருக்கு.
“அப்படி என்ன நான் தப்பாப் பேசிட்டேன். ஊர் உலகத்தில் இப்பெல்லாம் இப்படித் தானே நடக்கிது. முதல் முறை இவங்களுக்குக் கொலை முயற்சி நடந்த பிறகு, வீட்டைச் சுத்தி அத்தனை பாதுகாப்பு ஏற்பாடு பண்ணார் நம்ம அப்பா. அதையும் தாண்டி இன்னைக்கு ஒருத்தன் இவ்வளவு தூரம் வந்திருக்கான்னா அவனுக்கு நம்ம வீட்டுக்குள் இருந்து யாரோ கட்டாயம் உதவி பண்ணியிருக்கணும். அது ஏன் இவங்களா இருக்கக் கூடாது.” தெய்வா சொல்ல, ருக்கு கணவனை கடுமையாக முறைத்தாள்.
அதைப் பொருட்படுத்தாமல், “உங்க அக்கா சொல்லி இவன் செல்வாவைக் கொல்ல வந்து, சடெனா நாகா வந்ததால் மாத்தி நடிக்கிறானோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு.” தெய்வா பேசிக்கொண்டே போக, லீலாவிற்கு அழுகை அழுகையாக வந்தது.
“தெய்வா, தப்புப் பண்ணாத. முன்னாடி எல்லாம் நான் தான் இப்படிப் பைத்தியக்காரத்தனமா ஏதாவது பேசுவேன். இப்ப நான் நிறுத்திட்டேன்னு நீ ஆரம்பிக்கிறியா?” கோபமாய் கேட்டான் நாகா.
“நீங்க போலீஸ் னா யாரை வேண்ணாலும் எப்படி வேண்ணாலும் குற்றம் சொல்லலாம் னு நினைக்காதீங்க. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல.” ஊர்மியும் சீற்றம் குறையாமல் தெய்வாவைப் பேசினாள்.
“எல்லோரும் கொஞ்ச நேரம் சும்மா இருக்கீங்களா. அம்மாடி லீலா உன் புருஷன் முகத்துல தண்ணி அடிச்சுப் பாரு.” என்றார் வடிவேலு.
“இல்லப்பா இவங்க நம்ம செல்வா பக்கத்தில் வரவே கூடாது இவங்களால தான்.” மேற்கொண்டு எதுவோ சொல்ல வந்த தெய்வா வடிவேலுவின் முறைப்பில் அமைதியானான்.
“என்னடா நினைச்சுக்கிட்டு இருக்க நீ. எப்ப இருந்து உனக்கு அவன் மேல இவ்வளவு பாசம். எப்ப இருந்து அவன் உங்க செல்வா ஆனான்.” முதல் கேள்வியே இமயமலையின் எடையில் இருக்க, தெய்வாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“இங்க பார் தெய்வா, ஒரு விஷயத்தை மனசுல வைச்சிக்கோ. அவன் என்னோட பையன் செல்வா, இப்போ லீலாவுக்குப் புருஷன் அவ்வளவு தான். அவனுக்கும் உனக்கும் இதுவரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இனிமேலும் இருக்கத் தேவையில்லை.” வடிவேலு உறுதியாய் சொல்ல அனைவருக்குமே ஆச்சர்யம் தான்.
“என்னப்பா நாங்க நாலு பேரும் ஒத்துமையா இருக்கணும் னு நீங்க தானே எப்பவும் சொல்லுவீங்க. இப்ப இப்படி மாத்திப் பேசுறீங்க. அப்ப செல்வாவுக்கு என்ன ஆனாலும் நான் கவலைப்பட கூடாதா. அவனைப் பத்தி யோசிக்க, அவனைப் பத்தி கவலைப்பட எனக்கு உரிமை இல்லையா? அவன் என் அண்ணன் தானே.” சுருங்கிய முகத்தோடு கேட்டான் தெய்வா.
“செல்வா மேல இருக்கும் உண்மையான அன்போட இதையெல்லாம் நீ பேசி இருந்தா, நானே உனக்குப் பதிலா லீலாகிட்ட மன்னிப்புக் கேட்டு இருப்பேன். ஆனா நீ யார் மேலோ இருக்கும் கோபத்தை லீலா மேல காட்டுற.
கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும், நீங்க நாலு பேரும் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக்கிட்டுச் சாகுற அளவுக்கு வெறியோட தான இருந்தீங்க. இப்ப என்ன திடீர்னு இவ்வளவு மாறுதல்.” மருமகளுக்காக மகனிடம் நியாயம் கேட்டார் வடிவேல்.
“அப்பா நாங்க நாலு பேரும் அண்ணன் தம்பிங்க. எங்களுக்குள்ள நாங்க சண்டை போடுவோம், அடிச்சிப்போம், இன்னும் என்ன வேண்ணாலும் பண்ணுவோம். அதுக்காக எங்களில் ஒருத்தனுக்கு வெளியில் இருந்து ஒருத்தங்க தப்புப் பண்ணா அதைப் பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம். இதை நீங்களோ, நானோ ஏன் நம்ம எல்லாரையும் படைச்ச அந்த ஆண்டவனால கூட மாத்த முடியாது.” உணர்ச்சிவசப்பட்டவனாய் பேசினான் தெய்வா.
“நீ திடீர்னு இவ்வளவு பாசம் காட்டுறதைப் பார்த்தா எனக்கு இப்ப உன் மேல தான் சந்தேகம் வருது. நீயே செல்வாவைக் கொல்ல நினைச்சு, அது முடியாததால் பழியை லீலா மேல போட்டு தப்பிக்கப் பார்க்கிறியோன்னு நினைக்கத் தோணுது.” மனதைக் கல்லாக்கிக்கொண்டு சொன்னார் வடிவேல்.
“அப்பா, என்னப்பா இதெல்லாம். என்னைப் பத்தி இப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா? நான் எதுக்குப்பா அவனைக் கொல்லணும். அவன் என் அண்ணன்.
எங்களுக்குள்ள ஒத்து வராமல் இருக்கலாம். அதுக்காக நாங்க ஒருத்தரை ஒருத்தர் கொல்ல நினைப்போமா. உங்களோட இரத்தம் மேல உங்களுக்கு இவ்வளவு தான் நம்பிக்கையா.
இந்த வார்த்தையை யார் சொல்லியிருந்தாலும் எனக்கு வலிச்சிருக்காது. ஆனா நீங்களே இப்படி சொல்லும் போது எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.” வருத்தமாய் சொன்னான்.
“ஏன்டா உனக்கு வந்தா ரத்தம். அதுவே லீலாவுக்கு வந்தா தக்காளிச் சட்னியா. என்னடா உன் நியாயம். செல்வாவை உனக்குச் சின்ன வயசில் இருந்தே பிடிக்காது. அவன் கூட இருக்கிறதை முழுசா வெறுக்கிறவன் நீ.
இப்படி இருக்கும் போதே அவனுக்கு ஒரு கஷ்டம் வந்தா உனக்கே தெரியாம உன்னோட ரத்தம் கொதிக்கிது. இதைத் தான் தான் ஆடாட்டாலும் தன்னோட தசையாடும் னு சொல்லி இருக்காங்க பெரியவங்க.
செல்வாவோட கூடப்பிறந்த உனக்கே இப்படி இருக்குன்னா, அவனை மட்டுமே முழுசா நம்பி, இனி அவன் தான் எல்லாமேன்னு முடிவு பண்ணி இந்த வீட்டுக்கு வந்தவ லீலா. அவளோட நிகழ்காலம், எதிர்காலம் இந்த இரண்டுமே அவனைச் சார்ந்து தான் இருக்கு. அப்படியானவனை அவ கொல்ல நினைப்பாளா? அறிவு வேண்டாம் உனக்கு.”
“அந்தக் கைலாஷ் என்னடா பெரிய பணக்காரன். அவன் கிட்ட இருக்கிற சொத்து நம்மகிட்ட இல்லையா என்ன. நம்ம செல்வா அவனை விட அழகு, அவனை விட அதிகமான படிப்பு, அவனோட அப்பா சென்ட்ரல் மினிஸ்டர் அப்படின்னா அதுக்கு எந்த விதத்திலும் குறையாத குடும்பம் நம்மளோடது. எல்லாத்துக்கும் மேல செல்வா குணத்தில் தங்கம். எப்படிப் பார்த்தாலும் கைலாஷை விட செல்வா தான்டா மேல. அப்படியான செல்வாவை விடவே மேலானவ டா என் மருமக லீலா.” என்க, குமுறிக்கொண்டிருந்த பெண்களின் உள்ளம் சற்றே நிதானமானது. அதற்கு நேர்மாறாகத் தெய்வாவின் முகம் இன்னமும் தான் சுண்டிப்போனது.
“என் மருமகளைப் பத்தி எனக்குத் தெரியும் டா. செல்வாவைப் பத்தி நான் மேல சொன்ன எந்த ஒரு விஷயமும் அவளுக்குப் பெருசு கிடையாது. அவ செல்வாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு முக்கியமான காரணம், அவன் என்னோட பையன், அப்புறம் அவ தங்கச்சி புருஷங்களோட அண்ணன் அவ்வளவுதான்.”
“லீலா மட்டுமில்ல அவளோட மூணு தங்கச்சிங்களும் அப்படித்தான். உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா நீங்க நாலு பேரு இல்லாம சாதாரணமான ஒரு விவசாயக் குடும்பத்துல நாலு அண்ணன், தம்பிங்க இருந்திருந்தாலும் இவங்க நாலு பேரும் அவங்களை நிச்சயமா கல்யாணம் பண்ணி இருப்பாங்க.
எல்லாத்தையும் பணம், பொருள், பதவின்னு பார்க்கிறவங்க நீங்க. மனசு முழுக்க அன்பு, பாசம் மட்டுமே நிறைஞ்சவங்க அவங்க. அவங்களோட உண்மையான மனசை, அதில் நம்ம எல்லோர் மீதும் நிறைஞ்சு இருக்கிற அன்பை, கண்மூடித்தனமா கோபப்படுற உன்னை மாதிரி ஒருத்தனால் புரிஞ்சுக்க முடியாது.”
“என்னமோ நான் சொன்னது உன் மனசைக் காயப்படுத்திடுச்சுன்னு சொன்னியே. இப்படிப்பட்ட லீலாவைப் பார்த்து நீ சொன்ன வார்த்தைகள் அவளை எந்த அளவுக்குப் பாதிக்கும் னு கொஞ்சம் நினைச்சுப் பாரு.
வாய் உன்னோடதுங்கிறதுக்காக யாரை வேண்ணா என்ன வேண்ணா சொல்லலாம் னு நினைக்காத. ஒரு நேரம் மாதிரி இன்னொரு நேரம் இருக்காது.
லீலாவைப் பத்தி நீ தப்பாப் பேசறது இதுவே முதலும், கடைசியுமாய் இருக்கட்டும். இதுக்கு மேல என் மருமகளை கண்டவன் கூட சேர்த்து வைச்சு பேசின நான் மனுசனாவே இருக்க மாட்டேன்.” என்றார் வடிவேலு.
இதற்குள் தூக்கத்தில் இருந்த செல்வாவின் முகத்தில் தண்ணீரை ஓங்கி அடித்தான் நாகா. அவன் அறையில் அவனை வைத்து நடந்து கொண்டிருக்கும் எந்த அலப்பறையும் தெரியாமல் மெதுவாக அசைந்து கொடுத்த செல்வா, உடலை வளைத்து சோம்பல் முறித்து மிக சாதாரணமாக எழுந்தான்.
அரை மயக்கத்தில் முழு மயக்கம் போல நடித்துக்கொண்டு அமைதியாய் படுத்திருந்த கைலாஷ் அனைவரின் பேச்சுக்களையும் கூர்ந்து கவனித்தான்.
இதற்கு முன்பாகவும் லீலாவைக் கொல்வதற்காக ஒரு சதி நடந்துள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு, எவருடைய பேச்சும் அவனுடைய மூளையை எட்டவில்லை.
லீலாவைக் கொல்வதற்கு தன்னைத் தவிர வேறு எவருக்கு நோக்கம் இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தவனுக்கு அவனுடைய புத்தி சுத்தி சுத்தி பாஸ்கரையே அடையாளம் காட்டியது.
என்ன நடந்தது என்று தெளிவாக ஒருமுறை யோசித்துப் பார்த்தான். மருத்துவமனையில் தான் செல்வாவை கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது உண்மை. அதனைப் பார்த்து பாஸ்கர் தன்னிடம் வந்து பேசியதும் உண்மை.
அதன்பிறகு என்ன நடந்தது என்று நிதானமாக யோசிக்கையில் பாஸ்கர் தன்னிடம் அனைத்தையும் போட்டு வாங்கியது தாமரை இலை தண்ணீர் போல தெளிவாக விளங்கியது அவனுக்கு.
காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் லீலாவின் மீது பாஸ்கருக்கு ஏதோ ஒரு வகையில் தீராத கோபம் இருக்கிறது என்பது வரை புரிந்துகொண்டான் கைலாஷ். இத்தனை விஷயங்களுக்கு இடையில் லீலாவின் மீது அவனுக்கு இருந்த வருத்தம் எல்லாம் கண்காணாத தேசம் போய் இருந்தது.
“நாகா என்னாச்சு, எதுக்கு எல்லாரும் என் ரும்ல இருக்கீங்க. அப்பா நீங்களுமா மணி என்ன ஆச்சு.” என்று மெதுவாக கண்களை கசக்கிய செல்வா செல்போனைப் பார்க்க, அது அதிகாலை இரண்டு மணி ஆறு நிமிடங்களைக் காட்டியது
“லீலா என்னாச்சு.” என்றபடி எழுந்த செல்வா தள்ளாட தெய்வா அவனைத் தாங்கிப் பிடித்தான்.
“என்ன ஆச்சு உங்களுக்கு, ஏன் இப்படி தள்ளாடுறீங்க.” லீலா பதறிப் போய் முன்னால் வந்தாலும் அவனை விட்டு சற்றே தள்ளியே நின்று கொண்டாள்.
“தெரியல லீலா, நேத்து ராத்திரி ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப லேட் ஆனதால் ஒரு டம்ளர் ஜூஸ் குடிச்சேன். அந்த ஜூஸ் தான் உடம்புக்கு சேரலையோ என்னவோ. அப்ப இருந்து ஒரே மயக்கம் மயக்கமா வருது.” என்ற செல்வா மீண்டும் ஒருமுறை தள்ளாட தெய்வா அவனை நேராக நிற்க வைத்தான்.
“செல்வா அந்த ஜூஸை உனக்கு யார் கொடுத்ததுன்னு ஞாபகம் இருக்கா?” தெய்வா கேட்க, “நர்ஸ் ஒருத்தங்க தான் கொடுத்தாங்க இப்ப அதுக்கு என்னடா.” எரிச்சலாகக் கேட்டான். உடலில் நிகழும் மாற்றம், வீட்டு சூழ்நிலையில் உண்டான மாற்றம் எல்லாம் சேர்ந்து அவனை எரிச்சலாக்கி இருந்தது.
“செல்வா ஒழுங்கா கண்ணை முழிச்சுப் பாரு. இன்னொரு முறை அண்ணியைக் கொல்வதற்கு சதித்திட்டம் நடந்து இருக்கு.” பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான் நாகா.
அதைக் கேட்டவுடன் அதுவரை கண்ணில் இருந்த தூக்கம் சென்ற இடம் தெரியவில்லை செல்வாவிற்கு. தெய்வாவின் பிடியிலிருந்து தன்னுடைய கைகளை உருவிக்கொண்டு மனைவி அருகே வந்தவன், அவள் நலம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மற்ற அனைவரையும் வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்தான். அந்த வகையில் அறையின் தரையில் விழுந்த கிடந்த கைலாஷையும் காண முடிந்தது அவனால்.
“லீலா, இவர் கைலாஷ் தானே. இவரா உன்னைக் கொல்ல வந்தாரு.” செல்வா அதிர்ச்சியில் கேட்க, லீலா கைலாஷைப் பற்றி அவனிடம் அனைத்தையும் சொல்லி இருக்கிறாள் என்பது புரிய தெய்வாவிற்கு தான் செய்த தவறு நெற்றிப்பொட்டில் அடித்தது போல் புரிந்தது.
“கொல்ல வந்தது நான்தான். ஆனா என்ன அனுப்பினது வேற ஒருத்தன்.” என்றபடி எழுந்து நின்றான் கைலாஷ்.
செல்வா மற்றும் லீலாவை மறைத்தபடி நின்ற தெய்வா, “மரியாதையா உன் கையில் ஏதாவது ஆயுதம் இருந்தா அதைக் கீழே போட்டுடு. இல்லன்னா மகனே உன்னை அடிச்சே சாவடிச்சிடுவேன்.” உச்சகட்ட கோபத்தில் பேசினான்.
“தேவை இல்ல பாஸ், இவ்வளவு நேரமா நீங்க எல்லோரும் பேசினதை கேட்டுக்கிட்டு தான் இருந்தேன். நான் பண்ண நினைச்சது பெரிய தப்புன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு.
நான் நானா இல்ல பாஸ். என்னுடைய மூளையை எனக்கே தெரியாம ஒருத்தன் நல்லாவே சலவை பண்ணிட்டான். இதை இப்ப சொல்றதான்னு எனக்குத் தெரியல. ஆனா சொல்லாம விட்டா தப்பாகிப் போயிடும்.“
“லீலாவை நான் ரொம்பவே விரும்பினேன். அவங்களுக்காக எதையும் செய்யத் தயாரா இருந்தேன். ஆனா அவங்க தன்னோட தங்கச்சிங்களுக்காக யோசிச்சு, கடைசி வரை என்னை ஏத்துக்கவே இல்லை.” என்க, அனைவரின் கண்களும் லீலாவை நோக்கித் திரும்பியது.
“நான் அவங்களோட சேர்த்து அவங்க தங்கைகளையும் நல்லாப் பார்த்துப்பேன்னு அத்தனை சொல்லியும் நம்பாம, நம்பப் பிடிக்காம என்னோட காதலை தொடர்ந்து நிராகரிச்சுக்கிட்டே இருந்தாங்க. சரி அவங்க தங்கச்சிங்களுக்கு கல்யாணம் முடிந்த பின்னாலாவது அவங்களுக்கு என்னோட ஞாபகம் வரும் னு நம்பிக்கையோட காத்திருக்க நினைச்சேன்.
ஒருநாள் அவங்க முதல் தங்கச்சிக்காக என்கிட்ட உதவி கேட்டு வந்தாங்க. முழு மனசோட செய்து கொடுத்தேன். இந்தச் சம்பவத்தை வைச்சு அவங்க தங்கச்சிங்க மேல எனக்கும் அக்கறை இருக்குன்னு நம்பி, என் காதலை கன்சிடர் பண்ணுவாங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்.”
“ஆனா நான் நினைச்ச எதுவுமே நடக்கல. வேலை விஷயமா நான் வெளியூர் போன நேரம் பார்த்து, உங்க எட்டு பேருக்கும் கல்யாணம் நடந்தது. சரி நாம நினைச்சது தான் நடக்கல. அவங்க ஆசைப்பட்ட படி தங்கச்சிங்களோட வாழ அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கேன்னு ஒதுங்கத் தான் நினைச்சிருந்தேன்.” என்று நிறுத்தினான் கைலாஷ். அப்புறம் ஏன்டா இப்படி என்பது போல் தான் சுற்றியிருந்த அனைவரின் கண்களும் அவனை மொய்த்தது.
“லீலா மேல நான் வளர்த்த காதலை மறக்கிறது ஈஸி இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனா கட்டாயம் முயற்சி செய்யத் தான் நினைச்சிருந்தேன். இதை நீங்க எல்லோரும் நம்பணும்.
இந்த நேரத்தில் தான் ஒருத்தன் என் காதலை எனக்கு எதிராவே திருப்பி விட்டான். அவன் குழப்பிவிடும் அளவுக்கு நான் மனதளவில் பலவீனமானவனா இல்லை மூளைச்சலவை பண்றதில் அவன் அதிக பலமானவனான்னு தெரியல.
லீலா மேலே இருந்த அளவுக்கு அதிகமான வருத்தத்தில், அவங்களைப் பத்தி அவன் தப்பா சொன்னதை அப்படியே நம்பியது தான் நான் பண்ண மிகப்பெரிய தப்பு.” குற்றவுணர்வால் தலை குனிந்தான் கைலாஷ்.
“இப்ப நீ என்ன சொன்ன, லீலாவைப் பத்தி உன்கிட்ட தப்பா சொன்னாங்களா?” ஆச்சர்யமாய் கேட்டான் செல்வா.
“ஆமா பாஸ், லீலா என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவங்களுக்கு மட்டும் தான் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்கும். ஆனா இப்ப அக்கா தங்கச்சிங்க நாலு பேரும் உங்க நாலு பேரை ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கிறதா சொன்னாங்க.
இது ஒன்னும் பெரிய கொலைக்குத்தம் இல்லயேன்னு நான் யோசிக்கும் போதே, பணமும் வேணும் தங்கச்சிங்களும் வேணும் னு தான் லீலா இத்தனை வருஷமா நல்லவ வேஷம் போட்டிருக்கா. உன்னோட ப்ரண்ட்ஸ் இல்ல உன்னோட அண்ணன் தம்பிகளுக்கு அவ தங்கச்சிங்களைக் கல்யாணம் பண்ணிக்கொடுக்கிறேன்னு சொல்லி இருந்தா எப்பவோ உனக்கு சரின்னு சொல்லி இருப்பான்னு சொல்லி என்னை ஒருமாதிரி உணர்ச்சிவசப்பட வைச்சுட்டான்.
நான் அதில் இருந்து வெளியே வரும் முன்னாடி, பணத்துக்காக செல்வாவை வைச்சுக்கிட்டு மத்த விஷயங்களுக்கு தப்பா பழக செல்வாவோட நண்பன் கிட்ட வாய்ப்பு தேடுவதாவும் சொன்னான்.” என்க, செல்வா மற்றும் நாகா இருவரும் ஒரே நேரத்தில் பற்களைக் கடித்தனர்.
“என்னால் லீலா மேல அவன் இரண்டாவதா சுமத்தின பழியை ஏத்துக்க முடியல. லீலாவை எனக்கு நல்லாத் தெரியும். என்னை அவங்களுக்காக அத்தனை தீவிரமாக இறங்க வைச்சதே அவங்களோட ஒழுக்கம் தான். அதை நடிப்புன்னு என்னால் நம்ப முடியல.
நிஜமாவே அவங்க தப்பு செய்திருந்தால் கூட தங்கச்சிங்களுக்காக செய்திருப்பாங்களே தவிர, அவங்களுக்காக கேவலமான வேலையைப் பார்த்து இருக்க மாட்டாங்கன்னு நம்பிக்கை இருந்துச்சு.” கைலாஷ் உறுதியாகச் சொல்ல, நாகா தெய்வாவை முறைத்தான்.
யாரோ எவனோ அவனுக்கு லீலா மீது இருக்கும் நம்பிக்கை உடன் இருந்து பார்க்கும் உனக்கு இல்லையே எனச் சொல்லாமல் சொன்னது அவன் பார்வை.
“அவன் சொன்னதை மறுத்துப் பேசாம நான் அமைதியா நின்னதை வைச்சு, என்னை இன்னும் இன்னும் மூளைச்சலவை பண்ணான். லீலாவை என் கையால் கொன்னா தான் நிம்மதின்னு தோணும் அளவுக்கு என்னை மாத்த முயற்சி பண்ணான்.
அந்த நேரம் எனக்கு ஒரு விபரீதமான எண்ணம் வந்தது. லீலாவைக் கொல்வதற்குப் பதில் செல்வாவைக் கொன்னுட்டா லீலா எனக்குத் திரும்பக் கிடைக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமேன்னு பைத்தியக்காரத்தனமா வந்துட்டேன்.” என்க, லீலா கைலாஷை அப்பட்டமாக முறைத்தாள்.
“வந்த இடத்தில், செல்வாவோட பாதுகாப்பைப் பத்தி யோசிச்சு லீலா தூக்கத்தில் புலம்பினதைக் கேட்டதும் அவங்களுக்காகவே இத்தனை வருஷமா ஏங்கிப் போய் இருந்த என் மனசுக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சு. அதான் முட்டாள்தனமா நடந்துக்கிட்டேன்.
நான் பண்ண நினைச்சது பெரிய தப்பு. உள்ளுக்குள் இருந்த விரக்தி, சில நிமிடக் கோபம், மூர்க்கம் எல்லாம் சேர்த்து என்னை இப்படி மாத்திடுச்சு. என்னைத் தண்டிங்க, ஆனா அதுக்கு முன்னாடி அந்த ராஸ்கலை ஒரு வழி பாருங்க.” என்றான் கைலாஷ்.
அவன் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று மற்ற அனைவரும் யோசித்துக் கொண்டிருக்க, சற்றும் தயங்காமல், “உங்களை எனக்கு எதிரா திருப்பி விட்டவன் யார் கைலாஷ்.” உறுதியான குரலில் கேட்டாள் லீலா.
இத்தனைக்குப் பிறகும் தன்னை நம்பும் லீலாவைப் பார்த்து விரக்தியாகச் சிரித்தவன், “உன் புருஷனோட நண்பன் பாஸ்கர் தான் அந்த ராஸ்கல்.” என்றான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Selva, Baskar pathi therinji kita sari than…. Nice epi sis..
பாஸ்கர் மாட்டிகிட்டான் அருமை.. கைலாஷ் நல்ல விளக்கம்.. எதார்த்தமான கேரக்டர்.. வடிவேலு இன்னைக்கு சூப்பரா பேசிட்டார்