
அத்தியாயம் 86
கணவனின் பணியிட மாற்றம் பற்றிய செய்தியைக் கேட்டு அனலில் விழுந்த அல்லியாய் முகம் மாறிப்போக, “எத்தனை நாள் அங்க இருக்கணும்.” என்றாள் ருக்கு.
“இன்னும் கொஞ்ச வருஷத்துக்கு அந்த ஊர்தான்.” முடிந்தவரை மென்மையான குரலில் சொன்னான் தெய்வா.
“என்னங்க இப்படி சொல்றீங்க. அது எப்படி நீங்க அங்கேயும் நான் இங்கேயும் தனியா இருக்க முடியும். என்னால உங்களை விட்டுட்டு தனியா இருக்க முடியாது.” பதறிக்கொண்டு சொன்ன ருக்கு, எழுந்த இந்த அசாத்திய சூழ்நிலைக்கு தீர்வு என்னவாக இருக்கும் என்று வேகவேகமாக யோசிக்க ஆரம்பித்தாள்.
அவள் எண்ணத்திற்கு தடை போடும் விதமாய், “ருக்கு புரிஞ்சு தான் பேசுறியா? நாம ஏன் தனித்தனியா இருக்கணும். நாம எப்போதும் ஒன்னா தான் இருப்போம்.” ஆசையாய் ஆயிரம் கனவுகளோடு சொன்னான்.
“அப்ப ட்ரான்ஸ்பர் வேண்டாம் னு உங்க மேலதிகாரி கிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேன்சல் பண்ணிட்டீங்களா? நம்ம ஊரிலே இனிமே ஏசியா இருப்பீங்களா?” அப்பாவியாய் கேட்டாள் ருக்கு.
“ருக்கு என்னால் அப்படியெல்லாம் ரெக்வஸ்ட் பண்ண முடியாது. அப்படியே பண்ணாலும் ஆர்டரை கேன்சல் பண்ண மாட்டாங்க. ப்ரமோஷன் வேணும் னா ட்ரான்ஸ்பரையும் நான் ஏத்துக்க தான் வேணும்.” என்றான் தெய்வா.
உண்மையில் அவன் நினைத்தால் ஒரு அலைபேசி அழைப்பில் பணி இட மாற்றத்தை நீக்கச் செய்ய முடியும். அந்த அளவுக்கு மேலதிகாரிகளிடத்தில் அவனுக்குச் செல்வாக்கு இருந்தது தான். ஆனால் அப்படிச் செய்யாமல் இதையே காரணமாக வைத்துக்கொண்டு எப்படியும் ருக்குவைத் தனியே அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று உறுதியுடன் இருந்தான்.
“அப்புறம் எப்படி நீங்களும் நானும் ஒன்னா இருக்க முடியும்?” சோகமாய் கேட்ட ருக்குவிற்கு இன்னமும் தெய்வாவின் எண்ணம் புரியவில்லை என்பது தான் வேதனையே.
“ட்ரான்ஸ்பர் ஆர்டரை கேன்சல் பண்ணா மட்டும் தான் நாம ஒன்னா இருக்க முடியுமா என்ன? ட்ரான்ஸ்பர் ஆகிப் போற என்னோட என் பொண்டாட்டி நீயும் கூட வந்து தங்கலாமே.” சிரிப்புடன் அவள் கன்னம் கிள்ளினான் தெய்வா.
“என்ன விளையாடுறீங்களா? நான் எப்படி உங்க கூட அங்க வந்து தனியா இருக்க முடியும்.” பட்டென்று கேட்டு வைத்தாள் ருக்கு.
“நீ எங்க தனியா இருக்கப் போற, நான் உன் கூடவே தானே இருப்பேன்.” கேட்ட தெய்வாவின் கண்கள் மனைவின் முகச் சுருக்கத்தினை ஆராய்ந்தது.
“நீங்க என்கூட இருக்கிறதைப் பத்தி நான் பேசல. நான் மட்டும் உங்க கூட தனியா கிளம்பி வந்தா, என் அக்கா தங்கச்சிங்க கூட என்னால் இருக்க முடியாது. அதைப் பத்தி தான் சொல்றேன். அவங்க இல்லாம எப்படி என்னால தனியா இருக்க முடியும்.” கேட்ட ருக்குவிற்கு, இப்போதே சகோதரிகளைப் பிரிந்தது போல் கண்ணில் கண்ணீர் குளம் கட்டி நின்றது.
“ருக்கு புரிஞ்சுக்கோ, எல்லோரும் எப்பவும் ஒன்னா இருக்க முடியாது. அவரவருக்கான நேரம் வரும் போது, பிரிஞ்சு தான் ஆகனும். நாளைக்கே உங்க அக்கா தங்கச்சிங்களில் யாருக்கும் எதுவும் ஆகிட்டா மத்தவங்க என்ன பண்ணுவீங்க.” இரக்கமின்றி கேட்டு வைத்தான் தெய்வா.
“என்ன பேசுறீங்க நீங்க. நாங்க தனிக்குடித்தனம் வர மாட்டோம் னு உங்க நாலு பேரையும் கம்ப்பெல் பண்ணி கையெழுத்து வாங்கினதை மனசில் வைச்சிக்கிட்டு, இப்படி மறுக்கவே முடியாத காரணத்தைச் சொல்லி தனியாக் கூட்டிட்டு போகலாம் னு முடிவு பண்ணி இருக்கீங்க இல்ல.
இது நீங்க மட்டும் போட்ட திட்டமா. இல்ல உங்க அண்ணன் தம்பிங்களும் உடந்தையா. உங்களுக்கு ட்ரான்ஸ்பர் மத்தவங்களுக்கு என்ன சாக்கு.” படபட குரலில் ருக்கு கேட்க, தெய்வாவின் கண்கள் விரிந்தது.
“ஆனா ஒன்னு நல்லாத் தெரிஞ்சிக்கோங்க. நீங்க என்ன தாஜா பண்ணாலும், நான் தனியா வர ஒத்துக்க மாட்டேன்.” உறுதியாய் சொன்னாள். இதில் அவனுக்குக் கோபம் வந்தது.
“அப்ப, புருஷன் இல்லாம அக்கா தங்கச்சிங்க இருந்தாலும் இருப்ப, ஆனா அவங்களை விட்டுட்டு புருஷன் கூட இருக்க மாட்ட அப்படித்தான.” கடுமையாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டான்.
அவன் அவதாரத்தில் கோபம் வந்தாலும், “ஆமா அப்படித்தான் வைச்சுக்கோங்க.” பட்டென்று சொல்லிவிட்டாள் ருக்கு.
“இந்த முடிவை நினைச்சு நீ ரொம்ப வருத்தப்படுவ ருக்கு.” என்றுவிட்டு கிளம்பினான் தெய்வா.
செல்வா, லீலா இருவரும் யாருமற்ற அந்த அமைதியான ஏரியில் போட்டிங் சென்று கொண்டிருந்தனர். கொதிக்கும் நீரைப் போல் பல இடங்களில் பெரிய நீர்க் குமிழிகள் வந்து சென்றுகொண்டிருந்தது. அதைக் கவனிக்காமல் கதை பேசியவாறும், பல இடங்களை வேடிக்கை பார்த்தவாறும் சென்று கொண்டிருந்தவர்களின் படகு பெரிய நீர்க்குமியின் விளைவால் சமநிலை தடுமாறி திடீரெனக் கவிழ்ந்து விட, தண்ணீரில் விழுந்த இருவரும் இருவேறு திசைக்கு இழுத்துச் செல்லப்பட மூச்சுக்காகத் திணற ஆரம்பித்தனர்.
“நாகா காப்பாத்து டா, எங்களைக் காப்பாத்து. நாகா காப்பாத்து.” என்று செல்வா கத்துவது போல் தோன்றவும் அடித்துப் பிடித்து தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்தான் நாகா.
முகம் முழுவதும் வியர்த்து வடிந்திருந்தது. இதயம் உச்சகட்ட துடிப்பை வெளிப்படத்திக் கொண்டிருந்தது. தான் கண்ட கனவினால் உண்டான அதிகபட்ச பயத்தின் காரணமாக, தன்னுடைய இரண்டு உள்ளங்கைகள் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டான் நாகா.
கண்டது உண்மையில் கனவு தான் என்று உணர்ந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது அவனுக்கு. அவனுடைய மனம் ஒரு நிலையில் இல்லை. சம்பந்தமே இல்லாமல் செல்வாவிற்கும், லீலாவிற்கும் ஏதோ ஆபத்து, அதை இவன் தான் சென்று தடுக்க வேண்டும் என்று மனம் கூப்பாடு போட்டது.
அப்படித் தோன்றியவுடன் படுக்கையிலிருந்து விருட்டென எழுந்தவன், சற்றும் யோசிக்காமல் செல்வாவின் அறை வரை வந்து விட்டான். ஆனால் அதனைத் தாண்டி உள்ளே செல்லவோ கதவைத் தட்டவோ சங்கோஜமாக இருந்தது அவனுக்கு.
அறை வாசலில் நின்று உள்ளே செல்லலாமா இல்லை வேண்டாமா என்ற யோசனையில் அவன் நின்றது சில நொடிகள் தான். செல்வா கேட்டால் எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்ற நினைப்புடன் கதவைத் திறந்து நாகா உள்ளே நுழைந்த நேரத்தில், இரவு விளக்கின் மெல்லிய ஒளியில் கையில் கத்தியுடன் லீலாவின் வயிற்றை குறி வைத்துக் கொண்டு நின்றிருந்தான் ஒருவன்.
அதிர்ந்து போய், “அண்ணி” என்று நாகா உரக்கக் கத்திய கத்தில் பட்டென்று லீலா விழிக்க, வந்தவனும் பயந்துபோய் கத்தியை வேகமாகச் சொருகுவதாக நினைத்து, லீலாவிற்குப் பதில் மெத்தையை குத்தினான்.
நாகாவின் கனத்த குரலால் ஏற்கனவே பயந்திருந்த லீலா இப்படி ஒரு நிகழ்ச்சியைக் காணவும் சிலையாய் சமைந்துவிட்டாள்.
“அண்ணி இங்க வாங்க, என் பக்கம் வாங்க.” நாகா கத்த, வந்தவன் சுதாரித்து லீலாவைக் கொல்வதற்காக அவளை நெருங்க, நாகவிற்கு ஒருநிமிடம் என்ன செய்வதென்றே தெரியவில்லை.
என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்தவனாய் லீலாவுக்கு முன்பு கத்தியோடு நின்று கொண்டிருந்தவனை முதுகோடு பிடித்துக் கொண்டு, “அப்பா, தெய்வா, தர்மா எல்லாரும் வாங்க.” என்று உரக்கக் கூச்சலிட்டான்.
புதியவன் நாகாவின் பிடியிலிருந்து நழுவுவதற்காக என்னென்னவோ முயற்சி செய்தும் அவனால் முடியவில்லை. அளவுக்கு அதிகமாகச் சுரந்த அட்ரினலின் காரணமாகவோ என்னவோ, திடீரென வந்த பெருந்தைரியத்தால் நாகாவின் காலில் ஓங்கி மிதிக்க, அதை எதிர்பார்க்காத நாகா லேசாகத் தடுமாறினான்.
அதைச் சரியாகப் பயன்படுத்தி தன்னுடைய ஒரு கையை உருவிக் கொண்டு திரும்பி நாகவை கத்தியால் குத்த முயன்றான்.
அனிச்சைச் செயல் போல் லீலா ஓடிச் சென்று கத்தியை பிடிக்க, நாகா தப்பித்தான். ஆனால் லீலா கையில் காயத்தைப் பார்த்துப் பதறி, வந்தவனின் மீதிருந்த தன்னுடைய பிடியை நாகா தளர்த்த, அதைக் கணக்கச்சிதமாக பயன்படுத்தி தப்பித்தான் அவன்.
இந்த நேரத்திற்குள் சத்தம் கேட்டு மற்ற அனைவரும் செல்வாவின் அறைக்கு ஓடி வர, நிலைமை விபரீதமாக மாறுவதைக் கண்ட புதியவன் தான் வந்த வழியே வெளியே செல்ல முற்பட்டான்.
வெகு விரைவாக நடப்பைப் புரிந்துகொண்ட தெய்வா, கொலையாளியின் செயலை உணர்ந்து, அந்த அறையின் பாத்ரூம் கதவின் அருகே சென்று மறைத்தவாறு நின்றான்.
“தர்மா, இவன் லீலா அண்ணியைத் தான் கொல்ல வந்திருக்கான். அவங்களையும் மத்தவங்களையும் கூட்டிக்கிட்டு நீ இங்கே இருந்து வெளியே போ. நாங்க இரண்டு பேரும் இவனை பார்த்துக்கிறோம்.” என்றான் நாகா.
“ஏங்க அதெல்லாம் எங்களுக்கு ஒன்னும் ஆகாது. நீங்க முதலில் அவனைப் பிடிங்க.” என்றாள் ஊர்மி.
“யார்டா நீ எதுக்காக அவங்களைக் கொல்ல வந்த.” என்றான் தெய்வா.
“எப்படியும் என்னை அரஸ்ட் பண்ணத் தான் போறீங்க. என்னால தப்பிக்க முடியாதுன்னு தெரிஞ்சு போச்சு. நான் வந்த வேலைய முடிச்சிடுறேன்.” என்றவாறு லீலாவை அவன் நெருங்க, சுவரில் அமைதியாய் தொங்கிக் கொண்டிருந்த பெரிய கடிகாரத்தை எடுத்து அவனுடைய தலையில் அடித்தான் நாகா. முகத்தை மறைத்திருந்த அந்த முகமூடியையும் தாண்டி ரத்தம் வழிய அப்படியே சரிந்தான் வந்தவன்.
“நாகா என்ன காரியம் டா பண்ணிட்ட. அவன் செத்துட்டான்னா என்ன பண்றது.” தெய்வா பதறிப் போய் அருகே சென்று சோதித்தான்.
“இது தற்காப்புக்காக செஞ்சது, இவன் செத்தாலும் பிழைச்சாலும் எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை. என்ன தைரியம் இருந்தா நம்ம வீட்டுக்குள்ள வந்து நம்ம குடும்பத்து ஆளை கொல்ல நினைச்சிருப்பான்.” பொருமினான் நாகா.
“சரி அவன் உண்மையிலேயே மயங்கிட்டானா இல்ல நடிக்கிறானான்னு பாருங்க.” தர்மா புத்திசாலித்தனமாக யோசித்தான்.
மயங்கிக் கிடந்தவன் அருகே குனிந்த தெய்வா, முன் ஜாக்கிரதையாக அவன் கரத்தில் இருந்த கத்தியைப் பிடுங்கி தனியே வைத்துவிட்டு, அவனுடைய முகமூடியைக் கழட்ட லீலா முதலான சகோதரிகள் நால்வருக்கும் பயங்கர அதிர்ச்சி.
“கைலாஷா ஆனா ஏன் இவரு இப்படி பண்ணாரு.” லீலா அதிர்ச்சியில் வாய் திறந்தே சொன்னாள்.
“இவனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா அண்ணி.” நாகா கேட்க, “தெரியும், கொஞ்சம் பழக்கம் இருக்கு. ஆனா இவரு ஏன் என்னைக் கொல்ல முயற்சி பண்றாருன்னு எனக்குத் தெரியல. ஒருவேளை இதுக்கு முன்னாடி என்னைக் கொல்ல வந்ததும் இவராத் தான் இருக்குமோ.” குழப்பமாய் கேட்டாள் லீலா. அவள் அறிந்த கைலாஷ் இப்படியானவன் இல்லை என்பதால் வந்த குழப்பம் அது.
“அண்ணி, நீங்க தேவையில்லாம யோசிச்சுக் கஷ்டப் படாதீங்க. அது எல்லாத்தையும் போலீஸ்காரங்க கண்டுபிடிச்சுடுவாங்க. நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க. முதலில் ஒரு டம்ளர் தண்ணிய குடிங்க.” அண்ணிக்குத் தைரியம் சொன்னான் கொழுந்தன்.
“என்ன பழக்கம், எவ்வளவு தூரத்துக்குப் பழக்கம். கல்யாணத்துக்கு முன்னாடி பழக்கமா, இல்ல கல்யாணத்துக்கு அப்புறம் பழக்கமா. உங்களுக்கு மட்டும் தான் இவனைத் தெரியுமா இல்ல உங்க தங்கச்சிங்களுக்கும் இவனை தெரியுமா?” அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தான் தெய்வா.
“பார்த்துப் பேசுங்க, என்னை ஒரு போலீஸ்காரன் தொந்தரவு பண்ணப்ப ஒருத்தர் உதவி பண்ணாருன்னு சொன்னேன் தானே. அவர் இவர் தான். ரொம்ப நல்ல மாதிரி. ஆனா எதுக்காக இப்படி ஒரு காரியத்தை பண்ணாருன்னு ஒன்னும் தெரியல.” என்றாள் ருக்கு.
“என்னடா நடக்குது. நீங்க எல்லாரும் செல்வா ரூம் முன்னாடி நிக்கிறீங்க. ஆமா யாரு கத்தினது.” என்றவாறு வந்தார் வடிவேலு. அவரிடம் நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான் நாகா.
“எதுக்குடா லீலாவைக் கொல்ல நினைச்சான். ஏம்மா இவனை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? யாரு இவன்.” மருமகள்களைப் பார்த்துக் கேட்டார் வடிவேலு.
“இவன் உங்க ஆசை மருமக லீலாவோட முன்னாள் காதலனாம். காதல் தோத்துப் போன ஏக்கத்தில், கோபத்துல இவங்களைக் கொல்றதுக்காக வீடு ஏறி வந்திருக்கான்.
இது எதுவும் தெரியாம, நான் கூட செல்வாவுக்குத் தான் எதிரிங்க இருக்காங்க போலன்னு என் வேலைக்கு நடுவில் அவனைப் பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தேன்.
செல்வா கூட இருக்கிறது இவங்களுக்கு ஆபத்துன்னு நினைச்சா, இப்ப தானே தெரியுது இவங்க கூட இருக்கிறது தான் செல்வாவுக்கு ஆபத்துன்னு.” தன்னுடன் தனியாக வர முடியாது என்று மனைவி சொன்னதற்குக் காரணம் லீலா என்று நினைத்து கண்டபடிப் பேசினான் தெய்வா.
“தெய்வா, கொஞ்சம் வாயை மூடிட்டு இரு. இன்னொரு முறை அண்ணியைப் பத்தி தப்பா பேசின நல்லா இருக்காது.” என்றான் நாகா.
“நீ என்னடா, நானும் பார்த்துகிட்டே இருக்கேன் ரொம்ப பண்ணிக்கிட்டு இருக்க. எப்ப வந்துச்சு இந்த அண்ணி பாசம் எல்லாம். அவங்க உன்னைப் பார்த்துகிட்டதுக்கு அப்புறமாவா.
நீ இப்படி எல்லாம் மாறனும் என்பது தான் அவங்களோட எண்ணமே. அதுக்கு ஏத்த மாதிரியே நீயும் நல்லா தாளம் போடு.” நாகாவிடமும் எகிறினான் தெய்வா.
“லீலாக்கா இவ்வளவு பிரச்சினை நடக்குது ஆனா செல்வா மாமா ஏன் இன்னும் தூங்கிட்டு இருக்காரு.” வழக்கம் போல் சூழ்நிலையைச் சரியாகக் கணித்து, சரியான கேள்வியைக் கேட்டாள் ஊர்மி. அதே நேரத்தில் லேசாக அசைந்தான் கைலாஷ்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
8
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Nalla vellai Naga vanthu Leela va kapathitan
சூப்பர் நாகா .. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻நீ நிஜமா திருத்திட்ட நானும் நம்புறேன்.. பாவம் இப்போ தெய்வா ஆரம்பிச்சிருக்கான்