Loading

அத்தியாயம் 94

     நான்கு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்த போக்குவரத்து நெரிசல் சரியாகும் என்று காத்திருந்து சலித்துப் போன தெய்வா, திரும்பி தன்னுடைய மனைவியைப் பார்க்க, பின் இருக்கையில் படுத்து நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் ருக்கு.

     “ஒரு மரக்கிளை உடைஞ்சதுக்கு இவ்வளவு பிரச்சனையா? அதைத் தூக்கிப் போட்டுட்டு ட்ராபிக்கை க்ளியர் பண்றதுக்கு ட்ராபிக் போலிஸ் இத்தனை பேர் வந்தும் முடியலையா? நீங்க எல்லாம் என்ன தான் ட்ரெயினிங் எடுத்தீங்களோ தெரியல.” சலிப்புடன் சொன்ன தெய்வா, அதன் பின்னரே தனக்கும் ட்ராபிக் போலீஸின் வேலைகள் அனைத்தும் அத்துப்படி என்பதை நினைவுபடுத்தினான்.

     “தெய்வா என்னடா இப்படி முட்டாளா இருந்திருக்க. நீ ட்ராபிக்கில் மாட்டின கொஞ்ச நேரத்திலே அங்க போய் இருந்திருந்தா இந்நேரத்துக்கு ஒட்டுமொத்தமா எல்லாத்தையும் க்ளியர் பண்ணி இருப்பியே.” என்று தன்னுடைய தலையில் தட்டிக் கொண்டு தன் வாகனத்தை விட்டு இறங்கினான்.

     வாகன நெரிசல்களின் நடுவே ஒற்றையாளாய் பலரின் பலவிதமான புலம்பல்களைக் கேட்டுக்கொண்டே, சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று பார்த்தவனுக்கு அப்பொழுது தான் உண்மையான பிரச்சனை புரிந்தது.

     உண்மையில் மரக்கிளை விழுந்ததால் பிரச்சனை அதிகம் இல்லை. ஆனால் அந்த மரக்கிளை விழுந்த நேரத்தில், எதிர்பாராமல் வாகனங்கள் இரண்டு ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, அதன் உரிமையாளர்களால் தான் பிரச்சனை என்று புரிந்தது.

     தன்னுடைய கோபம் அனைத்தையும் ஒன்று திரட்டி, போக்குவரத்துக் காவலர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் ஆளுக்கு ஒரு அறையை பரிசாக கொடுத்தான் தெய்வா.

     “ஹலோ என்ன யாரு மேல கையை வைக்கிறீங்க. நான் ஒரு போன் பண்ணா பத்து நிமிஷத்துல போலீஸ் இங்கே வரும் தெரியுமா?” இருவரில் ஒருவன் கேட்க, “போன் தானே போடு. யாருக்கு வேண்ணாலும் போடு. போடுடா வெண்ணை, இந்த வெண்ணையக் காப்பாத்த எந்த விளக்கெண்ணெய் வருதுன்னு நானும் பார்க்கிறேன்.

     இன்னும் இரண்டு நிமிஷத்துல நீங்க வண்டியை கிளியர் பண்ணல அப்புறம் என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது.” என்றான் தெய்வா.

     “அதைச் சொல்ல நீங்க யாரு சார்?” என்க, “நீ எந்த போலீஸ்கோ போன் போடப் போறேன்னு சொன்னியே. அவனுக்குப் போன் பண்ணி வரச் சொல்லு. அவன் வந்து சொல்லுவான் நான் யாருன்னு.” கடுகடுப்பை மறையாமல் காட்டினான் தெய்வா.

     “முன்னாடி, பின்னாடி வண்டி நிக்கிது. நாங்க எப்படி வண்டியை எடுக்க முடியும்.” தெய்வாவின் தலைமுடி, உடற்கட்டு, காலணி அனைத்தையும் கவனித்து அவன் யார் என்பதைக் கணித்து இன்னொருவன் தன்மையாகப் பேசினான்.

     “இதெல்லாம் நல்லா வக்கனையா பேசு. ஆனா நடுரோட்டில் ட்ராபிக்கை ப்ளாக் பண்ணி, வீம்புக்குன்னு சண்டை போடுற இல்ல. உன் கொழுப்புக்கு சண்டை போடத் தோணுச்சுன்னா தனியா போய் போட வேண்டியது தானே. எதுக்காக எல்லாரையும் கஷ்டப்படுத்துறீங்க. நீங்க பண்ண தப்புக்குத் தண்டனையா நீங்க இரண்டு பேருமா சேர்ந்து, இந்த மரக்கிளையைத் தூக்கி ஓரமா வைங்க.” என்று கத்தினான் தெய்வா.

     “என்ன சார் விளையாடுறீங்களா? இவ்வளவு பெரிய மரக்கிளையை நாங்க இரண்டு பேரு மட்டும் எப்படி தூக்கி ஓரமா வைக்க முடியும்.” என்று இருவரும் ஒரே நேரத்தில் கேட்க,

     “இந்த ஒற்றுமை கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்திருந்தா, இந்தப் பிரச்சனை இவ்வளவு தூரம் வந்திருக்காது. சரி வாங்க, சீக்கிரம் என் கூட சேர்ந்து தூக்குங்க.” எனத் தானும் அவர்களோடு சேர்ந்து மரக்கிளையை அப்புறப்படுத்திய தெய்வா,

     “இந்த இடத்தில் வண்டியை இரண்டு பேரும் கொஞ்சம் ஓரமா விடுங்க. டூவீலர் கொஞ்சம் முன்னாடி போங்க. போர் வீலர் முடிஞ்சவரைக்கும் டூவீலருக்கு வழிவிடுங்க. சார் அவசரப் படாதீங்க, டூவீலர் எல்லாம் கிளம்பி போனா தான் இடம் காலியாகும்.” என்று நெரிசலைச் சமாளிக்கும் வேலையை ஆரம்பித்தான்.

     போக்குவரத்துக் காவலர்களின் உதவியுடன் சரியாக நாற்பது நிமிடங்களில் ட்ராபிக் முழுவதையும் கிளியர் செய்து முடித்தான் தெய்வா.

     “அப்பாடா இப்ப கூட டைம் இருக்கு. அர்த்த ராத்திரிக்குள்ள ஊர் போய் சேர்ந்திடலாம்.” என்ற நிம்மதியுடன் காரில் ஏறியவனுக்கு பெரிய அதிர்ச்சியாக ருக்கு காணாமல் போயிருந்தாள்.

     மருத்துவமனையில் தன் புகுந்தவீட்டைப் பற்றிய தகவல்கள் கேட்ட செல்வாவிற்குப் பதில் சொல்ல மனம் இல்லாமல் உறக்கம் வருவதாய் சொன்ன லேகா உறங்கி முழிக்கும் போதும் அவள் முன்னால் இருந்தான் செல்வா.

     “நீ இன்னும் வீட்டுக்குப் போகலலையா செல்வா?” லேகா சற்றே தடுமாற்றத்துடன் கேட்டாள்.

     “நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே. அப்புறம் எப்படி நான் போக முடியும்.” என்க, தலைகுனிந்தாள் அவள்.

     “உன்னோட புகுந்து வீட்டுக்காரங்களோட டீடைல்ஸ் சொல்ல விருப்பமில்லையா? இல்லை என்கிட்ட இதைப் பத்தி சொல்ல விருப்பம் இல்லையா?” சங்கடத்துடன் கேட்டான் செல்வா.

     “உன்னை நம்பாம நான் வேற யாரை நம்பப் போறேன் செல்வா. என்னோட சங்கடம் எல்லாம் உன்னைப் பத்தியது தான். உன்னோட ப்ரதர்ஸ்க்கும் உனக்கு செட் ஆகாதுன்னு சொல்லுவ இல்ல. இப்ப அவங்களை வைச்சு எனக்கு உதவி பண்றேன்னு சொல்றியே. அதனால் தான் தயக்கமா இருக்கு.” தடுமாறினாள் லேகா.

     லேசாகச் சிரித்த செல்வா, “அதெல்லாம் அப்போ, இப்போ அப்படிக் கிடையாது. எங்களுக்குள்ள ஓரளவுக்கு நல்ல பாண்டிங் இருக்கு. நான் சொன்னா எது வேணும் னாலும் என் தம்பிங்க செய்வாங்க. உன்னை இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாக்கிய அவங்க ஒவ்வொருத்தரையும் நான் சும்மா விடமாட்டேன்.

     கேஸ் போட என் தம்பி நாகா இருக்கான், அதை விசாரிக்க தெய்வா இருக்கான். அவங்க நேரடியா தலையிட முடியாத சூழ்நிலை வந்தால் கூட நல்ல திறமையான ஆள்களைக் கை நீட்டுவாங்க.

     அவங்க நேரடியாச் செய்தா என்ன அவங்க கை காட்டும் ஆள்கள் செய்தா தான் என்ன. நமக்கு நம்ம வேலை நடந்தா போதாதா?” பெருமை தவழும் முகத்தோடு சொன்னான் செல்வா.

     தன் எதிரே இருப்பவனின் கவனத்தை மாற்றவும், தனக்குள் இருக்கும் கேள்விக்குப் பதில் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடனும், “ஏன் செல்வா நீ இன்னமும் என் மேல அதே அளவு பாசமும், காதலும் வைச்சிருக்கியா?” ஏக்கமாய் கேட்டாள் லேகா.

     “என்ன லேகா நீ, நாலு நாள் பழகினவங்களைக் கூட நண்பனா பார்க்கிறவன் நான். நீ எனக்கு எத்தனை வருஷ பழக்கம். உனக்கு ஒன்னுன்னா நான் அப்படியே விட்டுடுவேனா என்ன.” என்றான்.

     “நீ இப்படிச் சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷம் செல்வா. அவருக்குத் தண்டனை எல்லாம் வாங்கி தர வேண்டாம். அவர் வேணாம் னு நானே ஒதுங்கி வந்துட்டேன். இதுக்கு அப்புறம் அவரைத் தண்டிச்சு என்ன பிரயோஜனம்.

     எனக்கு ஒரு உதவி பண்றியா, என்னை ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்க வைக்கிறியா? எனக்கு உடம்பு சரியானதுக்கு அப்புறம் ஏதாவது ஒரு ஹாஸ்பிடலில் எனக்கு ஒரு வேலை வாங்கிக் கொடு. எனக்கு அது போதும். அதுக்கப்புறம் நான் எப்பவுமே உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்.” என்றாள்.

     ‘நான் இருக்கும் போது எதுக்காக லேகா நீ ஹாஸ்டலில் போய் கஷ்டப்படணும். என் வீடு இருக்கு, என் கூட வந்து எத்தனை நாள் வேண்ணாலும் இரு. உன்னை நான் பார்த்துக்கிறேன்.’ என்று செல்வா சொல்வான் என்று எதிர்பார்த்து அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

     ஆனால் நடந்ததோ வேறு, “அதைப் பத்தி நீ ஒன்னும் கவலைப்படாத லேகா. நான் அதை எல்லாம் யோசிச்சு வைச்சுட்டேன். இந்த ஹாஸ்பிடலில் வேலை பார்க்கிற நர்ஸ் ஒருத்தங்க இங்க பக்கத்துல ஒரு லேடீஸ் ஹாஸ்டல்ல தான் தங்கி இருக்காங்க.

     அவங்க கூடவே நீயும் போய் தங்கிக்கலாம். அவங்க உனக்கு வேண்டியது எல்லாத்தையும் பார்த்து பண்ணித் தருவாங்க. நீ இங்க இருந்து கிளம்பும் நாளில் என்னோட வொய்ப் லீலா உன்னை வந்து பார்க்கிறதா சொல்லி இருக்காங்க.” என்க, லேகாவின் முகம் சுருங்கிப் போனது.

     “எதைப் பத்தியும் யோசிக்காத. உடம்பு நல்லா சரியானதுக்கப்புறம் இந்த ஹாஸ்பிடலில் உனக்கு ஒரு வேலை வாங்கித் தரேன். கொஞ்ச நாளைக்கு மட்டும் நீ ஏதாவது ஒரு டாக்டரை ஃபாலோ பண்ண வேண்டியதா இருக்கும். அதுக்கு அப்புறம் நீயாவே தனியா நோயாளிகளைப் பார்க்கலாம்.” செல்வா சொல்ல லேகாவின் மனம் மொத்தமாகச் சுருங்கிப் போனது.

     “நீ ரொம்ப மாறிட்டன்னு நினைக்கிறேன்.” லேகா செல்வாவைப் பார்த்துச் சொல்ல, “ஏன் அப்படிச் சொல்ற?” சாதாரணமாகக் கேட்டான் செல்வா.

     “இல்ல நீ என் வீட்டில் வந்து தங்கிக்கோன்னு சொல்லுவன்னு எதிர்பார்த்தேன்.” என்று லேகா தன்னுடைய மனதை மறைக்காமல் சொல்லி விட, ஏதோ மிகப்பெரிய ஜோக்கை கேட்டது போல் விழுந்து விழுந்து சிரித்தான் செல்வா.

     “எதுக்கு செல்வா சிரிக்கிற.” லேகாவிற்கு முகமே விழுந்துவிட்டது.

     “பின்ன இப்படி ஒரு விஷயத்தைக் கேட்டுச் சிரிக்காம என்ன பண்றது. உன்னை எப்படி நான் வீட்டுக்கு கூட்டிட்டுப் போக முடியும் சொல்லு. என்னோட சேர்த்து அந்த வீட்டில் மொத்தம் ஐந்தாறு ஆம்பிளைங்க இருக்கோம். எல்லாரும் முன்னாடி நீ எப்படி சகஜமாய் இருப்ப.” என்றான்.

     “என்ன செல்வா நீ உன் தம்பிங்க எல்லோரும் ஒரே வீட்டிலா இருக்கீங்க. நாம லவ் பண்ணிக்கிட்டு இருந்த காலத்தில் எல்லாம் படிப்பு முடிச்சதும் அப்பாவைக் கூட்டிகிட்டுத் தனியா போயிடனும் னு தானே சொல்லுவ. இப்போ எப்படி உன்னோட தம்பிங்க கூட இருக்க. அதுவும் அவங்களுக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்.” என்றாள்.

     “இங்க பிரச்சனை என் தம்பிகளுக்குக் கல்யாணம் ஆனது மட்டும் இல்ல. எனக்கும் கல்யாணம் ஆனது தான். என் பொண்டாட்டி லீலா இருக்காங்களே, அவங்களை மாதிரி ஒரு பொண்ணை இதுவரைக்கும் நான் பார்த்தது கூட கிடையாது.

     அவங்க எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணுவாங்க. என்னோட சூழ்நிலை ஒவ்வொன்னையும் நான் சொல்லாமலேயே புரிஞ்சுக்குவாங்க. அவங்க இதுவரைக்கும் என்கிட்ட பெருசா எதுவும் கேட்டுக்கிட்டதே இல்ல. ஒன்னே ஒன்னைத் தவிர. அது நானும், என் தம்பிகளும் ஒன்னா ஒரே வீட்டில் இருக்கணும் என்பது தான்.

     காரணம் என்னோட தம்பிங்க கல்யாணம் பண்ணிக்கிட்டது லீலாவோட தங்கச்சிங்களை. அதனால் எங்க பொண்டாட்டிங்களோட மனசு கோணாமல் இருக்க எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள் ஒன்னா இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கோம்.” என்றான். வீட்டில் என்ன நடந்தாலும் வெளியில் தன் வீட்டு நபர்களை விட்டுக்கொடுக்கக் கூடாது என்னும் நோக்கில் சொன்னான்.

     “என்ன செல்வா நீ. எனக்குத் தெரிஞ்சு நீ விவரம் தெரிந்த நாளிலிருந்து ஆசைப்பட்டது எல்லாம் தனிக்குடித்தனம் போறதுக்காகத் தான். ஆனா அந்த விருப்பத்தை நேத்து வந்த பொண்ணுக்காக மாத்திக்கிட்டியா என்ன?” என்க,

     “நேத்து வந்திருந்தாலும் லீலா என்னோட பொண்டாட்டி லேகா. என் பொண்டாட்டியோட ஒவ்வொரு விருப்பத்துக்கும் நான் மதிப்புக் கொடுத்தா தானே, நான் ஒரு நல்ல மனுஷன்.” உள்ளுக்குள் தனிக்குடித்தனம் செல்லவே இன்னும் விருப்பம் இருந்தாலும், அடுத்தவர் முன்னிலையில் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான் செல்வா.

     “உன்னை மிஸ் பண்ணதுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன் செல்வா. அதோட அந்த முகம் தெரியாத பொண்ணு லீலா மேல நான் ரொம்ப பொறாமைப்படுறேன். நான் வாழ வேண்டிய என்னோட வாழ்க்கையை அவ சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கா.” இத்தனை நாள் மறைத்து மறைத்துப் பேசியது போதும் என நினைத்த லேகா களத்தில் இறங்கினாள். ஆனால் அவளுடைய இந்த வார்த்தைகள் எதிரே இருந்தவனுக்குக் கோபத்தை வரவழைத்தது.

     “இங்க பார் லேகா, இன்னொரு தடவை பழசைப் பத்தி பேசாத. லீலா ஒன்னும் உன்னோட வாழ்க்கையைத் தட்டிப் பறிக்கல. நீ என்னை விட்டுட்டுப் போய், நான் கஷ்டத்தில் இருந்தப்ப லீலா தான் எனக்குத் துணையாய் இருந்தாங்க.

     உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாம ஒரு காலத்தில் காதலிச்சது, இப்போ நான் உனக்கு உதவி பண்றது எல்லாம் லீலாவுக்குத் தெரியும். ஆனாலும் அவ என்னைத் தடுக்கவும் இல்லை, திட்டவும் இல்லை.” என்க, லேகாவிற்கு இது பலத்த அடி. இத்தனை புரிந்துணர்வான ஒரு பெண்ணா என்று மலைத்தாள்.

     “அந்தப் பொண்ணு பாவம். என்ன பிரச்சனையோ என்னவோ அவளுக்கு உடம்பு முழுசா சரி ஆகுற வரைக்கும் பக்கத்திலிருந்து பாத்துக்கோங்கன்னு என்கிட்ட சொன்னா.

     சத்தியமாச் சொல்றேன் அவளோட இடத்தில் இந்த உலகத்தில் வேறு எந்த பொண்ணு இருந்தாலும், இந்த வார்த்தையை சொல்லி இருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.” என்ற செல்வா, பேச்சு வாக்கில் தான் லீலாவை ஒருமையில் குறிப்பிட்டதை கவனிக்க மறந்தான்.

     “என்ன செல்வா பொண்டாட்டி மேல ரொம்ப பாசமா. என்னை லவ் பண்ணியதை விட அவளை அதிகமா லவ் பண்றியா என்ன?” எதற்கோ தூண்டில் போட்டாள்.

     “லீலாவை லவ் பண்றேனா இல்லையான்னு எனக்குத் தெரியாது. ஆனால் நான் இப்போ உன்னை லவ் பண்ணல லேகா. எனக்கு இப்போ உன் மேல இருக்கிறது ஒரு மரியாதை கலந்த நட்பு மட்டும் தான்.” அழுத்தமாய் உரைத்தான்.

     “அது எப்படி செல்வா? இன்னொருத்தங்களோட கல்யாணம் ஆகிட்டா காதல் அழிஞ்சிடுமா. எனக்குக் கூட தான் இன்னொருத்தர் கூட கல்யாணம் ஆச்சு. ஆனா இப்ப வரைக்கும் நான் நமக்குள்ள இருந்த காதலை மறக்கவும் இல்லை, வெறுக்கவும் இல்லை ஆனா நீ.” என்க, கோபம் எல்லையைத் தொட்டது செல்வாவிற்கு.

     “முட்டாள் மாதிரி பேசாத லேகா. நீ சொல்றதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா. நீ நமக்கு நடுவில் இருந்த காதலுக்கும் உண்மையா இல்ல, உன்னோட கல்யாணத்துக்கும் உண்மையா இல்ல.

     உன் புருஷன் கூட வாழும் போது மனசுல என்னை நினைச்சுகிட்டு இருந்திருந்தா அதற்குப் பெயர் என்ன தெரியுமா? தயவு செஞ்சு இன்னொரு முறை என்கிட்ட இந்த மாதிரி பேசாத. எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா இருக்கு.” என்று விட்டு வெளியே சென்று விட்டான் செல்வா.

     “என் புருஷனுக்கு அவ முன்னாள் காதலி மேல வந்த பாசம், நான் அவனுக்காக அத்தனை செய்த பிறகும், என்னை அவ்வளவு சுலபமா தூக்கிப் போட்டுட்டு போற அளவு அவன் காதல் மேல் இருந்த பிடித்தம் உனக்கு என் செல்வா என் மேல் வரல.” என்று சில நொடிகள் மௌனமாய் இருந்தவள்,

     வடிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “என்னை மன்னிச்சிடு செல்வா. எனக்கு வேற வழி இல்ல. எனக்கு இப்ப உன்ன விட்டா வேற ஆளும் இல்ல. ஏதாவது பண்ணி உன் வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சே தீர்வேன்.” தீர்மானமாய் நினைத்துக்கொண்டாள்.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்