Loading

அத்தியாயம் 84

     “பேச வந்த விஷயத்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. அதுக்குள்ள ஏன்டா வம்புக்கு வர.” சலிப்புற்றான் தெய்வா.

     “ஏன் வம்புக்கு வரேனா. நடந்தது அவ்வளவு பெரிய விஷயம் டி மாப்பிள்ளை.” கடுப்பாகச் சொன்னான் நாகா. அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் எக்கச்சக்கம் தெரிய, அவனைக் கூர்ந்து நோக்கினான் தர்மன்.

     “உடம்பு சரியால்லாமப் போனதில் மூளை குழம்பிப் போயிடுச்சா. எதுக்கு இப்படிக் கண்டதையும் பேசிக்கிட்டு இருக்க.” நல்ல விஷயத்தைச் சொல்ல விடாமல் கண்டதையும் பேசிக்கொண்டிருக்கின்றானே என்னும் கடுப்பில் பேசினான் தெய்வா.

     “தெய்வா நீ கொஞ்சம் அமைதியா இரு. அவன் அப்படி என்ன தான் சொல்ல வரான்னு பார்ப்போமே. நாகா சொல்லுடா லீலாவால என்ன பிரச்சனை உனக்கு.” செல்வா அமைதியாகக் கேட்டான்.

     “அது வந்து,” என ஒரு சில நொடிகள் தயங்கியவன், “நான் சொல்லுவேன், ஆனா என்னடா இவனே இப்படிச் சொல்றான்னு என்னைப் பார்த்து நீங்க மூணு பேரும் சிரிக்கக் கூடாது.” முன்னெச்சரிக்கையாக சொன்னான்.

     “அது நீ சொல்ற விஷயத்தைப் பொறுத்து இருக்கு.” என பிடிகொடுக்காமல் சொன்னான் தெய்வா.

     “தெய்வா நீ தான் கொஞ்சம் அமைதியா இரேன். நாகா, நாங்க யாரும் உன்னைப் பார்த்து சிரிக்க மாட்டோம். நீ விஷயத்தைச் சொல்லு.” ஊக்கமளித்தான் செல்வா.

     “உனக்கே தெரியும், உன் பொண்டாட்டியை நான் கொஞ்சம் அதிகமாவே பேசி இருக்கேன். அது எதையும் மனசுல வைச்சுக்காம, அன்பா அனுசரணையா நடந்துக்கிட்டாங்க. அவங்க தங்கச்சிங்களில் யாருக்கும் உடம்பு சரியில்லாமப் போனா எப்படிப் பார்த்துப்பாங்களோ அப்படி இருந்தது அவங்க நடவடிக்கை.

     அக்கறை, அன்பு, அறிவுரை, கட்டளைன்னு ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கோணம் காட்டினாங்க. ஆனா அதிசயித்தில் அதிசயமா எனக்கு அவங்ககிட்ட அசௌகர்யம் ஏற்படவே இல்லை தெரியுமா?

     எப்படி அவங்களால எனக்குள்ள இத்தனை மாற்றத்தைக் கொண்டு வர முடிஞ்சதுன்னு யோசிச்சு யோசிச்சு எனக்கு தலைவலியே வந்துடுச்சு.” என்க, செல்வாவிற்கு மனைவியை நினைத்து சற்றே பெருமிதம் தம்பி சொன்னதில்.

     “நடந்த நிகழ்வுகளால் என்னையே அறியாம எனக்கு அவங்க மேல மரியாதை வந்திடுச்சு. அந்த மரியாதையால் தானோ என்னவோ எனக்கு ஒரு நிமிஷம் நாம எல்லாரும் நம்ம வீட்டிலே ஒன்னா இருந்துட்டா என்னன்னு தோணிடுச்சு.” என்றான்.

     அவன் சொன்னதைக் கேட்ட மற்ற மூவரின் முகத்திலும் ஒரு நிமிடம் ஈ ஆடவில்லை. ஆனால் அடுத்த கணமே மூவரும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

     “பார்த்தீங்களா பார்த்தீங்களா நான் தான் முதல்லே சொன்னேனே. நான் சொன்ன பிறகு என்னைப் பார்த்து யாரும் சிரிக்க கூடாதுன்னு. அப்ப எல்லாம் தலையைத் தலையைத் ஆட்டிட்டு இப்ப இப்படி சிரிக்கிறீங்க.” குழந்தை போல கோபித்தான் நாகா.

     “நாங்க வேணும் னு சிரிக்கல டா. முடிஞ்ச அளவுக்கு சிரிப்பைக் கண்ட்ரோல் பண்ணத் தான் பார்த்தோம். ஆனா சத்தியமா முடியல.” சொல்லிக்கொண்டே சிரித்தான் செல்வா.

     “எப்படி எப்படி அவங்க இவரைப் பார்த்துக்கிட்டதால் இவருக்கு அவங்க மேல பாசம் வந்துடுச்சாமாம். அதனால எல்லாரும் ஒன்னா இருந்தா என்ன தப்புன்னு யோசிச்சாராம். அப்ப அவங்களுக்குப் பதிலா யாரோ ஒரு நர்ஸ் உன்னைப் பார்த்துக்கிட்டு இருந்தா, உடனே பொட்டி படுக்கையைத் தூக்கிக்கிட்டு அவங்க வீட்டுக்குப் போய் இருப்பியா? இல்லை அவங்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருப்பியா. இது நல்ல கதையால்ல இருக்கு.” சிரித்தான் தெய்வா.

     “சரிதான்டா, எனக்குள்ள என்ன நடக்குதுன்னு புரியாம உங்ககிட்ட சொன்னேன் இல்ல எனக்குத் தேவை தான். நல்லா சிரிங்க, இன்னைக்கு நீங்க மூணு பேரும் என்னைப் பார்த்து சிரிக்கிறீங்க.

     இருக்கட்டும், ஒரு நாள் இல்லை ஒரு நாள் நீங்க என்னோட நிலைமையில் இருப்பீங்க. அப்ப நான் உங்களைப் பார்த்து சிரியோ சிரின்னு சிரிக்கத் தான் போறேன்.” நாகாவின் தீவிரமான பேச்சில் மற்ற மூவரின் சிரிப்பும் தன்னால் நின்றது.

     “அந்த நாலு பேரும் நாம நினைக்கிற மாதிரி சாதாரணமானவங்க இல்லை. அப்பா அவங்களைப் பத்தி சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்.

     நம்ம எல்லாரும் நாம, நம்ம வாழ்க்கை, நம்ம சந்தோஷம் னு நம்மளைப் பத்தி மட்டுமே யோசனை பண்ணிக்கிட்டு இருக்கோம். அது தான் சரின்னு நம்மை நாமளே சரிக்கட்டிக்கிட்டும் இருக்கோம்.

     ஆனா அவங்க நாலு பேரைப் பொறுத்தவரை நம்ம வீட்டில் உள்ள அத்தனை பேரும் ஒன்னு தான். ஒரு விஷயத்தை துவங்கும் முன்னாடி அவங்க நம்ம ஒவ்வொருத்தரைப் பத்தியும் யோசனை பண்ணிட்டு தான் முடிவு பண்றாங்க.

     அவங்க நாலு பேரும் ஒருத்தருக்கொருத்தர் எவ்வளவு அன்பாவும், பாசமாவும் இருக்காங்களோ அதே அன்பையும், பாசத்தையும் நம்ம எல்லோர் மீதும் காட்டத் தயாரா இருக்காங்க. நாம தான் அதைப் புரிஞ்சுக்கல.” என நாகா தீவிரமாகச் சொல்லிக்கொண்டே போக, இப்போது தான் அவன் சொன்னதன் தீவிரம் உறைத்தது மற்றவர்களுக்கு.

     “என் மனசைத் தொட்டுச் சொல்றேன் டா. லீலா அண்ணிகூட இருந்தப்ப, அவங்க கூட மனசுவிட்டுப் பேசினப்ப, ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்பட்டுச்சு. இதுவரைக்கும் அப்படி ஒரு சந்தோஷத்தை அனுபவிச்சதே இல்ல. அதை இப்ப நினைச்சாக் கூட உடம்பெல்லாம் புல்லரிக்குது.” என்றவனை விசித்திரப் பார்வை பார்த்தான் செல்வா.

     “உங்க மத்த தம்பிகளை விட நாகராஜை நினைச்சு தான் நான் அதிகம் பயந்தேன். ஊர்மி வாய்துடுக்கான பொண்ணு. அவளோட வாழ்க்கை என்னவாகுமோன்னு பல நாள் உறங்காம இருந்திருக்கேன். ஆனா நான் நினைச்ச அளவு உங்க தம்பி இல்லங்க. அவருக்குள் இருக்கிற சில முரட்டுப் பிடிவாதங்களும், அசட்டு அறியாமையும் விலகிட்டா அவரும் சுத்தமான நல்லவர் தான். அதை என்னால் உணர முடிந்தது. என் தங்கச்சி நல்லா இருப்பாங்க.” சந்தோஷமாய், நம்பிக்கையாய் சொன்ன லீலாவின் நினைவு வந்து போனது செல்வாவிற்கு.

     “என்னோட வாழ்க்கையில் நான் இதுவரைக்கும் அனுபவிச்சதில் தி பெஸ்ட் ப்லீங் அவங்களோட நான் செலவளிச்ச நேரங்கள். அப்புறம் இன்னொரு விஷயம் சொல்றேன். இதை நான் சூடம் அணைச்சு சத்தியம் பண்ணாலும் நீங்க நம்ப மாட்டீங்க தான், இருந்தாலும் சொல்றேன்.”

     “இதுவரைக்கும் என்னோட சந்தோஷம் அடுத்தவங்களுக்கும் கிடைக்கணும் னு நான் நினைச்சதில்லை. ஆனா நான் அனுபவிச்ச இந்த உணர்வை, நீங்க மூணு பேரும் அனுபவிக்கணும், நான் அடைஞ்ச அதே சந்தோஷத்தை நீங்களும் அடையணும் னு என் மனசுக்குள்ள தோணிக்கிட்டே இருக்கு. எதுக்குன்னு கேட்டா சத்தியமா எனக்குத் தெரியல. ஊர்மிகிட்ட கேட்டா இதுக்குப் பேர் தான் செயின் ஆப் லவ்வுன்னு சொல்றா.” நாகா நிறுத்த, இவனுக்கு இப்படியெல்லாம் பேசத் தெரியுமா என அதிர்ச்சியாய் பார்த்தார்கள் அவன் சகோதரர்கள்.

     “அன்பை நாம எந்த அளவுக்கு ரிசீவ் பண்றோமோ, அதே அளவுக்கு நம்மையும் அறியாம நாம மத்தவங்களுக்குக் கொடுப்போமாம். அதுக்குப் பெயர் தான் அன்பு சங்கிலியாம்.” முகத்தை வெகு இயல்பாக வைத்துக்கொண்டு தான் சொன்னான் என்றாலும் தங்கள் முன் இருப்பவன் பழைய நாகா இல்லை என்பது மற்ற மூவருக்குமே புரியத்தான் செய்தது.

     “நாகா என்னடா ஆச்சு உனக்கு. நீ இப்படியெல்லாம் பேச மாட்டியே. வாயைத் திறந்தா விஷமாத் தானே கொட்டும். இப்ப எப்படி இவ்வளவு இனிமையாப் பேசுற. என்னடா செல்வா இதெல்லாம். உன் பொண்டாட்டியை இவனைப் பார்த்துக்க அனுப்பி வைச்சு, இவனையும் அவங்க கட்சியில் சேர்த்து விட்டுட்டியா.

     உங்களையெல்லாம் நம்பி இவ்வளவு பெரிய விஷயத்தைக் கையில் எடுத்ததுக்கு, எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. இப்ப கொஞ்சமா குழம்பி இருக்கிற இவன், நாளைக்கே முழுசாக் குழம்பி ஒருவேளை எல்லாரும் தனித்தனியா போகக்கூடாதுன்னு கொடி பிடிச்சு போராட்டம் பண்ணாலும் பண்ணுவான்.” தெய்வா சொல்ல, செல்வா தர்மா இருவருக்கும் சற்றே பயம் வந்தது.

     “இங்க பாரு நாகா, நீ இப்போ ஒரு புதுவிதமான உணர்வை அனுபவிக்கிற. இப்ப உனக்கு இது நல்லா தான் தெரியும். தம் அடிக்கிறது, தண்ணி அடிக்கிறது கூட ஆரம்பத்தில் ரொம்ப நல்லா இருக்கும். ஆனா போகப் போகத் தான் அதோட ஆபத்துக்கள் தெரியும்.

     பழகப் பழகப் பாலும் புளிக்கும் னு தமிழில் ஒரு பழமொழி இருக்கு, கேள்விப்பட்டு இருப்ப. அது பாலுக்கு மட்டும் இல்ல உறவுகளுக்கும் பொருந்தும். ஒரே வீட்டில் ஒன்னா இருந்து தினம் தினம் பார்த்துப் பேசி, கொஞ்ச நாளில் உறவுகள் புளிச்சுப் போயிடும்.

     அதுவே நாம நினைக்கிற மாதிரி தனிக்குடித்தனம் இருந்து, ஏதோ ஒரு விசேஷத்துக்கு ஒன்னு கூடும் போது, குடும்ப உறவுகள் இனிக்கும், தித்திக்கும். அமைதியான இடத்தில் உட்கார்ந்து பொறுமையா யோசிச்சுப் பாரு, நான் சொல்றது தான் சரின்னு புரிஞ்சுக்குவ.” சற்றே தெளியத் துவங்கி இருந்த நாகாவின் மனதைக் குழப்பினான் தெய்வா.

     “ஆமா நாகா, நாம நாலு பேரும் நாலு குடும்பத்தைச் சேர்ந்த பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணி இருந்தாக் கூட, ஒரே வீட்டில் இருக்கிறதைப் பத்தி யோசனையாவது பண்ணி இருக்கலாம்.

     ஆனா நாம கல்யாணம் பண்ணிக்கிட்டது, ஒரே கருவில் பிறந்த அக்கா தங்கச்சிங்களை. அவங்களை நாலு பேருன்னு சொல்றதா, இல்ல ஒருத்தர் நாலு உருவங்களா இருக்காங்கன்னு சொல்றதான்னு எனக்கு சத்தியமா தெரியல.

     ஒருத்தருக்குள்ள இன்னொருத்தர் அவ்வளவு ஊறிப் போய் இருக்காங்க. அவங்க நாலு பேரும் ஒன்னா இருக்கிற வரைக்கும் நாம எப்பவுமே அவங்களுக்கு இரண்டாம்பட்சம் தான்.” உணர்ந்து சொன்னான் தர்மா.

     “வாரே வா. என்ன வாத்தியாரே வார்த்தைகள் எல்லாம் ரொம்ப பலமா வருது. போன இடத்திலும் அக்கா, தங்கச்சிங்க புராணம் பாடி கடுப்பேத்தினாங்களா உன்னோட பொண்டாட்டி.” சிரித்தபடிக் கேட்டான் தெய்வா.

     “நான் அடிச்சு சொல்றேன். உன் பொண்டாட்டியும் உன்கிட்ட அக்கா தங்கச்சிங்களைப் பத்தி தான் அதிகமா பேசி இருப்பாங்க கரெக்ட் தானே.” என்றுவிட்டு தானும் சிரித்தான் தர்மா.

     “வொய் பிளட் சேம் பிளட்.” தோள்களைக் குலுக்கினான் தெய்வா.

     “சரி இந்தப் பேச்சை விடுங்க. நம்ம இப்ப எதுக்காக இங்க வந்து இருக்கோம் அதைச் சொல்லு.” தெய்வாவிடம் கேட்டான் செல்வா.

     “ஹனிமூன் ப்ளான் நினைச்ச அளவுக்கு சக்சஸ் ஆகல. ஆனா அவங்களைப் பிரிக்கிறதுக்கு முன்னாடி, நாம ஓரளவுக்கு அவங்க கிட்ட நெருங்கலாம் னு நினைச்சதில் ஜெயிச்ச மாதிரி தான் தெரியுது.

      அதனால இனி அவங்களைப் பிரிக்க வேண்டிய வேலையைப் பார்க்க ஆரம்பிப்போம். அதுக்கு என்கிட்ட சில ப்ளான் இருக்கு.” தெய்வா சொல்ல, செல்வாவும் தர்மாவும் ஆர்வமானார்கள் என்றால், “எனக்கு உன் திட்டத்துக்கு ஒத்துக்க ஒரு கண்டிஷன் இருக்கு.” திடீரெனக் காலை வாறினான் நாகா.

     “என்ன கண்டிஷன்” மூவரும் ஒன்றாகக் கேட்க, “அவங்க நாலு பேருக்குள்ளேயும் விரோதத்தை வர வைச்சு, அது மூலமா அவங்களைப் பிரிக்கக்கூடாது. அவங்க நம்மளோட தனிக்குடித்தனம் வந்தாலும், அவங்க அக்கா தங்கச்சிங்களுக்குள்ள இருக்கிற பாசம் குறையாமல் தான் இருக்கணும்.” என்றான் நாகா.

     “இதை நானும் யோசிச்சேன் தான். ஆனா இப்படி நடக்காதுன்னு இப்போதைக்கு உத்தரவாதம் தர முடியாது. ப்ளான் சக்ஸஸ் ஆகுற லெவலைப் பொறுத்து தான் இதில் கை வைப்பதும் வைக்காமல் இருப்பதும்.” தன் எண்ணம் நிறைவேற எதையும் செய்வேன் என்று தெய்வா சொல்லாமல் சொல்ல, அவன் பேச்சில் உடன்பாடு இல்லை என்பது மற்றவர்கள் முகம் போகும் போக்கிலேயே தெரிந்தது.

     “உத்தரவாதம் தரமுடியாதுன்னா என்னால உன்னோட திட்டத்துக்கு உடன்பட முடியாது.” உறுதியாகவே சொன்னான் நாகா.

     “உனக்கு என்ன பைத்தியமாடா. நீ சொல்றது எப்படிச் சாத்தியமாகும்.” தெய்வா சண்டைக்குக் கிளம்பினான்.

     “சாத்தியமாகணும் டா. நமக்காக அவங்க அக்கா தங்கச்சிங்களை வெறுக்க அவங்களால முடிஞ்சா, நாளைக்கே நம்ம பசங்களுக்காகவோ இல்லை வேற யாருக்காகவோ நம்மளையும் வெறுத்து ஒதுக்குறதுக்குக் கூட வாய்ப்பு இருக்கு தானே.” உருப்படியான ஒரு கேள்வியை முன்வைத்தான் நாகா.

     “நீ தேவை இல்லாமப் பேசி மத்தவங்களையும் குழப்பப் பார்க்கிற நாகா.” தெய்வா கடுகடுக்க, “யாரு தேவையில்லாமப் பேசுறது நானா, நீயா. கொஞ்சம் நல்லா யோசிச்சுப் பாரு. நான் சொல்றதில் இருக்கிற உண்மை உனக்குப் புரியும்.” விடாமல் பேசினான் நாகா.

     அடுத்த சில நிமிடங்களுக்கு தெய்வா ஒன்று சொல்ல நாகா அதை மறுக்க என வார்த்தைகள் முற்றி கைகலப்பாக மாறத் துவங்க செல்வாவும், தர்மாவும் இருவரையும் பிரித்து விட்டனர்.

     இங்கே மருத்துவமனையில், “லேகா, லீலாவைக் கொல்ல பக்காவான திட்டம் ரெடி. இன்னைக்கு இராத்திரி தான் அவளோட கடைசி நாள். இனி செல்வா உனக்குத்தான்.” அதீத ஆனந்தத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான் பாஸ்கர்.

     “என்ன ப்ளான் எனக்கும் சொல்லேன்.” ஆர்வமாகக் கேட்டாள் லேகா.

     “ப்ளான் என்னன்னு எல்லாம் எனக்குத் தெரியாது. பண்ணப் போறவங்களுக்குத் தான் தெரியும்.” சொல்லிவிட்டு குரூரமாகச் சிரித்தான் பாஸ்கர்.

     “ப்ளான் பண்ணப் போறவங்களா, அப்ப நீ பண்ணலையா யாருடா பண்ணப் போறா.” என்கிற லேகாவின் கேள்விக்கு, “கைலாஷ்” என்று பதில் சொன்னான் பாஸ்கர்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. இதுல கைலாஷ் எங்க வந்தான் .. லீலாவை காப்பாத்துறதை விட்டுட்டு தேவையில்லாம பிளான் போடுறாங்க .. அடுத்த ஆப்பு தெய்வாக்கு தான் .. நாகா நீ திருந்திட்டியா அய்யோ சூப்பர் பா .. நீ இப்படிலாம் பேசுவியா ..

  2. கைலாஷ் என்ன செய்ய போறானோ… லீலா எப்படி தப்பிக்க போறாங்க?