
அத்தியாயம் 83
“அக்கா இந்த போட்டோவைப் பாருங்களேன். இதில் நான் ரொம்ப அழகா இருக்கேன் இல்ல. இது நாங்க சுத்திப் பார்க்க போனப்ப எடுத்தது. இப்படி போஸ் கொடுக்கச் சொல்லி அவர் தான் சொன்னாரு. இது போட்டிங் போனப்ப எடுத்தது. இது ஹோட்டல்ல எடுத்ததுன்னு நினைக்கிறேன்.
அக்கா அங்க இருந்த ஒவ்வொரு நாளும் நாங்க இரண்டு பேரும் ரொம்ப நல்லா என்ஜாய் பண்ணோம். முக்கியமா நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தேன். நீங்க யாரும் அங்க இல்ல என்பது தான் ஒரே ஒரு குறை.” தேனிலவு சுற்றுலாவில் தான் அனுபவித்த ஒவ்வொன்றையும், கண்களில் அபிநயம் பிடித்தபடி அனுபவித்து சொல்லிக் கொண்டிருந்த தேவகியைப் பார்த்து சுற்றி இருந்த அவள் அக்காக்கள் மூவரும் புன்னகைத்தனர்.
“என்ன இழவு, அங்க பேசுற பாஷை தான் தெரியல.” சின்னக் குரலில் அவள் சொல்லவும் சத்தமாகச் சிரித்தனர் அனைவரும்.
“நம்ம வீட்டுச் சூழ்நிலை சரியானதுக்கு அப்புறம், நம்ம எல்லாரும் சேர்ந்து ஒரு தடவை இந்த மாதிரி எங்கேயாவது போயிட்டு வரனும் அக்கா. என்ன சொல்றீங்க சரிதானே.” ஆசையாய் அவள் கேட்கவும், சரியென்று ஒப்புக்கொண்டனர் மற்றவர்கள்.
“லீலா அக்கா நாம நாலு பேருக்கும் ஒரே மாதிரி சேலை எடுக்க ரொம்ப நாளா ஆசைப்பட்டீங்க தானே. நாலு பேரில் ஒருத்தருக்கு டிசைன் பிடிச்சா இன்னொருத்தருக்குப் பிடிக்காது, ஒருத்தருக்கு கலர் பிடிச்சா இன்னொருத்தங்களுக்குப் பிடிக்காது. எல்லோருக்கும் பிடிச்சா விலை கட்டுப்படியாகாதுன்னு இதுவரைக்கும் வாங்காமலே இருந்துட்டோம்.
ஆனா இப்ப நான் என்னோட சேர்த்து நம்ம நாலு பேருக்கும் பிடிக்கும் என்கிற நம்பிக்கையில் நாலு பேருக்கும் புடவை எடுத்துட்டு வந்திருக்கேன் பாருங்க.” என்று கடைபரப்பினாள் தேவகி.
“பாரு டா, நம்ம வீட்டு கடைக்குட்டி ரொம்பத் தான் வளர்ந்திடுச்சு.” சிரித்த லீலா புடவைகளைப் பார்த்துவிட்டு, “தேவகி சும்மா சொல்லக்கூடாது. கலர் டிசைன் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு. நம்ம நாலு பேருக்கும் நல்லா பொருத்தமாயிருக்கும்.” என்றாள்.
“இப்ப எதுக்கு தேவகிம்மா தேவையில்லாம செலவு பண்ற. உன் புருஷன் கோபப்பட்டு ஏதாவது சொன்னாரா.” அக்கறையாய் கேட்டாள் ருக்கு. அவளுக்குத் தன் கணவன் எதுவாக இருந்தாலும் தனக்கு மட்டும் எடுத்துக்கொள்ளச் சொன்னது நினைவு வந்தது.
“அப்படி எல்லாம் அவர் கோபப்படமாட்டார் அக்கா. வெளியூருக்கு வந்ததுக்கு ஞாபகமா ஏதாவது வாங்கிக்கோன்னு அவர் தான் சொன்னதே. நான் நம்ம நாலு பேருக்கும் சேர்த்து வாங்கிக்கவான்னு கேட்டப்ப, கொஞ்சம் கூட யோசிக்காமா தாராளமா வாங்கிக்கோன்னு சொல்லிட்டாரு. நானும் சந்தோஷமா இந்த சேலைங்களை எடுத்துட்டு வந்துட்டேன். இந்த சேலை கொஞ்சம் விலை அதிகம் தான், ஆனாலும் அவரு ஒன்னுமே சொல்லல.” பெருமையாய் சொன்னாள் தேவகி.
அதன் பிறகே விலையைப் பார்த்த லீலா அதிர்ந்து போனாள். “என்ன தேவகி இது. ஒரு புடவை இருபத்தைந்தாயிரம் போட்டு இருக்கு. அப்ப நாலு புடவை சேர்ந்து ஒரு லட்ச ரூபாய் வந்திருக்குமே.” தவிப்பாய் கேட்டாள்.
அவர்கள் மட்டுமாக இருந்த போது, இத்தனை பணத்தை மொத்தமாகப் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. இப்போது ஒருநாளில் சற்று நேரம் உடுத்தும் புடவைக்கான விலை இது என்பதில் அவளுக்குப் பயம் வந்தது.
“ஆமாக்கா நானும் அதைத்தான் நினைச்சேன். ஆனா அவரு உனக்குப் பிடிச்சிருக்கு தானே, அது போதும் னு சொல்லி யோசிக்காமல் கார்டை எடுத்துக் கொடுத்துட்டாரு.” கணவனின் நினைப்பில் புன்னகையோடு சொன்னாள்.
“இந்த வீட்டில் உள்ள எல்லோருக்கும் எது நல்லாத் தெரிஞ்சிருக்கோ இல்லையோ, பணத்தை எப்படி செலவு பண்ணலாம் னு நல்லாத் தெரிஞ்சிருக்கு.” கல்யாணத்திற்கு முன்பு கணவன் செய்தது நினைவு வர கடுகடுத்தாள் ஊர்மி.
“அக்கா இப்படி எல்லாம் பேசாதீங்க. அவர் ஒன்னும் தேவையில்லாம செலவு பண்ற ஆள் இல்ல. என்னோட சந்தோஷத்துக்காகத் தான் பண்ணார். அதுவும் இது ஒன்னும் ஆடம்பரம் இல்ல. அத்தியாவசியத்திற்கு கொஞ்சம் மேல.” என்றவளை புன்னகையோடு பார்த்தாள் லீலா.
கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் போகப் போக சில விஷயங்களை விருப்பமில்லாமல் போனால் கூட செய்யத்தானே வேண்டி இருக்கிறது என்பது புரிந்தது அவளுக்கு.
“தர்மான்னு பெயர் வைச்சாலும் வைச்சாங்க. தர்மம்பிரபுக்கு வள்ளல் குணம் அதிகம் தான்.” ஊர்மி சொல்ல, அக்கா என்று குரல் கொடுத்தாள் தேவகி.
“ஊர்மி ஏன் இப்படி பண்ற, பாரு அவ கஷ்டப்படுறா.” தங்கையைக் கண்டித்தாள் லீலா.
“தேவகி கஷ்டப்படுறியா என்ன? நான் உன் புருஷனைப் பத்தி பேசக்கூடாதா. அவர் உனக்குப் புருஷன்னா, எனக்கு கொழுந்தனாரு. அவரைப் பத்தி பேசறதுக்கு எனக்கு உரிமை இல்லையா.” வம்பிழுத்தாள் ஊர்மி.
“நான் எப்போ அப்படிச் சொன்னேன். அவரைப் பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு. உங்களோட கொழுந்தனார் உங்களோட உரிமை. இனி அவரைப் பத்தி நான் ஏதாவது பேசுறதா இருந்தாக் கூட உங்ககிட்ட அனுமதி வாங்கிட்டு அப்புறம் பேசுறேன் சரிதானே.” என்று தானும் தமக்கையின் விளையாட்டில் பங்குகொண்டாள் தேவகி.
“அது” என்று கெத்து காட்டினாள் ஊர்மி.
“சரி ரொம்ப நேரமா என்கிட்டையே பேசிக்கிட்டு இருக்கீங்களே. ருக்குக்காவை கொஞ்சம் கவனிங்க. நம்ம அக்காவை நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கூட்டிக்கிட்டு, இல்ல கடத்திக்கிட்டு போனாரே தெய்வா மாமா. போன இடத்தில என்ன நடந்துச்சு, ஏது நடந்துச்சு, மாமா என்ன சர்ப்ரைஸ் செஞ்சார். அதுக்கு இவங்க எப்படி ரியாக்ட் பண்ணாங்க. மேக்கப் கிட் வாங்கினாங்களா எல்லாத்தையும் கேளுங்கக்கா.” கோர்த்து விட்டாள் தேவகி.
“அதானே, ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி தேவகி. என்ன ருக்குக்கா போலீஸ் மாமா கைதிகளை ப்ளான் போட்டு புடிக்கிற மாதிரி, உன்னையும் தொக்கா தூக்கிட்டு ஹனிமூன் போயிட்டாரு. போன வேலைகளை சிறப்பா செஞ்சு முடிச்சாரா, இல்ல வழக்கம் போல எங்களை நினைச்சு உன்மேல பொஸஸிவ்வாகி கோட்டை விட்டுட்டாரா.” தங்கையை முடித்து அக்காவை கிண்டலடிக்க ஆரம்பித்தாள் ஊர்மி.
“குனிஞ்ச தலை நிமிராம உட்கார்ந்து இருக்கும் போதே நாம சந்தேகப்பட்டு இருக்கணும். சேதாரம் ஒன்னும் பலமா இல்லையே.” தேவகி விடுவதாக இல்லை.
“என்னங்கடி, இரண்டு பேருக்கும் குளிர்விட்டுப் போச்சா. நான் உங்க அக்கா, அது நினைவு இருக்கா இல்லையா? ரொம்ப ஜாஸ்தியா போறீங்க. ஏய் ஊர்மி புள்ளத்தாச்சிப் பொண்ணுன்னு பாவம் பார்த்து விட்டா ரொம்ப ஓவராப் பண்ற.” எனக் கேட்டுக்கொண்டே, தன்னிரு கையிலும் இருவரின் காதையும் பிடித்துத் திருகினாள் ருக்கு.
“லீலாக்கா, இந்த ருக்குக்கா கிட்ட இருந்து எங்களைக் காப்பாத்துங்க.” வேண்டுமென்றே சத்தமாகக் கத்தினாள் ஊர்மி.
தங்கைகள் மூவரையும் பார்த்து, “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” சம்பந்தம் இல்லாமல் சொன்னாள் லீலா.
“என்னது நாங்க இரண்டு பேரும் அடிவாங்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கா. கடவுளே, இந்த வீட்டு இராஜகுமாரனுங்க காத்து எங்க லீலா அக்காவுக்கும் அடிச்சிடுச்சு போலவே.
என் புருஷனை அக்கா பார்த்துக்கிறாங்கன்னு சொல்லும் போதே இப்படி ஏதாவது நடந்திடுமோன்னு பயந்தேன். அதே மாதிரி நடந்திடுச்சு. இப்ப நான் என்ன பண்ணுவேன்.” பொய்யாய் புலம்பினாள் ஊர்மி.
“லூசு சும்மா கிட. வர வர உன் வாய் ரொம்ப நீளுது. உன் புருஷன் நாக்கை அடக்க ஆரம்பிச்சுட்டாருன்னு அவருக்கும் சேர்த்து நீ பேசுறியா?
நான் உங்க மூணு பேரையும் இப்படி சந்தோஷமா பார்க்கிறதுக்கு சந்தோஷமா இருக்குன்னு சொன்னேன். நம்ம நாலு பேரையும் இப்படிச் சிரிப்பும், சந்தோஷமுமா பார்க்கணும் என்பது நம்ம அம்மா, பொன்மணி அத்தையோட ஆசை.
பக்கத்திலிருந்து பார்க்காமல் போயிட்டாங்களேன்னு நினைச்சு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கு.” என்க, மற்ற மூவரும் லீலாவின் அருகே வந்து அவள் கரத்தைப் பிடித்துக்கொண்டனர்.
“அவங்க இரண்டு பேரும் வாழ்க்கை முழுக்க பட்ட கஷ்டத்தோட பலனைத் தான் நாம இப்ப அனுபவிக்கிறோம். நம்ம ரஞ்சினி அக்கா பாவம். வாழ்க்கைன்னா என்னென்னே தெரியாத வயசு. அதுக்கு முன்னாடியே உயிரை விட்டுட்டாங்க. உங்க மூணு பேருக்கும் ஒரு அக்காவா நான் இருக்கேன். நல்லது கெட்டது எடுத்துச் சொல்றேன். ஆனா எனக்கு அக்காவா அவங்க இருந்திருக்க வேண்டியது.” என்க, பழைய நினைப்பில் அனைவருக்கும் நெஞ்சம் கனத்துப் போனது.
“ஊர்மி எனக்காக நீ ஒரு உதவி பண்ணுவியா?” லீலா சட்டென்று கேட்க, “என்னக்கா பண்ணனும்.” என்றாள் ஊர்மி.
“உனக்கு பிறக்கப் போற இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை பெண் குழந்தையா இருந்தா, அந்தக் குழந்தைக்கு நம்ம அக்கா பெயரை வைக்கிறியா? போன ஜென்மத்தில் அவங்க வாழ முடியாத வாழ்க்கையை இந்த ஜென்மத்தில் இந்த வீட்டில் சந்தோஷமா வாழட்டும்.” ஆசையாய் கேட்டாள் லீலா.
“என்ன லீலாக்கா இதை நீங்க சொல்லணுமா? அவங்க நம்ம நாலு பேருக்குமே அக்கா தானே. அவங்க பெயரை வைக்கலாம் னு நீ இப்ப தான் சொல்ற. ஆனா நான்,கர்ப்பமா இருக்கேன்னு கன்பார்ம் பண்ணப்பவே இந்த முடிவு எடுத்துட்டேன்.” என்ற ஊர்மி லீலாவின் மடியில் தலைசாய்த்துப் படுத்தாள்.
“என் அக்கா பெயரைத் தான் நான் என் பொண்ணுக்கு வைப்பேன். இன்னொரு பிள்ளைக்கு வேண்ணா உங்க இஷ்டப்படி பெயரை வைங்க. ஒருவேளை அது பையனாப் போனா அடுத்து இன்னொரு பொண்ணு பெத்தத் தாரேன். அவளுக்கு நீங்க பெயர் வைச்சுக்கோங்க. ஆனா என்னோட இந்த முடிவில் தலையிடாதீங்க.” என்று கணவன் நாகாவிடம் தீர்க்கமாகச் சொல்லி இருந்ததை நினைவுபடுத்தி இருந்தாள் ஊர்மிளா.
“நாம நாலு பேரும் ஒரே இடத்தில் ஒன்னா இப்படிச் சந்தோஷமா இருக்கக் காரணமான அம்மா, அத்தை, வடிவேல் மாமா, நம்மளோட வீட்டுக்காரங்கன்னு யாரையும் நாம கடைசி வரைக்கும் மறக்கக்கூடாது.” லீலா சொல்ல ஒப்புக்கொண்டனர் அவள் சகோதரிகள்.
“நாம இதே மாதிரி எப்பவும் ஒன்னாவே இருக்கணும் அக்கா.” ருக்கு சொல்ல, லீலா சின்னப் புன்னகையோடு அவளின் தலை கோதிக் கொடுத்தாள்.
அந்த சமயத்தில், “அப்பா எங்க இருக்கீங்க?” என்று அலறியவண்ணம் வீட்டிற்குள் வந்தான் தெய்வா.
“இப்ப எதுக்கு மாமாவை ஏலம் போடுறீங்க. அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. செல்வா மாமா ஊசி போட்டு தூங்க வைச்சிருக்காரு. எதுவா இருந்தாலும் சாயங்காலம் பேசிக்கோங்க.” கணவனுக்கு விவரம் தெரிவித்தாள் ருக்கு.
“ருக்கு இங்க தான் இருக்கியா. அப்பாவைப் பார்த்துட்டு உன்னைத் தேடித் தான் வர நினைச்சேன். நான் இப்ப இருக்கிற சந்தோஷத்துக்கு உன்னை அப்படியே தூக்கி சுத்தனும் போல இருக்கு.” அத்தனை பூரிப்பாகச் சொன்னான் தெய்வா.
“தூக்கிச் சுத்த வேண்டியது தானே. யாரு வேண்டாம் னு சொன்னது.” எடுத்துக் கொடுத்தாள் ஊர்மி.
“ஏய் சும்மா இரு.” என்று அவள் கைகளில் இடித்தாள் லீலா. அவள் கவனம் எல்லாம் தெய்வாவின் சந்தோஷமான முகத்திலேயே நிலைத்திருந்தது.
“என்னங்க எதுக்கு இவ்வளவு சந்தோஷம்.” தமக்கை மனதில் உதித்த கேள்வி தங்கையின் வாயில் இருந்து உதித்து விட்டிருந்தது.
“ருக்கு என் கை வரைக்கும் வந்து, கை நழுவிப்போன ப்ரமோஷன் இப்ப மறுபடியும் கிடைச்சிருக்கு. இனி நான் இன்ஸ்பெக்டர் இல்ல ஏசி.” தெய்வா சொல்ல அவனுடைய சந்தோஷம் நொடியில் ருக்குவையும் தொற்றிக்கொண்டது.
லீலா வேகமாய் கிச்சன் சென்றவள் சர்க்கரை டப்பாவை எடுத்து வந்து தங்கையின் கையில் ஒப்படைத்து, “நல்ல செய்தி சொன்னவருக்கு சக்கரை அள்ளி வாயில் போடு.” முகம் கொள்ளாப் புன்னகையுடன் சொன்னாள்.
ருக்குவுக்கு இணையான லீலாவின் சந்தோஷத்தைக் கண்டு குழம்பினான் தெய்வா. அதெல்லாம் ஒரு சில நொடிகள் தான். அக்காவின் பேச்சுக்கு கட்டுப்பட்டு தனக்கு இனிப்பு கொடுக்க வந்த மனைவியைத் தூக்கி சுற்ற ஆரம்பித்தான் தெய்வா. அவன் மனதில் அத்தனை ஆனந்தம் இருந்தது.
“அடப்பாவி மாமா, சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படி தூக்கிட்டீங்களே.” ஊர்மி வாயில் கை வைத்துப் பார்க்க, அவள் பின்னந்தலையில் தட்டி அங்கிருந்து இழுத்துச் சென்றாள் லீலா.
அலப்பறைகள் எல்லாம் முடிந்து சகோதரர்கள் நால்வரும் வழக்கம் போல் வெளி இடத்தில் கூடினர்.
“கங்கிராட்ஸ் டா.” செல்வா தெய்வாவைப் பார்த்து சொல்ல, “இந்த கங்கிராட்ஸை நீ சில மாசத்துக்கு முன்னாடியே சொல்லி இருந்திருக்க வேண்டியது.” உன்னால் தான் என்னுடைய பணிஉயர்வு தாமதமாகியது என்று குத்தலாகச் சொன்னான் தெய்வா.
“சரி விடு, அதான் இப்பக் கிடைச்சிடுச்சே. எது எது எப்ப கிடைக்கணும் னு இருக்கோ அப்ப தான் கிடைக்கும்.” சமாளித்தான் செல்வா.
தெய்வா தன் அடுத்தகட்ட யோசனையைப் பற்றி சொல்ல வந்த நேரத்தில், “டேய் செல்வா உனக்கென்ன பெரிய தியாகின்னு நினைப்பா. ஒரு நர்ஸை எனக்காகத் தனியா அப்பாயிண்ட் பண்ண முடியாத அளவில் தான் ஹாஸ்பிடலில் உன் செல்வாக்கா. எதுக்காக டா உன் பொண்டாட்டியை விட்டு என்னைப் பார்த்துக்கச் சொன்ன.” வீராப்பாய் கேட்டான் நாகா.
“ஏன், இப்ப உன்னை என் பொண்டாட்டி பார்த்துக்கிட்டதில் என்ன குறைஞ்சு போயிட்ட நீ.” என்றான் செல்வா.
“நீ பண்ண அந்தக் காரியம் இப்ப எவ்வளவு பெரிய பிரச்சனையில் வந்து முடிஞ்சிருக்கு தெரியுமா?” நாகா படமெடுக்க ஆரம்பிக்க மற்ற மூவரும் குழம்பிப் போயினர்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ கருநாகம் அடுத்து என்ன ஆரம்பிச்சிருக்கு .. இவங்க நாலு பேரும் திருந்தவே மாட்டாங்களா .