Loading

அத்தியாயம் 82

     நாகாவின் உடல்நிலை முன்னேற முன்னேற அந்த வீட்டின் இயல்புநிலை திரும்ப ஆரம்பித்திருந்தது. தலைக்கு மூன்று தண்ணீர் ஊற்றி முடித்த கையோடு, வீடு முழுக்க கிருமிநாசினி கொண்டு நன்றாக சுத்தம் செய்ய நினைத்தாள் லீலா. அதன் பிறகே தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வேலையாட்கள் மீண்டும் வேலைக்கு வர முடியும் என்கிற நிலை.

     வேலைப்பளு அவளை அமிழ்த்தியது. இருப்பினும் கர்ப்பிணித் தங்கை, வெளியூரில் இருந்து வர இருக்கும் மற்ற இரு தங்கைகளையும் நினைத்துப் பார்க்கும் போது சோர்வு மறைந்ததைப் போல உணர்ந்து, தான் ஒருத்தியாக அத்தனை பெரிய வீட்டை சுத்தம் செய்து முடித்தாள்.

     கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பின்பு முழுதாகக் குணமடைந்திருந்த நாகா காலைச் சூரியனுக்கு ஹாய் சொன்னான். ஏதோ சிறையிலிருந்து விடுபட்ட உணர்வு. அதே நேரத்தில் ஏதோ ஒன்றை இழந்த உணர்வு.

     இதுவரை தான் அனுபவித்த ஏதோ ஒரு அற்புதமான விஷயம், இனி தனக்கு கிடைக்கப் போவதில்லை என்று அவனுடைய மனம் வருந்தியது. தான் எதை மிஸ் செய்கிறோம் என்கிற யோசனையோடு நாகா நின்றிருக்க, அடுத்த அறையின் பால்கனி வழியாக அவனை முறைத்துக் கொண்டிருந்தாள் ஊர்மி.

     “ஹாய் லீலா, என் பெயர் செல்வா. உங்க புருஷன். ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு. அப்ப இருந்து என்கூட ஒன்னா இந்த ரூமில் தான் இருந்தீங்க. இதெல்லாம் ஞாபகம் இருக்கா இல்ல இந்த ஒரு மாச காலத்துல எல்லாத்தையும் மறந்துட்டீங்களா?” சீண்டினான் செல்வா.

     “உங்க தம்பிக்கு அம்மை இறங்க இவ்வளவு நாளாகும் னு நானும் தான் நினைக்கல. அதுக்காக எடுத்துக்கிட்ட பொறுப்பை தட்டிக் கழிக்க முடியுமா? அது மட்டும் இல்லை இந்தளவு பக்கத்தில் இருந்து பார்த்துக்கிட்டதால் தான் அவர் இத்தனை சீக்கிரம் சரியாகி இருக்கார். இல்லன்னா அவருக்கும் கஷ்டம் அவரை நினைச்சு என் தங்கச்சி, மாமான்னு எல்லோருக்கும் கஷ்டம்.” என்றாள்.

     “மத்தவங்க கஷ்டத்தைப் பத்தியெல்லாம் கவலைப்படுறீங்களே. உங்களோட புருஷன் என்னைப் பத்தி கவலைப்பட்டீங்களா?” செல்வா ஆதங்கமாகக் கேட்க,

     “இல்லைன்னு நீங்க கண்டீங்களா? உங்க தம்பி விஷயத்தில் நான் உங்க பேச்சை மீறிட்டேன்னு கோபப்பட்டு நைட் டியூட்டியும் சேர்த்து வாங்கிக்கிட்டு ஹாஸ்பிடலே கதின்னு கிடந்துட்டீங்க. நான் உங்களை எத்தனை தேடினேன் தெரியுமா?

     என்னோட நினைப்பு எல்லாம் உங்க மேல தான். சரியா சாப்டீங்களா, தூங்குனீங்களான்னு எத்தனை சங்கடப்பட்டேன் தெரியுமா?” தானும் ஆதங்கமாய் கேட்டாள்.

     “என்னைப் பத்தி யோசனை பண்ணிக்கிட்டு எங்கேயோ  இருந்ததுக்கு, என் கூட வந்து தங்கி இருக்கலாமே.  குறைஞ்சபட்சம் நாகா தூங்குற நேரத்திலாவது என்கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணி இருக்கலாமே. அதைக் கூட செய்ய நீங்க தயார் இல்லைங்கும் போது தான் நான் நைட் டியூட்டிக்கு போனேன்.” குறைபட்டவன் தலையில் அப்படி இல்லை என்று சொல்லி கொட்டியது அவன் மனசாட்சி.

     “உங்களுக்குத் தெரியாதது இல்ல. அம்மை ஒரு வைரஸ் வியாதி. என்ன தான் உங்களுக்கு வர வாய்ப்பில்லைன்னு சொன்னாலும், வந்திடுச்சுன்னா என்ன பண்றது. அதனால தான் முழுசா சரியாக எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லைன்னு ஒரு மாசம் கஷ்டப்பட்டு உங்களைப் பார்க்காமலே இருந்துட்டேன்.

     அப்புறம் நான் ஏதோ திட்டம் போட்டு உங்களை மட்டும் ஒதுக்கி வைச்சதா நினைக்க வேண்டாம். இதே வீட்டில் இருக்கிற என்னோட தங்கச்சி ஊர்மி, அவளையும் நான் கடந்த ஒரு மாசமா பார்க்கல. இப்ப கூட அவளுக்கு முன்னாடி உங்களைத் தான் முதலில் பார்க்க வந்திருக்கேன்.” என்றாள் லீலா.

     அவள் பதிலில் மகிழ்ந்தவன் அதை மறைத்துக்கொண்டு, “இவ்வளவு கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, பொறுப்போட அக்கறையோட அவனை நீங்க கவனிச்சிக்கிட்டீங்க. ஆனால் இது எல்லாம் அந்த நாகாவோட கவனத்தில் பதியவே பதியாது.

     இதுக்கு முன்னாடி உங்களை எப்படி நடத்தினானோ அதே மாதிரி தான் இனிமேலும் நடத்துவான். நம்மகிட்ட இருந்து அவனுக்குத் தேவையான எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு, நம்மைத் தூக்கிப்போடுவது அவனுக்குக் கை வந்த கலை.” வேதனையுடன் சொன்னான் செல்வா.

     என்ன தான் சில காரணங்களுக்காக தம்பிகளுடன் இணைந்து இருந்தாலும், தம்பி தன் மனைவியை தரக்குறைவாக நடத்தியதை இன்னும் அவனால் மறக்க முடிந்திருக்கவில்லை.

     “அவர் என்னை நல்லபடியா நடத்துவார், என்னை மரியாதையா அண்ணின்னு கூப்பிடுவாருன்னு நினைச்சு நான் எதையும் செய்யல. நான் இந்த வீட்டோட மூத்த மருமக. இது என்னோட புகுந்தவீடு. இந்த வீட்டில் உள்ள எல்லோரும் என்னோட சொந்தக்காரங்க.

     இங்கே இருக்கிற யாராவது ஒருத்தருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா அவங்களைக் கவனிச்சிக்கிற பொறுப்பும், கடமையும் இந்த வீட்டோட மத்த மருமகளுங்களான என்னோட தங்கச்சிங்களை விட எனக்கு அதிகமாவே இருக்குன்னு நம்புறேன் நான். என்னோட அம்மாவும், அத்தையும் இப்படித்தான் என்னை வளர்த்து இருக்காங்க.

     என் தங்கச்சி, கர்ப்பவதி அவரை நினைச்சு கஷ்டப்படும் போது, யாரோ மாதிரி நான் எப்படி நடந்துக்க முடியும்.” தன் பக்க நியாயத்தை எடுத்துச் சொன்னாள் லீலா.

     “நான் என்ன சொன்னாலும் அதுக்கு எதிர் வாதம் பண்றதுக்காக ஏதாவது ஒரு பாயிண்டை பிடிச்சு வைச்சு இருப்பீங்க. அதனால் உங்க கிட்ட என்னால பேசி ஜெயிக்க முடியாது.

     நான் உங்ககிட்ட சொல்றது எல்லாம் ஒன்னே ஒன்னு தான். மத்தவங்க மேல காட்டுற பாசத்தையும், அக்கறையும் கொஞ்சமாச்சும் கட்டின புருஷன் மேல காட்டுங்க.” என்றான் செல்வா.

     “கட்டின புருஷன் மேல அக்கறையும், பாசமும், நம்பிக்கையும் இல்லாம தான் எவனோ ஒருத்தன் எனக்கு உங்களைப் பத்தி தப்பா போட்டோ அனுப்பியும் நான் உங்க கிட்ட சண்டை போடாம இருந்தேனா.

     ஆமா அது யாரு, என்ன, எதுக்காக இதையெல்லாம் பண்ணாங்கன்னு கண்டுபிடிக்கச் சொன்னேனே செஞ்சீங்களா?” என்க,

     “உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன லீலா. என்னோட ப்ரண்ட் பாஸ்கர் தான் உங்களுக்கு அந்த போட்டோவை அனுப்பி இருக்கான்.” என்க, லீலாவின் புருவங்கள் முடிச்சிட்டது.

     “போட்டோவில் இருக்கும் பொண்ணு கூட சேர்ந்து நான் உங்களுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறேன்னு தப்பா புரிஞ்சுகிட்டு, உங்க வாழ்க்கையை காப்பாத்துறதுக்காக இப்படி பண்ணிட்டேன்னு சொல்றான். அவன் சொல்றதை நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல.” என்றபடி வலித்த தலையைப் பிடித்தான் செல்வா.

     “நீங்க எனக்குத் துரோகம் பண்ணுவீங்களா, அதுவும் அந்த பொண்ணோட சேர்ந்தா. பாஸ்கர் அண்ணனுக்கு அப்படி ஒரு எண்ணம் எங்க இருந்து வந்தது. அந்தப் பொண்ணு உங்க பேஷண்ட் தானே.” அத்தனை நம்பிக்கையாகக் கேட்ட லீலாவிடம் இதற்கு மேலும் மறைக்கத் தோன்றாமல்,

     “லீலா இப்ப நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்லப் போறேன். அதை நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல. இருந்தாலும் நான் சொல்றது தான் நமக்கு நல்லது.” என்றவன் சில நொடிகள் தாமதித்து, “அந்த போட்டோவில் இருக்கிறவ  லேகா, என்னோட முன்னாள் காதலி.” தடுமாற்றமாய் சொன்னான்.

     “ஓ” என்பதைத் தவிர வேறு வார்த்தைகள் வரவில்லை லீலாவிடம்.

     “அன்னைக்கு லேகா செத்துட்டான்னு நினைச்சு நான் இங்கே வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருந்த அதே நேரத்தில் பாஸ்கர் மத்த டாக்டர் எல்லாம் சேர்ந்து சிபிஆர் பண்ணி அவளைப் பிழைக்க வைச்சிட்டாங்க. அவ பிழைச்சாலும் அவளோட உடம்பில் பல எலும்புகள் உடைஞ்சிருந்த காரணத்தால், அவ முழுக்க முழுக்க பெட்ல தான் இருக்கா.

     அவளுக்கும் அவளோட புகுந்த வீட்டுக்கும் என்ன பிரச்சனைன்னு எனக்குத் தெரியல. அவளோட புருஷன், மாமனார், மாமியாருன்னு யாருமே அவளை இதுவரைக்கும் ஒருமுறை கூட பார்க்க வரல.

     அவளோட துணைக்கு இருக்கிறது அவளோட அம்மா மட்டும் தான். அவங்க எப்பவாச்சும் சொந்தத் தேவைகளுக்காக வெளியில் போனா, நான் அவளைப் பார்த்துப்பேன் அவ்வளவு தான்.

     நான் அவளைப் பார்த்துக்கிறது கூட நாங்க பழகின பழக்கத்திற்காக இல்ல. ஒரு மனிதாபிமான அக்கறையில் தான். இதை அந்த பாஸ்கர் தப்பா புரிஞ்சுகிட்டு இப்படி எல்லாம் பண்ணிட்டான்.

     உங்களுக்கு நான் லேகா கூட பேசறது அவளைப் பார்த்துக்கிறது தப்பாத் தோணுச்சுன்னா, என்கிட்ட நேரடியா சொல்லிடுங்க. நான் இனிமேல் அவ இருக்கிற பக்கமே போக மாட்டேன். வேற யாராவது ஒரு டாக்டரை வைச்சு அவளைப் பார்த்துக்க சொல்றேன்.” வேகமாகச் சொன்னான் செல்வா.

     தர்மனிடம் பேசிவிட்டு, வீட்டு நிலைமை என்னவெனத் தெரிந்து கொள்வதற்காக அழைத்த தெய்வா, “நீ கொஞ்சம் முன்னாடியே ப்ளான் பண்ணி இருந்தா நீயும் எங்களை மாதிரி ஹனிமூனில் ஹாப் மூணாவது கொண்டாடி இருப்ப தானே.” என்று கேட்டிருக்க, சலித்த செல்வா தனக்கும் லீலாவுக்கும் நடுவில் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் சொல்லி இருக்க, கண்டபடி திட்டி இருந்தான் தெய்வா. அதன் தாக்கம் தான் செல்வாவை லீலாவிடம் இப்படிப் பேச வைத்தது .

     “நீங்க திடீர்னு அந்தப் பொண்ணை விட்டு விலகினா தான் பாஸ்கர் அண்ணா நினைச்சது சரின்னு ஆகும். நீங்க மனிதாபிமான அக்கறையில் மட்டும் இல்லாம, உங்களோட பழக்கத்திற்காக கூட அவங்களுக்கு உதவி பண்ணுங்க. ஏன்னா அதில் எந்த தப்பும் இல்லை.

     அவங்க உங்களோட கடந்த காலத்தில் காதலி, இப்ப உங்களோட நோயாளி அவ்வளவு தான். நீங்க உங்களைப் போட்டு குழப்பிக்காதீங்க.” என்றாள் லீலா.

     அவளை ஆச்சர்யமாகப் பார்த்த செல்வா, “உங்களுக்கு என் மேல எப்படி இவ்வளவு நம்பிக்கை.” மனதில் தோன்றிய வார்த்தைகளைக் கேட்டே விட்டான்.

     “இதுக்கு பதில் நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லிட்டேன். அந்த சந்திரமுகி டைலாக், மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.” சிரிப்புடன் சொன்னாள் லீலா.

     அது நினைவு வர சிரித்தவன், “நீங்க பலே ஆளு தான் லீலா. நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்கன்னு என் அப்பாவுக்கோ உங்க தங்கச்சிங்களுக்கோ சொன்னா அவங்க கொஞ்சமும் நம்ப மாட்டாங்க. ஆனா நீங்க என்னெல்லாம் பேசுறீங்க. ஆனா இதுவும் நல்லாத் தான் இருக்கு.” எனப் பிடறியை தடவி விட்டு புன்னகைத்தவன், “இவ்வளவு நாளா என் நெஞ்சை உறுத்திக்கிட்டு இருந்த பாரம் இப்ப தான் இறங்கி இருக்கு.” என்று நிம்மதியானான்.

     அதே நேரம் மருத்துவமனையில், “பாஸ்கர், செல்வா உன்கிட்ட பேசலன்னா அவன் பேசுற வரைக்கும் நீ அமைதியாவே இருப்பியா. நமக்குத் தான் காரியம் ஆகனும். அவன்கிட்ட பேசு.” என்றவள் சாட்சாத் லேகாவே.

     அவளுக்குச் சூடான சிக்கன் சூப்பை ஊட்டிவிட்ட படியே, “உனக்கென்னம்மா நீ ஜாலியா படுத்துக்கிட்டு, உன் இஷ்டத்துக்கு பேசுற. அன்னைக்கு அவன் என்னைப் பார்த்த பார்வை இருக்கே, அதில் என் மேல அத்தனை சந்தேகம் கொட்டிக் கிடந்தது.

     நான் இப்ப போய் அவன்கிட்ட பேசினா நான் ஏதோ திட்டம் போட்டு தான் எல்லாம் செய்யுறதா அவனுக்குச் சந்தேகம் வரும். அதனால தான் ரோஷமா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு மாலதியைக் கொஞ்சம் ஏத்தி விட்டு இருக்கேன். அவ கண்டிப்பா எனக்காக அவன்கிட்ட பேசுவா.” நம்பிக்கையாகச் சொன்னான்.

     “இதுவும் ஒருவகையில் நல்லது தான்.” என்றாள் லேகா.

     “இந்த லீலா ஒருத்தியால் எத்தனை பேருக்குப் பிரச்சனை. அவ மட்டும் செல்வாவோட வாழ்க்கையில் வராம இருந்திருந்தா நீ, நான், மாலதி மூணு பேரும் நல்லா செட்டில் ஆகி இருந்திருப்போம்.” என்றான் பாஸ்கர்.

     “பாஸ்கர் உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன். அந்த மாலதியைப் பத்தி என்கிட்ட பேசாதன்னு. அவளோட மூஞ்சியும், முகரையும் அவளைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்கல.” சொன்ன லேகாவின் முகம் அஷ்டகோணலாகியது.

     “சரி விடு லேகா. இனி அவளைப் பத்தி நான் பேச மாட்டேன். அதே மாதிரி நீயும் அவளைப் பத்தி என்கிட்ட தப்பாப் பேசாத. உனக்கே தெரியும் எனக்கு அவளை எந்தளவு பிடிக்கும், அவளுக்காக நான் என்ன எல்லாம் பண்ணுவேன்னு.” என்க, லேகாவின் முகம் கவிழ்ந்தது.

     “மறுபடியும் சொல்றேன், நான் உனக்கு உதவி பண்ண வேண்டிய எந்த அவசியமும் இல்ல. ஒரு பொண்ணை, அதுவும் அப்பாவின்னு தெரிஞ்சும் அவளை உனக்காகக் கொன்னு, உன்னை அவ புருஷனோட சேர்த்து வைக்கிறதுக்கு எனக்கு எந்த அவசியம் இல்லை.

     இருந்தாலும் நான் பண்றேன்னா அது உன்மேல இருக்கிற கொஞ்சம் பரிதாபத்தால தான். மாலதியைப் பத்தி தப்பா பேசி அதைக் கெடுத்துக்காத.” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் பாஸ்கர்.

     தன் வாழ்வு தலைகீழாய் மாறிப் போனதை நினைத்து கண்கள் கலங்கினாள் லேகா. ஆனால் அடுத்த கணமே அந்த வருத்தம் தன்னுடைய நல்வாழ்வுக்குத் தடையாக இருக்கும் லீலாவின் மீது கோவமாகத் திரும்பியது.

     “லீலா உன்னைக் கொன்னு செல்வாவோட வாழ்க்கைக்குள்ள நுழைஞ்சு, நான் தொலைச்ச என்னோட சந்தோஷத்தை மீட்டெடுப்பேன் இது சத்தியம்.” என்று தன்னோடு நினைத்துக்கொண்டாள்.

     தர்மா தேவகி, ருக்கு தெய்வா என இரண்டு ஜோடிகளும் அடுத்தடுத்து ராதா இல்லத்திற்குள் அடியெடுத்து வைக்க, அந்த வீட்டில் சில நாட்களாக காணாமல் போய் இருந்த கலகலப்பு மீண்டது சகோதரிகளின் சந்திப்பால்.

     ஆனால் இவர்களின் வருகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகளும் வரிசையில் காத்திருக்கிறது என்பது அப்போது தெரிந்திருக்கவில்லை.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. அதான ராஜ் பிரதர்ஸ் வந்த பிறகு பிரச்சனை வராம இருக்குமா .. அடுத்து பிரச்சனை பண்ண போறது யாரு ..