Loading

அத்தியாயம் 81

     “என்ன சொன்னீங்க.” கொழுந்தனாரைப் பார்த்து ஆச்சர்யமாகக் கேட்டாள் லீலா. தன் காதுகள் தான் தவறான எதையும் கிரகித்துக்கொண்டதோ என்னும் சந்தேகம் வந்திருந்தது அவளுக்கு.

     “நானா, நான் என்ன சொன்னேன். பேசாம சாப்பிட்டுக்கிட்டு தானே இருக்கேன்.” சமாளித்தான் நாகா.

     “இல்ல நீங்க இப்ப ஏதோ சொன்ன மாதிரி இருந்துச்சு.” கற்பனையாக இருந்தாலும் நன்றாக இருந்ததால் ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டாள்.

     அவள் முகத்தை ஒரு சில நொடிகள் உற்றுக் கவனித்தவன், “வயிறு நிறைஞ்சிடுச்சு போதும் னு சொன்னேன். சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் தான் அதைச் சொல்லி எந்தப் பிரயோஜனமும் இல்லை. எப்படியும் நீங்க கொண்டு வந்த சாப்பாடு முழுசா என் உடம்புக்குள்ள போற வரைக்கும், நீங்க என்னை விடமாட்டீங்கன்னு புரிஞ்சது. அதனால தான் அமைதியா சாப்பிட ஆரம்பிச்சிட்டேன்.” என்றான்.

     “இல்லையே அதோட சேர்த்து ஏதோ ஒரு வார்த்தை சொன்ன மாதிரி இருந்துச்சே.” லீலா அவனை விடுவதாக இல்லை.

     மற்ற நேரமாக இருந்தால் என்ன வேண்டும் உங்களுக்கு எனக் கார மிளகாயாய் காய்ந்திருப்பான். ஆனால் இப்போது அவனால் அவளிடம் கோபிக்க முடியவில்லை. “எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு நான் தூங்கட்டுமா.” தப்பிக்கப் பார்த்தான்.

     “சரி தூங்குங்க.” என்றதோடு அமைதியானாள் லீலா. அவள் யோசனையான முகத்தைப் பார்த்துவிட்டு சமாதானமாகக் கண்ணை மூடியவன், “ஒரு வழியா தப்பிச்சுட்டேன். நான் எப்படி அப்படிச் சொன்னேன். எனக்கே தெரியாம அப்படி ஒரு வார்த்தை என் வாயிலிருந்து எப்படி வந்துச்சு.

     ஒருவேளை நான் அவங்களை மதிக்க ஆரம்பிச்சுட்டேனா. அவங்க என்னைப் பார்த்துக்கிட்டதால் இந்த மாற்றமா? என்ன சின்னப்பிள்ளைத் தனமா இருக்கு.”

     “ஆனா இதில் என்ன தப்பு இருக்கு. அண்ணி, இந்த வார்த்தை ஒன்னும் அவ்வளவு தப்பான வார்த்தையோ, உறவுமுறையோ இல்லையே.” இரு மனதாக நாகா யோசித்த போது,

     அன்றொரு நாளில், ‘அண்ணிங்கிற உறவு அம்மா ஸ்தானத்துக்கு இணையானது.’ என்ற ருக்குவின் கூற்றுக்குப் பதிலாக, தான் என்ன சொல்லி லீலாவை அவமதிக்க நினைத்தோம் என்பது நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் நினைவுக்கு வர, “ச்சே நாகா இருந்தாலும் நீ ரொம்ப மோசம் டா. பேசக்கூடாத பேச்செல்லாம் நிறைய பேசிட்ட. அதையெல்லாம் எப்படி இவங்களால் மறக்க முடிந்தததோ. இனி எத்தனை கோபத்தில் இருந்தாலும் இந்த மாதிரியான வார்த்தைகளை விடவே கூடாது.” என்று மனதோடு உறுதியெடுத்தான்.

       தன் மேல் அன்பு வைத்திருக்கும் உறவுக்களுக்காக தன் தீய குணங்களை மாற்றிக்கொள்ள நினைக்கும் ஒவ்வொருவரும் பாராட்டு உரியவர்களே. அந்த வகையில் நாகாவின் மாற்றம் அவனே ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது.

     “இவங்க என்கிட்ட இவ்வளவு சாதாரணமா மரியாதையோட நடந்துக்கும் போது, நானும் ஏன் இவங்ககிட்ட மரியாதையோட நடந்துக்கக் கூடாது.

     செல்வா எனக்கு அண்ணன். அண்ணன் பொண்டாட்டி அண்ணி தானே. நான் என் அண்ணியை அண்ணின்னு கூப்பிட்டா அதில் என்ன தப்பு இருக்கு, கூப்பிட்டுப் பார்ப்போமா?” என்று தனக்குள் யோசித்தான் நாகா.

     சரியாக அந்த நேரத்தில், “நான் ஒன்னு சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. அன்பு, கோபம், காதல், தன்னிறைவு, சாந்தம், பசி, பழிவாங்கல், தாகம், கடுகடுப்பு, வலி, சோகம் ஆரம்பித்து இன்னும் பல உணர்வுகள் கலந்தவங்க தான் மனிதர்கள்.

     ஆனால் யாருக்கு எந்த உணர்வு அதிகமா வருமோ அதைப் பொறுத்து அவங்களோட குணாதியம் மாறுபடும். உங்களுக்கு கோவம் என்கிற அந்த உணர்வு கொஞ்சம் அதிகம். அதோட உங்களோட வாழ்க்கையில் பெண்களோட ரோல் ரொம்பக் கம்மி.

     அம்மா, அக்கா, தங்கைன்னு நீங்க வளர்ந்திருந்தா, எந்தெந்த வார்த்தைகள், செயல்கள் பொண்ணுங்களை அதிகமாகப் பாதிக்கும் னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்.

     ஊர்மிகிட்ட, என்கிட்ட, ருக்குகிட்ட நீங்க பேசின விஷயங்களில் பாதி உங்களோட தவறான எண்ணங்கள் இருந்தது என்றால் பாதி உங்களோட அறியாமை தான்.” லீலா சொல்ல, கண்கள் கலங்கியது அவனுக்கு.

     “இதை ஊர்மி தான் எங்க எல்லாருக்கும் புரிய வைச்சா. உங்களை மாதிரி எங்களோட வாழ்க்கையில் ஆண்களோட ரோல் ரொம்பவே கம்மி. அதனால உங்களோட கோபத்துக்குப் பின்னாடி இருக்கிற அறியாமை புரியாம, நாங்களும் கோபப்பட்டுட்டோம்.

     எப்ப எங்களோட தப்பை நாங்க உணர்ந்தோமோ, அப்பவே நடந்த எல்லாத்தையும் மறந்துட்டோம். அதனால் நீங்க பேசினா நான் எப்படி எடுத்துப்பேனோன்னு பயந்து பயந்து பேச வேண்டாம்.

     நீங்க நீங்களா இருங்க. உங்களுக்கு என்ன தோணுதோ அதையே பேசுங்க. ஆனா என்ன ஒன்னு, பேசும் போது எதிர்க்க இருக்கிறவங்களும் நம்மளை மாதிரி சாதாரண மனுசங்க தான்னு புரிஞ்சிக்கோங்க அது போதும்.” நெடுநாளாக அவன் எதிர்பார்த்த ஒன்றான புத்திமதி இப்போது கிடைத்தது நாகாவிற்கு.

     ஆனால் சின்ன வித்தியாசமாக, கோபப்படவோ என்னைச் சொல்ல நீங்கள் யார் என்று கேட்கவோ தோன்றாமல், முழு மனதுடன் தலையாட்டத் தோன்றியது அவனுக்கு.

     “சரிங்க அண்ணி, எண்ணித் துணிக கருமம் னு திருவள்ளுவரே சொல்லி இருக்காரு. அதனால இனி செய்யுற செயல் மட்டும் இல்ல, பேசுற பேச்சில் கூட கவனமா இருக்கேன்.” தெளிவாக வார்த்தைகளை உச்சரித்தான். அவன் தெளிவான பேச்சில் அதிர்ந்தாள் லீலா.

     “எனக்கு ரொம்ப வேர்க்குது, ஏசி வேண்டாம். ஜன்னல் எல்லாம் திறந்த விட்டு இந்த பேனை கொஞ்சம் போட்டு விடுறீங்களா அண்ணி.” சாதாரணமாய் பேச, “அண்ணியா, நானா? நீங்க நிஜமாவே என் கிட்ட தான் பேசுறீங்களா.” அத்தனை ஆச்சர்யம் மற்றும் ஆனந்தத்துடன் கேட்டாள் லீலா.

     “இல்ல உங்களுக்கு பின்னாடி இருக்கிற உங்க நிழல் கிட்ட பேசுறேன். அடப் போங்க நீங்க வேற.” என்றவன் தலையை தலையணையின் மறைவில் புதைத்து புன்னகைத்துக்கொண்டான்.

     லீலா தன்னைத் தானே ஒருமுறை கிள்ளிப் பார்த்துக்கொள்ள, “இதுவும் கற்பனை இல்ல. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேட்டீங்களே, அதுவும் கற்பனை இல்ல. எல்லாமே நிஜம் தான். நீங்க ENT டாக்டரை பார்க்க வேண்டிய அவசியம் வராது.” என்றான்.

     லீலா கண்களை விரிக்க, “இதுநாள் வரைக்கும் உங்களையும், உங்க தங்கச்சிங்களையும் புரிஞ்சுக்காம இருந்ததுக்கு ரொம்ப ஸ்சாரி. நிஜமா நான் தான் தப்பு.

     இத்தனை நாளா அப்பா உங்களைப் பத்தி பேசின ஒவ்வொரு வார்த்தையும் நிஜம் னு இப்பப் புரிஞ்சுகிட்டேன். நீங்க நான் பார்த்த பொண்ணுங்க மாதிரிக் கிடையாது. உண்மையிலே நீங்க கிரேட். நீங்க மட்டும் இல்ல உங்க தங்கச்சிங்களும் கிரேட் தான்.

     நீங்க மனைவியா கிடைச்சதுக்கு உண்மையிலேயே செல்வா ரொம்பக் கொடுத்து வைச்சிருக்கணும். ஊர்மி மாதிரி ஒரு பொண்ணை நல்ல குணங்களோட நல்லது சொல்லிக்கொடுத்து வளர்த்து முழு நம்பிக்கையோட என் கையில் பிடிச்சுக்கொடுத்ததக்கு நன்றி.” ஆழ் மனதில் இருந்து சொன்னான் செல்வா.

     “நீங்க மாறிடுவீங்கன்னு ஊர்மி நம்பினா. அவ அழுத்தமா சொன்னதால் எங்களுக்கு கூட அந்த நம்பிக்கை இருந்தது.  ஆனா இவ்வளவு சீக்கிரத்தில் நடக்கும் னு நினைச்சுக் கூடப் பார்க்கல.

     உங்க எண்ணங்களில் மாற்றம் வரணும், நீங்க என்னை அண்ணின்னு கூப்பிடனும் அப்படிங்கிறதுக்காக ஒன்னும் நான் உங்களைப் பார்த்துக்க நினைக்கல.” தன் நிலையைப் புரியவைக்க முனைந்தாள்.

     “என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது அண்ணி. நான்னு இல்லாம தெய்வாவோ, தர்மாவோ இல்ல அரசுவோ இந்த நிலமைக்கு வந்திருந்தாக் கூட நீங்க இப்படித்தான் செஞ்சிருப்பீங்க.” என்க, நாகாவின் சரியான புரிதல் கண்டு லீலாவிற்கு மயக்கமே வரும் போல் இருந்தது.

     “உங்களோட செயல்களுக்குப் பின்னாடி இருந்த உண்மையான அன்பை மட்டும் இல்ல உங்களுக்குள்ள இருக்கிற ஒரு அக்காவையும் நான் உணர்ந்தேன்.

     உங்களை அக்காவா மட்டும் தான் உணருறேனா இல்ல அதுக்கும் மேலவான்னு எனக்கு சரியா சொல்லத் தெரியல. ஆனா நல்லா இருக்கு. என் அப்பாவுக்கு அப்புறம் உங்களை ரொம்ப மதிக்க தோணுது.” என்றவன்,

     “அப்புறம் நானும் நீங்க என்னைப் பார்த்துக்கிட்டதுக்காக உங்களை அண்ணின்னு சொல்லல. என்னவோ என்னோட உள் மனசில் இருந்து அண்ணின்னு கூப்பிடத் தோணுச்சு.” என்க, “கூப்பிடலாமே, தாராளமா கூப்பிடலாம். நான் உங்களுக்கு அண்ணி தானே.” ஆத்மார்த்தமாய் சொன்னாள் லீலா.

     “நான் இப்படித் தான். சரியோ தப்போ என்னோட மனசுல என்ன தோணுதோ அதை சம்பந்தப்பட்டவங்க கிட்ட நேரடியாவே சொல்லிடுவேன். என் மேல உங்களுக்கு இருக்கிற நம்பிக்கையும், அன்பும் குறையாம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு.

     என்னோட மனசு நோகுற மாதிரியும், உங்க மேல வந்திருக்கிற மரியாதையைக் கெடுக்கிற மாதிரியும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாம இருக்க வேண்டியது, உங்க பொறுப்பு.” என்றுவிட்டு படுத்துக்கொண்டான் நாகா.

     “ஆத்தி, நடந்தது எல்லாம் கனவு மாதிரி இருக்கே.” என்னும் நினைப்போடு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள் லீலா.

     மருத்துவமனையில், “ஹாய் செல்வா.” என்றவண்ணம் ஒரு பெண் வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.

     “ஹாய் மாலதி என்ன இந்த பக்கம்.” புன்னகையுடன் கேட்டான் செல்வா. பாஸ்கர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணாக செல்வாவிற்கு மாலதியுடன் ஏற்கனவே அறிமுகம் இருந்தது.

     “உன் கிட்ட கொஞ்சம் பேசனும். இப்ப நீ ப்ரீயா இருக்கியா?” என்க, “இப்ப கொஞ்சம் ப்ரீ தான் என்ன பேசனும் சொல்லு.” என்றவனுக்கு அவள் எதைப் பற்றி யாரைப் பற்றி பேச வந்திருப்பாள் என்பதில் கொஞ்சம் யூகம் இருந்தது.

     “நான் டேரக்டா கேட்கிறேன். உனக்கும், பாஸ்கருக்கும் என்ன பிரச்சனை. ஏன் இரண்டு பேரும் பேசிக்க மாட்டேங்கிறீங்க.” என்க, “பிரச்சனைன்னு பெருசா ஒன்னும் இல்ல. சும்மா ஜஸ்ட் மிஸ் அண்டர் ஸ்டாண்டிங். கொஞ்ச நாள் போனா எல்லாம் தானா சரியாகிடும்.” சமாளித்தான் செல்வா.

     “பாஸ்கர்கிட்ட கொஞ்சம் சீக்கிரம் பேசிடேன். அவன் தொல்லை தாங்கலப்பா. எப்பப் பார்த்தாலும் செல்வா என்கிட்ட பேச மாட்டேங்கிறான். நான் அவனுக்கு நல்லது தான் நினைச்சேன். அதை அவன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறான் அப்படி இப்படின்னு ஒரே புலம்பல்.” என்க, “விட்டுத்தள்ளு, அவனை நான் பார்த்துக்கிறேன்.” சொன்ன செல்வாவிற்கு மனதிற்குள் சின்னதாய் உறுத்தல்.

     பாஸ்கர் மீது நம்பிக்கை நாற்பது சதவிகிதம் இருந்தால், அவன் செய்த செயல்களால் உண்டான கோபமும், குழப்பமும் அறுபது சதவிகிதம் இருந்தது. மீண்டும் பாஸ்கர் உடன் பழக ஆரம்பித்தாலும், முழுமையாக நம்ப இயலாது என்றே அவன் மனம் சொன்னது. அதனால் என்ன செய்வது என்கிற குழப்பமான மனநிலையில் தான் இருந்தான் செல்வா.

     சிம்லாவில் இருந்தபடி, “என்னடா தர்மராஜா, உனக்கும் என் நிலைமை தானா.” வருத்தமாய் தம்பியை விசாரித்தான் தெய்வா.

     “டேய் நல்லவனே, அப்ப நீயும் ஹனிமூன் போய் பாதியில் திரும்ப வந்துட்டியா?” கேட்ட தர்மா என்ன மாதிரி உணர்ந்தான் என்பதை அவன் மட்டுமே அறிவான்.

     “அந்தளவுக்கு மோசம் இல்லடா என் நிலைமை. என் பொண்டாட்டி என்ன நினைச்சாங்களோ, உடனே ஊருக்குப் போகனும் னு பிரச்சனை பண்ணல. ஆனா வீட்டில் ஒருத்தங்களுக்கு அம்மை வந்தா சுத்த பத்தமா இருக்கணும் னு சொல்லிட்டாங்க.” என்றான்.

     “பிறவிப் பைத்தியமே இதெல்லாம் போயா என்கிட்ட சொல்லுவ.” என்ற தர்மா சில நொடிகள் தாமதித்து, “இதுக்கு எதுக்கு இன்னமும் அங்கேயே இருந்துக்கிட்டு. என்னை மாதிரி பேசாம கிளம்பி வந்திடு.” என்று கிண்டல் பேச, வழக்கத்திற்கு மாறாக தெய்வாவிற்கு சிரிப்பு வந்தது.

     “நம்ம கதையை விடு, இந்த செல்வாப் பையன் விஷயம் என்ன ஆச்சு.” என்க, “அவனுக்கு நம்ம அளவு விவரம் பத்தல தெய்வா. அவன் பொண்டாட்டியை நாகாவுக்கு சேவை பண்ண அனுப்பிட்டு, தன்னந்தனியா தலைகாணியைக் கட்டிக்கிட்டு படுத்து இருக்கான்.” என்றான் தர்மா.

     “ஆமா அந்தப் பொண்ணு இருந்தா மட்டும் அப்படியே அவளைக் கட்டிப்பிடிச்சு கொஞ்சி காதல் வசனம் பேசி இருப்பான்.” பயங்கரமாக சலித்தான் தெய்வா.

     “இப்படியெல்லாம் பேசாத தெய்வா. ஆயிரம் இருந்தாலும் அவங்க நம்ம அண்ணி.” விளையாட்டுக் குணம் நிறைந்த தர்மன் மறைந்து, பழைய தர்மராஜ் மீண்டிருந்தான் அவ்விடத்தில்.

     “என்னது அண்ணியா. அடேய் உன் மனசுக்குள்ள அப்படியெல்லாம் எண்ணம் ஓடுதா. இது நம்ம கொள்கைக்கு எதிரானது டா மகனே, வேண்டாம்.” பதறிப் போய் சொன்னான் தெய்வா.

     “டேய் நான் இருக்கிற உறவு முறையைத் தானே சொன்னேன். அண்ணன் பொண்டாட்டி, பொண்டாட்டியோட அக்கா இரண்டு வகையிலும் அவங்க நம்ம அண்ணி தான். நாம எத்தனை மறுத்தாலும் அது மாறாது.

     இதைச் சொன்னதுக்காக இப்பவே போய் அண்ணி அண்ணின்னு அவங்க காலைச் சுத்தவா போறேன்.” நியாயமாகப் பேசினான்.

     “அவங்க காலை சுத்துறதை விட, உன் பொண்டாட்டி காலைச் சுத்து ஏதாவது பிரயோஜனமா நடக்கும்.” என்ற தெய்வா சற்றே தாமதித்து, “ஏன் தர்மா, எனக்கு ஒரு விஷயம் புரியல. லீலா எப்படி நாகாவைப் பார்த்துக்கிறதுக்கு ஒத்துக்கிட்டாங்க. அவங்களை அந்தப் பேச்சு பேசி இருக்கான். தெரியாமலேன்னு சொன்னாலும் கைநீட்டி அடிச்சு இருக்கான்.

     இது எல்லாத்தையும் மீறி எப்படி அவங்களால நாகாவைப் பார்த்துக்க முடியுது. ஒருவேளை இதுதான் சாக்கு அவன் பண்ணதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு அவனைப் படுத்தி எடுக்கலாம் னு முடிவு பண்ணிட்டாங்களா?” தீவிரமாகக் கேட்டான்.

     “அப்படி எல்லாம் யோசிக்கிறதுக்கு அவங்க என்ன நம்ம கூடப் பிறந்தவங்களா? உன் பொண்டாட்டி கூடவும், என் பொண்டாட்டி கூடவும் பிறந்தவங்க.

     அவங்க நாலு பேரும் சொந்த பந்தம் வேணும் னு நினைக்கிறவங்க. முடிஞ்ச வரைக்கும் அடுத்தவங்களோட தப்பை மன்னிக்கவும், மறக்கவும் தான் பார்ப்பாங்க. அப்படி மட்டும் இல்லைன்னா வீட்டை விட்டு போனவங்க திரும்ப வந்து இருப்பாங்களா?” என்றான் தர்மா.

     “அதுவும் கரெக்ட் தான். நாம போட்ட ஹனிமூன் ப்ளான் இப்படி சொதப்பிக்கிச்சு. அடுத்து என்ன ப்ளான் என்பதை நாகா குணமாகி வந்த அப்புறம் பார்த்துக்கலாம். இப்ப நான் போனை வைக்கிறேன்.” என்ற தெய்வா அடுத்து என்ன செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்பதை யோசிக்கலானான்.

     “என்னக்கா சொல்ற நிஜமாவா என்னால நம்பவே முடியலையே, என் புருஷன் உன்னை அண்ணின்னு கூப்பிட்டாரா.” கேட்ட ஊர்மிக்கு ஆனந்த அதிர்ச்சி.

     “அட ஆமா ஊர்மி, இதுவரைக்கும் நாலைஞ்சு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கிட்டேன். நடந்தது எல்லாமே உண்மை தான்.” லீலாவிற்கு அத்தனை ஆனந்தம்.

     “என்னவோக்கா நம்ம வீட்டில் இதுவரை நடக்காத அதிசயங்கள் எல்லாம் ஒவ்வொன்னா நடந்துக்கிட்டு வருவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அன்னைக்கு அண்ணன், தம்பி இரண்டு பேர் லேசா பேசிக்கிட்டதுக்கே மழை பெஞ்சது. அப்படிப் பார்த்தா இப்ப நடந்திருக்கிற விஷயத்துக்கு புயலே வரும் போலையே.” ஊர்மி கிண்டலாகச் சொல்ல, அதே நேரத்தில், “வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக உருமாறி விட்டது.” என்று அவள் அறையில் இருந்த தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பாக, தன்னையும் அறியாமல் சிரித்துவிட்டாள் ஊர்மி.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தெய்வா அடுத்த பிளானா ?? சுத்தம் .. என்ன பிளான் பண்ணாலும் நடக்கிறது தான் நடக்கும் ..