Loading

அத்தியாயம் 80

     நான்கு நாள்கள் பெரிதாக எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்திருந்தது. “இரண்டு நாளா அவர் எந்தத் தொந்தரவும் தரல. அமைதியா நான் சொல்றதைக் கேட்டு நடந்துக்கிறாரு. காய்ச்சல் இப்ப சுத்தமா இல்ல. முன்னாடி விட இப்பக் கொஞ்சம் தெம்பா இருக்காரு. சாப்பிடுற அளவும் அதிகமாகி இருக்கு. ரொம்ப நேரம் எழுந்து உட்கார முடியுது. உடம்பில் நல்ல முன்னேற்றம்.

     நாலு நாளா இராத்திரியெல்லாம் தூங்க முடியாம முனங்கிக்கிட்டே இருந்தாரு. ஆனா நேத்து நல்லாத் தூங்கினாரு.

     இப்ப என்ன செய்யுறாருன்னு கேட்கிறியா? இராத்திரி முழுக்கத் தூங்கிட்டு, இப்ப தூக்கம் வரலன்னு போன் பார்த்துக்கிட்டு இருந்தாரு. திட்டினேன். ரோஷத்தில் போனை கீழே வைச்சுட்டு வீட்டுக்குள்ளே வாக்கிங் போனார். அதுவும் அலுப்புத் தட்டிடுச்சு போல, இப்ப நல்லாத் தூங்குறாரு.” என்றுவிட்டு சிரித்தாள் லீலா.

     “அம்மை எப்பக்கா இறங்கும். நான் அவரை எப்பப் பார்க்கிறது.” என்றாள் ஊர்மி.

     “கொப்புளம் எல்லாம் கால்வாசி தான் மா உடைஞ்சிருக்கு. பெரியம்மை இல்லையா மெதுவா தான் இறங்கும். ஆனா உன் புருஷன் இருக்கிற தெம்புக்கு இன்னும் ஒரே வாரத்தில் குணமானாக் கூட ஆச்சர்யப்படுறதுக்கு ஒன்னும் இல்ல.” தங்கையைச் சமாதானப்படுத்தினாள் லீலா.

     லீலா தங்கையிடம் பேசிக்கொண்டிருக்க, அவள் உறங்குவதாக நினைத்துக்கொண்டிருந்த நாகா அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். நான்கு நாள்களாக அவளின் செயல்களை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

     பிரத்யேகமான உணவு, கசாயம், பழச்சாறு, இளநீர் அனைத்தையும் நேரம் தவறாமல் சரியாகக் கொடுப்பது, உடல் கொப்புளங்களுக்கான மருந்து போடுவது, உடல் அரிப்பிற்கு மூலிகை எண்ணையை மயிலிறகால் தடவி விடுவது, தினமும் கடவுளை வணங்கிவிட்டு திருநீர் வைத்துவிடுவது என அனைத்தையும் முகச்சுழிப்போ, சங்கடமோ இல்லாமல் புன்னகை முகமாகச் செய்தாள்.

     அவள் சொல்லும் எதையாவது செய்ய மாட்டேன் என அவன் அடம் பிடிக்கும் நேரத்தில், அவள் கண்டித்தது தந்தை வடிவேலுவை நினைவுபடுத்த தன்னைப் போல் அவள் பேச்சிற்கு இறங்கி வந்திருந்தான் நாகா.

     அவன் வாழ்வில் அவன் அதிகம் பழகிய பெண் மனைவி ஊர்மிளா மட்டும் தான். அவளிடம் அவனுக்கு இருக்கும் உரிமையுணர்வு வேறு யாரிடமும் வராது தான். ஆனாலும் லீலாவிடம் மரியாதையுடன் கூடிய ஒட்டுதலான உணர்வு உருவாவதை அவனால் தடுக்க முடியவில்லை.

     தலைவலிக்குத் தலைசாய்க்க தாய் மடியும், காய்ச்சலுக்கு கொடியாய் படர தந்தையின் கழுத்தும், மாலையில் மயங்க மனைவியின் மார்பும் கிடைத்தவன் பேரதிஷ்டக்காரன் என்று சொல்வார்கள்.

     இவை அனைத்தையும் தாண்டி புதிதாய் ஒரு உறவு, உணர்வு லீலாவிடத்தில் இருந்து கிடைத்தது நாகாவிற்கு. நிஜமாகவே தனக்கொரு அக்கா இருந்தால் அவள் இப்படித்தான் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பாள் என்பதில் துளி கூட ஆட்சேபனை இல்லை அவனுக்கு.

     “இவங்களால் எப்படி என்னை இப்படிப் பார்த்துக்க முடியுது. ஒவ்வொரு வீட்டில் புருஷனோட அப்பா, அம்மாவுக்கு அவ்வளவு ஏன், அரசு சொன்ன மாதிரி கட்டின புருஷனுக்கு உடம்பு சரியில்லாம போனாக் கூட சில பொண்ணுங்க பார்த்துக்க விரும்ப மாட்றாங்க. ஆனா இவங்க புருஷனோட தம்பிக்காக புருஷன் கூடவே சண்டை போடுறாங்க.

     உண்மையிலே என் மேல பாசம் வைச்சிருக்காங்களா இல்லை அவங்களோட தங்கச்சிக்காக செய்யுறாங்களா. தங்கச்சிக்காகவே இருந்தாலும், நான் இவங்ககிட்ட நடந்துக்கிட்ட முறையை மொத்தமா மறந்து, எப்படி இப்படிப் பார்த்துக்க முடியுது. முகத்தில் கொஞ்சம் கூட கடுமையோ, முகச்சுழிப்போ இல்லையே.”

     “நான் சாப்பாடு வேண்டாம் னு சொன்னா, சரின்னு விடாம அதையும் இதையும் சொல்லி மிரட்டுறாங்க. அப்பவும் நான் ஒத்துக்கலன்னா ஊர்மிக்கு போன் பண்ணிடுவேன்னு சொல்லி. பிள்ளை பிடிக்கிறவன் வரான்னு குழந்தையை மிரட்டுற மாதிரி மிரட்டியாவது அவங்க கொண்டு வர எல்லா சாப்பாட்டையும் முழுசா சாப்பிட வைச்சிடுறாங்களே.

      இப்படியெல்லாம் அப்பா தானே செய்வார். அப்பாவுக்கு நான் பையன் அதனால் வந்த உரிமை உணர்வும், பாசமும் அவரை அப்படி நடந்துக்க வைச்சது. இவங்களுக்கு என்ன அவசியம் வந்தது.”

     “ஊர்மி மசக்கையில் வாந்தி எடுத்துட்டு சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிச்சப்ப கூட இப்படித்தானே மிரட்டி சாப்பிட வைச்சாங்க. நானும், ஊர்மியும் இவங்களுக்கு ஒன்னு தானா?

     நான் எவ்வளவு சாப்பிடுவேன்னு கூட இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கே. நான் இராத்திரியெல்லாம் தூங்கலன்னு சொல்றாங்க. அப்ப அவங்களும் தூங்காம தான் இருந்தாங்களா.”

     “நான் அவங்களைப் பேசாத பேச்சு இல்ல. அவங்க முன்னாடியே அவங்க தங்கச்சியையும் நிறைய பேசி இருக்கேன். அவங்களுக்குக் கிடைச்ச இந்த நல்ல வாய்ப்பில், ஆதங்கமாக் கூட நான் பண்ண எதையும் சொல்லிக் காட்டலையே.

     குறைந்தபட்சம் இனிமேல் இப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாதுன்னு அறிவுரையாவது வரும் னு நினைச்சிருந்தேன். ஆனா இவங்களைப் பத்தி என்னோட கணிப்பு எப்போதும் தப்பா தான் இருக்கு. எப்படி இவங்களால இவ்வளவு கனிவா நடந்துக்க முடியுதுன்னு சுத்தமாப் புரியல.”

     “ஏற்கனவே அப்பாவுக்கும், செல்வாவுக்கும் அவங்க மேல மரியாதை, பாசம் அதிகம் தான். அவங்ககிட்ட ஸ்கோர் பண்ண என்கிட்ட வர வேண்டிய அவசியம் இல்லை.

     மத்த இரண்டு சீமான்களும் என்ன ஆனாலும் இவங்களை அண்ணின்னு கூப்பிட்டு பாசத்தைப் பொழிய மாட்டாங்க. நான் அதை விட மோசம், அது அவங்களுக்கும் நல்லாவே தெரியும்.

     என்ன பண்ணாலும் புதுசா எதுவும் கிடைக்காதுன்னு தெரிந்த பின்னாலும், கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய அவசியம் இல்லன்னு அவங்களுக்கும் நல்லாவே தெரிஞ்சிருக்கும். சோ கண்டிப்பா எனக்காக அவங்க  செய்யும் இந்தச் செயல்களில் எந்தச் சுயநலமும் இல்ல, அப்புறம் எதுக்காக.”

     “நாளைக்கு செல்வாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனா நான் ஊர்மியை விட்டு அவனைப் பார்த்துக்க சொல்லுவேனான்னு கேட்டா வாய்ப்பு ரொம்பவே கம்மிதான்.

     செல்வா, முதலில் இவங்களைத் தடுத்தாலும் இப்ப ஒன்னும் சொல்லலையே. அப்பப்ப இரண்டு பேரும் போனில் பேசிக்கிட்டு தானே இருக்காங்க. இவங்க இரண்டு பேர் கிட்ட இருக்கிற பெருந்தன்மை ஏன் என்கிட்ட இல்ல.”

     “ஒருவேளை, விருப்பமே இல்லாம லீலாவோட பிடிவாதத்துக்காக கூட செல்வா அமைதியா இருக்கலாம். ஆனா லீலா, அவங்களுக்கு என்ன அவசியம். அவங்க ஏன் இப்படி இருக்காங்க.” என்று தனக்குள் பலமாக குழம்பினான் நாகா.

     “தேவகி சும்மா இருந்தவனை இப்பவே வீட்டுக்குப் போகணும் னு சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்க. ஆனா உங்க அக்கா நம்மளை நம்ம வீட்டுக்குள்ளேயே விடல.

     சொந்த ஊரில் சொந்த வீடு இருக்கும் போது, யாரோ வெளியூர் காரங்க மாதிரி இப்படி நம்ம ஹோட்டலில் தங்கி இருக்கோம். இதெல்லாம் நல்லாவா இருக்கு.” கோபித்தான் தர்மா.

     “அக்காவைத் தப்பா நினைக்காதீங்க. நாம வீட்டுக்கு போனா ஒருவேளை நமக்கும் உடம்பு சரியில்லாம போயிடும் னு தான் அக்கா நம்மள வரவேண்டாம் னு சொல்லி இருப்பாங்க.” என்றாள்.

     “எனக்கு என்னவோ அப்படித் தோணல. நம்மளை ஒரேடியா வீட்டை விட்டு அனுப்பிட முடிவு பண்ணிட்டாங்க போல உங்க அக்கா.” கடுப்பாகச் சொன்னான் தர்மா.

     அன்றைய தினத்தில் அவன் அத்தனை சொல்லியும், வீட்டுக்குப் போகணும் என்பதைத் தாண்டி வேறு எதுவும் சொல்லாமல் கையோடு தேவகி அவனை அழைத்து வந்த கடுப்பு, இப்படிப் பேச வைத்தது.

     “பைத்தியம் மாதிரி பேசாதீங்க. நம்மளை வீட்டை விட்டு அனுப்புறதால அக்காவுக்கு என்ன இலாபம் இருக்கப் போகுது.” தானும் கடுப்பாய் கேட்டாள் தேவகி.

     “என்ன லாபமா மத்த மூணு ஜோடியும் வீட்டை விட்டு போயிட்டா அவங்களும், செல்வாவும் மட்டும் அவ்வளவு பெரிய வீட்டில் ராஜா, ராணி மாதிரி இருக்கலாம் தானே.” தர்மா கேட்க,

     “டைம் போகலன்னு டிவில வர சீரியல் ஏதாவது பார்த்தீங்களா. தனியா இருக்கிறது வரம் கிடையாது சாபம். இது எங்க அக்கா எங்களுக்கு அடிக்கடிச் சொல்றது. அப்படிப்பட்ட எங்க அக்கா புருஷனோட அவ்வளவு பெரிய வீட்டில் தனியா இருக்க ஆசைப் படுறாங்களா, அதுவும் எங்க மூணு பேரையும் வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டு.

     எங்க அக்காவுக்கு எங்களுக்கு அடுத்து தான் எதுவா இருந்தாலும், யாரா இருந்தாலும். நாங்க ஒருவேளை சாப்பிடலன்னாக் கூட எங்க அக்காவுக்கு இராத்திரி தூக்கம் வராது. அப்படியானவங்க வெறும் கட்டத்திற்காக எங்களை வேண்டாம் னு ஒதுக்கி வைப்பாங்களா?” என்க, ரொம்பத்தான் எனத் தனக்குள் முணங்கினான் தர்மன்.

     “எப்பவும் உங்க அண்ணனுங்க தான் ஏதாவது தப்புத் தப்பா பேசிக்கிட்டு இருப்பாங்க. நீங்க அப்படிப்பட்டவரு இல்ல அவங்க வரிசையில் தப்பாப் பிறந்துட்டீங்கன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.

     அதெல்லாம் இல்ல நானும் அவங்க தம்பி தான். அவங்க இரத்தம் தான் எனக்குள்ளேயும் ஓடுது. அவங்களை மாதிரித் தான் நானும் னு நிரூபிச்சிட்டீங்க.

     இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும். இனிமேல் என்னோட அக்காவைப் பத்தி தப்புத் தப்பா பேசாதீங்க. இந்த விஷயத்தில் என்னால் பொறுத்துப் போக முடியாது.” எண்ணெயில் இட்ட கடுகாகப் பொறிந்து தள்ளிவிட்டு அமைதியாய் சென்று படுத்துக்கொண்டாள் தேவகி.

     அவள் சென்ற பின்னே தர்மாவின் புத்தி வேலை செய்தது. “அவ சொன்ன மாதிரி நமக்குள்ள இப்படிப்பட்ட எண்ணங்கள் இதுவரைக்கும் வந்தது கிடையாதே. ஏன் இன்னைக்கு இப்படி நடந்துக்கிட்டோம். இந்த நாகா பய காத்து நமக்கும் அடிச்சிருக்குமோ.

     ஓ மை காட் இவ வேற கோச்சுக்கிட்டு போயிட்டாளே. இன்னும் எத்தனை நாளுக்கு பேசாம இருப்பாளோ. பேசுறதுக்கு எத்தனை பேப்பரில் கையெழுத்துக் கேட்பாளோ நினைக்கவே பயமா இருக்கே. ஆண்டவா நீதான் என்னைக் காப்பாத்தணும்.” என்று வேண்டுதல் வைத்த தர்மா தானும் சென்று படுத்துக்கொண்டான்.

     சிம்லாவில், “ருக்கு என்னாச்சு உனக்கு. எதுக்காக என்னைப் பக்கத்தில் சேர்த்துக்க மாட்டேங்கிற. அன்னைக்கு நான் ஏதும் ரூடா நடந்துக்கிட்டேனா. பயந்துட்டியா சொன்னா நான் கோவப்படுவேனோன்னு நினைச்சு அமைதியா இருக்கியா. எதுவா இருந்தா என்கிட்ட சொல்லு.” நெருக்கம் கூடியதால் உரிமையின் அளவும் அதிகரித்திருக்க மரியாதை போய் ஒருமை வந்திருந்தது அவனிடத்தில்.

     “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லைங்க. இதை உங்ககிட்ட எப்படிச் சொல்றதுன்னு தெரியல. நீங்க இங்க வந்ததுக்கு அப்புறம் தான் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க.

     கல்யாணம் ஆகி இத்தனை நாளில் உங்களை நான் இவ்வளவு சந்தோஷமா பார்த்ததே இல்ல. விஷயத்தைச் சொல்லி, அதனால நீங்க கோவப்பட்டாலோ இல்லை உங்களோட சந்தோஷம் கெட்டுப் போனாலோ எனக்குக் கஷ்டமா இருக்கும். அதனால் தான் முடிஞ்ச வரைக்கும் நானே பார்த்துக்கலாம் னு நினைச்சேன்.” பொடி வைத்துப் பேசினாள்.

     “நீ இவ்வளவு தயங்குற அளவுக்கு அப்படி என்ன நடந்துச்சு.” புருவம் உயர்த்திக் கேட்டான் தெய்வா.

     “உங்க தம்பி நாகா மாமா இருக்காரு இல்ல. அவருக்கு அம்மை போட்டு இருக்கு, அதுவும் பெரியம்மை. வீட்டில் ஒருத்தருக்கு அம்மை போட்டு இருக்கும் போது, அந்த வீட்டில் இருக்கிற எல்லாரும் ரொம்ப சுத்த பத்தமா இருக்கணும். அதனால் தான் இது எல்லாம் வேண்டாம் னு நினைச்சேன்.” எங்கே தெய்வா கோவப்பட்டுவிடுவானோ என்று பயந்து பயந்து விஷயத்தை சொல்லி முடித்தாள் ருக்கு.

     “இது எப்ப நடந்துச்சு, உனக்கு எப்ப தெரியும்.” அவள் எதிர்பாராத கேள்வியைக் கேட்டு ஆச்சர்யமடைய வைத்தான் தெய்வா.

     “நாம இங்க கிளம்பி வந்த அன்னைக்கே உங்க தம்பிக்கு இப்படி ஆகி இருக்கு. அதுக்கு அடுத்த நாள் நான் ஊர்மிக்கு போன் பண்ணப்ப அவ விஷயத்தை சொன்னா.” தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னாள் ருக்கு.

     “நாம வந்ததுக்கு அடுத்த நாளே தெரியும் னா அன்னைக்கு ஏன் என்னைத் தடுக்கல.” குறுகுறுப்பாய் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

     “அன்னைக்கு நீங்க ரொம்ப ஆசையா இருந்தீங்க. உங்களை தடுத்து கஷ்டப்படுத்த எனக்கு மனசு வரல.” சங்கடமாய் சொன்னாள் ருக்கு. அன்று ஆகாத தெய்வக்குத்தம் இன்று ஆகுமா என இடக்காகக் கேள்வி கேட்டால் என்ன செய்ய என்கிற பயம் வந்தது அவளுக்கு.

     “குட் முதன் முதலில் என்னை மட்டுமே யோசிச்சு ஒரு விஷயத்தை பண்ணி இருக்க. உண்மையில் சூப்பர். அம்மை போட்டு இருக்கிறவங்களோட அதே வீட்டில் தங்கி இருக்கிறவங்களுக்கு தான் இந்த ரூல்ஸ் எல்லாம்.

     அந்தக் காலத்தில் எல்லா இடத்திலும் கூட்டுக்குடும்பம் தானே. ஒருத்தர் உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது, இன்னொருத்தர் சந்தோஷமா இருந்தா நல்லா இருக்காதுன்னு, சம்பிரதாயம் என்கிற பெயரில் இப்படிச் சொல்லி வைச்சாங்க. ஆனா அதுக்கு இங்க அவசியம் இல்லையே.

     பட் எனக்காக யோசிச்ச உன்னோட உணர்வை நான் மதிக்கிறேன். நாகாவுக்கு அம்மை இறங்குற வரைக்கும் நான் ஒரு சாமியாருன்னு நினைச்சுக்கிறேன் போதுமா.” என்று சிரித்தான் தெய்வா.

     “அப்ப உங்களுக்கு என் மேல கோவம் இல்லையா” ருக்கு ஆச்சர்யப்பட, “தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் கோவப்பட நான் என்ன நாகாவா.” சிரித்தாலும் தம்பி எப்படி இருக்கிறானோ என யோசித்தான் தெய்வா.

     “உங்க தம்பி, உங்க உரிமை என்ன வேண்ணா கலாய்ச்சுக்கோங்க. நான் கண்டுக்க மாட்டேன் பா. நான் போய் டின்னருக்கு ஆர்டர் கொடுத்துட்டு வரேன்.” என்று சந்தோஷமாக செல்லும் ருக்குவைப் பார்த்து தானும் சிரித்தான் தெய்வா.

     தெய்வா ருக்குவிடம் எதிர்பார்ப்பது எல்லாம் ஒன்று தான். எந்த விஷயத்திற்கு எத்தனை வழியில் அவள் யோசித்தாலும் அதில் முதன்மையாக அவனை வைத்து யோசிக்க வேண்டும் என்பதைத் தான். அவள் இவனுக்காக ஒரு படி இறங்கி வந்தால், அவளுக்காக இவன் இரண்டு படி இறங்கி வர எப்போதும் தயாராகத் தான் இருப்பான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தான்.

     இராதா இல்லத்தில், “இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க. இந்தக் கஞ்சி உடம்புக்கு ரொம்ப நல்லது. சீக்கிரம் செரிமானமும் ஆகிடும். அதனால தைரியமா இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க.” லீலா வழக்கம் போல் நாகாவுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாள்.

     “இல்ல நிஜமாவே எனக்குப் போதும். வயிறு நிறைஞ்சிடுச்சு அண்ணி.” எனத் தன்னையும் அறியாமல் சொல்லிவிட்டிருந்தான் நாகா.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கடவுள் இருக்கான் குமாரு .. நம்ம நாகாவையே நல்ல விதமா யோசிக்க வச்சான் பாரு .. அண்ணியா அய்யோ இதை கேட்க ஊர்மிக்கு கொடுத்து வைக்கலியே.. அதான அண்ணன் தம்பில ஒருத்தர் சரியானா இன்னொருத்தர் ஆரம்பிப்பாங்க போல .. தர்மா என்னப்பா இது ..