Loading

அத்தியாயம் 78

     “சொல்ல வந்ததை சொல்லி முடிங்க தேவகி.” பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னான் தர்மன்.

     “இல்லங்க“ பயங்கரமாகத் தடுமாறினாள் அவள். அவளுக்குக் கணவனைச் சங்கடப்படுத்தவும் மனமில்லை. அதற்காக அக்காக்கள் அங்கே சங்கடத்தில் இருக்கும் போது, இங்கே அவள் மகிழ்வாக இருப்பதில் விருப்பமும் இல்லை. என்ன செய்வது என்று புரியாமல் அமைதி காக்கத் துவங்கினாள்.

     அவள் நிலை தர்மனுக்கும் புரிந்தது. அவள் மனதில் அவள் அக்காமார்கள் இடம்பிடித்த அளவு, தான் தனக்குரிய இடத்தைப் பிடிக்க இன்னும் சில காலங்கள் ஆகலாம். அதுவரை தான் பொறுத்திருப்பதே சிறந்தது என்று புரிந்தது. ஆனால் ஏற்றுக்கொள்ளத் தான் முடியவில்லை.

     திருமணமான அடுத்த நாளே மனைவியின் பிறந்த வீட்டு உறவுகளை விட அவள் மனதில் தான் அதிகம் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் சராசரிக் கணவனாகவே அவனும் இருந்தான்.

     தான் சொன்னால் மனைவி தன்னோடு இங்கேயே இருக்கச் சம்மதிப்பாள் தான். ஆனால் அவள் மனம் வீடு சென்றுவிட்ட பின்பு, உடலை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்று புரிந்து கொண்டவனாய் பெருமூச்சு விட்டு தன் மனைவியைப் பார்த்தான். அவள் இன்னமும் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.

     “சரி தேவகி ஊருக்குப் போறதில் தான் உங்க இஷ்டம் னா இப்பவே கிளம்பலாம். ஆனா ஊருக்குப் போறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை நீங்க தெரிஞ்சிக்கணும்.

     அப்ப எங்களுக்கு ஒரு பதினைந்து வயசு இருக்கும். செல்வாவுக்கும், தெய்வாவுக்கும் பதினேழு இருக்கும். நாகாவோட ப்ரண்டு ஒருத்தன் அவனைத் தேடி வீட்டுக்கு வந்தான். அவனோட உடம்பில் அம்மை நோய்க்கான அறிகுறி இருக்கிறதைப் பார்த்து எங்க அப்பா அவனை அவனோட வீட்டுக்குப் போகச் சொன்னாரு.

     ஆனாலும் எனக்கு, செல்வாவுக்கு, தெய்வாவுக்குன்னு மூணு பேருக்கும் அடுத்தடுத்த நாளில் அம்மை போட்டுடுச்சு. முதல்ல செல்வாக்கு தான் வந்துச்சு. செல்வாவுக்கு எப்ப அம்மை போட்டுச்சுன்னு தெரிஞ்சதோ, அப்ப வீட்டை விட்டு வெளியே போனவன் தான் நாகா. இருபது நாளுக்கும் மேல வீட்டு பக்கம் தலை வைச்சுக் கூட படுக்கல.” என்க, பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் தேவகி. பழி வாங்கும் நேரமா இது என்பது போல் இருந்தது அவள் பார்வை.

     “வீட்டு வேலை செய்யுற வேலைக்காரங்க எல்லோருக்கும் லீவு கொடுத்து அனுப்பிட்டு, அப்பா ஒருத்தரா எங்க மூணு பேரையும் பார்த்துக்கிட்டாரு.

     இந்த இடத்தில் இன்னொரு விஷயம் சொல்லணும். அரசுவை ஏன் எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிக்கும் தெரியுமா? இது நடந்த நேரம் அவனுக்கும் எங்க வயசு தான். எப்பவும் அப்பா பின்னாடியே தான் சுத்துவான். அவனுக்கும் உடம்புக்கு எதுவும் ஆகிடுமோன்னு பயந்து, அவனை வெளியே தங்கிக்கச் சொல்லி அப்பா எவ்வளவோ சொன்னாரு.

     ஆனா அவன் எங்க கூட இருந்து எங்களுக்குத் தேவையான ஒவ்வொன்னயும் பார்த்துப் பார்த்து செஞ்சான். குளிக்க வைச்சு, மருந்து போட்டு விட்டு, கசாயம் குடிக்க வைச்சுன்னு அப்பாக்கு இணையா எங்களைப் பார்த்துக்கிட்டான்.

     எங்களுக்கு இதையெல்லாம் செய்யணும் னு அவனுக்கு என்ன தலையெழுத்து சொல்லு. கடமையா இல்லாம பொறுப்பாப் பார்த்துக்கிட்டான். ஆனா அந்த நாகா ப்ரெண்ட் வீட்டுல போய் நல்லா செட்டில் ஆகிட்டான்.” என்க, கணவனின் கோபத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து சங்கடப்பட்டாள் தேவகி.

     “இருபது நாளுக்கு அப்புறம் வீட்டுக்குத் திரும்பி வந்தவன் கேட்ட முதல் கேள்வி என்னன்னு தெரியுமா தேவகி. அம்மை வந்தும் மூணு பேரும் சாகலையான்னு தான்.“ என்க, கண்களை அழுந்த மூடித்திறந்தாள் அவள்.

     “அரசுவுக்கு எங்க மேல இருந்த அக்கறை கூட அவனுக்கு இருந்தது இல்ல. இப்ப அவனுக்கு அம்மை போட்டுருக்குன்னு அவனுக்கு உதவி பண்ண என் பொண்டாட்டி நீங்க கிளம்புறீங்க. எனக்கு என்ன சொல்றதுன்னு ஒன்னும் புரியல.” அத்தனை கசப்பாகச் சொன்னான் தர்மா.

     “அவர் அப்படிப் பண்ணா நாமளும் திரும்பி அதையே பண்ணனுமா என்ன. அதோட நான் ஒன்னும் அவரைப் பார்த்துக்க அங்க போறேன்னு சொல்லல. கர்ப்பவதியா இருக்கிற என்னோட அக்காவைப் பார்த்துக்கதான் போகலாமான்னு கேட்கிறேன்.

     முக்கியமான விஷயம் போகலாமான்னு தான் கேட்கிறேன். நீங்க போக வேண்டாம் னு சொன்னாலும், நான் தப்பா நினைக்க மாட்டேன். என் ஊர்மிக்கா என்னைத் தப்பா எடுத்துக்க மாட்டாங்க.

     நான் உங்களையும் என்னோட அக்காங்களையும் ஒன்னாப் பார்க்கத் தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா எல்லா நேரத்திலும் அப்படிப் பார்க்க முடியாது. இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து தராசு யாராவது ஒருவர் பக்கம் சாயத்தானே செய்யும்.” என்றுவிட்டு அமைதியானாள் தேவகி.

     மனைவியை ஆழ்ந்த பார்வை பார்த்து இடவலமாகத் தலையாட்டிவிட்டு கிளம்புவதற்கான ஏற்பாடுகளைப் பார்ப்பதற்காக அங்கிருந்து கிளம்பிச் சென்றான் தர்மா.

     லீலா, ருக்கு, ஊர்மி, தேவகி எனப் பெண்கள் நால்வரில் பொதுவாகவே ஊர்மி சற்றே சுதாரிப்பானவள். யாரிடம் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்பொழுது என்ன பேச வேண்டும் என்று சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வாள். துடிப்பானவள், துடுக்குத்தனம் நிறைந்தவள், தைரியமானவள் அதே சமயம் ஆகச்சிறந்த குணக்காரியும் கூட.

     அவளுக்கும் ஒரு பலவீனம் உண்டு. அவளுடைய உற்றவர்கள் யாரும் நோய்வாய்ப்பட்டு இருந்தால் அவளால் தாங்க முடியாது. மொத்தமாக உடைந்து போவாள். அவர்கள் நால்வரின் தாய் பரமேஸ்வரி மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நாளும் பொழுதும் இவர்களின் கண் முன்னால் கஷ்டப்பட்டு, ஊர்மியின் கரத்தைப் பிடித்தவண்ணம் உயிர் நீத்தது அவளைப் பயங்கரமாகப் பாதித்து இருந்தது. அதில் இருந்து யாருக்கும் சின்னதாய் வந்தால் கூட  அத்தனை பதறுவாள் ஊர்மி.

     கணவன் நாகாவின் உடல்நிலை அவளைக் கடுமையாகப் பாதித்து இருக்க, வெளியூரில் தேனிலவுக்காகச் சென்று இருக்கும் தங்கையிடம் இதை இப்பொழுது சொல்லத்தான் வேண்டுமா என்கிற யோசனை இல்லாமல், தன் கவலைகள் அனைத்தையும் கொட்டி முடித்திருந்தாள்.

     தேவகி முடிந்தவரை விரைவாக கிளம்புவதாகச் சொன்ன போது கூட, வேண்டாம் என்று தடுக்கத் தோன்றவில்லை அவளுக்கு. லீலா நாகாவைக் கவனிக்கிறேன் என அவனுடனே இருந்து கொள்ள, தனிமைக்குத் துணையாக யாரும் வந்துவிட மாட்டார்களா என்னும் பயத்தில் சற்றும் யோசிக்காமல் சரி என்று சொல்லி இருந்தாள் ஊர்மி.

     அத்தோடு விட்டாளா என்றால் இல்லை. அந்த நேரம் பார்த்து ருக்கு அழைத்திருக்க, அழைப்பை ஏற்றதும் அழ ஆரம்பித்தாள்.

     “ஊர்மி என்னாச்சு உனக்கு. எதுக்கு அழுதுட்டு இருக்க. முதல்ல அழுகையை நிப்பாட்டு அக்கா சொல்றேன்ல.” சொன்ன ருக்குவிற்கும் என்னவோ எனப் படபடப்பாக இருந்தது.

     “ருக்குக்கா அவருக்கு ரொம்ப உடம்பு சரியில்லக்கா. லீலாக்கா என்னை அவரைப் பார்க்கவே விட மாட்றாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல. யாருமே பக்கத்துல இல்லாம தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குக்கா.” அழுகைக்கு நடுவில் சிரமப்பட்டு சொல்லி முடித்தாள்.

     “லூசுப் பொண்ணே விஷயம் என்னன்னு சொல்லாம, இப்படி அழுதுக்கிட்டே இருந்தா நான் என்னன்னு நினைக்க.” நெஞ்சைப் பிடித்துக்கொண்டே பேசினாள் ருக்கு.

     பெண்கள் நால்வர் மட்டும் வசித்த குடும்பத்தில் ஒரு விசித்திரமான பழக்கம் உண்டு. யார் அழுகிறார்கள் என்பதைப் பொறுத்து பிரச்சனையின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம்.

      ருக்கு மட்டும் அழுதால் சின்னப்பிரச்சனை என்று கடந்து விடுவார்கள். ருக்குவோடு சேர்த்து தேவகியும் அழுது ஊர்மி சமாதானம் செய்தால் சமாளிக்கக் கூடிய அளவில் பிரச்சனை என்று பொருள். ஊர்மி மட்டும் அழுதால் யாருக்கோ உடல்நிலை சரியில்லை என்று அர்த்தம். எல்லோரையும் தாண்டி லீலா அழுதாள் என்றால் பிரச்சனை மிகவும் பெரியது என்று அர்த்தம்.

     ஊர்மியின் பேச்சில் நாகாவுக்குத் தான் என்னவோ என்பது வரையே புரிந்தது ருக்குவிற்கு. “அக்கா அவருக்கு பெரியம்மை போட்டு இருக்குக்கா. அவரால பேச முடியல, சாப்பிட முடியல, எழுந்து உட்கார முடியல. உடம்பு வேற ரொம்ப அனலா இருக்குக்கா.” தவிப்பாய் சொன்னாள் ஊர்மி.

     “அம்மை போட்டு இருக்கா. பயப்படாத ஊர்மி ஒன்னும் ஆகாது. லீலா அக்கா, செல்வா மாமா, வடிவேல் மாமா, அரசு அண்ணா எல்லோரும் இருக்காங்க தானே. அப்படியெல்லாம் உன் புருஷனை விட்டுட மாட்டாங்க.” ஆறுதலாய் சொன்னாள்.

     “எல்லோரும் அவரைப் பார்த்துப்பாங்க தான். ஆனா என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” தவிப்பாய் சொன்னாள்.

     “ஊர்மிம்மா எதுக்கு இவ்வளவு பயப்படுற. சாதாரண அம்மை தான். பத்தே நாளில் காணாமப் போயிடும்.” என்கிற தமக்கையின் குரலுக்கு சில நொடிகள் அமைதியாக இருந்தவள், “அக்கா நீ கிளம்பி வரியாக்கா.” மனதில் தோன்றியதை மனதோடு நிறுத்திக்கொள்ளாமல் கேட்டே விட்டாள் ஊர்மி.

     “ஊர்மி இன்னைக்கு தான் இங்க வந்தோம். இப்பவே கிளம்பச் சொன்னா உங்க மாமா கோபப்படுவாரு. ஏற்கனவே என் கோணல் புத்தியால் நான் அவரை நிறையவே படுத்தி இருக்கேன். இப்பவும் இப்படிச் செய்தா அவர் திண்டாடிப் போயிடுவார் டா. ஒரு வாரம் பொறுத்துக்கோ, உன் மாமாகிட்ட எப்படியாவது தாஜா பண்ணி நான் அவரையும் சேர்த்துக் கூட்டிட்டு வந்திடுறேன்.” நம்பிக்கையாய் சொன்னாள்.

     “நீ இப்படிச் சொல்லுவன்னு நான் எதிர்பார்க்கவே இல்லக்கா. உனக்கு என்னை விட, நேத்து வந்த மாமா ரொம்ப முக்கியமா போயிட்டாரு.” என்ன பேசுகிறோம் என்று புரியாமல் கண்டதையும் பேசினாள் ஊர்மி.

     “ஊர்மி என்ன பேச்சு பேசுற நீ. நான் மட்டும் அங்கே இருந்தேன்னு வைச்சுக்கோ கன்னம் பழுத்து இருக்கும்.” என்றவள் சற்றே நிதானித்து, “நீ பயத்துல இருக்க ஊர்மி. அதனால் உனக்கு எல்லாமே தப்பா தான் தெரியும். நாளைக்கே உன் புருஷன் சரியானதுக்கு அப்புறம் நீ என்கிட்ட சொன்ன இந்த வார்த்தையை நினைச்சு நீயே ரொம்ப வறுத்தப்படுவ.” தங்கையைத் தெரிந்தவளாய் சொன்னாள் ருக்கு.

     “ஸ்சாரிக்கா நான் தான் தப்பு.” உடன் ஒப்புக்கொண்டாள் ஊர்மி. அதீத பயத்தில் கண்டதையும் செய்து வைக்கிறோம் என்பது புரிந்தாலும் தைரியம் சொல்ல அருகே ஆள் இல்லாதது அவளை கண்டதையும் செய்ய வைத்தது.

     “பரவாயில்ல விடு, நான் எதையும் பெருசா எடுத்துக்கல. என் தங்கச்சி நீ பேசினதில் நான் குறைஞ்சு போயிட மாட்டேன். நான் லீலாக்கா கிட்ட பேசுறேன். அவங்க உனக்குப் போன் பண்ணி, உன் புருஷனை உன்கிட்ட பேச வைப்பாங்க. அவர் பேசினதுக்கு அப்புறமாவது கண்டதையும் போட்டு மனசைக் குழப்பிக்காம அமைதியா இரு. நான் வைச்சிடுறேன்.” மனதே இல்லாமல் அழைப்பைத் துண்டித்தாள் ருக்கு.

அறைக்குள்,

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாயவில்லை,

ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி…

எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்,

நீ தாண்டிப் போன போது அது தரையில் விழுந்ததடி

கையில் இருந்த ரோஜாப் பூங்கொத்தை தன் மனைவியாக நினைத்து பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்த தெய்வா, அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும், கையில் இருந்தததை  முதுகுகிற்குப் பின்னால் மறைத்துக்கொண்டான்.

     தங்கையைப் பற்றிய எண்ணத்திலேயே தன்னைப் போல் கணவன் சொல்லி இருந்த அறை எண்ணைக் கண்டுபிடித்து வந்த ருக்கு, தான் நுழைந்த அறையின் அலங்காரங்களைப் பார்த்து ஒரு நிமிடம் மூச்சடைத்துப் போனாள்.

     அறையின் மேல் சுவர் முழுக்க சிகப்பு இதய வடிவ ஹீலியம் பலூன்கள் ஒட்டிக் கொண்டிருக்க, இடப்பக்க வலப்பக்க சுவரின் வெற்றிடங்களை வண்ண வண்ண பூக்கள் தோரணங்களாய் மாறி நிறைத்திருந்தது.

     அறையின் நடுவில் இருந்த மெத்தையில் ரோஜா இதழ்களால் ஆன இரட்டை இதயம் வரையப்பட்டு அதன் நடுவே “D” மற்றும் “R” என்ற எழுத்துக்கள் எழுதப்பட்டு இருந்தது.

     அறைக்குள் நிலவிய இனிய நறுமணம் அவள் நாசியைத் துளைத்து, இதயத்தில் நிறைந்தது. தனக்காகத் தன் கணவன் செய்த ஒவ்வொன்றையும் ரசனையுடன் பார்த்துக்கொண்டு தன்னையும் அறியாமல் அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் அவள்.

     அவள் சரியான இடத்திற்கு வந்ததும், தெய்வா ஒரு கயிற்றைப் பிடித்து இழுக்க ருக்குவின் மேல் பூ மழை பொழிய ஆரம்பித்தது. பல வண்ணங்கள் மற்றும் வித்தியாசமான நறுமணங்களைச் சுமந்து பெய்யும் பூமழை என்பதால், மிகக்குறுகிய நேரத்திற்குள் அறைக்குள் இதுவரை வீசிக் கொண்டிருந்த செயற்கை நறுமணத்தை இந்தப் பூமழை தோற்கடித்தது.

     ருக்கு ஆனந்த அதிர்ச்சியில் இருக்க, அந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீள்வதற்கு முன்பே தான் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை அவள் முன் நீட்டி இருந்தான்.

     “என்னங்க இதெல்லாம்.” ஆச்சர்யம் மற்றும் ஆனந்தம் இரண்டும் கலந்த கலவையில் கேட்டாள் அவள்.

     “இப்படி சினிமாத் தனமாச் செய்யுறது எதுவும் எனக்குப் பிடிக்காது. எதுவும் இயல்பா நடக்கணும் னு நினைக்கிறவன் நான். ஆனா ஒருநாள் நான் நம்ம ரூமுக்குள் வந்தது கூடத் தெரியாம, ஏதோ ஒரு நாடகத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு ப்ரப்போஸ் பண்ற சீனை அவ்ளோ இரசனையோட பார்த்துக்கிட்டு இருந்தீங்க. அதான் நானும் இப்படி.” என்று கண்சிமிட்டினான்.

     “ஐயோ நான் ஏதோ சும்மா ரசிச்சேன். அதுக்காக இப்படியா சின்னப்பசங்க மாதிரி. உங்க வேலை என்ன, கெத்து என்ன எனக்காக போய் இப்படியெல்லாம்.” வெட்கமாய் வந்து தொலைத்தது அவளுக்கு.

     “நான் சின்ன வயசைக் கடந்துட்டேனா என்ன?” அவன் சிரிக்க, “ஐயோ அப்படியில்லை.” பயங்கரமாகத் தடுமாறினாள் ருக்கு.

     “ருக்கு, நமக்கு நடுவில் கிட்டத்தட்ட இரண்டு வயசு தான் வித்தியாசம். ஆனால் நான் பார்த்து வளர்ந்த சூழ்நிலை வேற. நீங்க பார்த்து வளர்ந்த சூழ்நிலை வேற. அதனால் இரண்டு பேரோட எதிர்பார்ப்புகளிலும், ரசனைகளிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கத் தான் செய்யும். உங்க விருப்பங்கள் எல்லாத்தையும் என்னால் நிறைவேற்ற முடியாமல் போனாலும், சில பெரிய விருப்பங்களை நிறைவேற்ற முடியும்.” என்க, மனதாரப் புன்னகைத்தாள் அவள்.

     “ஆனா ஒன்னு, நான் இப்படியெல்லாம் செஞ்சேன்னு நம்ம வீட்டில் யாருக்கும் தெரியக்கூடாது. குறிப்பா உங்க அக்கா தங்கச்சிங்களுக்கு.” தெய்வா சொல்லவும் சத்தமாகச் சிரிக்கத் துவங்கினாள் ருக்கு.

     “உங்க முகத்தில் இருக்கிற இந்த சந்தோஷம் ஆயுளுக்கும் நிலைக்கணும். அதே மாதிரி என் மனசில் உங்களுக்காக இருக்கும் நேசம் நான் சாகும் வரைக்கும் அப்படியே இருக்கணும்.” எதிர்பார்ப்போடு சொன்னவன் பூங்கொத்தை வாங்கிக் கொள்ளுமாறு கண்களால் சைகை செய்தான்.

     கணவனின் கண்ணில் கண்ட கரையில்லாத கடலைப் போன்ற காதலை கண்ட ருக்கு அனைத்தையும் மறந்தாள் ஏன் தன்னையும் மறந்தாள்.

     அந்த நிமிடமே உயிருள்ள பொம்மையாகி கணவனின் கைகளில் தவழ நினைத்தாள். அவன் மார்போடு கவசமாய் ஒட்டிக்கொள்ள, கையணைப்பில் குழந்தையாய் உறக்கம் கொள்ள, கன்னங்களில் சந்தனமாய் குழைய அத்தனை ஆசை வந்தது.

     ருக்குவின் முகத்தைக் கொண்டே அகத்தை அறிந்த தெய்வா, இதழோரம் சின்னச்சிரிப்புடன் கைகளை விரிக்க, கண்களில் பெருகிய ஆனந்தக் கண்ணீருடன் அவன் கைகளுக்குள் ஆனந்தமாய் அடைந்து கொண்டவள், தங்களுக்கு இடையில் காற்று கூட விடக்கூடாது என்று முடிவெடுத்தவள் போல் அவனை இன்னும் இன்னும் தன்னோடு இறுக்கினாள்.

     “என்னோட சர்ப்பரைஸ் புடிச்சிருக்கா?” தெய்வா கேட்க, அவன் முதுகின் புறம் இருந்தவாறே தலையை ஆட்டி தன் பதிலைக் கொடுத்தாள்.

     “ருக்கு நாம ஏற்கனவே ரொம்ப காலம் தாழ்த்தித்திட்டோம். இதுக்கு மேலும் வேண்டாம் னு நினைக்கிறேன், என்ன சொல்ற உனக்கு ஓகே வா.” கேட்டேவிட்டான்.

     அந்த நிமிடத்தில் தங்கை தனித்திருக்கிறாள், அக்கா சிரமப்படுகிறாள் என்பதை எல்லாம் மறந்துவிட்டாள் ருக்கு. அவள் மனம், உடல் என அனைத்தும் தெய்வா வசம் சென்றுவிட்டது.

     தான் எத்தனையோ முறை அவனுடைய பேச்சைக் கேட்காமல் வருத்தப்பட வைத்திருக்கிறோம். அவனுக்கு பிடிக்காததை எல்லாம் வரிசையாய் செய்திருக்கிறோம். எந்த ஒரு புது மனைவியும் செய்யக்கூடாத செயலை கூடச் செய்து இருக்கிறோம். அக்கா, தங்கைகளுக்காக எத்தனையோ முறை அவனை விட்டுக்கொடுத்து பேசியிருக்கிறோம்.

     அது எல்லாவற்றையும் மறந்து, தன் மேல் கொண்ட காதலை மட்டுமே தாங்கி தன்னுடைய சம்மதத்திற்கு காத்திருக்கும் கணவனை இன்னும் இன்னும் காக்க வைக்கவோ இல்லை அவன் தம்பியின் நிலை, தன்னுடைய அக்கா தங்கையின் நிலையை சொல்லி அவன் இருக்கும் ஆசையான நிலைப்பாட்டை கெடுக்கவோ ருக்குவிற்கு மனம் வரவில்லை. அதனால் அவனுடைய கேள்விக்குச் சம்மதமாகவும், அவனை இன்னும் சந்தோஷப்படுத்தும் விதமாகவும் அவனுடைய கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் பதித்தாள் ருக்கு.

     “ருக்கு என்னோட பொண்டாட்டி, அழகான ராட்சசியே. நான் இங்க ரூம் முழுக்க செக் பண்ணிட்டேன், தப்பா எதுவும் இல்லை. அதனால உன்னோட மனசில் கொஞ்சம் கொஞ்சம் ஏதாவது தயக்கம் இருந்தாலும் அதை உதறித் தள்ளு. இதுக்கு அப்புறம் நாம எத்தனை முறை சேர்ந்தாலும், அது இதுக்கு இணை கிடையாது.

     இந்த நேரத்துல உன்னோட புத்தி, மனசு, உடம்பு, உணர்வு எல்லாத்திலும் உன் புருஷன் இந்த தெய்வா மட்டும் தான் இருக்கணும். இது என்னோட பேராசை தான். ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டு எனக்காக நிறைவேற்றி வை என் செல்லம்.” வார்த்தைகளால் சொல்லிவிட்டு கண்களால் கெஞ்சினான் தெய்வா.

     அதற்கு அவள் கண்ணாட்டியும் கண்களாலேயே பதில் சொல்ல, சிரிப்புடன் விளக்கை அணைத்தவன் தன்னவளையும் அணைத்தான். நெற்றியில் பதிந்தது அவனுடைய முதல் முத்தம். அதுவரை மட்டுமே இருவரும் அறிவர் அதன்பிறகு அவர்களுக்கே தெரியாத ஒரு மாயவலைக்குள் சிக்கி, மீளமுடியாமல் துணையாக தன் துணையைத் தேடிக் கண்டுபிடித்து, தொலைத்து மீண்டும் கண்டுபிடித்து விளையாடினார்கள். அழகான கணவன் மனைவி இருவருக்கும் அந்த இரவு விடியா இரவாகிப் போனது. அதில் அவர்கள் இருவருக்கும் ஆனந்தமே.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
14
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஒருவழியா லவ்வர் பாய் கவுத்துட்டாரு .. டாக்டர் மட்டும் தான் சாமியாரா இருக்கார் .. லீலாவுக்கு பொறுப்பு அதிகம் தான் .. டாக்டர் இன்னும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கணும் போல .. தர்மா நீ குட் பாய் தான் பா ..