Loading

அத்தியாயம் 77

     “இந்த ஒரு போட்டோவை வைச்சு நீங்க செல்வாவை சந்தேகப்படுறதை என்னால ஏத்துக்க முடியாது அங்கிள். செல்வா பரிசுத்தமானவன். அவனுக்குத் தப்பு பண்ணத் தெரியாது.

     இந்த போட்டோஸ் எல்லாம் கம்ப்யூட்டர் பண்ண ஜாலமாக் கூட இருக்கலாம். இருக்கலாம் என்ன இருக்கலாம் கண்டிப்பா அப்படித்தான் இருக்கும்.” கடுகடுப்பாய் சொன்னான் அரசு.

     “டேய் நீயே இந்தளவுக்கு யோசிக்கும் போது, என் வயசுக்கும் அனுபவத்துக்கும் நான் யோசிக்க மாட்டேனா. செல்வா நான் பெத்த பையன். அவன் தப்பா போய்ட்டான்னு சந்தேகப்படல, தப்பா போயிடக் கூடாதேன்னு வருத்தப்படுறேன்.” எனத் தன் நிலையை விளக்கினார் வடிவேலு.

     “உங்க வார்த்தைகளோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா அங்கிள். செல்வா லீலாவை விட்டுட்டு இந்த போட்டோவில் இருக்கிற பொண்ணு பின்னாடி போயிடுவான்னு பயப்படுறீங்களா?

     உங்களோட பையன் அப்படிப்பட்டவன்னு உங்களால நினைக்க முடியுதா? வயசாக வயசாக கண்டதையும் பேசுறீங்க. எனக்கு இது சுத்தமாப் பிடிக்கல.” கடுப்பாய் வந்தது அரசுவிற்கு.

     “என்னால சரியா சொல்ல முடியல அரசு. இது முதல் முறை வரும் போட்டோ இல்ல. இத்தோட நாலாவது முறை. முதல் இரண்டு முறை யாரோ பணம் பறிக்க நினைச்சு பண்றாங்கன்னு நினைச்சுக் கடந்துட்டேன். ஆனால் ஒவ்வொரு முறை அனுப்பும் போதும் போட்டோவில் இருக்கும் இரண்டு பேரோட நெருக்கமும் அதிகமாகிட்டே வருது.

     இந்தப் பொண்ணுக்கும், நம்ம செல்வாவுக்கும் நடுவுல ஏதோ  பெரிய விஷயம் இருக்கு அரசு. என்னோட கவலை எல்லாம் அந்த விஷயம் லீலாவை பாதிச்சிடக் கூடாதுங்கிறது தான்.

     பசங்க நாலு பேருக்கும் அக்கா, தங்கச்சிங்களைக் கல்யாணம் பண்ணி வைச்சிட்டேன்னு நினைச்சு நான் ரொம்ப பெருமைப் பட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா எப்ப என் பசங்க பண்ணி வைச்ச வேலையில் மருமகப் பொண்ணுங்க கோச்சுக்கிட்டு வெளியே போனாங்களோ அப்ப இருந்து, எங்க என்னோட முடிவு தப்பா முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு.” என்றார்.

     அரசு புரியாமல் பார்க்க, “நாலு ஜோடியில் ஏதாவது ஒரு ஜோடிக்குள்ள சின்னப் பிரச்சனைன்னு வந்தாக் கூட, ஒன்னைத் தொட்டு இன்னொன்னுன்னு வந்து, என் நாலு பசங்களோட வாழ்க்கையும் வீணாப் போயிடுமோன்னு பயம் என் நெஞ்சுக்குழியை நெருப்பால் நிறைக்கிது.” வருத்தமாகச் சொன்னார்.

     “நீங்க வீணாக் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க. அந்த மாதிரி எதுவுமே நடக்காது. நான் செல்வாவை முழுசா நம்புறேன். நீங்க நினைக்கிற மாதிரி அந்த பொண்ணுக்கும் அவனுக்கும் நடுவில் ஏதாவது விட்ட குறை தொட்ட குறை இருக்கலாம். ஆனா அது கண்டிப்பா தப்பானதா இருக்காது.” முழு நம்பிக்கையோடு சொன்னான் அரசு.

     அவனுக்கும் செல்வாவின் நடவடிக்கையில் சற்றே மாறுதல் தெரியத்தான் செய்தது. ஆனால் அவன் தவறான பாதை போக மாட்டான் என்பதில் லீலாவை விட, வடிவேலுவை விட அத்தனை உறுதியாக இருந்தான்.

     நாகா மயங்கி விழுந்ததைப் பார்த்ததும் பதறிப் போய் தன் நிலையைக் கூட மறந்தவளாய் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்த ஊர்மி வயிற்றில் அன்று போல் இன்றும் தசைப்பிடிப்பு உண்டாகி, சுருக்கென்ற வலியை உணர்ந்து பதறிப் பின் மெதுவாக எழுந்தாள்.

     தங்கைக்கு முன் வேகமாக நாகாவின் அருகே சென்ற லீலா, அவனுடைய முகத்தில் இருந்த சிறு சிறு கொப்புளங்களைப் பார்த்ததும் சுதாரித்து, ஊர்மியை சைகை காட்டி அவள் நின்று கொண்டிருந்த இடத்திலேயே நிற்க வைத்தாள்.

     நாகாவின் நெற்றி, கழுத்து, கை எனத் தொட்டுப் பார்த்தவளுக்கு அவன் உடலின் அனல் நன்றாக தெரிந்தது.

     “ஊர்மி இவருக்கு அம்மை போட்டு இருக்கு. நீ இந்த நிலைமையில் இவர் கிட்ட வருவது நல்லதுக்கு இல்ல. கொஞ்சம் தள்ளி நில்லு. செல்வா மாமாவுக்குப் போன் பண்ணி உடனடியா வீட்டுக்கு வரச் சொல்லு.” பதற்றமாய் சொன்னாள் லீலா.

     “அக்கா நான் அவர் பொண்டாட்டிக்கா. அவர் பக்கத்தில் நான் வரக் கூடாதுன்னா எப்படி. அம்மை தானே, அதெல்லாம் ஒன்னும் செய்யாது.” என்றபடி கணவனை நெருங்கப் பார்த்த தங்கையை முறைத்தாள் லீலா.

     “அவர் உன் புருஷன் தான். நான் இல்லன்னு சொல்லல. உன் உரிமையைக் காட்டுறதுக்கு இது சரியான நேரமோ, இடமோ கிடையாது. அவருக்கு வந்திருக்கிறது ஒரு தொற்று வியாதி. இந்த நேரத்தில் நீ பக்கத்துல வந்தா அது உனக்கும் வர வாய்ப்பிருக்கு.

     கர்ப்பமா இருக்கிற நேரத்தில் உனக்கும் உன் குழந்தைகளுக்கும் இது நல்லது இல்ல. முதலில் நீ ரூமுக்குள்ள போ. உன் புருஷனை நான் பாத்துக்கிறேன். அம்மை நல்லபடியா இறங்கினதுக்கு அப்புறம் நீ இருபத்திநாலு மணி நேரமும் அவர் கூடவே இருக்கலாம். இப்ப போ ஊர்மி.” கோபமாக ஆரம்பித்து கெஞ்சலாக முடித்தாள் லீலா.

     “நீ போய் எப்படிக்கா அவரை.” கணவனின் குணம் தெரிந்ததால் தடுமாறினாள் ஊர்மி.

     “ஏன் நான் அவரைப் பார்த்துக்க மாட்டேனா. எனக்கு ஒரு தம்பி இருந்தா நான் எப்படிப் பார்த்துப்பேனோ அப்படி பார்த்துப்பேன் நீ கவலை படாதே.” தைரியம் சொன்னாள் தமக்கை.

     “மாமா உன்னை ஏதாவது சொல்லிடப் போறாருக்கா.” இராதா இல்லத்தின் இராஜகுமாரன்கள் எப்போது எப்படி நடந்து கொள்வார்கள் என்று தெரியாது என்பதால் வந்த பயம் அவளை இப்படியெல்லாம் பேச வைத்தது.

     “உன் மாமாகிட்ட போய் உங்க தம்பிக்கு உடம்பு சரியில்லை நீங்க கூட இருந்து பார்த்துக்கோங்கன்னு சொன்னா தான் ஏதாவது சொல்வார். நான் அவரைப் பாத்துக்குறேன் தப்பா எடுத்துக்காதீங்கன்னு சொன்னா, ஒன்னும் சொல்ல மாட்டாரு புரிஞ்சிப்பாரு.” கணவனை அறிந்தவளாய் சொன்னாள் லீலா.

     அப்போதும் ஊர்மியின் முகம் தெளியாமல் இருக்க, “அம்மை இறங்குற வரைக்கும் யாராவது ஒருத்தர் பக்கத்துல இருந்து பார்த்துக்கிட்டு, நேரத்துக்கு சாப்பாடு எல்லாம் கொடுக்கணும். எல்லாம் முறையாப் பண்ணா ரொம்ப சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் பயப்படாத.” என்ற லீலா தோட்ட வேலை பார்க்கும் ஒருவன் உதவியுடன் நாகாவை மெதுவாக அவனுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். ஊர்மி அழுதுகொண்டே தனி அறைக்குச் சென்றாள்.

     நாகாவை மெத்தையில் படுக்க வைத்தவுடன், “இந்த நேரத்துல மெத்தையில் படுக்க கூடாதும்மா. தரையில் போர்வை விரிச்சு, அதில் நிறைய வேப்பிலை போட்டு அதில் தான் படுக்கணும்.

     மஞ்சள், சந்தனம் அரைச்சு கொப்புளங்களில் எல்லாம் போடணும். எண்ணெய் பதார்த்தம் எதுவும் அம்மை இறங்குற வரைக்கும் வீட்டில் செய்யக் கூடாது. துக்க நிகழ்வுகளுக்கு போகக் கூடாது.

     துளசி தீர்த்தம், இளநீர் மாதிரி குளிர்ச்சியான பொருள்கள் அப்பப்ப கொடுக்கணும். நிறைய தண்ணீர் குடிக்க வைங்க. அம்மை இறங்குர வரைக்கும் குளிக்க வைக்கக் கூடாது. முக்கியமான விஷயம் எல்லோரும் வந்து இவரைப் பார்க்கக் கூடாது. மீறினா அவங்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கு.” நன்மை நினைத்து அவர் சொன்ன அனைத்தையும் பணிவுடன் கேட்டுக்கொண்டாள் லீலா.

     அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் வேலையாட்கள் உதவியுடன் வீடு முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து, நாகாவின் அறையில் ஆரம்பித்து ஒவ்வொரு அறையின் வாசலிலும் வேப்பிலை தோரணம் கட்டி முடித்து, தரையில் நாகாவிற்கான படுக்கையைத் தயார் செய்த லீலா நோயுற்றவனை எழுப்ப, தொடு உணர்வில் மெதுவாகக் கண் விழித்தவன், எதிரே நின்ற லீலாவை பார்த்ததும் சங்கடமாக உணர்ந்தான்.

     “நீங்க எதுக்காக இங்க இருக்கீங்க. ஊர்மி இல்ல செல்வாவை வரச் சொல்லுங்க, ” மிக மிக மென்மையான குரலில் சொன்னான்.

     நாக்கை அடக்குங்க இல்லன்னா ஒருநாள் இல்ல ஒருநாள் அந்த சாமி உங்க நாக்கைக் குத்தும் என்று ஊர்மி விளையாட்டாகச் சொன்னாலும், அது நாகாவின் விஷயத்தில் அப்படியே பலித்திருந்தது. நாக்கிலும் அம்மை வார்த்து இருக்க, பேசுவதற்கே பயங்கரமாகச் சிரமப்பட்டான் அவன்.

     “நாக்கிலும் அம்மை வார்த்து இருக்கு போல.” எனத் தன்னோடு வருந்திய லீலா, “சங்கடப்பட வேண்டாம். கொஞ்சம் நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுத்தா எல்லாம் சரியாப் போயிடும்.” என்றாள்.

     “நீங்க வேண்டாம்.” என அப்போதும் தடுமாற்றமாய் சொன்னான் நாகா.

     “நீங்க என்ன உங்க பொண்டாட்டியோட அக்காவா நினைக்க வேண்டாம். உங்க அண்ணனோட பொண்டாட்டியா நினைக்க வேண்டாம். உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல் போனா உங்களைப் பார்த்துக்கிற நர்ஸ் மாதிரி நினைச்சுக்கோங்க.

     அம்மை போட்டவங்களை ஒருத்தர் பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறது தான் நல்லது. இப்போதைக்கு ஊர்மி உங்க பக்கத்தில் வருவது அவளோட உடம்புக்கு நல்லது இல்ல. நான் உங்களைப் பார்த்துக்கிறேன்.” என்றாள்.

     “நீங்க எப்படி என்னைப் பார்த்துப்பீங்க, இல்லல்ல சரிவராது வேண்டாம். ஊர்மி வரக்கூடாதுன்னா அப்பா” என்றவன் ஒரு கணம் தடுமாறி, “இல்ல அவருக்கு வயசு அதிகம். அவரால் தாங்க முடியாது. பேசாம செல்வா ஹாஸ்பிடலில் இருந்து நர்ஸ் யாரையாவது வரவழைக்கலாம்.” என்றான்.

     “ஊர்மிகிட்ட சொன்னதைத் தான் நான் உங்ககிட்டேயும் சொல்றேன். எனக்கு ஒரு அண்ணணோ, தம்பியோ இருந்து அவங்களுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா நான் பார்த்துக்கோ மாட்டேனா. இல்ல மாமாவுக்கு உடம்பு சரியில்லாமப் போச்சுன்னா அப்பவும் நான் பார்த்துக்க கூடாதுன்னு நினைப்பீங்களா? நீங்க எப்படியோ, நான் அரசு அண்ணாவோட சேர்த்து எல்லோரையும் என்னோட சொந்தமாத் தான் பார்க்கிறேன்.

     உடம்பு சரியில்லாதவங்களைப் பார்த்துக்க வீட்டில் ஆள் இல்லைன்னா வெளியாளை சம்பளம் கொடுத்து வரவழைக்கலாம். நம்ம வீட்டுக்கு அந்த அவசியம் இல்லையே. அதோட நான் உங்ககூட இருக்கேன். உங்களை நல்லாப் பார்த்துப்பேன் என்கிற நம்பிக்கையில் தான் என் தங்கச்சி அந்த வாயாடி ஊர்மி அமைதியா அவ ரூமுக்குள்ள இருக்கா. இல்லாமப் போனா யார் சொன்னாலும் கேட்காம  அடுத்த நிமிஷம் இங்க வந்திடுவா. அதனால் அமைதியா இருங்க.” என்றோடு பேச்சை நிப்பாட்டினாள் லீலா.

     அந்த நேரத்தில் அறையின் கதவு தட்டப்பட, கதவைத் திறந்த லீலா வெளியே தன் கணவனைக் கண்டதும் சற்றே ஆசுவாசமாகி, “ஏங்க உங்க தம்பிக்கு” படபடப்பாய் விஷயத்தைச் சொல்ல வந்தாள்.

     “தெரியும், ஊர்மி இப்ப தான் போன் பண்ணி சொன்னாங்க. கதவைத் திறங்க நான் உள்ள வந்து பார்க்கிறேன்.” என்றபடி லேசாகத் திறந்திருந்த கதவை அகலமாகத் திறக்க முயன்றான்.

     “இல்லங்க நீங்க உள்ள வந்தா” தயங்கினாள் லீலா.

     “நாகாவைத் தவிர நம்ம வீட்டில் எல்லோருக்கும் சின்ன வயசிலே அம்மை போட்டுடுச்சு. ஒருமுறை அம்மை வார்த்தால் அதற்காக நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் உருவாகி காலத்துக்கும் அந்த நோய் மறுபடி வராதுன்னு சொல்லுவாங்க.  கவலைப்படாம கதவைத் திறங்க.” என்க, தாமதிக்காமல் கதவைத் திறந்தாள் லீலா.

     தம்பியைப் பார்த்த செல்வாவிற்கு என்னவோ போல் ஆனது. “கடவுளே இவ்ளோ அதிகமா அம்மை போட்டு இருக்கு. டேய் லூசு அம்மை போட்டு இருக்கிறது கூடத் தெரியாம அப்படி எங்கடா சுத்திக்கிட்டு இருந்த.” கத்தியவன் நாகாவின் சோர்வான முகத்தைப் பார்த்து என்ன நினைத்தானோ,

     “சரி எதுக்கும் கவலைப்படாதே. நான் இன்ஜக்ஷன் போடுறேன். இரண்டு நாள் பார்ப்போம். அம்மை குறையலன்னா ஹாஸ்பிடல் அட்மிட் ஆகிடலாம், பயப்படாதே.” தம்பிக்கு ஆறுதல் சொன்னவனின்  பார்வை மனைவியின் மேல் படிந்தது.

     “லீலா நீங்க இங்க என்ன பண்றீங்க. முதலில் ரூமுக்குப் போய் தலைக்குக் குளிங்க. உங்க தங்கச்சியும் இவன் பக்கத்தில் வருவது அட்வைஸபிள் இல்லை. ஹாஸ்பிடலில் இருந்து நர்ஸ் ஒருத்தங்களை வரச் சொல்றேன். அவங்க பக்கத்துல இருந்து நாகாவைப் பார்த்துக்குவாங்க.” என்றான்.

     “நர்ஸ் எப்படி நாம பார்த்துக்குற மாதிரி பார்த்துக்குவாங்க.” நாகாவிடம் தைரியமாக நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டவளால் தன் கணவனிடம் சொல்ல முடியவில்லை.

     “சின்னக் குழந்தை மாதிரி பேசாதீங்க லீலா. ஹாஸ்பிடலில் தினமும் எத்தனையோ பேரைப் பார்த்துக்கிறவங்களுக்கு இவன் ஒருத்தனை பார்க்க முடியாதா என்ன. நீங்க இவன் கூட இருந்து உங்களுக்கு எதுவும் ஆகிடுச்சின்னா என்ன பண்றது.” நியாயமாகத் தான் கேட்டான்.

     “ஊர்மி ஒத்துக்க மாட்டாங்க. நானே பார்த்துக்கிறேன். வீட்டில் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லன்னா பொண்ணுங்களுக்கு இயற்கையாவே கொஞ்சம் அதிகம் பதறும் தான். இவரை உங்க தம்பியா நினைக்காம என்னோட தம்பியா நினைச்சுப் பாருங்க. அப்பவும் இப்படித்தான் சொல்லுவீங்களா?” என்க, செல்வாவிடம் பதில் இல்லை.

     “எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீங்க பார்த்துக்கோங்க. நோய்க்காக பயந்து நம்ம வீட்டு ஆளைத் தனியா விட முடியாது இல்லையா?” என்றாள் லீலா.

     “என்னைக்கு தான் நான் சொன்னதைக் கேட்டு இருக்கீங்க. எப்பவும் உங்களுக்கு நீங்க நினைக்கிறது நடந்தே ஆகனுமே. என்னமோ பண்ணுங்க.” கடுகடுப்பாய் சொன்னவன் அறையை விட்டு செல்லப் பார்க்க,

     “என் தம்பியை நான் பார்த்துக்கிறேன்னு நீங்க சொல்லி இருந்தா சந்தோஷமா நான் விலகி இருப்பேன். ஏதோ ஒரு நர்ஸை வரச் சொல்றேன்னு சொல்றீங்களே. மாமாவுக்கு உடம்பு சரியில்லாமப் போனால் கூட இப்படித் தான் சொல்லுவீங்களா?” என்கிற லீலாவின் கேள்விக்கு செல்வாவினால் பதில் சொல்லவே முடியவில்லை.

     “எப்பவும் அவங்க என்னை அண்ணனா நினைக்கல, அதனால் தான் ஒதுங்கிப் போறேன்னு சொல்லுவீங்களே. முதலில் நீங்க இவங்களை உங்க தம்பிங்களாப் பாருங்க. தன்னால் அவங்க உங்களை அண்ணனா ஏத்துப்பாங்க.” அறிவுரை சொன்ன மனைவியைப் பார்த்து பெருமூச்சுவிட்டுக்கொண்டான் செல்வா.

     சிம்லாவில், தேவையான அளவு வெளியே ஊர் சற்றி முடித்து தங்குமிடம் வந்ததும், காலையில் இருந்த அறை இருந்த திசைக்கு எதிர் திசையில் தன்னை அழைத்துச் சென்ற கணவனிடம், “நம்ம ரூம் இந்த பக்கம் இல்லையே.” என்றாள் ருக்கு.

     “அந்த ரூம் கொஞ்சம் வசதியா இல்ல அதனால தான் நான் இந்த ரூமை மாத்திக் கேட்டு இருக்கேன்.” சின்னச் சிரிப்புடன் சொன்னான் தெய்வா.

     “அந்த ரூமுக்கு என்ன குறைச்சல். நல்லா பெருசா வசதியா தானே இருந்துச்சு.” நிலைமை புரியாமல் பேசி வைத்தாள் ருக்கு.

     “கேள்வி மேல கேள்வி கேட்காதீங்க ருக்கு. உங்களுக்குப் பதில் சொல்லி சொல்லியே என் நாக்கு வரண்டு போச்சு. கொஞ்சம் அமைதியா என்கூட வாங்க.” சிடுசிடுப்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்வான். அவன் சிடுசிடுப்பைக் கண்டால் அதற்குப் பிறகு ருக்கு எதற்காகவும் வாயைத் திறக்க மாட்டாள் என்பது இத்தனை நாள்களில் அவன் மனைவியைப் பற்றி கண்டுபிடித்திருந்த பெரிய இரகசியம்.

     அவன் திட்டமிட்டது போலவே, “சரி, நான் உங்ககிட்ட பேசல. ரூம் நம்பர் என்னன்னு சொல்லிட்டு நீங்க போய் ரூமில் வெயிட் பண்ணுங்க. நான் அக்காகிட்ட பேசிட்டு வரேன்.” என்றாள்.

     வழக்கமான தெய்வாவாக இருந்தால் இதற்கு கோபப்பட்டிருப்பான். ஆனால் இப்போது ருக்குவின் இந்த முடிவு கூட அவனுக்குச் சாதகமாக இருக்க, “அவங்க அவங்க எடுக்கிற முடிவு நமக்கு சாதகமா தான் பா அமையுது.” என்று சிரித்தவண்ணம் மனைவி சொன்ன மந்திரத்திற்குத் தலையாட்டினான்.

     “உங்களுக்கு விஷயம் தெரியுமா? உங்க நாகா அண்ணனுக்கு பெரியம்மை போட்டு இருக்காம். லீலாக்கா ஊர்மி அக்காவை அவரைப் பார்க்கவே விடலையாம். பாவம் ஊர்மிக்கா அழுதுட்டு இருக்காங்க.

     இந்த தெய்வா மாமா இல்ல அவர் வேற ருக்கு அக்காவை யார்கிட்டையும் சொல்லாம சிம்லாக்கு கூட்டிக்கிட்டு போயிட்டாராம். பாவம் ஊர்மி அக்கா தனியா கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்க.” என்ற தேவகியை, என்னைக் கோபப்படுத்துவது போல் எதையும் பேசி வைத்துவிடாதே என்பது போல் பார்த்தான் தர்மா.

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. இப்போ ஒரு காமெடி டயலாக் டெடிக்கேட் டூ கருநாகம் .. கொஞ்ச நஞ்ச பேச்சா டா பேசுன 😜😜😜😜

    லீலா என்ன சொன்னாலும் நாலு பேரும் திருந்த மாட்டாங்க ..