
அத்தியாயம் 76
“ருக்கு அதான் வீட்டில் உள்ள எல்லோர்கிட்டேயும் பேசி ஆயிரம் மன்னிப்பு கேட்டுட்டீங்களே, இன்னுமா உங்களுக்குக் கோபம் போகல.
நான் உங்களுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க நினைச்சா, உங்க செயல்கள் மூலமா நீங்க எனக்கு ரொம்பப் பெரிய சர்ப்பரைஸ் கொடுத்துட்டீங்க.
என்கூட தனியா இங்க வந்ததில் உங்களுக்குப் பெருசா சந்தோஷமே இல்லல்ல. உங்களுக்கு என்னை விட உங்க அக்கா தங்கச்சிங்க தான் முக்கியம் னு தெரிஞ்சும், நான் தான் பைத்தியம் மாதிரி என்னென்னமோ பண்ணிட்டேன்.
ஆசையா வந்து இப்படி ஆளுக்கொரு பக்கம் முகத்தை வைச்சிருக்கிறதுக்குப் பதில் பேசாம நம்ம வீட்டுக்கே போயிடலாம்.” கடுப்பாகச் சொன்னான் தெய்வா.
“அப்படியே மண்டையில் இரண்டு போட்டேன்னா தெரியும். பெண்புத்தி பின்புத்தின்னு சொல்லுவாங்க. இங்க போலீஸ்காரன் புத்தி தான் பின் புத்தியா இருக்கு. உங்க கூட இங்கே வந்தது எனக்குப் பிடிக்கலன்னு நான் என் வாயால சொன்னேனா?” தெய்வாவின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்து வார்த்தைகளில் போர் புரிந்தாள் ருக்கு.
“அப்பாடி நான் ரொம்ப பயந்துட்டேன். அப்ப எந்த ப்ளானையும் ட்ராப் பண்ண வேண்டாம்.” எதையோ நினைத்து மனதிற்குள் சந்தோஷப்பட்டுக் கொண்ட தெய்வா, “அப்ப எதுக்காக இப்படி அமைதியா விட்டத்தைப் பார்த்துக்கிட்டு உட்கார்ந்து இருக்கீங்க. வாங்க வெளியில போகலாம் போய் சுத்திப் பார்க்கலாம்.” ஆசையாய் அழைத்தான்.
“அது தான் என் சங்கடமே. என்னோட மொட்டைத்தலைக்கும் இந்த சேலைக்கும் கொஞ்சம் கூட ஒத்து வரல. என்கூட வெளியே வந்தா உங்களைம் சேர்த்து தான் எல்லோரும் ஒரு மாதிரிப் பார்ப்பாங்க.” தயக்கமாய் சொன்னாள்.
“மொட்டை போட்டா முடி வளர மாசக்கணக்கில் ஆகும் னு தெரியாத குழந்தை இல்லையே நீங்க. அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும் கேட்காம வம்படியா போய் தலையைக் காட்டிட்டு வந்துட்டு, இப்ப இதை ஒரு காரணமாச் சொல்லி என் ஆசையை நிராசையாக்கப் பார்க்கிறீங்க.” குறைபடித்தான்.
“ஐயோ என் மக்கு புருஷா. எப்பவாச்சும் நான் சொல்ல வருவதை முழுசாக் கேட்டு இருக்கியா? எப்ப பார் பாதிப் பேச்சில் என்னைப் பேச விடாமல் நிறுத்திட்டு, நான் சொன்ன அந்தப் பாதிக்கு நீயா ஏதாவது ஒரு அர்த்தத்தை யோசிச்சு வைச்சுக்கிட்டு, உன்னையும் கஷ்டப்படுத்தி என்னையும் சங்கடப்படுத்தி, உன்னோட முடியல என்னால.” பெருமூச்சு வந்தது ருக்மணியிடம் இருந்து.
மனைவி தன்னை மரியாதை இல்லாமல் பேசியதை எல்லாம் புறம்தள்ளிவிட்டு, “என்னால உங்களுக்கு முடியலையா, உங்களைக் கட்டிக்கிட்டு என்னாலும் தான் முடியல. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் இந்த ரூமில் இருந்தாக் கூட என்னோட ப்ளான் எல்லாம் சொதப்பிக்கும். எப்படியாவது உங்களை வெளியே கூட்டிட்டுப் போகணுமேங்கிற அவசரம் எனக்கு. அது எங்க உங்களுக்கு புரியப் போகுது.” தனக்குள் நினைத்த தெய்வா,
“ருக்கு நான் தான் எப்பவோ சொல்லிட்டேனே. நீங்க எப்படி இருந்தாலும் நான் உங்களை இரசிப்பேன்னு. நான் மட்டும் உங்களை ரசிச்சா போதும். வேற யாரு என்ன சொன்னாலும் அதை வலது காதில் வாங்கி இடது காது வழியா விட்டுடுங்க. இப்ப தயவுசெஞ்சு என்கூட கிளம்புங்க.” என்றான்.
“நான் உங்க கூட வெளியே வர ரெடி. ஆனா முதலில் துணிக்கடைக்குத் தான் கூட்டிட்டுப் போகணும். அப்புறம் தேவையான அளவு பணம் வைச்சிருக்கீங்க தானே.” சங்கடமாகக் கேட்டாள்.
“நானும், நீங்களும் செலவு பண்ண தான் எங்க அப்பா வீடு நிறைய பணம் சேர்த்து வைச்சிருக்கார். அதனால் எவ்வளவு வேண்ணாலும் செலவு பண்ணுங்க. என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் வாங்கிக்கோங்க. ஆனா உங்களுக்கு மட்டும் தான் வாங்கணும்.
உங்க அக்கா, தங்கச்சிங்களுக்காக வாங்கி அதை என்னைச் சுமக்க வைச்சா நான் பொல்லாதவன் ஆகிடுவேன். உங்க பொருள் எத்தனையா இருந்தாலும் சுமக்க நான் தயார்.” என்றதில் கணவனை நினைத்துச் சிரித்துக்கொண்டாள் ருக்கு.
தெய்வாவின் நச்சரிப்புகளில் அவன் ஏதோ பயங்கர திட்டம் வைத்திருக்கிறான் என்பது வரை கணித்த ருக்கு, குழப்பத்துடனும், ஆர்வத்துடனும் கணவனுடன் வெளியே கிளம்பினாள்.
அவள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரபலமான துணிக்கடைக்கு தெய்வா அழைத்துச் சென்றதும் நான்கு செட் சுடிதார் எடுத்தவள் அதில் ஒன்றை உடை மாற்றும் அறையில் மாற்றிக் கொண்டு, துப்பட்டாவைக் கொண்டு கழுத்து வரையே வளர்ந்திருந்த தன்னுடைய தலைமுடி தெரியாதவாறு தலையை நன்றாக மறைத்து வந்து நின்றாள்.
தெய்வா அணிந்திருந்த கூலர்ஸ்ஸை எடுத்து தான் அணிந்து கொண்டவள், “ஊருக்குள்ள பல பொண்ணுங்க எப்பவுமே இப்படித்தான் சுத்துறாங்க. இப்ப எனக்கும், அவங்களுக்கும் வித்தியாசம் தெரியாது இல்ல. இனிமேல் என்னை யாரும் வித்தியாசமா பார்க்கவும் மாட்டாங்க. உங்ககிட்ட வந்து கண்ட கண்ட புத்திமதி சொல்லவும் மாட்டாங்க.” என்றாள்.
விமான நிலையத்தில் வைத்து நண்பன் சொன்னதை கவனித்திருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் தெய்வா. “ஆமா இதெல்லாம் நல்லா வக்கனையாப் பேசுங்க. தெரியாத ஊரில், தெரியாத இடத்தில் ட்ரஸ் மாத்துறோமே இதனால ஏதாவது பிரச்சினை வருமா இல்லையான்னு கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?” காட்டமாய் கேட்டான்.
“தமிழில் ஒரு பழமொழி உண்டு, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு. அதே மாதிரி தான் இது. இந்த ட்ரயல் ரூம் எல்லாம் நம்மளோட தேவைக்காக கட்டப்பட்டது தான். சில பேர் தவறாப் பயன்படுத்துறாங்க என்பதற்காக இதைப் பயன்படுத்தாமலேயே இருக்க முடியாது இல்லையா?
நான் ஒன்னும் மொத்தமா துணி மாத்தல. சேலையில் இந்த ஒரு வசதி எப்போதும் உண்டு. கூடவே இங்க பார்த்தீங்களா? இது ஒரு மாஸ்க். கண்ணு இருக்கிற இடம் மட்டும் லேசா தெரியும். மத்தபடி முகத்தை முக்கால்வாசி மறைச்சிக்கும். சுடிதார் வாங்கும் முன்னாடி இதைத் தான் கேட்டு வாங்கினேன். ட்ரயல் ரூம் போறதுக்கு முன்னாடி முகத்தை முழுசா மறைச்சுக்கிட்டேன்.” என்றாள்.
“ஓஹோ அப்போ உங்க முகம் மட்டும் தெரியாம இருந்தா பரவால்லையா? கண்டவன் கண்டதையும் ரெக்கார்ட் பண்ணி பார்த்தா பார்க்கட்டும் னு விட்டுடுவீங்களா?” கோபமாய் கேட்டான் தெய்வா.
தன்னை தனக்குத் தெரியாமலேயே யாரேனும் தவறாகப் பார்த்து விடுவார்களோ என்று பயந்து, கோபம் கொள்ளும் தன்னவனின் அழகை ரசித்தாள் ருக்கு.
“என்னால் முடிந்தவரை நான் முன்னெச்சரிக்கையாத் தான் இருந்தேன். இது எல்லாத்தையும் தாண்டியும் ஏதாவது தப்பு நடந்தா அது என் கையில் இல்லங்க. தன்னோட அம்மா, தங்கச்சி, பெத்த பொண்ணுகிட்ட இருக்கிறது தான் மத்த பொண்ணுங்க கிட்டேயும் இருக்குன்னு ஆம்பிளைங்க புரிஞ்சுக்கிற வரைக்கும் இந்தக் கஷ்டம் பொண்ணுங்களுக்குத் தொடரும் தான்.” என்றாள் ருக்கு. இந்த பதிலிற்குத் தெய்வா இன்னமும் தான் முறைத்தான்.
“கலர் கலரா இருக்கப் போய் தான் இனிப்புகளுக்கு தனித்தனியா பெயர் வைக்கிறோம். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்னு பிடிக்கும் னு சொல்றோம். ஆனா பொதுவில் அங்க இருப்பது இனிப்பு தான்.
அதே மாதிரி தான் பொண்ணுங்களும், அவங்க கூட வாழும் வாழ்க்கையும் என்று ஆண்கள் புரிஞ்சுக்கிட்டாலே பொண்ணுங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராதுன்னு லீலாக்கா அடிக்கடி சொல்லுவாங்க.” ருக்கு சொல்ல, இப்படியான வார்த்தைகளை இதுவரை கேட்டது இல்லை என்பதால் சற்றே ஆச்சர்யப்பட்டான் தெய்வா.
“ஒருத்தன் உன்னைத் தப்பான பார்வை பார்த்தான்னா அவன் அவனோட அம்மாவையோ, தங்கச்சியையோ தப்பா பார்க்கிறான்னு நினைச்சுக்கிட்டு நாம நம்ம வழியில போயிக்கிட்டே இருக்கணும் னு என் அக்கா எனக்குச் சொல்லிக்கொடுத்தாங்க.
ஆனா இனி நான் அப்படி இருக்க மாட்டேன். என் புருஷன் கிட்ட அவனைப் பத்தி சொல்லுவேன். அவன் அவரைப் பார்த்துப்பாரு, அப்படித்தானே.” பெருமையாய் கேட்டாள் ருக்கு.
கண்டிப்பா என ஏற்றுக்கொண்வன் மனைவியை ஆசையாய் பார்த்தான். அவளுக்காக அவள் தோற்றத்தை அப்படியே இரசிக்க அவன் பழகி இருக்க, அவனுக்காக அவள் போட்டுக்கொண்ட இந்த வேஷமும் அவனுக்குப் பிடித்திருக்கத் தான் செய்தது.
“நம்மை ஒருத்தர் நினைக்கும் போது நம்மோட குணம் தான் அவங்களுக்கு சட்டுன்னு நினைவு வரும். நல்ல குணம் இருந்தால் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப் பெரிதா நினைக்க மாட்டாங்க.
சேலைக்கும், மொட்டைத் தலைக்கும் இத்தனை சங்கடப்படுறியே, நம்ம நாட்டை ஆண்ட பிரதமர் இந்திரா காந்தியைத் தெரியும் தானே. அவங்களும் இப்ப நீ இருக்கிற மாதிரி தான் இருப்பாங்க. அதை நினைத்து அவங்க என்னைக்கும் சங்கடப்பட்டதும் இல்லை, மத்தவங்க அவங்களைத் தாழ்வா நினைத்ததும் இல்லை.
அவங்களோட ஆளுமை, திறமை எல்லாத்தோடும் சேர்த்து அவங்க தலைமுடியும் இரசிக்கப்படத்தான் செய்தது.” மொட்டை அடித்த புதிதில் சங்கடமாகச் சுற்றித் திரிந்த தன்னைப் பார்த்து, அக்கா லீலா சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தது ருக்குவிற்கு.
தெய்வாவின் நண்பன் தன்னை மட்டும் விமர்சனம் செய்திருந்தால் உனக்காக நான் மாற வேண்டுமா முடியாது எனப் போய் இருப்பாள். ஆனால் மனைவியின் தோற்றம் கணவனுக்கும் கௌரவம் என்று சொல்லி இருக்க, அதற்காகவே இதனைச் செய்தாள் ருக்கு.
தன்னை சைட் அடித்துக்கொண்டிருந்த மனைவியைப் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த தெய்வாவிற்கு, அலைபேசி அழைப்பு வர, ருக்குவை விட்டு சற்று தள்ளி வந்து பேசியவன் முகமெல்லாம் ஆனந்தம்.
“எல்லாம் ரெடி பண்ணிடுங்க. நாங்க ஷார்ப்பா ஒன்பது மணிக்கு அங்க வந்திடுவோம்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன், சற்று தூரத்தில் தெரிந்த பனிமலைகளைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்த ருக்குவைப் பார்த்து அர்த்தமாய் புன்னகைத்தான்.
இராதா இல்லத்தில், “இந்த போலீஸ் மாமா சரியான கேடி. யாரு கிட்டேயும் சொல்லாம, ஒன்னும் தெரியாத ருக்கு அக்காவை கடத்திக்கிட்டுப் போயிட்டாரு பார்த்தியாக்கா.
நமக்குள்ள மட்டும் எல்லாம் நல்லா இருந்துச்சுன்னா நான் அவரை கலாய்ச்சே உண்டு இல்லன்னு ஆக்கி இருப்பேன்.” வீரமாய் சொன்னாள் ஊர்மி.
மதிய சமையலுக்கு முருங்கைக்கீரையை உருவிக் கொண்டிருந்தனர் லீலாவும், அவளும்.
“இதில் ஒரு காமெடி என்ன தெரியுமா ஊர்மி. உன் போலீஸ் மாமா ஒவ்வொன்னையும் ருக்குவைச் சந்தோஷப்படுத்த பார்த்து பார்த்து பண்ணி இருப்பாரு.
ஆனா நம்ம ருக்குவைப் பத்தி நமக்கு நல்லாத் தெரியுமே. இதுதான் விஷயம் னு அவர் சொன்னதும் சந்தோஷப்படுறதுக்கு பதிலா கோபம் தான் பட்டு இருப்பா. பாவம் அவர் அவளைச் சமாளிக்கிறதுக்குள்ள ஒரு வழியாகி இருப்பார்.
நான் அவளுக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கணும். வாழ்க்கையில் சிலவற்றை அவளாப் புரிஞ்சுக்கிறது தான் சரின்னு தள்ளி நின்னு தப்புப் பண்ணிட்டேனோன்னு தெய்வாவைப் பார்க்கும் போதெல்லாம் தோணும். அவளைச் சமாளிக்க கொஞ்சம் நிறையவே கஷ்டப்படுறார்.” வருத்தமாய் சொன்னாள் லீலா.
“ஏன் லீலாக்கா இந்த வீட்டில் கடந்த இரண்டு மாசமா எந்த விதமான பிரச்சனையும் இல்ல. இவங்க நாலு பேரும் சண்டை போடாம அமைதியாய் இருக்கிறதே இவ்வளவு நல்லா இருக்கே. நம்மள மாதிரி அவங்க நாலு பேரும் ஒற்றுமையா இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்.” ஆர்வமாய் கேட்டாள் ஊர்மி.
“அது கடவுள் கையிலும், இவங்க நான்கு பேர் கையிலும் தான் இருக்கு. நல்லது சொல்ற வரை தான் நம்ம உரிமை. அதைக் கேட்பதும் கேட்காமல் போவதும் அவங்க விருப்பம். நம்மைக் கட்டாயப்படுத்தி பிரிக்க நினைச்சா நாம ஒத்துப்போமா? அதே மாதிரி அவங்களையும் ஒத்துமையா இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாம இருக்கிறது தான் நமக்குக் கௌரவம்.
ஒருத்தர் மேல இன்னொருத்தருக்கு அன்பு இருந்து அதை உணராம இருந்தால் மத்தவங்க அதை உணர வைக்கலாம். இவங்க நாலு பேருக்குள்ள அடிப்படை அன்பு கூட இல்லை. மாமா தான் பாவம். எப்படியாவது இவங்களை ஒத்துமையா பார்க்க மாட்டோமான்னு ஏங்குறார்.
என்னவோ அவங்க ஒருத்தருக்கொருத்தர் சண்டை போடாம இருந்து, நாம நாலு பேரையும் பிரிக்காம இருந்தா அதுவே நமக்குப் போதும்.” என்றாள் லீலா.
மிகுந்த உடல் சோர்வுடன் வெளியில் இருந்து வந்திருந்த நாகா அறைக்கு செல்ல முடியாமல் சோபாவை பிடித்து நின்று கொண்டிருந்தான். அவனுடைய காதுகளில் லீலா சொன்னா அனைத்தும் மிகத் தெளிவாக விழுந்தது.
“இவங்க ஒன்னும் நாம நினைக்கிற அளவுக்கு ரொம்ப தப்பானவங்க கிடையாது போல.” என்று தன்னோடு நினைத்தவன் அறைக்குச் செல்ல முயன்ற வேளையில், கண் இருட்டிக் கொண்டு வந்து கீழே விழுந்து மயங்கினான்.
வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், “ஹலோ பெரியவரே என்ன ரொம்ப யோசனையா இருக்கீங்க. இரண்டு பேரப்புள்ளைங்க ரெடி. அடுத்து இரண்டு மகன்கள் மருமகள்களை கூட்டிக்கிட்டு ஹனிமூன் போய் இருக்காங்க.
இன்னும் எத்தனை பேரப்பிள்ளைங்க வருமோ, எத்தனை தங்கத் தொட்டில்கள் செய்ய வேண்டியது வருமோன்னு யோசிக்கிறீங்களா?” வழக்கம் போல் வடிவேலுவைக் கிண்டல் செய்தான் அரசு. அது என்னவோ அவனின் கிண்டலில் கூட எப்போதும் நேர்மறை வார்த்தைகள் மட்டுமே நிறைந்திருக்கும்.
நல்லவற்றை நினைக்க வேண்டும், நல்லவற்றை பேச வேண்டும் என்பதில் அவன் எப்போதும் அதிக கவனம் காட்டுவான். அவனாலேயே வடிவேலுவின் பயம், பதற்றம் எல்லாம் கட்டுப்பாட்டோடு இருக்கிறது என்று சொன்னால் அது மிகை அல்ல.
அரசுவின் கேலியைக் காதில் வாங்கினாலும் கருத்தில் கொள்ளாமல், “அரசு நம்ம செல்வாவைப் பத்தி நீ என்ன நினைக்கிற.” எதையோ ஒன்றைத் தீவிரமாக யோசித்தபடிக் கேட்டார் வடிவேல்.
“ஏன் திடீர்னு இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீங்க.” அரசு சந்தேகமாகப் பார்க்க, “வர வர அவனோட போக்கு சரி இல்லடா. அன்னைக்கு வீட்டுக்குத் துணி வெளுக்க வந்த அம்மா, செல்வாவோட சட்டையைக் கையில் வைச்சு சிரிச்சுகிட்டு இருந்தாங்க. என்னன்னு பக்கத்துல போய் கேட்டதுக்கு, செல்வா ஓட சட்டை பட்டன்களில் பொண்ணோட தலை முடி கொஞ்சம் சிக்கி இருந்ததா எடுத்துக் காமிச்சாங்க.” என்க,
“இது சந்தோஷமான விஷயம் தானே. லீலாவோட அவன் நல்லா வாழ்ந்தா நமக்கு சந்தோஷம் தானே.” என்றான் அரசு.
“இல்ல அரசு அது லீலாவோட முடி இல்ல. அந்த முடிக்குச் சொந்தமான பொண்ணு கண்டிப்பா ஹேர் கலரிங் பண்ணி இருந்திருக்கணும். ஒரு மாதிரி சிகப்பு, ஆரஞ்சு கலர் கலந்த மாதிரி இருந்தது அந்த முடி. லீலாவுக்கு தான் அந்த மந்திரி எந்த பழக்கமும் கிடையாதே.” சந்தேகமாய் கேட்டார்.
“என்ன அங்கிள் நீங்க, சாதாரண ஒரு சின்ன முடிக்காகவா செல்வாவைத் தப்பா நினைக்கிறீங்க. இது தெரிஞ்சா அவன் ரொம்ப வருத்தப்படுவான். அது அவன் கூட ஹாஸ்பிடலில் வேலை பாக்குற யாரோ ஒரு பொண்ணோட முடியா இருக்கும். தெரியாம அவனோட பட்டனில் சிக்கியிருக்கலாம்.” என்றான்.
“நானும் அப்படித்தான் நினைச்சுக் கடந்தேன். ஆனா அவன்கிட்ட இன்னும் பல மாற்றங்கள் தெரியுது. கடந்த சில வாரமா ஞாயிற்றுக்கிழமை கூட அவன் தவறாம ஹாஸ்பிடலுக்கு போறான், இது உனக்குத் தெரியும் தானே.” வருத்தமாய் சொன்னார் வடிவேல்.
“அங்கிள் இந்த மாதிரி பைத்தியக்காரத்தனமாக லீலாகிட்ட பேசிட்டு இருக்காதீங்க சரியா. செல்வா வேலையில் எந்தளவுக்கு கெட்டிக்காரன், டாக்டர் வேலையை எந்த அளவுக்கு நேசிக்கிறான்னு உங்களுக்கே நல்லாத் தெரியும். அவன் வேலையில் இதெல்லாம் சாதாரணமான விஷயம். தயவுசெஞ்சு மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீங்க.” கண்டிப்பாகவே சொன்னான் அரசு.
“டேய், அவன் என் பையன் டா. காரண காரியம் இல்லாமல் அவனைப் பத்தி நான் தப்பா நினைப்பேனா நீயே சொல்லு.” வடிவேலுவுக்குச் சங்கடமும், வருத்தமும் கூடவே கொஞ்சம் கோபமும் ஒருங்கே வந்தது.
“நீங்க பேசறதைப் பார்த்தா இன்னும் ஏதோ விஷயம் இருக்கிற மாதிரி இருக்கே.” கூர்மையாகப் பார்த்தபடிக் கேட்டான் அரசு. அவன் கேள்விக்குப் பதிலாகப் பெருமூச்சுவிட்டவர், செல்வாவும் லேகாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற போட்டோவை அரசுவிடம் காட்டினார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
14
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நாகா க்கு என்னாச்சு ?? டாக்டரை சுத்தி தான் எல்லா சதி வேலைகளும் நடக்குது