
அத்தியாயம் 74
மனைவி பேசிச் சென்ற கேலியைக் கண்டுபிடித்தே தீர வேண்டும் என்கிற முனைப்பில், யூடியூபில் சந்திரமுகி படத்தின் காமெடிக் காட்சிகளைப் பார்த்து புரிந்து கொண்ட செல்வாவிற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
அதே சிரிப்புடன் மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வந்தவனிடம், “என்ன செல்வா ஏதோ தலைவலி ரெஸ்ட் எடுக்கிறேன்னு சொல்லி வீட்டுக்குப் போன. இப்ப திரும்பி வந்துட்ட. தலைவலி சரியாப் போயிடுச்சா, இல்லை வீட்டில் இருந்தா தலைவலி இன்னும் அதிகமாகிடும் னு பயந்து திரும்ப வந்துட்டியா?” வாயெல்லாம் பல்லாகக் கொண்டு கேட்டான் பாஸ்கர்.
“வீட்டில் ஏன் தலைவலி வரப்போகுது.” செல்வா கேட்க, “பின்ன வெளியூர் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லி ஆசை காட்டி ஏமாத்தினா உன்னோட வொய்ப் எப்படி பொறுத்துக்கிட்டு இருப்பாங்க. அதையும், இதையும் சொல்லி உன்னை நோகடிச்சு இருப்பாங்க. அதனால் தான் நீ இங்க திரும்ப வந்திருக்க.” செல்வா மற்றும் லீலா இருவரின் உண்மையான நிலை அறிய மெதுவாகத் தூண்டில் போட்டான் அவன்.
அது செல்வாவிடத்தில் நன்றாக வேலையும் செய்தது, “அதெல்லாம் ஒன்னும் இல்லடா. லீலா மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. எதுக்காகவும் என்னை நோகடிக்க மாட்டாங்க. என் முகம் பார்த்து அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கிறவங்க.” சிலாகித்துச் சொன்னவன், “அப்புறம் எங்க ப்ளான் ஒன்னும் கேன்சலாகல. கொஞ்சம் தள்ளிப் போய் இருக்கு அவ்வளவு தான்.” என்று தன் மனநிலையைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தினான்.
“அவ வித்தியசமான பொண்ணுன்னு தான் எனக்கு எப்பவோ தெரயுமே. நீ கட்டிக்கப் போறவன் தப்பானவன் அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் உயிருக்கே ஆபத்துன்னு போன் பண்ணி ஒருத்தன் சொன்னா, அதைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம போன் பண்ணவனையே போட்டுக் கொடுத்த மகராசி தானே அவ.
அவளுக்கு எல்லாம் சூடு சுரணையே இருக்காதா. புருஷன் இன்னொருத்தி கூட க்ளோஸா இருக்கிற மாதிரி போட்டோஸ் கிடைச்சதே, யாரு அவங்க அந்த போட்டோஸ் உண்மையா பொய்யா எதைப் பத்தியும் கொஞ்சம் கூட அக்கறைப் பட மாட்றா. இந்த நல்லவனுக்கு ஏத்த நல்லவ தான் போல.” மனதோடு பொருமியவனுக்கு ஆத்திரம் வந்து தொலைத்தது.
பாஸ்கர் என்கிற அழைப்புடன் செல்வா அவனை உலுக்கி நடப்பிற்குக் கொண்டு வர, “ஹனிமூன் ட்ரிப் ப்ளான் போட்டதோட செயல்படுத்திடலாம் இல்ல. எதுக்குடா அவங்களைக் காக்க வைக்கிற. ஒருவேளை பெட் நம்பர் 2 ல் இருக்கிற உன்னோட ஸ்பெஷல் பேசண்ட்டை பத்தி கவலைப்படுறியோ.” தூண்டில் போட்டுப் பார்த்தான் பாஸ்கர்.
“டேய் ஏன்டா நீயும் மத்தவங்களை மாதிரியே பேசுற. என்னோட மத்த பேசண்ட் எப்படியோ அப்படித்தான் அவளும். நீயே இப்படி நினைச்சா, என்னைப் பத்தி தெரியாதவங்க எப்படி நினைப்பாங்க.” சொன்ன செல்வாவிடம் மனத்தாங்கல் அதிகம் இருந்தது.
“சரிப்பா ஸ்சாரி இனிமே உன்னை அந்தப் பொண்ணோட வைச்சு கலாய்க்க மாட்டேன் போதுமா?” என்க, “இனிமேல் அந்தப் பொண்ணு இல்ல, வேற எந்தப் பொண்ணு கூடவும் வைச்சு என்னைக் கலாய்க்காத. எல்லாம் சரியா நடந்திருந்தா இந்நேரத்துக்கு நானும், லீலாவும் இந்த ஊரிலே இருந்திருக்க மாட்டோம்.
ஆனா ஏதோ ஒரு பன்னாடை பரதேசி நான் அந்தப் பொண்ணை கேர் பண்ணிக்கிறதை தப்பான விதத்தில் போட்டோ எடுத்து லீலாவுக்கு ரொம்ப அக்கறையா அனுப்பி வைச்சிருக்கான். அவனால் எல்லாம் நாசமாப் போச்சு.” கடுகடுப்பாய் சொன்னான் செல்வா.
உள்ளுக்குள் பூத்த புது உவகையை உடன் மறைத்த பாஸ்கர், “என்னடா சொல்ற, சிஸ்டர் அந்தப் போட்டோஸ் பார்த்துட்டு உன்னைச் சந்தேகப்பட்டாங்களா? சண்டை போட்டாங்களா? அதனால் தான் இன்னமும் நீ ஊருக்குக் கிளம்பாம இருக்கியா.” மனதின் உற்றாகத்தை மறைத்துக்கொண்டு கேட்டான்.
மனைவியை நினைத்துச் சிரித்தவன், “என் பொண்டாட்டி ஒரு தனி ரகம் பாஸ்கர். அவங்களை மாதிரிப் பொண்ணுங்களைப் பத்தி எல்லாம் நான் கேள்வி கூடப் பட்டது இல்லை.
அவங்களுக்கு அந்தப் போட்டோஸைப் பார்த்து கோபம் வந்தது தான். ஆனா அது எந்த வகையான கோபம் தெரியுமா? உங்களுக்கு வேண்டாதவங்க உங்களைச் சுத்தி தான் இருக்காங்க. அவங்களைக் கண்டுபிடிக்க துப்பில்லையா? உங்க தலைக்கு மேல் கத்தி தொங்கிக்கிட்டு இருப்பதை மறந்துட்டு உங்களுக்கு உங்க வேலை தான் முக்கியம் னா வேலையை விட்டுடுங்க, நாம தனியா ஹாஸ்பிட்டல் கட்டலாம் னு சொல்றாங்க.
ஒன்னு என் பக்கத்திலேயே இருக்கும் துரோகியைக் கண்டுபிடிக்கணும். இல்லையா சொந்த ஹாஸ்பிடல் கட்டணும். இரண்டில் ஒன்னுக்கு நான் ஒத்துக்குற வரைக்கும் என்கூட எங்கேயும் வெளியே வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க.” சொல்லி சிரித்தான் செல்வா. லீலாவின் உரிமையான கோபம் மற்றும் தன் நலன் மீதான அவள் அக்கறை இரண்டும் இணைந்து அவனை அத்தனை குஷியாக்கி இருந்தது.
“சொந்த ஹாஸ்பிட்டல் நல்ல விஷயம் தானே. உன்கிட்ட திறமை இருக்கு, உங்க அப்பாகிட்ட நிறைய பணம் இருக்கு அப்புறம் என்ன?” சொன்ன பாஸ்கருக்குள் சின்னதாய் பொறாமை.
“என்னடா நீயும் இப்படிப் பேசுற. சொந்த ஹாஸ்பிட்டல் கட்டிட்டா எப்பவும் குடும்பத்துக்காக நேரத்தை ஒதுக்க முடியாது டா. நாம ஓடியாடி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எல்லாம் வயிறு நிறைய சாப்பிடுறதுக்கும், நம்ம வாழ்க்கையை சந்தோஷமா வாழ்றதுக்கும் தான்.
சோ சொந்த ஹாஸ்பிட்டல் எல்லாம் நமக்கு செட்டே ஆகாது. சோ என்னோட முதல் வேலை என்கூடவே இருக்கும் புல்லுருவியைக் கண்டுபிடிப்பது தான். லீலாவைப் பத்தி எனக்குத் தெரியும். அவங்க சீக்கிரம் சமாதானம் ஆகிடுவாங்க. ரொம்ப நாள் அவங்களால் என் மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியாது.” பெருமையாகச் சொன்னான்.
“எப்பப் பார் எனக்கு ஆப்பு வைக்கிறதே அந்த லீலாவுக்கு வேலையாப் போச்சு.” மனதோடு அவளைத் திட்டியவன், “நானே உன்கிட்ட கேட்கணும் னு நினைச்சேன். நீ இல்லாத நேரத்தில் உன் ரூமுக்குள்ள வந்து உன் மனைவியைக் கொல்ல நினைக்கிற அளவுக்கு விரோதிங்க யார் இருக்காங்க. ஒருவேளை உன் மனைவிக்கு முன்னாள் காதல் ஏதாவது?” பாஸ்கர் கேட்ட நொடி செல்வாவின் முகத்தில் கோபம் வந்து உட்கார்ந்து கொண்டது. எதிரில் இருப்பவன் நண்பன் என்பதால் சிரமப்பட்டு கோபத்தை பல்லிடுக்கில் கட்டுப்படுத்தினான்.
“இங்க பார் பாஸ்கர், என் மனைவியைப் பத்தி இப்படி பேசுறது இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்.” என்றான் சற்றே கோபத்துடன்.
“எல்லாப் பக்கமும் ஆராயணும் இல்லையா அதுக்குத் தான் சொன்னேன். உன்னையோ இல்லை உன் மனைவியையோ கொன்னா யாருக்கு இலாபம் னு நாலு பக்கமும் யோசிச்சா தானே குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியும். ஏன் செல்வா ஒருவேளை உன் தம்பிங்க யாராவது இப்படிப் பண்ணி இருப்பாங்களோ.” பாஸ்கரன் வார்த்தைகளை கூட முழுதாக முடிக்கவில்லை.
“ஏய் யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற கொன்னுடுவேன் உன்னை ராஸ்கல்.” பாஸ்கரின் சட்டையைப் பிடித்து கோபத்தை முழுதாகக் காட்டிய பின்னே தான் ஏன் கோபப்பட்டோம் என்று யோசித்தான் செல்வா.
எத்தனையோ முறை, “என் தம்பிங்க என்னைக் கொன்னாலும் ஆச்சர்யப்படுறதுக்கு எதுவும் இல்ல. அந்த அளவுக்கு வேற்றுமை எங்களுக்குள்ள தினம் தினம் வளர்ந்துக்கிட்டே இருக்கு.” என்று தானே சொல்லி இருக்கிறோம். தான் சொன்னதை அவன் திரும்பிச் சொன்னதற்காக ஏன் தனக்கு இத்தனை கோபமும் வேகமும் வர வேண்டும் எனத் தன்னைத் தானே நொந்து கொண்டான்.
“ஸ்சாரி பாஸ்கர் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் ரியலி ஸ்சாரி.” மனதறிந்து மன்னிப்புக் கேட்டான் செல்வா.
“விடுடா பரவாயில்லை, நீதானே கோவப்பட்ட. என்கிட்ட தானே கோவப்பட்ட விடுவியா.” வாய் வார்த்தையாகச் சொன்னான் பாஸ்கர். உள்ளுக்குள் கோபம் என்னும் எரிமலை கனன்று கொண்டிருந்தது.
“யாருக்கும் தெரியாத விஷயத்தை உன்கிட்ட சொல்றேன் பாஸ்கர். அன்னைக்கு நடந்த கொலைமுயற்சி எனக்கானது இல்ல லீலாவுக்கானது.” செல்வா உறுதியாகச் சொல்ல பாஸ்கரனுக்கு பகீர் என்றது.
லீலாவைக் கொல்லத் தான் சதி அரங்கேற்றப்பட்டது என்பதில் செல்வாவிடம் இத்தனை உறுதி அவன் எதிர்பாரதது. அதனால் சட்டென்று பல உணர்வுகளை முகத்தில் காட்டிவிட்டான். ஆனால் செல்வாவின் கெட்ட நேரம் அவன் இதைக் கவனிக்கவில்லை.
இத்தனை வருடப் பழக்கத்தில் செல்வாவைப் பற்றி பாஸ்கர் நன்றாக அறிவான். அவனை யாரோ கொல்ல நினைக்கிறார்கள் என்றால் அவன் பாதுகாப்பில் அக்கறை எடுத்துக்கொள்வானே தவிர, பெரிதாக நோண்ட மாட்டான். ஆனால் அவனைச் சார்ந்த யாரோ ஒருவருக்கு ஆபத்து என்னும் போது செல்வாவிற்கு பயங்கர கோபம் வரும்.
விளைவாகத் தன்னைச் சார்ந்தவர்களைக் காப்பாற்றவும் தவறு செய்தவர்களை தண்டிக்கவும் என்னவும் செய்வான். அதனாலேயே குறி லீலாவிற்கானது என்பதை செல்வா கண்டறியும் முன்பாக நினைத்ததை நடத்தி முடித்துவிட வேண்டும் என்பது நினைத்திருந்தான்.
அது பொய்யாகிப் போனதால் உள்ளுக்குள் உருவான லேசான பயத்தை மறைத்தபடி, “எனக்கென்னவோ தங்கச்சிக்கு ஆகாதவங்க யாரோ தான் இந்த வேலையைப் பார்த்து இருப்பாங்கன்னு தோணுது. உன் குணத்துக்கு எதிரிங்க யாரும் கிடையாது. அப்ப பிரச்சனை லீலா பக்கம் தானே இருக்கணும். ஒரு மினிஸ்டர் பையன் அவங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தான்னு சொன்னியே அதைப் பத்தி கொஞ்சம் லீலாகிட்ட விசாரித்துப் பார்.” திரும்பத் திரும்ப இதைப் பற்றியே பேசி செல்வா மனதைக் கலைக்கப் பார்த்தான்.
“இந்த விஷயம், இவ்வளவு தெளிவா இவனுக்கு எப்படித் தெரியும். நாம நம்ம வீட்ல நடக்குற ஒவ்வொரு விஷயத்தையும் இவன்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கோமா என்ன. ஆனா நான் அப்படிப்பட்டவன் கிடையாதே.” என்பதாய் யோசித்துப் பார்த்த செல்வாவிற்கு, ஆரம்பத்தில் இருந்து பேச்சோடு பேச்சாக தன்னிடம் அவனுக்குத் தேவையான விவரங்களைப் பாஸ்கர் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கிறான் என்று புரிந்தது.
“என் மேல எதுக்காக இவனுக்கு இவ்வளவு அக்கறை. ஆனா இவன் அக்கறையா கேட்கிற மாதிரி எனக்குத் தோணலையே ஏன். என்னைப் பத்தி ஆராய்ச்சி பண்ணி கட்டுரை ஏதும் எழுதப் போறானா என்ன, எங்கேயோ இடிக்குதே.” என்று யோசிக்க ஆரம்பித்தான் செல்வா.
இன்னொரு பக்கம், “என்னங்க கோவிலுக்குப் போகலாம் னு சொல்லி கூட்டிட்டு வந்துட்டு, இப்ப என்ன ஏர்போர்ட் பக்கம் வந்து இருக்கீங்க.” ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சி கலந்து கேட்டாள் ருக்கு.
“சர்ப்ரைஸ் ருக்கு, நாம கோவிலுக்குப் போகப் போறது இல்ல. ஹனிமூன் போகப் போறோம். இன்னைக்கே, இப்பவே, இந்த நிமிஷமே நீங்களும் நானும் சிம்லா கிளம்பப்போறோம். என்னோட ப்ரண்டு நம்மளோட லக்கேஜ், டிக்கெட் எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு ரெடியா இருக்கான்.
நம்ம போக வேண்டியது, செக் பண்ண வேண்டியது, ப்ளைட் ஏறி போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்.” உல்லாசமாய் சொன்னான் தெய்வா.
“என்ன விளையாடுறீங்களா? போகலாமா வேண்டாமான்னு என்கிட்ட ஒருவார்த்தை கூட கேட்காம, திடீர்னு இத்தனை ஏற்பாடு பண்ணி இருக்கீங்க. நான் வீட்டில் உள்ள யார்கிட்டயும் எதுவும் சொல்லலையே.” அதிர்ந்தாள் ருக்மணி.
“ஏன் சொல்லணும், எதுக்குச் சொல்லணும். நீங்க என்ன பக்கத்துவீட்டுக்காரன் கூடவா போறீங்க. உங்க புருஷன் கூடத்தானே போகப் போறீங்க, அப்புறம் என்ன.” சின்ன தோள்குலுக்கலோடு சொன்னான் அவன்.
“விளையாடாதீங்க, உங்ககூட சிம்லா என்ன பாகிஸ்தான் வருவதில் கூட எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா அக்காகிட்ட ஒருவார்த்தை சொல்ல வேண்டாமா. கோவிலுக்குன்னு நீங்க சொன்னதை நம்பி நான் போன் கூட எடுத்துட்டு வரல உங்க போனை கொடுங்க.” என்றபடி தானே அவன் போனைத் தேடினாள்.
“இந்த பீல் நல்லா தான் இருக்கு. ஆனா நீங்க என்ன தேடினாலும் போன் கிடைக்காது. ஏன்னா நானும் போன் எடுத்துட்டு வரல. நாம போகப் போற இடத்துக்கு பெட்டர் போன் வேண்டாம் னு தோணுச்சு, அதான் எடுத்துட்டு வரல. சிம்லா போனதும் நான் எங்க அப்பாகிட்ட தகவல் சொல்றேன். நீங்க உங்க அக்கா தங்கச்சிங்ககிட்ட தகவல் சொல்லிக்கோங்க.” அத்தனை இலகுவாகச் சொன்னான்.
“ஏன் இத்தனை அட்டகாசம் பண்றீங்க. இதெல்லாம் தப்பு. ஒவ்வொரு விஷயத்துக்கும் வீட்டு ஆள்கள் கிட்ட சம்மதம் கேட்டு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை தான். அதுக்காக அவங்ககிட்ட தகவல் கூடச் சொல்லாம இத்தனை பெரிய முடிவு எடுக்கிறது தப்புங்க.
சிம்லா கரெக்ட்டா எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா ரொம்ப தூரம் னு புரியுது. அப்படி இருக்க, நாம திரும்பி வரும் வரைக்கும் நாம எப்படி இருக்கோம், என்ன பண்றோம் னு வீட்டில் உள்ளவங்களும், அவங்க எப்படி இருக்காங்கன்னு நாமளும் தெரிஞ்சிக்க வேண்டாமா?
சரி அதைக் கூட வேற ஒருத்தர் போனில் இருந்து பேசிக்கலாம் னு வைச்சிக்கோங்க. நாம சேர்ந்து ஒரு நாலு போட்டோவாது எடுக்க வேண்டாம். அதுக்கு எப்படியும் போன் தேவைப்படும் தானே.” தவிப்பாய் கேட்டாள் ருக்கு.
“என்னை என்ன அந்த அளவுக்கு முட்டாளுன்னு நினைச்சுட்டீங்களா ருக்கு. என்கிட்ட போன் இருக்கு. ஆனால் சிம்கார்டு இல்ல. என் கையில் இருக்கிற போனை வைச்சு நல்லா வளைச்சி வளைச்சி போட்டோஸ் எடுக்கலாம்.
மத்த நேரத்துல உயிரில்லாத எந்த பொருளையும் பார்க்காம உயிருள்ள நாம இரண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாத்துகிட்டு ஜாலியா இருக்கலாம்.” என்று கண்ணடித்தான்.
“போனில் சொல்றது அவ்வளவு மரியாதை இருக்காதுங்க. வண்டியைத் திருப்புங்க நாம மாமாகிட்ட சொல்லிட்டு அதுக்கப்புறமா கிளம்பலாம்.” அப்போதும் முரண்டு பிடித்தாள் ருக்கு.
“ருக்கு ஏற்கனவே லேட்டாகிடுச்சு. வீட்டுக்குப் போயிட்டு திரும்ப வருவதுக்குள்ள ப்ளைட்டை மிஸ் பண்ணிடுவோம். நான் உங்களுக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து பண்ணி வைச்சிருக்கேன். அத்தனையும் வீணாப் போறதில் எனக்கு உடன் பாடு இல்லை. என்னை நம்பி என்கூட வாங்க.” தெய்வா கேட்க ருக்குவால் அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.
ஏர்போர்ட்டில் தெய்வாவிற்காக காத்துக் கொண்டிருந்த நண்பன் ருக்குவைப் பார்த்ததும் சிரித்த முகத்தை சுருக்கினான்.
தெய்வாவைத் தனியே அழைத்துக் கொண்டு சென்றவன், “டேய் ப்ளைட்டுக்கு இன்னும் கொஞ்சம் கூட நேரம் இருக்கு. பக்கத்தில் எங்கேயாவது போய் உன்னோட வொய்ப்புக்கு நல்ல விக் ஒன்னு வாங்கலாமா? அவங்க தலைமுடியும் சேலையும் நல்லாவே இல்லடா.” என்றவன், அடுத்த வார்த்தை பேசும் முன்னர் தெய்வாவின் முறைப்பில் அமைதியானான்.
“அவங்க எப்படி இருந்தாலும், அவங்க தான் என்னோட பொண்டாட்டி. என் பொண்டாட்டி எனக்கு எப்பவும் அழகு தான். இவங்களை நான் இப்படியே தான் சிம்லாவுக்கு கூட்டிக்கிட்டு போகப் போறேன்.” தீர்க்கமாகச் சொன்னான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ராஜ் பிரதர்ஸ் க்கு ஃப்ரெண்ட்ஸ் யாரும் சரியில்ல போல .. விடாத செல்வா யோசி .. வேகமா கண்டுபிடி ..