Loading

அத்தியாயம் 73

     “தேவகி எப்படி இருக்க, டேராடூன் எப்படி இருக்கு. ஆமா அங்க கிளைமேட் வேற மாதிரி இருக்குமே. உடம்புக்கு ஒன்னும் இல்லையே. நீயும், உன் புருஷனும் நல்லா இருக்கீங்களா?” அக்கறையாய் விசாரித்தாள் லீலா.

     “எங்களுக்கு என்னக்கா நாங்க நல்லா இருக்கோம், சந்தோஷமா இருக்கோம்.” இதைச் சொல்லும் போது அவளையும் அறியாமல் கன்னங்கள் சிவந்தது தேவகிக்கு. சற்று தொலைவில் இருந்து இதைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் தர்மா.

     “ஹலோ தேவகிம்மா லைனில் இருக்கியா, இல்ல டேராடூன் குளிரில் உறைஞ்சு போயிட்டியா?” நக்கலடித்தாள் ருக்கு.

     “நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க. லீலாக்கா ஐ மிஸ் யூ சோ மச்.” மனதில் இருந்து சொன்னாள் தேவகி.

     “ஏய் இந்தாடி லீலாக்காவை மட்டும் தான் மிஸ் பண்றியா? எங்க இரண்டு பேரையும் மிஸ் பண்ணலையா. வீட்டுக்கு வா எல்லா வேலையையும் உன்னையே செய்ய வைக்கிறேன்.” செல்லமாக மிரட்டினாள் ஊர்மி.

     “அடப் போ ஊர்மிக்கா, இதெல்லாம் ஒரு தண்டனையா? எத்தனை வேலையா இருந்தால் தான் என்ன. அதெல்லாம் இந்த தேவகி அசால்ட்டா செய்வா.” சொல்லிவிட்டு சில்லறையாய் சிரித்தாள் தேவகி.

     “விடு தேவகி, அவ கிடக்கிறா. வரவர இப்படித்தான் சின்னப்பிள்ளைத் தனமா நடந்துக்கிறா. நீ நேரத்துக்கு சாப்பிடுறியா, நம்ம ஊர் சாப்பாடு அங்க கிடைக்குதா? உன் புருஷன் உன்னை வெளியே கூட்டிட்டுப் போனாரா?” தங்கையிடம் இருந்து என்ன பதில் வரும் என்று தெரிந்தே கேட்டாள் லீலா. எல்லாம் தர்மனின் மீதான நம்பிக்கை தான்.

     “நீங்க மூணு பேரும் என் பக்கத்துல இல்லங்கிற ஒன்னைத் தவிர, நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அக்கா. நானும் அவரும் இங்க நிறைய இடத்துக்குப் போனோம். நிறைய போட்டோஸ் எடுத்தோம். வீட்டுக்கு வந்ததும் எல்லாருக்கும் காட்டுறேன்.

     இங்க சாப்பாடு ஒன்னுமே சரி இல்லக்கா. இருக்கிறதுலே நல்ல ஹோட்டலா தேடித் தேடி தான் கூட்டிட்டுப் போறாரு. ஆனாலும் நல்லா இல்ல. என்ன இருந்தாலும் நம்ம ஊரு இட்லியையும், காரச் சட்னியையும் அடிச்சிக்கவே முடியாது.” சிலாகித்தாள் சின்னவள்.

     “ஏய் நீ என்ன சுத்தி பார்க்கிறதுக்கும், சாப்பிடுறதுக்குமாடி டேராடூன் போன. போன வேலை எப்படி நடக்கிது. இரண்டா மூணா?” ஊர்மி இரகசியமாய் கேட்க,

     “லீலாக்கா இங்க பாருங்க இந்த ஊர்மிக்கா எப்ப பாரு இதைச் சொல்லி சொல்லி கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கு. அந்த அக்காவை கொஞ்சம் அமைதியா இருக்க சொல்லுக்கா.” அநியாயத்திற்குச் சிணுங்கினாள் தேவகி.

     “ஹலோ, நீ அவங்களுக்கு மட்டும் தங்கச்சி இல்ல எனக்கும் தங்கச்சி தான். என் செல்லத் தங்கச்சி உன்னைக் கிண்டல் பண்ணவோ, அடிக்கவோ, கொஞ்சவோ எல்லாத்துக்கும் எனக்கும் உரிமை இருக்கு தெரியும் இல்ல.” கெத்து காட்டினாள் ஊர்மி.

     சின்னதாய் சிரித்து ஊர்மியின் பேச்சைக் கடந்தவள், “அக்கா நாங்க இரண்டு பேரும் ஹனிமூன் கிளம்பி வந்ததுக்கு அப்புறம் மத்த மாமாங்க யாராவது இதைப் பத்தி பேசினாங்களா? நீங்க எல்லாரும் எப்ப கிளம்ப போறீங்க.” ஆவலுடன் கேட்டாள் தேவகி.

     “ஆமா அப்படியே உன் மத்த மாமாங்களுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் புத்தி வந்துட்டாலும். எனக்கு என்னவோ உன் புருஷன் இந்தக் குடும்பத்தில் தப்பாப் பிறந்துட்டாருன்னு தோணுது. இல்லன்னா ஹாஸ்பிடலில் வைச்சு வடிவேல் மாமா உன் புருஷனை மாத்தித் தூக்கிட்டு வந்திருப்பார்.” பங்கமாய் கிண்டலடித்தாள் ஊர்மி.

     “அப்ப நீங்க யாரும் வெளியூர் போக மாட்டீங்களா?” ஆதங்கமாகக் கேட்டாள் தேவகி. சிறு வயதில் இருந்து ஒருவருக்கு வரும் கனவைக் கூட நால்வரும் ஒன்றாகப் பகிர்ந்து கொண்டிருக்க, இப்போது தன் நிலை அவர்களில் இருந்து உயரத்தில் இருக்கிறதோ என மனம் சுணங்கினாள். என் கணவரைப் போலவே அவர் உடன் பிறந்தவர்களும் இருந்திருந்தால் என் சகோதரிகளும் சந்தோஷமாக இருந்திருப்பார்களே என மனம் ஏங்கியது அவளுக்கு.

     ஒருவரின் குணத்தை இன்னொருவர் கொண்டிருக்க முடியாது. ஒருவரைப் போல் இன்னொருவர் வாழமுடியாது என்பதற்காக ஒருவரை விட இன்னொருவர் வாழ்வு தாழ்மையில் போகிறது என்று அர்த்தம் ஆகாது என்பது அவளுக்குப் புரியவில்லை.

     இராதா இல்லத்தின் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு வகை தான் என்றாலும், ஆளுக்கொரு வகையில் நால்வரும் சிறந்தவர்களே என்பதை வெகுவிரைவில் அவள் புரிந்து கொள்வாள்.

     “தேவகி, இங்க வீட்டில் என்ன நடக்கிதுன்னு தெரியாம நீ பாட்டுக்கு பேசாதே.“ லீலா மற்றும் ருக்கு இருவரும் ஒரே நேரத்தில் சொல்லிவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

     “இதோ பாருடா, அப்ப டாக்டர் மாமாவும், போலீஸ் மாமாவும் இதைப் பத்தி பேசி இருக்காங்க போலவே. எனக்குத் தெரியாம என்னென்னமோ நடக்குது இந்த வீட்டில். தேவகி நீ சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு.

     நீ வந்ததும், நீயும் நானும் தனிக்கட்சி ஆரம்பிக்கிறது ஆரம்பிக்கிறது தான். இவங்க இரண்டு பேரோட போக்கு வர வர சரியே இல்லை.” என்றாள் ஊர்மி.

     “ஏய் ஏதாவது முடிவாகி இருந்தா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா? உன் மாமா சும்மா கேட்டாரு, நானும் சரின்னு சொன்னேன். அப்ப பார்த்து உங்க மாமாவுக்கு வேலை வந்திடுச்சு. அது முடிந்ததும் கிளம்பணும்.” என்றாள் லீலா. மனதிற்குள் செல்வாவும், லேகாவும் இருக்கும் புகைப்படம் பளிச்சிட்டது.

     “பாருடா செல்வா மாமா இந்தளவுக்கு இறங்கி வந்துட்டாரா? அக்கா இனி உன் காட்டுல மழை தான் போ.” ஊர்மி சொல்ல மற்ற அனைத்தையும் தாண்டி வெட்கம் வந்து தொலைத்தது லீலாவிற்கு.

     இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை சற்று தொலைவில் இருந்து செவிமடுத்த தெய்வா, “ஆக செல்வா பிளானை எக்ஸிகியூட் பண்ண ஆரம்பிச்சுட்டான். அவன் ஹாஸ்பிடலில் லீவு கிடைச்சு, அவன் அதை பொண்டாட்டி கிட்ட வந்து சொல்றதுக்கு முன்னாடி, நம்ம பொண்டாட்டி ருக்குவை நாம கிளப்பணுமே.

     லீலா முன்னாடியே கிளம்பிட்டாங்கன்னா ஊர்மியைக் காரணம் காட்டி, ருக்கு நம்ம கூட வர மாட்டாங்க. அதனால் எப்படியாவது இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ள ருக்குவை இங்க இருந்து தள்ளிக்கிட்டு போயிடணும்.” மனைவியை அறிந்தவனாகத் தனக்குள் திட்டம் தீட்டினான்.

     “என்ன பண்ணலாம், எங்க கூட்டிட்டுப் போகலாம். அவசரத்துக்கு எந்த இடமும் தோண மாட்டேங்கிதே. பேசாம பாரின் போயிடலாமா. கொஞ்ச நாள் இவங்க யாரோட தொல்லையும் இல்லாம நிம்மதியா இருக்கலாம். ஆனா ருக்குவுக்கு பாஸ்போர்ட் இல்லையே.

     ஜம்மு-காஷ்மீருக்கு கூட்டிட்டுப் போகலாம் னா, அங்க தான் எப்ப பார்த்தாலும் தீவிரவாதத் தாக்குதல் நடந்துட்டு இருக்கு. பேசாம ஊட்டி, கொடைக்கானல் பக்கம் போனால் என்ன. ருக்கு நிச்சயம் அங்க போய் இருக்க மாட்டாங்க தான். ஆனா இங்க இருந்து பக்கத்தில் தான் இருக்கு.

     ஒருவேளை லீலா கிளம்புற விஷயம் தெரிந்ததும், ‘ட்ரிப்பாவது மண்ணாவது ஊர்மி தனியா இருப்பா அதனால்  வீட்டுக்கு போலாம்’ னு கிளம்பிட்டாங்கன்னா. கண்டிப்பா செய்யக்கூடிய ஆள் தான் என் பொண்டாட்டி. அதனால் ஊட்டி வேண்டாம். என்ன பண்ணலாம் என யோசித்தவனின் மண்டையில் உதித்த இடம் சிம்லா.

     “அது தான் சரியான இடம். இப்பவே போறேன், டிக்கெட், ஹோட்டல் புக் பண்றேன் ருக்குகிட்ட சொல்றேன், அவங்களைத் தள்ளிகிட்டு இன்னைக்கு சாயங்காலமே கிளம்புறேன்.” படபட பட்டாசை போல் வேகவேகமாக முடிவெடுத்தான் தெய்வா.

     “லீலா அக்கா அப்ப நான் திரும்ப நம்ம வீட்டுக்கு வருவதற்கு முன்னாடியே, நீங்களும் ருக்கு அக்காவும் கிளம்பிடுவீங்களா? நீங்க இரண்டு பேரும் கிளம்பி போயிட்டா ஊர்மி அக்காவை யார் பார்த்துக்கிறது. அவங்க எப்படி தனியா சமாளிப்பாங்க.” தவிப்பாய் கேட்டாள் தங்கை.

     “இதோடா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே நீங்க இரண்டு பேரும் ஹனிமூன் கிளம்பிப் போகலையான்னு அவ்வளவு வருத்தப்பட்ட, இப்ப மாத்திப் பேசுற.” தேவகியை மடக்கினாள் ஊர்மி.

     “ஹனிமூன் போறது முக்கியம் தான். ஆனா அதை விட கூடப் பொறந்தவங்க முக்கியம் இல்லையா?” தேவகியின் குரல் சிறுத்துப் போனது.

     “இங்க பாருடா, யாரைப் பத்தியும் கவலைப்படாம என் புருஷன் கூப்பிட்டாருன்னு பின்னாடியே ஓடிப் போனவ நீ. இப்ப என்னைப் பத்தி ரொம்ப யோசிக்கிறியா?” ஊர்மி சொன்ன அடுத்த நொடி அக்கா எனப் பதறினாள் தேவகி.

     “இங்க பாரு தேவகி, என்னை யாரும் பார்த்துக்கத் தேவையில்லை. எனக்கு என் புருஷன் போதும். அவர் என்னை ரொம்ப நல்லாப் பார்த்துக்கிறாரு. நீ சொன்னா நம்ப மாட்ட, இப்பல்லாம் அவருக்கு கோபமே வரமாட்டேங்கிது.

     இத்தனை நாளா நீங்களும் தான் என்னைப் பார்த்துக்கிட்டீங்க. ஆனா அப்பெல்லாம் விட, இப்ப தான் நான் ரொம்ப நல்லா இருக்கிற மாதிரி ஃபீல் பண்றேன். அதனால சும்மா என்னைப் பத்தி கவலைப்படாம நீயும் என்ன மாதிரி ஆகுற வழியை பாரு.” தேவகியோடு சேர்த்து தன் மற்ற இரு சகோதரிகளுக்கும் சேர்த்து பதில் சொன்னாள் ஊர்மி.

     “அதெல்லாம் நம்ம கையில என்னக்கா இருக்கு எல்லாம் ஆண்டவன் கொடுக்கிறது.” தயங்கியபடியே பதில் சொன்னாள் தேவகி. காரணம் படிப்பு முடியும் வரை எதுவும் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தான் தர்மா. அவளுக்கும் அது சரி என்று தோன்றியதால் கணவனிடம் ஒப்புக்கொண்டாள். ஆனால் சகோதரிகளிடம் சொல்ல முடியவில்லை.

     “நீ பிழைச்சுக்குவ டி தேவகி. நம்ம நாலு பேரில் எனக்குத் தான் அறிவு அதிகம் னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

பரவாயில்ல மத்த இரண்டு பேரை விட நீ கொஞ்சம் சுதாரிப்பு தான். அவங்க தான் இன்னமும் புருஷனை கைக்குள்ள போட்டுக்கத் தெரியாம சும்மா சுத்திக்கிட்டு இருக்காங்க.” சந்தடி சாக்கில் தமக்கைகளைக் கிண்டலடித்தாள்.

     “தேவகி விட்டா இவ இப்படித்தான் விடிய விடிய கதை பேசிகிட்டே இருப்பா. நீ போய் உன் வேலையைப் பாரு. இங்க எல்லாரும் நல்லா இருக்கோம். எங்களைப் பத்தி தேவையில்லாம யோசிக்காத. முக்கியமா உன் புருஷன் கிட்ட எங்களைப் பத்தி பேசவே பேசாத.

     நாலு பேர்ல அவர் ஒருத்தர் தான் நல்ல புத்தி உள்ளவரா இருக்காரு. நீ ஓயாம எங்களைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தா அப்புறம் அவரும் கோணல் புத்தி உள்ளவரா மாறிடப்போறாரு.” லீலா சொல்லிக் கொண்டிருந்த நேரம் பார்த்து வந்து சேர்ந்தான் செல்வா.

     “இவங்க நம்ம வர்ற நேரம் பார்த்து சரியா பேசுறாங்களா? இல்ல இவங்க பேசுற நேரம் பார்த்து சரியா நாம வரோமா.” என்னும் குழப்பத்துடனே தங்களுடைய அறைக்குள் சென்றான்.

     “என்னமோ சரியில்லையே இந்த அக்கா இப்படி எல்லாம் பேச மாட்டாங்களே. ஒருவேளை செல்வா மாமா ஏதும் கோக்கு மாக்கு வேலை பண்றாரோ. தங்கச்சிங்களை விட்டுட்டு தனிக்குடித்தனம் வா அப்பதான் வாழ்க்கையை ஆரம்பிப்போம் அப்படி இப்படின்னு எதுவும் சொல்லி இருப்பாரோ.” தன்னோடு யோசிக்க ஆரம்பித்தாள் ஊர்மி.

     “லீலா எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு. கொஞ்சம் ஸ்ட்ராங்கா டீ போட்டு ரூமுக்கு எடுத்துட்டு வறீங்களா?” அறை வாசலில் நின்று சத்தம் கொடுத்தான் செல்வா.

     “இதுக்கு மட்டும் தான் பொண்டாட்டி தேவைப்படும் போல இவருக்கு.” மெலிதாக முணங்கியபடி எழுந்து சென்றாள் லீலா. இருந்தாலும் அது ஊர்மியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

     “கன்பார்ம் லீலா அக்காவுக்கும், செல்வா மாமாவுக்கும் நடுவில் டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் சரி இல்லை. ஆனா தப்பு யார் மேல இருக்கும்.” வக்கீலின் மனைவியாக யார் பக்கம் நிற்பது என யோசிக்கத் துவங்கி இருந்தாள் ஊர்மி.

     முகத்தை திருப்பி வைத்துக் கொண்டு, தேநீர் கோப்பையை நீட்டிக்கொண்டிருந்த மனைவியைப் பார்த்து புன்னகைத்த செல்வா டீயை எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு அமைதியாய் சிரித்திருந்தான்.

     “இன்னும் எவ்வளவு நேரம் இப்படி ஒன்னும் இல்லாத என்னோட முகத்தைப் பார்த்துக்கிட்டே இருக்கப் போறீங்க. நீங்க கேட்ட டீயை வாங்கிக்கிட்டீங்கன்னா நான் கிளம்பிடுவேன். பொய் தலைவலியா இருந்தாலும், டீ சூடா குடிச்சா தான் நல்லா இருக்கும்.” என்றாள்.

     செல்வாவிற்கு நன்றாகத் தெரியும். டீயை எடுத்துக்கொண்டால், விட்டால் போதுமென்று தன்மனைவி ஓட்டம் பிடித்துவிடுவாள் என்று. அதனால் தன் வலக்கரத்தால் அவள் இடக்கரத்தைப் பிடித்துக்கொண்டவன் இன்னொரு கரத்தால் தேநீரை எடுத்துக்கொண்டு மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தான்.

     “கையை விடுங்க எனக்கு நிறைய வேலை இருக்கு.” அவன் ஸ்பரிசம் தித்தித்தாலும், தங்கள் வாழ்வைச் சிதைக்க நினைப்பவர்களைக் கண்டுபிடிப்பதில் மெத்தனம் காட்டுகிறானே என்னும் கடுப்பைக் காட்டினாள் லீலா.

     “அப்படி என்ன பெரிய வேலை, உங்க தங்கச்சிங்ககிட்ட என்னைப் பத்தி புகார் வாசிக்கிறது தானே.” இவனுக்கு இப்படியான குரல் மாற்றத்துடன் பேசத் தெரியுமா என்று லீலா யோசிக்கும் அளவுக்கு மென்மையான குரலில் பேசினான் செல்வா.

     “ப்ச்… நான் எப்ப உங்களைப் பத்தி அவங்ககிட்ட குற்றம் சொன்னேன். நீங்களா ஏதாவது நினைச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.” சொன்னவள் கணவனின் பிடியில் இருந்து தன் கரத்தை இழுக்கப் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்.

     “நேரடியாச் சொன்னா தான் உண்டா. நான் வர நேரம் பார்த்து தேவகிகிட்ட தர்மாவைச் சொல்ற மாதிரி, என்னைத் தானே ஜாடையா சொன்னீங்க.

     இந்த வீட்டில் என் தம்பி தர்மா ஒருத்தனுக்கு தான் நேர்புத்தின்னா மத்த எல்லாருக்கும் கோணல் புத்தின்னு தானே அர்த்தம்.” சற்றும் கோபம் இல்லாமல் தான் அவன் சொன்னான் என்றாலும், கோபித்துக்கொள்வானோ என்று பயந்து போனாள் லீலா.

     “அது… அது நான் தெரியாம சொல்லிட்டேன்.” என்க, “என்னது தெரியாமச் சொன்னீங்களா? நான் எவ்வளவு பெரிய உருவம். நான் வந்ததை நீங்க பார்த்ததை நான் நல்லாப் பார்த்தேன். அதுக்கு அப்புறம் தான் உங்க வாயிலிருந்து அந்த முத்து முத்தான வார்த்தைகள் வந்து விழுந்து.” சீண்டலாய் கேட்டவனை நிதானமாய் பார்த்தாள் லீலா.

     “என்ன லீலா எதுக்காக உள்ளுக்குள்ள வைச்சுக்கிட்டு வெளியே என்கிட்ட கேட்க முடியாம திணறிக்கிட்டு இருக்கீங்க. நீங்க கேட்க முடியாத வார்த்தைகள் தான் என் மேல கோவமா மாறி இப்படி வந்து விழுகுது.

     உங்க மனசுல என்ன ஓடுதோ அதைத் தெளிவா என்கிட்ட கேட்டுடுங்க. அது தப்பாவே இருந்தாலும் பரவாயில்லை. என்கிட்ட உங்களுக்கு எதுக்கு தயக்கம்.” மனைவியின் மனதை அவள் வாயிலாகவே அறிந்துகொள்ள வேண்டி ஊக்கமளித்தான் செல்வா.

     “நான் அன்னைக்கே சொன்னேன். உங்க உயிருக்கும், நம்ம வாழ்க்கைக்கும் வெளியில ஆபத்து இருக்கு, கொஞ்சம் பார்த்து பத்திரமா நடந்துக்கோங்கன்னு. ஆனா நீங்க இப்ப தான் பொறுப்பா ஞாயிற்றுக்கிழமை கூட விடாம வேலைக்குப் போறீங்க. நீங்க ரொம்ப கேர்லெஸ்ஸா இருக்குற மாதிரி எனக்குத் தோணுது. என் மனசார வேலைக்குப் போகாதீங்கன்னு உங்ககிட்ட சொல்லவும் முடியல.” திரும்பி நின்று முந்தானையை சுருட்டிக் கொண்டே சொன்னாள்.

     இவ்வளவு நாள் உயிர்காக்கும் வேலைக்குச் செல்பவனை தடுக்கக் கூடாது என்று தான் இருந்தாள். ஆனாலும் இத்தனை அஜாக்கிரதை தேவை தானா என்கிற கோபமும் உள்ளுக்குள் இருந்து, இப்போது சரியாக வெளியே வந்தது.

     “கல்யாணத்துக்கு முன்னாடி உங்களோட ப்ரண்ட் பாஸ்கர் விளையாட்டுக்காகவே இருந்தாலும் உங்க போனில் இருந்து உங்களுக்குத் தெரியாம என்னோட நம்பர் எடுத்து உங்களைப் பத்தி தப்பு தப்பா சொன்னாரு. அதை நான் பெருசா எடுத்துக்கல.

     இப்ப பார்த்தா போன் மூலமா பேச பயந்த யாரோ, போட்டோஸ் மூலமா பேச ட்ரை பண்றாங்க. உங்களைப் பத்தி தப்பான எண்ணங்களை எனக்குள்ள விதைக்கப் பார்க்கிறாங்க.

     அவங்க யாரு அவங்களோட நோக்கம் என்ன இதைப் பத்தி தெரிஞ்சிக்கிறதுல நீங்க ஆர்வம் காட்டவே மாட்டேங்கிறீங்க. எனக்குப் பயமா இருக்கு.” என்றாள் லீலா.

     “இந்த நிமிஷம் வரை பார்சலில் வந்திருந்த போட்டோவைப் பார்த்து உங்களுக்கு என் மேலே கொஞ்சம் கூட கோபம் வரலையா லீலா.” என்க, இது என்ன சம்பந்தம் இல்லாத பதில் என்று முறைத்தாள் லீலா.

     “ஏன் லீலா இப்படி இருக்கீங்க. வெளியுலகத்தில் ஒவ்வொரு பொண்டாட்டியும் தன்னோட புருஷன் வீட்டுக்கு ஒரு பத்து நிமிஷம் லேட்டா வந்தாக் கூட, அவனுக்கு வேற ஏதாவது பொண்ணு கூட தொடர்பு இருக்குமோன்னு சந்தேகப்படுறாங்க, திட்டுறாங்க, சண்டை போட்டு வீட்டை இரண்டாக்குறாங்க.

    நான் இன்னொரு பொண்ணோட நெருக்கமா இருக்கிற மாதிரி போட்டோஸ் பார்த்த பின்னாடியும் உங்களுக்குச் சந்தேகமோ, கோபமோ, பொறாமையோ வரலன்னா நீங்க என்னை அந்த அளவு நம்புறீங்கன்னு நினச்சு நான் சந்தோஷப்படவா? இல்ல நான் எப்படி போனா என்னன்னு இருக்கீங்களோன்னு உங்களை நினைச்சு வருத்தப்படவா? எனக்கு ஒன்னுமே புரியல.

     இப்ப வரைக்கும் அந்த போட்டோவுல இருக்கிற லேகாவைப் பத்தி, அவளோடனான என்னோட பழக்கம் எந்த அளவுக்குன்னு கூட நீங்க தெரிஞ்சுக்க நினைக்கல.” குறைபட்டான் செல்வா.

     “சந்திரமுகி படத்தில் ரஜினி வடிவேல் கிட்ட ஒரு டைலாக் சொல்லுவாரு என்னன்னு தெரியுமா? அதுதான் உங்க கேள்விக்கான பதில்.” என்றுவிட்டு சிரித்துக்கொண்டு ஓடினாள் லீலா.

     தங்களுடைய அறைக்குச் செல்லலாம் என்று நினைத்து எழுந்த ஊர்மி, லீலா வெட்கப்பட்டுக்கொண்டு வருவதைப் பார்த்ததும், “என்ன இந்த அக்கா போகும் போது உர்ருன்னு போச்சு. இப்ப இப்படி சிரிச்சுகிட்டே வருது. இந்த மாமா அப்படி என்ன பண்ணாருன்னு தெரியலையே. எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.” என்று நினைத்தபடி தன்னறைக்குள் சென்றாள்.

     அறைக்குள் லீலாவின் கூற்றிற்கான பொருள் என்ன என்று யோசித்து யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டிருந்தான் செல்வா.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. எனக்கும் அந்த டயலாக் தெரிஞ்சு போச்சு 😜😜😜😜😜😜🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு சிரிச்சு முடியல … லீலா சூப்பர் மா … டாக்டர் உன்னோட நிலைமை இப்படி ஆகிடுச்சே 😜😜😜😜😜😜😜😜