
அத்தியாயம் 72
லீலா அழைப்பை ஏற்ற அடுத்த கணமே, “என்னங்க வளர்த்து வைச்சிருக்கீங்க உங்க தங்கச்சியை. நான் சொல்லும் எதையும் கேட்க மாட்டேங்கிறாங்க. இப்படியே போனா நான் என்ன முடிவு பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. நீங்க மட்டும் என் அண்ணன் கூட நல்லபடியா குடும்பம் நடத்துறீங்க இல்ல. உங்க தங்கச்சிக்கும் கொஞ்சம் புத்தி சொல்லுங்க.” கண்டபடிக் கத்தினான் தெய்வா.
“ருக்கு என் தங்கச்சியா இருந்த வரை நல்லா தான் இருந்தா, எந்தத் தப்பும் பண்ணது இல்லை. இப்பவும் எந்தத் தப்பும் பண்ணி இருக்க மாட்டான்னு நம்புறேன்.
ஒருவேளை அவ நிஜமாவே தப்புப் பண்ணி இருக்கான்னா சேர்க்கை சரியில்லன்னு தான் அர்த்தம். என்னைக் கேட்கிறீங்களே, உங்க அண்ணனை நீங்க எப்படி வளர்த்து வைச்சிருக்கீங்க. அவர் என்னென்ன பண்றாருன்னு உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பத்தி நான் ஏதாவது குற்றம் சொன்னேனா?
என் தங்கச்சி பண்றது தப்புன்னு நீங்க எடுத்துச் சொன்ன உடனே அவ புரிஞ்சுக்கணும் னு எதிர்பார்க்கிறீங்க தானே. அப்ப நீங்க பண்றது தப்புன்னு அவ எடுத்துச் சொல்லும் போது நீங்களும் அதை ஏத்துக்கிட்டு மாறணும் தானே, செஞ்சீங்களா?” லீலா பதில் கேள்வி கேட்க, இவனுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.
“கையைப் பிடிப்பீங்களோ, காலில் விழுவீங்களோ நீங்களாச்சு உங்க பொண்டாட்டியாச்சு. பெருசா என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான்னு வீரவசனம் பேசினால் மட்டும் போதாது. அவ எதுக்காக சண்டை போடுறான்னு பார்த்து அதைச் சரி பண்ணுங்க.” என்றுவிட்டு தெய்வா பதில் பேசும் முன்னர் அழைப்பைத் துண்டித்தாள் லீலா.
“என்ன திமிர் இவங்களுக்கு. தங்கச்சி புருஷனாச்சேன்னு கொஞ்சமாச்சும் மரியாதை கொடுக்கிறாங்களா? எப்படித்தான் செல்வா இவங்களோட காலம் தள்ளப் போறானோ. நம்ம பொண்டாட்டியை இன்னும் கொஞ்ச நாள் இவங்களோட இருக்கவிட்டா நம்மபாடு திண்டாட்டம் தான். இதுக்கு அனுமதிக்கக் கூடாது. எப்படியாவது நம்ம பொண்டாட்டியை நம்மபக்கம் கொண்டு வரணும்.” என்கிற முடிவோடு ருக்குவைத் தேடிச் சென்றான் தெய்வா.
இந்த இடைவெளியில் தன் கையில் இருந்த புகைப்படங்களைப் பார்த்து அதிர்ந்து முடித்து கொஞ்சம் தெளிவடைந்து இருந்தான் செல்வா. “இந்த போட்டோஸ் எல்லாம்.” செல்வா பேச்சைத் துவங்க, “பொய்யுன்னு சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்.” தெளிவாக வார்த்தைகளை உச்சரித்தாள் லீலா.
“உண்மை தான் லீலா. ஆனா இது எல்லாம் எப்பவோ எடுத்தது. நானே மறந்துட்டேன். இதையெல்லாம் வேலை மெனக்கெட்டு யார் தேடிப்பிடிச்சு உனக்கு அனுப்பி வைச்சாங்கன்னு தான் தெரியல.” என்றான்.
“தெரியலன்னு வெறும் வாய் வார்த்தையா சொல்லிட்டா போச்சா? யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிங்க. நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதில் யாருக்கு என்ன பிரச்சனை. என்னை உங்ககிட்ட இருந்து பிரிப்பதால் அவங்களுக்கு என்ன இலாபம் எல்லாத்தையும் கண்டுபிடிங்க.” என்றாள்.
“ஏன், இவ்வளவு கோபம். நடந்த எல்லாத்தையும் நான் முன்னாடியே உங்ககிட்ட சொல்லி இருக்கேனே.” என்று பதறினான் செல்வா. அவனின் பதற்றத்திற்கு காரணம் அவன் லீலாவிடம் மறைத்துக்கொண்டிருக்கும் ஒரு உண்மை.
அந்த உண்மை தெரிந்ததால் தான் இத்தனை கோபமா என்று ஒருபக்கம் பயமாக இருந்தால், இன்னொரு பக்கம் அந்த உண்மை தெரியாமலேயே இவ்வளவு கோபம் என்றால், அது தெரிந்தால் தன் குடும்ப வாழ்க்கை என்னவாகும் என்கிற நினைப்பில் அதிக பயம் வந்தது.
லீலாவுக்குக் கோபம் வரும் என்பது தெரியும் தான். அந்தக் கோபத்தைக் கூட அவள் வார்த்தையின் அழுத்தத்தில் காண்பித்து தான் வழக்கம். இப்போது பார்த்தால் கண்கள் ஆரம்பித்து முகம் முழுவதும் கோபத்தில் சிவந்திருக்கிறதே என்னும் ஆச்சர்யத்தில் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் கோபம் செல்வாவின் மீதான கோபத்தினாலோ இல்லை அவன் முன்னாள் காதலியின் மீதான பொறாமையினாலோ வந்தது இல்லை. அவள் கோபம் முழுக்க அவள் கணவனிடம் இருந்து அவளைப் பிரிக்க நினைக்கும் நபர் மீது தான். அந்தக் குள்ளநரியை செல்வா இன்னமும் கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லையே என்னும் வருத்தம் தான் இப்போது அவன் பக்கம் பாய்ந்து கொண்டிருக்கிறது.
“நடந்தது, நடந்துக்கிட்டு இருக்கிறது எல்லாத்தையும் என்கிட்டச் சொல்லி இருக்கீங்க தான். ஆனா யாரோ ஒருத்தர் இப்படி நம்மை வாழ விடாமத் தொந்தரவு பண்ணுவாங்கன்னு சொல்லவே இல்லையே.” என்க, இதற்கு என்னால் என்ன செய்ய முடியும் என்கிற தோரணையில் ஒன்றும் புரியாமல் நின்றான் அவன்.
“இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம். நம்மை வாழ விடக்கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு வேலை செய்யும் அந்த நபர் யாருன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்கு ஒரு முடிவு கட்டுங்க. நாம நம்ம வாழ்க்கையைப் பார்ப்போமா இல்லை எந்தப் பக்கம் யார் வந்து என்ன பண்ணுவாங்கன்னு பயந்துக்கிட்டு இருப்போமா?
யாருக்குத் தெரியும் அன்னைக்கு என்னைக் கொல்லப் பார்த்த நபர் கூட இந்த வேலையைப் பார்த்திருக்கலாம். உங்க தம்பி போலீஸ் தானே, அவர்கிட்ட உதவி கேளுங்க. இல்லையா வேற யார் மூலமாச்சும் இந்த நாச வேலையைச் செய்யும் வீணன் யாருன்னு கண்டுபிடிச்சு என் முன்னாடி கொண்டு வாங்க.” என்றாள்.
லீலா சொல்வது போல் நடக்க வாய்ப்பிருக்குமோ எனப் பதறிய செல்வா ஊருக்குச் செல்லும் திட்டத்தை ஒத்தி வைத்து, தங்கள் வழமான வாழ்வை அழிக்கும் பாதகச் செயலைச் செய்யும் பாவி யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட முடிவெடுத்தான்.
தோட்டத்து மரநிழலில் நாற்காலியில் தன்னந்தனியாக கன்னத்தில் கை வைத்தவண்ணம் அமர்ந்திருந்த ருக்குவைத் தேடி வந்தான் தெய்வா.
இவ்வளவு நேரம் இருந்த கோபம் எல்லாம் ருக்குவின் அயர்ந்த தோற்றத்தைப் பார்த்ததும் பனிபோல் மறைந்திருக்க, “அதிகப்படியாகப் பேசிவிட்டோம். யாரோ எவரோ எப்படியோ இருந்தால் அதற்கு தன் மனைவி என்ன செய்வாள்.” என்கிற ஞானதோயம் தாமதமாக வந்திருக்க, தன்னைத் தானே நொந்து கொண்டு அவள் அருகே சென்றான் தெய்வா.
ருக்கு, என்றபடி அவள் தோள் தொட, “வாங்க” என்றபடி நகர்ந்து அமர்ந்து அவன் அமர வழி கொடுத்தாள்.
“நான் ரொம்பவே அதிகப்படியா பேசிட்டேன் இல்ல. லீவ் சொல்ல போனப்ப ஸ்டேஷனில் கொஞ்சம் பிரச்சனை. அதை தலையில் ஏத்திக்கிட்டு வந்து உங்ககிட்ட கத்திட்டேன். தெரியாம பண்ணிட்டேன்னு சொன்னா அது பொய். என் வாழ்க்கையில் எனக்குப் பிடிச்ச மாதிரி எதுவுமே நடக்க மாட்டேங்கிதே என்கிற கோபத்தில் கண்ட்ரோல் இல்லாமல் நடந்திடுச்சு.” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“சூடு பட்ட பூனை அடுப்புப் பக்கம் மறுபடி போகாதுன்னு சொல்லுவாங்க. இன்னைக்கு நடந்த தப்பு மறுபடி நடக்காதுன்னு உத்தரவாதம் தான் என்னால் கொடுக்க முடியும். இதுக்கு மேல நீங்க தான் சொல்லணும்.” என்றான். அன்று செல்வாவுடன் நடந்த சண்டையின் பின்னாலும் இதே போன்றதொரு வார்த்தைகளைத் தான் கணவன் சொன்னான் என்பது நினைவு வந்தாலும், அவன் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளத் தான் செய்தாள் பேதை.
“புருஷன் பொண்டாட்டிக்குள்ள வாக்குவாதம் வருவதெல்லாம் சகஜம் தான். வெளி வேலையில் வரும் எரிச்சலை புருஷன் பொண்டாட்டி மேல காட்டுவதும், வீட்டு எரிச்சலை பொண்டாட்டி புருஷன் மேல காட்டுவதும் நடந்துக்கிட்டு தான் இருக்கு. தொடர்ச்சியா நடந்து கொண்டிருப்பதால் அது சரின்னு ஆகிடாது. இரண்டு பேருமே தப்பு தான்.
உங்களுக்குள் இருக்கும் பாசத்தை உங்க அப்பா, உங்க கூடப்பிறந்தவங்க என்னோட அக்கா, தங்கைகள் னு யாருக்கும் பங்குபிரிச்சுக் கொடுக்கப் பிடிக்காம, மொத்த அன்பையும் எனக்கு மட்டுமே கொடுக்கணும் என்கிற ஆசையில் தான் தனியாப் போக நினைக்கிறீங்கன்னு அக்கா அடிக்கடி சொல்லுவாங்க.” என்றவளை விநோதமாகப் பார்த்தான் தெய்வா.
“அன்பு பகிர்ந்து கொடுப்பதால் தீர்ந்து போகும் புதையல் பானை இல்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சயப்பாத்திரம் மாதிரின்னு உன் புருஷனுக்குப் புரிய வைச்சிட்டா அவர் உன்னைத் தனியாக் கூப்பிட மாட்டார். நீ மனசு விட்டுப் பேசுன்னு அக்கா அத்தனை சொன்னாங்க. நான் தான், நான் சொல்லி தான் நீங்க என்னைப் புரிஞ்சுக்கணுமா? நீங்களா எனக்காக இறங்கி வரமாட்டீங்களான்னு ஒரு வீம்பில் தான் சுத்திக்கிட்டு இருந்தேன்.
ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த சண்டை எனக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைச்சது. நீங்க என்னை எடுத்தெறிந்து பேசுறப்ப எனக்கு வலிச்ச மாதிரி தானே இத்தனை நாள் என்னோட நடவடிக்கையும் உங்களைப் பாதிச்சிருக்கும்.” என்றவளை ஆச்சர்யமாகப் பார்த்தான் தெய்வா. சிரமப்பட்டு அவளுக்குப் புரிய வைக்க நினைத்திருந்த பலவற்றை அவளே புரிந்துகொண்டு விட்டாளே என்னும் சந்தோஷம் முளைத்தது அவனிடத்தில்.
“இரண்டு பேர் மேலும் தப்பு இருக்கு. பேசாம இரண்டு பேரும் சமரசம் ஆகிடலாம்.” என்றாள் சமாதான உடன்படிக்கையாக.
“அப்ப நம்ம ஹனிமூன் ப்ளான்.” சற்றே தயக்கமாகத் தான் கேட்டான் தெய்வா.
“கேட்கணுமா என்ன? ஏற்பாடு பண்ணுங்க.” என்றுவிட்டு முளைத்த வெட்கத்துடன் உள்ளே ஓடிவிட்டாள் ருக்கு. இவங்களோட இந்த சந்தோஷம் எப்பவும் இப்படியே இருக்கணும். அதுக்கு, வெளியிடத்தில் வரும் கஷ்டம், கவலை, கோபம் எல்லாத்தையும் வீட்டு வாசலோட அனுப்பி வைச்சிட்டு தான் இனி வீட்டுக்குள்ள வரணும்.” எனத் தன்னோடு சொல்லிக்கொண்டான் தெய்வா.
இன்னொரு இடத்தில், “லீலா இன்னும் உயிரோட இருக்காளா? அன்னைக்கு அனுப்பின ஆள் கச்சிதமா வேலையை முடிச்சிடுவான்னு தானே சொன்னீங்க. இவ்வளவு தான் அவன் வீரமா.
செல்வாவைக் கல்யாணம் பண்ணிக்காதன்னு ஆரம்பத்திலேயே வார்னிங் கொடுத்தோம். அதையும் தாண்டி தைரியமா கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னா அதற்குண்டான விளைவுகளையும் அவ சந்திச்சு தான் ஆகனும்.
வேற வழியே இல்லை. அவ உயிரோடு இருக்கிற வரைக்கும் நமக்குப் பிரச்சனை தான். ஆனா இப்போதைக்கு அடுத்த முயற்சி எதுவும் பண்ண வேண்டாம். ஏற்கனவே பண்ணதுக்கான ரியாக்ஷனே அவங்க பக்கம் இருந்து என்னன்னு தெரியல. அது தெரியாம இன்னொரு தடவை முயற்சி பண்ணி மாட்டிக்கக்கூடாது.
அவ சாகுறதை விட முக்கியம் நம்ம அடையாளம் வெளிப்படக் கூடாதுங்கிறது தான். அதை எப்பவுமே ஞாபகத்துல வைச்சுக்கோங்க. காலம், நேரம் எப்பவும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை. நல்ல நேரம் இருந்ததால் அன்னைக்குத் தப்பிச்சிட்டா.
நமக்கும் ஒரு நாள் நல்ல நேரம் வரும். அப்போ நம்ம பக்கம் காத்து வீசும், நாமளும் ஜெயிப்போம். நாம நினச்சதை சாதிப்போம்.” என்று அலைபேசியில் எதிர்ப்புறம் கேட்ட குரலுக்குப் பதிலாக, “அந்த செல்வா இவ்வளவு நாளா அவன் பொண்டாட்டி மேல அதிகமா பாசமோ, அன்போ காட்டல.
இப்ப கொஞ்ச நாளா அந்த மரமண்டைக்குள்ள ஏதோ மாற்றம் தெரியுது. யார் அவன் மூளையைக் கழுவினாங்கன்னு தெரியல. பொண்டாட்டியை கூட்டிகிட்டுத் தனியா பத்து நாள் ஹனிமூன் கிளம்புறானாம்.
பொண்டாட்டி மேல அவன் இந்தளவு பாசம் வைக்கிறது நமக்கு நல்லதுக்கு இல்ல. பின்னாடி அவ ஒட்டுமொத்தமா இல்லாமப் போனதுக்கு அப்புறம், ஆவேசத்தோட ஏதாவது ஏடாகூடமா பண்ணி நம்மைக் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கு.
அவங்க இரண்டு பேருக்கும் நடுவில் இப்ப வரைக்கும் ஒரு நல்ல இடைவெளி இருக்கு. செல்வாவே அதைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்கான். அந்த இடைவெளி குறையாம பார்த்துக்கிட்டாலே போதும். நாம நினைச்சதைச் சாதிச்சு எந்த பிரச்சனையும் இல்லாம எல்லோரும் சந்தோஷமா இருக்கலாம்.” என்றான் பாஸ்கரன். செல்வாவுடன் அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் சக நண்பன். எதிர்ப்புறம் இருப்பது யார் என்று தெரிய வரும் வேளையில் செல்வாவுக்கு அது பயங்கர அதிர்ச்சியாக அமையும் என்பது உறுதி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நினைச்சேன் பாஸ்கரன் தானு.. இன்னொருத்தர் யாரா இருக்கும் .. தெய்வா இப்போவாச்சும் உனக்கு அறிவு வந்ததே .. செல்வா சீக்கிரம் கண்டுபிடி பா .. டைட்டில் தப்பா இருக்கு சரி செய்யவும் ..
சூப்பர் எபி. எனக்கு பாஸ்கரன் மேல ஒரு டவுட் இருந்தது. பாஸ்கரோட கூட்டு வைச்சிருக்கிற விசக் கிருமி யாரது. செல்வா டாக்டர் தொழிலோட புலன் விசாரணையும் செய்ய வேண்டியதா இருக்கு. அந்த ரூம் இரண்டில் இருக்கும் ஸ்பெசல் பேஷன்ட் யாரோ?