
அத்தியாயம் 71
அடுத்த நாள் மாலை நேரம், “ஸ்சாரிங்க” தனக்குக் கால் பிடித்து விட்டுக் கொண்டிருந்த நாகாவிடம் சொன்னாள் ஊர்மி.
“எப்பவும் நான் தான் சம்பந்தம் இல்லாமல் பேசுவேன். இப்ப எனக்குப் பதில் நீ ஆரம்பிச்சுட்டியா?” மன்னிப்புக் கேட்க ஆயிரம் காரணங்கள் இருந்த போதெல்லாம் நான் அப்படித்தான் என வீம்பாக இருந்துவிட்டு இப்போது கேட்கும் மனைவியைப் புரிந்துகொள்ள முடியாமல் கேட்டான் நாகா.
“தேவகியும் அவ புருஷனும் ஹனிமூன் கிளம்பிப் போயிட்டாங்க. செல்வா மாமாவும், லீலா அக்கா கிட்ட இது பத்தி பேசி இருப்பாங்க போல. அக்கா மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே சுத்துறாங்க. உங்களுக்குள்ளேயும் இப்படி ஒரு ஆசை இருக்கும் இல்ல. நாம இராசி ஆகி கொஞ்ச நாளிலே நீங்க இதைப் பத்தி என்கிட்ட கேட்டீங்க. அப்ப இருந்த நிலைமைக்கு நான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன். இப்போ நானே ஆசைப்பட்டாலும் வரமுடியாத நிலைமை.” என்று மேடிட்ட தன் வயிற்றை தடவிப் பார்த்துக் கொண்டவள்,
“இதுக்கு மேலும் போக முடியுமான்னு தெரியல. உங்களை நினைக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. அதனால் தான் மன்னிப்புக் கேட்டேன்.” என்றாள் ஊர்மி.
“நீ வீட்டுக்குள் வைச்சு ஹனிமூன் கொண்டாடியதால் தான் இப்ப உன்னைக் கழட்டி விடுறோம்.” என்று தெய்வா சொன்னது நினைவு வர சிரித்துக்கொண்டவன், “நான் நினைச்சா, இப்பக் கூட உன்னை ஊர் ஊரா கூட்டிட்டு என்ன தூக்கிட்டே போவேன். என்னைக் கேட்க யார் இருக்கா. உன் உடம்புக்கு ஆகாதுங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு அமைதியா இருக்கேன்.
நம்ம குழந்தைங்க பிறந்து நடந்து பழகுற வரைக்கும் தான் இந்தப் பொறுமை எல்லாம். அதுக்கு அப்புறம் நமக்கு எதுக்கும் தடை இல்லை. இவங்க எல்லாம் இருபது நாள் தானே ப்ளான் போட்டு இருக்காங்க. நான் உன்னைக் கூட்டிட்டு போனா குறைந்தபட்சம் நூறு நாள் கழிச்சு தான் வீட்டுக்குத் திரும்ப கூட்டிட்டு வருவேன்.” கண்களில் கனவுகள் மின்னச் சொன்னான்.
“என்னது இரண்டு குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் ஹனிமூன் கொண்டாட்டமா. அதுவும் குழந்தைங்களைத் தூக்கிட்டா, இதைச் சொன்னா சிரிப்பாங்க எல்லாரும்.” கற்பனை செய்து சிரித்தபடிச் சொன்னாள் ஊர்மி.
“ஹேய் குழந்தைகளைப் கூட்டிட்டு ஹனிமூன் போகப் போறோம் னு நான் எப்பச் சொன்னேன். குழந்தைகளை உன் அக்கா, தங்கச்சிங்க கிட்ட விட்டுட்டு நாம இரண்டு பேரும் மட்டும் போக போறோம்.” என்றான்.
“என்ன விளையாடுறீங்களா, குழந்தைகளைத் தனியா இங்க நூறு நாள் விட்டுட்டு, நாம இரண்டு பேரும் தனியாப் போறது நல்லாவா இருக்கும்.” நடக்குமா நடக்காதா என உறுதியாகத் தெரியாத விஷயத்திற்காக செல்ல சண்டை போட்டனர் இருவரும்.
“நான் சொன்னா சொன்னது தான். எனக்கு உன்னோட ஜாலியா ஊர் சுத்தணும், வெளியே போகனும், என்ஜாய் பண்ணனும் அவ்வளவு தான். ஏன் உன் அக்கா தங்கச்சிங்க உனக்காக நம்ம பிள்ளைகளை ஒரு நூறு நாள் பார்த்துக்க மாட்டாங்களா?” குண்டூர் மிளகாய் காரத்துடன் கேட்டான்.
“மத்த நேரமெல்லாம் என் அக்கா, தங்கச்சிங்களைக் கண்டாலே வெறுப்பா இருக்குன்னு புலம்ப வேண்டியது. இப்ப உங்களுக்கு காரியம் ஆகனும் னு வரும் போது, பெத்த குழந்தைங்களை அவங்ககிட்ட நம்பிக்கையோட விட்டுட்டு இவர் ஜாலியா வெளியூர் போவாறாம். உங்களுக்குத் தேவைன்னா அவங்க நல்லவங்க, இல்லைன்னா கெட்டவங்களா.” ஊர்மி கேட்க, பதில் சொல்லத் தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான் நாகா.
செல்வா அறையின் பால்கனியில் நின்றபடி, “பாஸ்கர் நானும் என் வொய்ப்பும் கொஞ்ச நாள் வெளியூர் போகலாம் னு இருக்கோம். அதுவரைக்கும் நீதான் பெட் நம்பர் இரண்டில் இருக்கிறவங்களைப் பார்த்துக்கணும்.” கோரிக்கையா கட்டளையா எனப் பிரித்தறிய முடியாத குரலில் சொன்னான் செல்வா.
“என்ன செல்வா ஹனிமூன் கொண்டாட்டமா நடத்து நடத்து. ஆனாப் பாரேன், ஹனிமூன் போகும் நேரம் கூட வார்ட் நம்பர் இரண்டில் இருக்கும் நபரைப் பத்தின யோசனையில் தான் இருக்க போல.” பாஸ்கரின் குரலில் அப்பட்டமான நக்கல் தெரித்தது.
“வாயை மூடு, அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. அதோட ஹனிமூன் எல்லாம் ஒன்னும் இல்ல. வீட்டில் என் தம்பிங்க அவங்கவங்க பொண்டாட்டியைக் கூட்டிக்கிட்டு வெளியூர் கிளம்பிப் போறாங்க. லீலா எதுவும் சொல்லாமப் போனால் கூட அவங்களுக்கும் அப்படி ஆசை இருக்கும் தானே. என்னோட வேலையை நினைச்சு அமைதியா இருக்காங்க.
வேலை எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு குடும்பமும் முக்கியம் தானே. அதனால் தான் லீலாவைக் கூட்டிக்கிட்டு நானும் கொஞ்ச நாள் வெளியூர் போயிட்டு வரலாம் னு இருக்கேன்.” தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
பாஸ்கர் கொஞ்சம் கோணல் புத்தி உள்ளவன் தான் என்றாலும் எப்படியும் போ என்று இப்போது வரை சொல்ல முடியவில்லை செல்வாவால். ஏதோ ஒன்றுக்காக அவனுக்கு அடுத்தடுத்து பாஸ்கரின் உதவி தேவைப்பட்டுக்கொண்டே இருந்தது.
“தாராளமாப் போயிட்டு வா செல்வா. நீ வர வரைக்கும் உன்னோட எல்லா வேலையையும் நான் பாத்துக்குறேன்.” என்றான் பாஸ்கர்.
தெய்வாவின் அறையில், “ருக்கு அழுகையை நிறுத்துங்கன்னு சொல்றேன் இல்ல.” காட்டுக் கத்தலாக அவன் சொன்ன பின்னால் தான் வாயை மூடினாள் அவள். அப்போதும் தேம்பல் நிற்கவில்லை. தன் பாட்டிற்கு அக்கா, வீட்டு வேலைகள் என்று சுற்றிக்கொண்டிருந்தவளுக்கு திடீரென அரசு மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, அரசுவை இழுத்துக்கொண்டு பதறியடித்துக்கொண்டு ஓடினாள்.
குற்றவாளி ஒருவனைப் பிடிக்கச் சென்ற இடத்தில் அடிபட்டு மருத்துவமனையில் வந்து கிடக்கும் தெய்வாவைப் பார்த்த நேரத்தில் இருந்து விடாமல் அழுது கொண்டிருந்தாள். அரசு தான் மருத்துவரிடம் எல்லா விபரங்களையும் கேட்டுக்கொண்டிருந்தான்.
முதலில் ருக்குவின் அழுகையை, தனக்கான மனைவியின் அன்பு எனப் பெருமையாகத் தான் பார்த்தான். ஆனால் அந்த பெருமை உணர்வு நீண்ட நேரமாக அழுகிறாளே என்னும் தவிப்பாக இறங்கி, சுற்றியுள்ள அனைவரும் அவளை ஒருமாதிரிப் பார்த்து வைப்பதை உணர்ந்து கடுப்பாகி அழுகையை நிறுத்தச் சொல்லி கத்த ஆரம்பித்தான். அங்கு ஆரம்பித்து வீடு வந்து சேர்ந்த பின்னரும் நிற்கவில்லை ருக்குவின் அழுகையும், அவனின் அதட்டலும்.
“அழுகையை நிறுத்துங்க ருக்கு. சின்ன அடிதான் சீக்கிரம் சரியா போயிடும்.” பொறுமையை இழுத்துப் பிடித்துக்கொண்டு சொன்னான்.
“இதுவா சின்ன அடி, வெட்டுக்காயம் இன்னும் நாலு இன்ச் உள்ளே இறங்கி இருந்தா ரொம்ப ஆபத்துன்னு டாக்டர் என்கிட்ட தானே சொன்னாங்க. உங்ககிட்டையா சொன்னாங்க.” என்றவள் தன் கரம் பட்டு காயம் அழுந்தி அதனால் கணவன் முகம் போன போக்கைப் பார்த்து இன்னமும் தான் அழுதாள்.
வலியை மறைத்துக்கொண்டு, “ருக்கு போலீஸ்காரன் வாழ்க்கையில இதெல்லாம் சகஜம் தான். நீங்க இதுக்கெல்லாம் மனதளவில் தயாரா இருக்கணும்.” என்க, அவனைக் கடுமையாக முறைத்தாள் அவன் தர்மபத்தினி.
“இங்க பாருங்க, இப்படிக் கேனத்தனமா பேசுறதை விட்டுட்டு, இப்ப நான் சொல்லப் போறதை நல்லாக் காதில் ஏத்திக்கோங்க.
இன்னொரு தடவை இந்த மாதிரி அடி வாங்கிட்டு வந்தீங்கன்னா, உங்களை அடுத்து இந்த காக்கி யூனிஃபார்ம் போடவே விடமாட்டேன். இது உறுதி.” என்றவளை பங்குனி மாத சூரியனை விட மோசமாக எரித்தான் தெய்வா.
அதைச் சிறிதும் கண்டுகொள்ளாமல், “உங்களுக்கு உங்க வேலை மேல அத்தனை ஆசை இருந்துச்சுன்னா, இனிமேலாச்சும் வெளியே போற இடத்தில் அடிபடாமல் வாங்க. இன்னொரு முறை இந்த வேலையால் உங்க உடம்பில் இரத்தக் காயத்தை பார்த்தேன்னா என்னால் தாங்கிக்க முடியாது.” என்றாள் அழுகையுடன்.
அவளுடைய பயம், பதற்றத்தையும் மீறி தனக்குப் பிடித்த வேலையை விடச் சொல்லாத மனைவியின் மீது அன்பு கூடியது தெய்வாவிற்கு.
“சரி அப்போ ஒன்னு பண்ணுவோம். நடந்த கெட்டதை நல்லதா மாத்திடுவோம். பட்ட அடியைக் காரணம் காட்டி நான் கொஞ்ச நாள் மெடிக்கல் லீவ் அப்ளை பண்றேன். குற்றாலம், பாபநாசம் அப்படின்னு டூர் போயிட்டு வருவோமா. சௌத் தமிழ்நாடு இந்தக் குளிர்காலத்தில் ரொம்ப நல்லா இருக்கும் னு கேள்விப்பட்டு இருக்கேன்.
உங்களுக்கு ஓகேன்னா போகலாம். இல்ல நார்த் இந்தியா சைடு காஷ்மீர், இமாச்சல் போலாமா. இல்ல வெளிநாடு போகலாம் னு சொன்னாலும் எனக்கு டபுள் ஓகே தான். ஒரு பிரச்சனையும் கிடையாது.” எதிர்பார்ப்புடன் சொன்னான்.
மனைவியின் மனதில் தனக்கென்று இருக்கும் தனிப்பட்ட இடத்தின் பரப்பளவை இன்னும் இன்னும் அதிகமாக்க வேண்டும் என்று வேகவேகமாகத் திட்டம் போட்டான்.
“ஆசையைப் பாரு, வெளிநாட்டுக்குப் போக முதல்ல எனக்கு பாஸ்போர்ட் அப்ளை பண்ணனும், விசா எடுக்கணும். அதுக்கெல்லாம் குறைஞ்சபட்சம் ஒரு இரண்டு மாசம் ஆகும். அதுவும் இல்லாம இப்படி முதுகு நிறையக் காயத்தோட இருக்கிறவங்களை ப்ளைனில் ஏத்த மாட்டாங்களாம். அதனால் இதெல்லாம் வேண்டாம். அதுவும் இல்லாமல் தமிழ்நாட்டில் நான் பார்க்காத இடம் நிறைய இருக்கு. முதலில் என்னை அங்கெல்லாம் கூட்டிட்டுப் போங்க.” என்றாள்.
“ருக்கு நீங்க சொல்றதுக்கு அர்த்தம் புரியுதா நீங்க என்னோட வர ஒத்துக்கிட்டீங்க.” தெய்வா சந்தோஷத்தில் குதிக்க, “பேசுற வார்த்தைகளோட அர்த்தம் தெரியாம பேசுறதுக்கு நான் ஒன்னும் என் போலீஸ்கார புருஷன் மாதிரி மக்கு கிடையாது.” கிண்டலடித்தாள்.
“உங்களோட இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம். ஒருவேளை அந்த டாக்குமெண்ட்டில் நான் சைன் பண்ணிக் கொடுத்து அதனால வந்து நம்பிக்கையோ. இல்லை இப்படி அடிபட்டுக்கிடக்கிறதால் வந்த கருணையா?” எவ்வளவு முயன்றும் தெய்வாவின் சனி நிறைந்த நாக்கு தன் வேலையை காட்டியது.
“உங்களுக்குப் போய் பாவம் பார்த்தேன் பாத்தீங்களா என்னைச் சொல்லணும்.” ருக்கு சீறிப்பாய நினைக்க, “இதோ பாருடா, இவங்க எனக்குப் பாவம் பார்த்தாங்களாமா? இராத்திரி தூங்கும் போது வைச்ச கண்ணு வாங்காம என்னைக் கொட்ட கொட்ட முழிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்ததெல்லாம் நீங்க தானே. அதெல்லாம் மறந்து போச்சா இல்ல, இவனுக்கு எப்படி தெரியப் போகுதுன்னு நினைச்சிட்டீங்களா? போலீஸ்காரன் மா, எப்போதும் முழிப்போட தான் இருப்பேன்.” என்றவனை வழக்கம் போல் ஆசையாய் பார்த்தாள் ருக்கு.
“ஆரம்பிச்சுட்டாங்க சைட் அடிக்க. உள்ளுக்குள்ள இவ்வளவு ஆசையை மறைச்சு வைச்சுகிட்டு எனக்காக ஒத்துக்கிட்டாங்களாமாம். ரொம்பப் பெரிய மனசு தான் உங்களுக்கு.” வெளிப்படையாகவே நக்கலடித்தான்.
“உங்களுக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லைங்க, இதை எல்லாமா பார்த்துட்டு இருக்கீங்க.” வெட்கம் வந்து தொலைத்தது அவளுக்கு.
“இது நல்லா இருக்கே. நீங்க என்னை வைச்ச கண்ணு வாங்காமப் பார்க்கலாம். நீங்க பார்க்கிறதை நான் பார்க்கிறது தப்பா என்ன?” போலீஸ்காரன் நியாயம் பேசினான்.
“போங்க நீங்க நான் வெளியே போறேன்.” என்றுவிட்டு தப்பித்தால் போதும் என்று ஓடி வந்தாள் ருக்கு.
தேவகி தர்மாவின் நேரங்கள் நல்லபடியாகவே கடந்தது. “நீங்க டேராடூன்னு சொன்னவுடனே நான் என்னமோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா என்னங்க இங்க இப்படிக் குளிருது. என்னால தாங்கிக்க முடியல. தயவு செஞ்சு அந்த நெருப்பைக் கொஞ்சம் மூட்டுங்களேன்.” கைகளை தேய்த்து கன்னத்தில் வைத்துக்கொண்டே சொன்னாள் தேவகி.
“இவ்வளவு குளிர் இங்கே இருக்கும் என்கிற ஒரே காரணத்துக்காகத் தான் நான் இந்த இடத்தை செலக்ட் பண்ணேன் தேவகி.” இதழ்களுக்குள் புன்னகையோடு சொன்னான் தர்மன்.
“உங்களுக்குள்ள இப்படி ஒரு மன்மதன் இருக்காரா? எனக்குத் தெரியாம போச்சே.” கிண்டல் செய்தாள் தேவகி.
“உனக்குள்ள கூட இப்படி ஒரு ரதி இருக்கான்னு எனக்கு இப்பதான் தெரியுது. பனியில் நனைஞ்ச ரோஜா மாதிரி தனித்துவமான அழகில் இருக்க தேவகி.” சொல்லிக்கொண்டு அவளை மெதுவாக அணைத்திருந்தான் தர்மா.
“ரொம்பப் பேசாதீங்க, எனக்குப் பயங்கரமா குளிருது ஏதாவது பண்ணுங்க.” என்ன பேசுகிறோம் என்று புரியாமல் அந்த நேரத்தில் மனதில் தோன்றியதைச் சொல்லிவிட்டாள் தேவகி.
“ஏதாவது தானே பண்ணனும் சிறப்பா பண்ணிடலாம்.” விஷமப் புன்னகையுடன் சொன்னான் அவன். “நான் நெருப்பை மூட்டைச் சொன்னேன்.” என்றபடி அவள் சிணுங்க, “நெருப்பு எப்பவோ பத்திக்கிச்சு தேவகி.” என்றவன், தனக்குள் இருந்த வெப்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக அவளுள் ஏற்றினான்.
“லீலா எனக்கு பத்து நாள் லீவ் கிடைச்சிருக்கு. நம்ம இரண்டு பெரும் எங்கேயாச்சும் வெளியில் போகலாம். எந்த ஊர் எவ்வளவு நாள் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணுங்க. முடிந்தவரை சீக்கிரமே கிளம்பலாம்.” என்றான் செல்வா.
“என்னங்க இப்படி திடீர்னு சொல்றீங்க. இவ்வளவு சீக்கிரம் எப்படி எல்லாத்தையும் அரேன்ஞ்ச் பண்ண முடியும்.” பதட்டமானாள் லீலா.
“முன்கூட்டியே திட்டம் போடாத ட்ரிப் தான் எதிர்பாராத வகையில் ரொம்ப நல்லா அமையும். நான் போய் குளிச்சிட்டு வந்துடுறேன். நல்ல ஊரை செலக்ட் பண்ணி வைங்க. டிக்கெட் பார்த்துட்டு நாளைக்கு கிளம்பிடலாம்.” என்றுவிட்டு வேலையில் கவனமானான்.
அவன் திரும்பி வரவும், “செலக்ட் பண்ற அளவுக்குப் பெருசா எனக்கு எந்த ஊரும் தெரியாதுங்க. உங்களுக்கு எந்த ஊரு நல்ல பழக்கமோ அங்க போகலாம்.” என்றாள் லீலா.
“நல்ல பழக்கம் னா கேரளா, கர்நாடகா தான். அங்கேயே போகலாமா?” என்க, “எந்த ஊரா இருந்தா என்ன, எனக்குத் தேவை நான் உங்களோட இருக்கணும் என்பது தான். அதனால் எனக்குச் சம்மதம் தான்.” என்றாள் லீலா.
அவள் வார்த்தைகள் சுரத்தை இல்லாமல் வருவது போல் தோன்ற, “லீலா என் முகத்தைப் பார்த்து உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கு என்கூட வெளியூர் வருவதில் சந்தோஷம் இல்லையா? இல்ல நான் ஏதாவது அத்து மீறி நடந்துக்குவேனோன்னு பயமா இருக்கா.” இதைக் கேட்கும் போதே செல்வாவிற்கு பயங்கர கோவம் இருந்தது.
“அப்படி நினைப்பு இருந்தா இதுக்கு முன்னாடி உங்க கூட கேரளாவுக்கு வந்திருப்பேனா, இது வேற விஷயம்.” என்றாள் லீலா.
“வேற என்ன விஷயம்?” என்க, “இதைப் பாருங்க” என்று கபோர்டில் இருந்து எதையோ எடுத்துக் கொடுத்தாள் லீலா. அதைப் பார்த்து ஏகத்திற்கும் குழம்பினான் செல்வா.
ஹோட்டல் அறையில் ப்ரேத்யேக இடத்தில் நெருப்பை மூட்டி அதனருகே அமர்ந்த தர்மன் தேவகியை அருகே அழைத்து அமரவைத்து தனது உள்ளங்கையை நெருப்பில் காட்டி அதை சூடாக அவளின் கன்னத்தில் வைத்தான். அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், “இந்நேரம் வீட்ல எல்லாரும் என்ன பண்ணிட்டு இருப்பாங்களோ தெரியல இல்ல.” தமக்கைகளின் நினைப்பை மறைக்காமல் கணவனிடம் வெளிப்படுத்தினாள் அவள்.
“கண்ணு முன்னாடி புருஷங்காரன் குத்துக்கல்லாட்டம் இருக்கான். அவனைப் பத்தி யோசிக்கிறதை விட்டுட்டு அக்கா தங்கச்சியைப் பத்தி யோசிக்கிறதைப் பாரு. இவங்களைப் பிரிக்கணும் னு நாங்க நாலு பேரு நினைக்கிறது தப்பு இல்ல போல.” தனக்குள் நினைத்துக் கொண்டான் தர்மா.
அன்றைய நாள் இரவில், “ருக்கு உங்களை நம்பி நான் ஹனிமூன் ட்ரிப் ஏற்பாடு பண்ணிட்டேன். பிரச்சனை பண்ணாம என்கூட வருவீங்க தானே, கவிழ்த்து விட்டுட மாட்டீங்களே.
போற இடத்தில் நான் எப்படியெல்லாம் நடந்துக்கணும் னு சொல்ற மாதிரி கண்டிஷன் ஏதாவது இருந்தா அதை எழுதி அந்தப் பேப்பரை எடுத்துட்டு வாங்க, நான் கையெழுத்துப் போட்டு கொடுத்துடுறேன். நல்ல நேரம் எப்பன்னு பார்த்துச் சொல்லுங்க.” என்றான்.
விடுப்பு எழுதிக் கொடுப்பதற்காக சென்ற இடத்தில் பஞ்சாயத்திற்கு வந்திருந்த கணவன், மனைவி வழக்கு ஒன்று அவனை இப்படியெல்லாம் பேச வைத்தது. திருமணம் முடித்த இரண்டு வருடத்தில் கணவன் இறந்து போன பெண்ணை அவள் குழந்தை மற்றும் எதிர்கால வாழ்க்கையை மனதில் வைத்து, கணவனின் அண்ணனுக்கு மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
இருவருமே ஒரு குழந்தையுடன் துணையை இழந்தவர்கள் என்பதால் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்பார்கள் என்பதால் எடுத்த முடிவு இது. பெண், இரண்டு பிள்ளைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து கணவனைத் தன்னை விட்டுத் தள்ளியே நிறுத்தி இருக்கிறாள். அதில் கணவனுக்கு அதிக வருத்தம்.
மனைவிக்குப் புத்திமதி சொல்லச் சொல்லி மாமனார் வீடு சென்ற நேரத்தில் நடந்த சம்பவம் கைகலப்பில் முடிய இங்கு வந்திருந்தனர் குடும்பத்துடன்.
மனைவிக்குப் பிள்ளைகள் போதும் என்கிற நிலை. வளர்ப்பு மகள் வேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காக கணவன் என்கிற உறவை உதறாமல் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்ட தெய்வாவிற்கு, அந்தக் கணவனும் தானும் ஒரே நிலையில் இருப்பது போன்ற உணர்வு. அந்தக் கடுப்பைத் தான் இப்போது தன் மனைவியிடம் காட்டிக்கொண்டிருந்தான் பைத்தியக்காரன்.
“என்னைப் பார்த்தா உங்களுக்குக் கிண்டலா இருக்கா? நீங்களும், செல்வா மாமாவும் அன்னைக்குப் பேட்டை ரௌடி மாதிரி சண்டை போடாம இருந்திருந்தா, நாங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இருப்போமா?” கடுமையாகச் சாடினாள் ருக்கு.
“அண்ணன், தம்பிக்குள்ள சண்டை வருவது எல்லாம் சகஜம் தான். எங்க வீட்டு வேலைக்காரங்க, அப்பா அவ்வளவு ஏன் அரசுகிட்ட கேட்டாக் கூட சொல்லுவான். நாங்க நாலு பேரும் சண்டை போடாம நாலு நாள் அமைதியா இருந்தாலே அது அதிசயம் தான்.
அண்ணன், தம்பி சண்டையில் நீங்க நடுவில் வந்து தான் பிரச்சனை பெருசாச்சு. தப்பை உணர்ந்து நீங்க இறங்கி வந்திருந்தா இவ்வளவு நாள் இந்த வேதனை தேவை இருந்திருக்காது.” என்றான் தெய்வா.
“ஓஹோ அப்ப எப்பவும் நாங்க தான் இறங்கி வரணுமோ, ஏன் நீங்க இறங்கி வந்தா உங்க நாலு பேரு தலையில் இருக்கிற கிரீடம் இறங்கிடுமோ?” நக்கலாகக் கேட்டாள்.
“நான் அந்த மீனிங்ல சொல்லல.” பச்சையாகப் பொய் சொன்னான் தெய்வா. அவனுக்குள் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்த ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாக, என்ன பிரச்சனை வந்தாலும் மனைவியே சமாதானத்துக்கு முன்வர வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. அது பொய்த்துப் போனதில் கூடுதல் வருத்தம் அவனுக்கு.
“நீங்க எந்த மீனிங்கில் சொன்னாலும், நீங்க சொன்னதுக்கு அதுதான் அர்த்தம். எங்க நாலு பேருக்கும் சுயமரியாதை எண்ணங்கள் அதிகம். எங்க அத்தை, அம்மாவுக்கு அடுத்து எங்க அக்கா தலையெடுத்தப்ப, அவங்க வெளியில் கத்துக்கிட்ட சுயமரியாதை எண்ணங்களை எங்களுக்குச் சொல்லிக்கொடுத்து வளர்த்து இருக்காங்க.” பெருமையாகச் சொன்னாள் அவள்.
“பெண்ணுரிமை எண்ணங்களைச் சொல்லிக் கொடுத்தவங்க கொஞ்சமாச்சும் தைரியத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கலாம் .” இவ்வாக்கியத்தை ருக்குவை மட்டம் தட்டுவதற்காக அல்லாமல், லீலாவைப் பற்றிய மனைவி சொன்ன பெருமையான வார்த்தையில் உண்டான பொறாமையை வெளிப்படுத்துவதற்காகச் சொன்னான்.
ஆனால் அது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. “நான் உங்ககிட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். உங்களுக்குத் தைரியமான பொண்ணு தான் வேணும், இல்ல நீங்க நினைக்கிற மாதிரி கீ கொடுத்த பொம்மை மாதிரி நடந்துக்கிற பொண்ணுதான் வேணும் னா எனக்கு விவாகரத்துக் கொடுத்துட்டு வேற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு.
அதையும் பண்ணாம, என் வழிக்கும் வராம ஏன் இப்படி நீங்களும் அல்லோலப்பட்டு, என்னையும் அல்லோலப் பட வைக்கிறீங்க. நான் இப்படிப்பட்டவன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. இப்ப உங்களுக்கு ஏத்த மாதிரி, நான் என்னை மாத்திக்கணும் னு நினைக்கிறீங்களே அது உங்களுக்கு தப்பா தெரியலையா?” என்றாள்.
“உங்ககிட்ட இருக்கிற சில குணங்களைத் தான் நீங்க மாத்திக்கணும் னு நினைச்சேனே தவிர, எனக்கு ஏத்தபடி பொம்மையா மாறி நிற்கணும் னு நான் நினைக்கவே இல்லை.” மனதில் இருந்து சொன்னான் தெய்வா.
“அப்ப நான் எப்படி இருக்கேனோ அப்படியே என்னை ஏத்துக்க நினைக்கிறீங்க அப்படித்தானே.” என்க, “ஏத்துக்க நினைக்கிறேனா, ஏற்கனவே ஏத்துக்கிட்டேன் ருக்கு. ஆனா உங்களுக்கு தான் இன்னும் என்மேல் நம்பிக்கை வரல.” வருத்தமாகச் சொன்னான்.
“எனக்குத் தான் உங்க மேல நம்பிக்கை இல்லை. உங்களுக்கு என்மேல் ரொம்ப நம்பிக்கை இருக்கே. அப்புறம் எதுக்காக நான் கேக்குற கண்டிஷன் பேப்பரில் கையெழுத்துப் போட்டு கொடுக்குறதுக்கு உங்களுக்கு இவ்வளவு நாள் தேவைப்பட்டது.” சுற்றி சுற்றி தன் தேவைக்கே வந்தாள் ருக்கு.
“நீங்க கொடுத்த கண்டிஷன் பேப்பரில் உங்களை நான் எப்படிப் பார்த்துக்கணும், உங்ககூட சண்டை போடக் கூடாது, வருஷத்தில் இத்தனை முறை வெளியில் கூட்டிட்டுப் போகணும், இத்தனை குழந்தைங்க பெத்துக்கணும் அப்படின்னு நம்ம சம்மந்தப்பட்ட விஷயங்கள் மட்டும் எழுதி என்கிட்ட கையெழுத்து கேட்டு இருந்தீங்கன்னா, ஒரு கையெழுத்து என்ன நூறு கையெழுத்து கூட நான் போட்டுக் கொடுத்து இருப்பேன்.
எனக்குப் பிடிக்காத விஷயங்களை மட்டுமே செலக்ட் பண்ணி, அதை ஒரு பேப்பரில் எழுதி அதைத் தான் இனிமே நான் எப்பவும் கடைப்பிடிக்கணும் னு சொன்னா எனக்கு கோபம் வருமா வராதா?” என்றான்.
“உங்களோட பிரச்சினை என்னன்னு தெரியுமாங்க? நீங்க எப்பவும் உங்களோட நிலையில் இருந்து மட்டும் தான் யோசிக்கிறீங்க. உங்களுக்கு எதிரே இருக்கிறவங்களோட மனநிலையில் இருந்து யோசிச்சு பார்க்கிறதுக்கு உங்களுக்கு குணம் பத்தல.”
“இப்ப என்ன சொல்ல வரீங்க. நான் உங்களைப் புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்துறேனா. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க சந்தோஷமா இல்லையா?” எங்கோ ஆரம்பித்த பிரச்சனை எங்கோ போனது.
“உங்களோட கோபம் ஆபத்து எல்லைகிட்ட வந்திடுச்சு. இதுக்கு மேல இந்த விஷயத்தை நம்ம பேசுறது நம்ம இரண்டு பேருக்குமே நல்லது இல்லை நான் இப்ப கிளம்புறேன்.” என்றாள்.
“நான் பேசிக்கிட்டு இருக்கும் போது நீங்க மதிக்காத மாதிரி நடுவிலே கிளம்பிப் போனா அதுக்கு என்ன அர்த்தம்.” என அதற்கொரு சண்டை பிடித்தான்.
“இப்படி ஒரு நிலைமை ஊர்மிக்கும், அவளோட புருஷனுக்கும் வந்ததால் தான் நாம நாலு ஜோடியும் பிரியுற மாதிரி சூழ்நிலை வந்துச்சு. அந்த மாதிரி இன்னொரு நிலைமை அதுவும் நம்மளால வரக்கூடாதுன்னு நினைக்கிறேன்.” தெளிவாகச் சொன்னாள்.
“ஏன் ருக்கு எப்பப் பார்த்தாலும் இப்படித் தப்பு தப்பாவே யோசிக்கிறீங்க. என் மேல கொஞ்சம் கூட உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மத்தவங்க கிட்ட நான் எப்படி நடந்துக்கிட்டாலும், உங்ககிட்ட அன்பாகவும் அக்கறையாவும் தானே நடந்துக்குறேன். அது போதாதா உங்களுக்கு.
நான் உங்களுக்கு மட்டும் நல்லவனா இருந்தா போதும் னு நினைக்கிறது தப்பா என்ன. எதுக்காக எல்லாருக்கும் நல்லவனா இருக்கச் சொல்லி கட்டாயப்படுத்துறீங்க. அது என்னோட இயல்பும் இல்லை. ஏன் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க.” மனதில் இருந்து கேட்டான்.
கணவனின் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டாள் ருக்கு. மனைவியை என்ன செய்வது என்று புரியாமல் தவித்த தெய்வாவின் மனம் ஒரு யோசனை சொல்ல, வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் லீலாவுக்கு அழைத்து விட்டான்.
செல்வா மற்றும் லேகா இருவரின் கடந்தகாலப் புகைப்படங்களை தன்னுடைய பெயருக்கு யாரோ பார்சல் அனுப்பி வைத்திருப்பதை கணவனிடம் காண்பித்த லீலா அவன் அதிர்ந்து சிலையாய் இருப்பதை கவனிக்காமல் தன் சொந்த யோசனையில் உழன்று கொண்டிருந்தாள். அப்போது தான் தெய்வாவின் அழைப்பு வந்தது. தெய்வா எதற்காக அழைக்கிறான் என்று புரியாமல் சற்றே குழப்பத்துடன் அந்த அழைப்பை ஏற்றாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன தர்மாவும் இப்படி யோசிக்க ஆரம்பிச்சுட்டான் .. மன்மதன் ரதியா என்ஜாய் .. தெய்வா போலீஸ் மூளையை கழட்டி வச்சா நல்லது ..