
அத்தியாயம் 70
“சரி சீக்கிரம் வாங்க, வந்து என் பக்கத்தில் உட்காருங்க இப்பவே படத்தை போடுறேன்.” என்றபடி சமீபத்திய திரைப்படங்களில் நல்ல படங்களைத் தேடிக்கொண்டிருந்தான் தெய்வா.
“ஸ்நேக்ஸ் ஏதாவது வேணுமா, இப்பவே சொல்லிடுங்க. படம் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் கேட்டீங்கன்னா கிடைக்காது.” கண்டிப்பாய் சொன்னாள் ருக்கு.
“அப்படி ஒன்னு இருக்குல்ல. நீங்க ஒன்னு பண்றீங்களா, வெளியே போய் உங்க அக்கா தங்கச்சிங்ககிட்ட நானும் என் புருஷனும் படம் பார்க்கப் போறோம். ஒரு மூணு மணி நேரத்துக்கு தொந்தரவு பண்ணாதீங்கன்னு சொல்லிட்டு, அப்படியே கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வாங்க.” என்றான்.
“என்ன ஆனாலும் உங்க லந்து மட்டும் உங்களை விட்டுப் போக மாட்டேங்கிது.” கடுகடுத்தாள் ருக்கு.
“என்னைப் பத்தி குற்றம் சொல்றதை விட்டுட்டு, சீக்கிரம் போயிட்டு வந்தா நல்லா இருக்கும். எழுத்து போட ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க. அப்புறமா இதுக்கும் நீங்க என்னைக் குற்றம் சொல்லக்கூடாது.” முந்தைய அனுபவத்தில் அப்பாவி போல் சொன்னான் தெய்வா.
“அப்படியே பாஸ் பண்ணி வைங்க, நான் இப்பவே வந்துடுறேன்.” என்று வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் ருக்கு.
“அக்கா அதுவந்து” என்று ராகம் பாடிக் கொண்டிருந்தாள் தேவகி.
“என்னடி விஷயம், எதுக்காக இப்படித் தயங்கிக்கிட்டு இருக்க. அதுவந்து அதுவந்துன்னு நீ இதுவரைக்கும் பத்து தடவைக்கு மேல சொல்லிட்டியே தவிர, சொல்ல வந்த விஷயத்தை சொல்ல மாட்டேங்கிற.” சலித்தாள் லீலா.
“இல்லக்கா எனக்கு காலேஜ் லீவ் தானே. வெளியூர் போகலாமான்னு அவர் கேட்கிறார்.” தயங்கியபடிச் சொன்னாள்.
“இதையெல்லாமா என்கிட்ட கேட்டுக்கிட்டு இருப்ப. முன்னாடி மாதிரி கிடையாது தேவகி. உன் வாழ்க்கையின் சில முடிவுகளை நீ சொந்தமா எடுக்கக் கத்துக்கணும். உன் புருஷன் தானே கூப்பிடுறாரு சந்தோசமா போயிட்டு வா.” மகிழ்வோடு சொன்னாள் லீலா.
“ஊர்மி அக்காவை இப்படி ஒரு நிலைமையில் விட்டுட்டு நான் எப்படித் தனியாப் போறது. அதோட வர இருபது இருபத்தைந்து நாளாகுமாம். எனக்கு பத்து நாள் தான் காலேஜ் லீவ். நாலு நாள் காலேஜ் அப்புறம் நாலு நாள் அரசாங்க விடுமுறை வருவதால் மொத்தமா சேர்த்து லீவ் எழுதிக் கொடுத்து இருக்கார். அவ்வளவு நாள் உங்களை எல்லாம் பார்க்காம நான் எப்படி இருப்பேன்.” சிணுங்கினாள் தேவகி.
“உலகம் எங்கேயோ போய்க்கிட்டு இருக்கு தேவகி. இப்பப் போய் இப்படி பீல் பண்ற. தினமும் வீடியோ காலில் பேசினா போகுது. அதோட ஊர்மியை நாங்க இரண்டு பேரும் பார்த்துகிறோம். நீ சந்தோசமா போயிட்டு வா.” என்றாள் அங்கு வந்த ருக்கு.
“சரி தான் தேவகி. அக்கான்னு எங்க கூட இருந்தா மட்டும் போதுமா? உன் புருஷனும் முக்கியம் தானே. சந்தோஷமா போயிட்டு வா.” லீலாவும் தன் பங்கிற்கு தங்கைக்கு எடுத்துச் சொன்னாள்.
தேவகி ஒத்துக்கொள்ள ருக்குவிற்கு தான் வந்த காரியம் நினைவு வந்தது. “அக்கா அவரு படம் பார்க்க கூப்பிட்டாரு, நான் படம் பார்க்கப் போறேன்.” என்று விட்டு தின்பண்டம் எடுத்துக்கொண்டு தனது அறைக்குள் ஓடினாள் ருக்கு.
“அக்கா இந்த வீட்டில் நடக்கிறது எல்லாம் கனவா நனவான்னு எனக்கு ஒன்னுமே புரியல. போன வாரம் வரைக்கும் நாம எப்படி இருந்தா என்ன, அவங்களோட பிடிவாதம் தான் முக்கியம் னு அவங்க பாட்டுக்கு இருந்தாங்க. இப்ப என்னடான்னா திடீர்னு எல்லாமே தலைகீழா நடக்குது. ஒரு நேரத்தில் ஒருத்தர் மாறினாலே அதிசயம். ஆனா இங்க நாலு பேருமே மாறி இருக்காங்களே.” லீலா வெட்டிக்கொடுத்த ஆப்பிளை சாப்பிட்டுக்கொண்டே சந்தேகம் கேட்டாள் ஊர்மி.
“தலைகீழா நடக்குதோ, வளைஞ்சு வளைஞ்சு நடக்குதோ எல்லாமே நல்லதா தானே நடக்கிது. ஆராய்ச்சி பண்ணாம அப்படியே விட்டுடு.” என்றாள் லீலா.
“ஏன் ருக்கு கொஞ்சம் ஸ்நாக்ஸ் எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா. சீக்கிரம் வாங்க நான் எவ்வளவு நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.” என்ற தெய்வா தன் அருகில் அமர்ந்தவள் தோளில் கை போட்டுக்கொண்டு படத்தைப் பார்க்க ஆரம்பித்தான்.
முதல் ஒரு நிமிடம் அவன் முகத்தையே குறுகுறுவெனப் பார்த்த ருக்கு சின்னச்சிரிப்புடன் படத்தில் கவனமானாள். அவள் படம் பார்க்கும் போது தொந்தரவு செய்து, வாங்கிக் கட்டிய நினைவு வர இம்முறை அந்தத் தவறைச் செய்யக்கூடாது என்பதற்காக அவள் படத்தை ரசிக்கும் அழகை ரசித்தவாறு இரண்டரை மணி நேரத்தை கடத்தியிருந்தான் தெய்வா.
அவளுடைய காது அருகே இருந்த முடியை ஊதிவிட்டு கலைப்பது, பின் அதை எடுத்து காதிற்கு பின் சேர்ப்பது என்று சலிக்காமல் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தான். இதையும், தன்னுடைய நெருக்கத்தின் விளைவாக கணவனிடம் இருந்து அவ்வப்பொழுது வெளிவரும் பெருமூச்சையும் கவனிக்காதது போல் கவனித்துக்கொண்டு தான் இருந்தாள் ருக்கு.
சிரித்து, அழுது, பிரமித்து என ஒவ்வொரு காட்சிக்கும் அவள் முகம் போகும் போக்கை மனதிற்குள் அழகாக படம் பிடித்து சொந்தமாக ஒரு திரைப்படம் தயாரித்து தனக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் தெய்வா. அன்றைய நாள் அனைவருக்கும் நல்லபடியாகவே முடிந்தது.
அடுத்த நாள் காலையில், “அக்கா அவரு இன்னைக்கே கிளம்பச் சொல்றாருக்கா.” விருப்பு, தயக்கம் இரண்டுக்கும் நடுவே போராடிக்கொண்டு சொன்னாள் தேவகி.
“சந்தோஷமா கிளம்பு தேவகி. போறதுக்கு முன்னாடி மாமாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு கிளம்பு.” என்றாள் லீலா.
மனைவிக்கு அந்தப் பணியைத் தராமல், “அப்பா எனக்கும் தேவகிக்கும் காலேஜ் லீவு. அதனால தேவகியைக் கூட்டிக்கிட்டு டேராடூன் டூ டெல்லி ட்ரிப் போயிட்டு வரலாம் னு இருக்கேன்.” தகவலாகச் சொன்னான் தர்மா.
“ஏன்டா இப்படிச் சுத்தி வளைக்குற. ஹனிமூன் போயிட்டு வரேன்னு சந்தோஷமா சொல்லிட்டு போ.” சிரித்தபடி சொன்னார் வடிவேலு.
“அப்பா என்னப்பா.” அழகாக வெட்கப்பட்டான் தர்மா. “இதெல்லாம் இரண்டு, மூணு மாசத்துக்கு முன்னாடியே நடந்திருக்க வேண்டியது. இப்பதான் என் பசங்களுக்குப் புத்தி வருது, நான் என்ன பண்றது.” என்றபடி சிரித்தார் அவர்.
“நீங்க பெத்துப் போட்ட பசங்களுக்கு பல்ப் எல்லாம் லேட்டா தான் எரியும் போல. ஒன்னு எரிஞ்சிடுச்சு, இன்னும் மூணு பேர் வரிசையில் இருக்காங்க.” அருகே இருந்த அரசு கிண்டலடித்தான்.
“டேய் நீயும் என்னைக் கிண்டல் பண்ற இல்ல. எல்லாம் இந்த அப்பாவைச் சொல்லணும். அவரால பேச முடியாதது எல்லாத்தையும் உன்னைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறதை வேலையா வைச்சு இருக்கார்.” என்றான் தர்மா. “உண்மை உண்மை” எனச் சத்தமாகச் சிரித்தான் அரசு.
“போயிட்டு வந்து உன்னைக் கவனிச்சுக்கிறேன்.” என்றபடித் தன் அறைக்கு வந்தவன், “தேவகி இருபது நாளைக்கு இந்த லக்கேஜ் போதும் தானே.” என்றான்.
“ஏங்க நாம கண்டிப்பா போய்த்தான் ஆகனுமா?” என்றாள். தான் நினைத்துப் பயந்தது போலவே பின்வாங்கிய மனைவியை முறைத்தான் தர்மன்.
முறைக்கும் கணவனிடம் என்ன சொல்வது எனப் புரியாமல் அவள் அமைதி காக்க, “என்ன தேவகி இப்ப போய் இப்படி சொல்றீங்க, நமக்கு இன்னும் நாலு மணி நேரத்துல பிளைட்.” சிரமப்பட்டு பொறுமையாகப் பேசினான்.
“இல்ல வீட்டுக்கு மூத்தவங்க செல்வா மாமாவும், அக்காவும் தான். அவங்களே எங்கேயும் வெளியே போகல. நாம வெளியே போறது நல்லாவா இருக்கு.” தயங்கினாள் அவள்.
“ஏன் தேவகி இப்படி இருக்கீங்க. ஒரே வீட்டில் இருக்கோம் என்பதற்காக எல்லாத்திலும் அவங்க முன்னாடி நாம பின்னாடின்னு இருக்க முடியுமா? அவங்கவங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு, சௌகர்யம் இருக்கும். அதன் படி தான் வாழனும்.
அதை விட்டுட்டு கண்டபடிப் பேசிக்கிட்டு இருக்கீங்க. இது தான் உங்க பாஷையில் கூட்டுக்குடும்பம் னா என்னைப் பொறுத்தவரைக்கும் இது பைத்தியக்காரத்தனம்.“ என்றவனை முறைத்தாள் அவள்.
“என்ன முறைப்பு, நீங்க சொல்ற அதே செல்வாவும், லீலாவும் இருக்கும் போது தான் நாகவும், ஊர்மியும் குழந்தை பெத்துக்க போறாங்க. அதை நினைச்சு அவங்க வருத்தப்படுறாங்களா என்ன. இல்ல நீங்க சொல்ற லீலாவும், செல்வாவும் தான் வருத்தப்படுறாங்களா?
எல்லோரும் என்னைச் சொல்வாங்க ஓவரா நல்லவனா இருக்காதன்னு. அதை இப்ப நான் திருப்பி உங்களுக்கு சொல்லலாம் னு நினைக்கிறேன். இப்ப உங்களுக்கு ஸ்டடி லீவ். எனக்கு லீவ் அப்ளை பண்ணேன் கிடைச்சுடுச்சு.
இனிமே நம்ம இரண்டு பேருக்கும் ஒன்னா எப்ப லீவு கிடைக்கும் னு சொல்ல முடியாது. இருந்தாலும் உங்களுக்கு இது வேண்டாம் னு தோணுச்சுன்னா வேண்டாம். நான் டிக்கெட் கேன்சல் பண்ணிடுறேன்.” சற்றே கடுப்புடன் தான் சொன்னான் தர்மா.
“இல்ல இல்ல வேண்டாம் வேண்டாம் நாம கிளம்பலாம்.” வேகமாகச் சொன்னாள் தேவகி.
லேசாக வாடிய முகத்துடன் உடமைகளை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்த தேவகியை லேசாக அணைத்துக் கொண்ட லீலா, “தேவகி மொழி தெரியாத ஊர், தெரியாத இடம், எப்பவும் இவரை விட்டுத் தனியாப் போகக் கூடாது. பாத்து பத்திரமா இரு, உடம்பைப் பாத்துக்கோ அவரையும் பாத்துக்கோ. சும்மா சும்மா தயங்கிக்கிட்டு இருக்காம வேணும் வேண்டாம் னு எதுவா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லிடு.” தங்கைக்குத் தேவையானதை அறிவுறுத்தினாள் லீலா.
“இருபது நாளாமே என்னடி வரும் போது இரண்டு பேரா வருவீங்களா மூணு பேரா வருவீங்களா?” தங்கைக்கு மட்டும் கேட்கும் குரலில் கிண்டல் செய்தாள் ஊர்மி.
“தேவகி சந்தோஷமா போயிட்டு வா. தினமும் கால் பண்ணு சரியா. இங்க நாங்க மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் பார்த்துப்போம். நீ தான் தனியா இருக்கப் போற, பத்திரம்.” சொன்னவள் ருக்கு.
“அவங்க ஒன்னும் தனியா இருக்கப் போறதில்லை. அவங்க என் கூட இருக்க போறாங்க. அவங்களை நான் நல்லாப் பார்த்துப்பேன். சொல்லப்போனா உங்களை விட நல்லாவே பார்த்துப்பேன்.” வெடுக்கென்று பதில் சொன்னான் தர்மன்.
“டேய் சீக்கிரம் கிளம்பு டா, காத்து வரட்டும். ஏடாகூடமாப் பேசி குட்டையைக் குழப்பிடாதே.” என்று தனக்குள் பேசினான் தெய்வா. அது கேட்டதோ என்னவோ விரைவாகக் கிளம்பிவிட்டிருந்தான் வடிவேலுவின் கடைக்குட்டி.
ப்ளைட்டில் ஏறியதில் இருந்து அதிகப்படியான பதற்றத்தின் காரணமாக தர்மாவின் கரத்திலிருந்து தன்னுடைய கரத்தை பிரிக்கவே இல்லை தேவகி. இறங்கியதும் அதை விட மோசம். குளிர் காலம் என்பதால் டேராடூன் வழக்கத்தை விட மிகவும் குளிராக இருக்க, இன்னும் இன்னும் கணவனை நன்றாக ஒட்டிக் கொண்டு நடந்தாள் தேவகி. அதை இரசித்துக்கொண்டு உடன் நடந்தான் தர்மா.
“ருக்கு என் தம்பியும், உங்க தங்கச்சியும் ஹனிமூன் போயிட்டாங்க. நாம எப்ப போறது.” மனைவியிடம் மெதுவாகத் தூண்டில் போட்டான் தெய்வா.
“நான் எப்பவோ வரேன்னு சொல்லிட்டேன். அதைக் கண்டுக்காம சண்டை தான் முக்கியம் னு ஒருத்தங்க சண்டை போட்டு எல்லாத்தையும் கொடுத்துட்டாங்க. நான் சமாதானத்துக்கு ஒரு வழி சொன்னேன். அதைக் கூட வேண்டாம் னு வெறுப்பா சுத்திக்கிட்டு இருந்தா நான் என்ன பண்ண முடியும்.” பொடி வைத்துப் பேசினாள்.
“ஏன் ருக்கு முடிஞ்சதையே திரும்பத் திரும்ப சொல்லி மனசைக் கஷ்டப்படுத்துறீங்க. முடிஞ்சது முடிஞ்சு போச்சு. அதை நான் இல்ல கடவுளே நினைச்சாலும் மாத்த முடியாது.
நடந்து முடிந்த விஷயங்களில் மறக்க முடிவதை மறப்பதும், கடக்க முடிவதைக் கடந்து முன்னேறுவதும் தான் நல்லது.” என்றவன் அங்கும் இங்கும் தேடி அவள் எப்போதும் பத்திரமாக வைத்திருக்கும் காகிதங்களில் கையெழுத்துப் போட்டு முடித்து,
“இதோ இந்த விளங்காத கண்டிஷன் பேப்பரில் கையெழுத்தும் போட்டுட்டேன். இதுக்கு மேல நான் என்ன பண்ணா நீங்க அமைதியா பழைய மாதிரி அன்பா மட்டும் இருப்பீங்கன்னு சொல்லுங்க.” என இறங்கி வருவது போல் காட்டிக்கொண்டான் காவலன்.
“ஏங்க, கொஞ்சம் கொஞ்சமா மாறுங்க. இப்படி ஒரேடியா மாறினா என்னால எப்படி நம்ப முடியும், சந்தேகமா இருக்கா இல்லையா?” சிரித்தபடியே சொன்னாள் ருக்கு.
“சந்தேகமா என்ன சந்தேகம் உங்களுக்கு?” புருவம் உயர்த்தினான் அவன்.
“இல்ல உண்மையான பாசத்துல ஹனிமூன் போலாமான்னு கூப்பிடுறீங்களா? இல்ல என் தம்பியே ஹனிமூன் போயிட்டான் நான் இன்னும் போகலன்னு கர்வம், பொறாமையில் கூப்பிடுறீங்களா?
ஏன் கேட்கிறேன்னா அண்ணன், தம்பிங்க நாலு பேரும் அப்படியான ஆள்கள் தானே.” சிரித்தபடியே கணவனுக்கு வார்த்தைகளால் கொட்டு வைத்தாள் மனைவி.
“ஓ இந்தச் சந்தேகமா, நான் கூட என்னவோ ஏதோன்னு நினைச்சு ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்.” அதீத நிம்மதியில் உளறத் துவங்கினான்.
அவனைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு, “எதை நினைத்து பயந்தீங்க.” என்றவளை அதிர்ந்த பார்வை பார்த்தவன், “எதை எதையோ நினைச்சுப் பயந்தேன். அதை எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா? போங்க போய் ஏதாவது வேலையை பாருங்க.” என்றுவிட்டு அப்போதைக்குத் தப்பித்தான் தெய்வா.
“ஊர்மி உனக்கு காலுக்கு மசாஜ் பண்ணலாமா?” என்றபடி தங்கையிடம் வந்தாள் லீலா.
“இல்லக்கா இனி எனக்கான சின்ன வேலையா இருந்தாலும் அதை என் புருஷனை பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாரு.” சிரித்தபடிச் சொன்னாள் ஊர்மி.
“இது என்னடி உலக அதிசயமா இருக்கு.” ருக்கு கேட்க, “அக்கா சும்மா அவரைக் குறை சொல்லிட்டே இருக்காதக்கா. அவருக்கு என் மேல நிறைய அக்கறை இருக்கு.” என்றாள்.
“அவருக்கு உன் மேல அக்கறை இருக்கணும் என்பது தானே எங்களுக்கும் ஆசை.” சொன்ன லீலாவுக்குள் இன்னும் கொஞ்சம் சங்கடம் மீதம் இருந்தது.
“இனி உனக்கான எந்த வேலையா இருந்தாலும் நான் தான் பார்ப்பேன். உன் அக்கா, தங்கச்சிங்காளைத் தொந்தரவு பண்ண கூடாதுன்னு அவரே என்கிட்டச் சொன்னாரு தெரியுமா?” பெருமையாகச் சொன்னாள் ஊர்மி.
“இதோ பாருடா” ருக்கு அதிசயிக்க, “அக்கா நான் போறேன் அவர் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு.” என்றபடி கிளம்பினாள் ஊர்மி.
சற்று நேரம் கழித்து, “ஏன் லீலா, உங்க தங்கச்சி தேவகி வெளியூர் போறேன்னு கிளம்பிட்டாங்க. உங்களுக்கு அப்படி ஏதும் ஆசை இருக்கா.” புத்தகம் படித்துக் கொண்டிருந்த செல்வா மனைவி வந்ததும் இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தான்.
அவனுக்கு மருத்துவமனையில் அதிக வேலை இருந்தது தான். ஆனால் வேலையா வாழ்க்கையா என்றால் வாழ்க்கை பக்கம் தான் நிற்கத் தோன்றியது அவனுக்கு. துவைத்த துணிகளை மெத்தையில் போட்டு மடித்து கொண்டிருந்த லீலா ஒரு நிமிடம் தயங்கி கணவன் முகத்தைப் பார்த்தாள். அவனுடைய முகத்தில் எந்தவிதமான ஆசைகளும் இல்லாமல், மனைவியான தனக்குள் அப்படி ஒரு ஆசை இருக்குமோ என்ற சிந்தனை மட்டுமே தெரிய, சின்னதாய் வருத்தம் கொண்டாள்.
“நீங்க என்ன நினைக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கிறதுக்குத் தான் நான் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டேன். ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க, பாத்துக்கலாம்.” என்று இறங்கி வந்தான் செல்வா.
“எந்தப் பொண்ணுக்குத் தான் புருஷன் கூட ஊர் சுத்த ஆசை இருக்காது. அந்த வகையில் எனக்கும் கூட நிறையவே ஆசை இருக்கு தான். ஆனா உங்களோட வேலை அதுக்கு ஒத்துழைக்காது இல்ல. உங்களுக்கு எப்ப தோதுப்படும் னு சொல்லுங்க அப்ப நாம கிளம்பலாம்.” என்னுடைய ஆசைக்காக அல்லாமல் இருவருடைய ஆசைக்காக செல்லும் போது எங்கே வேண்டுமானாலும் எத்தனை நாள்கள் வேண்டுமானாலும் செல்லலாம் என மறைமுகமாகச் சொன்னாள் லீலா.
அவள் மறைமுக வார்த்தைகளைப் புரிந்து கொண்ட செல்வா, “சரியா சொல்லுங்க லீலா, நான் கூப்பிட்டா என் கூட வெளியூருக்கு வருவீங்களா இல்ல ஹனிமூன் வருவீங்களா?” விளக்கம் கேட்டான்.
“இண்டுக்கும் பெருசா என்னங்க வித்தியாசம் இருக்கு.” என்றாள் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டு, அதைக் கவனித்தவன், “இரண்டுக்கும் நடுவில் அதிகப்படியான வித்தியாசம் இருக்கு.” புன்னகையுடன் சொன்னான். லீலா வேகமாக அறையை விட்டு வெளியேற, அதைப் பார்த்து சற்றே சத்தமாக சிரித்தான் செல்வா. அந்தச் சத்தம் லீலாவைத் துரத்தியது போல் இன்னும் வேகமாக ஓடி வந்து தங்கையின் அருகில் நின்று கொண்டாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


லீலாவுக்கு வெட்கமா .. டாக்டர் ஹனிமூன் கிளம்புறதா ஐடியா இருக்கா இல்லையா ..