Loading

அத்தியாயம் 69

     “தர்மா உன்கிட்ட ப்ளான் சொல்லி, நாலஞ்சு நாள் ஆச்சு. ஒரு முன்னேற்றத்தையும் காணும். இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க. எப்ப நீயும் உன் பொண்டாட்டியும் எங்களை வெறுப்பேத்துறது, அதைச் சாக்கா வைச்சு நாங்க எப்ப எங்க பொண்டாட்டிங்க கிட்ட பேசுறது.” பொறுமையின்றிக் கேட்டான் தெய்வா. ராஜ் சகோதரர்கள் நான்கு பேரும் இரண்டாம் முறையாக இரகசிய வட்டமேஜை மாநாட்டிற்காகக் கூடி இருந்தனர்.

     “நானும், தேவகியும் இப்ப தான் கொஞ்சம் இராசியாகி இருக்கோம். இனி மெல்ல மெல்ல நீ சொன்ன மாதிரி நடந்துக்கிறேன்.” தயக்கமாய் சொன்னான் தர்மன்.

     “எனக்கு அது தேவைப்படாதுன்னு நினைக்கிறேன். ஏன்னா நானும், லீலாவும் கூட இப்போ ஓரளவுக்கு சமாதானமாகிட்டோம்.” சொன்னவன் செல்வா.

     “சூப்பர் செல்வா, இது எப்ப நடந்துச்சு சொல்லவே இல்ல.” நான்கு நாள்கள் ஒன்றாகப் பேசியதால் உரிமையும் தன்னால் வந்து சேரக் கேட்டான் நாகா.

     அதைக் கெடுப்பது போல, “நீ ஒன்னு ஒன்னையும் என்கிட்ட சொல்லிட்டுத் தான் பண்ணிக்கிட்டு இருக்கியா, நான் சொல்றதுக்கு.” பட்டென்று கேட்டுவிட்டான் செல்வா.

     “செல்வா இப்ப ஏன் அவன்கிட்ட எகிறிகிட்டு இருக்க. மூணு பேரும் நல்லாக் கேட்டுக்கோங்க. நம்மளோட திட்டம் நமக்கேத்த மாதிரி நல்லபடியா நடந்து முடியுற வரைக்கும், சில பிரைவசியான விஷயங்களைத் தவிர மத்த எல்லாத்தையும் நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஷேர் பண்ணிக்கணும்.

     அவங்க நாலு பேரோட மனநிலையை வைச்சு தான் அவங்களைப் பிரிக்கத் தேவையான நடவடிக்கைகளை நாம ரெடி பண்ண முடியும்.” என்றான் தெய்வா.

     “செல்வா, தர்மா இரண்டு பேரும் ஓரளவுக்கு அவங்க பொண்டாட்டிங்க கூட சமாதானம் ஆகிட்டாங்க. சுமங்கலி பூஜை அன்னைக்கு உடம்பு சரியில்லாமப் போன நேரத்தில் இருந்து நானும், ஊர்மியும் கூட கொஞ்சம் கொஞ்சம் ஓகே தான். மிச்சமிருக்கிறது நீ மட்டும் தான்.

     உன் ஒருத்தனுக்காக தர்மா கஷ்டப்பட்டு எல்லோர் முன்னாடியும் அவன் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணனுமா என்ன. அவன் அந்த  விஷயத்தைநினைச்சு ரொம்ப சங்கடப்படுறான்.” தர்மாவுக்காக முன்வந்து கேட்டான் நாகா. அவன் உடன்பிறந்தவனோ தான் காண்பது கனவா இல்லை நனவா என்று தன்னை ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்.

     “சரி தான், என் ஒருத்தனுக்காக நீ உனக்குச் சங்கடத்தைக் கொடுக்கக்கூடிய விஷயத்தைப் பண்ண வேண்டாம் தர்மா. என் பொண்டாட்டி உண்மையில் ரொம்ப வெகுளி. அக்கா தங்கச்சிங்க கூட அதிகமாச் சேராம  இருந்தா அவங்களைச் சமாளிக்கிறது ரொம்பச் சுலபம்.” அதீத நம்பிக்கையுடன் சொன்னான் தெய்வா.

     ஒருவனுக்காக இன்னொருவன் யோசிப்பதும், பின்னவன் பேச்சை முன்னவன் கேட்டு தன் கருத்தை மாற்றிக்கொள்வதும், சகோதரன் தனக்காக அவன் சொந்த விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய வேண்டாம் என இறங்கிப் போவதும் ராஜ் சகோதரர்கள் வரலாற்றிலேயே இல்லாத விஷயங்கள். ஆனால் அவை எல்லாம் தான் இப்போது வரிசை கட்டி நடந்து கொண்டிருந்தன. தெரிந்தோ தெரியாமலோ வடிவேலுவின் மருமகள்கள் அவரின் ஆசையை நிறைவேற்றிக்கொண்டிருந்தனர்.

     “சரி தெய்வா, நீ சொன்ன மாதிரி நமக்கும் நம்ம பொண்டாட்டிங்களுக்கும் நடுவில் இருக்கிற இடைவெளி இப்போ ஓரளவு குறைஞ்சிடுச்சு. அடுத்து நாம என்ன பண்ண போறோம்.” ஆர்வமுடன் கேட்டான் நாகா. தன் மனைவி தனக்கு மட்டுமாக வேண்டும் என்பதில் அப்படியே அண்ணன் தெய்வாவின் புத்தியைக் கொண்டிருந்தான் அவன்.

     “இடைவெளி குறைஞ்சா மட்டும் போதாது, மொத்தமா இல்லாமல் போய் மனதளவில் நெருக்கம் இன்னும் அதிகமாகணும். அதுக்காக நான் போட்டிருக்கும் அடுத்த திட்டத்தில் பங்கேற்கப் போறது நாங்க மூணு பேரும் தான் நாகா. நீ எலிஜிபில் கிரைட்டீரியாவில் வரல.” சின்னச்சிரிப்புடன் சொன்னான் தெய்வா.

     “என்னை விட்டுட்டு நீங்க மூணு பேரும் அப்படி என்ன திட்டம் போடப் போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” நாகா கோபம் பாதியும், வருத்தம் மீதியுமாய் கேட்டான்.

     “டேய் உன்னை விட்டுட்டு ப்ளான் போட எங்களுக்கு எந்த ஆசையும் இல்லை. இப்போ இருக்கிற நிலைமைக்கு நீ இந்த ப்ளானுக்கு ஒத்து வர மாட்ட. அதனால தான் சொல்றேன்.” சமாதானமாய் சொன்னான்.

     “அப்ப இருந்து நான் சரிபட்டு வரமாட்டேன்னு மட்டும் சொல்லிக்கிட்டு இருக்கியே, அப்படி எதுக்கு டா நான் சரிப்பட்டு வரமாட்டேன்.” நாகா கேட்ட தோரணையில் சகோதரர்கள் அனைவருமே சிரித்து விட்டிருந்தனர்.

     “ஹனிமூன் ப்ளான்.” தெய்வா சொல்ல, மற்ற அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

     “ஹனிமூனா” ஆச்சர்யம் பாதியும், வெட்கம் மீதியுமாய் கேட்டான் செல்வா.

     “ஆமா ஹனிமூன் போறது தான் நமக்கும் நம்ம பொண்டாட்டிங்களுக்கும் அடுத்த கட்ட நெருக்கத்தை உருவாக்கும்.” உறுதியாகச் சொன்னான் தெய்வா.

     “இப்ப இருக்கிற நிலைமைக்கு காலில் விழுந்து கெஞ்சினாக் கூட அவங்க யாரும் நம்ம கூட வர மாட்டாங்க.” லீலாவை மனதில் நினைத்தபடிச் சொன்னான் செல்வா.

     “அவங்க வர மாட்டேன்னு சொன்னா அப்படியே விட்டுடுவீங்களா. இப்படி ஒவ்வொன்னுக்கும் அவங்க இஷ்டத்துக்கு விட்டு விட்டு தான் நாம இன்னைக்கு இப்படி வந்து நிக்கிறோம்.

     ஆண், பெண் இரண்டு பேரும் சேர்ந்து நடத்துறது தான் குடும்பம். அதை விட்டுட்டு எல்லாமே அவங்க இஷ்டம் னு ஒதுங்கி இருந்தா அது நல்லா இருக்காது. முன்னாடியெல்லாம் பொண்ணுங்ளுக்கு அநியாயம் நடந்துச்சுன்னா, இப்ப அநியாயம் நடப்பது ஆண்களுக்குத் தான்.” வீரவசனம் பேசிய தெய்வாவை யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

     மனதை சமநிலைக்குக் கொண்டு வந்தவன், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் சகோதரர்களைப் பார்த்து, “மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்க. ஹனிமூன் போகணும், உங்க பொண்டாட்டி கூட தனியா நேரம் செலவிடணும். அவங்க உங்களையே சுத்தி சுத்தி வரணும் னு உங்களுக்கு ஆசை இல்லையா என்ன?“ என்றவனின் வார்த்தைகள் அவன் சகோதரர்களுக்குள் அப்படியான ஆசைகள் எதுவும் இல்லாமல் போனால் கூட அதைத் தூண்டி விடுவதாய் அமைந்தது.

     செல்வாவும், தர்மாவும் யோசனையிலே இருக்க, “இந்தப் பயணத்தில் பல விஷயம் இருக்கு டா. ஹனிமூன் புருஷன் பொண்டாட்டி சந்தோஷமா இருக்கிறதுக்கு மட்டும் இல்ல.

     இந்தச் சுற்றுலா குறைந்தபட்சம் பதினைந்தில் இருந்து இருபது நாள் வரைக்கும் திட்டம் போடலாம். இந்த இருபது நாளும் அவங்க பார்க்கப் போறது நம்ம முகத்தை மட்டும் தான். நாமளும் அவங்களை மட்டும் தான் பார்க்கப் போறோம். அவங்களுக்குத் தேவையானதை நாமளும், நமக்குத் தேவையானதை அவங்களும் செஞ்சிப்போம். புருஷன், பொண்டாட்டின்னு இரண்டு பேர் மட்டும் தனியா இருக்கிறது எவ்வளவு பெரிய சந்தோஷம் னு இந்த நாள்களில் அவங்களுக்குப் புரிய வைக்கலாம்.

     அக்கா, தங்கச்சி எல்லாம் கடைசி வரைக்கும் கூட வரப்போறது இல்ல, புருஷன் மட்டும் தான் நிதர்சனம் என்கிற உண்மையை அவங்க புரிஞ்சுக்க இது ஒரு நல்ல வாய்ப்பு.

     இந்தப் பயணத்தோட முக்கிய குறிக்கோள், நாளைக்கு தனிக்குடித்தனம் பத்தி நாம பேச ஆரம்பிக்கும் போது, நம்ம சந்தோஷமா இருந்த இந்த இருபது நாட்கள் தான் அவங்களுக்கு ஞாபகத்துக்கு வரணும்.

     அந்த நேரத்தில் இந்த நாள்களின் அழகான நினைவுகளை நினைவு படுத்தி, தனிக்குடித்தனம் போகலாம் னு அவங்களே யோசிக்கிற அளவுக்கு நாம இப்ப நடந்துக்கணும்.

     யாருமே கூட இல்லாம புருஷன் மட்டும் இருந்தாக் கூட அவர் நம்மளை நல்லாப் பார்த்துப்பாருங்கிற எண்ணத்தை அவங்களுக்குள்ள ஆலமரமா வளர வைக்கணும்.” திட்டத்தை எல்லாம் வரிசையாகச் சொல்லிக்கொண்டே போனான் தெய்வா.

     “ப்ளான் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா சின்ன சங்கடமா, இப்ப இருக்கிற நிலைமைக்கு என் பொண்டாட்டியைத் தனியா விட்டுட்டு உங்க பொண்டாட்டிங்க உங்க பின்னாடி வருவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை.” முட்டுக்கட்டை போட்டான் நாகா.

     “அதுக்கும் ஒரு வழி இருக்கு. அதுக்கு நீ கொஞ்சம் ஒத்துழைக்கணும்.” என்றான் தெய்வா.

     “இதோ பாருங்கடா நீங்க எல்லாம் பொண்டாட்டி கூட ஜாலியா ஹனிமூன் போவீங்க. இந்த அழகில் நான் என் பொண்டாட்டி கூட வீட்டில் இருக்கிறதே கொடுமை. இந்தக் கொடுமையில் நீங்க ஹனிமூன் போறதுக்கு நான் போய் ஊர்மியோட அக்கா, தங்கச்சிங்க கூட சமாதானம் பேசணுமா.” அப்பட்டமாகப் பொங்கினான் நாகா.

     “அந்த ஈர வெங்காயத்தை ஒன்னும் நீ பண்ண வேண்டாம். நீ நம்ம வீட்டிலேயே ஹனிமூன் கொண்டாடியதால் தான் இன்னைக்கு இந்தத் திட்டத்தில் இருந்து கழட்டி விடப்பட்ட நிலையில் இருக்கன்னு புரிஞ்சுக்கோ.” என்க, சங்கடத்துடன் சிரித்தான் நாகா.

     “நான் சொல்லும் எந்த ஒரு விஷயமும், நம்ம நாலு பேருக்கும் சேர்த்து யோசித்தது தான். அதனால் நீ கொஞ்சம் ஒத்துழைப்பு தந்து தான் ஆகனும்.” என்க, வழக்கத்திற்கு மாறாக படமெடுக்காமல் அமைதியாக இருந்தான் நாகா.

     அவன் அமைதியைக் கவனித்து, “நீ பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம். இன்னும் ஒரு வாரத்துக்கு, நம்ம வீட்டு மத்த மருமகளுங்க முன்னாடி உன் பொண்டாட்டியை  உள்ளங்கையில் வைச்சுத் தாங்கினா அது போதும் எங்களுக்கு.” என்றான்.

     “என் பொண்டாட்டியை நான் பார்த்துக்கிறது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல. ஆனா இதில் உங்களுக்கு என்ன லாபம் இருக்கு.” குழப்பமாய்க் கேட்டான் நாகா.

     “நீ உன் பொண்டாட்டியைப் பார்த்துக்கிற விதத்தை வைச்சு, நாம யாரும் பக்கத்தில் இல்லன்னாலும் ஊர்மியை அவளோட புருஷன் நல்லா பார்த்துக்குவாருன்னு முழுசா நம்பி, எங்க பொண்டாட்டிங்க எங்களோட நாங்க எங்க கூப்பிட்டாலும் வர வாய்ப்பு இருக்கு தானே. கூடவே உன் பொண்டாட்டியே வழி அனுப்பி வைப்பாங்க.

     இது எங்களுக்கு மட்டும் பெரிய ஆபர் இல்ல, உனக்கும் தான். கொஞ்சம் கொஞ்சமா ஊர்மியோட மனசுல நீயும் முழுசா இடம் பிடிக்கலாம்.” ஆசைகாட்டினான் தெய்வா.

     “ஐடியா நல்லா இருக்கே.” எனத் தானும் ஒப்புக்கொண்டான் நாகா.

     “என்னால இப்போதைக்கு லீலாவைத் தனியா எங்கேயும் கூட்டிட்டுப் போக முடியாது. எனக்கு ஹாஸ்பிடலில் நிறைய வேலை இருக்கு.” மீண்டும் ஒரு முட்டுக்கட்டை விழுந்தது செல்வா பக்கம் இருந்து.

     “வேலையைத் தூக்கி அடுப்பில் போடு. வாழ்க்கை முக்கியமா, வேலை முக்கியமா. இருக்கிற வேலை போயிருச்சுனா அடுத்து என்ன பண்றதுன்னு நாங்க தான் யோசிக்கணும். உனக்கு அப்படி ஒரு பிரச்சனையே இல்லை. நீ ஒரு வார்த்தை சொன்னா அடுத்த நிமிஷம் அப்பா உனக்காக புது ஹாஸ்பிடலே கட்டிக் கொடுப்பார்.

     நீ வேலை செய்யுற ஹாஸ்பிடல்ல நீ மட்டும் தான் டாக்டரா என்ன. நீ ஒரு பத்து நாள் அங்க போகாம இருந்தா, நோயாளிகள் ஒன்னும் குறைஞ்சிட மாட்டாங்க. முதலில் உன் வாழ்க்கையைப் பாரு அதுதான் முக்கியம்.” சற்றே கண்டிப்புடன் சொன்னான் தெய்வா. அதில் அவனோடு சேர்த்து மற்றவர்களுக்காக நல்லதை விட செல்வாவிற்கான நல்லதே அதிகம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

     “இந்த ப்ளாள் யாருக்கு ஓகேவோ இல்லையோ எனக்கு டபுள் ஓகே. தேவகிக்கு ஸ்டடி லீவு, நான் லீவ் அப்ளை பண்ணா கண்டிப்பா கிடைச்சுடும். அதனாலையே என் சைடு எந்த ப்ராப்ளமும் இருக்காது. டிக்கெட் போடப் போறது மட்டும் தான் வேலையே.” முந்தைய நாள் நினைவுகளை நினைத்தபடி பூரிப்புடன் சொன்னான் தர்மா.

     “ரொம்ப ஆர்வம் போல. சந்தோஷமா இருந்தா சரிதான். டிக்கெட்டைப் பத்தி சொன்னதும் ஞாபகம் வந்தது. தயவுசெஞ்சு எல்லோரும் தனித்தனி இடமாப் பார்த்து டிக்கெட் போடுங்க.

     அப்புறம் முக்கியமான விஷயம் டிக்கெட் போட்டுட்டு உங்க பொண்டாட்டிங்க கிட்ட சொல்லுங்க. ஆர்வக்கோளாறில் முன்னாடியே சொல்லிடாதீங்க.” எச்சரித்தான் நாகா.

     “எங்ககிட்ட கேட்காம ஏன் இதையெல்லாம் ஏற்பாடு பண்ணீங்கன்னு அதுக்குத் தனியா சண்டை போடுறதுக்கா.” தெய்வா கேட்க,

     “கொஞ்சம் யோசிச்சுப் பாரு. டிக்கெட் போடுறதுக்கு முன்னாடியே நீங்க போய் உங்க பொண்டாட்டி கிட்ட கேட்டீங்கன்னு வைச்சுக்கோங்க, அக்கா இந்த இடத்துக்குப் போறாங்க நாமளும் இந்த இடத்துக்கே போவோம் னு சொல்லுவாங்க. அதை உங்களால மறுக்க முடியுமா இல்லை மறுக்கத்தான் விட்டுடுவாங்களா?

     இதுவே நீங்க மூணு பேரும் இங்கேயே பேசி முடிவெடுத்து தனித்தனி ஊருக்கு டிக்கெட் போட்டுட்டு அதுக்கு அப்புறமா உங்க பொண்டாட்டி கிட்ட சொன்னீங்கன்னா எந்தப் பிரச்சனையும் வராது இல்லையா.” நாகா கேட்க, “ஆமா ஆமா என வேகமாக ஆமோதித்தனர் மற்ற மூவரும்.

     “அப்புறம் மூணு பேரும் ஒரே நேரத்துல போய் ஹனிமூன் போகலாம் னு சொன்னீங்கன்னா அங்கேயும் இடிக்கும். யாரு முதலில், யாரு இரண்டாவது, யாரு மூணாவது கிளம்புறதுன்னு, மூணு பேரும் ஒண்ணா உக்காந்து பிளான் பண்ணுங்க.” என்றபடிக் கிளம்பத் தயாரானான் நாகா.

     “டேய் மூளைக்காரன் தான் டா நீ. அப்புறம் எதுக்கு டா உனக்கு கேஸ் எதுவும் கிடைக்கல.” தெய்வா கேட்க, “இப்ப இந்தக் கேள்வி ரொம்ப அவசியமா?” என்றான் நாகா. அவனுடைய அவசரமான பதிலில் சகோதரர்களுக்கு இடையில் சிரிப்பொலி பரவியது.

     சிரித்து முடித்த பின்னர், “தர்மா, இதையும் நீயே ஸ்டார்ட் பண்ணி வை. முதல்ல நீயும், உன் பொண்டாட்டியும் நம்ம வீட்டில் இருந்து கிளம்புங்க. அப்புறம் செல்வா நீயும் உன் பொண்டாட்டியும் அடுத்ததாக் கிளம்புங்க. நீங்க இரண்டு பேரும் கிளம்பிட்டீங்கன்னா என் பொண்டாட்டியைக் கிளப்புவது எனக்கு ரொம்ப ஈஸி.” என்றான் தெய்வா

     “அப்புறம் என்ன போங்க, போயி எல்லாரும் உங்க பொண்டாட்டிங்களை காக்கா புடிக்கிற வேலையைப் பாருங்க. நான் போய் என் பொண்டாட்டியைப் பார்க்கிறேன். என்ன விதி டா இது.” புலம்பியபடிக் கிளம்பினான் நாகா.

     அனைவரும் பல வண்ணக் கனவுகளுடன் வீடு வந்து சேர்ந்தனர். “தேவகி டேராடூனுக்கு இரண்டு ப்ளைட் டிக்கெட் போட்டு இருக்கேன். இருபது நாளைக்கு ரெசார்ட் கூட புக் பண்ணிட்டேன் சோ.” இழுத்தான் தர்மா.

     “சோ” என்று அவளும் அவனைப் போலவே இழுத்துக் காட்டினாள்.

     “நாம இரண்டு பேரும் ஹனிமூன் போயிட்டு வரலாமா?” என்க, “என்ன திடீர்னு.” வெளியே விரைப்பாய் காட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் அத்தனை இதமாக இருந்தது தேவகிக்கு.

     “நீதான் இங்கே இருந்தா அக்கா கிண்டல் பண்ணுவாங்க. மாமா முன்னாடி நிக்கிறது ஒரு மாதிரி இருக்கு அது இதுன்னு சொல்லிட்டு இருந்தியே. அதனால் தான் அங்க போய் எந்த விதமான சங்கோஜமும் இல்லாம ஜாலியா இருக்கலாம்.” தர்மா கண்ணடிக்க, வெட்கம் பூத்த முகத்தை மறைக்க தலை கவிழ்ந்து திரும்பி நின்று சம்மதத்தை மறைமுகமாக தெரிவித்தாள் தேவகி.

     “ஊர்மி என்னடா கண்ணம்மா பண்ணிட்டு இருக்க.” என்றவண்ணம் நாகா அறைக்குள் வர, “பார்த்தா தெரியலையா தலைக்கு சாம்பிராணி போட்டுட்டு இருக்கேன்.” என்றபடி வேலையில் கண்ணானாள் அவன் கண்ணம்மா.

     “அதுக்கு ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்க. அத்தான் சும்மாதான் இருக்கேன் என் கிட்ட கேட்டு இருக்கலாம் இல்ல.” என்றபடி அவள் அருகே சென்றான்.

     “நீங்க எனக்கு சாம்பிராணி போட்டு விடப் போறீங்களா?” ஆச்சர்யமாகக் கேட்டாள்.

     “உனக்காக உன் அத்தான் கால் பிடிச்சு விட்டது எல்லாம் மறந்து போயிடுச்சா தங்கமே. அதைப் பண்ணவன் மயில் தோகை மாதிரி இருக்கிற உன்னோட அழகான முடிக்கு சாம்பிராணி போட்டு விட மாட்டேனா, இங்க கொடு.” என்றவன் சொன்னது போல கண்ணும் கருத்துமாய் வேலையைச் செய்து முடித்தான்.

     “இதோட இனி உனக்குத் தேவையான எல்லா வேலையையும் நானே பார்த்துக்கலாம் னு இருக்கேன். நான் தான் கோர்ட் பக்கம் போறதே இல்லையே. என்னவோ நான் உனக்கு எந்த வேலையும் செய்யாம, உன் அக்கா தங்கச்சிங்களை விட்டுப் பார்க்கவிடுறேன்னும், ப்ளான் பண்ணி அவங்களை எப்பவும் உன் கூடவே இருக்க வைக்கிறேன்னும் மத்தவங்க எல்லோரும் என்னைக் குற்றம் சொல்றாங்க.” தன்னைப் போல் உளறி வைத்தான்.

     “அப்படியா இது எப்ப நடந்துச்சு. நாங்க இந்த வீட்டில தானே இருக்கோம். ஒருவேளை எங்களுக்குத் தெரியாம வெளியே எங்கேயும் தனியா மீட் பண்ணி பேசுறீங்களா என்ன?” ஊர்மி என்னவோ சாதாரணமாகத் தான் கேட்டாள் என்றாலும் நாகாவிற்குத் தான் பக்கென்று இருந்தது.

     “பாதகத்தி ஸ்மெல் பண்ணிட்டாளோ. இவளுக்கு லைட்டா டவுட் வந்தா கூட, என் சோலி முடிஞ்சிடும். அவனுங்க மூணு பேரும் சேர்ந்து என்னை டின்னு கட்டிடுவாங்க. எப்படியாவது இவளைச் சரிக்கட்டணுமே என்ன பண்றது.” என்று யோசித்தவன், “ஆமா அவங்க மூணு பேரும் என் லவ்வர்ஸ் பாரு, தனியா மீட் பண்ணி பேசறதுக்கு. எல்லாம் வீட்டுக்குள்ள போற போக்குல திட்டிட்டுப் போனது தான்.

     சரி அதை விடு, இனிமே உனக்கு எது தேவையா இருந்தாலும்  என்கிட்ட கேளு, நான் பண்றேன். உன் அக்கா தங்கச்சிங்களை அவங்க புருஷங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண விடு. நம்மளால அவங்களுக்குள்ள பிரச்சனை வந்ததா தான் இருக்க வேண்டாம்.” என்றான்.

     “இங்க பாருடா என் புருஷனுக்கு எவ்வளவு பெரிய மனசு.” சிலாகித்தாள் ஊர்மி.

     “ருக்கு படம் போடப் போறேன் நீங்க பார்க்க வரீங்களா?” தன் வழிக்கு அவள் வரவில்லை என்றால் அவள் வழிக்கு, தான் சென்றுவிடலாம். இரண்டு வழியும் சரியான இலக்கிற்குத் தான் செல்லப் போகிறது என்றால் எதைத் தேர்ந்தெடுத்தால் தான் என்ன என்கிற தோரணையில் யோசித்து முடிவுக்கு வந்திருந்தான் தெய்வா.

     “கண்டிஷன் பேப்பர்.” என்று இழுத்தாள் ருக்கு. அதில் கடுப்பானவன் போல் காட்டிக்கொண்டு, “ஒரு படம் பார்க்கக் கூப்பிட்டது அவ்வளவு பெரிய தப்பா என்ன. போதும்மா எல்லாம் போதும். அந்தப் பேப்பரைக் கொண்டு வாங்க. கண்ணை மூடிக்கிட்டு கையெழுத்துப் போட்டுத் தரேன்.

     மத்த மூணு பேரும் அவங்க பொண்டாட்டியோட இராசியாகி கொஞ்சிகிட்டுத் திரியுறானுங்க. நான் மட்டும் இன்னும் விட்டத்தை பார்த்துப் படுத்துகிட்டு இருக்கேன்.” மனைவிக்குக் கேட்கும் படியாகவே முணுமுணுத்தான் தெய்வா.

     “ஆமா அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் இராசி ஆகிட்டாங்கன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்.” சந்தேகம் கேட்டாள் ருக்கு.

     “ஆஹா, என் பொண்டாட்டிக்கு திடீர்னு அறிவு வளர்ந்திடுச்சே. டவுட் வராமா சமாளிக்கணுமே.” மனதோடு நினைத்தவன், “ம்ம்… நாங்க நாலு பேரும் அடிக்கடி வெளியே சீக்ரெட்டா மீட் பண்ணி பேசிக்கிட்டு இருக்கோம்.” நிஜத்தைக் கேலி போலவே சொன்னான்.

     “நடக்கிற காரியத்தைப் பத்தி பேசுங்க.” என்றவளை நினைத்து மனதோடு சிரித்தவன், “ஒவ்வொருத்தன் மூஞ்சிலும்  ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரியுதே, அதை வைச்சு தான் சொன்னேன்.” தெய்வா சொல்ல, “கொள்ளிக் கண்ணை வைக்காதீங்க.” பதறியபடி வந்து அவன் கண்ணை மூடினாள் ருக்கு.

     “ப்ச்… போங்க ருக்கு.” அவன் அநியாயத்திற்குச் சலித்துக்கொள்ள, “சரி ரொம்ப வருத்தப்படாதீங்க. நான் உங்களோட படம் பார்க்க வரேன். படம் முடிஞ்சதும் கண்டிப்பா பேப்பரில் சைன் பண்ணித் தந்திடணும்.” கெஞ்சலாய் கேட்டாள் ருக்கு. “செஞ்சிட்டாப் போச்சு.” என மனதோடு நினைத்துக்கொண்டான் அவன்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ராஜ் பிரதர்ஸ் போடுற பிளான் எல்லாம் நல்லா தான் இருக்கு .. ஆனா எல்லாமே பொண்ணுங்களுக்கு சாதகமா தான் இருக்கு ..

  2. ரொம்ப​ ரொம்ப​ அருமையான கதை சிஸ். உங்களுடைய எழுத்து நடை வெகு பிரமாதம். கதை தொய்வில்லாமல் விறுவிறுப்பாகவே போகின்றது. அடுத்த​ எபிக்காக​ ஆவலுடன் வெயிட்டிங்.