Loading

அத்தியாயம் 66

     “விடுங்க தேவகி.” எனத் தன்னை அணைத்திருந்தவளை தன்னில் இருந்து பிரித்து தள்ளி நிறுத்தியவன், “இப்ப மட்டும் என்மேல எப்படி நம்பிக்கை வந்தது. ஒருவேளை நான் சங்கடப்படக்கூடாதுன்னு நம்பிக்கை வந்த மாதிரி நடிக்கிறீங்களா?

     அதுதான் உண்மைன்னா அது எதுவும் தேவையில்லை. போங்க போய் எப்பவும் கையில் வைச்சு ஆட்டி ஆட்டிக் காட்டுவீங்களே, அந்த கண்டிஷன்ஸ் பேப்பரை எடுத்துட்டு வாங்க. அதில் கையெழுத்துப் போட்டுட்டு, எங்கேயாவது போய் உட்கார்ந்துக்கிறேன்.

     வழக்கம் போல என் மானம் கெட்ட மனசு உங்க மேல இருக்கிற கொஞ்ச வருத்தத்தையும் சீக்கிரம் துடைச்சுப் போட்டுடும். அதுக்கு அப்புறம் ஈன்னு பல்லைக் காட்டிக்கிட்டு திரும்ப உங்ககிட்டையே வரேன். நீங்க மறுபடியும் என்னை உதாசீனப்படுத்துற வேலைய ஆரம்பிங்க.” மனைவிக்குத் தன் வலி புரிய வேண்டுமென்று சொன்னது தான் என்றாலும் அதிகப்படி செய்கிறோம் என்று உள்ளுக்குள்  வருந்தினான் தர்மா.

     “ஏன் இப்படியெல்லலாம் பேசுறீங்க.” கேட்ட தேவகியின் கண்கள் கண்ணீரைச் சிந்த தயாராக இருந்தது.

     “தேவகி, அந்தப் பேப்பரை எடுத்துக் கொடுத்தீங்கன்னா கையெழுத்துப் போட்டுக் கொடுத்திடுவேன். உங்களுக்கு நேரம் விரயம் ஆகாது. உங்களுக்கு என்னை விட, என் கூட இருக்கிறதை விட, முக்கியமான நிறைய வேலைகள் இருக்கும். அது எதுவும் என்னால் கெட வேண்டாம்.” அவள் முகத்தைப் பார்த்தால் பேச முடியாது என்பதால் திரும்பி நின்றபடிச் சொன்னான்.

     முன்பை விட வேகமாக அவனை அணைத்தவள், இன்னும் இன்னும் நெருக்கமாக அணைத்தபடி, “முடியாது நான் போகமாட்டேன். நீங்களும் எங்கேயும் போகக் கூடாது. நீங்க எப்படி இப்படி நினைக்கலாம். எனக்கு உங்களை விட முக்கியமானவங்க யார் இருக்கா?” லேசான விசும்பலுடன் கேட்டாள். அவள் கேட்ட தோரணையில் அவனுக்குச் சிரிப்பு வந்தது.

     இருந்தாலும் அதைத் தனக்குள் மறைத்துக்கொண்டு, “நான் யாரைப் பத்தி சொல்றேன்னு உங்களுக்குத் தெரியும். அதை நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கணும் னு அவசியம் இல்ல.” என்றான்.

     “ப்ளீஸ், இப்படி எல்லாம் பேசாதீங்க. இத்தனை நாளா நீங்க இப்படிப் பேசி நான் பார்த்ததே இல்லை. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

     “நான் உங்ககிட்ட இப்படிக் கடுமையா பேச நினைக்கவே இல்ல தேவகி. என்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறது நீங்க தான். நமக்குக் கல்யாணமாகி முழுசா அஞ்சு மாசமாகப் போகுது.

     என் கூட பிறந்த ஒருத்தன் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகப் போறான். அப்படிப்பட்ட ஆசையும், ஏக்கமும் எனக்குள்ளேயும் இருக்காதா. இருந்தும் உங்களோட விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து தான், நான் உங்களை விட்டு விலகி இருக்கேன்.

     இப்பெல்லாம் என்னோட சிந்தனைகள் பெரும்பாலும் உங்களைச் சுத்தி தான் இருக்கு. என்னை விட உங்களுக்காகத் தான் அதிகம் யோசிக்கிறேன். ஆனா நீங்க என்னைப் பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்கிறீங்க.

     இதுநாள் வரை தெய்வாவும், நாகாவும் அவங்க பொண்டாட்டிங்க அக்கா, தங்கச்சிங்கன்னு அவங்க பின்னாடியே சுத்திகிட்டு இருக்காங்கன்னு சொல்லி வருத்தப்படுவாங்க.

     அப்ப எல்லாம் எனக்கு அது சிரிப்பா இருக்கும். ஆனா நான் அனுபவிக்கும் போது தான் வலியும், கொடுமையும் என்னன்னு புரியுது. நான் வேலை வேலைன்னு அலைஞ்சோ, இல்லை நண்பர்கள் கூட நாள் முழுக்க ஊர் சுத்திட்டு உங்களைக் கண்டுக்காம விட்டா தான் என்னோட வலி உங்களுக்குப் புரியும் தேவகி.” என்க, தேவகிக்குத் தான் செய்த காரியத்தின் வீரியம் நன்றாகவே புரிந்தது.

     “என்னைக்காவது நீங்க உங்க அக்காங்க கிட்ட பேசக்கூடாது, அவங்க கிட்ட அட்டேச்மெண்டோட இருக்க கூடாதுன்னு நான் சொல்லி இருக்கேனா. இல்ல நீங்க கண்டிப்பா என் கூட தனிக்குடித்தனம் வந்து தான் ஆகனும் னு உங்களைக் கொடுமைப்படுத்தி இருக்கேனா.“ என்க, உண்மை முகத்தில் அடிக்க இல்லை என்று தலையாட்டினாள் தேவகி.

     “நமக்குக் கல்யாணம் ஆன நாளிலிருந்து இந்த நாள் வரைக்கும் உங்களோட ஒவ்வொரு விருப்பத்துக்கும் மரியாதை கொடுத்து கிட்டு இருக்கேன் நான். என் விருப்பத்துக்கும் மேலா உங்க விருப்பத்தை நான் முன்னிறுத்தி வைச்சிருந்தேன். ஆனா நீங்க, மத்தவங்களுக்குப் பிரச்சனைன்னு என்னைத் தனியா விட்டுட்டீங்க தானே.” என்க, கண்ணீர் இறங்கியது தேவகியின் விழிகளில்.

     “நீங்க பாட்டுக்கு காலேஜ் போறீங்க, வரீங்க. மத்த நேரத்தில் உங்க அக்காங்க கூட இருக்கீங்க. முன்னாடியாவது ரூம்மேட்ஸ் மாதிரி இருந்தோம். இப்ப இரயில் பயணிகள் மாதிரி போய்க்கிட்டு இருக்கு.

     இப்படியே போனா உங்களோட வாழ்க்கையில என்னோட அத்தியாயம் தான் என்ன. மத்த புருஷன், பொண்டாட்டி மாதிரி நாம நம்மளோட குடும்ப வாழ்க்கையை எப்ப வாழுறது.

     சரி அதைக் கூட விட்டுத் தள்ளுங்க. இன்னும் வயசு இருக்கு. கொஞ்ச நாள் தள்ளிப் பார்த்துக்கலாம் னு நினைக்கலாம். அது ஒன்னும் பெரிய தப்பு இல்லை.

     ஆனா இவ்வளவு நாளா நீங்க எனக்குக் கொடுத்த வழக்கங்கள். சிநேகமான புன்னகையோட காலையில் எழுந்ததும் குட் மார்னிங் சொல்றது, டீ குடிக்கிறீங்களான்னு கேட்கிறது, சாப்பிட வாங்கன்னு சொல்றது. இப்படிச் சின்ன சின்ன வார்த்தைகள் கூட பேச மாட்டேங்கிறீங்களே.

     நீங்க என்மேல் இவ்வளவு தூரம் கோவப்படுற அளவுக்கு நான் என்ன பண்ணேன். அந்த ஒரு கேள்விதான் என்னைக் கொடைஞ்சு எடுக்குது. நான் இராத்திரி நிம்மதியாத் தூங்கி பல நாள் ஆச்சு தெரியுமா உங்களுக்கு.” தர்மன் தன் மனவலியை எல்லாம் சொல்லச் சொல்ல தன்னைத் தானே அடித்துக்கொள்ளத் தோன்றியது தேவகிக்கு.

     “காரணமே இல்லாத உங்களோட விலகல் என்னை ரொம்பவே பாதிக்கிது தேவகி. எங்க இப்படியே போய் நான் உங்களை வெறுத்துடுவேனோன்னு பயமா இருக்கு.” என்க, அப்படி நடந்துவிடுமோ எனப் பதறினாள் தேவகி.

     “அதைவிட ஒரு பெரிய பயம் என்னை வாட்டி எடுக்குது. என்ன தெரியுமா? நீங்க இப்படியே பண்ணிக்கிட்டு இருந்து, மத்தவங்களை மாதிரி எங்க நானும் உங்களைக் கட்டாயப்படுத்தி தனியா கூட்டிட்டு போயிடுவேனோன்னு உள்ளுக்குள்ள ஒரு பயம் உதயமாகி இருக்கு.

     ஆனா ஒன்னு சொல்றேன், என் பயம் உண்மையாச்சுன்னு வைச்சுக்கோங்க, அதுக்கு முழுக் காரணம் நீங்களா மட்டும் தான் இருப்பீங்க.

     உங்களைக் கட்டாயப்படுத்தி நான் தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போனேன்னா அது என்னோட கேரக்டரை நானே  அசிங்கப்படுத்தின மாதிரி ஆகிடும். அதை நினைச்சு நான் கூனிக்குறுகி போயிடுவேன். என்னை நானே மன்னிக்க மாட்டேன். அது எல்லாத்துக்கும் பின்னாடி நீங்க மட்டும் தான் இருப்பீங்க.” மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசினான் தர்மா.

     அவன் இதுவரை பேசிய அத்தனையும், சகோதரர்களின் தூபத்தினால் வந்த வார்த்தைகள் அன்று. அவன் உண்மையான மனதின் வெளிப்பாடு. இத்தனை நாட்களாக அவனை பாடாய் படுத்திக்கொண்டிருந்த அனைத்து விஷயங்களையும் தேவகியின் முன்னால் இறக்கி வைத்த பின்பே மனது லேசானதாக உணர்ந்தான். ஆனால் அவன் இறக்கி வைத்த பாரம் தேவகியின் மனதில் ஏறியதை அவன் அறிந்திருக்கவில்லை.

     இவ்வளவு நேரம் மனைவிக்கு முதுகு காட்டி நின்றவன் திரும்ப, சோகமே உருவாக நின்றிருந்த தேவகி அவன் கண்ணில் விழுந்தாள். அவள் நிலையைக் கண்டு தான் அதிகம் பேசிவிட்டதாய் வருந்தினான். எதிர் நின்றவளின் நாடியைப் பிடித்து அவள் முகத்தை நிமிர்த்தி தன்னைக் காண வைத்தவன், “என்னை மன்னிச்சிடுங்க தேவகி. எனக்குத் தெரியும் நான் பேசின இந்த வார்த்தைகள் உங்களை ரொம்பவே காயப்படுத்தி இருக்கும். ஆனா நான் இப்ப பேசினது நல்லதுதான். ஏன்னா இதே விஷயங்கள் எனக்குள்ள இன்னும் கொஞ்ச நாள் அழுத்திக்கிட்டு இருந்தா கூட நான் உங்களை வெறுக்க ஆரம்பிச்சிருப்பேன்.

     அப்படி ஒரு நிலைமை நமக்குள்ள என்னைக்கும் வரக்கூடாது தேவகி. நான் உங்களை வெறுக்க கூடாது. நான் உங்களை நேசிக்கணும், இன்னும் இன்னும் ரொம்ப நேசிக்கணும். இந்த உலகத்தில் யாரும் யாரையும் நேசிக்காத அளவு நேசிக்கணும்.

     நம்ம வீட்டில் நாலு ஜோடி இருக்கோம். நாலு ஜோடியில் நாம தான் சந்தோஷமான ஜோடியா இருக்கணும் என்பது என்னோட ஆசை. ஆனா அதுக்கு நான் மட்டும் மனசு வைச்சா முடியாது. உங்க கையிலும் பாதி விஷயம் இருக்கு.” என்றவனை ஆழமாகப் பார்த்தாள் தேவகி.

     “நீங்க என்னை மட்டுமே கவனிக்கணும் னு நான் சொல்லல. என்னையும் கொஞ்சம் கவனிங்கன்னு தான் சொல்றேன்.” என்றுவிட்டுப் படுத்துக்கொண்டான் தர்மா. அவன் அருகிலேயே தானும் படுத்து கணவனையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த தேவகி தன்னையும் மறந்து உறங்கி இருந்தாள்.

     “அக்கா தேவகி மத்தியானம் ரூமுக்குள்ள போனா. ஆனா இன்னும் வெளியே வரல. எனக்கு என்னவோ மாதிரி இருக்குக்கா. ஒருவேளை அவளுக்கும் அவ புருஷனுக்கு ஏதாவது பிரச்சினையா இருக்குமோ.” லீலாவிடம் கேட்டாள் ருக்கு.

     “அப்படி எல்லாம் இருக்காது ருக்கு. இந்த வீட்ல நான் பார்த்த வரை தேவகியோட புருஷன் நியாயமான ஆளு. அவருக்கு ஊர்மியோட புருஷன் மாதிரி கோவப்படத் தெரியாது. என் புருஷன் மாதிரி உணர்ச்சிவசப்படத் தெரியாது. உன் புருஷன் மாதிரி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசத் தெரியாது.

     அப்படிப்பட்ட மனுஷனா தேவகியைப் கஷ்டப்படுத்தப் போறாரு. இந்த தேவகி தான் அவரை ரொம்ப கஷ்டப் படுத்திட்டா.” என்றாள் லீலா. தங்கையின் மீதான சின்ன சங்கடம் தெரிந்தது அவள் வார்த்தையில்.

     “என்னக்கா சொல்ற?” ருக்கு அதிசயிக்க, “ஊர்மியையும் உன்னையும் பத்தி யோசிச்சதில் கொஞ்சமா அவளைப் பத்தியும் யோசிச்சு இருந்திருக்கணும். அவ பண்றது தப்புன்னு அவளுக்குப் புரிய வைச்சிருந்திருக்கணும்.

     அவளோட புருஷனால அவளுக்கு எந்தப் பிரச்சினையும் வராதுன்னு அவளைக் கண்டுக்காம விட்ட நான், அவளால் அவ புருஷனுக்கு ஏதாவது பிரச்சனை வருமான்னு யோசிக்க மறந்துட்டேன்.” எனத் தன்னேயே நொந்து கொண்டாள் லீலா.

     “நம்ம தேவகி என்னக்கா தப்புப் பண்ணப் போறா. அவளுக்குத் தப்பு பண்ணத் தெரியாது.” ருக்கு தங்கைக்கு பரிந்து கொண்டு வர, “நம்ம தேவகி தப்பு பண்ணிட்டா ருக்கு. நாம நம்ம புருஷன் கூட பேசாம இருக்கோம் அப்படின்னு அவளும் அவ புருஷனைத் தள்ளிவைச்சு பெரிய தப்பு பண்ணிட்டா. அது அவ புருஷனை ரொம்பவே பாதிச்சு இருக்கும் தானே.” என்க, “நீங்க சொல்றது எனக்கு புரியுற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்குக்கா.” தலையைச் சொரிந்தாள் ருக்கு.

     “நம்மளோட கோபம் என்ன? நம்ம எந்தத் தப்பும் பண்ணாம இருக்கும் போது, எதுக்குத் தண்டனை அனுபவிக்கணும் என்பது தானே. நம்ம தேவகியும் அப்படி ஒரு தண்டனையைத் தானே அவளோட புருஷனுக்குக் கொடுக்கிறா.” லீலா சொல்ல ருக்குவிற்குக் கொஞ்சம் புரிந்தது.

     இவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த செல்வா வந்து சேர்ந்தான்.

     “என்னம்மா லீலா சன்டே வேலைக்கு போகக்கூடாதுங்கிற ஆர்டர் எல்லாம் எங்களுக்கு மட்டும் தானா. உன் புருஷனுக்கு ஒன்னும் இல்லையா?” வடிவேலுவின் அறைக்குள் இருந்து வெளியே வந்து கேட்டான் அரசு.

     “டேய் ஏன்டா இப்படி. ஒரு எமர்ஜென்சி, அதனால் ஹாஸ்பிடல் போக வேண்டியதாப் போச்சு.” என்றபடி தலையைக் கோதினான் செல்வா.

     “அப்படியா? போன வாரம் சன்டேவும் எமர்ஜென்சி கேஸ் வந்துச்சா என்ன. இப்பெல்லாம் நீ எல்லா ஞாயிற்றுக்கிழமையும் தவறாம ஹாஸ்பிடல் போறதா கேள்விப்பட்டேனே.” பொடி வைத்துப் பேசினான் அரசு.

     “இந்த வீட்டில் உனக்கு மட்டும் தான் என் மேல அக்கறை இருக்கு அரசு. நீ ஒருத்தன் தான் நான் என்ன பண்றேன், ஏது பண்றேன்னு என்னைக் கவனிச்சுக்கிட்டே இருக்க, தேங்க்ஸ்.” லீலாவிற்கு மறைமுகமாகக் கொட்டிவிட்டு அறைக்குள் சென்றான் செல்வா.

     “நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே.” என்று இம்சை அரசனை போல் யோசித்துக் கொண்டிருந்தான் அரசு.

     “அக்கா நாம கொஞ்சம் ஓவரா போற மாதிரி எனக்குத் தோணுதுக்கா. நாம ஏன் இந்த நிபந்தனைகளை வாபஸ் வாங்குறதைப் பத்தி யோசிக்க கூடாது. கிட்டத்தட்ட இரண்டு மாசமா இந்த வீட்டுல தான் எந்தப் பிரச்சனையும் இல்லையே.” மாமனின் சுருங்கிய முகத்தைப் பார்த்துத் தாங்க முடியாமல் கேட்டாள் ருக்கு.

     “ருக்கு நீ எனக்காக யோசிக்கிற. அதனால் நான் இப்படியெல்லாம் பேசுற. நாம இப்ப இருக்கிற நிலைமை தவம் பண்ற மாதிரி. தவம் இருக்கும் போது ஏகப்பட்ட சோதனைகள் வரும். அதையெல்லாம் தாண்டி நமக்கு கிடைக்கப் போற வரம் தான் முக்கியம். அதே மாதிரி தான் இந்த வீட்டோட நிலைமையும்.

     நடந்த விஷயங்களில் அவங்க பக்கம் முழுத்தப்பும் சொல்ல முடியாது. இருந்தாலும் அப்படி நாம காட்டிக்கிறதுக்கான காரணம், நம்ம எல்லோருடைய எதிர்கால வாழ்க்கைகாகத் தான்.

     அவங்களோட சோகமான முகத்தைப் பார்க்க முடியாம இப்ப இந்த கண்டிஷன் விஷயத்தில் இருந்து நாம பின்வாங்கினால் அது இந்தக் குடும்பத்தோட நல்ல எதிர்காலத்தை நாமளே அழிக்கிற மாதிரி ஆகிடும்.

     தேவகி பண்றது தப்புன்னு தான் சொன்னேனே தவிர, நாம பண்றது தப்புன்னு சொல்லவே இல்ல.” லீலா சொல்ல ருக்குவும் புரிந்ததாய் தலையசைத்தாள்.

     “தேவகி வந்துட்டியா என்ன முகமெல்லாம் இப்படி இருக்கு தூங்கிட்டியா என்ன?” தங்களின் பேச்சின் நாயகி வரவும் அவளிடம் கவனத்தைத் திருப்பினாள் ருக்கு.

     “ஆமாக்கா கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன். இப்ப தான் எழுந்தேன். சரி நைட்டுக்கு டிபன் பண்ணுவீங்களே ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு கேட்கத்தான் வந்தேன்.” கரகரத்த குரலில் சொன்னாள்.

     “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. நாங்க பார்த்துக்கிறோம். நீ கொஞ்ச நேரம் ஹாலில் போய் உட்காரு. இந்த ஊர்மியையும் காணும் அவளும் நல்லாத் தூங்கிட்டா போல.” என்று பேசிக்கொண்டே சூடாக டீ கொடுத்தாள் ருக்கு.

     சற்று நேரத்திலே கண்ணைக் கசக்கிக்கொண்டு ஊர்மியும் வர, இரவு உணவு அமைதியாக முடிந்தது. அறைக்குள் செல்ல வேண்டுமென்றே தாமதமாக்கிக் கொண்டிருந்தனர் லீலா, ருக்கு, ஊர்மி மூவரும்.

     தேவகி மட்டும் சீக்கிரமாகவே அறைக்குள் சென்றாள். ஆனால் தர்மா ஹாலில் அமர்ந்து போன் நோண்டிக் கொண்டிருந்தான்.

     மணி ஒன்பதரையை நெருங்க தர்மா ஒரு சின்ன சலிப்புடன் எழுந்து அறையை நோக்கி நடந்து வந்து கதவைத் திறக்க, அதே நேரத்தில் சரியாக உள்ளிருந்து தேவகியும் இழுக்க இருவரும் முட்டிக்கொண்டனர்.

     எதுவும் சொல்லாமல் தர்மா உள்ளே சென்றுவிட, தேவகி கீழே வந்தாள். ஹாலில் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்க, “அப்பாடி அக்காங்க ரூமுக்குள்ள போயிட்டாங்க போல.” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுவிட்டவள் கிச்சனிற்குள் சென்றாள்.

     பகலில் உறங்கியதால் இரவு உறக்கம் வராது. அதனால் இன்று யாரேனும் ஒருவர் என்னுடன் இருங்கள் என்று ஊர்மி அடம்பிடித்ததால், திருமணத்திற்கு முன் இவர்கள் தங்கி இருந்த அறையில் அவளுடன் நுழைந்த லீலா, தண்ணீர் எடுப்பதற்காக வெளியே வரும் போது, அங்கேயும் இங்கேயும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு பூனை போல் தேவகி கிச்சனிற்குள் செல்வதைப் பார்த்து குழம்பி நின்றாள். தமக்கை அப்படி என்ன பார்க்கிறாள் என்கிற யோசனையுடன் ஊர்மியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.

     தேவகியின் புரியாத நடவடிக்கைகளுக்கு காரணம் என்ன என்பதாய் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், சற்று முன்னர் லீலா காய்ச்சி வைத்திருந்த பாலில் குங்குமப்பூ கலந்து எடுத்துக்கொண்டு கிச்சனை விட்டு வெளியே வந்த தேவகி மீண்டும் ஒருமுறை அக்கம் பக்கம் பார்த்துவிட்டு பிரிட்ஜைத் திறந்து அதில் இருந்த மல்லிகைப்பூவில் கிட்டத்தட்ட பாதியைத் தன் தலையில் வைத்துக் கொண்டு அறையை நோக்கி நடந்தாள்.

     “அக்கா நம்ம வீட்டு கடைக்குட்டிக்கு எவ்வளவு அறிவுன்னு பாருங்களேன்.” ஊர்மி சிரிக்க, “ஷ்ஷ்… சத்தம் போடாத. அவளுக்குத் தெரிஞ்சா சங்கடப்படுவா. காலையிலும் எதையும் காட்டிக்காத என்ன.” ஊர்மியை அடக்கிய லீலா தான் எடுத்துச் சொல்லாமலே தன் தங்கை அனைத்தையும் புரிந்துகொண்டதையும், பிரச்சனைக்கான தீர்வையும் உடனடியாகக் கண்டுகொண்டு அதைச் செயல்படுத்த முயல்வதையும் உணர்ந்து புன்னகைத்துக் கொண்டாள்.

     வாழ்க்கை நீண்டு கிடக்கிறது. இயற்கையாய் உணர்வுகள் உந்தும் வரை காத்திருக்கலாம் என்று கணவன் சொன்ன பிறகு தேவகி பெரிதாய் இதைப் பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. ஆனால் இன்று அவன் வாய் வழியாகவே அவன் ஆசையைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகு, அவனை விட்டுத் தள்ளி இருக்க அவளால் முடியாது என்பதால் துணிந்து முடிவெடுத்துவிட்டாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தர்மா சூப்பர் பா .. உன்னோட உணர்வுகளை எங்களாலும் புரிஞ்சுக்க முடிஞ்சது .. தேவகி சூப்பர் .. உண்மையிலேயே காதல் அப்படிங்கிறது அவங்களுக்காக நாம பண்ற சின்ன சின்ன விஷயங்கள் ல தான் இருக்கு .. தர்மா சமாதானம் ஆகிடுவான்னு நினைக்கிறேன் ..