
அத்தியாயம் 65
மதிய வேளையில் அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர், சகோதரிகள் நால்வரும் ஒன்றாக அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தொடுதிரை அலைபேசி உபயோகம் புதிது என்பதால் அவ்வளவாக அதற்கு அடிமை ஆகியிருக்கவில்லை.
தனியறையில் தனியாக அமர்ந்து கொண்டு யாரோ ஒருவரின் வீட்டு அமைப்பு, அவர்களின் பிள்ளைகள், பெற்றோர்கள், அவர்கள் செய்யும் சேட்டைகள், செல்லப்பிராணிகள், இரண்டாம் தர ஜோக்குகள், நடனங்கள் என்று பார்த்து பொழுதைப் போக்குவதை விட, தங்கள் சொந்த சகோதரிகளிடம் பேசுவது நன்றாக இருப்பதாகத் தோன்றியது அவர்களுக்கு.
இவர்களின் இந்த நடவடிக்கையால், “நீங்க எல்லாம் இந்தக் காலத்தில் பிறக்க வேண்டிய பொண்ணுங்களே கிடையாது தெரியுமா?” என அரசு அடிக்கடிக் கிண்டல் செய்வதும் உண்டு.
மூன்று சகோதரர்களும் சேர்ந்து ஏற்றிவிட்ட புத்திமதி என்னும் போதையோடு வந்த தர்மன் கண்ட காட்சி இது தான். “தேவகி நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணுமே.” மனைவியைத் தன் அறைக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் சொன்னான் தர்மா.
விளையாட்டு சுவாரஸ்யத்தில் கவனம் முழுவதையும் விளையாட்டில் வைத்துக்கொண்டு, “சொல்லுங்க” என்றாள் தேவகி.
“ப்ச்… தேவகி நான் பேசினா என்னைப் பார்த்து பதில் பேசுங்க.” வார்த்தையில் சிறிது கோபத்தையும் சேர்த்துச் சொன்னான் தர்மா. தன்னைக் கண்டுகொள்ளாத மனைவி மேல் உள்ள வருத்தம் கோபமாக வெளிவந்தது.
“கரெக்ட்டா நான் ஜெயிக்கிற நேரத்தில் வந்து தான் தொந்தரவு பண்ணுவீங்களா? விளையாட்டு இன்ட்ரஸ்ட்டா போகுது. கொஞ்ச நேரம் அமைதியா இருங்க.” அத்தனை அசால்ட்டாகப் பதில் சொன்னாள் அவள்.
ஏற்கனவே தன்னுடைய சகோதரர்கள் சொல்லி அனுப்பியதை எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்தில் இருந்தவன், மனைவி கண்டுகொள்ளாமல் இருக்கவும் கோபம் கொண்டு அங்கிருந்து நகர்ந்து அறைக்குள் சென்றான்.
“என்ன தேவகி நீ, இப்படியா முகத்தில் அடிச்ச மாதிரிப் பேசுவ. ஆமா உனக்கு எதுக்கு அவர் மேல கோவம். நாங்க எங்க புருஷன் மாருங்க மேல கோவமா இருந்தா, அவங்க மேல தப்பு இருக்கு. ஆனா உன் புருஷன் மேல எந்தத் தப்பும் இல்லையே. அவர் இப்ப வரைக்கும் நடுநிலையாத் தானே இருக்காரு.” நாள்பட்ட புத்தி வந்து கேட்டாள் ருக்கு.
“ஆமா தேவகி நானே இதைப் பத்தி உன்கிட்ட பேச நினைச்சேன். தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கொடுக்கிறது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் தப்பு பண்ணாதவங்களைத் தப்பா நினைக்காம இருக்கிறது. விளையாட்டு எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல போய் அவர்கிட்ட பேசு.” என்றாள் லீலா.
லீலாவையும், ருக்குவையும் எதிர்த்துப் பேச முடியாமல் அமைதியாக தன்னறை வந்த தேவகி தர்மாவிடம் பாய்ந்தாள். “எதுக்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க. அண்ணன், தம்பிங்க நீங்க நாலு பேரும் தான் ஒத்துமையா இல்ல. அது தான் எக்கேடும் கெட்டுப் போங்கன்னு விட்டுட்டோமே.
இப்ப நாங்க நாலு பேரு ஒத்துமையா இருக்கிறது உங்க கண்ணை உறுத்துதா? எதுக்காக அக்காகிட்ட எனக்குக் கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கிறீங்க.” சட்டென்று மூண்ட எரிச்சலில் கேட்டுவிட்டாள் அவள்.
“தேவகி வர வர உங்களோட பேச்சு நடவடிக்கை எதுவுமே எனக்குப் பிடிக்கல.” தர்மா கோபமாகச் சொல்ல, “எனக்கு கூடத்தான் உங்களைப் பிடிக்கல.” முழுதாகச் சொல்லிய பிறகே தான் சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை உணர்ந்தவள் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.
“ஏங்க அது நான் வேணும் னு சொல்லல. வாய் தவறி வந்துருச்சு.” தவறை உணர்ந்ததும் இறங்கி வந்து பேசினாள்.
அவள் வாய் தவறி தான் சொன்னாள் என்று தெரிந்தாலும் அவளைத் தன் பின்னால் கொஞ்சமேனும் சுற்ற வைக்க வேண்டும் என்று நினைத்தான் தர்மா. அவனுடைய இந்த எண்ணத்தின் பின்னால் ஒரு காரணமும் இருந்தது.
எந்தத் தவறும் செய்யாமல் இத்தனை நாளாக அவள் பின்னால் சுற்றியும் கண்டுகொள்ளாத அவள், இனி தினமும் தன்னைப் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும். விரும்பியவர்களின் ஒதுக்கம் எவ்வாறு வலிக்கும் என்பதை அவளும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவன் அமைதியாக வெளியே சென்று விட்டான்.
“என்ன தேவகி உன் புருஷன் கோபமா வெளியே கிளம்பிப் போறார் போல. இந்த வீட்டில் இருக்கிறவங்களுக்கு எது நல்லா வருதோ இல்லையோ, கோவம் மட்டும் பொசுக்கு பொசுக்குன்னு வந்திடுது. நீ ஒன்னும் இதை நினைச்சு கவலைப் படாதே பார்த்துக்கலாம்.” என்றாள் ஊர்மி.
“இல்லக்கா இந்த தடவை தப்பு என் மேலதான். நான் தான் தப்பு. என்ன இருந்தாலும் நான் அப்படி ஒரு வார்த்தை அவரைப் பார்த்து சொல்லி இருக்கக் கூடாது.
பாவம் அவர் எந்தத் தப்பும் பண்ணாம, நான் பண்ணதை எல்லாம் எனக்காக மட்டுமே பொறுத்துக்கிட்டு இருந்தார். நான் தான் புத்தி கெட்டு போய் கண்டதையும் பேசிட்டேன். அவர் முகமே சுருங்கிப் போச்சு.” தவிப்பாய் சொன்னாள் தேவகி. அத்தனை நாள் புரியாத அவன் பக்க நியாயங்கள் எல்லாம் ஒரே நிமிடத்தில் புரிந்தது. இதைத் தான் ஊடல் நல்லது என்று சொல்வார்கள் போல.
பெண்களை விட்டு சற்றுத்தள்ளி நீள் இருக்கையில் அமர்ந்திருந்த நாகா இதனை எல்லாம் செவிமடுத்தவனாய், தன்னை விட்டு சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த தெய்வாவிற்கு, “டேய் என்னடா நம்ம சொல்பேச்சு கேட்டு நல்லா இருந்த சூழ்நிலையை தர்மா இன்னும் கெடுத்துக்கிட்டான் போலவே.” எனக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
“அப்படித்தான் போலடா, அவன் மூஞ்சே சரியில்ல.” என்று பதில் அனுப்பினான் தெய்வா.
“என்னம்மா ஞாயிற்றுக்கிழமை பொழுது போகலன்னு விளையாட ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றவாறு உள்ளே வந்தார் வடிவேலு.
“ஞாயிற்றுக்கிழமைங்கிறது எல்லாம் எங்களுக்கு மட்டும் தானா? ஏன் மாமா இன்னைக்கு கூட நீங்க ஆபிஸ் போய் தான் ஆகனுமா? அரசு அண்ணா நீங்களாவது இதெல்லாம் சொல்லக்கூடாதா. மாமாவோட உடல்நிலை பத்தி எங்களை விட உங்களுக்குத் தானே நல்லா தெரியும்.” உரிமையாய் மாமனாரையும், உடன்பிறவாச் சகோதரனையும் கோபித்தாள் லீலா.
“அதெல்லாம் சொன்னால் இந்த வயசானவரு கேட்கமாட்டாரும்மா. மைக்கேல் ஜாக்சனுக்கு ஒன்னுவிட்ட பெரியப்பா மாதிரி ஓவரா பேசுவார். அதனால் தான் நானும் கங்காருகுட்டி மாதிரி அவர் கூடவே சுத்திட்டு இருக்கேன்.
நேரா நேரத்துக்கு சாப்பாடு, மாத்திரை எல்லாம் கொடுத்து அவரைப் பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. நீ ஒன்னும் கவலைப்படாதே.” பெருந்தன்மையுடன் சொன்னான்.
“தேவகி எங்க பேன்னு பார்த்துக்கிட்டு இருக்க, உன் ஆட்டம் தான் ஆடு.” என்றாள் ஊர்மி.
“இல்லக்கா எனக்கு விளையாட ஆர்வம் இல்லாமப் போயிடுச்சு. நீங்க விளையாடுங்க, நான் என் ரூமுக்கு போறேன்.” என்றவள் அடுத்த வார்த்தை யாரும் சொல்வதற்கு முன்னர் எழுந்து தன்னுடைய அறை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள்.
“ஐ ரொம்ப நல்லதாப் போச்சு ஆட்டத்தை கலைச்சு முதல்ல இருந்து ஆரம்பிங்க. தேவகிக்குப் பதில் நான் விளையாடுறேன்.” என்று அவர்களுடன் ஐக்கியமானான் அரசு.
“டேய் உனக்கு ஆம்பளைப் பசங்க விளையாடுற விளையாட்டே தெரியாதா? எப்பப் பாத்தாலும் பொண்ணுங்க கூடவே சுத்திக்கிட்டு இருக்க.” நாகா அரசுவை வம்பிழுத்தான்.
“நாகா நீ இன்னமுமா இங்க இருக்க. இன்னைக்கு சன்டே தானே. எப்பவும் போற கிளப்புக்கு போகல நீ.” அலேக்காய் கோப்ராவை அவன் மனைவியிடம் கோர்த்துவிட்டான் அரசு.
“ஆஹா, நாரதர் குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்றானே.” என நினைத்த வண்ணம் அவன் ஊர்மியைப் பார்க்க, அவன் நினைத்தது போலவே ஊர்மியும் முகத்தை கடுமையாக வைத்து அவனை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஆத்தி இதுக்கு மேல இங்க இருந்தா, கொங்கணவர் மாதிரி இவ என்னைப் பார்வையாலே எரிச்சிடுவா விடு ஜுட்.” என்கிற நினைப்புடன் அங்கிருந்து தன்னறைக்கு வந்தவன், மறக்காமல் அறையின் கதவைச் சாத்திக்கொண்டு தர்மாவின் எண்ணுக்கு அழைத்தான்.
“தர்மா என்னாச்சு, வீட்டில் இருந்து அவ்ளோ அவசரமா கிளம்பிப் போன. ப்ளான் ஏதும் சொதப்பிக்கிச்சா. உன் பொண்டாட்டி உன் மேல ரொம்பக் கோபப்பட்டாங்களா என்ன?” எடுத்த எடுப்பில் ஹலோ கூடச் சொல்லாமல் அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்தான் நாகா.
“நாகா கொஞ்சம் பொறுமையா தான் பேசேன். கோபம் எல்லாம் ஒன்னுமில்ல. அவ விளையாட்டைக் கெடுத்திட்டேங்கிற எரிச்சலில் ஒரு வார்த்தை சொன்னா. அந்த வார்த்தையால் எனக்குக் கோவம் வந்த மாதிரி காட்டிக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பி வந்துட்டேன் அவ்வளவுதான்.” எளிதாகப் பதில் சொன்னான்.
“அவ்வளவு தானே, பெருசா ஏதும் பிரச்சினை இல்லையே. தெய்வா தான் உன் முகமே சரியில்லன்னு பயந்துக்கிட்டு இருந்தான். சரி நீ போன வை, நான் அவனுக்கு ஒரு போன் பண்ணி இதுதான் விஷயம் னு சொல்லிடுறேன்.” என்ற நாகா சொன்னது போல் செய்யவும் செய்தான்.
“என்னது இது, மெசேஜ் பண்றதா தானே பேச்சு. இப்ப என்ன போன் பண்றான்.” நினைத்தவண்ணம் அழைப்பை ஏற்று யாருக்கும் கேட்கக் கூடாது என்பதற்காக மிகவும் மெதுவாக ஹலோ என்றான் தெய்வா.
தெய்வா மிகவும் மெதுவாகப் பேசுவதையும், அந்தப் பக்கம் என்ன சொன்னார்களோ அதைக் கேட்டு இவன் முகம் புன்னகையில் தழும்புவதையும் கண்டு ருக்குவுக்குள் லேசாக பொறாமை உணர்வு எழுந்தது.
“ஊர்மி அடுப்பில் ஏதாவது வைச்சுட்டு வந்தியா என்ன. திடீர்னு ஏதோ கருகுற வாசனை வருது.” அரசு கேட்க, ருக்கு இப்போது அரசுவைப் பார்த்து முறைத்தாள்.
இது தான் விஷயம் என்பதைச் சொல்லி முடித்த நாகா அழைப்பைத் துண்டிக்கப் பார்க்க, “டேய் நாகா போன வைச்சிடாத டா.” வேகமாகச் சொன்னான் தெய்வா.
“ஏன்” என்ற கேள்வி எழுப்பப்பட, “இல்ல நான் உன்கிட்ட பேசுறதைப் பார்த்து, நான் வேற ஏதோ ஒரு பொண்ணு கிட்ட பேசுறேன்னு கற்பனை பண்ணி, என் பொண்டாட்டிக்குப் பொறாமைத் தீ பத்திக்கிட்டு எரியுது. பார்க்கிறதுக்கு ரொம்ப ஜாலியா இருக்கு. கொஞ்ச நேரம் இப்படியே என் கிட்ட பேசிக்கிட்டு இரு.” ருக்குவை ஓரக்கண்ணால் பார்த்தபடிச் சொன்னான் தெய்வா.
“உன் பொண்டாட்டிக்கு உன் மேல பாசம் இருக்கு, உரிமை இருக்கு, அதனால நீ இன்னொரு பொண்ணுகிட்ட பேசுறன்னு நினைச்சு பொறாமைப்படுறாங்க. ஆனா எனக்குன்னு ஒருத்தி வந்து வாய்ச்சு இருக்கா பாரு. அவளே என்கிட்ட வந்து என்னை இன்னொரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா. எல்லாம் காலம் நேரம் கிரகம்.” அத்தனை சலிப்பாக வந்தது அவன் வார்த்தைகள்.
“அதெல்லாம் இல்ல. அவங்க வீட்டில் இருக்கும் போது உனக்காக ஊர்மிளா அத்தனை பேசினாங்கன்னு ஆச்சர்யமா ருக்கு என்கிட்டச் சொல்லி இருந்தாங்க.” மனைவி என்றோ ஒருநாள் சொன்னதை நினைவுபடுத்தி தம்பிக்கு ஆறுதல் சொன்னான் தெய்வா.
“நம்ப முடியலையே.” தாடியைத் தடவினான் நாகா. “சரி நான் சொல்ற மாதிரி பண்ணு. போனை வைச்சிட்டு தரையில் படுத்துக்கோ. எங்களுக்குக் கேட்கிற மாதிரி ஐயோ அம்மான்னு கத்து.” என்க, “அப்படிக் கத்தினா” மனைவி வருவாளோ என்னும் எதிர்பார்ப்போடு கேட்டான் நாகா.
“செஞ்சு பாரு, உன் பொண்டாட்டிக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் னு தெரிஞ்சிடும்.” என்றான் தெய்வா.
“சூப்பர் ஐடியா தெய்வா. இதோ இப்பவே செயல்படுத்துறேன்.” என்ற நாகா மெத்தையில் இருந்து இறங்க நிஜமாகவே கால் வழுக்கி கீழே விழுந்து, ஐயோ அம்மா என்று கத்தினான்.
“பையன் ட்ராமாவை ஸ்டார்ட் பண்ணிட்டான்.” நினைத்தபடியே சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தான் தெய்வா.
கடவுளே, வழக்கம் போல் பின்னந்தலையில் கண்ணை வைச்சுக்கிட்டு எங்க வாரி விழுந்து கிடக்கிறாரோ தெரியலையே என்றபடி பதறிக்கொண்டு வேகவேகமாக அறையை நோக்கிச் சென்றாள் ஊர்மி.
“ஏய் பார்த்துப் போடி.” லீலா கத்தியது கேட்டதா என்பதைக் கூட அறியாள்.
“என்னாச்சுங்க” என்றபடி கதவைத் திறந்தவள் கணவன் விழுந்து கிடந்த கோலம் கண்டதும், “நடக்கும் போது பார்த்து நடக்க மாட்டீங்களா. எப்ப பாத்தாலும் வானத்துப் பார்த்து தான் நடப்பீங்களா? ஏன் கீழ குனிஞ்சு நடந்தா உங்க தலையில இருக்கிற கிரீடம் இறங்கிடுமா எழுந்திரிங்க முதலில்.” என்றவள் கை கொடுத்து நாகாவைத் தூக்கிவிட்டாள்.
“ஐயோ வலிக்குது டி ஊர்மி. இடுப்பில் சுழுக்கு பிடிச்சிடுச்சு போல, வலி தாங்க முடியல. ஏதாவது பண்ணுடி.” கத்தினான்.
“கொஞ்சம் அமைதியா இருங்க. இங்க என்ன உங்களுக்குப் பிரசவமா நடக்குது. ஐயோ, அம்மான்னு கத்திக்கிட்டு இருக்கீங்க. சின்ன சுளுக்கு இந்த வலியை கூட உங்களால தாங்கிக்க முடியாதா? அப்படியே படுத்து இருங்க நான் போய் தைலம் எடுத்துட்டு வரேன்.” என்று நகரப் போனவளின் கரம் பிடித்துக்கொண்டு, “போகாத ஊர்மி ரொம்ப வலிக்குது.” கெஞ்சலாய் சொன்னான்.
“சரி ஒன்னும் இல்ல, சரியாப் போயிடும். நான் போய் தைலம் எடுத்துட்டு வரேன். அதை தேய்ச்சுக்கிட்டா வலி போயிடும்.” என்றவள் கபோர்டில் இருந்த தைலத்தை எடுத்து தேய்க்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் தர்மா வீடு வந்து சேர்ந்திருந்தான். “வந்துட்டீங்களா, என்னங்க இப்படி நனைஞ்சு போய் வந்திருக்கீங்க. வெளியில் மழை பெய்யுதா என்ன. இருங்க நான் தலை துவட்டி விடுறேன். மழைக்காலம் எதுக்கு பைக் எடுத்துட்டு போறீங்க. காரில் போய் இருக்கலாம் இல்ல.” அனுசரணையாகக் கேட்டாள் தேவகி.
“நான் எதில் போனா என்ன, மழையில் நனைஞ்சா தான் என்ன. உங்களுக்குத் தான் என்னைப் பிடிக்காதே.” தர்மா சொல்ல முகம் வாடிப் போனாள் தேவகி.
“நான் பண்ணது தப்பு தான். அதுக்காக என்னை நாலு திட்டு வேண்ணாலும் திட்டிக்கோங்க. ஆனா இப்படி எல்லாம் பேசி என்னைக் கஷ்டப்படுத்தாதிங்க.” அழுகையுடன் சொன்னாள்.
“நீங்க பண்ண தப்பால மனசு கஷ்டப்பட்டு, நான் பேசாம இருக்கும் போது உங்களுக்கு இவ்வளவு வலிக்குதே. நான் பண்ணாத தப்புக்கு நீங்க எனக்குத் தண்டனை கொடுக்கும் போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்.” என்று தர்மா கேட்ட கேள்வி சாட்டையால் அடித்தது போல் வலித்தது அவளுக்கு.
“நான் எதுக்கு உங்ககிட்ட பேச வந்தேன்னு தெரியுமா? உங்களால் என்கிட்ட பேசாம இருக்க முடிஞ்சிருக்கலாம். ஆனா என்னால் அது முடியல. அதனால் தான் உங்க கண்டிஷனுக்கு எல்லாம் ஒத்துக்கிட்டு அந்த பேப்பரில் கையெழுத்துப் போடலாம் னு முடிவு பண்ணி அதை உங்ககிட்ட சொல்ல தான் வந்தேன்.” என்றான்.
ஓடிவந்து அவனை கட்டிக் கொண்டவள், “இல்லங்க வேண்டாம், எதிலும் நீங்க கையெழுத்துப் போட வேண்டாம். நான் தான் பைத்தியக்காரி. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு தெரிஞ்சும், நான் உங்ககிட்ட அந்தக் கண்டிஷன் பேப்பரை நீட்டி இருக்கக் கூடாது.
அது மத்த மாமாங்களுக்குத் தான் தேவைப்படும். உங்களுக்குத் தேவையில்லை. நான் உங்களை நம்புறேன். முழுசா நம்புறேன். புத்தி கெட்டுப் போய் நான் பண்ண தப்பு எல்லாத்தையும் மன்னிச்சு பழையபடி என்கிட்ட பேசுங்க ப்ளீஸ்.” என்றாள் தேவகி. அவள் முதுகில் முகத்தை வைத்திருந்த தர்மனின் இதழ்களில் தன்னால் வந்து ஒட்டிக்கொண்டது சின்னப் புன்னகை ஒன்று.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
1
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


பொண்ணுங்க அவ்ளோதான் பா .. நீங்க இறங்கி வரணும்னு நினைச்சாலே அவங்க இறங்கி வந்துடுவாங்க .. நீங்க ஒரு வார்த்தை அன்பா பேசினா உங்களை தாங்குவாங்க .. அதை விட்டுட்டு ஏன் டிராமா .. தர்மா புரிஞ்சுப்பானா தெரியலையே ..
தெய்வா நீதான் தேவை இல்லாத ஐடியா எல்லாம் தர்ற .. கடைசியில நீதான் சாமியாரா இருக்க போற ..