Loading

அத்தியாயம் 60

     “யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற. நான் எப்போ” என்ற தெய்வாவிற்கு, கடந்த காலத்தில் தான் செய்த செயல் நினைவு வர, “அது, அந்தப் பொண்ணு.” எனத் தடுமாறினான். செய்த செயலை நினைத்து பயம் இல்லை. ஆனால் மனைவி தன்னைத் தவறாகப் புரிந்துகொள்வாளோ என்கிற பதற்றம் வந்தது.

     “அன்னைக்கு அந்தப் பொண்ணை நான் நல்லாப் பார்த்தேன். அதைவிட முக்கியம், அவளுக்கு அபார்ஷன் பண்றதுக்கான அப்ளிகேஷன் பார்ம்மில் ஹஸ்பெண்ட் என்கிற இடத்தில் உன்னோட கையெழுத்தையும் பார்த்தேன். அப்பவே உன்னோட இலட்சணத்தை ஊரில் ஏத்தி இருப்பேன். அப்படி செஞ்சா அதனால் நம்ம குடும்ப மானமும் சேர்ந்து தான் போகும் னு நினைச்சு தான் அமைதியா இருந்தேன்.” செல்வா சொல்ல தெய்வாவின் கண்கள் பதற்றத்துடன் ருக்குவைத் தேடியது.

     அவள் அளவுக்கதிகமான அதிர்சியுடன் ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். அவள் தன்னைத் தவறாக நினைத்துக்கொண்டாடள் என நினைத்து, “ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி பக்கத்தில் வைச்சிக்கிட்டு, இன்னொருத்தன் பொண்டாட்டி கூட கள்ளத்தொடர்பில் இருக்கிற நீ எல்லாம் என்னைப் பத்தி பேசக்கூடாது.

     நான் யாரு எப்பேர்பட்டவன்னு உனக்கு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்ல.” தானும் வார்த்தையை விட்டான் தெய்வா. தன் திருமண வாழ்வு நாசமானால், உன் வாழ்க்கையையும் நாசமாக்காமல் விடமாட்டேன் எனத் தவறாகச் செயல்பட்டான்.

     “ராஸ்கல், யாரைப் பார்த்து என்ன சொன்ன. நான் ஆயுளுக்கும் ஜெயிலுக்குள்ள இருந்தாக் கூட பரவாயில்லைடா உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன்.” என்றவண்ணம் செல்வா தெய்வாவின் வயிற்றில் காலால் உதைக்க, அவன் இவன் வயிற்றில் குத்த தடுமாறி இருவரும் கீழே விழுந்து, ஒருவரின் சட்டைக் காலரை இன்னொருவர் பிடித்தபடி தலையோடு தலையாக இடித்துக்கொள்ள ஆரம்பித்தனர்.

     “செல்வா, தெய்வா என்னடா பண்றீங்க இரண்டு பேரும் விலகுங்கடா.” அப்பொழுது தான் வேலை முடித்து வந்த அரசு சண்டையிடும் இவர்களைப் பார்த்து பதறி அருகே செல்ல முயற்சிக்கும் போது தான் சற்று தொலைவில் மயங்கிக் கிடந்த லீலாவைக் கண்டான். தெய்வா அடித்த அடியில் விலகிச் சென்றவள் தூணில் மோதிக்கொண்டு அதிகபட்ச அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்திருந்தாள்.

     “செல்வா லீலாவைப் பாருடா.” அரசு கத்தவும் தான், செல்வாவின் கவனம் மனைவி பக்கம் திரும்பியது. மயங்கிக் கிடந்தவளின் தோற்றம் மனதை என்னவோ செய்ய, லீலா என்று பதறியவன் வேகமாக அருகே சென்று அவளைத் தொட முயற்சிக்க, “என் அக்காவைத் தொடதீங்க.” என்று கத்தினாள் ருக்கு.

     அவள் கண்ணில், பேச்சில் அப்படி ஒரு ஆவேசம் இருந்தது. தெய்வா அறைந்த அறையில் லீலாவுடைய கன்னம் குறுகிய நேரத்திற்குள் பயங்கரமாக வீங்கி சிவந்து போய் இருந்தது. கன்னத்தில் கைத்தடம் மிகப்பெரிய அளவில் இருந்தது. அக்காவின் நிலையைப் பார்த்து ருக்குவின் கண்களில் இருந்து கண்ணீர் இப்பொழுது விழவா இல்லை சிறிது நேரம் கழித்து விழவா என்று போராடிக் கொண்டிருந்தது.

     லீலாவின் நிலையும், ருக்குவின் கலங்கிய முகமும் தெய்வாவை ஏதோ செய்தது. “ருக்கு நான் வேணும் னு” என்று ஏதோ சொல்ல வர, கையெடுத்துக் கும்பிட்டவள் “போதும் சாமி போதும், எல்லாம் போதும். இப்ப நான் இருக்கிற நிலைமையில் என்கிட்ட பேச்சுக் கொடுக்காதீங்க. என்னையும் மீறி ஏதாவது மரியாதைக்குறைவா பேசிடப் போறேன். அரசு அண்ணா, லீலா அக்காவைத் தூக்க ஹெல்ப் பண்ணுங்க.” என்க, தன்னைப் போல் முன்வந்தான் செல்வா.

     “உங்க பேரு அரசுவா, இல்லல்ல. அப்ப அமைதியா நில்லுங்க. இல்லைன்னா போய் மறுபடியும் சண்டை போட்டு மண்டையை உடைச்சுக்கோங்க. ஆனா என் அக்காகிட்ட மட்டும் வராதீங்க.” செல்வாவைப் பார்த்தும் கத்தினாள் ருக்கு.

     அத்தனை நாள் சரியான பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தால் கூட, மனதளவில் வடிவேலுவுக்குக் கொடுக்கும் மரியாதையை செல்வாவிற்கும் கொடுத்துக் கொண்டே வந்த பெண்ணவளிற்கு இப்போது அத்தனை கோபம் அவன் மீது.

     “அரசு அண்ணா நீங்க இப்ப வரப் போறீங்களா இல்லையா?” காளியாய் கத்தினாள் ருக்கு. பிரளயம் வரப்போவது உறுதி என நினைத்த அரசு, பயத்தோடு உதவிக்கு முன்வந்தான். இருவருமாகச் சேர்ந்து மயக்கத்தில் இருந்த லீலாவை ஊர்மி, தேவகி இருக்கும் முதல் மாடி அறைக்கு அழைத்துச் சென்றனர்.

     அவ்வளவு நேரம் ஆக்ரோஷமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த தெய்வாவிற்கும், செல்வாவிற்கும் என்ன செய்வதென்று புரியவில்லை. மயங்கிய லீலாவும், அழுத ருக்குவுமே அவர்களின் கண்கள் மற்றும் மனம் முழுக்க நிறைந்திருந்தனர்.

     “எல்லாம் உன்னால் தான். லீலாவுக்கு ஏதாச்சும் ஆச்சு விஷ ஊசி போட்டு உன்னைக் கொல்லவும் தயங்க மாட்டேன்.” ஆக்ரோஷமாய் சொன்னான் செல்வா.

     “அதுவரை என் கை என்ன பூப்பறிக்கவா செய்யும்.” என்றபடி துப்பாக்கியை எடுத்து நீட்டினான் தெய்வா.

     “தெய்வா என்னடா பண்ற?” கேட்டுக்கொண்டே பதறியபடி வந்தார் வடிவேலு. மருமகள்களைத் தேடியவர் நடந்த அனைத்தையும் அரசு மூலமாகக் கேள்விப்பட்டு, தான் பெற்ற சீமந்தப்புத்திரர்களை கடுமையாகத் திட்டினார்.

     கீழே நடந்து கொண்டிருக்கும் அனைத்தும் தெரிந்தாலும், வடிவேலு, அரசு, தர்மா, நாகா நால்வரும் எத்தனையோ முறை கதவைத் தட்டிப் பார்த்தும், பெண்கள் அசைந்து கொடுக்கவில்லை.

     செல்வாவும், தெய்வாவும் மன்னிப்பு கூட கேட்டுப் பார்த்தார்கள். அது எதுவும் அவர்களைச் சமாதானம் அடையச் செய்யவில்லை. புயலுக்கு முந்தைய அமைதியைப் போல், ஏதோ மிகப்பெரிதாக நடக்கப் போகிறது என்பது புரிந்தது இராதா இல்லத்தின் ஆண்களுக்கு.

     சிறிது நேரம் கழித்து அறையின் கதவு திறக்கப்பட, செல்வா வேகமாகத் திரும்பிப் பார்த்தான். லீலாவுக்குப் பதிலாக தேவகியைத் தான் அவனால் பார்க்க முடிந்தது.

     “தேவகி எதுக்குமா இவ்வளவு நேரம் கதவைத் திறக்காம இருந்தீங்க. நாங்க எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா?” வடிவேலு கேட்க, “என்ன மாமா செத்திடுவோம் னு பயந்துட்டீங்களா? உங்க பசங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட பாவத்துக்கு நாங்க எதுக்காக சாகணும்.” குரலுயர்த்தினாள் தேவகி.

     “தேவகி” என்று ருக்குவின் குரல் ஓங்கி ஒலித்தது மேல் அறையில் இருந்து. அதற்குக் கட்டுப்பட்ட தேவகி அடுத்த ஒரு வார்த்தை பேசாமல், நேரே கிச்சனுக்கு சென்றவள் மதியத்திற்காக செய்திருந்த சாதம் மற்றும் குழம்பு ஒரு தண்ணீர் பாட்டில், ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிதளவு எண்ணெய் எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தவள், அங்கே நிற்கும் தன் கணவன் தர்மன் முதற்கொண்டு எவரையும் கருத்தில் கொள்ளாது, வடிவேலுவின் விருப்பமான மயில் இறக்கை விசிறி ஒன்றில் இருந்து ஒரு இறகை உடைத்து எடுத்துக்கொண்டு வந்த வழியில் திரும்பினாள். ஒற்றைத் தட்டு  உணவு ஊர்மிக்கு என்று புரிந்தது ஆண்களுக்கு.

     நால்வரில் ஒருவராவது வருவார்கள் என்று ஆண்கள் அனைவரும் இரவு முழுவதும் ஹாலிலே காத்திருந்தனர். ஆனால் பெண்கள் மனம் இறங்கவே இல்லை. நடந்த சண்டையால் எங்கே கோபித்துக்கொண்டு மீண்டும் பிறந்தகம் கிளம்பி விடுவார்களோ என்கிற பயம் பீடித்தது ஆண்களை.

     எனக்கென்ன பயம் என்று நினைத்தவனாய் நாகா அந்த அறையின் வெளியே நின்று பேசினான். “ஊர்மி இந்த வீட்டில் இப்படிச் சண்டை நடக்கிறது எல்லாம் சாதாரணம் தான். இதுக்கு எதுக்கு இப்படி ரியாக்ஷன் கொடுக்கிற. எங்க சண்டைக்குள்ள யாரும் இதுவரை வந்தது இல்லை. இன்னைக்கு உங்க அக்கா கொஞ்சம் ஒதுங்கி நின்னு இருக்கலாம் தான். சரி போனது போகட்டும். அண்ணன் தம்பி சண்டை தானே, உங்களுக்குள் சண்டை வந்ததே இல்லையா? அப்பெல்லாம் இப்படித்தான் அறைக்குள் அடைந்து கிடந்தீங்களா?

     ஒருவேளை இப்படியெல்லாம் பார்க்க பயமா இருந்தா, என் யோசனைக்கு ஒத்துக்கிட்டு தனிக்குடித்தனம் வந்திடு. வேற எந்தப் பிரச்சனையும் இருக்காது.” தைரியமாகச் சொன்னான்.

     “நானும், உங்க பிள்ளைகளும் உயிரோட இருக்க ஆசைப்பட்டா, அடுத்த வார்த்தை பேசாம இங்க இருந்து போயிடுங்க.” பதிலாகக் கேட்ட ஊர்மியின் குரலில் அத்தனை கோபம் வந்தது அவனுக்கு.

     மற்ற நேரமாக இருந்தால் வழக்கம் போல் சண்டையை ஆரம்பித்து இருந்திருப்பான். ஆனால் மனைவியின் குரலின் கரகரப்பு, அவளுடைய உச்சகட்ட வேதனையைக் காட்டியது. அதனால் அவள் சொன்னது போல் அடுத்த வார்த்தை பேசாமல் வெளியே வந்துவிட்டான். லீலா அவர்களுக்கு அம்மாவைப் போன்றவள் அவளுக்கு அடிபட்டிருக்கிறது எனவும் கோபம் கொண்டிருக்கிறார்கள். நேரம் கடந்தால் கோபம் குறைந்துவிடும் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தனர் ஆண்கள் அனைவரும்.

     செல்வாவிற்கு தெய்வாவிடம் சண்டையிட்டதில் இப்போதும் தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அடிவாங்கி விழுந்த மனைவியைப் பார்த்திருக்க வேண்டும் என்று தோன்றியது. என்ன செய்கிறாளோ, காட்டான் அடி தனக்கே இத்தனை வலிக்கும் போது பூமனம் படைத்த அவளுக்கு எப்படி வலிக்கும் என்று பதற்றத்தோடு காத்திருந்தான்.

     ஆண்களின் ஆக்ரோஷத்தில ஆரம்பித்து பெண்களின் வைராக்கியத்தில் முடிந்த நாள், ஒருவழியாக முடிந்து அடுத்த நாள் ஆரம்பிக்க, பெண்கள் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

     ஆங்காங்கே அமர்ந்தவாக்கில் உறங்கிக்கொண்டிருந்த தன் மகன்களை வேகமாக எழுப்பினார் வடிவேலு. அரைத் தூக்கத்தில் இருந்த அனைவரும் பதறிக்கொண்டு எழுந்தனர்.

     ஆண்கள் பயந்தது போல் பெட்டியுடன் அவர்கள் வந்திருக்கவில்லை. அதை நினைத்து நிம்மதியடைந்தவர்களின் கண்கள் ருக்குவின் கையில் இருந்த காகிதத்தில் படிந்தது.

     லீலா புடவை முந்தானையால் தன்னுடைய வீங்கிய முகத்தை மறைத்திருந்தாள். வீக்கம் இன்னும் வற்றாமல் தான் இருந்தது. லீலா என்று செல்வா அருகே செல்ல முயற்சிக்க, அவள் அவனைத் தவிர்த்து ருக்குவின் பின் மறைந்து கொண்டாள். அது செல்வாவின் மனதில் அடியாக விழுந்தது.

     “லீலா ஏன் மா இப்படி எங்க எல்லாரையும் இராத்திரி முழுக்கத் தவிக்க வைச்சீங்க. என் பசங்க பண்ணது தப்புதான். அதுக்கு தண்டனையோ இல்லை மன்னிப்போ கொடுக்காம இப்படித் தவிக்க விடுவது எந்த வகையில் நியாயம்.” ஆற்றமாட்டாமல் கேட்ட பெரியவரின் கேள்விக்குப் பதிலாக தன்னுடைய கையிலிருந்த காகிதத்தை கொடுத்தாள் ருக்கு.

     “என்ன ருக்கு இது.” கேட்டுக்கொண்டே அதைப் பிரித்துப் பார்த்தார்.

     “இனியும் இந்த வீட்டில் நாங்க மருமகளுங்களா வாழ எங்களுக்குன்னு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அந்த கண்டிஷன்ஸ் இந்த பேப்பரில் இருக்கு. நீங்களும் ஒருமுறை படிச்சுப் பார்த்துட்டு உங்க பசங்களுக்கும் மறக்காம குடுங்க.” என்றாள் ருக்கு.

     கண்டிஷன்ஸ் என்பதிலே ஆண்கள் முகம் கருத்துப் போனது.  காகிதத்தில் இருந்ததை முழுதாகப் படித்த பின்னர் வடிவேலுவின் முகமும் வாடித் தான் போனது. “என்னம்மா இதெல்லாம்.” சோர்வாகக் கேட்டார்.

     “முடியல மாமா, ஜல்லிக்கட்டு காளை மாதிரி எப்ப, யார் மேல் பாயலாம் னு மல்லுக்கட்டும் உங்க பசங்களோட போராடும் இந்த வாழ்க்கை எங்களுக்குப் பயத்தை தான் கொடுக்கிது.” என்க, வடிவேலு தன் பிள்ளைகளைத் திரும்பிப் பார்த்து முறைத்தார்.

     “பொறுமை எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தானா மாமா. அதில் ஒரு துளி கூட ஆம்பிளைங்களுக்கு இருக்காதா இல்ல இருக்கக் கூடாதா? எப்ப பார்த்தாலும் சண்டை, எதற்கெடுத்தாலும் சண்டை. சண்டை சண்டை சண்டை தான் இந்த வீட்டில். சந்தோஷம், நிம்மதிங்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போச்சு.” ஊர்மி கத்த, அவள் கரம் பிடித்து தடுத்தாள் லீலா. அவளால் வாய் திறந்து பேச முடியவில்லை. அந்தளவு வலித்தது அவளுக்கு.

     “ஏன் மாமா நாலு நாள் பழகினாலே நண்பர்களாகிடுறாங்க. இவங்க நாலு பேரும் இத்தனை வருஷமா இந்த வீட்டில் ஒன்னாத் தானே இருக்காங்க. இவங்க அண்ணன், தம்பியா இருக்க வேண்டாம், ப்ரண்ட்ஸா இருக்க வேண்டாம். குறைந்தபட்சம் கூடப் பிறந்தவங்க நம்மள மாதிரி ஒரு மனுஷங்கதான்னு கூடவா நினைக்கக் கூடாது.

     எப்ப மத்தவனைக் காலை வாரலாம், அவன் அசிங்கப்படுறதைப் பார்த்து சந்தோஷப்படலாம், அவனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் நடுவில் பிரச்சனையை இழுத்து விடலாம் னு அலையுறாங்க. இதெல்லாம் என்ன பொழப்பு.” தேவகி ஒருபக்கம் கத்த, தர்மா கண்கள் இமைக்காமல் பார்த்தான் மனைவியை.

     “கோபம், அடேங்கப்பா இந்த வார்த்தைக்கு உதாரணமே இவங்க நாலு பேரும் தான். இவங்களுக்கு மட்டும் தான் இந்த உலகத்திலே கோபம் வருமா மத்தவங்களுக்கு கோவம் வராதா? நியாயமான விஷயங்களைத் தவிர்த்து மத்த நேரத்தில் கோபப்படுவதற்குப் பெயர் புத்திசாலித்தனம் கிடையாது. முட்டாள்தனம், சுத்த முட்டாள் தனம்.

     முட்டாள் தனமா கோபப்படுறதே தப்பு. இதில் கோபத்தில் வாயில் இருந்து முத்து முத்தா வார்த்தைகள் வேற வருது. ஏன் மாமா இவங்களுக்கு நல்ல வார்த்தைகளை நீங்க சொல்லியே கொடுக்கலையா?

     பேசுற வார்த்தைகளில் ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் னு தெரியாத அளவு மக்குப் பசங்களையா நீங்க பெத்து வளர்த்து வைச்சிருக்கீங்க.” கணவனின் கோபத்தைக் கூட இரசித்திருந்த ருக்கு, இப்போது அந்தக் கோபத்திற்கு எதிராகக் கோபப்பட்டாள்.

     “அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதுதான் சரி. அவங்க என்ன கேட்கிறாங்களோ அதுதான் சரி. அவங்க என்ன செய்யுறாங்களோ அதுதான் சரி. இதெல்லாம் என்ன மாமா. தனக்குக் கல்யாணம் ஆன மாதிரி தன்னோட அண்ணன், தம்பிக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.

     அவங்களுக்குக் கெடுதல் நினைச்சா அது அவனைச் சார்ந்து இருக்கிற பொண்ணையும் அவங்களோட அழகான வாழ்க்கையையும் பாதிக்கும் என்கிற அடிப்படை மனிதாபிமான எண்ணம் கூட இல்லாம, நடுவீட்டில் நின்னுக்கிட்டு ஒருத்தரோட குணத்தை இன்னொருத்தர் மட்டம் தட்டிப் பேசிக்கிட்டு இருக்காங்க.

     இதுக்கு என்ன அர்த்தம். தான் மட்டும் நல்லா இருந்தா போதும், மத்தவன் எக்கேடும் கெட்டுப் போகட்டும் னு தானே. இதையெல்லாம் சின்ன வயசுலே நீங்க கண்டிச்சிருந்திருக்கணும் மாமா.” சொன்னவள் ஊர்மி.

     “எங்களால முடியல மாமா. நாங்க ஒரு உண்மையை மறைச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என்கிற ஒரே காரணத்திற்காகத் தான் இத்தனை நாளா எங்களுக்குப் பிடிக்காத இத்தனை விஷயங்களையும் நாங்க பொறுத்துக்கிட்டு இருந்தோம்.

     இதுக்கு மேலும் எங்களால் பொறுத்துக்கிட்டு அமைதியாப் போக முடியாது. பொண்டாட்டி எங்களுக்கும் ஒரு மனசு இருக்கு. அதில் ஆசைகள் இருக்கு. அது எதுவுமே இவங்களுக்குப் புரியவே இல்ல.” என்க, “சண்டை இல்லாத குடும்பம் கிடையாது தேவகி. இப்படியெல்லாம் பேசுறது கஷ்டமா இருக்கு. உங்களுக்கு என்ன குறை வைச்சோம் நாங்க.” என்றான் தர்மா. அவன் குற்றச்சாட்டில் தேவகியின் வாய் மூடிக்கொள்ள தங்கைக்காகத் தான் முன்வந்தாள் ருக்கு.

     “என்ன குறை வைச்சீங்களா? எங்களுக்கு ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்ளோ பிடிக்கும் னு தெரிந்தும், எப்படியாவது பேசி எங்களைத் தனியாக் கூட்டிட்டுப் போகத் தானே இப்ப வரை நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.

     நான் தெரியாமத் தான் கேட்கிறேன். அக்கா, தங்கச்சி நாங்க நாலு பேர் இந்த வீட்ல கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்க நினைக்கிறது அத்தனை பெரிய தப்பா என்ன?” என்றாள் ருக்கு.

     “எங்க மேல தப்பு சொல்ற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது தான். அதுக்காக இதையே சாக்கா வைச்சு, எங்களோட நினைப்பு தப்பு, நீங்க சரின்னு நிரூபிக்க நினைக்காதீங்க.” வேகமாகச் சொன்னான் நாகா.

     “ஐயோ அப்பா உங்களைப் போய் தப்பு சொல்லுவேனா? தப்பு தப்பு.” எனக் கன்னத்தில் போட்டுக்கொண்டவள், “வெளியில் போய் பாருங்க அவன் அவன் பொண்டாட்டிக்காக என்னென்னவோ செய்யுறான். உங்க நாலு பேரால் உங்க பொண்டாட்டிங்களுக்காக இவ்வளவு பெரிய வீட்டில் ஒன்னா இருக்க முடியாதா?” என்க, இப்படி ஒரு கேள்வி இப்படி ஒரு சூழ்நிலையில் முன்வைக்கப்படுகிறதே என்று தவித்தார்கள் ஆண்கள் அனைவரும்.

     “பொண்டாட்டிக்குன்னு மனசு ஒன்னு இருக்கு. அதில் நியாயமான ஆசை இருந்தா அது கண்டிப்பா நிறைவேத்தணும் னு நினைக்கிற எந்த ஒரு புருஷனுக்கும் எங்களோட ஆசை தப்பாத் தெரியாது.

     ஆனா மாமா, உங்க பசங்களைப் பொருத்தவரைக்கும், பொண்டாட்டிங்க தான் சொல்வது மட்டுமே கேட்கணும், தான் சொல்வதை மட்டுமே செய்யணும். மொத்தத்தில் ஒரு உயிருள்ள பொம்மை மாதிரி அவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு இந்த வீட்டுக்குள்ள சுத்தி வரணும்.

     இவங்க என்ன பேசினாலும், எவ்வளவு கோவமா நடந்துக்கிட்டாலும், அதை நாங்க பெருசு பண்ணாம இருக்கணுமா? எங்களுக்குன்னு தன்மானமோ சுயமரியாதையோ இருக்கவே கூடாதா? அதுதான் அவங்களோட ஆசைனா அதை எங்களால் நிறைவேற்ற முடியாது.” ருக்கு சொல்ல, “நடந்த சின்ன விஷயத்தை ரொம்பப் பெருசு படுத்துறீங்க ருக்கு.” கோபமாகச் சொன்னான் தெய்வா.

     “நான் இந்தப் பிரச்சனையை மட்டும் வைச்சுச் சொல்லல. நாங்க இந்த வீட்டுக்குள் நுழைந்த நாளில் இருந்து நடந்த எல்லாத்தையும் அசைபோட்டு பார்த்துட்டு தான் சொல்றேன்.

     இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் நாங்க இந்த வீட்டில் தான் இருக்கணுமான்னு எங்களுக்கு யோசனையா இருக்கு.” என்க, மறுபடியும் முதலில் இருந்தா என பயந்தனர் ஆண்கள் நால்வரும்.

     “பயப்படாதீங்க, அப்படியெல்லாம் போயிட மாட்டோம். என்ன பண்றது பொண்ணாப் பொறந்து தொலச்சிட்டோமே. அவ்வளவு சுலபமா தாலியை அறுத்தெறிஞ்சிட்டு போகுற அளவுக்கு எங்களுக்கு மனசு வரல.

     அதுக்காக சுயமரியாதையையும், நியாயமான ஆசைகளையும் விட்டுக் கொடுத்துட்டு தியாகச் செம்மலுங்களா நாங்க இங்க இருக்க முடியாது.

     நாங்க எங்களோட கல்யாண வாழ்க்கைக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் னு இருக்கோம். அதுக்காக தான் இந்த கண்டிஷன்ஸ்.” ருக்கு உறுதியாகச் சொல்ல, தெய்வா தந்தையின் கரத்தில் இருந்த காகிதங்களைப் படித்தான். அவன் அதைப் படிக்கும் நேரத்தில் அதில் இருந்தவற்றை தன் குரலில் சொல்ல ஆரம்பித்தாள் ருக்கு.

     “இனி புருஷன், பொண்டாட்டி சண்டை அவங்க ரூமோடவே முடிஞ்சிடணும்.  புருஷனைப் பத்தி நாங்க எங்களுக்குள்ள குறை சொல்லிக்க மாட்டோம். அதையே நீங்களும் கடைப்பிடிக்கணும்.

     அண்ணன், தம்பிகள் நீங்கள் பேசிக்கலாம், பேசிக்காமலும் போகலாம். அதைப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் நால்வரையும் ரொம்பவும் கட்டுப்படுத்தக் கூடாது. எங்களை எங்க இஷ்டத்துக்கு இருக்க விடணும்.

     வீட்டுக்கு வர்ற கெஸ்ட் முன்னாடியோ இல்ல ப்ரண்ட்ஸ் முன்னாடியே தன்னோட வொய்ப்பையோ இல்லை அவளோட சிஸ்டர்ஸையோ யாரும் குறைச்சுப் பேசக்கூடாது.

     எங்க முன்னாடி எங்க சிஸ்டர்ஸைப் பத்தி தப்பா பேசக் கூடாது, திட்டக் கூடாது.

     நாங்க நாலு பேரும் எங்களோட புருஷனைத் தவிர மத்த மூணு பேர் கிட்டையும் பேச மாட்டோம். அதே மாதிரி அவங்களும் அவங்க அவங்க பொண்டாட்டிங்க கிட்ட மட்டும் பேசினால் போதும்.

     எங்க நாலு பேரு முன்னாடி எந்தக் காரணத்துக்காகவும் இவங்க நாலு பேரும் சண்டை போட்டுக்க கூடாது. தனியாப் போய் என்ன வேண்ணா செஞ்சுக்கட்டும்.

     எல்லாத்துக்கும் மேல ரொம்ப முக்கியமான கண்டிஷன் எந்தக் காரணத்தைக் கொண்டும், இந்த வீட்டை விட்டு தனிக்குடித்தனம் போகனும் என்கிற எண்ணம் இவங்க நாலு பேரில் ஒருத்தருக்கு கூட வரக்கூடாது.

     அதுக்காக இவங்க நாலு பேரும் ஒன்னா கொஞ்சிக் கூத்தடிக்கத் தேவையில்லை. இவங்க நாலு பேரும் ஒருத்தருக்கு ஒருவர் பேசாமல் இருந்தாலே எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். எங்களால ஒருத்தர ஒருத்தர் பிரிஞ்சு இருக்க முடியாது அதுக்காகத் தான் இது.

     இது எல்லாத்தையும் தனியா ஒரு பத்திரமா எழுதி இவங்க நாலு பேரு எங்களுக்குக் கையெழுத்து போட்டு தரனும். இதில் ஒரு கண்டிஷனை இவங்க மீறினால் கூட, நாங்க இந்த வீட்டை விட்டுப் போகலாம். அதை யாரும் தடுக்கக்கூடாது நீங்க உட்பட.

     இல்ல, ‘இது எதுவுமே எங்களால் செய்ய முடியாது. இது எல்லாத்தையும் செஞ்சு தான் நீங்க எங்க கூட வாழனும் னு அவசியமில்லை. எங்களால இது எதையும் கடைபிடிக்க முடியாது, நீங்க தாராளமா இந்த வீட்டை விட்டு போகலாம் னு’ அவங்க சொன்னா, ரொம்ப சந்தோஷம் நாங்க கிளம்புறோம். எங்களைத் தேடி எப்பவும் வராதீங்க.” ருக்கு சொல்ல அனைவரும் மலைத்து போய் நின்றனர்

     “அப்பா என்னப்பா இதெல்லாம்.” நாகா கேட்க, “என்னை மன்னிச்சிடுங்க பசங்களா, இந்த விஷயத்துல நான் என் மருமகளுங்க பக்கம் தான் நிக்க போறேன். உங்க நாலு பேரையும் ஒத்துமையாப் பார்க்க நினைச்சேன். அது முடியாதுன்னு ஆனதுக்கு அப்புறம் என் மருமகளுங்களாவது கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்கட்டும்.

     நல்ல பொண்ணுங்களை, ஒத்துமையான அக்கா தங்கச்சிங்களைப் பிரிச்ச பாவத்தை என் தலை மேல் தூக்கி சுமக்க முடியாது. அவங்க சொல்ற எந்த கண்டிஷனும் எனக்கு தப்பாத் தெரியல. அப்புறம் உங்க இஷ்டம்.” என்றுவிட்டு வடிவேலுவும் அமைதியாகிவிட, என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தனர் ஆண்கள் நால்வரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் பண்ணலைன்னு சொல்றதே வேலை இந்த ஆண்களுக்கு … இப்போ மாமா மச்சினன் அப்படின்னு யாரும் வேணாம் அக்கா தங்கச்சிங்க மட்டும் போதும் அப்படிங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க பொண்ணுங்க …