
அத்தியாயம் 6
மகனின் வருகையைக் கண்ணாடி கதவின் வழியாக கண்டுகொண்ட வடிவேலு, “அம்மாடி உங்க மாமாவைப் பார்க்க ஆசைப்பட்டீங்க இல்ல. உங்க ஆசையை நிறைவேத்த எவ்வளவு வேகமா வரான்னு பாருங்க.” சின்னப்புன்னகையுடன் சொல்ல, லீலாவைத் தவிர மற்ற மூவரின் கண்களும் அவன் தரிசனத்தைப் பெற ஆவல் கொண்டன.
அவனுக்குச் சொந்தமாகப் போகிறவளுக்கோ உடலும் உள்ளமும் பதற்றத்தில் நடுங்கியது. அந்த நேரம் வரை தங்கைகளுக்குத் திருமணம் என்ற நினைப்பில் இருந்தவளுக்கு, செல்வாவின் வருகை அறிவிக்கப்பட்டதும் தான் தனக்குமே திருமணம் என்கிற நினைப்பு வந்தது. ஒருநொடியில் உடலில் ஏதோதோ மாற்றங்கள் நடக்க, உயிருள்ள சிலையாகிப் போனாள்.
கண நேரத்தில் தான் மறந்துவிட்ட மிகப்பெரிய விஷயம் ஞாபகம் வந்தவராய், “கடவுளே இதை நான் மறந்துட்டனே. அம்மாடி என் மருமகள்களா உங்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். நீங்க நாலு பேரும் அக்கா, தங்கச்சின்னு தெரிய வந்தா என் பசங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாங்க.
அதனால கல்யாணம் முடியுற வரைக்கும் உங்களைப் பத்தின உண்மை அவனுங்களுக்குத் தெரியக் கூடாது. நல்லா இருப்பீங்க மூணு பேரும் எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்கோங்க. சீக்கிரம் அவன் வந்திடப் போறான்.” அவசரப்படுத்தினார் வடிவேலு.
முதலில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக நாங்கள் ஒளிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பில் தான் ஒருவரை ஒருவர் பார்த்தனர். ஆனால் படபடக்கும் இதயத்துடன், கை கால்கள் நடுங்க வியர்த்து விறுவிறுக்க அமர்ந்திருந்தவரின் தோற்றம் அவர் கேட்டுக்கொண்டதை செய்யத் தூண்ட, லீலாவைத் தவிர்த்து மற்ற மூவரும் ஒருசேர ஒரு பெரிய இருக்கையின் பின்னே மறைந்து கொண்டனர்.
“ஒளிஞ்சிக்கிற இடத்தில் கூட ஒற்றுமையா. என் மருமகள்களுக்கு என் கண்ணே பட்டுடும் போல.” நினைத்தாலும் அதுவும் பெருமையாகவே இருந்தது வடிவேலுவிற்கு. அந்த நொடியில் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் செல்வராஜ்.
ஐந்து அடி எட்டு அங்குலத்தில், மாநிறத்தில் கண்ணை உறுத்தாத மெரூன் நிற உடையுடன் எதிர்வீட்டுப் பையன் போல் சாதாரணமாக அதே நேரம் மிகவும் இலட்சணமாக இருந்தான்.
“அப்பா நீங்களா? எதுக்காக இங்க வந்தீங்க. உங்களை நான் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு தானே வந்தேன். உங்களுக்கு ஹை பீவர் இருக்கு பா. அம்மாவை ஏமாத்திட்டு விளையாடப் போற சின்னப் பையன் மாதிரி, நான் வீட்டை விட்டு வெளிய வந்த உடனே என் பின்னடியே வந்துட்டீங்களா?” அவன் கத்திய கத்தில் பயந்து போய் எழுந்து நின்றாள் லீலா.
அதே நேரம் சோபாவின் பின்னில் இருந்து ஒவ்வொரு தலையாக லேசாக எட்டிப் பார்த்தது. செல்வாவின் தோற்றம் அவர்களை ஈர்த்தது என்பது போல் மூவரின் முகத்திலும் ஒரு திருப்தி பாவம் தோன்றியது. தங்களின் அக்காவிற்குச் சரியான துணை என்பதாய் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு மீண்டும் மறைந்து கொண்டனர்.
தந்தையுடன் இருக்கும் பெண்ணை அப்பொழுது தான் கவனித்தவனாக, “ஸ்சாரிப்பா ஏதோ மீட்டிங்கில் இருந்தீங்க போல, நான் கவனிக்கல. ஆனாலும் நீங்க பண்ணது ரொம்பப் பெரிய தப்புப்பா.” என்றான் இம்முறை சற்று தணிவாக. அதிலும் லேசான கண்டிப்பு இருந்தது.
“செல்வா, இன்னைக்கு இந்தப் பொண்ணை வரச் சொல்லிட்டேன் டா. இந்தப் பொண்ணும் ரொம்ப தூரத்தில் இருந்து என்னைப் பார்க்க வந்துட்டா. கொஞ்ச நேரம் தானே பேசிட்டு உடனே வீட்டுக்கு வந்திடலாம் னு நினைச்சு வந்தேன்.” தவறு செய்துவிட்டு தகப்பனிடம் மாட்டிக்கொண்ட குழந்தை போல பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னார் வடிவேல்.
“யார் இவங்க” மகன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லி சமாளிக்கப் போகிறார் என லீலா யோசித்துக் கொண்டிருக்க அவரோ எதையும் யோசிக்காமல், “இவளைத் தான் செல்வா உனக்கு மனைவியா நான் தேர்ந்தெடுத்து இருக்கேன்.” வழிப்பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயைப் போல விஷயத்தை ஒரே போடாக போட்டு உடைத்தார். அவர் அப்படிச் சொன்ன அடுத்த நொடி செல்வா, லீலா இருவரின் கண்களும் ஒருமுறை தொட்டு மீண்டது.
“ஹே அங்க பாருங்களேன் அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள் மொமண்ட். சும்மா சொல்லக்கூடாது ஜோடிப் பொருத்தம் அமோகமா இருக்கு.” மனதின் சந்தோஷத்தை மெல்லிய வார்த்தைகளாய் வெளியிட்டு இருந்தாள் ஊர்மி.
“அப்பா, என்ன பா திடீர்னு.” செல்வாவின் அதிகாரக்குரல் காற்றில் கரைந்து போய்விட மென்மையான குரலில் கேட்டான்.
மகனின் தயக்கத்தையும், வெட்கத்தையும் இரசித்துவிட்டு, “செல்வா இந்தப் பொண்ணு பேரு லீலாவதி. பிஎஸ்சி கம்யூட்டர் படிச்சிருக்கா. ஒரு சின்ன கம்பெனியில் அக்கவுண்டன்ட்டா வேலை செய்யுறா? அம்மா, அப்பான்னு யாரும் கிடையாது.
எனக்குத் தெரிஞ்சவங்களோட சொந்தக்காரப் பொண்ணு. பொண்ணைப் பத்தி விசாரிச்சதில் எல்லாரும் ரொம்பவே நல்லவிதமா சொன்னாங்க. அதான் நேரில் வரச்சொன்னேன். நேரில் பார்த்து பேசுறப்ப எனக்கு ரொம்ப திருப்தி. நான் முடிவு பண்ணிட்டேன் இவ தான் என்னோட மூத்த மருமக. நீ என்னடா சொல்ற.” மருமகள்களிடம் பேசியது போல் அல்லாமல் மகனிடம் தயக்கம் என்பது சிறிதும் இல்லாமல் நேரடியாகவே பேசினார்.
லீலாவுக்குத் தான் சங்கோஜமாக இருந்தது. தன்னை வைத்துக்கொண்டு இப்படிப்பட்ட பேச்சுகள் தேவை தானா. பொதுவாகவே நோ சொல்ல முடியாத சூழ்நிலையில் முக்கியமான கேள்விகள் கேட்கக் கூடாது என்று நினைப்பவளுக்கு, வடிவேல் தன் மகனிடம் இதைத் தனியாகப் பேசி இருக்கலாம் என்றே தோன்றியது.
“அப்பா எதுக்கு பா என்கிட்ட கேட்கிறீங்க. உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்க, நான் அதுக்கு கட்டுப்படுறேன்.” என்றான் செல்வா நல்ல பிள்ளையாக.
“லீலா நீ என்னம்மா சொல்ற.” அவனை வைத்துக் கொண்டே லீலாவிடம் கேட்டார் வடிவேலு.
முதல் நொடி தவித்தாலும், “அம்மா, அப்பா இல்லாத எங்களுக்கு இனி நீங்க தான் எல்லாம் னு நம்பி வந்து இருக்கோம். நீங்க எது செஞ்சாலும் எங்களுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்குன்னு புரிஞ்சிக்கிட்டு செஞ்சா போதும். மத்தபடி நீங்க சொல்ற எல்லாத்துக்கும் நான் கட்டுப்படுறேன்.” சுற்றி வளைத்து தன் சம்மதத்தை சொன்னாள் லீலா.
“மாமாவைப் பார்த்ததும் இப்படி ப்யூஸ் போயிட்டியே அக்கா. வார்த்தைக்கு வார்த்தை நாங்க நாங்கன்னு சொல்லி இப்படி எல்லாரையும் மாட்டி விட்டுட்டியே.” மெல்லிய குரலில் அக்காவை வறுத்தெடுத்தாள் ஊர்மிளா. அதே நேரத்தில் டேபிளில் இருந்த ஐந்து காலி டம்ளர்கள் செல்வாவின் கண்களுக்குத் தட்டுப்பட்டது.
“அம்மா அப்பான்னு யாரும் இல்லன்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்காக இத்தனை எம்ப்டி கிளாஸஸ். உண்மையைச் சொல்லுங்க ஜூஸ் நீங்க குடிச்சீங்களா?” விடாக்கண்டனாய் கேட்டவனைப் பார்த்து விழிவிரித்தவர், அவசரத்தில் மண்டை மேல இருக்கிற கொண்டையை மறந்துட்டனே எனத் தனக்குள் நினைத்து புன்னகைத்து,
“இவ்வளவு நாளா என் மருமகளைப் பார்த்துக்கிட்டவங்க இவளை மொத்தமா என்னோட பொறுப்பில் விட்டுட்டு போயிட்டாங்க.” வாய்க்கு வந்த எதையோ சொல்லிச் சமாளித்தார்.
“விட்டுட்டு போயிட்டாங்கன்னா?” என்ன அர்த்தம் என்பது போல் புருவங்கள் விரிய, அகன்ற நெற்றி இன்னும் விரிய லீலாவைப் பார்த்தான் செல்வா.
அமாவாசையில் பிறந்த பையன் கேள்வி மேல கேள்வியா கேட்டு சாவடிக்கிறானே, மனதிற்குள் தான் பெற்ற ரத்தினத்தைச் செல்லமாகத் திட்டிக்கொண்டே, என்ன காரணம் சொல்லலாம் என தீவிரமாக யோசித்தார் வடிவேலு.
அவருடைய பயம் அவருக்கு, இன்றிலிருந்து நான்கு திருமணங்களும் நல்லபடியாக நடந்து முடியும் வரை, ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து தான் வைக்க வேண்டும்.
கொஞ்சம் சிதறினாலும் தான் பெற்ற நான்கு மக்கள், தன்னை நம்பி வந்திருக்கும் நான்கு பெண்கள் என எட்டு நபர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதனால் கூடுதல் பொறுப்பு வந்து சேர்ந்திருந்தது அவரின் தோள்களில்.
“அப்பா நான் உங்ககிட்ட தான் பேசுறேன்.” உரக்க குரல் கொடுத்து தன்னைப் பெற்றவரை சுயநினைவுக்கு கொண்டு வந்தான் செல்வா.
“அடேய் அவசரத்துக்குப் பிறந்தவனே, எல்லாத்திலும் உனக்கு அவசரம் தானா? அப்பா ஒரு விஷயத்தை நம்மகிட்ட சொல்லத் தயங்குறாருன்னா அதில் ஏதாவது விஷயம் இருக்கும் னு யோசிக்க மாட்டியா?” வாய்க்கு வந்ததை உளறியவருக்கு சட்டென்று மகனைச் சமாளிக்க சரியான விஷயம் ஒன்று சிக்கிக்கொள்ள, புன்னகையில் விரிந்தது அவரின் இதழ்கள்.
நிமிர்ந்து உட்கார்ந்தவர் செல்வாவின் கண்ணோடு கண் பார்த்து, “கல்யாணத்துக்கு அப்புறம் இல்லை, இப்ப இருந்தே என் மருமக நம்ம வீட்டில் தான் இருக்கப் போறா. இதைத் தான் உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தயக்கத்தில் இருந்தேன்.” செல்வா நம்பும்படியாக சொல்லிவிட்டோம் என்ற தற்பெருமையில் இருந்தவர், அதிர்ந்து உறைந்து போய் இருந்த லீலாவைக் கவனிக்கவே இல்லை.
“இவ்வளவு தானா இதுக்குத்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமா. என்னவோ போங்க, நான் ஹாஸ்பிடலுக்குப் போறேன்.” என்று கிளம்பப் பார்த்தான் அவன்.
“மெட்டல் மண்டையா, படிக்க மட்டும் தான் உன் மூளை வேலை செய்யுமா? கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு உன் கண் எதிரில் இருக்கா, இனிமேல் உன் கூட உன் வீட்டில் தான் இருக்கப் போறான்னு சொல்றேன். கொஞ்சம் கூட எதிர்வினையே காட்டாமல் இருக்க. நீமனுஷன் தானா இல்ல ரோபோவா.” உள்ளுக்குள் வறுத்து எடுத்தாலும் வெளியே,
“டேய் என் மருமககிட்ட ஏதாவது பேசிட்டு போடா. நீ பாட்டுக்கு கிளம்பிப் போயிட்டன்னா அவ என்ன நினைப்பா.” மென்மையாக மகனுக்கு எடுத்து சொன்னார்.
அதில் ஒருநொடி தடுமாறியவன் லீலாவின் பக்கம் திரும்பிப் பார்த்தான். அவளோ என் கைவிரல்கள் தான் எவ்வளவு அழகு என்பதாய் அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய தயக்கத்தை உணர்ந்தவன், “கல்யாணத்துக்கு அப்புறம் காலம் முழுக்க ஒன்னா தானே இருக்கப் போறோம். அப்ப பேசிக்கிறோம். சீக்கிரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க.” லீலாவைப் பார்த்தே சொல்லி முடித்தவன், அதற்கு மேலும் அங்கிருக்க முடியாமல் வேக எட்டுக்களுடன் அறையைக் காலி செய்தான். அவன் சென்றுவிட்டான் என்பது உறுதியானதும், ஒளிந்திருந்த இடத்தில் இருந்து பெண்கள் மூவரும் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.
“என்னம்மா, என் வீட்டுச் சீமாட்டிகளா? உங்க பெரிய மாமன் எப்படி இருக்கான். உங்க அக்காவுக்கு சரியா இருப்பானா?” கேள்வி கேள்வியாக இருந்தாலும், என் மகனைப் போல் யாரும் இல்லை என்ற கர்வம் அவருடைய முகத்தில் நன்றாகவே தெரிந்தது.
“சூப்பரா இருக்காரு மாமா. அக்காவுக்கு ஏத்த ஜோடி” மனம் திறந்தவள் இரண்டாமவள் ருக்மணி. “அக்காவைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சிட்டா, வாயில் இருக்கிற முத்து உதிர்ந்திடுமா.” வழக்கம் போல் வெடித்தாள் ஊர்மிளா. “அப்படி பேசாத ஊர்மிக்கா, மாமா கோபத்தில் கூட அழகா தான் இருக்காரு.” சொன்னவள் கடைக்குட்டி தேவகி.
இவன் தான் தங்களுடைய மாமன் என்று உறுதி செய்துவிட்ட தோரணையில் மூவரும் வரிசையாகத் தங்கள் மனக் கருத்துக்களைச் சொல்ல, செல்வாவை ஒட்டுமொத்தமாக சொந்தம் கொண்டாடும் உரிமை பெற்ற லீலாவோ அமைதியாகவே இருந்தாள்.
“என்னம்மா எல்லாரும் அவங்க அவங்க கருத்தைச் சொல்லிட்டாங்க. கட்டிக்கப்போறவ நீ இன்னும் ஒன்னும் சொல்லாம இருக்க.” சற்று முன்னர் வரை, தன் மகனைப் பார்த்த படபடப்பில் இருந்த பெண் இப்போது ஆழ்கடலின் அமைதியுடன் அமர்ந்திருப்பதைக் கவனித்து, லேசான முக சுருக்கத்துடன் கேட்டார் வடிவேலு.
“நீங்க இப்படி பண்ணலாமா மாமா.” வயதில் பெரியவர், மாமனாராகப் போகிறவர் என்கிற தடுமாற்றம் தோன்றினாலும் மனசஞ்சலத்தை தனக்குள்ளே வைத்திருக்க வேண்டாம் என நினைத்துக் கேட்டே விட்டாள் லீலா.
“இப்ப இருந்து நீ எங்க வீட்டில் தான் இருக்கப் போறன்னு உன்கிட்ட கூட கேட்காம, உன் முடிவை நானே எடுத்துட்டேனேன்னு தோணுதா?” தன் வயதின் அனுபவத்தில் மிகச் சரியாக பெண்ணின் மனதைப் படித்திருந்தார் வடிவேலு.
அவள் அமைதியாக இருப்பதை வைத்தே இதுதான் விஷயம் என்று கணித்தவர், “உங்க அப்பா ஸ்தானத்திலிருந்து பார்த்துப்பேன்னு நான் சொன்னது சும்மா இல்லம்மா. அது என் ஆழ் மனதில் இருந்து வந்த வார்த்தைகள்.
உன் அப்பா உனக்காக ஒரு முடிவெடுத்தா, அது நல்லதா கெட்டதா? அதை நிறைவேற்ற முடியுமா முடியாதான்னு யோசிப்பியா? இல்ல இப்படித்தான் என் விஷயத்தில் தலையிடுவீங்களான்னு அவர்கிட்ட கேட்பியா?” வடிவேல் இப்படிக் கேட்டதும் லீலாவின் தலை தொங்கிவிட்டது.
“எந்த உறவா இருந்தாலும் அங்க நம்பிக்கை பிராதானமா இருக்கணும். என் பையன் கிட்ட அப்படி சொல்லியிருந்தாலும் நான் நிச்சயமா உன்கிட்ட இதுக்கு சம்மதமான்னு கேட்டிருப்பேன். நீ முடியாதுன்னு சொல்லி இருந்தா நிச்சயம் அதை ஏத்துக்கிட்டும் இருந்திருப்பேன்.
லீலா, இன்னொருத்தங்க நம்ம கிட்ட காட்டும் உரிமையை, நாம எந்த விதத்தில் எடுத்துக்கிறோம் என்பதில் தான் மா எல்லாமே இருக்கு. எனக்கு உன் மனசு புரியாம இல்ல. திடீர்னு ஏத்துக்க கஷ்டமா தான் இருக்கும். ஆனா ஏத்துக்கிட்டுத் தானே ஆகனும்.” சின்னப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்ல, லீலா தலையாட்டினாலும் கொஞ்சம் சங்கடம் இருந்தது உண்மை.
“நம்ம இரண்டு குடும்பத்துக்கும் நடுவில் இருக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு உனக்குச் சஞ்சலத்தை கொடுக்குதுன்னு புரியுது.
ஊர், உறவு என்ன பேசும். ஒருவேளை வரப்போகும் புருஷனே நம்மகிட்ட இருக்கும் பணத்துக்காகத் தான் இவ நம்மைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளோன்னு நினைச்சுட்டா என்ன பண்றதுன்னு உனக்குள்ள சந்தேகங்களும், கவலைகளும் இருக்கலாம்.
இதுக்கு என்னால செய்ய முடிந்த ஒன்னே ஒன்னு என்னையும், என் பசங்களையும் நம்புன்னு சொல்வது மட்டும் தான். நடக்கப் போற கல்யாணத்தில் எனக்கு உங்ககிட்ட ஒரு தேவை இருக்கு. அது நீங்க ஒத்துமையா இருப்பதற்காகவாவது என் பசங்களை கடைசி வரை பிரிய மாட்டீங்க என்பது.
அதே மாதிரி உங்களுக்கு ஒரு தேவை இருக்கு. அது நீங்க நாலு பேரும் ஒரே வீட்டில் வாழ்வது. நிஜம் எதுன்னு நமக்குத் தெரியும் போது மத்தவங்ககிட்ட நாம எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.” வடிவேல் சொல்வது புரிந்தது போல் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் லீலா.
“கேட்க ஆள் இல்லாத ஏழைப் பொண்ணுங்களை மருமகள் என்ற பெயரில் கூட்டிக்கிட்டுப் போய் தங்கக்கூண்டில் சிறை வைச்சிடுவாங்களோ. அவங்க சொல்வதை மட்டுமே கேட்டு, அவர்கள் சொல்படி வாழ்ந்து, நாம நம்ம சுயத்தை இழக்க வேண்டியது வருமோங்கிற பயம் உனக்குள்ள இருக்கலாம். அதைச் சந்தேகம் என்று கூட சொல்லலாம்.” வடிவேல் சொல்லச் சொல்ல மனதிற்குள் புகுந்து பார்த்தது போல் சொல்கிறாரே என்னும் பாவனையில் விழித்துவைத்தாள் லீலா.
“இது எதுவுமே கொஞ்சம் கூட தப்பு கிடையாது. எல்லாமே மனித இயல்பு தான். கோபம், அழுகை, சந்தோஷம், வீரம், சபலம், சந்தேகம், பொறாமை என எல்லாமே கலந்தது தான் மனுஷன். பல நேரங்களில் இந்த உணர்வுகள் நம்ம கட்டுப்பாட்டில் நமக்குள்ளேயே இருந்தாலும், சில நேரங்களில் நம்மையும் மீறி, வெளிவரத்தான் செய்யும். அது தப்பு கிடையாது. ஆனா அது அளவோடு இருக்கணும், அளவை மீறினா எதுவா இருந்தாலும் ஆபத்து தான்.
இப்ப மாதிரி, எந்த சூழ்நிலையிலும் எந்த விஷயத்திலும் உனக்குள்ள எந்தச் சஞ்சலம் வந்தாலும் அதை அப்பப்ப கேட்டு தெளிவுபடுத்திக்கோ. கட்டிக்கிட்ட புருஷனிடமோ அவன் குடும்பத்தினரிடமோ உனக்கு இல்லாத உரிமையா என்ன? இது நம்ம குடும்பம் னு நினைப்பு வந்துட்டா இந்த ஏற்றத்தாழ்வு எல்லாம் பெருசாத் தெரியாதும்மா.
ஒரு நாட்டோட ராஜாவுக்கு நிச்சயம் பண்ணது சாதாரண குடும்பத்துப் பெண்ணா இருக்கலாம். ஆனா ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறம் அவ ராணி. அதுக்கு ஏத்த மாதிரி அவளுக்கு சுமையும், பொறுப்பும் கூடத்தான் செய்யும்.
தான் ஏற்றுக்கிட்ட பொறுப்புக்கு ஏத்தமாதிரி அவ கொஞ்சம் தன்னை மாத்திக்கத் தான் வேணும். அந்த இடத்தில் நான் என் இயல்பை மாத்திக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிப்பதோ இல்லை எனக்காக கணவன் இறங்கி வந்தால் ஆகாதான்னு போர்க்கொடி பிடிப்பதோ சரியா இருக்காது.” மிகப்பெரிய வாழக்கைப் பாடத்தை மருமகள்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் வடிவேலு.
“ஒருவரை ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் உண்மையான அன்பு. அதை நானும் ஒத்துக்கிறேன். ஆனா அமைதியா நகர்வதற்கு வாழ்க்கை நேர்கோடு கிடையாது. அது இன்பம், துன்பம் கலந்த மேடு பள்ளம் நிறைந்த தார்ச்சாலை மாதிரி.
பொண்டாட்டி விட்டுக் கொடுக்க வேண்டிய இடங்கள் சில இருந்தா, புருஷன் விட்டுக் கொடுக்க வேண்டிய இடங்கள் சில இருக்கும். இந்த உலகில் எல்லாவற்றையும் விட கஷ்டமான பாடம் குடும்பம் நடத்தும் வித்தை தான்.
சரியான புரிதலும், நம்பிக்கையும், உள்ளுக்குள் வரும் சந்தேகத்தையும், பயத்தையும் இணையிடம் தைரியமாக சொல்லும் உரிமைஉணர்வும் அவசியம் இருக்கணும்.
புருஷனே உனக்கு தான் சொந்தம் னு ஆன பிறகு அவன் செல்வத்தின் மீதோ, அவன் குடும்ப உறுப்பினர்களின் மீதோ உனக்கு உரிமை கிடையாதா?” தனக்குத் தெரிந்தவரை லீலாவின் சங்கடத்தை போக்க முயற்சித்த வடிவேலுவின் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். லீலாவின் முகம் இப்போது கொஞ்சம் பிரகாசமாக இருந்தது.
“இப்பச் சொல்லும்மா லீலா, என் மூத்த மருமகளா என் வீட்டுக்கு வர சம்மதமா.” நிச்சயம் சம்மதம் சொல்லிவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் முகம் மலர்ந்த புன்னகையுடன் கேட்டார் வடிவேல்.
“நான் சொல்றதுக்கு என்ன மாமா இருக்கு. உங்க பையனுக்கு என்னைப் பிடிச்சா அது போதும்.” என்றுவிட்டு தலைகுனிந்தாள் லீலா. அதுநாள் வரையிலும் அவளுக்குள் தோன்றாத மணவாழ்க்கை கற்பனைகளில் சில அவளுக்குள் எட்டிப் பார்க்க நிலவு கண்ட தாமரையாய் முகம் தாழ்ந்தது.
அவள் வெட்கம் புரிந்து, “உன்னை மாதிரி ஒருத்தியை யாருக்குத் தான் பிடிக்காம இருக்கும் சொல்லு. என் பையன் ரொம்பக் கொடுத்து வைச்சவன்.” என்றவர், “சரி சரி வாங்க கிளம்பலாம்.” என்றபடி பரபரப்பாய் தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்தார்.
எங்கே, “எதுக்காக நாங்க அக்கா தங்கை என்கிற விஷயத்தை உங்கள் மகன்களிடம் இருந்து மறைக்க வேண்டும் என்று கேட்டுவிடுவாளோ என்கிற பயம். ஏற்றத்தாழ்வு பற்றிய பயத்தைப் போக்குவதற்குள்ளேயே பாதி ஆவி போய் விட்டது. மிச்சம் மீதத்தை விளக்குவதற்குள் மீதி ஆவி அணைந்துவிடும் என்ற மலைப்பும், தன் மகன்களுக்குள் இருக்கும் அன்பின் அழகை எடுத்துச் சொன்னால், பெண்கள் பயந்துவிடுவார்களோ என்ற பயமும் அவரை இப்படி நடந்துகொள்ள வைத்தது. லீலா சமயத்தில் அதை மறந்திருப்பதை அவருக்குச் சாதகமாக அமைத்துக் கொண்டார்.
வடிவேல் கிளம்புவதைப் பார்த்ததும் பெண்களுக்கு எங்கே அவர் வீட்டிற்கு தங்களை அழைத்துச் சென்றுவிடுவாரோ என்ற பயம். அதனால், “எங்க மாமா” நால்வரும் கிட்டத்தட்ட கோரஸாகக் கேட்டனர்.
“என்னம்மா எங்கன்னு கேட்கிறீங்க. நான் பெத்த தங்கத்தில் ஒன்னைத் தானே பார்த்து இருக்கீங்க. மத்த மூணைப் இன்னும் பார்க்கலையே.
ஏன் மா ஊர்மி, ருக்கு, தேவகி உங்க அக்கா புருஷனை மட்டும் பார்த்தா போதுமா, உங்க உங்க புருஷனை பார்க்க வேண்டாமா.” வடிவேலு கேட்க இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் பெண்கள்.
பெண் பார்க்கும் படலம் போல இதென்ன மாப்பிள்ளை பார்க்கும் படலம் என நினைத்தவர்களுக்கு சற்று சங்கோஜமாக இருந்தது.
“மாமா ப்ளீஸ் மாமா. இது எதுவும் வேண்டாமே, எங்க போட்டோ காட்டினா போதாதா.” அப்பாவியாய் கேட்டாள் ருக்கு.
“அட என்னம்மா நீ, அக்கா கட்டிக்கப் போறவனை பார்க்க இருந்த ஆர்வத்தில் பாதியாவது நீ கட்டிக்கப் போறவன் மேல இல்லாம இருக்க. உன்னைக் கட்டிக்கிட்டு தெய்வா என்ன பாடு படப் போறானோ தெரியலையே.” சன்னச்சிரிப்பு சிரித்தார் பெரியவர்.
“இரண்டாவது மாமா பேரு தெய்வாவா. ரொம்ப நல்லா இருக்கு மாமா.” என்றனர் ஊர்மிளா, தேவகி இருவரும். லீலா கூட தனக்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். தெய்வத்தின் ருக்மணியோ அமைதியாகவே இருந்தாள்.
“ருக்கு எதுக்காக இப்படி பயப்படுற. நீ கட்டிக்கப் போறவரைத் தானே பார்க்கப் போற. அப்புறம் என்ன டா. அக்கா இருக்கேன். பயப்படாதே.” லீலா சொல்ல ருக்கு தலையைத் தலையை ஆட்டினாள்.
“அட என்னம்மா நீ, உன் வருங்காலப் புருஷன் அதான் என்னோட இரண்டாவது மகன் தெய்வராஜ் ஒரு போலீஸ்காரன். போலீஸ்காரன் பொண்டாட்டி கொஞ்சமாச்சும் தைரியமா இருக்க வேண்டாம்.” வடிவேலு சொன்ன அடுத்த நொடி,
“மாமா போலீஸா, சூப்பர். நான் இதுவரைக்கும் போலீஸை பக்கத்தில் கூட பார்த்ததில்லை. ருக்கு அக்காவின் உபயம் இனி தினமும் பார்க்கலாம்.” உற்றாகத்துடன் சொன்னாள் தேவகி.
“முதல் மாமா டாக்டர், இரண்டாவது மாமா போலீஸ். வாரே வா இனி காலத்துக்கும் வைத்தியமும் இலவசம், காவலும் இலவசமா.” என்ற ஊர்மிக்கும் தன் இரண்டாம் மாமனைப் பார்க்கும் ஆசை வந்தது. ஆசையில்லாமல் போவது எல்லாம் தங்களுக்கு வரப்போகும் துணையைப் பார்ப்பதற்கு மட்டும் தான் போல.
மற்ற மூவரும் தெய்வா போலீஸ் என்பதில் சந்தோஷம் கொள்ள ஒருத்தி மட்டும், “அக்கா, எனக்கு போலீஸ் எல்லாம் வேண்டாம் அக்கா. உனக்குத் தான் தெரியுமே எனக்கு போலீஸ்னாலே பயம். எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் அக்கா.” எதையோ நினைத்து பயந்தவளாக லீலாவைக் கட்டிக்கொண்டு விசும்பினாள் ருக்மணி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
+1

